Posted on Leave a comment

இசக்கியின் கொடுவாய் (சிறுகதை) – சுதாகர் கஸ்தூரி

 “போங்கல, நிக்கானுவோ, அவ என்ன ஏசுதான்னு கேக்கணும் என்னலா?” சிவராசன் மாமா அனைவரையும் துண்டை சுழற்றி விரட்டிவிடுவார். எசக்கி என்ன சொற்கள் கொண்டு ஏசினாள் என்பது தெரியாமல் துக்கத்தில் நாங்கள் தயக்கத்துடன் அங்கிருந்து நகர்வோம்.
எசக்கி பே(ஏ)சுவதை சிறுவர்களால் மட்டுமே கேட்கமுடியும். பெரும்பாலும் பாலுணர்வு அர்த்தம் புரியாத வயதில், சொற்களின் தீவிரம் புரியாது, கோபத்தில் அவள் இரைவதில், அவள் கைகள் காட்டும் புணர்வுக்கான சைகை வசவுகளை சிரிப்புடன் பார்த்திருப்போம். எசக்கியின் வசவுகள் முழுதும் காணாமற்போன அவளது கணவனையோ, குடியால் சீரழிந்த அவள் மகனையோ உருவகப்படுத்தியே இருக்கும். அவள் மகள் சற்றே தறிகெட்டுப் போயிருந்த நிலையில், அவசரமாக எவனுக்கோ விக்கிரமசிங்கபுரத்தில் மணம் செய்து கொடுத்திருந்தாள். அந்தப்பெண் அங்கு தொழில் செய்து வாழ்க்கை நடத்துவதாகவும், அவ்வப்போது எசக்கியைப் பார்க்க வருவதாகவும் வதந்தி இருந்தது. தொழில் என்பதன் பொருள் புரியாமல், மலங்க மலங்க விழித்து வதந்தி கேட்ட நாட்கள் அவை.
எசக்கி சற்றே இளைத்த உடல்வாகு. தீனமாகத்தான் பேசுவாள். மார்கழியில் கோவில் வாசலில் நெல்லிக்காய், அருநெல்லிக்காய் படியாய் அளந்து விற்பாள். இலந்தைப்பழ சீசனில் இரு கூடை நிறைய இலந்தைப்பழம் இருக்கும். மதியம் முதல் மாலை வரை, நாடார்க் கடை அருகே புண்ணாக்கு விற்பாள். “ஏட்டி, அங்கிட்டு போன்னேம்ல்லா? வாபாரத்த கெடுக்கியே? எங்கடலயும் புண்ணாக்கு வச்சிருக்கேம்லா?” என்று திட்டும் நாடாரின் குடும்பத்தினரின் நடத்தையைச் சந்தேகித்து ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பாள். வசவு என வரும்போது மட்டும், அவள் ஒரு ஆம்ப்ளிஃபயரை அவசரமாக முழுங்கியது போலத் தோன்றும். கரகரத்து மேலும் கீழுமாய் ஏறி இறங்கும் குரல் திடீரென சரியாகி பெரும் ஒலியில் வீதி முழுதும் கேட்கும்.
“எம்பொளப்புல மண்ணள்ளிப் போடுற நாடாரே ஒம்ம…” எனத் தொடங்கும் அவள் வசவு வரிகளில் நாய் நரி கிளி என்று விலங்கினங்களுடனான புணர்ச்சி விகாரம் மேலோங்கி நிற்கும்..
“இந்த மாமா பெருசால்லா இருக்காரு? அவர எப்படி…?” என்ற லாஜிக்கான கேள்வியை செல்வராஜ் முன்வைக்க, அனைத்துப் பயல்களும் அதனை சீரியஸாக யோசித்து, இறுதியில் அவனே, அவனது மாமாவிடம் கேட்டுத் தெளிந்து கொண்டு வரட்டும் என தீர்மானித்தோம். செல்வராஜும் முதலில்  ‘நா மாட்டேண்டே’ என்று பிகு பண்ணி, பின் ஒத்துக்கொண்டான்.
அடுத்த நாள் முதல் இருவாரங்களுக்கு அவன் எங்களோடு சேர்ந்து பள்ளி வரவில்லை. கூப்பிட கூப்பிட கேட்காது தனித்து முன் நடந்தான். அவனுக்கு படு கோபம் வரவைக்கும் “சீப்புள்ள” என்றபோதும் திரும்பி வந்து அடிக்கவில்லை. அதன்பின்தான் விசயம் தெரிந்தது.
