Posted on Leave a comment

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ‘என்றென்றும் அன்புடன்’ பாலா

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் என்ற பெருமை ஆண்டாள் நாச்சியாருக்குண்டு.
ஆண்டாள் என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு மார்கழி மாதமும், பாவை நோன்பிருந்து ஆண்டாள்
பாடிய திருப்பாவையும் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றன. ஆண்டாளின் திருப்பாவை அத்தனை
சிறப்புடையது. பன்னிரு ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை, நாதமுனிகள் என்ற வைணவப்பெருந்தகை
தேடித் தொகுத்து, இசையுடன் வழங்க, அதுவே நாலாயிர திவ்யப் பிரபந்தமாக வைணவக் கோயில்களில்
ஓதப்படுகிறது.

மார்கழி, என்னும் தமிழ் மாதம். ‘மாரி‘ என்ற வார்த்தையிலிருந்து உண்டானது. மார்கழிக்கு,
மழைக்காலம் கழிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். ஆயர்பாடியிலுள்ள கன்னியர்கள்,
நாட்டு நலத்திற்காகவும் பால் வளம் பெருகவும் நல்ல கணவர்களை அடையவும் நோன்பு நோற்றனர்.
மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்பட்டதால்
‘பாவை நோன்பு’ என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும்
எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி,
பார்வதி தேவியைப் பாடித் துதித்து வழிபட்டனர்.

தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள ஓர்
ஆயர்குலப் பெண்ணாகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, ‘பாவை நோன்பு’ நோற்ற சமயம் சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’.

கோதை நாச்சியார் என்ற இயற்பெயர் கொண்ட ஆண்டாள் அருளிய பிரபந்தங்கள் 2, திருப்பாவையும்,
நாச்சியார் திருமொழியும். 30 பாசுரங்கள்
கொண்ட திருப்பாவை, கோதா பிரபந்தம்/உபநிடதம் என்று வெகுவாகக் கொண்டாடப்படுகிறது.
இவற்றை
அருளிய சமயம் ஆண்டாள் பதின்ம வயதில் இருந்தாள் என்பது பாசுரங்களைப் பார்த்தாலே விளங்கும்.
அவரது பாசுரங்களை வாசித்து அனுபவிக்கையில், அந்தச் சின்னப்பெண்ணுக்குத் தமிழில் இருந்த
பெரும்புலமை பிரமிக்க வைக்கும். அதிலும் திருப்பாவை மிகக் கடினமான ‘இயல் தரவிணை கொச்சகக்
கலிப்பா’ வகையைச் சேர்ந்தது. ஆக, கோதை ஆண்டாள் தமிழையே ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில்
பதினெட்டு வயதுக்கு முன்னரே, திருப்பாசுரங்கள் அருளியவர்கள், தலையாய நம்மாழ்வாரும்,
ஆண்டாளும் மட்டுமே என்பது குறிப்பிடவேண்டியது.

ஆண்டாள் திரு ஆடிப்பூரத்து நாளில் துளசிச்செடிக்கு அருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள்,
திருப்பாவை முப்பதும் செப்பியவள், இராமானுஜருக்குத் தங்கையாகக் கருதப்படுபவள், ஒரு
நூற்று நாற்பத்து மூன்று உரைத்தவள் (நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் கொண்டது),
உயர் அரங்கர்க்கே கண்ணி (மாலை) உகந்து அளித்தவள். அதனால் அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.
பெரியாழ்வார் அரங்கனுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தான் ரகசியமாகச் சூடி கண்ணாடியில்
அழகு பார்த்து, பெருமாளை மணமுடிப்பதற்குத் தான் பொருத்தமானவளா என்றும் எண்ணிப்பார்த்துவிட்டே
கோதை அவற்றைக் கோயிலுக்கு அனுப்புவாளாம். ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு,
“இது தகாத காரியம்” என்று கடிந்து, அடுத்த முறை ஆண்டாள் சூடிப் பார்க்காத மாலையை எடுத்துச்
சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உவப்பானது; அதை எடுத்து வாரும்!”
என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து போய், ‘நம் பெண் மானுடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமிபிராட்டியின்
அம்சமாக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று தன் பெண்ணை அழைக்கலானார்.
மணப்பருவம் வந்தவுடன், கோதையை அலங்கரித்து பெரியாழ்வார் திருவரங்கத்துக்கு அழைத்து
வந்து, அரங்கனின் சன்னதியில் அவளை விட்டுவிட, கோதை அரங்கனுடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்
என்பது குரு பரம்பரை சொல்லும் ஆண்டாள் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல
நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் இருக்கின்றன.

