Posted on Leave a comment

சோவைப் பற்றிப் பேசுகிறேன்… – சுப்பு

தொலைபேசி அல்லது கைபேச மணி அடித்து நம்மை எழுப்பலாம். அது அனுபவ சாத்தியம்தான்.
ஆனால், சிலசமயங்களில் விளக்கமுடியாத காரணங்களால் குறுஞ்செய்திகூட நம்மை எழுப்பிவிடுகிறது.
07:12:2016 அன்று அதிகாலை ஒரு குறுஞ்செய்தி என்னை எழுப்பிவிட்டது. துக்ளக் இதழின் ஆசிரியர்
சோ.ராமசாமி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியை மாப்பிள்ளை அனுப்பியிருந்தார்.

சோ நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அலுவலகம் – மருத்துவமனை – அலுவலகம்
என்று இருந்ததாலும், பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் இழப்பு…? நிச்சயமாக
சுப்புவுக்கு மட்டுமல்ல, துக்ளக் வாசகர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு மட்டுமல்ல,
மனித நேயத்திலும் ஜனநாயகத்தில் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது இழப்புதான்…

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சோவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எந்தவித சிரமமும்
இல்லை. All road leads to Rome என்பது போல அந்தக் காலைப்பொழுதில் நடந்தும், டூவீலர்களிலும்,
கார்களிலும் மக்கள் கூட்டம் சோவின் வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சென்னையின்
நாடக உலகமே அங்கிருந்தது. ஊடகமும் சினிமாவும் கூட. அரசியலும்தான். எப்போதும் சிரித்த
முகத்தோடு செயல்படும் துக்ளக் ஊழியர்களைக் கண்ணீரோடு பார்ப்பது சங்கடமாக இருந்தது.
ஆசிரியருக்கு என்னுடைய அஞ்சலியைச் செலுத்தினேன். வெளியே வந்து செருப்பை மாட்டியபோது,
தந்தி தொலைக்காட்சி நிருபர் என்னை ஓரமாக ஒதுக்கினார். அதிகம் பிரபலமில்லாத என்னை இவர்
எப்படிக் கண்டுபிடித்தார் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே கேள்வியைக் கேட்டுவிட்டார்.
“சோ சாரோடு உங்களுக்கு நீண்ட நெடிய அனுபவமிருக்கும். அதை பற்றிச் சொல்லுங்கள்” என்றார்.

எனக்கு நீண்ட அனுபவமில்லை, இருந்தாலும் அவர் எனக்கு ஒரு முக்கியத்துவத்தைக்
கொடுத்தார். பிராபல்யத்தை உண்டாக்கினார். தனக்குத் தெரிந்தவர்களை, தனக்கு வேண்டியவர்களைப்
பிரபலப்படுத்துவது பெரிய விஷயமல்ல. ஆனால் சோ தன்னுடைய வட்டத்துக்கு வெளியே இருந்தவர்களையும்
தகுதி கருதிப் பிரபலப்படுத்தினார். அதற்கு நானும் ஓர் உதாரணம்.

தமிழக அரசியல் வரலாற்றை ‘திராவிட மாயை – ஒரு பார்வை’ என்ற புத்தகமாக நான் எழுதி,
அது வெளியிடப்பட்டு, ஓரளவுக்கு கௌரவமான விற்பனையை அடைந்த நேரமது. ஒரு நிகழ்ச்சியில்
சோவைச் சந்தித்தேன். யாராவது ஒருவர் அவரை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் விருப்பம்தான்.
இருந்தாலும் கூச்சம் தடுத்தது. அதற்கு அவசியமில்லாதபடி, சோ என்னிடம் வந்தார்.

“நீங்கள் தானே திராவிட மாயை எழுதியது?” என்று கேட்டார். “ஆமாம் சார், எப்படி
என்னைக் கண்டுபிடிச்சீங்க?” என்று கேட்டேன்.
ஒரு நல்ல நண்பருடைய நிர்ப்பந்தத்தின் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு நான்
துக்ளக் அலுவலகத்துக்குப் போய், என் புத்தகத்தைக் கொடுத்திருந்தேன். அதை சோ படித்துவிட்டார்
என்பதே எனக்கு ஆச்சரியமான செய்தி. அந்த அட்டைப் படத்திலுள்ள புகைப்படத்தை வைத்து என்னை
அடையாளம் கண்டுபிடித்தார் என்பது கூடுதல் ஆச்சரியம்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ‘திராவிட மாயை’ இரண்டாம் பகுதியை துக்ளக் வார இதழில்
இரண்டு வருடங்கள் எழுதினேன். வாசகர்களுடைய அபிமானத்தை அது பெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.
இரண்டாவது பகுதியும் புத்தகமாக வந்து நல்லபடியாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை
வைத்துச் சொல்கிறேன். நம்முடைய சரக்கு எப்படியிருந்தாலும் சோவுடைய முத்திரைக்கு ஒரு
மவுசு உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். “இன்றைக்குச் செவ்வாய்க் கிழமையா?” என்று கேட்டால்கூட
“சோ சார் இது பற்றி என்ன சொல்கிறார்?” என்று விவாதிக்கும் வாசகர் கூட்டம் அவருக்கு
உண்டு.

