இன்றைக்கு அறியக் கிடைக்கும் இந்திய வரலாறு முற்றிலும் மழுப்பல்களாலும், பொய்களாலும், புனைகதைகளாலும் ஆன ஒன்று. இந்திய சுதந்திரத்திற்குப்பின் இந்திய வரலாற்றை எழுதப் புகுந்த இடதுசாரிகளும், கிறிஸ்தவச் செயற்பாட்டாளர்களும், நேருவியச் சிந்தனையாளர்களும் உண்மையான இந்திய வரலாற்றை அவர்களின் இஷ்டத்திற்குத் திரித்து எழுதினார்கள். அந்த வரலாற்றையே உண்மையான வரலாறாக நிறுவ முயன்று, அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
துரதிருஷ்டவசாக இந்தியப் பெரும்பான்மையும், சுதந்திரத்திற்குப் பின் அவர்களை ஆள வந்தவர்களும் இது குறித்த அறிதல் சிறிதும் இல்லாதவர்களாக இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள். இனிமேலும் அது மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே நான் நினைக்கிறேன். தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்ளாத எந்தவொரு சமுதாயமும் மெல்ல மெல்ல அன்னியர்களுக்கு இடம் கொடுத்து அவர்களிடம் அடிமைப்பட்டு அழிந்து போகும். தன்னுடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து தெளிந்த ஒருவனுக்கு மட்டுமே, தான் எப்படி வாழவேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாறே மீண்டும் மீண்டும் இந்தியர்களின் மீது திணிக்கப்படுகிறது. அது ஓரளவிற்கு உண்மையென்றாலும் அதுவே உண்மையும் அல்ல. அதனையும் தாண்டி இந்திய வரலாறு நீண்டது. நெடியது. அதனை அறிந்து கொள்ளாத அல்லது அறிந்து கொள்ள முயலாத இந்தியன் மீண்டும், மீண்டும் அடுத்தவனுக்கு அடிமைப்படுவான். அன்னியரின் வரலாற்றையே தனது வரலாறாகவும் நினைக்க முற்படுவான். அதுவே இன்றைக்கு இந்தியாவில் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. பைபிளும், குரானும் அன்னியர்களின் வரலாறே அன்றி வேரென்ன?
நம்மை வெற்றி கொண்டவர்களால் எழுதப்பட்ட வரலாறே இன்றைக்குப் பெரிதும் நமக்குக் கிடைக்கிறது என்பது உண்மையே. அதேசமயம், அதே காலத்தில் வாழ்ந்த பிற இந்தியக் குடிமக்கள் எழுதிய வரலாறுகள் அல்லது வரலாற்றுக் குறிப்புகள் பெருமளவிற்கு வெளிச்சத்திற்கு வரவில்லை. அல்லது அதனை நாம் பொருட்படுத்தவில்லை. அவர்கள் நமக்கு அளிக்கும் சித்திரம் முற்றிலும் மாறுபட்டது. அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை ஆழமாக ஆய்ந்து அறிய முற்பட வேண்டும். நமது கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இதற்கான முனைப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த வகையில் இந்தியர்களால், குறிப்பாகத் தமிழர்களால் பெரிதும் உதாசீனப்படுத்தப்பட்ட ஆனந்த ரெங்கம் பிள்ளை நாட்குறிப்பு மிக முக்கியமானதொரு ஆவணம். பாண்டிச்சேரியை ஆண்ட பிரெஞ்சு கவர்னர்களின் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ‘துபாஷி’ ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1736ம் வருடம் துவங்கி 1761ம் ஆண்டு வரையிலான இருபத்தைந்து ஆண்டு காலகட்டத்தில், தான் கண்டு கேட்டு அனுபவித்தவற்றைக் குறித்து எழுதி வைத்த தகவல்களே இன்றைக்கு ‘ஆனந்த ரெங்கம் பிள்ளை’ நாட்குறிப்பாக அறியப்படுகிறது. அதில் அறியக் கிடைக்கும் வரலாற்றுத் தகவல்கள் நமக்கு முற்றிலும் வேறொரு உலகத்தைக் காட்டுகின்றன. ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் பெயர்க்கப்பட்ட அந்த நாட்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
*****
ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1709ம் வருடம் மார்ச் மாதம் சென்னையை அடுத்த பெரம்பூரில், வணிகரான திருவேங்கிட பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். 1716ம் வருட காலத்தில் திருவேங்கிட பிள்ளை, பிரெஞ்சு அரசாங்கத்தில் அவர்களுக்கு உதவும் ஏஜெண்டாகப் (courtier) பணிபுரிந்த அவரது மாமனாரான நைனா பிள்ளையின் அறிவுறுத்தலின் பேரில், குடும்பத்துடன் பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்தார். அன்றைக்கு பாண்டிச்சேரி கவர்னராக இருந்த ஹெர்பெர்ட்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு அழைப்பு அனுப்பியதாகத் தெரிகிறது. திருவேங்கிட பிள்ளையுடன் அவர்களது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த பல செல்வந்தர்களும் அங்கு வியாபாரம் செய்யும் நோக்கில் பாண்டிச் சேரிக்குக் குடிபெயர்ந்தார்கள்.
