
பாரத தேசம் – யோக பூமி. கல்விக்கும் ஞானத் தேடல்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த நாடு. பாரதி – ‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் / பிரானருள் பொங்கிய நாடு’ என்கிறார். பாரத ஞான மரபு பற்றிய எதிர்மறை நோக்குகளை மார்க்சியர்கள் முன்வைத்தனர். கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இரு கிளைகளாகப் பார்த்தனர். ஆங்கில, ஐரோப்பிய ஆய்வாளர்களும் இதே நோக்கில் பாரதத்தின் ஞான மரபை அணுகினர். பாரத ஞான மரபு – வைதீக, அவைதீகப் பார்வைகளைக் கொண்டது. நாம் இந்தக் கண்ணோட்டத்தில் நமது சம்பிரதாயத்தைப் பார்ப்பது சரியான வழியாக இருக்கும்.
அவைதீக மரபு – பவுத்தம், ஜைனம், சார்வாகம்.
வைதீக மரபு – அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலானவை.
பவுத்தம், ஜைனம், சார்வாகம், லோகாயதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் – என்று பல தத்துவங்கள்.
பாரத ஞான மரபில் இவற்றின் இருப்பிடங்கள் தனித்தனி ஞான பீடங்கள்.
இத்தனை பன்முகப்பட்ட மனிதக் கூட்டத்தின் பரந்த ஞானத் தேடல்களுக்கான முயற்சியில் இவற்றின் தேவை இருப்பதை உணர முடிகிறது..
பாரத ஞான மரபின் அடிப்படைக் கொள்கை : ஒன்றை ஒன்று அழிக்காமல் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது. இரண்டும் வாழ்வது. அத்வைதத்தில் இருந்து விசிஷ்டாத்வைதம் தோன்றியது. ஆனாலும் இரண்டும் வாழ்ந்தன. அனைத்துப் பாதைகளும் கொண்டு சேர்க்கும் இடம் ஒன்றே என்பது நமது பண்பாடு. ‘ஆகாசாது பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்…’ என்பதே நமது பண்பாட்டுப் பார்வை.
இந்தப் பிரபஞ்சம் விஷ்ணுவின் உடல் என்னும் கருத்துடன் செயல்பட்ட நமது பண்பாட்டில் அழிவு, அழிப்பது என்பன பொருந்தாதவை. தெரியாத, அறிந்துகொள்ள முடியாத, புறக்கண்ணால் தெரிந்துகொள்ள முடியாத பரம்பொருளை, பிரபஞ்ச ஞானத்தை உருவகம் மூலம் உணரும் இறை வடிவுகள். இந்த வடிவுகளையே இறைவன் என்று சொல்லி அவற்றுக்கான ஆராதனைகளை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
உதாரணமாக, ஆற்றங்கரையில் உள்ள கூழாங்கல் – மலை மேலிருந்து உருண்ட பாறை, சில ஆயிர ஆண்டுகள் கழித்து இன்று நமது கையில் வட்ட வடிவமான சிறிய கல்லாக இருக்கிறது. ஆக, அக்கூழாங்கல்லின் வடிவம் அதுதானா? நமது அகக் கண்களால் நாம் காணக்கூடியது அது. முப்பரிமாணத்தில், நமது அறிவுக்கு எட்டிய அளவுகோல்களுடன் நாம் கூழாங்கல்லை சிறிய வடிவினதாகக் காண்கிறோம். ஆனால் அக்கல் பல ஆயிரம் ஆண்டுகள் விரிந்த வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கூழாங்கல் அந்த நெடிய வரலாற்றின் உருவகம். ஆனால் அக்கல்லே அதன் முந்தைய வடிவு அல்ல. ஆனாலும் அக்கல் உணர்த்துவது பெரிய உண்மைகளையே. இந்தக் கண்ணோட்டத்துடன் நாம் இராமானுசரைக் காண்கிறோம். இராமானுசர் அந்தக் கூழாங்கல் போன்றவர்.
கடைந்து வடிகட்டிய பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஞானத் தேக்கங்களை ஒன்றிணைத்து, நமது அறிவிற்குப் புலப்படும்படிச் சொன்னவர் அவர்.
