Posted on Leave a comment

என்ன நடக்குது சபரிமலையிலே…? – ஆனந்தன் அமிர்தன்

ஐயப்ப வழிபாட்டில் சரண கோஷத்தைத் தவிர்த்து மலையாளத்து மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வேறு பெரிய ஒற்றுமை இல்லை. தமிழர்கள் கார்த்திகை ஒன்றில் மாலை போட்டு ஒரு மண்டலம் முறையாக விரதமிருந்து இருமுடி கட்டிக் கிளம்பும் போது, ரத்த பந்தங்களிடம்கூட ‘போய் வருகிறேன்’ என்று சொல்லாமல் கிளம்பும் அளவுக்கு பக்தியிலும் சாஸ்த்திரத்திலும் மூழ்கிப் போனவர்கள். மலையாள மக்களில் பலர், நாம் திருப்பதி போவது போலச் சட்டென முடிவெடுத்துக் கிளம்பி வந்து பம்பையிலேயே ரெடிமேட் இருமுடி வாங்கி சந்நிதானம் அடைந்து சாமியைக் கும்பிட்டுட்டு நெய் அபிஷேகம் வரை கூடக் காத்திராமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவர்.
இந்த வேறுபாட்டினைச் சொல்லவேண்டிய அவசியம் என்னவெனில், இன்றைக்கும் ஐயப்பன் ஆலயம் உயிர்ப்புடன் இருக்க மிக மிக முக்கியமான காரணம், தமிழ், கர்நாடக, தெலுங்கு பக்தர்கள்தான். இந்த வெளிமாநில பக்தர்களால், கோவில் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசாங்கத்திற்கு வரும் வருமானம் மிகவும் கணிசமானது. இந்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருவதைக் கவனித்த அரசாங்கம், இதை முழுக்க முழுக்க சுற்றுலாத்துறை வருமானமாக மாற்றியமைக்க ஆரம்பித்தது. ஒரு இடதுசாரி அரசு இதைச் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ள முடிகிறது. தேவசம் போர்டு?
தேவசம் போர்டின் அழிச்சாட்டியங்களைப் பார்ப்பதற்குமுன் ஐயப்பன் கோவில் நிர்வாக மட்டங்களைக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் முறைகேடுகளை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அதிகார மையங்கள் இரண்டு. ஒன்று தேவசம் போர்டு. இவர்கள்தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையம். மற்றொன்று அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் எனப்படும் அபாஸ் (ABASS – Akhila Bharatha Ayyappa Seva Sangam). இந்த அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். முழுக்க முழுக்க சேவையே பிரதானம்.
பம்பை, சந்நிதானம் என்று மட்டுமில்லாமல் ஐயப்பனுக்கு மாலை போட்ட மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் ஏதோவொரு வகையில் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல வழிகளில் தன் சேவைக்கரங்களை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு. பம்பையிலோ, சந்நிதானத்திலோ யாரோ ஒருவர் தடுக்கி கீழே விழுந்தால் கூட முதலில் கேட்கும் வார்த்தை அபாஸ். சமதளத்தில் கூட அத்தனை துரிதமாக சேவை செய்வது கடினம் ஆனால், நீலிமலை, அப்பாச்சி மேடு பகுதிகளிலும் அத்தனை லாகவமாக, துரிதமாகச் செயல்படும் தன்னார்வத் தொண்டர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளி, ஐயப்பன் தேவசம் போர்டு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்மூடித்தனமாக சேவை செய்யும் அடிமைகள்தான் இந்த அபாஸ்.
இந்த அபாஸ் அமைப்பிற்கு அன்னதானத்திற்காக வரும் நன்கொடை, தேவசம் போர்டுக்கு வரும் நன்கொடையை விட அதிகம். இது தேவசம் போர்ட்டின் கண்ணை உறுத்துகிறது. அபாஸ் அமைப்பிலும் சில ஊழல் நிர்வாகிகள் இருந்திருக்கின்றனர் போலும். அபாஸ் அமைப்பிலும் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. வாய்ப்பினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தேவசம் போர்டு, “இனி பம்பையிலோ, சந்நிதானத்திலோ அபாஸ் அன்னதானம் செய்யக்கூடாது” என்று கோர்ட்டில் தடையுத்தரவை வாங்கிவிட்டது.
தவறு செய்த நிர்வாகிகளைக் களைய உதவியிருந்தாலோ அல்லது தவறு மேலும் நடக்காமல் தடுக்க உதவியிருந்தாலோ அதைப் பாராட்டலாம். மருத்துவ உதவி, சுத்தம் செய்தல், கூட்டத்தை நிர்வகித்தல் போன்ற மற்ற சேவைகள் செய்ய அபாஸ் அமைப்பிற்குத் தடை இல்லை. சம்பந்தமே இல்லாமல் எதற்காக அன்னதானத்தை மட்டும் தடை செய்ய வேண்டும்? அபாஸ் நிர்வாகம் மட்டுமே பம்பையில் நான்கு இடங்களிலும், சந்நிதானத்தில் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தது. இது தவிர கர்நாடக, ஆந்திர சங்கங்கள் சார்பாகவும் வேறு சில அமைப்புகள் சார்பாகவும் அன்னதானங்கள் நடைபெற்று வந்தன. இந்த அன்னதான மையம் எல்லாவற்றிற்கும் இப்பொழுது முற்றிலும் தடை. ஏன்?