நைனா பிள்ளை மற்றும் திருவேங்கிட பிள்ளையின் மேற்பார்வையில் பாண்டிச்சேரியின் வணிகம் செழிக்கத் துவங்கியது. அவர்களின் துரித வளர்ச்சியைப் பொறுக்காத கவர்னர் ஹெர்பெர்ட், நைனா பிள்ளையை பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்ய, அவர் சிறையிலேயே இறந்து போனார். தங்களையும் கவர்னர் சிறையில் அடைத்து விடுவார் என அஞ்சிய நைனா பிள்ளையின் மகனான குருவ பிள்ளையும், அவரின் மாமனாரான திருவேங்கிட பிள்ளையும் சென்னைக்குத் தப்பியோடினார்கள். பின்னர் குருவ பிள்ளை இங்கிலாந்திற்குப் பயணித்து அங்கிருந்து பிரான்ஸுக்குப் போய் அன்றைக்கு பிரான்ஸை ஆண்ட ட்யூக் ஆஃப் ஆர்லியன்ஸிடம், பாண்டிச்சேரி கவர்னர் ஹெர்பெர்ட்டின் நடத்தையைக் குறித்துப் புகார் செய்ய, அதன் அடிப்படையில் 1719ம் வருடம் ஹெர்பெர்ட்டை பிரெஞ்சு அரசாங்கம் திரும்ப அழைத்துக் கொண்டது.
இதற்கிடையில் பிரான்ஸ் முழுவதும் சுற்றித் திரிந்த குருவ பிள்ளை மதம் மாறி கிறிஸ்தவரானார். செவாலியே ஆஃப் செயிண்ட் மைக்கேலாக நியமிக்கப்பட்ட குருவ பிள்ளை, இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருக்கும் கிறிஸ்தவர்களுக்குத் தலைவராகவும் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து குருவ பிள்ளை பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். அவர் திரும்புவதற்கு முன்னர் புதிய பாண்டிச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட டி லா ப்ரெவோஸ்டி (de la Prdvostiere) திருவேங்கிட பிள்ளையை மீண்டும் பாண்டிச்சேரிக்கே திரும்பி வரும்படி அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்ற திருவேங்கிட பிள்ளை மீண்டும் அவரது ஐந்து செல்வந்த நண்பர்களான வியாபாரிகளையும், அவர்களின் குடும்பத்தையும் பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்தார். அதனைத் தொடர்ந்து பிரெஞ்சுக் கம்பெனிகளின் வியாபாரம் செழித்து வளரத் துவங்கியது. குருவ பிள்ளை 1724ம் வருடம் இறந்து போக, அடுத்த இரண்டாண்டுகளில் (ஜூன் 1726) திருவேங்கிட பிள்ளையும் இறந்தார்.
அதே 1726ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் லெனாய் (Lenoir) கவர்னராகப் பதவியேற்கும் பொருட்டு பாண்டிச்சேரிக்கு வந்தார். லெனாய் பாண்டிச்சேரில் நீண்ட காலம் வசித்து விட்டு பிரான்ஸுக்குப் போனவர். அவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்த காலத்தில் திருவேங்கிட பிள்ளையின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவராக இருந்தவர். எனவே அவரது மரணச் செய்தியால் துக்கமடைந்த கவர்னர் லெனாய் அவரது மகனான ஆனந்த ரெங்கம் பிள்ளையை பிரெஞ்சு அரசாங்கத்தின் உள்நாட்டு ஏஜெண்டாக, திருவேங்கிட பிள்ளை வகித்த அதே பதவிக்கு, நியமினம் செய்தார்.
ஆனந்த ரெங்கம் பிள்ளை அந்தப் பதவியை மிகத் திறம்படச் செய்து கவர்னர் லெனாயின் நம்பிக்கையைப் பெற, லெனாய் போர்ட்டோ நோவோவில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தார். போர்ட்டோ நோவோவில் அதிக அளவில் தயாரிக்கப்பட்ட நீல நிறத் துணிகள் இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிற வியாபாரிகளுக்கும் விற்கப்பட்டன. பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரத்தை விருத்தி செய்யும் முகமாக, ரெங்க பிள்ளை அவரது சொந்த முதலீட்டில் ஆற்காட்டிலும், லாலாபேட்டையிலும் வியாபார ஸ்தலங்களைத் (trading posts) துவக்கினார். அங்கிருந்து ஐரோப்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு, ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரெஞ்சு வணிகர்கள் பெரும் லாபமடைந்தார்கள்.
கவர்னர் லெனாயைத் தொடர்ந்து பாண்டிச்சேரி கவர்னாக 1735ம் வருடம் பதவிக்கு வந்த கவர்னர் டூமா (Dumas)வும் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் உடையவராக இருந்தார். வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த பிரெஞ்சுக்காரர்கள் 1740ம் வருடம் தென்னிந்தியாவின் மீது அரசாட்சி செலுத்த வந்த மராத்தியர்களால் பெரும் சரிவை சந்தித்தார்கள். அவர்களின் வியாபாரமும் தொழிற்சாலைகளும் பெருமளவிற்கு முடங்கின. மராத்தியர்கள் போர்ட்டோ நோவோ துணி தயாரிப்புத் தொழிற்சாலையின் மீது தாக்குதலைத் தொடுத்து அதனை அழித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தென்னிந்தியாவில் வலிமையுள்ள அரசுகள் எதுவும் இல்லாமல், தென்னிந்தியா முழுமையும் ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலில் இருந்தது.
