Posted on Leave a comment

அதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு – ஹாலாஸ்யன்

உயிர் என்ற ஒன்று தோன்றிய போதில் இருந்தே அந்த உயிருக்கு எதனோடாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் இருந்திருக்கும். அது, இங்கே உணவு கிடைக்கிறது என்பதாக இருக்கலாம். உணவு என்னுடையது என்பதாக இருக்கலாம். இது என் பேட்டை, நீ ஏன் உள்ளே வந்தாய் என்ற மிரட்டலாம் இருக்கலாம். இணைசேரக் கூவுதலாய் இருக்கலாம். ஓர் உயிர் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எதையேனும் தொடர்புகொள்ள முயன்றுகொண்டே இருந்திருக்கும். கூட யாருமே இல்லாத முதல் உயிரி என்ன செய்திருக்கும்? யாருடன் அல்லது எதனுடன் பேசியிருக்கும்? என்ன சொல்ல எத்தனித்திருக்கும்? அனைத்தையும் கேட்கும் திறன் கொண்ட காதுகள் இருப்பின் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் உயிர்களும் நிற்காமல் பேசுவது கேட்கும். மனிதனான நாம் சைகைகள், குகை ஓவியங்கள், ஓலமிடுதல் தொடங்கி, மொழி உருவாகி, பேச்சு, இசை, மொழி, நடனம், கூத்து என்று எல்லாமே ஏதோ ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

தொடர்பு கொள்ள வேண்டும் என்பதன் நீட்சிதான் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப், வீடியோ ஆடியோக்கள் எல்லாம். பார்க்கப்போனால் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் பசி‌, தாகம், உறக்கம், காமம் போன்ற இயற்கை உந்துதலில் சேர்க்கலாம். NLP (Neuro Linguistic Programming) என்னும் மனிதர்களின் தொடர்புகளைப் பற்றிய இயலில் ஓர் அடிப்படைக் கோட்பாட்டைச் சொல்வார்கள்‌, we are always communicating என்று. தான் கண்ணால் பார்க்க முடிந்தவர்களிடம்‌ மட்டும் பேச ஆரம்பித்த மனிதன் தொழில்நுட்பத்தால் உருவமின்றி ஒலிகள் மூலம் ‌பேச ஆரம்பித்தான். இன்று இரண்டையும் கலந்து வீடியோ கால் பேசுகிறான். ஒரு யூட்யூப் வீடியோ மூலம் பல்லாயிரக்கணக்கான பேரைப் போய்ச் சேர முடிகிறது. அந்தத் தொடர்பு வேட்கை உந்தித்தள்ள ஒரு‌ கட்டத்தில் இயந்திரங்களோடு பேச ஆரம்பித்தான். ஐஃபோனில் சிரி, ஆண்ட்ராய்டில் கூகுள் அஸிஸ்டென்ட், ஹைக்கில் நடாஷா என்று போய்க்கொண்டிருக்கிறான். தன்னைச் சுற்றி இருக்கும் கருவிகள் எல்லாமே தன்னோடு பேச வேண்டும், தன் பேச்சைச் கேட்க வேண்டும் என்ற அடிப்படை ஆசை மனிதனுக்கு உண்டு. அப்படி எல்லாக் கருவிகளும் ஒருங்கிணையும் ஒரு தளமாக இணையம் இருக்கிறது. தேர்ப்பாகன் கையில் எல்லாக் குதிரைகளின் லகானும் இருப்பதுபோல எல்லாக் கருவிகளையும் இணையம் கோத்து நம் கையில் கொடுத்திருக்கிறது.
கம்பி வழி இணையத்தில் ஒரு சிக்கல் நாம் எல்லாரும் அறிந்ததுதான். அது கிடைக்கும் இடத்தில் நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். கம்பிவழி இணையம் நம்பகத்தன்மை உடையது, அதனாலேயே இன்னமும் அலுவலகங்களில் அதையே பயன்படுத்துகிறார்கள். இன்னமும் RJ45 எனத் தொழில்நுட்ப வட்டங்களில் அறியப்படும் ஈதர்நெட் கம்பிகள் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கையடக்கக் கருவிகளுக்கு இந்தக் கம்பிவழி இணையம் தோதுப்படாது. நாம் நமக்கு விரும்பியவாறு அமர்ந்தோ, நடந்தோ, படித்தோ இணையத்தில் மேய முடியாது. மேலும் தற்போது காபி மேக்கர், அடுப்பு, கார், வீட்டில் உள்ள பிற எலெக்ட்ரிக் சாதனங்கள் எல்லாமே இணையத்தில் நுழைந்து நம் கைக்குள் வரும் internet of things யுகத்தில் கம்பிவழி இணையம் நிச்சயம் பழங்கஞ்சிதான்.
நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. ஏற்கனவே வைஃபை என்ற ஒன்றை வைத்திருக்கிறோம். Wireless Fidelity என்பதன் சுருக்கமே WiFi. பதினேழு வருடங்களுக்கு முன் சந்தைக்கு வந்த இந்தத் தொழில்நுட்பம் வயரில்லா இணையத்தை வழங்குவதில் தற்போதைக்கு ஜித்தன். வயர்கள் மூலமாக மோடத்திற்கு (modem) வந்து சேரும் இணையத்தை ரேடியோ அலைகளில் ஏற்றிக் காற்றில் பரவவிடுகிறது. விண்வெளியில் சிறு புள்ளிகளாய் உருவாகி வெடிக்கும் கருந்துளைகளைத் தேடும் ஒரு சோதனை தோற்றுப்போக, அந்தச் சோதனையில்தான் வைஃபையின் அடிப்படைத் தொழில்நுட்பம் கிடைத்துக் காப்புரிமை பெறுகிறார்கள். தோராயமாய் இருபது மீட்டர் வரை அந்த ரேடியோ அலைகள் மூலம் நாம் இணையத்தை அணுகலாம். ரேடியோ அலைவரிசையில் 2.4 GHz மற்றும் 5 GHz (முறையே நொடிக்கு 240 கோடி அல்லது 500 கோடி அதிவெண் கொண்ட அலைகள்) என்ற இரு அதிவெண்களில் இயங்கும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வைஃபை அலைவீச்சால் உடல்நலத்திற்கு எதுவும் பாதிப்பில்லை என்றாலும் பின்வருபவை வைஃபையின் குறைபாடுகள்
1.    ரேடியோ அலைகள் சுவர்களைத் தாண்டியும் பயணிப்பதால் அவற்றை நம்மை அறியாமல் இன்னொருவர் பயப்படுத்த முடியும். வீட்டின் சுவருக்கு வெளியில் இருந்து நம் வைஃபையின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உடைத்து உட்புகுந்து தகவல் திருட முடியும். இதன் பாதுகாப்பு அடுக்ககளாகக் கூறப்படும் WPA, WEP போன்ற எல்லாமே வலு குறைந்தவைதான்
2.    சில இடங்களில் இந்த ரேடியோ அலைகள் பிற கருவிகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். உதாரணமாக மருத்துவமனையின் உயிர்காக்கும் உபகரணங்கள், அணு உலைகள். இங்கிருக்கும் கருவிகளோடு வைஃபையின் ரேடியோ அலைக் குறுக்கீடு பெரும் ஆபத்தாக முடியும்.
3.    வைஃபை பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசை அளவில் குறுகியது. பல கருவிகள் இணைய இணைய, ட்ராபிக் ஜாம் ஆன சாலை போல வேகம் குறைந்து விடும். ஆனாலும் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல் வேறு மாற்று எதுவும் இல்லாததால் நாம் வைஃபையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில்தான் ஜூலை 2011ல் ஒரு TED சொற்பொழிவில், எடின்பரா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத்துறை பேராசிரியர் திரு. ஹரால்ட் ஹாஸ், ஏன் ஒளியைத் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு தளத்தை திறந்து வைக்கிறார். அவருடைய யோசனை என்னவெனில் உட்கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் விளக்குகளை வைத்து ஏன் தகவல்களை அனுப்பக்கூடாது என்பதுதான். அதே சொற்பொழிவில் அவர் ஒளியுமிழிகள் (LED – Light Emitting Diode) தரும் ஒளியில் தகவலை ஏற்றி அதைக்கொண்டு ஒரு காணொளியை ஓட வைக்கிறார். வைஃபை போல அவர் லைஃபை LiFi (Light Fidelity) என்னும் சொல்லை உருவாக்குகிறார்.
