கடந்த இரு பொங்கல் விழாக்களிலும் தமிழ்நாட்டை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கும் விஷயம் ஜல்லிக்கட்டு. இந்த ஆண்டு அந்தக் கூட்டு உணர்ச்சி அதன் உச்சத்தை எட்டியது.
எவரும் இணைக்காமல் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் மெரீனாவில் குழுமினர். அறவழிப்போராட்டத்தை நடத்தினர். மத்திய மாநில அரசுகள் என்ன செய்வதென அறியாமல் தத்தளித்தன. இறுதியில் மத்திய மாநில அரசுகள் பணிந்தன. என்ற போதிலும் நிரந்தரத் தீர்வு கோரிப் போராடிய மாணவர்களை அரசு காவல்துறையை ஏவித் தாக்கியது.
இன்றைக்கு பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் குறிப்பாக காட்சி ஊடகங்கள் கட்டமைக்க விரும்புவது மேற்கூறிய பார்வையைத்தான்.
ஆனால் உண்மை என்ன என்பதை சற்றே கூர்ந்து பார்த்தால் விளங்கும்.
பொங்கலுக்குச் சில தினங்கள் முன்பாக எல்லாத் தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் ஒரு செய்தி சொல்லப்பட்டது. முக்கியச் செய்தியாக (Flash News) காட்டப்பட்டது. மத்திய மோடி அரசு பொங்கல் விடுமுறை தினத்தை கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது என்பதுதான் அது. உடனடியாக மக்களிடையே சினம் பொங்கியது. உணர்ச்சிகள் கொப்பளித்தன. உண்மை என்ன என்பதை தெளிவாக விளக்குவதற்கு முன்னரே மக்கள் கொதிநிலைக்குப் போய் மீண்டனர். பாஜக மீதும் மோடி மீதும் அவர்கள் தமிழர் விரோதிகள் எனும் ஓர் எண்ணத்தை மக்கள் மனதில் தூவ மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு அது. வெறும் வதந்தி என அதை ஒதுக்கிவிட முடியாது. ஏறத்தாழ அனைத்துச் செய்தி சானல்களிலும் அது ஒரு flash news ஆக ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படவேண்டும் என்பதன் பின்னால் எத்தனை ஒருங்கிணைப்பு இருந்திருக்க வேண்டுமென்பதை சிந்தித்தால் இத்திட்டத்தின் அறிவுபூர்வமான செயல்பாடு புரியும்.
அதன் பின்னர் மெரீனா நிகழ்வு நடந்தது. இக்கட்டுரையாளனுக்கு எப்போதுமே இத்தகைய திடீர் மக்கள் எழுச்சிகளில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவற்றுக்குப் பின்னால் நீண்ட திட்டமிடுதலும் அரசியல் மூளையும் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு முன்னால் அண்ணா ஹசாரே தலைமையில் ஏற்பட்ட ‘எழுச்சியின் போது’ இதே போல ’காந்திய எழுச்சி’ ’இதோ இன்றைய காந்தி அழைக்கிறார்; பரிசுத்த ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது’ என புளகாங்கிதமடைந்த ஓர் இணையக் குழுமத்தில் நான் இருந்தேன். இதற்குப் பின்னால் காங்கிரஸ் கரம் இருக்கலாம். அல்லது தேச விரோத என் ஜி ஓக்கள் இருக்கலாம் எனக் கூறிய போது ‘உளறுகிறாய்’ ‘இந்துத்துவ வெறி’ என்றெல்லாம் நாகரிகமாக வசை பாடப்பட்டேன். ஒரு சில நாட்களிலேயே அப்போராட்ட குழுவிலிருந்த அக்னிவேசு என்கிற சாமியார் மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு தொலைபேசியில் அங்கே நடப்பவற்றை செய்தி அனுப்பி மேலதிக நடவடிக்கைக்குக் கேட்டுக்கொண்டிருந்த காட்சி ஒளிபரப்பாகியது. இன்றைக்கு இந்த இயக்கத்தின் விளைவு அரவிந்த் கெஜ்ரிவால். இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் மாணவர் போராட்டம் ஒன்றை அரசியல் சக்திகள் முகமூடிகளாகப் பயன்படுத்தியதன் விளைவு நாம் இப்போதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் திராவிடம் என்கிற ஆபாச அரசியல்.
இது பொதுவாக எந்த மக்கள் எழுச்சி என அடையாளப்படுத்தப்படுவதற்கும் பொருந்தும். அய்ன் ராண்ட் எனக்கு ஏற்புடையவரல்ல. எந்த பதின்மவயது மாணவனுக்கும் வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் முதல் காதல் போல, கொஞ்சம் அய்ன் ராண்ட் மோகம் எனக்கும் பதின்ம வயதில் படிக்கும் காலங்களில் இருக்கத்தான் செய்தது. அய்ன் ராண்ட் ஒரு விஷயத்தைச் சுட்டுவார். பிரெஞ்சுப் புரட்சி இறுதியில் பிரான்ஸுக்கு அளித்தது கில்லட்டினையும் படுகொலைகளையும், இறுதியில் நெப்போலியன் என்கிற போர் வெறி கொண்ட ஒரு சர்வாதிகாரியையும்தான். ரஷியாவின் ‘புரட்சி’, போல்ஷ்விக்குகளால் அபகரிக்கப்பட்டு இறுதியில் ஸ்டாலினையும் பஞ்சப் பேரழிவுகளையும் உருவாக்கியது. மாவோவினால் கொடுக்க முடிந்ததெல்லாம் கலாசாரப் புரட்சி என்கிற பெயரில் பாரம்பரிய பண்பாட்டின் பேரழிவுகளையும் பின்னர் பஞ்சத்தால் கொல்லப்பட்ட பல லட்சம் உயிர்ப் பலிகளையும்தான்.