தமிழகம் முழுமையும் போர்களும், ஆக்கிரமிப்புகளும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் தியூப்ளே (Dupleix), 1742ம் வருடம் பாண்டிச்சேரியின் பிரெஞ்சுக் கவர்னராகப் பதவியேற்க பாண்டிச்சேரிக்கு வந்தார். அவருக்கு முன்னர் பாண்டிச்சேரியை ஆண்ட சில கவர்னர்களைப் போலவே தியூப்ளேவும் இரண்டாவது முறையாக பாண்டிச்சேரிக்கு வருகிறார். 1721 முதல் 1731ம் வருடம் வரைக்கும் பிரெஞ்சுக் கம்பெனியில் பணிபுரிந்த தியூப்ளே, திருவேங்கிட பிள்ளையையும் அவரது மகனான ஆனந்த ரெங்கம் பிள்ளையையும் நன்கு அறிந்தவர் என்பதில் சந்தேகமில்லை.
தியூப்ளேவின் வரவிற்குப் பின்னர் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவம் உச்சத்திற்குச் சென்றது. ஆனந்த ரெங்கம் பிள்ளை நேர்மையும் திறமையும் உடையவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைய கவர்னர் தியூப்ளே அவரை மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த courtier பதவி (chief of dubhash என்றும் இப்பதவி அறியப்பட்டது), குருவ பிள்ளையின் மரணத்திற்குப் பின்னர் வேறொரு குடும்பத்தின் வசம் இருந்தது.
முக்கியத்துவம் வாயந்த courtier பதவி ஒரு கிறிஸ்தவர் வசமே இருக்க வேண்டும் என்று தீர்மானித்த பாண்டிச்சேரியின் வலிமையுள்ள கிறிஸ்தவ குருமார்கள் அந்தப் பதவியை, குருவ பிள்ளை கிறிஸ்தவர் என்றாலும், வேறொரு கிறிஸ்தவருக்கு அளித்திருந்தார்கள். குருவ பிள்ளையின் குடும்பத்தில் அவரைத் தவிர வேறொருவரும் கிறிஸ்தவர்களாக மதம் மாறவில்லை என்பதுதான் காரணம். எனவே தியூப்ளே கவர்னராக இருந்த காலத்தில் கனகராய முதலி என்பவரே courtier பதவியில் இருந்தார். கவர்னருக்கும் ஆனந்த ரெங்கம் பிள்ளைக்கும் இருந்த நெருக்கத்தை கனகராய முதலி விரும்பவில்லை. எனவே அவர் ஆனந்த ரெங்கம் பிள்ளையைத் தனது எதிரியாக நினைத்து அதன்படியே நடந்தார். இருந்தாலும் 1746ம் வருடம் கனகராய முதலி மரணமடைய, 1747ம் வருடம் ஆனந்த ரெங்கம் பிள்ளை அந்தப் பதவியை அடைந்தார்.
கவர்னர் பதவியிலிருந்து தியூப்ளே நீக்கப்படும் வரையில் (1754) ஆனந்த ரெங்கம் பிள்ளை அரசாங்க முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியை வகித்தார். அவரைத் தொடர்ந்து கமிஷனராக நியமிக்கப்பட்ட கொதே (Godeheu)யின் காலத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தில் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவமும் அதிகாரமும் படிப்படியாகச் சரிய ஆரம்பித்தது. அதனுடன் அவரது உடல் நலமும் சரியில்லாமல் போக, அவரால் அந்தப் பதவிக்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாமல் போன காலத்தில், பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டி லெறி (de Leyrit) ஆனந்த ரெங்கம் பிள்ளையை courtier பதவியிலிருந்து (1756) நீக்கினார்.
ஆனந்த ரெங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்பு இதனைக் குறித்து நேரடியாக எதுவும் சொல்லாவிட்டாலும், தியூப்ளேவிற்குப் பின்னர் வந்த கவர்னர்கள் ஆட்சியில் அரசாங்க ஏஜெண்ட்களாக நியமிக்கப்பட்ட துபாஷிகள் லஞ்சம் வாங்குவதனையும், ஊழல்கள் செய்வதனையும் குறித்தும், பிரெஞ்சுக்காரர்களின் மோசமான நிர்வாகம் குறித்தும் கசப்புடன் எழுதிய குறிப்புகள் காணப்படுகின்றன. தனது கடைசிக் காலத்தை மன வருத்தத்துடனேயே கழித்த ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1761ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, பிரிட்டிஷ்காரர்கள் கர்னல் கூட்டே (Colonel Coote) தலைமையில் பாண்டிச்சேரியைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் மரணமடைந்தார். அவருக்கு மகன்கள் எவரும் இல்லை. பிறந்த இரண்டு ஆண்குழந்தைகளும் அவர்களின் சிறு வயதிலேயே இறந்து போனார்கள்.