15 அடிக்கு 6 அடி அளவுள்ள ஒரு கடைக்கு ஒரு மாத வாடகை நான்கு லட்சம். நாற்பது லட்சம் டெபாஸிட். (இது நீலிமலையின் ஓரத்தில் இருக்கும் டீ காஃபி, ஜூஸ், பழக்கீற்றுக்கள் விற்கும் ஒரு கடைக்கான வாடகை.) அப்படியானால் சந்நிதானத்திலோ பம்பையிலோ இருக்கும், வியாபாரம் கொழிக்கும் கடைக்கு என்ன வாடகை இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஆயிரக்கணக்கான கடைக்காரர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் வாடகையைக் கூட்ட வேண்டுமானால், அவர்களுக்கும் வருமானம் கூடியாக வேண்டும். இப்படி ஆளாளுக்கு அன்னதானம் போட்டால், வியாபாரம் செய்யும் கடைகளுக்கு பக்தர்கள் செல்ல மாட்டார்கள் இல்லையா? அதனால்தான் அன்னதானங்களுக்குத் தடை. எவ்வளவு கீழ்த்தரமான வியாபார உத்தி பாருங்கள்.
அபாஸ் செய்த அன்னதானங்களுக்குத் தடை போட்டதற்குக் காரணம் அவர்கள் அன்னதானத்திற்கு வசூலித்த பணத்தில் ஊழல் செய்து விட்டார்களாம். அப்படியென்றால், அவர்களைக் கரிமலை உச்சியில் மட்டும் அன்னதானம் செய்ய அனுமதித்ததன் நோக்கம் என்ன? அந்த இடத்தில் தேவசம் போர்டின் வருமானத்திற்கு அந்த அன்னதானம் இடைஞ்சலாக இல்லை, அதுதான் விஷயம். நாங்களும் அன்னதானம் போடுகிறோம் என்று தேவசம் போர்டு சப்பைக்கட்டு கட்டலாம். பம்பையில் ஓர் இடத்திலும் சந்நிதானத்தில் ஓர் இடத்திலும் மட்டும் அன்னதானம் போடுகிறது தேவசம் போர்டு. ஒரே ஒரு முறை போய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். அது புளியோதரையா நேற்றைய பொங்கலா என்று நீங்கள் சந்தேகப்படும்போது, இன்றைக்குச் செய்த உப்புமா என்று பதில் வரும். உப்புமாவிற்குச் சுண்டல் குழம்பு. அதுவும் ஒரு கரண்டிக்கு மேல் வைக்க மாட்டார்கள். அடுத்த கரண்டி வாங்க நீங்கள் மீண்டும் எச்சில் தட்டைத் தூக்கிக்கொண்டு அந்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.
எத்தனை வசதி குறைந்தவர்களாக இருப்பினும் மாலை போட்டிருந்த காலத்தில் யாராவது நான்கு பேரை அழைத்து உணவு பரிமாறி ஐயப்பன் சாப்பிட்டதாக மகிழ்ந்து போகும் தமிழக பக்தன் அங்கே பிச்சைக்காரனாக நடத்தப்படுகிறான். ஆனால், இதே தமிழன், சென்ற ஆண்டு வரை அபாஸ் கொடுத்த அன்னதானத்தை வாங்கிவந்து, அப்படியே குப்பையில் போட்டுவிட்டுப் போனதற்காக இப்பொழுது அனுபவிக்கிறான் என்பது தனிக்கதை.