விசிஷ்டாத்வைதம்: விசிஷ்டம் + அத்வைதம் – விவரிக்கப்பட்ட அத்வைதம். வெறும் அத்வைதம் ஒரு பிரும்மத்தை உணர்த்தியது. மற்ற அனைத்தும் பிம்பம் என்றது. பிரதி பிம்ப வாதம் என்று உரைத்தது. சூரிய ஒளியின் கிரணங்கள் பல கண்ணாடித் துகள்களில் படுவதால் பல சூரியர்கள் இருப்பது போல் தோன்றுவது மாயை. அஞ்ஞானம் அகன்று உண்மைதெரிய, மாயை அகலும். அப்போது ஒரு சூரியன் உணரப்படும்.
ஆனால் விசிஷ்டாத்வைதத்தில், பிரும்மம் தவிர, ஜீவன், ஜடப்பொருள் முதலிய எல்லாமும் உண்மையே. ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் என்னும் முன்னரும் உண்மைகளே. எனவே பானை செய்பவரும், கை வினைஞரும் உண்மையே. சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பும் உண்மையே. அவர்களுக்கும் ஏற்றம் உண்டு. மேலும், அனைவருக்கும், அனைத்துக்கும் மோட்சம் உண்டு.
பிரும்மம் தவிர்த்த ஜீவன்கள், ஜடப் பொருட்கள் முதலியனவற்றுக்கிடையே வேற்றுமைகள் இல்லை. ஏனெனில், அனைவருள்ளும், அனைத்துள்ளும் இருக்கும் ஆத்மா ஒன்றே; உடல் ஸ்திரமற்றது; ஆத்ம அளவில் வேறுபாடு இல்லை. எனவே பிரம்மம் தவிர்த்த அனைத்தும் ஒன்றே என்பதால் அனைத்திற்கும் உய்யும் வழியும், உய்வதற்கான அதிகாரமும் உண்டு என்பது ஸ்ரீமத் இராமானுசரின் விசிஷ்டாத்வைதப் பார்வை.
ஜடப்பொருட்களும் உண்மையே என்பதில் ஒரு சிறப்பு உள்ளது. அதுதான் தற்காலத்தில் சூழியல்குறித்த பார்வை. ‘என் தேவைகளுக்காக இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது’ என்பது நமது சித்தாந்தம் இல்லையாதலாலும், ஜடப்பொருட்களுக்கும் ஆத்மா உள்ளது என்கிற சித்தாந்தப் பார்வையாலும் மரம், செடி, கொடிகளை மனிதனின் தேவைகளுக்காக அழிக்க வழி இல்லை. நவீன சூழியல் (Environmental Conservation) பார்வையும் உள்ளடங்கி இருப்பதை நாம் உணர வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பார்வையாக இராமானுசரது சித்தாந்தம் பரிணமிக்கிறது. ஆனால், இவரது பார்வை புதியது அல்ல. இராமானுசரது பார்வைக்கு முன்னோடிகள் இருந்துள்ளனர். அவர்கள் ஆழ்வார்களாவர். இவற்றுக்குப் பாசுரங்கள் துணை நிற்கின்றன. ஆக ஆழ்வார் ஆச்சாரியார்களின் அனுக்ரஹம் இருப்பதாகவே தெரிகிறது.
பெரியாழ்வாரின் பாசுர வரி ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து…’ என்பது ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்று. இந்த வரியையும் ‘கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடியாட் செய்கின்றோம்’ என்னும் வரியும் சித்தாந்தத்தை அங்கீகரித்த ஆழ்வார்களின் ஆசியுரைகள் என்று கொள்ளலாம்..
ஸமாஸ்ரயனத்தில் / பார நியாசத்தில் தாஸ்ய நாமம் என்பதையும் இணைத்து நோக்க, மனிதர்களுக்கிடையேயான சமன்வயப் பார்வை (Uniformity in treatment) குறித்த நமது சித்தாந்தப் புரிதல் எளிதாகிறது. ஊர்த்துவ புண்ட்ரத்தால் தோற்ற ஒருமை (Uniformity in appearance) புலப்படுகிறது.
தத்துவமும் செயல்பாடும் ஒன்றிணையும் நிலையை நாம் இராமானுசரிடம் காண்கிறோம். கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் இணைந்து அனைவருக்கும் மோட்சம் என்னும் பொது நன்மைக்கான வழி. பெரும் பாண்டித்யம் உள்ள தர்க்க சாஸ்திர விற்பன்னர்களும், பானை செய்பவர்களும் ஒன்றெனக் கொண்ட நிலை. ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் உடன்பாடு உடைய ஒரு சித்தாந்தம் என்று நமது இராமானுச சித்தாந்தம் விரிகிறது.