ஆனந்த ரெங்கம் பிள்ளை எதற்காக இத்தனை நுணுக்கமாக இத்தனை தகவல்களையும் எழுதி வைத்தார் என்பது வியப்பிற்குரிய விஷயம். ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடும் எண்ணம் எதுவும் அவருக்கு நிச்சயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சாதாரண ஒரு சிறிய தகவலிலிருந்து, வியாபார நடவடிக்கைகள், அவரது குடும்ப விவகாரங்கள், மக்களின் அன்றைய வாழ்க்கை முறை, வதந்திகள் என எல்லாத் தகவல்களையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். பாண்டிச்சேரி கடற்கரையை வந்தடைந்த ஒவ்வொரு கப்பலின் பெயரிலிருந்து, அதன் கேப்டன்கள், அதில் வந்திறங்கிய முக்கியஸ்தர்கள், அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட பொருள்களின் தகவல்கள், வரவேற்பிற்காக வெடிக்கப்பட்ட பீரங்கிக் குண்டுகளின், துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை என ஒன்றுவிடாமல் அவரது நாட்குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உடல்நலம் குறைந்த அவரால் சுயமாக எழுத முடியாத காலத்தில் பிறரின் உதவி கொண்டும் அந்தக் குறிப்புகளை விடாமல் எழுதியிருக்கிறார்.
பெரிய கணக்குப் புத்தகங்களில் எழுதப்பட்ட இந்த டைரிக் குறிப்புகள், 1736ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பிக்கின்றன. ஆனந்த ரெங்கம் பிள்ளையின் மரணத்திற்குப் பிறகு அவரது உறவினரான திருவேங்கிட பிள்ளை 1770ம் வருடம் வரைக்கும் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். ஆனால் இந்தக் குறிப்புகள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் வரைக்கும் பிறரது பார்வையிலிருந்து மறைந்திருந்தன. Montbrun என்கிற பிரெஞ்சுக்காரரின் பெரு முயற்சிக்குப் பின்னரே இந்த டைரிக் குறிப்புகளை உலகம் அறிய முடிந்தது. அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களும் அதனை ஆங்கிலத்தில் பெரும் முயற்சி செய்து 1892ம் வருடம் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.
தமிழில் ஆனந்த ரெங்கம் பிள்ளைக்கு முன்னரும் சரி, அவருக்கும் பின்னரும் சரி, இது போன்ற முயற்சிகள் நிகழவில்லை. எனவே அவரது டைரிக் குறிப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் பெருமைப்பட வேண்டிய தமிழர்கள் ஆனந்த ரெங்கம் பிள்ளையை கௌரவப்படுத்தும் எளிய முயற்சிகளைக் கூடச் செய்யவில்லை என்பது மிகவும் வருந்தக்கூடிய ஒன்றே.
ஆனந்த ரெங்கம் பிள்ளை டைரிக் குறிப்பிலிருந்து சுவாரஸ்யமான சில சிறு பகுதிகளை இங்கு காணலாம். ஆர்வமுள்ளவர்கள் மொத்த குறிப்புகளையும் இணையத்திலிருந்து தரவிறக்கிப் படிக்கலாம்.
*****
சனிக்கிழமை, மே 23-1739, சித்தாத்ரி வருடம், வைகாசி 13 :
சூரத்திலிருந்து இன்று மதியம் பாண்டிச்சேரியை வந்தடைந்த ட்யூப்ளேவின் கப்பலான சந்திரநாகூர் கீழ்க்கண்ட தகவலைக் கொண்டு வந்திருந்தது.
இரானின் இஸ்ஃபஹான் பகுதியை ஆண்டு வந்த பெர்ஷிய அரசனான தஹ்மாஸ்ப் குலிகான் பெரும் வலிமை பெற்றவனாக மாறியிருந்தான். அவன் துருக்கிய சுல்தானுடன் போரிட்டு அவனைத் தோற்கடித்தான். அதனைத் தொடர்ந்து அவனது பார்வை தில்லியை நோக்கித் திரும்பி, தில்லியின் முகலாய அரசன் தனக்கு அடிபணியக் கோரி கடுமையான மிரட்டலை முகலாய அரசனுக்கு அனுப்பி வைத்தான். அதற்கு அடிபணிய மறுத்த முகலாய அரசன் போருக்கு அறைகூவல் விடுத்தான். அதனைத் தொடர்ந்து தஹ்மாஸ்ப் குலிகான், இரானின் இஸ்ஃபஹானிலிருந்து 60,000 படை வீரர்களுடன் தில்லியை நோக்கிப் படையெடுத்து வந்தான். வரும் வழியிலிருந்த சிறிய, பெரிய அரசர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு அவர்களைக் கப்பம் செலுத்த வைத்துவிட்டு, லாகூரை வந்தடைந்தான். லாகூர், முகலாய அரசின் மிக முக்கியமானதொரு நகரம். அங்கு நடந்த சண்டையில் குலிகானின் படைகள் முகலாயப் படைகளைத் தோற்கடித்து லாகூர் கோட்டையைக் கைப்பற்றின.
அதனைக் கண்டு அஞ்சிய முகலாய அரசன் தனக்கு உதவி செய்யும்படி நிஜாம்களையும் இன்னபிற அரசர்களையும் வேண்ட அவர்களும் அவனுக்கு உதவிக்கு வந்தனர். இருந்தாலும் அவர்கள் அனைவரும் குலிகானால் தோற்கடிக்கப்பட்டனர். படை திரட்ட முயன்ற முகலாய அரசனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, குலிகான் தில்லியின் மீது படையெடுத்து முகலாய அரசன் முகம்மது ஷாவை, அவனது மந்திரி பரிவாரங்களையும், சேனாதிபதிகளையும் பிடித்துச் சிறையிலடைத்தான். அவ்வாறு பிடிக்கப்பட்ட இருபத்தைந்து முகலாய முக்கியஸ்தர்களுடன் முகலாய அரசர் முகம்மது ஷாவையும் குலிகான் நடுத்தெருவில் வைத்து அவர்களின் தலையைத் துண்டித்தான்.