அப்பரந்தாமனையே தனது உடைமையாக்கிக் கொண்டு, அந்த உரிமையை என்றைக்குமாகத் தக்க
வைத்துக்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவை/நாச்சியார் திருமொழிப்
பாசுரங்களில் காணப்படும் கடலை ஒத்த பேரன்பும், பிரவாகமாகப் பெருக்கெடுக்கும் பக்தி
ரசமும், கவிதை நயமும், அழகியல் உணர்வும் தனித்துவமானவை. ஒரு தெய்வப் பெண்ணின் காலத்தினால்
அழியாத தமிழ்ப் புலமைக்கும், கவித்துவ அழகுக்கும் நாம் தரும் மரியாதைக்கும் கௌரவத்திற்கும்
இன்றளவும் சாட்சிகளாக, வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும்,
பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன.
உடையவர் என்று போற்றப்பட்ட ராமானுஜர், ஆண்டாள் மீது பெரும்பக்தி கொண்டு, தினம்
பலமுறை திருப்பாவையை ஓதி வந்தார். திருப்பாவையின் மீது இருந்த ஈடுபாடே ராமானுஜருக்கு
‘திருப்பாவை ஜீயர்’ என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது.
ராமானுஜர் திருப்பாவை குறித்த உபன்யாசங்கள் செய்ததோ, விளக்கங்கள் எழுதியதோ கிடையாது.
அதற்கு ஆண்டாள் மீது உடையவருக்கு இருந்த பிரியமும், பெருமதிப்பும் ஒரு காரணம். இன்னொரு
காரணம், தான் திருப்பாவைக்கு ஈடு எழுதும் பட்சத்தில், பின்னாளில் யாரும் அதற்கு வித்தியாசமான
விளக்கம் எழுதத் துணியமாட்டார்கள் என்று அவர் கருதினார். ராமானுஜருக்கு விரிந்த தொலைநோக்குப்
பார்வை இருந்ததும், திருப்பாவையின் சீர்மையும் இதனால் நமக்குப் புரியலாம்.

ஒரு சின்னப்பெண் எழுதிய திருப்பாவையில் சின்னச்சின்ன விஷயங்கள் நம்மை வியப்பில்
ஆழ்த்தும். ஐந்து இறை நிலைகளில், முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணனே நமக்கே),
2வதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), 3வதில்
விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), 4வதில் அந்தர்யாமியாக
எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் (ஊழி முதல்வன் உருவம் போல்), 5வதில் கோயில்களில்
எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தையும் (மன்னு வடமதுரை மைந்தனை) சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடியிருக்கிறாள். ஆக, ஆண்டாள். வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூக,
விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடியிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பாவையின் 30 பாசுரங்கள் தரும் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல விழைகிறேன்.

