Posted on Leave a comment

பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் – பி.ஆர்.ஹரன்

“வேளாண்மை பற்றிப் பேசும்போது ‘கால்நடைப் பண்ணை’ என்று நாம் சொல்வதில்லை. ‘பசுப்பாதுகாப்பு’ என்றுதான் சொல்கிறோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகெங்கும் கால்நடைப் பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் நம்மிடம் கால்நடைப் பண்ணைகள் இல்லை; நம்மிடம் பசுப்பாதுகாப்புதான் இருக்கின்றது. பசுக்களைப் பாதுகாப்பது! தர்மத்தின் பாதுகாப்பு என்றால் பசுப்பாதுகாப்பும்தான்! நம் அரசியல் சாஸனம் வழங்கியுள்ள வழிகாட்டும் கோட்பாடுகளில் பசுப்பாதுகாப்பும் ஒன்று. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பசுவதையைத் தடைசெய்து சட்டம் இயற்றலாம். பசு என்பது ‘உபலக்ஷணம்’. உபலக்ஷணம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும். ஆகவே, விலங்குகள் நமக்குத் துன்பம் தராமல் இருக்கின்றபோது நாமும் அவற்றுக்குத் துன்பம் தராமல் இருக்க வேண்டும்.”

– பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி  

 

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மாடுகளின் தோலை நீக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சில ஹரிஜன மக்களை, பசுப்பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் சில நபர்கள் கட்டிவைத்து அடித்தனர். இந்தச் சம்பவம், போலி மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் முன்னணி ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது. மத்திய அரசைக் கண்டித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தின. இவர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்துக்குச் சற்றே தளர்ந்து கொடுத்த பிரதமர், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “சில இடங்களில் நடந்த ஹரிஜன மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் எனக்கு மிகுந்த வலியையும் மனவேதனையையும் தருகின்றன. பசுப் பாதுகாப்பாளர்கள் என்கிற போர்வையில் சமூகவிரோதிகள் இயங்கி வருகின்றனர். பெரும்பாலானோர் பகலில் பசுப்பாதுகாப்பாளர்களாகவும் இரவில் சமூக விரோதிகளாகவும் இருக்கின்றனர். பசுப்பாதுகாப்பு இயக்கத்தைத் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் போலிகள் அடக்கப்படவேண்டும்1 என்று பேசினார். பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆதரவு தந்தது.
பிரதமரின் இந்தப் பேச்சு போலி மதச்சார்பின்மை பேசுபவர்களின் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், உண்மையான பசுப்பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும், பிராணிகள் நல சேவகர்களுக்கும் இடைஞ்சலாக இருந்தது. உண்மையாகவே பசுப்பாதுகாப்புக்குப் போராடுபவர்கள் ஆங்காங்கே தொல்லைக்கு உள்ளாயினர். இதனால் சங்பரிவார் அமைப்புகளுள் ஒன்றான விசுவ ஹிந்து பரிஷத் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஹரிஜன மக்கள் சிலரின் மீதான தாக்குதல் சம்பவமும், அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் செய்த துவேஷப் பிரசாரமும், பிரதமரின் பேச்சும், அதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவும் வி.ஹெச்.பி எதிர்ப்பும், உண்மையான பசுப்பாதுகாப்பாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளும், பசுவதை பற்றிய விவாதத்தை மீண்டும் தேசியக் களத்தில் முன்வைத்துள்ளன.