முகம்மது ஷாவின் பெயரால் இதுவரை அடிக்கப்பட்ட காசுகள் ஒழிக்கப்பட்டு, இனிமேல் தனது பெயரில் மட்டுமே காசுகள் அச்சடிக்கப்பட வேண்டுமென குலிகான் உத்தரவிட்டான். அந்த உத்தரவு சூரத்தின் நவாப்புக்கு அளிக்கப்பட்டு, முகம்மது ஷாவின் பெயர் காசுகளில் பொறிப்பது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ‘கடவுளின் ஆணைப்படி, நாதிர் ஷா, மஹாராஜா’ என்கிற எழுத்துக்கள் பொறிக்க ஆணையிடப்பட்டது.
இனிமேல் எல்லோரும் புதிய மஹாராஜாவை ‘நாதிர் ஷா, கடவுளின் ஆணைப்படியான மஹாராஜா’ என்றே அழைக்க வேண்டும் என்றும், எவரேனும் அவரை ‘தஹ்மாஸ்ப் குலிகான்’ என்று அழைத்தால் அவர்களுக்கு ரூபாய் 600 அபராதம் என்றும் ஓர் ஆணையை நாதிர் ஷா அனுப்பி வைக்க, சூரத்தின் நவாப் அந்த அரசாணையை சூரத் முழுவதற்கும் தண்டோரோ போட்டு அறிவித்தான். பழைய காசு உருளை வடிவமாக இருக்க, புதிய காசு முனைகளுடன் இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
இந்த மாதிரியான செய்திகளை கவர்னரும் அவரைச் சுற்றியுள்ள முக்கியஸ்தர்களும் மட்டுமே அறிந்திருந்தார்கள். எல்லா வலிமையுமுள்ள தில்லி அரசனுக்கே இந்தக் கதியென்றால் சாதாரண மனிதர்களின் கதி என்ன? இந்த உலகில் இத்தனை செல்வமும் வலிமையும் இந்த அரசர்களுக்கு எதற்கு? எப்படியும் இது ஒரு நாள் அழிந்து போகும்.
…..
நான் இதற்கு முன்னர் தில்லியின் பாதுஷா முகமது ஷாவின் தலை துண்டிக்கப்பட்டதாகs சொல்லியிருந்தேன். ஆனால் பின்னர் வந்த தகவல்கள் இதனை முற்றாக மறுக்கின்றன. முகமது ஷா சிறையில் அடைக்கப்பட்டதாக மட்டுமே இப்போது வந்த தகவல்கள் சொல்கின்றன. மேலும் நிஜாம் நாதிர்ஷாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் தெரிகிறது. அடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் வந்த தகவல்களின்படி முகமது ஷா மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டதாகவும், அவரது மகள் குலிகானின் மகனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டதாகவும் சொல்கிறது. தில்லி பாதுஷாவின் அத்தனை பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு சென்ற நாதிர்ஷா அட்டோக் நதியைக் கடந்து, மூல்தானையும் காபூலையும் தாக்கியழித்தான்.
நாதிர்ஷா கொள்ளையடித்துச் சென்ற ஏராளமான செல்வம் காரணமாக தில்லியின் வியாபாரிகள் அனைவரும் வறுமையில் வாடினார்கள். பல ஆயிரக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்டு அவர்களின் மனைவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். நாதிர்ஷாவின் இந்தப் படையெடுப்பால் ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் வரையிலானவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மேற்கண்ட தகவல்கள் அர்மீனிய வியாபாரிகள் எழுதிய கடிதங்களின் வாயிலாக அறியப்பட்டது.
செவ்வாய், டிசம்பர் 27-1740, ரவுத்திரி வருடம் மார்கழி:
கீழ்க்கண்ட தகவல்கள் இன்றைக்கு அறியக் கிடைத்தன.
நேற்று அரை டஜன் மராத்தா குதிரைப்படையினர் கடலூருக்கு மேற்கே வந்திருந்ததாகத் தெரிகிறது. அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு ஆள் அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால் அந்த ஆள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கு முன் எதிரிகள் நகரை நோக்கி வருவது போலத் தெரியவே, திருப்பாப்புலியூரின் கோட்டைச் சுவரிலிருந்து அவர்களை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. எனவே அவர்கள் அங்கிருந்து திரும்பி ஓடிவிட்டார்கள்.
அவர்களைப் பின் தொடர அனுப்பி வைக்கப்பட்ட உளவாளி அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் பின் தொடர்வதனை உணர்ந்த ஒரு குதிரைக்காரன் அவனை நோக்கி வேகமாக வந்து வாளினால் தாக்க முயன்றான். உளவாளி தன் கையில் வைத்திருந்த தடியினால் ஓங்கி அடித்து குதிரைக்காரனின் வாளைத் தட்டி கீழே விழ வைத்துவிட்டு, உடனடியாக கடலூரின் செயிண்ட் டேவிட் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த கவர்னரிடம் இதனைக் குறித்துக் கூற, அவனுக்கு இரண்டடி அகல இடுப்புத் துணியும், ஏழு பகோடாப் பணமும், இருபது நாழி அரிசியும் பரிசாக வழங்கப்பட்டன.