இடைச்செருகல் 1: ஐயப்பன் கோவிலில் தலைமை குருக்கள்/பூசாரிக்குப் பெயர் ‘மேல்சாந்தி.’ வருடத்திற்கொரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவரை நியமிப்பார்கள். அந்த ஒரு வருட காலத்திற்கு, கீழே என்ன நடந்தாலும் அவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்நிதானத்தில் இருந்து இறங்க மாட்டார். ஒருமுறை ஒருவர் மேல்சாந்தி பதவியை அனுபவித்துவிட்டால் போதும், அவர் பல கோடிகளுக்கு அதிபதி. 90% பக்தர்கள் ஐயப்பன் இருக்குமிடத்தில் பணத்தை வீசி காணிக்கை செலுத்துவார்கள். அப்படி விழும் அத்தனை பணமும் அந்த மேல்சாந்திக்கு மட்டுமே. வேறு எந்தக் கோவிலிலாவது இப்படித் தனிநபருக்கென்று உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
இடைச்செருகல் 2: இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள இடங்களில் (சபரிமலை இருக்கும் மாவட்டம்) நீங்கள் சிறியது பெரியது என்றில்லாமல் எந்த உணவகத்துக்குள் நுழைந்தாலும் ஒரே விலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு உணவு கிடைக்கும். குடிக்கத் தண்ணீர் கேட்டால் எந்த இடத்திலும் வெறும் பச்சைத் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். மூலிகை கலந்த வெந்நீர் மட்டுமே கொடுப்பார்கள். இந்த வெந்நீர்க் கட்டுப்பாட்டை பெருவழிப் பயணமான காட்டிற்குள்ளும் கடைப்பிடிப்பது மிகவும் பாராட்டிற்குரியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் புலியோ இல்லையோ நமக்குத் தெரியாது, ஆனால், அதைப் புலியாக நினைத்துக்கொண்டு ஐயப்பன் தேவசம் போர்டு சூடு போட்டுக் கொண்டிருக்கின்றது. அங்கே லட்டுக்காக வரிசையில் நிற்பது போல இங்கே அரவணை/அப்பத்திற்கு வரிசையில் நிற்க வைத்து டிமாண்ட் காட்டுகிறார்கள். ஐயப்பன் ஆலயப் பிரசாதம் என்பதைத் தவிர அதற்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோங்க என்று கொடுத்தால் கூட, மழுப்பலாகத் தவிர்த்துவிட்டுப் போகும் அளவில்தான் அதன் ருசியிருக்கும். அதன் விலையையும் தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். வருமானம் கூடினால் பக்தர்களுக்கு வசதி செய்து தரமுடியும் என்றொரு சல்ஜாப்பு கூடச் சொல்லப்படலாம். இதைப் பற்றி யோசித்து, இங்கு நடப்பதைக் கூர்ந்து கவனித்தபோதுதான், எத்தனை மோசமாக அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று புரியவந்தது.
மகரஜோதி காலத்தில், பம்பையிலிருந்து சந்நிதானம் போகும் 6 கிமீ தூரமும் இருமுடி ஏந்திய பக்தர்கள் கிட்டத்தட்ட 12-15 மணி நேரம் காத்திருப்பார்களாம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு அடி நகருமாம். பக்தியிலிருப்பவர்கள் பொறுமையாக நிற்கிறார்கள் என்பதோடு பசியால் வாடுவதையும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மலஜலம் கழிக்காமல் எப்படிக் காத்திருப்பது? அடக்கக்கூடிய விசயமா அது? ஆகையால் தலையில் இருமுடியை வைத்துக்கொண்டே நிற்கும் இடத்திலிருந்தே சிறுநீர் கழிப்பது சகஜமாகி விட்டதாம். அதாவது ஒரு மண்டலம் அதீத சுத்தமாக விரதம் இருந்து ஐயப்பனைத் தரிசிக்கப் போகும் சில மணிகளுக்கு முன்பு மூத்திரத்தில் மூழ்கி எழுந்து போய் உங்கள் வேண்டுதல்களையோ நன்றி நவில்தலையோ ஐயப்பன் முன் வைக்கவேண்டிய நிலை. நடைபாதை முழுவதும் கடைகளைக் கட்டி விட்டதால் அங்கு கழிவறை கட்ட இடவசதி இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், சந்நிதானத்தில் கூடப் போதுமான கழிவறை வசதி இல்லை. அந்தப் பிரதேசத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தேவசம் போர்டு கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
ஸ்வாமி தரிசனத்திற்காக நீங்கள் வரிசையில் நிற்கும்போதே கூட ஸ்ட்ரெக்சரில் சிலரைத் தூக்கிக் கொண்டு போவதைக் காணலாம். அவர் மயக்கமாக இருக்கிறாரா மடிந்து கிடக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், குறைந்து ஒரு நாளைக்கு நாலைந்து சரணங்கள் (மரணங்கள்) நிகழ்வது சகஜம் என்கிறார்கள். காரணம் நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல்கள்தான். யார் வீட்டில் என்ன இழவு விழுந்தாலும் சரி, எங்களுக்கு வருமானம் தொடர்ந்து வந்தால் போதும் என்ற மனப்போக்கில் கோவில் நிர்வாகம் வெளிப்படையாகவே நடந்து கொள்கின்றது. தேவசம் போர்டினைத் தட்டிக் கேட்க வேண்டிய அவசியம் அம்மாநில அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சீசனில் வரும் வருமானத்திற்காக தேவசம் போர்டினைக் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அரசு. சில வருடங்களுக்கு முன்பு புல்மேடு பகுதியில் நிகழ்ந்ததைப் போன்றதொரு பெரிய விபத்தினைச் சந்திக்காமல் தேவசம் போர்டின் பேராசைத் தீ அணையாது போலிருக்கிறது.
‘ஐயப்பா, உன்னை நம்பி வரும் பக்தர்களைப் பத்திரமாகத் திருப்பியனுப்பு’ என்று வேண்டுவதைத் தவிர நாம் செய்வதற்கு வேறொன்றும் இல்லை. நம்மால், நம் ஊர்க் கோவில்களின் சீர்கேட்டினையே தட்டிக் கேட்க நமக்குத் துப்பில்லை. இதில் அடுத்த மாநில கோயில் நிர்வாகத்தை என்ன செய்துவிட முடியும்?


Leave a Reply