Posted on Leave a comment

குருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ. ராம்கி

அலுமினிய அண்டாவை ஒற்றை
ஆளாக நகர்த்தி வைத்துவிட்டு, வகுப்புக்கு வந்தார் சந்திரா என்னும் சத்துணவு டீச்சர்.
‘இன்னிக்கு நாம படிக்கப்போற அதிகாரம், கள்ளாமை. அப்படீன்னா என்ன தெரியுமா?’
அது 1984. பள்ளிக்கூடத்து
நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் மதிய உணவு முடிந்ததும்
திருக்குறள் வகுப்பு ஆரம்பமாகிவிடும். ‘வாரம் ஒரு அதிகாரம் சொல்லிக்குடுக்கணும்னு ஜெயலலிதா
உத்தரவு போட்டிருக்கா’ என்று சத்துணவு டீச்சர், கிளாஸ் டீச்சரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
தமிழ்நாடெங்கும் சத்துணவுக் கூடங்களுக்கு ஜெயலலிதா மேற்கொண்ட அதிரடி விசிட் அப்போது
பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது.

சத்துணவுத் திட்டக்குழு
உறுப்பினராக ஜெயலலிதாவின் அனுபவங்களே, பின்னாளில் ‘அம்மா உணவகம்’ வரை வரக் காரணமாக
இருந்திருக்கவேண்டும்.
1980
இறுதியில் எம்ஜிஆரின் நெருக்கமான வட்டாரத்துக்குள் வந்துவிட்டாலும், அதிகாரபூர்வமாக
அதிமுகவில் சேர சத்துணவுத் திட்டமே காரணமாக இருந்தது.
காமராஜர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்த
திட்டம், எம்ஜிஆரால் தூசு தட்டப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் இன்னும் பல மாணவர்களைச்
சென்றடையும்படி மாற்றப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவினர் அதை மக்களிடம் கொண்டு சென்றார்கள்.
பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவைக் கடத்திக்கொண்டு போகும் லாரி டிரைவரை வழிமறித்து
சினிமாவில் உதைத்துக் கொண்டிருந்தார் பாக்யராஜ். சத்துணவு சாப்பிட்டால் கண்பார்வை கிடைக்கிறது,
காது கேட்கிறது என்றெல்லாம் சினிமா மேடைகளில் பேசினார் பாரதிராஜா. எம்ஜிஆர் அரசுக்குப்
போதுமான விளம்பரம் கிடைத்தது. ஆனால், செயல்பாடு?

சத்துணவுத் திட்டத்தின்
தூணாக இருந்தவர் ஜெயலலிதா. திட்டத்திற்கான நிதிஒதுக்கீடு செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்
இருந்தன. டெல்லியின் ஏராளமான கேள்விகளை ஜெயலலிதாதான் எதிர்கொண்டார். காமராஜர் கொண்டுவந்த
திட்டம்தானே, இதிலென்ன புதுமை என்று கிண்டலடித்தது திமுக. சத்துணவுத் திட்டத்தை பித்தலாட்டம்
என்றார் கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம். அரிசி போதவில்லை என்று எம்ஜிஆர் டெல்லியிடம்
முறையிட்டபோது, சத்துணவுத் திட்டத்தின் மூலம் அரிசியை வீணாக்குகிறார்கள் என்றது காங்கிரஸ்.
எல்லாவற்றையும் சமாளித்தது ஜெயலலிதாதான்.

அதிமுக பேச்சாளர்களுக்கு,
சத்துணவுத் திட்டம் குறித்துப் பயிலரங்கு நடத்தினார். பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்பட்டு
வந்த சத்துணவுத் திட்டத்தில் இருந்த குளறுபடிகளை நீக்கி, ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும்
சத்துணவு மையத்தை அமைத்தார். சத்துணவு டீச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். தனி கட்டடம்,
பாத்திரங்கள், பண்டங்கள், ஆயாக்கள், அரிசி, பருப்பு என அதுவொரு தனி அமைப்பாக மாறியது.
அடுத்த கட்டமாக, பாலர் பள்ளி உருவானது. கர்ப்பிணிகளுக்கும் முதியோர்களுக்கும் மதிய
உணவு இலவசமாக இங்கிருந்து தரப்பட்டது. திருக்குறள் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னாளில்,
ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானபோது சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்களாக்கப்பட்டார்கள்.
சத்துணவுக் கூடங்கள், பள்ளிக் கூடங்களுக்கு இணையான எழுச்சியைப் பெற்றன.