“ஒக்காளி, இந்த வயசுல இது தெரியணும் என்னலா?” என்றபடி மாமா, இடுப்பில் இருந்த பச்சை பெல்ட்டை எடுத்து ரெண்டு அறை விட்டதும், அவன் “யாத்தீ” என்று வாய்க்காங்கரை வழியாக ஓடியதையும், பின்னாலேயே ”நில்லுல, ஓடினே கொன்னுறுவேன்” என்று அவன் தாய் வீறிட்டுக்கொண்டே துரத்தி ஓடியதையும் கண்ணனின் தம்பி பார்த்ததாகவும், அது உண்மை என்று சாஸ்தா முன்னாடி சத்தியம் செய்வதாகவும் உறுதி சொன்னான். அதன் பின் சைஸ் பற்றிய தருக்கங்களை விட்டுவிட்டோம்.
எசக்கி எந்தச் சிறுவனுக்கும் சிறுமிக்கும், கொடுத்த காசுக்கு அதிகம் நெல்லிக்காய் தந்ததில்லை. அருநெல்லிக்காய் கூட இரண்டு கூட விழுந்தால், கையைப் பிடித்து நிறுத்தி அதனைக் கூடையில் போட்டுக்கொள்வாள். “நாம்போயி பொறுக்குதேன். இவனுக மேல்டாக்ல வந்து அஞ்சிசாக்கு (அஞ்சு பைசாவுக்கு) அள்ளிட்டுப் போவகளாம். எங்கையி என்ன ***லயா சொருகிட்டு நிக்கி?”
ஏன் அவள் இத்தனை வசை பாடுகிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை. பேசினால் மானம் போகும் என்பதால் அவளிடம் பேசவே பலரும் பயந்தார்கள். சிவராசன் மாமா மட்டும் அவளிடம் பேசுவார் “ஏட்டி, ஏன் நாயி கணக்கா குலைக்க? அன்பாத்தான் பேசேன்” என்பார் அவளைச் சீண்டி விடுவதற்கு. அதன்பின் அரைமணி நேரத்துக்கு ரோட்டில் நடப்பவர்கள் நின்று அவள் கத்துவதை வேடிக்கை பார்ப்பார்கள். சிவராசன், ஏதோ கூண்டில் இருக்கும் மிருகத்தைச் சீண்டிவிட்டு தைரியமாக நிற்கும் ரிங் மாஸ்டர் போல பெருமிதமாய் ஒரு புன்னகையுடன் அனைவரையும் பார்ப்பார்.
ரிடையர் ஆகி வந்திருந்த ரோசம்மாள் டீச்சர் “இவமேல சாத்தான் இறங்கியிருக்கு, கர்த்தர் மனமிறங்கினா சாத்தான் ஓடிறும். 
செபக்கூட்டத்துக்கு வாரியா எசக்கி?” எனக் கேட்கப்போக, எசக்கி பேசின பேச்சில் அவர் தன்னையே சிலுவையில் அறைந்த வலியில் துடித்து ”சேசுவே, இவள ரச்சியும்” என்று விசும்பியபடி, குடை விரித்து விரைந்தார். அதுதான் எசக்கியை மனிதராக்கவோ மதம் மாற்றவோ நடந்த கடைசி நிகழ்வு என நினைக்கிறேன். வசவு மழை நிற்கவே இல்லை.
“அவ சம்பாரிக்காளே, யாருக்கு சேத்து வைக்கா?” என்று கேட்டார் விறகுக்கடைத் தேவர். “அவ பொண்ணுக்காயிருக்கும், இல்ல அவ பேத்திக்கா?” என்றார் அங்கு ஓசி பேப்பர் படிக்க வந்த ஜோசப் தங்கராஜ். தினசரியில் ‘நீர்மட்டம்’, சிந்துபாத் படிக்க வந்த நாங்கள் இதையும் கேட்டுக்கொண்டிருந்தோம்.
’ப்ச்’என்று பல் குத்தித் துப்பியபடி சிவராசன் சொன்னார். “அவ பொண்ணுதான் மலந்து கிடந்து சம்பாரிக்காளே? பேத்தி மேல ஒரு பாசம், எசக்கிக்கு பாத்துகிடுங்க. அவ எப்பவாச்சும் எங்கிட்ட சொல்லுவா ‘சாமி, எம்பேத்தியாச்சும் நல்ல பொண்ணா வருவாள்லா? அவள இந்த தாயளிப்பயலுவ சீரளிச்சுறக் கூடாது. அதான் எம்பயம்.”