ஆக்கபூர்வமான மாற்றங்களை நிகழ்த்திய காந்தியின் போராட்டமும் சரி, மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்டமும் சரி, தெளிவான அரசியல் தலைமையைக் கொண்டிருந்தன. அதன் பின்னால் இருந்த அரசியல் ஏற்பாடுகள், இயக்கத் தொடர்புகள் என அனைத்துமே வெளிப்படையாக இருந்தன.
எனவே மெரீனாவில் மக்கள் பெருமளவில் குவிய ஆரம்பித்தபோது ஒன்று தெளிவாக இருந்தது. அங்கு இந்தியத் தேசியம் சார்ந்த எந்தக் குறியீடும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆபாசத் தட்டிகள் அனுமதிக்கப்பட்டன. பிரதமரையும் முதல்வரையும் மிகக் கேவலமாக, மிகவும் ஆபாசமாகத் சித்தரிக்கும் தட்டிகளை ஏந்தியபடி, ஆண்களும் பெண்களும் நின்றார்கள். அருவருப்பான ஆபாசப் பாடல்களும், கோஷங்களும் போடப்பட்டன. பிறப்புறுப்புகள், கலவி ஆகியவற்றைக் குறிக்கும் கோஷங்கள் முதல்வருக்கும் பிரதமருக்கும் எதிராக எழுப்பப்பட்டன.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் களமிறங்கின. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஜல்லிக்கட்டை ஒரு இந்து பாகனீய காட்டுமிராண்டித்தனமென்றே கருதி வந்தவர்கள். இப்போது ஒசாமா பின்லேடன் பழனி பாபா போன்றவர்களின் படங்களுடன் இந்த இயக்கத்தில் பவனி வந்தனர். ஆனால் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் தேசியக் கொடியுடன் இயக்கத்தில் பங்கு பெற வந்தவர்கள் தாக்கப்பட்டனர். இந்த இயக்கத்தை நடத்திய முகமூடிகள் தங்கள் செயல்திட்டத்தில் தெளிவாகவே இருந்தனர்.
விஷயமென்னவென்றால் 2011ல் காளைகளை காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்த காங்கிரஸ்-திமுக கட்சியினர் குறித்து ஒரு எதிர்மறைக் கோஷம் கூட (ஆபாச கோஷங்கள் அல்ல) எழுப்பப்படவில்லை.
2014ல் இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தபோது ஜல்லிக்கட்டை நடத்தும் நாட்டு இன மாடுகள் வளர்க்கும் அமைப்பினர் சந்தித்த ஆன்மிகத் தலைவர்களில் முக்கியமானவர் காலம் சென்ற தயானந்த சரஸ்வதி அவர்கள். ஆனைக்கட்டி ஆசிரமத்தில் ஜல்லிக்கட்டு அமைப்பினர் அவரைச் சந்திக்க வந்தபோது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களிடம் அவர் பேசினார். அவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளித்தார். தொடர்ந்து சென்னையில் நடக்கும் இந்து ஆன்மிகச் சேவைக் கண்காட்சியில் ஜல்லிக்கட்டு அமைப்பினருக்குப் பிரதான இடம் அளிக்கப்பட்டது. அப்போது, இன்று ஜல்லிக்கட்டின் பேரில் மோடியை ஆபாசமாக வசைபாடும் மகஇக-வினரின் வினவு வலைத்தளம் ஜல்லிக்கட்டையும் வசை பாடியது.
இச்சூழலில் மோதி அரசாங்கத்தின் சூழலியல் அமைச்சராக அன்று இருந்த பிரகாஷ் ஜாவதேகர் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வழி செய்யும் அறிவிப்பு ஒன்றை அமைச்சகத்திலிருந்து 2016ல் வெளியிட்டார். ஆனால் பீட்டா அமைப்பினர் அதை நீதிமன்றத்தில் எதிர்த்தனர். ஆனால் நீதிமன்றத்தால் இந்த அறிவிப்பைத் தள்ளுபடி செய்ய இயலவில்லை. இடைக்காலத் தடையை மட்டுமே உருவாக்கியது. உடனடியாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்து அதைப் பின்னர் சட்டசபையில் நிறைவேற்றும்படிக் கூறினார். அன்று மாநில அரசின் நிர்வாகச் செயலின்மையால் அது நிறைவேற்றப்படவில்லை. இன்று உணர்ச்சிகளைத் தூண்டிக் கூச்சலிடுவோரும் அதற்காக மாநில அரசை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. மத்திய அரசுதான் நீதிமன்றத்தை தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்தில்கொண்டு அவசரப்படுத்தியது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.