ஜெயலலிதா என்னும் அதிரடி
ஆட்டக்காரர் ஆடிய வெற்றிகரமான முதல் ஆட்டம் அது. அரசியலோடு அரசு நிர்வாகமும் அவருக்குப்
பழக்கப்பட்டிருந்தது. அரசியல், அவருக்குக் கனவாகக் கூட இருந்ததில்லை. 1974ல் திரையுலகத்திலிருந்து
காணாமல் போன ஜெயலலிதா, ஐந்தாண்டுகள் கழித்து எழுத்தாளராகத்தான் அறிமுகமானார். துக்ளக்கில்
வாராவாரம் தொடர் கட்டுரைகள் எழுதினார். அதிலும் அதிரடிதான்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
மறைவுக்கு நாள் முழுவதும் ரேடியாவில் சோக கீதம் இசைக்கப்பட்டது. இதெல்லாம் போலித்தனமான
அஞ்சலிகள் என்று எழுதினார். ‘மதுவிலக்கைப் பொருத்தவரை எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒன்றுதான்.
ஆட்சியில் இல்லாதவரை மதுவிலக்கு வேண்டுமென்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள்’
என்று விமர்சித்தார். இந்திய மருத்துவர்களின் அலட்சியப் போக்கிற்குத் தரப்படவேண்டிய
தண்டனை, ஜோசியத்தின் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கைகள் எனப் பொதுப்புத்தி தாண்டிய விஷயங்களை
எழுதியவர், கடைசிவரை சினிமா பற்றி எழுதவேயில்லை.


முழுநேர எழுத்தாளராவது
என்கிற முடிவில் ஜெயலலிதா இருந்திருக்கலாம். கலைஞருக்கு குங்குமம் போல், எம்ஜிஆருக்கும்
ஒன்று ஆரம்பித்தாகவேண்டும் என்பது வலம்புரிஜானின் விருப்பம். ‘தாய்’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது,
வலம்புரிஜான் ஆசிரியரானார். ‘எனக்குப் பிடித்தவை’ என்னும் தலைப்பில் ஜெயலலிதா நிறைய
கட்டுரைகள் எழுதினார். வலம்புரிஜானுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான முட்டல், மோதல்களில்
சிக்கிக்கொண்ட எம்ஜிஆருக்கு வேறு வழி தெரியவில்லை. ‘தாய்’ நிறுத்தப்பட்டது.