பா.ஜ.கவின் பிரதான கொள்கை

தற்போது நாட்டை ஆண்டு வரும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து மிகவும் முக்கியமாக முன்வைத்த கொள்கைகளில் பசுவதைத் தடுப்பு முதன்மையானது. அக்கட்சியினுடைய ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இந்தக் கொள்கைப் முதன்மையாகப் பிரகடனப்படுத்தப்படும். ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் 1998 முதல் 2004 வரை நடத்திய கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை.
கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும், நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பேசிய ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்தக் கொள்கையைத் தவறாமல் முன்வைத்தார். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக் கொள்கைக்கு எதிராகவும் பேசி, அது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் வாக்களித்தார்2. இவ்விரண்டு கொள்கைகளும் மீண்டும் தேர்தல் அறிக்கையில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன.
ஆயினும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பசுவதைத் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், இறைச்சிக் கொள்கையிலும் (Meat Policy) எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. பா.. அரசு பதவியேற்ற ஆறு மாதங்களில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரிதும் கூடியது; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதலிடத்தைப் பிடித்தது.3
பசுவதைத் தடுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொள்கை ஆகிய இரண்டு விஷயத்திலும் மோடி ஆதரவாளர்களிடையே கூட கொஞ்சம் அதிருப்தி நிலவி வருகின்றது. ஆயினும், கூடிய விரைவில் பிரதமர் இவ்விரண்டு விஷயங்களிலும் நடவடிக்கை எடுப்பார் என்கிற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் பசுவதை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்துதான் பசுவதைப் பற்றிப் பேசுகிறது. பசு மட்டுமில்லாமல் அனைத்துக் கால்நடைகள் பற்றியும் கூறுகிறது.
“பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை நவீன மற்றும் விஞ்ஞானபூர்வமாக எடுத்து, வேளாண்மையையும் கால்நடைப் பராமரிப்பையும் ஒழுங்குபடுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று ‘வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு’ என்கிற தலைப்பின் கீழ் அரசியல் சாஸனத்தின் 48-வது பிரிவு குறிப்பிடுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனக்கென ஓர் அரசியல் சாசனம் இயற்றுவதற்கு ஏதுவாக ஓர் அரசியல் சாசனப் பேரவை (Constituent Assembly) அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருட காலத்தில் 166 நாட்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நடத்தப்பட்டு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டது. அவ்வாறு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதைக்கு எதிரான சட்டத்தை இயற்றி அதை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்காமல், அரசியல் சாஸனத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகளில் மட்டும் வைத்தது அரசியல் சாஸனப் பேரவை.
அவ்வாறு செய்ததன் மூலம், பசுக்களையும் கால்நடைகளையும் பாதுகாத்துப் பெருக்கவும், பசுவதையைத் தடுக்கவும், பசுவைத் தாயாகவும் தெய்வமாகவும் போற்றும் இந்நாட்டின் உன்னத கலாசாரத்தைக் காப்பாற்றவும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை இழந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரத கலாசாரத்தில் பசுவின் பெருமை

