Posted on Leave a comment

தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? – பீட்டர் ஸிங்கர் – தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்

பீட்டர் ஸிங்கர் (Peter Singer) மெல்போர்னில் பிறந்தார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்ற இவர், சமகாலத் தத்துவவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்போது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரி அறம் (bioethics) சார்ந்த துறையின் பேராசிரியராகவும், மெல்போர்ன் பல்கலையில் தத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். ‘அறம்’ என்பதுதான் இவரது முக்கிய ஆய்வுக் கருதுகோள். தத்துவம் மற்றும் அறம் சார்ந்த விவாதங்களை தமது குறும் பத்திகள் வாயிலாகத் தினசரி வாசகர்களிடம் சேர்த்தது இவரது தனிச்சிறப்பு. Ethics in the Real World என்னும் புத்தகம் இத்தகைய 86 கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் ஒரு சில கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுபவை.
இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை வாஷிங்டன் போஸ்ட் இதழில் 2012ம் வருடம் வெளிவந்தது. இக்கட்டுரையை Frances Kissing என்னும் அறிஞர் மற்றும் செயல்பாட்டாளருடன் இணைந்து எழுதியுள்ளார்.
இன்று சுற்றுச்சூழல் செயல்பாடு என்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. பல நேரங்களில் இத்தேசத்திற்கு எதிராகச் செயல்படும் நபர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் என்னும் பெயரில் சுற்றி வருகின்றனர். (இவர்களில் ஒரு சில நபர்களை A Dictionary of Fashionable Nonsense செல்லமாக ‘தர்பூசணி’ என்றழைக்கிறது; வெளியே பச்சை, உள்ளே சிவப்பு!) இத்தகைய சூழ்நிலையில்தான் பீட்டர் ஸிங்கர் நமக்கு வழி காட்டுகிறார். பன்னாட்டு நிதி உதவியுடன் செய்யப்படும் பெரும் போராட்டங்கள்தான் சுற்றுச்சூழலைக் காக்கும் என்றில்லை. தனி நபர்களின் உணவுத் தேர்வுகளும் சுற்றுச்சூழலைக் காக்க உதவும் என்பதை ஸிங்கர் தெளிவுபடுத்துகிறார். மேலும் ஸிங்கரின் கட்டுரை நமக்குப் போலிகளை இனம் காணவும் உதவுகிறது.

 ரியோ டே ஜெனிரோவில் நடக்கும் ‘நீடித்திருக்கும் வளர்ச்சி’ (sustainable development) தொடர்பான கூடுகையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு இதே நகரில் இவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். அன்று, இங்கு முதல் ‘புவி மாநாடு’ (Earth Summit) நடந்தது. அன்றிலிருந்து இன்று வரை இக்கூடுகைகளின் குறிக்கோள்  பைங்குடில் வாயுக்களின் (பசுமைவீடு வாயுக்கள் Greenhouse gases) வெளியேற்றத்தைக் குறைப்பதன் வாயிலாக, மிகக் கடுமையான வறுமையில் வாழும் 1.3 பில்லியன் ஏழைகளுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த ஆய்வுதான். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில், ‘வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையை, வாழ்வுரிமையை அபாயத்திற்குள்ளாக்காமல் நாம் அறத்தோடு வாழ்வது எப்படி?’ என்பது இத்தகைய கூடுகைகளின் குவிமையப் பொருள். இதுதான் அவர்களது செயல்திட்டத்திலும் இருக்கிறது.