தமிழ்நாடெங்கும் ஒவ்வொரு
ஊராகச் சென்று அதிமுக கொடியை ஏற்றி வைத்த நாஞ்சில் மனோகரன் போன்ற உற்சவர்கள் கட்சியை
விட்டு விலகியிருந்த காலம் அது. இந்திரா காந்தியே முன்வந்து தஞ்சாவூரில் போட்டியிட
விருப்பம் தெரிவித்தபோதும், மெரார்ஜி தேசாய்க்குப் பயந்து எம்ஜிஆர் நழுவினார். கோபம்
கொண்ட இந்திரா, திமுகவுடன் கூட்டணி அமைத்து, டெல்லி கோட்டைக்குச் சென்றார். உள்ளூர்
அரசியல் முதல் டெல்லி அரசியல்
வரை சுழலில் மாட்டிக்கொண்ட எம்ஜிஆருக்கு, சுறுசுறுப்பான இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேவைப்பட்டார்கள்.
ஜெயலலிதாவின் எழுத்தில்
இருந்த துணிச்சலையும், அதில் தொனிக்கும் சாமானியனின் குரலையும் எம்ஜிஆர் புரிந்துகொண்டார்.
ஜெயலலிதா பேச்சாளராக்கப்பட்டார். கட்சிக்கு மட்டுமல்ல, கழக வரலாற்றிலும் அதுவொரு முக்கியமான
திருப்பம். அதுவரை கழக மேடைகள் அடுக்குமொழி வசனங்களைப் பேசும், அலங்கார இடமாகவே இருந்து
வந்தன. சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் முன்னிறுத்தப்பட்டதில்லை. எம்ஜிஆர்
அதை மாற்றியமைத்தார்.
ஜெயலலிதா, தலைமையுரை மட்டுமல்ல,
சில மேடைகளில் அவரே ஒரே பேச்சாளராகவும் ஆனார். அவரது பேச்சுகளில் கருணாநிதி எதிர்ப்பு
பிரதானமாக இருந்தாலும், தேசிய அரசியலையும் தொட்டுக்காட்டினார். வழக்கமான அரசியல் மேடைப்பேச்சுகளிலிருந்து
முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடுக்குமொழி வசனங்கள் இல்லை. சிலேடையும் இல்லை. பாமர
மக்களின் மனதுதான் அவரது இலக்கு. ‘கிருஷ்ணா நதிநீரை தமிழ்நாட்டுக்கு கெண்டு வர நம்முடைய
முதல்வர் ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இரவு திரும்புவார். விடிந்தால்
வேறொரு முதல்வர் இருப்பார். அவரோடும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பி வருவார்.
மறுநாள் வேறொருவர் ஆந்திர முதல்வராக இருப்பார். நம் முதல்வர் என்னதான் செய்வார் பாவம்!’
என்றார். கிண்டல், குத்தல், ஆவேசம், அதுதான் ஜெயலலிதா.

நம்பர் டூவாக இருந்தாலும்,
அவ்வப்போது கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.
படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டபோதும், 1984ல்அதிமுக பெற்ற பெருவெற்றிக்கு காரணமாக
இருந்தது ஜெயலலிதாவின் அதிரடி பிரசாரம்தான். எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது,
மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அவரை தூரமாக நின்று கூடப் பார்க்க முடியாத ஏமாற்றத்தோடும்,
எதிர்காலம் பற்றிய கவலைகளோடும் போயஸ்கார்டனுக்கு திரும்பிய அதே ஜெயலலிதா, பின்னாளில்
நான்கு முறை அதிமுக ஆட்சியில் ஏறுவதற்குக் காரணமாக இருந்தார்.
ஜெயலலிதாவின் துணிச்சலும்
தன்னம்பிக்கையும், அவரது அரசியல் எதிரிகளாலும் வியக்கப்பட்ட விஷயம். தன்னுடைய படங்களைப்
பற்றி, கடுமையாக விமர்சனம் செய்த ஒரே சினிமாக்காரர் அவராகத்தான் இருக்க முடியும். அதையும்
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது செய்தவர். ஜெயலலிதா நடிக்க வருவதற்கு முன்பு படப்பிடிப்பு
தளங்களில் நடிகைகளின் சுயமரியாதை கெட்டுக்கிடந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில்
கால்மேல் போட்டபடி புத்தகம் படித்த ஜெயலலிதாவின் கலகக்குரல், அறுபதுகளின் தமிழ்ச் சமூகத்திற்கு
அவசியம் தேவைப்பட்டது.

சினிமா மட்டுமல்ல, சினிமாவுக்குப்
பின்னணியில் உள்ள விஷயங்களையும் பொதுவெளியில் விமர்சிக்க அவர் தயங்கியதேயில்லை.
இந்தி சினிமா நாயகர்களுக்கும், தமிழ் சினிமா நாயகர்களுக்கும்
உள்ள வித்தியாசம் பற்றி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. சட்டென்று பதில் சொன்னார், ‘ஜனநாயகத்துக்கும்
சர்வாதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசம்.
அவ்வளவுதான்.’ எம்ஜிஆர் மட்டுமல்ல, என்.டி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமனோடு
நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்தவர். 1964 தொடங்கி
பத்து ஆண்டுகள் நடித்திருந்தாலும் 100 நாட்கள் ஓடிய 4 படங்களும், 3 வெள்ளி விழா படங்களில்
மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தார். ஆண்டுக்கு சராசரியாக 15 படங்கள் நடித்தாலும், அவர்
சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம்வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே.