 ஒளியைக் கொண்டு தகவல் தொடர்பு என்பது மனித குலத்திற்குப் புதிதில்லை‌‌. தீப்பந்தங்களின் அசைவுகளில் போர் வியூகங்கள் வகுத்திருக்கிறோம். இன்றுவரை கலங்கரை விளக்கங்களில் உச்சியில் இருக்கும் ஒளிகள் கப்பல்களுக்கு ஏதோ ஒரு தகவலைப் பரிமாறுகின்றன. இன்றைய உலகில் தொன்னூறு சதவிகித தகவல்தொடர்பைக் கைக்குள் வைத்திருக்கும் கண்ணாடி இழைக் கம்பி (OFC – Optical Fibre Cable) வழித் தகவல் தொடர்பு என்பது ஒளியால் நிகழ்வதுதான். அதன் அடிப்படைக் கோட்பாடு முழு அகப் பிரதிபலிப்பு. Total Internal Reflection என்பார்கள். இப்படி ஒளியால் தொடர்பு‌கொள்ளும் வழிமுறைகளுக்கான தொழிற்கட்டுமானத்தை VLC (Visible Light Communication) என்கிறார்கள்‌. அதனுடைய ஒரு பகுதியாகத்தான் இந்த லைஃபையை அறிமுகப்படுத்துகிறார்கள்‌.
நாம் பயன்டுத்தும் மின்விளக்குகளில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஆரம்பக்கட்ட குண்டுபல்புகள், பின்னர் குழல் விளக்குகள், சி.எஃப்.எல் விளக்குகள், இப்போது சமீபகாலமாய் எல்.ஈ.டிக்கள் என்று அறியப்படும் ஒளியுமிழிகள். இந்த வகைகளில் எல்.ஈ.டியைத் தவிர மீதி இருப்பவை எல்லாம் மின்சார (எலக்ட்ரிகல்) சாதனங்கள். ஆனால் எல்.ஈ.டி என்பது ஒரு மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) சாதனம். அதாவது அதிவேகமாக அந்த விளக்குகளின் ஒளியுமிழ்த் திறனைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு இருக்கையில் நம்‌ வாசல் வரை வரும் இணையத்தை வீட்டுக்குள் இருக்கும் கருவிகளுக்கு ரேடியோ அலைகளில் ஏற்றாமல் கண்ணால் காணக்கூடிய ஒளி அலைகளில் ஏற்றி அனுப்புதல். விளக்கின் பிரகாசத்தைக் கூட்டியோ குறைத்தோ அல்லது அவற்றை அணைத்துப் போடுதல் போன்றவற்றால் தகவலை ஒளியில் ஏற்றுதல்.
பிரகாசத்தைக் கூட்டிக் குறைத்து அனுப்புதல் என்றவுடன் அக்னி நட்சத்திரம் படத்து க்ளைமேக்ஸ் மாதிரியெல்லாம் இல்லை. சொல்லப்போனால் நாம் வீட்டில் பொருத்தியிருக்கும் குண்டு பல்பு நொடிக்கு ஐம்பது முறை அணைந்து அணைந்து எரிகிறது. ஆனால் அது நம் கண்களுக்குத் தெரியாது அல்லவா? அது அப்படி துடிப்பதற்குக் காரணம், நாம் பயன்படுத்தும் மாறுதிசை மின்னோட்டத்தில் அதிர்வெண் அதுதான். நொடிக்கு ஐம்பது முறை தன் திசையை மாற்றிக்கொள்ளும். அதனால்தான் ட்ரான்ஸ்பார்மர்களில் 50 Hz என்று குறிப்பிட்டிருப்பார்கள். நாம் தகவல் பரிமாறும் வேகம் இதையெல்லாம்விட அதி‌கம். ஒளியின் அதிர்வெண் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணை விடப் பல மடங்கு அதிகம். லைஃபைக்கான உட்கட்டுமானம் மிக எளிதானது. வீட்டின்‌ உத்திரங்களில் அல்லது படுக்கையை ஒட்டிய விளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றி அவற்றோடு தகவல்களை ஒளியில் ஏற்ற பிரகாசத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும் கருவியை இணைத்துவிடுவது.