அதே நாளில் சிறிது நேரம் கழித்து ஐம்பதிலிருந்து அறுபதுவரையுள்ள மராத்தா குதிரைப்படையினர் பாகூருக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களை நோக்கி இருபது அல்லது முப்பது துப்பாக்கிகளால் சுட்ட பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடினார்கள். மறுநாள் பாகூரில் இருந்த படைத்தலைவர் பாண்டிச்சேரிக்கு வந்து நடந்தவற்றை கவர்னருக்கு விளக்கினார். மராத்தா படையினர் பாகூரைச் சுற்றியிருந்த ஊர்களில் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
காலை எட்டு மணிக்கு பல பொதுமக்கள் பாண்டிச்சேரிக்குள் வந்து மராத்தா படையினர் தென்னல் பகுதியைச் சுற்றிக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தனர். மராத்தா குதிரைப்படை வில்லியநல்லூர், உஸ்துகுளம், அரும்பாடைப் பிள்ளை சத்திரம் மற்று ஒழுக்கரை வரையில் வந்ததாகவும், அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களைக் கொள்ளையடிப்பதாகவும் மேலதிகத் தகவல்கள் வந்தன.
ஒன்பது மணியளவில் கவர்னர் ஐம்பது சிப்பாய்களை முத்தையா பிள்ளையின் தலைமையில் ஒழுக்கரைக்கு அனுப்பி வைத்தார். ஆற்காட்டு நவாபுடன் வந்து பாண்டிச்சேரிக்குள் தங்கியிருந்த முகமதிய சிப்பாய்களும் வெளியே அழைக்கப்பட்டு அவர்களும் ஒழுக்கரையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று சேர்வதற்குள் மராத்தா படையினர் வழுதாவூருக்குச் சென்றுவிட்டனர். எனவே மேற்கண்ட சிப்பாய்கள் மீண்டும் பாண்டிச்சேரிக்கு மாலை நான்கு மணிக்குத் திரும்பி வந்துவிட்டனர்.
போர்டோ நோவோவிலிருந்து டிசம்பர் 24ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட கீழ்க்கண்ட கடிதம் மராத்தாக்களின் அட்டூழியங்களைப் பற்றிச் சொல்கிறது.
டிசம்பர் 18, சனிக்கிழமையன்று இரண்டாயிரம் மராத்தா குதிரைப் படையினர் திருச்சிக்குச் செல்வதற்காக திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் தெற்கே தியாகதுர்கம் வரைக்கும் பயணம் செய்து பின்னர் கிழக்காகத் திரும்பி விருத்தாச்சலத்திற்கு அன்றிரவு வந்து சேர்ந்தனர். திருவண்ணாமலைக்கும் விருத்தாச்சலத்திற்கு இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய ஐம்பது மைல்களாகும். தியாகதுர்கத்திலிருந்து விருத்தாச்சலம் வர பத்து மைல்கள் தூரமாகும். இப்படியாக ஒரே நாளில் மராத்தா குதிரைப்படை அறுபது மைல்கள் தூரம் பயணித்திருக்கிறது.
விருத்தாச்சலத்திலிருந்து அடுத்த நாள் காலை புறப்பட்ட மராத்தாக்கள் ஐம்பது மைல்கள் தூரம் பயணித்து போர்டோ நோவோவை வந்தடைந்தார்கள். இப்படியாக வெறும் ஒன்றரை நாட்களில் மராத்தா குதிரைப்படை 110 மைல்களைக் கடந்திருக்கிறது. போர்ட்டோ நோவோவிற்கு மேற்கே இரண்டரை மைல்கள் தூரத்திலிருக்கும் சித்திரச்சாவடியை ஆக்கிரமித்த மராத்தாக்கள் அந்த வழியாகச் செல்வோரை அடித்துத் துன்புறுத்தியும், சாவடியில் தங்கியிருந்த பயணிகளை கொள்ளையடித்தும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நாகப்பட்டினம் டச்சுத் தொழிற்சாலையிலிருந்து கடிதங்களைக் கொண்டு வந்து கொண்டிருந்த இரண்டு பியூன்கள் சித்திரச்சாவடியில் நடக்கும் அடாவடிகளைக் கண்டுவிட்டு வழியிலிருப்பவர்களை எச்சரித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைக் கேட்ட போர்டோ நோவோவின் பல பொதுமக்கள் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு, போர்ட்டோ நோவோ தொழிற்சாலைக்குள் குவிய ஆரம்பித்தார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் தொழிற்சாலைக்குள் இருக்க இடமில்லாதவர்கள் அங்கிருந்த ஆற்றுக்கு ஓடி நாட்டுப்படகுகளில் ஏறித் தப்பிச் செல்ல முயன்றார்கள். வெறும் நாற்பது பேர்களுக்கு மட்டுமே இடமிருக்கும் அந்த நாட்டுப் படகுகளில் இரு நூறிலிருந்து முந்நூறு பேர்கள் வரைக்கும் ஏறியதால் படகு நகர முடியாமல் அங்கேயே நின்றது. துணி மூட்டைகள் அடுக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு படகுகளும் அங்கேயே மாட்டிக் கொண்டு நகர இயலாமல் நின்றிருந்தன.