1972 மே மாதம், வேதா நிலைய
கிரஹப்பிரவேசம். சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது கட்ட ஆரம்பித்த வீடு. திரையுலகம்
திரண்டு வந்து வாழ்த்தியது. வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எம்ஜிஆர், கடைசிவரை வரவேயில்லை.
பிற்பகலுக்குப் பின்னர் வீடே வெறிச்சோடி கிடந்தது. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பார்த்துப்
பார்த்து கட்டிய வீடு. ஆனால், வீடு கட்டி முடிவதற்குள் சந்தியாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது.
ஜெயலலிதா இப்போது ஒரு தனி ஆள்.

அடுத்து வந்த இருபதாண்டுகள்,
புயலில் சிக்கிய தோணியாக இருந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கை. அவரது வாழ்க்கைப் பாடத்தின்
முக்கியமான அத்தியாயங்கள் இக்காலகட்டத்தில்தான் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முழுவதுமாக
வெளிக்கொண்டுவர அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.
திட்டமிட்டு ஒதுக்கப்பட்டாலும்,
கட்சித்தொண்டர்கள் அவரது பக்கம்தான் இருந்தார்கள். கருணாநிதி எதிர்ப்பு என்பதைப் பரிபூரணமாக
அவரால் மட்டுமே முன்னெடுக்க முடிந்தது. உதிர்ந்த ரோமங்கள் என்று விமர்சித்தாலும், அவரைத்
தேடி வந்தார்கள். தலைவியாக ஏற்றுக்கொண்டார்கள். சுற்றி கூட்டம் கூடி நின்றாலும், மனதளவில்
அவர் தனிமையின் சிறையில் இருந்தார்.

எழுபதுகள் தொடங்கி, மாநில
சுயாட்சி பற்றி திமுக பேசாத கூட்டங்கள் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணியில் இல்லாத காலங்களில்
திமுகவும், அதிமுகவும் அவ்வப்போது பேசுவதுண்டு. மாநில உரிமைகள் குறித்து ஒவ்வொரு முறையும்
ஜெயலலிதாவிடமிருந்து உரத்த குரல்களே எழுந்தன. அது டெல்லியைக் கிடுகிடுக்க வைத்து, சென்னையை
நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. ஆணாதிக்க அரசியல் உலகில், ஆண்களைக் குனிய வைத்து,
தரையில் விழுந்து வணங்க வைத்தது விமர்சிக்கப்பட்டது. கேலிக்கூத்தாக்கப்பட்டது. காலப்போக்கில்
பார்வை மாறியிருக்கிறது. கருணாநிதியை விட ஜெயலலிதாவை அதிகமாக விமர்சித்த எழுத்தாளர்
வாஸந்தி, ‘அதுவொரு உத்தி. ஆண்களைச் சற்று எட்ட நிறுத்தவேண்டிய அவசியம் இருந்தது. ஆண்
உலகம் அவரை அவமானப்படுத்தியதற்கான பரிகாரம் அது‘ என்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் வானில்,
முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜெயலலிதா இருந்தார்.
அவரது முன்கோபம், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கலைத்துப்போட்டது.
புதிய அரசியல் சமன்பாடுகளை ஆரம்பித்து வைத்தது. முன்னுப்பின் முரணான அரசியல் நடத்தினாலும்
அதை உறுதியுடன் நடத்துவதில் வெற்றி பெற்றிருந்தார். தமிழ் ஈழம், பாஜகவுடன் கூட்டணி
போன்ற விஷயங்களில் அவரது உண்மையான நிலைப்பாடு அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அவரது
பிடிவாத குணமும், அசட்டுத்துணிச்சலும் ஆயிரம் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் ஆரோக்கியமான
வழியையும் திறந்துவிட்டிருந்தது. யாரும் எதிர்க்கத் துணியாத நேரத்தில் விடுதலைப்புலிகளை
எதிர்த்தார். சட்டம், ஒழுங்கைத் தொலைத்து, ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிக்கொண்டிருந்த
தமிழகத்தை மீட்டெடுத்தார். எம்ஜிஆரால் நிகழ்த்தவே முடியாத சாதனை.