ஆனால் எங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அவர்களது உணவுப் பட்டியலில் என்ன இருக்கிறது என்பதுதான். குறிப்பாக, புவி வெப்பமாகுவதற்கும் பருவ நிலை மாற்றத்திற்கும் முக்கியக் காரணியான மாமிச உணவு இக்கூட்டத்தில் பரிமாறப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். நாங்கள் அதனைக் கண்டுபிடிக்க முயன்றோம்.
எங்கள் மின்னஞ்சலுக்கு முதலில் கிடைத்தது, அலட்சியமும் பெருமிதமும் கலந்த ஒரு பதில். எங்கள் கேள்வியை அலட்சியம் செய்தனர். பெருமிதத்தோடு இந்த நிகழ்வு ‘முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் நடத்தும் முயற்சி’ என பதிலுரைத்தனர். ஐ.நா. மக்கள் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: “பிரேஸில் அரசும், ஐ.நா. செயலகமும், இந்நிகழ்வை முழுப் பசுமை நிகழ்வாக நடத்துவதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. மாநாட்டில் அச்சடிக்கப்பட்ட தாள்கள் / புத்தகங்கள் ஆகியவற்றின் பயன்பாடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. யாராவது சிறப்புக் கோரிக்கை வைத்தால்தான் அவ்விடத்தில் வைத்து தேவை அடிப்படையில் அச்சிடுவது (Print on Demand) முறையில் அச்சிட்டுக் கொடுப்போம். அனைத்து ஆவணங்களும் மின்னாவணங்கள்தான். மேலும் பிளாஸ்டிக் பிரச்சினைகளையும் சரி செய்ய பிரேஸில் அரசு முயன்று வருகிறது.”
இன்னும் அழுத்திக்கேட்டபோது, ஐ.நா. மக்கள் தொடர்பு அதிகாரி, ‘ஆர்கானிக் உணவுகளைப் பரிமாறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றும் கூறினார்.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் ஆடுமாடுகள் / கால்நடைகள், பட்டியில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் அதே இன மிருகங்களைவிட அதிக அளவு மீத்தேனை (ஒரு பவுண்ட் இறைச்சிக்கு) வெளியேற்றுகின்றன.
1972ம் வருடத்திலிருந்து ஐ.நா. சபை, சுற்றுச்சூழல் கருத்தரங்குகளை நடத்துகிறது. ஆரம்ப காலங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலின் மேல் இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை விவாதப் பொருட்களாக இருந்தன. 1990களில் இக்கருத்தரங்குகளின் குவிமையம் புவி வெப்பமயமாதலாக மாறியது. முதல் ரியோ சந்திப்பில் (1982ல்) ஐக்கிய அமெரிக்கா உட்பட 189 நாடுகளும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும், அபாயகரமான பருவ நிலை மாற்றத்தையும் சரி செய்வதற்கான / குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறின.
ஆனால் இம்முயற்சியில் இவர்கள் பரிதாபகரமான தோல்வியை அடைந்துள்ளனர். இப்போது பைங்குடில் வாயுக்களின் அளவு ஏற்கெனவே அபாயகரமான அளவைத் தாண்டிவிட்டதாகப் பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்துப்படி நாம் இன்னும் இருபது வருடங்களுக்குள், திரும்பி வர இயலாத அளவிற்குப் பேரழிவின் சூழலுக்குள் சிக்கிக்கொண்டு விடுவோம். அதன்பிறகு என்ன செய்தாலும் பருவ மாற்றத்தினால் வரும் பேரழிவுகளில் இருந்து தப்பிக்க முடியாது.
ரியோ+20 சந்திப்பில் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. இந்நிலையில் மாநாட்டிற்கான உணவுப் பட்டியலில் இருந்து மாமிச உணவு வகைகளை நீக்குவதுதான் மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். மாமிச உணவு வகைகளை நீக்குவதோடு மட்டும் அல்லாமல் அந்நீக்கத்தைப் பெரிய அளவில் பிரகடனப்படுத்தவும் வேண்டும்.
மாநாட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும், மாமிச உணவு எவ்வாறு பருவநிலை / கால மாற்றத்திற்கு முக்கியமான காரணி என்பது தெரியவேண்டும். மாமிச உணவினால் ஏற்படும் மாசு ஒப்பீட்டளவில் வெகு விரைவில் தீர்க்கத்தக்க பிரச்சினை. மாமிச உணவை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதன் வாயிலாக, நாம் பருவ மாற்றத்திற்கு எதிராகப் போராடலாம். அடுத்த இருபது வருடங்களுக்குள் செய்யத்தக்க, செயல்பட வாய்ப்புள்ள மிகச் சிறந்த நடவடிக்கை இதுதான்.
2006ல் வெளியான ‘கால்நடைகளின் நீண்ட நிழல்’ என்னும் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிக்கை, இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பது என்பது கடும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை (உள்ளுரில் இருந்து உலகளவில்) உருவாக்குவதில் முதல் இரண்டு அல்லது மூன்று காரணிகளுக்குள் ஒன்றாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது. அதனை அடிப்படையாகக்கொண்டு பருவ நிலை ஆய்வாளர்களான ராபர்ட் குட்லாண்ட் மற்றும் ஜெஃப் அன்ஹாங் ஆராய்ச்சிகளைச் செய்தனர். அவர்கள் ஆராய்ச்சி, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளிப்படுத்தியது. கால்நடைகளும் மீத்தேன் செறிவுள்ள அவற்றின் உபபொருட்களும்தான் 51% வாயு வெளியேற்றத்திற்குக் காரணம் என்பதுதான் அது. குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்திற்கு இறைச்சிதான் காரணம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஐ.நா. சபையும், ரியோ மாநாட்டில் பங்கேற்கும் செயல்பாட்டாளர்களும், பன்னாட்டுப் பிரதிநிதிகளும் சேர்ந்து மாநாட்டின் அனைத்து விருந்துகளில் இருந்தும், பஃபேக்களில் இருந்தும், காலை, மதிய, மாலை உணவுகளில் இருந்தும் இறைச்சியை முற்றிலும் நீக்கினால், ஐ.நா. சபை உலகைக் காக்கும் விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறது என மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பசுமை மாநாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வில், இறைச்சி நீக்கம் என்பது ஒரு இரண்டாம்  தரமான யோசனையாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு விதப் பேசக்கூடாப் பொருளாகக் கருதப்படுகிறது.