“நீரு என்ன சொன்னீரு?” என்றதற்கு ஜோசப் தங்கராஜ் புன்னகைத்து “தொளிலு செய்யுறவ மவ எப்படி வருவா? பூப்பெய்தினா தொளிலுதான் அவளுக்கும். பன்னிக்குட்டி மலந்தான திங்கும்? சோறா திங்கும்?”
“அடக்கிப் பேசுவே” அதட்டினார் சிவராசன். “அவளும் மனுசிதானவே. என்னமோ போறாத காலம். அதுக்கு சின்னப்புள்ளய இப்படி அசிங்கமாப் பேசுதீரே? விளங்குவீரா நீரு?”
ஜோசப் துணுக்குற்று “சும்மா ஒரு ஜோக்கு” என்று வழிந்தாலும், சிவராசன் அவரைக் கோபமாகவே பார்த்துக்கொண்டிருந்தார்.
திடீரென எசக்கியைக் காணவில்லை. இரு நாட்கள் வசவு நாடகம் நடக்காத ஏமாற்றத்தில் நாங்கள் இருந்தாலும், பின்னர் எசக்கி இல்லாத வெற்றிடமும், வசையில்லாத மாலைப்பொழுதுகளும் பழகிப்போயின. அவள் மெல்ல மெல்ல நினைவுகளிலிருந்து மறைந்து போனாள்.
ரு மாதம் கழித்து கோவிலில் அலுவலகக் கட்டிடத்தினுள் பெரிய சத்தத்தில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. சிவராசன் கோயில் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“ஆமாவே, எசக்கியோட பைசாதான். அவ உடம்பு அழுக்கோ, வாய் அழுக்கோ, மனசு சுத்தம். அவ, கடவுளுக்குன்னு கொடுத்ததை மறுக்க உங்களுக்கு உரிமை இல்லை.”
“சார்வாள், குதிக்காதயும். நாங்க எங்க மாட்டம்னோம்? யாருக்குன்னுவே இதுக்கு ரசீது கொடுக்க? ரெண்டு பவுன் சங்கிலி… கோவிந்தா கணக்கு எழுத முடியாதுவே. அறநிலைத்துறை அதிகாரி இப்ப ஒரு முசுடு தெரியும்லா?”
“வழி இருக்கும்வே, அவர்கிட்ட பேசிப்பாரும்.”
“சரிய்யா, இவ்வளவுதான் அவ வச்சிருந்தான்னு உமக்கு எப்படித் தெரியும்? எதுக்கு கேக்கேன்னா, நாளக்கி போலீஸ் எதுவும் விசாரணைன்னு வரக்கூடாதுல்லா?”
சிவராசன் “எங்கிட்ட கொடுத்தாவே, ஒரு மாசமுன்னாடி. ‘சாமி, பேத்தியப் பாக்கப் போறன். திரும்பி வராட்டி, இத கிருஷ்ணங்கோயில்ல சேத்திருங்க’ன்னா. ‘ஏட்டி, இதென்னா, புதுசா சொல்லுத?’ன்னேன். ‘பொண்ணு வீட்டுல பேத்தி இனிமே நிக்கக்கூடாது சாமி. அது எப்ப வேணாலும் திரண்டுரும், கேட்டியளா? அதான் ஒரு முடிவுலதான் போறேன்’ன்னா” என்றார்.
“பெறவு?” என்றார் கோயில் அதிகாரி ஒருவர். அவரது முன்வழுக்கையில் ட்யூப்லைட்டின் ஒளி சற்றே மின்னியது.
“சரி, பேத்திய நீ கூட்டிட்டு வந்தா என்ன செய்வேன்னேன். ‘பாப்பம், விதி என்ன எழுதியிருக்கோ? மாப்பிள ஒரு முரட்டு ஆளு. அவள வச்சி சம்பாரிக்கற மாரி, பொண்ணையும் வச்சி சம்பாரிக்க நினைச்சிருக்கான். போய்க்கேட்டேன்ன, செருக்கியுள்ள, என்ன செய்யுமோ’ன்னு அழுதா.”