ஒவ்வொரு வீழ்ச்சிக்குப்
பின்னரும் ஜெயலலிதா மாறிப்போனார் என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஒரு சில
விஷயங்களில் அவர் மாறாமல் இருந்தது, தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரம். குறிப்பா பெண்கள்
நலனும், பசித்தவர்களுக்கு சோறிடும் ஒவ்வொரு திட்டங்களும், தொண்ணுறுகள் தொடங்கி அவர்
கைக்கொண்டவை. தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடங்கி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெண்
குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்ட நிதியுதவி வரை பெண்கள் நலனுக்கான திட்டங்களை வேறெந்த
முதல்வர்களும் முன்னெடுத்ததில்லை. அவரது ஆட்சியில்தான் மதிய உணவுத் திட்டம், காலை உணவுத்திட்டமாகவும்
விரிவுபெற்றது. வழிபாட்டுத் தலங்களில் நாள்தோறும் அன்னதானம் ஆரம்பமானது. இனம், மதம்,
மொழி பேதமின்றி பசி தீர்க்கும் அம்மா உணவகங்களை ஏற்படுத்தியது கடைசிக்காலங்களில் அவர்
செய்த பெரும் சாதனை.
ஜெ
யலலிதாவே சொல்வது போல்
வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜிஆர் உருவாக்கித் தரவில்லை. அரசியலுக்கு
அழைத்து வந்தாலும், அந்தப் பாதையை அவர் எளிதாக்கித் தரவில்லை. எம்ஜிஆர் உதாசீனப்படுத்தியிருந்தாலும்
ஜெயலலிதா தளர்ந்துவிடவில்லை. ஒருவேளை, எம்ஜிஆர் மீது கோபம்கொண்டு, வேறு கட்சிகளில்
இணைந்திருந்தால் ஜெயலலிதா எப்படி இருந்திருப்பார்? நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது.

ஜெயலலிதா, நவீன அரசியல்
கண்டெடுத்த அற்புதம். அதுவரை கொள்கை என்னும் முகமூடியில் தனிமனித அரசியலே அரங்கேறிக்கொண்டிருந்தது.
போலித்தனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, தேர்தல் அரசியலையும், சீட் பேரங்களையும் வெளிப்படையாக
முன்னிறுத்தினார். ஆட்சித் தலைமை வேறு, அரசியல் தலைமை வேறு என்பதை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார்.
காமராஜர், கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள், சிறந்த ஆட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால்
மட்டுமே வரலாற்றில் நிலைக்க முடிந்தது. அண்ணாதுரை, எம்ஜிஆரால் அத்தகைய நிலையை எட்டமுடியவில்லை.
ஆனால், ஜெயலலிதாவால் அதை அநாயசமாக செய்யமுடிந்தது. ஜெயலலிதா, இனி ஜெயில் லலிதா என்ற
நிலை வந்தபோதுதான் அப்படியொரு விஸ்வரூபமெடுத்தார்.

சகலகலாவல்லியாக அவரை முன்னிறுத்தும்
அஞ்சலிகள் இன்னும் நிறைய வரக்கூடும். அதற்குத் தகுதியானவர்தான். அவரை விடச் சிறப்பான
ஆட்சியாளர்களாக சந்திரபாபு நாயுடுவையும், மம்தா பானர்ஜியையும் நிறுவமுடியும். ஆனால்,
ஜெயலலிதா வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த சோதனைகள், அவரது தனிமையின் துயரோடு இணைத்துப்
பார்க்கும்போது, ஒரு புதிய சித்திரம் கிடைக்கும். அது முற்றிலும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே
சொந்தமானதாக இருக்கும். 
Leave a Reply