பாரத தேசத்தில் வேதகாலம் தொடங்கி பசுவைத் தெய்வமாகவும் தாயாகவும் போற்றி வழிபடும் பண்பாடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்று ஆரம்பித்து, சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், வரலாறுகள் ஆகியவற்றில் தொடர்ந்து, இன்றைய நவீன இலக்கிய நூல்கள் வரை, பசுவின் பெருமையும், ஆராதித்துப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய கடமையும் விவரமாகக் கூறப்பட்டுள்ளன.  
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்பதும் இந்த தேசத்தின் பண்பாடு. திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும்; ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வார்ப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களையும் தானியங்களையும் வைப்பதும், இந்துக்களின் பண்பாட்டில் வேதகாலம் தொட்டு ஊறிப்போன வழக்கங்களாகும். தொன்றுதொட்டு மனித இனத்துக்குப் பெரிதும் பயனளிக்கும் மற்ற உயிரினங்களையும், தாவர இனங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர் இந்துக்கள்.
வேறெதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையைப் பசுமாட்டிற்கு மட்டும் இந்த தேசம் அளித்துள்ளது. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், அதைப் பெற்ற தாய்க்கு ஈடாகக் கருதி கோமாதா என்று போற்றுவது இந்த பாரத தேசத்தின் கலாசாரம்.
இந்தப் பிரபஞ்சமே தெய்வத்தினால் படைக்கப்பட்டதாக நாம் நம்புவதால், ஒவ்வொரு படைப்பிலும் தெய்வாம்சத்தைக் காணும் பண்பாடு நம்மிடையே தொன்றுதொட்டு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நாம் பசுவை முப்பத்து முக்கோடி தேவர்களின் மொத்த வடிவமாகக் காண்கிறோம். ஒவ்வொரு படைப்பிலும் உள்ள தெய்வ அம்சத்தைத் தேடிக்கொண்டிருக்காமல் தெய்வாம்சம் பொருந்தியதாக நன்றாக அறியப்பட்டுள்ள பசுவை வழிபடுவதே ஞானம் என்கிற எண்ணத்தின் விளைவாகத்தான் பசு வழிபாடு பிறந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் பசு இருந்த காலம் போய்விட்டது. ஆனால் பசு வழிபாடு தொடரவேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு கோவிலின் அங்கமாகப் பசுமடம் இருந்து வந்துள்ளது. கோவில் மட்டுமல்லாமல், வெளிப்புறங்களிலும் கோசாலைகள் அமைக்கப்படுகின்றன. கோவில் பசுமடங்களிலும், வெளிப்புற கோசாலைகளிலும் சென்று பொதுமக்கள் பசு வழிபாடு செய்து வருகின்றனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அந்நியப் படையெடுப்புகளாலும் அவர்கள் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்ததாலும் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியில் பசுவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டன. நாம் நமது கலாசாரத்திலிருந்து வழுவ ஆரம்பித்தோம். அதன் விளைவாகத் தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கப்பட்டு வந்த பசு, பெரும் துன்பங்களுக்கு ஆளானது. ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதையைத் தடுக்கவும், நமது உன்னதக் கலாசாரத்தை மீட்டெடுக்கவும், சட்டம் இயற்றக் கிடைத்த வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை நழுவவிட்டது.
அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் பாராளுமன்றத்தில் இந்த விஷயம் தொடர்பாக விவதங்கள் நடந்தபோதெல்லாம் அன்றைய பிரதமர்களான நேருவும், அவருக்குப் பிறகு அவர் மகள் இந்திராவும் பசுவதையை ஆதரிக்கும் விதமாகவே நடந்துகொண்டனர். சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடுப்பு விஷயத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்ருமாறு:
1947: பசுவதைத் தடையை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்கு நேரு தலைமையிலான இந்திய அரசு சர்தார் தத்தார் சிங் (இன்றைய அமைச்சர் மேனகா காந்தியின் தாத்தா) தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழு, பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற கால்நடைகளை, பயன் தருபவை, பயன் தராதவை, உற்பத்தி செய்பவை மற்றும் உற்பத்தி செய்யமுடியாதவை என்று அவற்றின் தரத்தைப் பிரித்து, பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தது.
* இந்தியாவின் சுபிட்சம் அதன் கால்நடை வளத்தைச் சார்ந்துள்ளது.
* கால்நடை வதையை முழுவதுமாகத் தடை செய்தால்தான் தேசத்தின் ஆன்மா திருப்தியடையும்.
* கால்நடை வதை இந்தியாவில் விரும்பத்தகாததாக இருப்பதால் அதன் மீதான தடையை சட்டத்தின் மூலமாக அமுல்படுத்த வேண்டும்.
* சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து முழுவதுமாகக் கால்நடைவதைத் தடைசெய்யப்பட வேண்டும்.
* அதுவரை பயன்பாட்டில் இருக்கும் அனைத்துக் கால்நடைகள் வதையும் முற்றிலுமாகத் தடை செய்யப்படவேண்டும்.
அதாவது, கால்நடை வதையை முழுவதுமாகத் தடைசெய்து சட்டம் இயற்றிய பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அதை அமுல்படுத்த வேண்டும். அதுவரைப் பயனற்ற கால்நடைகளை கொல்ல அனுமதிக்கலாம் என்று கூறியது.
அப்போதைய பிரதமர் நேரு, முழுமையான தடையை நிராகரித்தார். அதே சமயத்தில் பயன்தராத உற்பத்தி செய்யமுடியாத கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கலாம் என்கிற பரிந்துரையை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டார்.
1948: உத்தரப்பிரதேச அரசு அமைத்த குழுவானது, இந்திய அரசு 1947ல் அமைத்த சர்தார் தத்தார் சிங் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுகொண்டு ஆதரவு அளித்தது.