நியாயமாக சில சந்தேகங்கள் வரவேண்டும். நம்மைச்சுற்றி சாதாரணமாக ரேடியோ கதிர்கள் இல்லை. அதனால் வைஃபை மோடம் அனுப்பும் ரேடியோ கதிர்களை நம் கருவிகள் எளிதில் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் நம்மைச்சுற்றி எப்போதும் ஒளி இருக்கிறதல்லவா? அது இந்த ஒளியோடு குறுக்கிடுமே?
இந்த விளக்குகள் அளிக்கும் தகவல்களைப் பெறுவதற்கு அவர்கள் சிறிய அளவிலான போட்டோ டிடெக்டார்ஸ் எனப்படும் ஒளிவாங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவை பிரகாசம் மாறாமல் எரிகிற விளக்குகளின் ஒளியைக் கண்டுகொள்ளாது. அதாவது ஒரு இசைக்கச்சேரியில் ஸ்ருதிப்பெட்டியை யாரும் ரசித்துக் கேட்பதில்லை‌ அல்லவா? அதுபோலவே அந்த ஒளிவாங்கிகள் தகவல் சுமந்து வரும் ஒளிகளை‌‌ மட்டும் கண்டுகொள்ளும். மற்றதைப் பரிசீலிக்காது.
அடுத்ததாய் லைஃபையைப் பயன்படுத்த வேண்டுமெனில் எப்போதும் விளக்கு எரிந்தபடியே இருக்க வேண்டுமே என்று. ஆம். ஆனால் டே அன்ட் நைட் கிரிக்கெட் போட்டிகளில் எரியும் நியான் விளக்குகளைப் போல பிரகாசமாய் எரியத் தேவையில்லை. நைட் லேம்ப்‌ போல எரிந்துகொண்டிருந்தாலும் போதும்.
மிக முக்கியமான சந்தேகம் நேரு காந்தி போன்றவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில், தெருவிளக்கு ஒளியில் படித்தார்கள் என்று சொல்கிறாற்போல் நாமும் விளக்கின் அடியிலேயே நிற்கவேண்டுமா? இதற்கும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்த ப்ளக் பாயிண்டின் அடியில் நிற்பதற்கும் என்ன வித்தியாசம் என்று? நாம் விளக்குக்கு அடியிலேயே நிற்கத் தேவையில்லை. சுவரில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியே இன்றைய அதிவேக இணையம் அளவுக்கு வேகத்தைத் தரக்கூடியது.
லைஃபை அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. லைஃபையின் சிறப்பம்சங்கள் என்னவெனில்
1.    நம் சுவர்கள் பெரும்பாலும் ஒளிபுகாத தன்மை கொண்டதால் நம் இணையத்தை வெளியாள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள் மட்டுமே இயங்கும். ஒரு அறைக்குள் இருக்கும் விளக்கு அந்த அறைக்குள் மட்டுமே இணைய சேவையைத் தரும். அறைக்கு நான்கு விளக்குகள் வைத்துவிட்டால் குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிச்சுற்றி வந்து பயன்படுத்தலாம்.
2.    கண்ணால் காணக்கூடிய ஒளியின் அலைவரிசை அளவு. ஒட்டுமொத்த ரேடியோ அலைவரிசையின் அகலத்தை விட ஒளியின் அலைவரிசை ஐம்பது சதவிகிதம் அதிகமானது. வைஃபை என்பது ஒத்தையடிப்பாதை எனில் லைஃபை நூறடி ரோட்டிற்குச் சமம்.
3.    வேகம். வைஃபை தருகிற வேகத்தை விட லைஃபை எக்கச்சக்க மடங்கு வேகமானது. சோதனை முயற்சிகளில் லைஃபை 224 gigabits per second வேகத்தைச் சாத்தியப்படுத்துகிறது‌. அந்த வேகம் நொடிக்கு 27 ஜிபி என்ற கணக்கு வரும். புரியும் கணக்கில் சுமார் பதினெட்டு ஹெச்.டி படங்களை ஒரு நொடியில் பதிவிறக்கலாம். ஆனால் இதற்கு நம் இணைய சேவை வழங்கும் நிறுவனம் அவ்வளவு வேகமாக இருக்கவேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
4.    லைஃபையை எந்தக் கவலையும் இன்றி மருத்துவமனைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஒளி அங்கெல்லாம் எந்தவிதக் குறுக்கீடும் செய்யாது.