சிவராசன் மேலே தொடர்ந்தார். “ ‘என் அழுகின வாய வச்சுத்தான் இத்தன வருசம் என் ஒடம்ப சுத்தமா வச்சிருந்தேன். இங்கன இருக்கற தயாளிய, கொஞ்சம் பலவீனமா இருந்தா, அசிங்கப்படுத்திருவானுவோ. இது சின்னப் புள்ள பாத்தியளா. என்ன மாரி அசிங்கமா பேசத்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கா. பயந்த புள்ள. என்ன செய்யும்? எதாச்சும் ஆசிரமம் இருக்காய்யா? சேத்துவிடுவீயளா’ன்னா. எனக்குத் தெரியாதுன்னேன். அழுதுகிட்டே டவுண்பஸ் ஏறிப் போயிட்டா. சரி கதய விடும். இந்த சங்கிலிய என்ன செய்யணுமோ செஞ்சுக்கோரும்.”
இருநாட்கள் கழித்து மாலையில் பள்ளி விட்டு எசக்கி வழக்கமாய் அமர்ந்திருக்கும் இடத்தினருகே பெரிய கூட்டம். ஓ வென ஒரு பெண்ணின் அழுகை. “பெணம் கிடக்குலே. பாக்காதீய ஓடிப்போயிரு” என்று எவரோ எங்களை விரட்டிக்கொண்டிருந்தார். “லே, பொணத்தைப் பாக்கும்போது வவுத்தப் பிடிச்சுக்கிட்டு பாக்கணுமாம். பாட்டி சொல்லிச்சு” என்ற செல்வராஜின் அறிவுரைப்படி, வயிற்றைப் பிடித்துக்கொண்டே, மெல்ல உள்ளே நுழைந்து எட்டிப் பார்த்தோம். ஊதிய உடலொன்று மல்லாந்து கிடக்க, அதனருகே ஒரு நடுத்தர வயதுப்பெண் ஒருத்தி அரற்றிக் கொண்டிருந்தாள்.
“பாவி மவளே, போறதுதான் போற, எம்புள்ளய என்னட்டி செஞ்ச? எங்கிட்டு கொண்டு போய் விட்ட? தே..யா மவளே. அதாண்ட்டி நல்ல சாவா இல்லாம குளத்துல விழுந்து செத்த… இங்கனயே புளுத்துக் கிடந்து நாறுட்டீ…”
“ஏ, செத்த அம்மயப் பாத்து சொல்ற பேச்சாட்டி இது?” யாரோ அவளை அடக்க, அவள் வெகுண்டு எழுந்தாள். “எவம்ல என்னச் சொல்றது? தே..மவனே. முன்னாடி வால” என்று அசிங்கமாகத் தொடங்கினாள். “எசக்கி பொண்ணு பின்ன எப்படி இருப்பா?” என்றார் எவரோ.
“இந்தாட்டி, நீ எடுக்கலன்னா, நாங்க பொணத்த எடுக்கணும். கோவிந்தாக் கொள்ளி போட்டுறுவம்” என்றார் சிவராசன். “இந்த தே..நாய என்ன வேணும்னாலும் செய்யி. நாம் போறேன். எம்பொண்ணக் காங்கலயே?” அழுது அரற்றிக்கொண்டே அவள் ஓட்டமும் நடையுமாய், வாய்க்காப் பாலம் அருகே திரும்பி, சாஸ்தா கோவில் பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்த விக்கிரம சிங்கபுரம் டவுண் பஸ்ஸில் அவசரமாக ஏறினாள்.
“சரி. தூக்குங்கடே. ஏ, ஆத்துப்பாலம் பக்கம் சுடுகாட்டுல எரிச்சிருவம்” என்ற ஒருவரின் குரலுக்கு நால்வர் பாடையைத் தூக்கினர்.
எசக்கி போகிற வழியில் எழுந்து “ஏல, ஒன்ன…” என்று ஏதோ திட்டிவிடுவாளோ என்று பயந்துகொண்டே வயிற்றை இறுகப் பிடித்து சிவராசன் அருகே நான் நின்றிருந்தேன்.
முன்வழுக்கை கோயில் அதிகாரி சிவராசன் அருகே வந்தார். “நேத்திக்கு ஒரு சின்னப் பொண்ணை மதுரைக்கு முத பஸ்ல கூட்டிட்டுப் போனீயளாமே? காசி சொன்னான். யாரு அது?” என்றார்
“எம் பேத்தி” என்றார் சிவராசன். “அங்கிட்டு ஒரு போர்டிங்க் ஸ்கூல்ல சேத்திருக்கம். லீவுக்கு வந்திருந்துச்சி.”
“ஏம்வே, எசக்கி பேத்திய எங்கிட்டு கொண்டு போய் விட்டிருப்பா?”
“எவங்கண்டான்?” என்றார் சிவராசன் குளக்கரைப் படிகளைப் பார்த்தபடி.
Leave a Reply