சோவுடைய ஆளுமை, துக்ளக் இதழில் முழுமையாக
இருக்கும். அச்சில் வருகிற வாக்கியங்கள், வார்த்தைகள் மட்டுமல்ல; கால்புள்ளி அரைப்புள்ளி
கூட அவருடைய கட்டளையில்லாமல் உள்ளே வரமுடியாது.
சொற்களுக்கு நடுவே வரும் இடைவெளிக்குக்
கூட அவருடைய அனுமதி தேவை. இந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த இதழில், ஓரளவுக்கு
சுயசிந்தனையை விரும்பும் என்னைப் போன்றோர் எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். அதை நான் மறைக்க
விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதால் சோவின் பெருமை குறைந்துவிடாது.
ஒருமுறை, காமராஜரைப் பற்றிக் கழகத்தவர்கள் பிரயோகித்த சில வசைச் சொற்களைக் குறிப்பிட்டு
நான் எழுதியிருந்தேன். சோ அதைத் தவிர்த்துவிடலாம் என்றார்.

“சார், இது அவங்க சொன்னது…” என்று இழுத்தேன். அவர் உடன்படவில்லை. ஒரு மேற்கோளாகக்
கூட காமராஜரைப் பற்றிய வசைச் சொற்கள் துக்ளக் இதழில் அச்சு ஏறுவதை அவர் விரும்பவில்லை
என்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.

சோவின் தடை உத்தரவு என்னைப் பாதிக்கவில்லை. காமராஜரை அவர் எந்த இடத்தில் வைத்திருந்தார்
என்பது எனக்குத் தெரிந்த விஷயம். வாசகர்களுக்காகச் சொல்கிறேன்.

1971 தேர்தலில் காமராஜரும் ராஜாஜியும் திமுகவுக்கு எதிராகக் கூட்டணி அமைத்தார்கள்.
அந்தக் கூட்டணிக்கு ஆதரவாகச் சோ பிரசாரம் செய்தார். தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியடைந்தது.
தோல்விக்குக் காரணம் ராஜாஜியோடு சேர்ந்ததுதான் என்று நினைத்த சோ, காமராஜரிடம் அது பற்றிப்
பேசுகிறார். சோவின் கருத்தைக் கேட்ட காமராஜருடைய ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பதை
சோ எழுதுகிறார்.

“தோத்துட்டோம்ங்கிறத்துக்காக
எல்லாத்தையும் மறந்துடறதா? நாம் தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே
பணம் இல்லே; ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்பறாங்கன்னு ஆயிடிச்சு. எல்லாத்துக்கும் சேர்த்து
ராஜாஜி தலைமேலே பழியைப் போடச் சொல்றீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சுத்தானே அவரோடே சேர்ந்தோம்னேன்!
ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு?
இந்த மாதிரி நீங்க நினைக்கறதே தப்பு. அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதில்லே.
ஆனால் தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்?
அதை ஒத்துக்கிட்டுதானே கூட்டு சேர்ந்தோம்? நாம தோத்தவுடனே, அவருக்கு தேசத்துமேலே அக்கறையே
கிடையாதுன்னு நினைக்கச் சொல்றீங்களா? ரொம்ப தப்புன்னேன்; ராஜாஜியோட சேர்ந்ததுனாலே தேர்தல்லே
தோத்துட்டோம்னு யாரு வந்து சொன்னாலும் நம்பாதீங்க” என்றார் காமராஜ்.