முதல் பாசுரத்தில் (மார்கழித் திங்கள்), நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள்
(கண்ணன்) குறித்தும்,
2-வது பாசுரத்தில் (வையத்து வாழ்வீர்காள்), நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,
3-வது பாசுரத்தில் (ஓங்கி உலகளந்த), நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,
4-வது பாசுரத்தில் (ஆழிமழைக்கண்ணா), மழைக்காக வருணனை வேண்டியும்,
5-வது பாசுரத்தில் (மாயனை மன்னு வடமதுரை), நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை
கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,
6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரிடம்,
உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியவர் கூட்டத்தோடுச்
சேருமாறு விண்ணப்பித்தும்,
16-வது பாசுரத்தில் (நாயகனாய் நின்ற), நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை
எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,
17-வது பாசுரத்தில் (அம்பரமே சோறே), நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான்,
பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,
18-வது பாசுரத்தில் (உந்து மதக்களிற்றன்), நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன்
விழித்தெழ வேண்டியும்,
19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும்
உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,
21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப்
போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை
மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,
23-வது பாசுரத்தில் (மாரி மலை முழைஞ்சில்), கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில்
அமர வேண்டியும்,
24-வது பாசுரத்தில் (அன்று இவ்வுலகம் அளந்தாய்), அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம்
செய்தும்,
25-வது பாசுரத்தில் (ஒருத்தி மகனாய் பிறந்து), (கோபியர்) தங்களை ரட்சித்து
அரவணைக்க அவனைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,
26-வது பாசுரத்தில் (மாலே மணிவண்ணா), நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,
27-வது பாசுரத்தில் (கூடாரை வெல்லும்), பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்)
தாங்கள் வேண்டும் பரிசுகளைப் பட்டியலிட்டும்,
28-வது பாசுரத்தில் (கறவைகள் பின்சென்று), (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின்
மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை
பற்றியும்,
29-வது பாசுரத்தில் (சிற்றஞ்சிறுகாலே), எந்நாளும் பிரியாதிருந்து கண்ணனுக்குத்
திருச்சேவை செய்வதற்கு அருள வேண்டியும்,
30-வது பாசுரத்தில் (வங்கக்கடல் கடைந்த) திருப்பாவை ஓதும் அடியவர் கண்ணபிரானின்
அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்,
30 அதி அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை,
தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார் ஒரு கிருஷ்ண காவியத்தையே
படைத்துள்ளார்.

திருப்பாவைக்கு ராமானுஜ சம்பந்தம் காட்டும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. பிட்சை
பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல்தான்
செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்க ஓதியபடி செல்லும் பழக்கம் இருந்ததால்,
பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே
கருதினார்.

ஒரு சமயம், திருப்பாவையைப் பாடியபடி (திருக்கோட்டியூரில்) பிட்சைக்குச் சென்ற
ராமானுஜர், ‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்’ என்ற 18வது பாசுரத்தை பாடிய வண்ணம்
தனது குருவான திருக்கோட்டியூர் நம்பி அவர்களின் வீட்டு வாசற்கதவைத் தட்டினார். பிட்சையோடு
வந்த பெரிய நம்பியின் மகளான அத்துழாய் கைவளை குலுங்கக் கதவைத் திறக்கவும், ராமானுஜர்
‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி முடிக்கவும் சரியாக
இருந்தது. அவளைக் கண்ட மாத்திரத்தில், பாசுர வரிகளில் லயித்திருந்த ராமானுஜர், அத்துழாயை நப்பின்னை பிராட்டியாக எண்ணிக்
கொண்டு, நெடுஞ்சாண்கிடையாக அவள் கால்களில் விழுந்து சேவித்து, மயங்கிவிட்டார்.

அத்துழாய் பயந்து போய், தன் தந்தையான பெரிய நம்பியைக் கூட்டி வர, அவர் மிகச்
சரியாக ராமானுஜர் ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தைப் பாடியபோதுதான் இப்படி ஒரு நிகழ்வு
ஏற்பட்டு அவர் மயங்கியிருக்கவேண்டும் என்பதைக் கணித்து விட்டார். ஆக, இப்பாசுரம் உடையவருக்கு
மிகவும் உகந்தது. அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக
இருந்து வருகிறது.

இப்பாசுரம் தரும் வைணவச்சிந்தாந்தச் செய்தியைக் கவனித்தல் அவசியம்.

கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பந்தார் விரலி என்று பாடும்போது, கண்ணனோடு பூப்பந்து விளையாடி அதில் அவனைத்
தோற்கடித்து விட்டு, கண்ணனை ஒரு கையாலும், பூப்பந்தை ஒரு கையாலும் அணைத்த வண்ணம் கிடந்த
நப்பின்னையின் கோலம் சித்தரிக்கப்படுகிறது. ஐம்புலன்களில் ‘தொடுதல்’ என்பது மேலே சொல்லப்பட்டது.
அது போல, மற்ற நான்கு புலன்களின்அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு.