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மராத்தா குதிரைப்படையினர் பார்வையில் தென்பட ஆரம்பித்தார்கள். அவர்களிலிருந்து 500 பேர்கள் ஆற்றை நோக்கி நகரின் தெற்குப்பகுதிக்குச் செல்ல இன்னும் 500 குதிரைப்படையினர் வடக்கு நோக்கி நகர்ந்தார்கள். இப்படியாக 1,000 மராத்தாக்கள் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவர்களிலிருந்து மூன்று அல்லது நான்கு பேர்கள் கொண்ட சிறுகுழுக்களாகப் பிரிந்து அந்தப் பகுதியிலிருந்த ஒவ்வொரு வீட்டையும் கொள்ளையடித்தார்கள். ஆற்றை நோக்கி ஓடாமல் வீட்டிலேயே இருந்தவர்கள் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். அவர்களின் மானத்தை மறைக்க ஒரு அடித் துணியை மட்டும் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்த அத்தனை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
வேறு சிலர் மராத்தாக்களின் குதிரைகளைப் பிடித்துக் கொள்ள வைக்கப்பட்டார்கள். மற்ற சிலரோ கொள்ளையடித்த பொருட்களை அவர்களின் தலைகளில் சுமந்து செல்ல உபயோகப்படுத்தப்பட்டார்கள். இதற்கிடையில் இன்னொரு குதிரைப்படைக் குழுவினர் படகுகளை நோக்கிச் சென்று அங்கு சிக்கியிருந்தவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்தார்கள். பெரும்பாலோருக்கு அடியும், உதையும், வெட்டுக்காயங்களும் பரிசாகக் கிடைக்க, இன்னும் சிலர் ஆற்றில் குதித்து தப்ப முயன்றார்கள். சிலர் தப்பினாலும் பன்னிரண்டு பேர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தார்கள்.
பின்னர் ஐநூறுக்கும் மேற்பட்ட குதிரைப்படையினர் டச்சு தொழிற்சாலையை நோக்கிச் சென்றனர். தொழிற்சாலையின் கதவுகள் மூடியிருந்த போதிலும் கயிற்று ஏணிகளை உபயோகித்து உள்ளே நுழைந்த அவர்கள் தொழிற்சாலையின் கதவுகளைத் திறந்து உள்ளே புகுந்தனர். மொத்த மராத்தாப் படையும் தொழிற்சாலைக்குள் புகுந்து அங்கிருந்த அத்தனை பேர்களையும் பிடித்து அவர்களின் உடைகளைக் களைந்தனர். அங்கிருந்த சிலருக்கு வெட்டுக்காயங்களும், சாட்டையடிகளும் பரிசாகக் கொடுக்கப்பட்டது. பின்னர் கோவணத்துணியை மட்டும் கொடுத்து அகங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அங்கிருந்த கவர்னரும், மனைவியும் அவர்களது மூன்று மகள்களும் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டார்கள். ஊருக்கு வெளியே சிறை வைக்கப்பட்ட ஐரோப்பியக் கைதிகள் அனைவரும் மறுநாள் காலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
விடுதலை செய்யப்பட்ட ஐரோப்பிய கைதிகளுடன் டச்சுத் தொழிற்சாலைக்குச் சென்ற அறுபது குதிரைப்படையினர் தொழிற்சாலையை உடைத்து அழித்துவிட்டு எஞ்சிய பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். ஏறக்குறைய ஒரு இலட்சம் பகோடாப் பண மதிப்பிலான பொருட்கள் டச்சுத் தொழிற்சாலையிலிருந்தும், ஐம்பதினாயிரம் பகோடா பண மதிப்பிலான பொருட்கள் பொதுமக்களிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்டதாக போர்ட்டோ நோவோவிலிருந்து வந்த கடிதம் தெரிவித்தது.
வியாழன், மார்ச் 17-1746, க்ரோதன வருடம் பங்குனி :
வியாழனன்று இது நிகழ்ந்தது.
புதன்கிழமை இரவு பதினொரு மணியளவில் மலச் சட்டியுடன் ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், கோவிலின் நடையைச் சுற்றி இருந்த தெய்வச் சிலைகளின் மீது மலத்தை ஊற்றியதுடன் மட்டுமல்லாமல், ஈஸ்வரன் சன்னிதிக்குள்ளும் நுழைந்து அங்கிருந்த நந்தியின் மீதும் ஊற்றியிருக்கின்றனர். பின்னர் அங்கு உடைந்து கிடந்த கோவில் பகுதியின் வழியாக அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.