1950: உத்திரப் பிரதேச மாநில அரசு, பசுவதைத் தடைக்கு ஆதரவளித்ததைப் பொறுக்கமுடியாத பிரதமர் நேரு, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடுமையான கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “வதைக்கப்பட்ட கால்நடைகளின் தோலுக்கு, இயற்கையாக மரணம் அடைந்த கால்நடைகளின் தோலை விட மதிப்பு அதிகம். ஆகவே நல்ல மதிப்புள்ள தோல்களே நல்ல விலையைப் பெற்றுத்தரும். கால்நடைகள் வதைக்கப்படாத நிலையில், நல்ல விலை பெற்றுத்தரக்கூடிய மதிப்புள்ள தரமான தோல் சந்தையில் கிடைக்காது. எனவே, கால்நடைகளின் மீதான முழு தடையானது, ஏற்றுமதியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலின் நலனுக்கு எதிராகவும் இருக்கும்என்று குறிப்பிட்டார்.4 ஆயினும், பாராளுமன்றத்தில் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
1954: பசு மற்றும் அனைத்துக் கால்நடைகளின் வதை தடை செய்யப்படவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மசோதாவின் மீதான விவாதத்தின் இறுதியில், தடை செய்யப்படவேண்டும் என்று கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து ஏற்பட்டு மசோதா நிறைவேறும் நிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் மசோதாவிற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நேரு, கால்நடை வதைத்தடை மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டார்5. அவருடைய அச்சுறுத்தலுக்கு அவர் எதிர்பார்த்த உடனடியான பலன் கிடைத்தது. ஆம், மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, இரண்டு வருடங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மசோதா, ஒரே ஒரு நபரின் அச்சுறுத்தலால் திரும்பப் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம், “கால்நடைவதை மீதான முழுமையான தடை சாத்தியமில்லை. கால்நடைத் தீவனம் நாட்டில் உள்ள 40% கால்நடைகளுக்குத்தான் போதுமானது, மிச்சமுள்ள 60% கால்நடைகள் வதைக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தது.
1955: உத்திரப்பிரதேச அரசு பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றி அமல்படுத்தியது. ஆனால், மூடிய டப்பாக்களில் வைக்கப்பட்ட மாட்டிறைச்சியை விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கலாம் என்று அறிவித்தது.  
1966 நவம்பர் 7: சாதுக்கள், சந்நியாசிகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் உடனடியாகப் பசுவதைத் தடை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தில்லி பாராளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு அபினவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் ஆதரவளித்தார். அப்போதைய பிரதமர் இந்திரா, அந்தப் போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லி அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.எல்.நந்தாவுக்கு உத்தரவிட்டார். சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புரி சங்கராச்சாரியார் நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகளும், ஆச்சார்யா வினோபாபவேவும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த இந்துக்களைச் சாந்தப்படுத்த 1947ல் தன் தந்தை என்ன செய்தாரோ அதையே மகள் இந்திராவும் செய்தார்6.
1967: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.சர்கார் தலைமையில், புரி சங்கராச்சாரியார் ஜகத்குரு நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குருஜி கோல்வல்கர், அப்போதைய இரு மாநில முதல்வர்கள் சரன்சிங், டி.பி.மிஸ்ரா, மற்ற மாநிலங்களின் கால்நடைத்துறை அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய சக்தி வாய்ந்த உயர்நிலைகுழுவை அமைத்தார் இந்திரா. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் வெளியிடப்படவே இல்லை!
1976: தேசிய வேளாண்மை ஆணையம் பின்வரும் பரிந்துரைகளை அளித்தது:
* பால் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், தரமான இறைச்சிக்காகவும் எருமைகள் வளர்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
* எருமை இறைச்சி ஏற்றுமதியைப் பெருக்கும் விதமாகத் தேவையான நடவடிக்கைகளை துணிவோடும் ஊக்கத்தோடும் எடுக்க வேண்டும்.
* உபயோகம் இல்லாத ஆண் எருமைக் கன்றுகளுக்கு ஊட்டம் கொடுத்துக் கொழுக்க வைத்து, இறைச்சியின் தரத்தை அதிகரிக்கும் வகையில் தேவையான மேல் நடவடிக்கைகளை எடுத்து, எருமை இறைச்சி ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.
இந்த அறிக்கையே இந்திய அரசின் கொள்கை ஆனது!
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பின்பற்றி, பல மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மாட்டிறைச்சி சாப்பிடுவது மற்றும் அதை வியாபாரம் (உள்நாடு மற்றும் ஏற்றுமதி) செய்வது ஆகியவற்றைத் தங்கள் கலாசாரமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டவர்களுக்கு எந்தவிதத்திலும் தடங்கல்கள் இல்லாதவாறு, தேவையான ஓட்டைகளுடனேயே அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
1998ல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடை தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லாமல் போகவே, காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பசுவதைத் தடை செய்யப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். உடனடியாக பிரதமர் வாஜ்பாய், முந்தைய பிரதமர்களைப் போலவே தானும் பசுவதைத்தடை பற்றி ஆய்வு செய்வதற்கு, வரலாற்று ஆய்வாளரும் காந்தியவாதியுமான தரம்பால் தலைமையில் தேசியக் கால்நடை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் 2002ல் தன் அறிக்கையை அளித்தது. அதில், “1967ல் அமைக்கப்பட்ட சக்திவாய்ந்த உயர்நிலைக் குழு அளித்த அறிக்கை அரசின் ஆணவக் காப்பகங்களில் எங்கும் காணப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