காமராஜின் அரசியல்
நேர்மை அணைக்கட்டை உடைத்துக்கொண்டு பீறிட்டு வரும் வெள்ளம்போல் பிரவாகமெடுத்து என்
கண்முன்னே ஓடியது. மாபெரும் தோல்வியின் பழியைச் சுலபமாக வேறொருவர் மீது திருப்பிவிட
நல்ல சந்தர்ப்பம் இருந்தும்கூட, தன் தோல்வியின் சுமையை ஏற்றுக்கொண்டு, அந்தப் படுதோல்வியிலும்
கண்ட ஒருசில வெற்றிகளையும் மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருந்த காமராஜின் பரந்த
உள்ளம் அலை கடல் போல் அங்கே பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல்
விமர்சகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித்
தலைகுனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து பாவத்தைக் கழுவிக்கொண்டேன்.

இவ்வாறு எழுதியுள்ளார் சோ.

நாட்டுப்பற்றை முன்னிறுத்துச் செயல்பட்டவர்
சோ என்பது பிரத்யட்சப் பிரமாணம். எனவே ஊடகத்துறையின் சில விதிகளை அவர் புறந்தள்ளினார்
என்பது எனக்கு ரசிக்கக் கூடியதாக இருந்தது.
 நான் சொல்ல விரும்புவது இதுதான். இன்றைய
தமிழ் அரசியல் உலகம் பாழ்பட்டிருக்கிறது. நம்முடைய சொத்தைk கொள்ளை அடித்து அதை ஆயிரக்கணக்கான
கோடிகளாக உருமாற்றி இரண்டு கட்சிகளை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இரண்டு கட்சியிலும்
வாரிசு யுத்தம் நடக்கிறது. சொத்துக்கு யார் சொந்தம் என்பதுதான் இங்கே தலையாய பிரச்சினை.
சொத்துக்கு பாத்யதை கொண்டாடுகிறவர்கள் இதைப் பிரச்சினையாக்குவதில் விசேஷமில்லை.

இந்தப் பணம் மொத்தமும் தங்களுடையதுதான் என்கிற பிரக்ஞையே இல்லாமல் பொதுமக்களும்
போட்டி போட்டுக் கொண்டு இந்த யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது
வருத்தமாக இருக்கிறது. அதிலும் முகநூல் நண்பர்களுடைய மூர்க்கத்தனம் கூடுதலாகவே இருக்கிறது.
அஇஅதிமுகவை சசிகலா என்ற சாராய அதிபரிடம் ஒப்படைப்பதா அல்லது தீபா என்ற புதுமுகத்திடம்
குத்தகைக்கு விடுவதா என்கிற துவந்த யுத்தத்தில் தமிழறிவுலகம் பிளவுபட்டு நிற்பதைப்
பார்க்கும்போது அழுகையைவிடச் சிரிப்பு அதிகமாக ஏற்படுகிறது. கருணாநிதி கட்சியிலும்
அதே கதைதான்.

இந்த நாற்றம்பிடித்த சூழலிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்றால்
சோ போன்ற பத்திரிகையாளர்களை நாம் நினைவுகூர வேண்டும். அதைச் செய்திருக்கிறேன்.

சோ பற்றிய வெங்கட் சாமிநாதனின் கருத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும் என்று
நினைக்கிறேன். வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்:

“தமிழ்நாட்டுக்கு
மீட்சியே இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது, தமிழ் அரசியல் களத்தில்
திரு.வி.க போன்ற ஒரு தார்மீக நெறி, அறிவார்ந்த சக்தி தோன்றும் என நாம் கனவிலும் நினைத்துப்
பார்க்க இயலாத ஒன்று. ஆனால் தார்மிகமும் அறிவார்த்தமும் அறவே அற்ற தமிழ்நாட்டு அரசியல்
களத்தில் இத்தகைய கனவுலக நிகழ்ச்சி ஒன்று தோன்றியுள்ளது. அது ஒரு freak ஆக, வினோதப்
பிராணியாகவே காட்சியளிக்கக்கூடும், தமிழக அரசியல் களத்தின் குணாம்சங்களை நாம் நினைவு
கொண்டால். ஆனால் இன்னமும் ஒரு ஆச்சரியம், அது freak ஆக இல்லை. பொருட்படுத்தவேண்டிய
ஒரு சக்தியாகவும் வளர்ந்துள்ளது. நிச்சயமாகச் சொல்கிறேன். இச்சக்தி தொடருமானால் ஒரு
புதிய அரசியல் கலாசார மரபுக்கும் இது வழிவகுக்கக்கூடும். தொடருமானால்தான். ஆனால் தொடருமா
என்பது கேள்விக்குறிதான். நான் ‘சோ’ வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்
” என்கிறார்
வெங்கட் சாமிநாதன்.

நானும்தான்.
Leave a Reply