கர்நாடகப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இராமானுசர் செல்லப்பிள்ளை விக்ரகத்தைக் கொணரும்போது உதவியதும், அதனால் அவர்களை இராமானுசர் வைஷ்ணவர்களாக்கியதும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது. உப–நயனம் என்னும் சம்ஸ்காரத்தாலும் ஸமாஸ்ரயணம் என்னும் ஒருமைப்படுத்தல் சடங்காலும் சமூக அளவில் ஆகப்பெரிய ஒற்றுமைப்படுத்தல் நிகழ்வை, நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் நிகழ்த்தியமையால், சொல், செயல், நடத்தை என்னும் மூன்றும் இராமானுசரிடம் ஒன்றாயிருந்ததைக் காட்டுகிறது. (மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒருமுகமாகவும் ஒரு சேரவும் இருப்பது ஆன்றோர் நடத்தை). அப்படி நடந்தவர் உடையவர்.
ஆழ்வார்கள் பல இனங்களில் இருந்தும் வந்த நிலை, இவர்களைக் கோவிலுக்குள் எழுந்தருளப்பண்ண இராமானுசர் செய்த செயல்கள் என்று அனைவரும் உட்செல்லக் கூடிய ஒரு நிலை. இதனைச் செயல்படுத்த அவர் மேற்கொண்ட பாஞ்சராத்ர ஆகம வலியுறுத்தல் முதலியன கவனிக்கத்தக்கவை. கோவிலில் மாற்றம் ஏற்பட ஆகமம் தடையென்றால், புதிய ஆகமத்தை உட்புகுத்துவதால் பெருவாரியான மக்கள் ஆலயங்களுக்குள் சென்று ஒன்றுபட இயலும் என்றால், அதற்காக அதனைச் செய்யவும் இராமானுசர் தயங்கியதில்லை என்பதே அவர் மானுட சமத்துவத்தைச் செயல்படுத்த முனைந்ததை உணர்த்துகிறது. இது நாம் இன்றளவும் நினைத்து மிகவும் பெருமைப்படத் தக்க செயல்.
திருவரங்கக் கோவிலுக்குள் பணிகளைப் பிரித்துக் கொடுத்து பல பண்டாரங்களை ஏற்படுத்தினார் உடையவர். இந்தப் பண்டார அமைப்பு நவீன கார்ப்பரேட் நிறுவங்களின் நிர்வாக அமைப்புக்களுக்கு
ஈடாக உள்ளதைக் காண்கிறோம். வேலையைப் பகிர்ந்துகொளல் (Division of Labour) என்னும் வழிமுறைகள் 1,000 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப் படுத்தப்பட்டது புரட்சியே. எந்தத்துறையும் இழிவல்ல; ஆனால் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நவீன நிறுவனங்கள் செயல்பட முடியும்.
கோவிலையும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட, சரியான வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் கொண்டுவந்தது எம்பெருமானாரின் முன்னோக்கிய பார்வையை உணர்த்துகிறது.
பல தத்துவங்கள் ஆன்மீகத்தையே முன்னிறுத்தின. இன்னும் பல, சமூகப் பார்வையை முன்னிறுத்தின. ஆனால், இராமானுசர் உரைத்த பாதை சமூகம், ஆன்மீகம் இவற்றுடன் பொருளாதாரத்தையும் இணைத்தது. பல பிரிவினரையும் கோவிலின் அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம், அவர்களின் தொழில் திறமைகள் பயன்பட்டன. பூதொடுத்தல், மடப்பள்ளி கைங்கர்யங்கள், கணக்கு வழக்குகள் சரிபார்த்தல், காவிரியின் கரை உடையாமல் பழுது பார்த்தல் முதலிய பல திறமைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. சமூகத்தின் திறமைகள் அனைத்தும் மக்களின் ஒருங்கிணைந்து ஒற்றுமைக்கும் மேம்பாட்டுக்கும் பயன்பட்டன. சமூகத்தின் வெளிப்புறத்தில் இருத்திவைக்கப்பட்ட கைவினைஞர்கள், பொற்கொல்லர்கள் முதலானோர் சம்பிரதாயத்திற்கான தங்களது பங்களிப்பால் சமூகத்தின் உள்ளே வந்தனர். இதை இராமானுசரது சீரிய திட்டம் எனலாம்.