கந்தம் கமழும் குழலி – மூக்கு
உன் மைத்துனன் பேர் பாட – நாக்கு
சீரார் வளையொலிப்ப – செவி
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ – கண்

வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர்
(ஒன்றே) என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும்
(இலக்கு) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை வடமொழியில், ‘ஏக சேஷித்வம்’ என்றுரைப்பார்கள்.

திருப்பாவையின் 6-15 பாசுரங்கள் (புள்ளும் சிலம்பின காண் முதல் எல்லே இளங்கிளியே
வரை உள்ள 10 பாசுரங்கள்) ‘ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி’யாக, அதாவது ஒவ்வொரு பாசுரமும்
ஓர் ஆழ்வாரை (முறையே, பெரியாழ்வார், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார்,
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
திருமங்கையாழ்வார்) துயிலெழுப்புவதாகச் சொல்வது ஒரு வைணவ மரபு. அதற்கான சுவையான விளக்கங்களும்
உண்டு. பன்னிருவரில், ஆண்டாளும், மதுரகவியாரும் துயில் எழுப்பப்படவில்லை.

எல்லா ஆழ்வார்களுக்கும் மனதுக்கு நெருக்கமான வாமன அவதாரத்தை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*— பாசுரம் 3
அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே — பாசுரம் 17
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! — பாசுரம் 24
என்று ஆண்டாள் 3 இடங்களில் போற்றியிருக்கிறார். பெருமாள் த்ரிவிக்ரமனாக எடுத்து
வைத்த 3 அடிகளில், பூமியை அளந்த திருவடியைத்தான் கோதை நாச்சியார் போற்றியிருக்கிறார். 

விசுவரூபமெடுத்த பரமனின் பிரமாண்டத் திருவடியானது, இந்த பூமியை நீக்கமற வியாபித்ததால்,
(ஆழ்வார்களும், எந்தை இராமனுசரும் இன்னும் பல மகான்களும் வந்துதித்த) மண்ணுலகம் முழுதுமே
புண்ணிய பூமிதானே! திரிவிக்ரமனே புருஷோத்தமன் (புருஷ உத்தமன்). பரமன் வாமனனாகி மூவுலகை
அளந்த காலத்தில், அவனது திருவடியானது, அடியவர்-கொடியவர் என்று பாராமல் அனைத்து உயிர்களையும்
தொட்டு ரட்சித்தது.

முதல் மூன்று ஆழ்வார்களும் முறையே ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள்
அருளிய புண்ணியத்தலமான திருக்கோவலூரில் ‘நடந்த’ கோலத்தில் அருள் பாலிக்கும் உலகளந்த
பெருமாளை, கோதைக்கு உகந்த கண்ணனாகப் பார்க்கிறோம். எப்படி? திருக்கோவலூர் திவ்வியதேசம்
பஞ்ச கிருஷ்ண சேத்திரங்களில் முதன்மையானது. (மற்ற நான்கு, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி,
திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகியவையாம்.) ஏனெனில், இத்திருத்தலம் ஓர் ஆதி கிருஷ்ண சேத்திரம்.
இங்கு சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆகையால்,
இக்கண்ணபிரானையே (உலகளந்த பெருமாள் இருந்தாலும்) இத்திருத்தலத்தின் கதாநாயகனாகச் சொல்வது
வைணவ மரபு.

‘நாச்சியார் திருமொழி’ என்பதே, திருமால் மீது மையல்கொண்ட கோதை அவனை எப்படியாவது
அடைந்துவிடும் ஆசையை வெளிப்படுத்தும் அற்புதமான காதல் பாசுரங்கள்; எப்படியாவது தன்னை
அவ்வழகிய மணவாளனிடம் சேர்த்து விடு என்று ஆண்டாள் காமதேவனை வேண்டி நோன்பு நோற்பதில்
தொடங்கி, பின் கண்ணனின் லீலைகளில் திளைத்து, காதலில் உருகியுருகி பாடியவை அவை.

தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற குழந்தைத்தனமான
விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலின்
பெருமை பேசுதல், தூது விடுதல்; வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்யும் பிரமாண்டமான கல்யாண
ஊர்வலத்தைக் கனவு காணுதல்; அவன் ஆடையை என்மேல் வீசுங்கள், அவன் திருக்கேசத்தை அலங்கரித்த
துளசி மாலையை என் குழலில் சூட்டுங்கள், அவன் திருமார்பில் தரித்த மாலையை எனக்கு அணிவியுங்கள்,
அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள்,
அவன் திருவடி மண்ணை என் மேல் பூசுங்கள் என்று காதல் அரற்றல்கள்… இப்படி நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் ஒரு
சராசரிப் பெண்ணின் பாசாங்கற்ற அதி தீவிரக் காதல் இருப்பதை உணரலாம்.
நாச்சியார் திருமொழியில் பக்தி யோகம் தெரியவில்லையே என்று சந்தேகம் கொள்பவர்,
இது பெரும்பக்தியையும் தாண்டிய ஓர் உன்னத நிலை என்பதைப் புரிந்து உணரவேண்டும். அரங்கனைத்
தன் மணாளனாக மனதில் வரித்துக்கொண்டு, ஆண்டாள் அவன் மீது எடுத்துக்கொண்ட உரிமை, காமம்
என்ற வரையறைக்குள் வரவே வராது. அவனுடன் ‘சேர’ வேண்டும் என்பதான கோதையின் விருப்பம்,
வைகுந்த (மீள்) வாசத்திற்கான பூமிப்பிராட்டியின் ஏக்கம்.

ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண்ணைப் போலவே தன் காதல் வெற்றிக்காக நேர்ந்து கொண்டதைப்
பார்க்கலாம்.

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ

என்று நாச்சியார் திருமொழிப் பாசுரம் வாயிலாக வேண்டுதல் மேற்கொண்டவள், திருவரங்கத்திற்குப்
போய் அரங்கனின் கருவறையில் கரைந்துவிட்டாள். ‘நூறு அண்டா வெண்ணெய்யும் நூறு அண்டா
சக்கரைப்பொங்கலும்’ என்ற அவளது நேர்த்திக் கடனை யார் செலுத்துவது? சில நூற்றாண்டுகள்
கழிந்தன.

வைணவம் தழைக்க வந்த எந்தை ராமானுசமுனி என்கிற எம்பெருமானாருக்கு, ஆண்டாள் தன்
வேண்டுதலை நிறைவேற்றியிருப்பாளோ மாட்டாளோ என்ற நெருடல் ஏற்பட்டது. திருமாலிருஞ்சோலைப்
பெருமாளுக்கான கோதையின் நேர்த்திக்கடனை செலுத்தும் கடமையைத் தான் மேற்கொண்டார். பின்பு
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். வில்லிபுத்தூர் வந்தடைந்த ராமானுஜருக்கு
ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆண்டாளது கோயிலின் அர்த்தமண்டபத்தில் ராமானுஜர் நுழைந்தபோது,
அங்கே அவருக்காகக் காத்திருந்த ஆண்டாளே அவரை வரவேற்று, தனது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக
அவருக்கு நன்றி தெரிவித்தாள். அவரை ‘அம்மான்’ என்று அன்போடு அழைத்தாள் ஆண்டாள்.

அதாவது, ஒரு பொறுப்புள்ள தமையன் எப்படித் தனது தங்கையின் விருப்பத்தைப் பூர்த்தி
செய்வானோ, அப்படி ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்னான’ தனது விருப்பத்தை நிறைவேற்றிய ‘அண்ணனான’
ராமானுஜருக்காக கர்ப்பகிருகத்திலிருந்து வெளியே வந்த கோதை நாச்சியார் அதன்பிறகு உள்ளே
செல்லவே இல்லை. அன்றிலிருந்து அர்த்தமண்டபத்திலேயே, தனது மணாளன் வடபத்ரசாயியுடன் சூடிக்
கொடுத்த சுடர்க்கொடி எழுந்தருளி இருக்கிறாள். அன்றிலிருந்து ராமானுஜருக்கும் கோதக்ராஜர்
என்ற திருநாமம் வழங்கலாயிற்று. ஆண்டாளின் அன்புக்குரிய தமையன் ஆனார். அதனால்தான் இன்றும்,
ஆண்டாளுக்கு வாழி சொல்லும்போது ‘பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்கிறோம்.
Leave a Reply