5.    நீருக்கடியில் ஆராய்ச்சிக்காக இறங்கும் கருவிகளும், நீர்மூழ்கிகளும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தமுடியாது. காரணம், அவற்றை நீர் உறிஞ்சி விடும். ஒலியைப் பயன்படுத்தினால் அவை நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கிலம், டால்பின் போன்றவற்றைப் பாதிக்கின்றன. ஆனால் ஒளிமூலம் தொடர்பு கொள்ளலாம். பிரச்சினையில்லை
இம்மாதிரியான நன்மைகள்தான் லைஃபையை எப்போ வரும் என்று தொழில்நுட்ப ஆர்வலர்களை காத்திருக்க வைக்கிறது. 2011 TED சொற்பொழிவுக்குப் பின்னர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் Purelifi என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி இதைச் சந்தைப்படுத்த நிதி திரட்டியிருக்கிறார்‌. அவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பும் நிதியும் கிடைத்தன. ஜப்பானிய சீன நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் தயாராகியிருக்கின்றன. சோதனை முயற்சியாக சில அலுவலகங்களில் உள்ள கருவிகளை லைஃபை மூலம் இணைத்திருக்கிறார்கள்‌‌. எல்லாமே போலாம் ரைட் என்று விசில் கொடுத்திருக்கின்றன.
2016ல் மற்றொடு TED சொற்பொழிவில் சூரிய சக்தித் தகடுகள்‌ மீது தகவல் பொதிந்த ஒளியை விழச்செய்வது மூலம் தகவல் தொடர்பைச் செய்து காண்பித்திருக்கிறார். இதன் மூலம் கம்பி‌வழி‌ இணையம் சாத்தியப்படாத இடங்களில் இந்தத் தகடுகள் மீது தகவல் பொதிந்த லேசர் ஒளியை விழச்செய்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியும் என்று நிறுவியிருக்கிறார். Harold Haas TED talks என்று இணையத்தில் தேடிப் பாருங்கள்.
லைஃபை எங்கெல்லாம் பயன்படலாம்?
    வீடுகளுக்குள் இருக்கும் கருவிகளை internet of things மூலம் ஒருங்கிணைக்க உதவும்
    தெருவிளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றினால் அதன் மூலம் அந்தத் தெருவைப் பற்றிய தகவல்களைப் பயனருக்கு அளிக்க முடியும்.
    ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் ஒன்றோடொ‌ன்று தொடர்பு கொள்ள இது அதிவேக முறையாக இருக்கும்‌. பத்தடியில் ஒரு பாதாள சாக்கடைப் பள்ளம் எனப் பின்னால் வரும் வண்டியைச் சட்டெனெ எச்சரிக்கலாம்.
    கடல்‌ ஆராய்ச்சியில் தொடர்புக்கு இது ஒரு வரப்பிரசாதம்
    பல்பொருள் அங்காடிகளில் அந்தந்தப்பகுதி விளக்குகளை லைஃபை ஆக்குவதன் மூலம் பொருட்களைப் பற்றிய தகவல்கள், விளம்பரங்கள், கடையில் இருக்கிறதா இல்லையா போன்ற தகவல்களை உடனுக்குடன் வாங்குபவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்
    நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் கேபிள் பதித்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியாத இடங்களில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளால் இணையத்தைக் கொண்டு சேர்க்க முடியும். இதன்மூலம் டிஜிட்டல் டிவைட் என்னும், இணையம் கிடைக்கும் மற்றும் கிடைக்காத மக்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும்
அலாவுதீன் கதைகளில் வரும் அற்புத விளக்கை நாம் எல்லாருமே கதைகளில் கேட்டிருப்போம். அவனுக்குக் கைகட்டி சேவை செய்து வேண்டியதையெல்லாம் பெற்றுத்தரும் பூதம், அந்த விளக்குக்குள் இருப்பதைப்போல், நம் வேலைகளில் முக்கால்வாசியைச் செய்யும் இணையம் எதிர்காலத்தில் இப்படி விளக்குகள் வழியாகத்தான் வெளிவரப்போகிறது. அந்த அற்புத விளக்கிற்குக் காத்திருப்போம்.


Leave a Reply