இதே போன்றதொரு நீதிமன்றத் தாமதமே அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமியில் இருந்த சர்ச்சைக்குரிய கும்மட்டம் இடிபடக் காரணமானது. ஆனால் ராம ஜென்ம பூமி இயக்கத்துக்கும் மெரீனா இயக்கத்துக்குமான வேறுபாடுகளைக் கண்கூடாகக் காண முடிந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான இழிவான கோஷங்களை எத்தருணத்திலும் போட தலைவர்கள் விடவில்லை. கட்டுக்கடங்காத கரசேவகர்கள் இருந்தபோதும் சில இஸ்லாமிய வெறுப்புக் கோஷங்கள் போடப்பட்டபோது அதனை அசோக் சிங்கல் தடுத்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உடனடியாக அப்படி கோஷம் போடுவோரைத் தடுத்தனர். அதை மீறினால் அப்புறப்படுத்தினர். அயோத்தியில் ஆயுதமற்ற கரசேவகர்களின் படுகொலை நடந்தபோதுகூட அவர்கள் அக்கும்மட்டத்தின் மீது ஏறியிருந்தனர். ஆனால் அதை உடைக்கவில்லை. இந்நிலையில் அடுத்து கல்யாண்சிங் ஆட்சி ஏற்பட்டபோது நிலக் கையகப்படுத்தும் சட்டத்தை பாஜக கொண்டு வந்தது. அப்போது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நவம்பர் 1991ல் ஒரு மாதத்துக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கூறியது. ஆனால் ஒரு வருடமாகியும் தீர்ப்பு வரவில்லை. பின்னர் நிகழ்ந்தவை வரலாறானது. அதே சமயம் ஒரு பிரபல இஸ்லாமியப் பத்திரிகையாளர் சுட்டுவதைப் போல, அங்கே பாபருக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன இஸ்லாமியருக்கு எதிராக அல்ல. அயோத்தியில் இருக்கும் பல மசூதிகளில் ஒன்றைக் கூட கரசேவகர்கள் தொடவில்லை. அக்கும்மட்டத்தை மட்டுமே அவர்கள் உடைத்தனர். முலாயமின் காவலர்கள் துப்பாக்கிச் சூடும் தடியடியும் நடத்தியபோது அசோக் சிங்கல் முன்னணியில் சென்று அடிகளை வாங்கிக்கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட அவர் கரசேவகர்களுடன் நின்றார்.
ஆனால் மெரீனாவில் உசுப்பேற்றி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டவர்கள் இறுதியில் எங்கோ சென்று மறைந்தனர். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ரத்த சாட்சிகள் மட்டுமே. இன்னும் சொல்லப் போனால் அவர்களின் ஆத்திரமே, பிரதமரும் முதல்வரும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் மிகுந்த பரிந்துணர்வுடன் ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்ட ரீதியில் அனைத்து முயற்சிகளையும் எடுத்ததுதான். உண்மையான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சந்தோஷப்படும்போதுதான் மோடி எதிர்ப்புக்கு ஜல்லிக்கட்டைப் பயன்படுத்தியவர்களின் ஆத்திரம் அளவுக்கு அடங்காமல் சென்றது. எப்படியாவது வன்முறையில் இயக்கத்தைக் கொண்டு சென்று தனித்தமிழ்நாடு இயக்கமாக அதை வளர்த்தெடுப்பது எனும் அவர்கள் அடிப்படைத் திட்டத்துக்கு பிரச்சினை வந்துவிட்டது.
ஜல்லிக்கட்டை ‘நிலப்பிரபுத்துவ காளைகளை சித்திரவதை செய்யும்’ விளையாட்டு என எழுதியவர்கள், கும்பலோடு கும்பலாக கர்ம சிரத்தையாக அதை மோடி எதிர்ப்பாக மாற்றிப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தனர். இதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நினைக்கும்போதுதான் மனம் பதைபதைக்கிறது. மகஇக கோவன் மு.கருணாநிதி முன்பு உடல் வளைந்து அடிமை போல நின்றதையும் தாண்டி மற்றொரு காட்சி கண்ணில் விரிகிறது. ‘பீப் சாங்க்’ புகழ் சிம்புவுடன் கோவன் இணைந்து மேடையில் பாடும் காட்சி. தனித்தமிழ் தேசியத்துக்காகத் தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கும் தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத ‘தோழர்கள்’தான் என்னென்ன சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது!
உண்மையாக ஜல்லிக்கட்டுக்காகவும் நாட்டு மாடு இனங்களைக் காப்பாற்றுவதற்காகவும் உழைத்த பெரியவர்களுக்குத் தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அந்த உணர்வுகளைப் பயன்படுத்தி அதைத் தங்கள் ஆபாச அரசியலுக்குப் பயன்படுத்தியவர்களைத் தமிழ்நாடு என்றுமே மன்னிக்கக் கூடாது. இதுவே மெரீனா கற்றுத்தரும் பாடம்.