விடிகாலையில் கோவிலுக்குச் சென்ற நம்பியானும் மற்ற கோவில் பணியாளர்களும் இந்த அநியாயத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களின் மேலதிகாரிகளுக்கு இதனைத் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் நம்பியானும் இன்னும் நான்கு பிராமணர்களும் அவர்களது அக்ரஹாரத்திற்கும், பிற தெருக்களில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ‘ஈஸ்வரனுக்கு பூஜை புனஸ்காரங்கள் எதுவும் நடக்காது. ஈஸ்வரன், பராசக்தியின் மீது ஆணையாக நீங்கள் வீட்டில் ஒன்றும் சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
பின்னர் ஒன்பது மணியளவில் பெருமாள் கோவிலுக்கு முன்னால் கூடிய பிராமணர்களும் பிற ஜாதியினரும் இதனைக் குறித்து கலந்தாலோசனை செய்திருக்கிறார்கள். இதனைக் கேள்விப்பட்ட கவர்னர் அவரது தலைமை பியூனை அனுப்பி வைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியிருக்கிறார். கிரிமாசி பண்டிதரை அங்கு அனுப்பிய கவர்னர் பெருமாள் கோவிலின் முன் கூடிய கூட்டத்தைக் கலைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படியே அங்கு சென்ற கிரிமாசி பண்டிதர் கோவிலின் முன்னால் நின்றிருந்த ஒரு செட்டியாரின் கன்னத்தில் அறைந்து பின்னர் அங்கிருந்த அத்தனை பேர்களையும் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டதுடன் அவர்களை அடிக்கவும் தயாராக, அங்கிருந்த பத்து பேர்கள் அவரைத் தடுத்திருக்கிறார்கள். ‘எதற்காக எங்களை அடிக்கிறாய்? மதக்காரியம் சம்பந்தமாக நான்கு பேர்கள் கூடக்கூடாதா என்ன? எதற்காக எங்கள் கோவிலில் மலம் கரைத்து ஊற்றப்பட்டது? இந்த விஷயம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கவர்னரை வேண்டுவதற்காகத்தான் நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். எதற்காக இங்கு வந்து நீ எங்களை அடிக்கிறாய்? அதற்கு பதிலாக நீ எங்களையெல்லாம் கொல்லலாம்’ என்று சொல்லியபடியே கிரிமாசி பண்டிதரை கீழே தள்ளியிருக்கிறார்கள்.
கிரிமாசி பண்டிதர் இதையெல்லாம் கவர்னரிடம் வந்து சொல்ல, கவர்னர் எனக்கும், சின்ன முதலிக்கும் ஆளனுப்பி அழைத்தார். சின்ன முதலி எனக்கு முன்பே கவர்னரிடம் போக, அவரிடம் ‘உடனடியாக மகாநாட்டார்களை என்னிடம் அழைத்து வா’ எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். அதற்குப் பின்னர் சென்ற என்னிடமும் அதனையே கவர்னர் சொன்னார். அதன்படியே சின்ன முதலியும் நானும் மகாநாட்டார்களை அழைத்துக் கொண்டு மதியம் இரண்டு மணியளவில் கவர்னரைப் பார்க்கச் சென்றோம்.
கவர்னர் அவர்கள் மீது மிகுந்த கோபத்துடனிருந்தார். ‘எதற்காக கிரிமாசி பண்டிதர்களை அடித்தீர்கள். உங்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள என்னால் உத்தரவிட முடியும். உங்களின் எல்லாப் பிரச்சினைகளையும் ரங்கப்பிள்ளையிடம் சொல்லுங்கள். அவர் என்னிடம் பின்னர் வந்து விளக்குவார். அதன்படியே முடிவு எடுக்கப்படும். நீங்கள் எல்லாம் கூட்டம் கூட்டிப் பேசவேண்டியதில்லை. ரங்கப்பிள்ளையே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்’ என்றார். அத்துடன் அங்கிருந்து அவர்களைக் கலைந்து செல்லும்படி மென்மையாக உத்தரவிட்டார்.
மகா நாட்டார்கள் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் நூறு முதல் இருநூறு வரையிலான மாஹே முகமதியர்கள் கவர்னரின் முன்னால் வந்து நின்றார்கள். மகா நாட்டார்களை சுட்டுக் கொல்லும் பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் வருவதற்கு முன்பே கவர்னர் மகா நாட்டார்களுடன் பேசிப் பிரச்சினையை ஒருவழியாக தீர்த்து வைத்துவிட்டதால் அவர்களை நகரின் நான்கு வாயில்களையும் பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். முகமதியர்கள் அந்த ஆணையை ஏற்று அங்கிருந்து சென்றார்கள். இவையெல்லாம் மாலை நான்கு மணிக்கு முன்னால் நடந்து முடிந்துவிட்டது. இதற்குப் பின்னர் என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியவில்லை.
வியாழன், ஜூன் 11-1739, சித்தார்த்தி வருடம் ஆனி:
செவாலியே டூமாஸ், பாண்டிச்சேரியின் கவர்னர் கீழ்க்கண்ட உத்தரவை இன்றைக்குப் பறையடித்து அறிவித்தார்.
‘நகர எல்லைக்குள்ளோ அல்லது கடற்கரையிலோ அல்லது செயிண்ட் பால் சர்ச்சின் தெற்காக ஓடும் உப்பாற்றின் கரையிலோ அல்லது பொதுச் சாலையிலோ மலஜலம் கழிக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் எவரும் ஆறு பணம் அபராதம் செலுத்த வேண்டும். அதில் இரண்டு பணம் இந்தச் செயலைக் கையும், களவுமாகப் பிடிப்பவர்களுக்கும் மீதிப்பணம் கோர்ட்டின் நிதியிலும் சேர்க்கப்படும்.’
இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டு மனமுடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.