எங்கும் எதிலும் சுற்று சூழல் ஆர்வலர்களின், புவி வெப்ப மயமாவதில் உள்ள அபாயங்களைக் குறித்த பரப்புரைகளை நாம் காணலாம்/கேட்கலாம். ஆனால் இவர்களின் பரப்புரை நட்சத்திரங்கள் யாரும் இறைச்சியைத் தவிர்ப்பது குறித்துப் பேசுவதே இல்லை. சமீபத்தைய கூடுகை ஒன்றில் பெரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியதின் அவசியத்தைப் பற்றிச் சன்னதத்துடன் பேசினார். உணவு இடைவேளையின் போது ossobucco என்னும் இறைச்சி உணவைப் பலமுறை கேட்டு வாங்கி உண்டார். இத்தகைய அதீத இறைச்சி உணவினால் வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறித்துக் கேட்டபோது, வெட்கமின்றி, தன்னால் ஒருபோதும் இறைச்சி உணவைக் கைவிட முடியாது எனக் கூறினார்.
இது பிரச்சினையின் ஒரு பகுதி, வளர்ந்த நாடுகளில் இறைச்சி உண்ணுதல் என்பதை மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தின் ஒரு பகுதியாக, குறியீடாகக் கருதுவதில் உள்ளது. இத்தகைய உணவு முறையைக் கைக்கொள்ளுதலைத்தான், அது வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை வீரியமிழக்கச் செய்தாலும், வளரும் நாடுகளும் தமது லட்சியமாகக் கருதுகின்றன.
அந்த அளவிற்கான தேவையை நிறைவு செய்ய வேண்டும் எனில், இப்போது இருப்பதைவிட (60 பில்லியன்) இரு மடங்கு (120 பில்லியன்) அளவிற்குக் கால்நடை எண்ணிக்கையை 2050ல் உயர்த்த வேண்டியிருக்கும் என FAO (Food and Agriculture Organization of the United Nations) கருதுகிறது. இத்தகைய ஒரு நிலை, புவி வெப்பமயமாதலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தானிய உற்பத்தியின் மீதும் கடும் அழுத்தத்தை உருவாக்கும். இந்த அளவிற்கு, கால்நடைகளுக்கு உணவளிக்கும் அளவிற்கு, அவற்றின் உற்பத்தியையும் பெருக்க வேண்டும் அல்லவா?
அறிஞரும், ‘உலகிற்கு உணவூட்டல்’ என்னும் புத்தகத்தின் ஆசிரியருமான வால்காவ் ஸ்மில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“வளர்ந்த நாடுகளில் இப்போது உள்ளவர்கள் உண்ணுவதைப் போல உலகில் உள்ள அனைவரும் உணவு அருந்துவது என்பது மிகக் கடினம். அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால், உலகில் இருப்பதை விட 67% அதிகமான அளவு விளை நிலம் தேவைப்படும். தொடர்ந்து பைங்குடில் வாயுக்கள் வெளியேறுவதால், வரும் சில தசாப்தங்களில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை பருவ நிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசு குழு கூறியுள்ளது. அவை:
1. லத்தின் அமெரிக்காவில் 70 மில்லியன் மக்கள் குடி நீர் இல்லாமல் துன்பப்படுவார்கள். பல விவசாயிகள், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால், பாரம்பரியப் பயிர்களைக் கைவிடுவர்.
2. ஆப்பிரிக்காவில் 250 மில்லியன் மக்கள் நீர்த் தட்டுப்பாட்டால் துயருறுவர். அங்கு கோதுமை பயிரிடும் விவசாயம் முற்றிலுமாக அழிந்து போகும்.
3. ஆசியாவில் 100 மில்லியன் மக்கள் கடல் நீர் மட்ட உயர்வால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறைவான மழையால் வங்கதேசத்திலும் சீனாவிலும் நெல் விளைச்சல் பாதிக்கப்படும்.
4. இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 23 இஞ்ச்கள் உயரும் எனக் கருதப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் தீவுகளும், நாடுகளும் அப்படியே மூழ்கும், மறையும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே மாலத்தீவுகள் புதிய நாடு ஒன்றை விலைக்கு வாங்குவதற்காகப் பணத்தை சேமித்து வருகிறது.”
இறைச்சி உற்பத்தியையும், உண்ணுதலையும் குறைத்தல் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என்பதற்கும், ஆகவே மேலே கண்ட பெருந்துயர்களைத் தடுக்க வாய்ப்புண்டு என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஆனால் பல கட்ட, பல வாரப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் ரியோ மாநாட்டின் வரைவு அறிக்கையில் இறைச்சி குறித்த எந்தத் தீர்மானமும் இல்லை. அதற்குப் பதிலாக புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதையும், பயன்படுத்துவதையும் குறைப்பதற்கான அவசியத்தைப் பற்றி அறிக்கை பேசுகிறது. முக்கியக் குற்றவாளியைப் பற்றி ஏதும் பேசவில்லை.
சுற்றுச்சூழல் நட்சத்திரங்களுக்கு / தலைவர்களுக்கு இந்த மாநாட்டில் பல சவால்கள் உள்ளன. அவர்கள் தங்கள் தட்டில் இருந்து இறைச்சியை எடுக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது.


Leave a Reply