தர்மத்தின் பாதுகாப்பு பசுப்பாதுகாப்பும்தான்

சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடையை நோக்கி இவ்வளவு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்த பிறகும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசுகள் இந்நாட்டின் தர்மத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் விதமாக, பசுவதைத் தடை விஷயத்தில் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. ஆனால் அதற்கு நேரெதிராக, பசுக்கள், எருமைகள், காளைகள், கன்றுகள் என்று அனைத்தும், உயர்தரத் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், ஏற்றுமதி வியாபாரத்திற்காகவும் வதைக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவே கசப்பான உண்மை!
பசுக்கள், காளைகள், எருமைகள், கன்றுகள் ஆகியவற்றைக் காப்பாற்றிப் பாதுகாப்பது நமது தர்மத்தின்படி இன்றியமையாதது. ஏனெனில் நமது பாரம்பரியம் வயிறு வளர்ப்பதையே பிரதானமாகக் கொண்டதல்ல. மாறாக பலவீனர்களையும் வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகும். கோசம்ரக்ஷணம் அல்லது பசுப்பாதுகாப்பு என்பது பசுக்களை மட்டுமின்றி, காளைகள், எருமைகள், காளைக்கன்றுகள், எருமைக்கன்றுகள் ஆகிய அனைத்துக் கால்நடைகளையும் காப்பதுதான். நமது தர்மத்தின்படி, அவைகள் இருக்க வேண்டிய இடங்கள் வயல்களும், கோவில்களும், கோசாலைகளும்தானே தவிர கசாப்புக் கூடங்கள் அல்ல!
உசாத்துணைகள்:
1. http://www.thehindu.com/news/national/Cow-vigilantes-%E2%80%98anti-social%E2%80%99-Modi-breaks-his-silence/article14556739.ece, http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-blasts-cow-vigilantes-calls-them-anti-social-2958427/
2. http://www.thehindu.com/news/national/other-states/modi-fears-a-pink-revolution/article5864109.ece
3. http://www.thehindu.com/news/national/india-on-top-in-exporting-beef/article7519487.ece
4. https://en.wikipedia.org/wiki/Cattle_slaughter_in_India


Leave a Reply