எந்த ஒரு பெரிய அமைப்பையும் நிறுவுபவர், அதனை சீராக வழிநடத்திச் செல்ல, தானே முன்னின்று செயல்படுவது உலக மரபு. அவர்கள் தங்களுக்குப் பின்னரும் அந்த அமைப்புகள் சரியாக நடைபெற வேண்டி பல வழிகாட்டுதல்களையும், அடுத்த கட்டத் தலைவர்களையும் உருவாக்கி, அதிகாரப் பரவல் ஏற்படும்படிs செய்வர். உடையவரும் அவ்வாறே தனக்குப் பின்னும் விசிஷ்டாத்வத சம்பிரதாயம் தழைக்க, கோவில்கள் சரிவர நடைபெற சிம்மாசனாதிபதிகளை நியமித்து சம்பிரதாயம் தொடர வழிவகுத்தார்.
இன்றைக்கு ‘ஒருங்கிணைந்த சமூகம்’ (Inclusive Society) என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. இராமானுசர் இதை 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தினார். ‘சாத்திய முதலிகள்’, ‘சாத்தாத முதலிகள்’ என்னும் ஏற்பாடு அவரது சாதுர்யமான கையாளல் என்று தோன்றுகிறது. அதிகார அடுக்குகளை ஒரே அடியாக வீழ்த்த முடியாது என்பதால் இந்த முறை ஒரு நடுவு நிலை போல் தோற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்த முறையானது செயல்பட்டது. இன்றும் செயல் அளவில் முன்னேறியுள்ளது. சாத்தாத சாதியினரான புருஷோத்தம நாயுடு முதியோரின் உரைகள் நமக்குக் கிடைக்க இந்த அங்கீகாரம் வழிசெய்தது என்பது எத்தனை முற்போக்கான வழி என்று வியக்க வைக்கிறது.
இன்றைக்கும் கொங்கு தேசத்தில் வைணவம் செழித்து, ‘கண்ணன் கூட்டம்’ முதலான வைணவ அமைப்புகள் திருமால் பெருமையையும் வைணவ சம்பிரதாயத்தையும் பேண உதவுகின்றன என்பது உடையவரின் அதி–முற்போக்கான சமூக ஆற்றுப்படுத்தலால்தான் என்பதில் ஐயம் இல்லை.
கொங்கப்பிராட்டி வைபவம் இங்கு நோக்கத்தகக்து.
இந்திய சமயத்தினரை மட்டும் அல்லாது, துருஷ்க சமயத்தினரையும் தன்னகத்தே உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மையை விசிஷ்டாத்வைதத்தில் புகுத்திய இராமானுசர் பெரிய ராஜதந்திரியாகவும் தெரிகிறார். ஆட்சியாளர்கள் துருஷ்கர்களாக இருந்தாலும் பிற்காலத்தில் கோவில் அமைப்புகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது போல். துருஷ்க நாச்சியாரையும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்து, அனைவரையும் ஒருங்கிணைக்கும் சமுதாய அமைப்பை உருவாக்கிய அவரது பார்வை தீட்சண்யம் வியக்க வைக்கிறது. இதுதான் உடையவரது பார்வை என்று கொள்ள இயலாது. ஆனால் அப்படி இருந்திருக்க வாய்ப்புள்ளது.
வைணவம் வெறும் பண்டிதர்களின் கைப்பொருளாக, வழிபாட்டு முறையாக மட்டுமே இருந்திருக்குமேயானால், இன்றளவும் தழைத்து நின்றிருக்குமா என்பது கேள்வியே. விசிஷ்டாத்வைத தத்துவத்தின்படி, எண்ணம், சொல், செயல் என்று அனைத்தும் ஒன்றாக இருக்கும் / இயங்கும் ஒரு சமூக, ஆன்மீக, வழிபாட்டு முறையை உருவாக்கியதன் மூலமும், அம்முறையில் வேறுபாடுகளற்ற சமதர்மச் சூழல் ஏற்படும்படி செய்த உடையவர் திட்டம் உலகில் தோன்றிய வேறெந்த சமூக, பொருளாதார, ஆன்மீகப் புரட்சிகளுக்கும் முற்பட்ட சமதர்மப் புரட்சி எனலாம்.