2016 நவம்பர் 25ம் தேதி கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய கம்யூனிச ஆட்சியாளர் என்ற பிம்பத்தைத் தாண்டி அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இங்கு பலருக்கும் தெரியாது.
காஸ்ட்ரோவுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். கம்யூனிஸ்டுகளைக் கண்டால் பிடிக்காதவர்கள் கூட, உண்மையான கம்யூனிஸ்ட் மறைந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி, கல்வி வசதி போன்ற திட்டங்களை காஸ்ட்ரோ வெற்றிகரமாகச் செயல்படுத்தினார் என்ற பிரசாரமும், புரட்சியாளர் பிம்பமும் இந்தியாவில்கூட கணிசமான இளைஞர்களை அவர்பால் ஈர்த்தது நிஜம்.
“சுதந்திரம் என்பது விரிவடைதல்; தனிமைப்படுதல் அல்ல” என்பார் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். ஆனால், ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில், உலக அரங்கில் இருந்து கியூப மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பொருளாதார வளர்ச்சியோ அல்லது வீழ்ச்சியோ, அதை காஸ்ட்ரோவின் கம்யூனிச அரசுதான் உறுதி செய்யும். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூப மக்களுக்கு மிகச்சில நன்மைகள் கிடைத்தாலும், கம்யூனிசம் என்ற பெயரில், அவர்களின் அடிப்படை உரிமைகள் முழுதுமாக மறுக்கப்பட்டன. கடந்த 57 ஆண்டுகளாகத் தொடர்ந்த காஸ்ட்ரோவின் சர்வாதிகாரத்தில், அந்த மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் உலக வரலாற்றில் சிவப்பு மையால் எழுதப்பட்டவை.
உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஜனநாயகம் பேசினாலும், கியூபாவில் மட்டும் ஜனநாயகத்தை யாரும் பேச முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு இடமில்லை. ஒற்றை கட்சி முறைதான் வலுவான தேசத்துக்கு அவசியம் என்று அங்கே பிரசாரம் செய்யப்படுகிறது. அரசைத் தவிர மற்ற யாரும் ஊடகங்களை நடத்த முடியாது. மனித உரிமைகளைப் பேச முடியாது. இதை காஸ்ட்ரோவை ஆதரிப்பவர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அதனால்தான் அவரால் வலுவாகப் போராட முடிந்தது என்று அதற்கு ஒரு நியாயமும் கற்பிப்பார்கள்.
இதை விடப் பெரிய கொடுமை, கம்யூனிஸ்டுகள் நாத்திகவாதிகள் என்பதால், கடந்த 1969 முதல் 1998ம் ஆண்டு வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம் கியூபாவில் தடை செய்யப்பட்டிருந்தது. இதையெல்லாம் தட்டிக் கேட்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
காஸ்ட்ரோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, கியூபாவில் இருந்து கடல் மார்க்கமாக 150 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்காவின் மியாமி நகருக்குத் தப்பியோடிய அகதிகளின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் மேல் இருக்கும். அப்படி தப்பியோடுபவர்கள் பிடிப்பட்டால், கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் தப்பியோட முயன்றவர்கள், எதிர்க்குரல் எழுப்பியவர்கள் என சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1994 ஜூலை 13ம் தேதி கியூபா ராணுவத்தினர் நடத்திய தக்போட் படுகொலை புகழ்பெற்றது. அந்தப் படுகொலையில் மட்டும், அமெரிக்காவுக்குத் தப்பியோட முயன்ற குழந்தைகள், அவர்கள் தாய்மார்கள் என 37 பேர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், கியூப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பவே இல்லை என்பதும் உண்மையல்ல. ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் 22 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்மாண்டோ வல்லாதரஸ் என்பவர் எழுதிய Against All Hope (அனைத்து நம்பிக்கைகளுக்கும் எதிராக) என்ற புத்தகம், வல்லாதரஸுக்கு ‘கியூபாவின் சோல்செய்னிஸ்டின்’ (சோவியத் ரஷியாவின் கம்யூனிச அரசு அடக்குமுறைக்குக்கு எதிராகக் குரலெழுப்பிய புகழ்பெற்ற எழுத்தாளர் சோல்செய்னிஸ்டின்) என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. மற்றொரு எழுத்தாளரான ரைனாடோ அரேனஸ் எழுதி 1993ம் ஆண்டில் வெளியான Before Night Falls (இரவு வீழ்வதற்கு முன்பு) என்ற நாவல், நாடகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. ஆனால், இந்த உண்மைப் பிரகடனங்கள் அனைத்தும் கியூபாவின் கம்யூனிச பிரசாரப் பனியில் உறைந்துவிட்டன.
ஃபிடல் காஸ்ட்ரோவை எதிர்த்தவர்கள் என்றில்லை, ஆதரித்தவர்களும் துன்பங்களையே அனுபவித்தனர். கியூபா கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், அதன் பொருளாதாரம் சோவியத் ரஷியாவையே நம்பியிருந்தது. கம்யூனிசம் வீழ்ந்து ரஷியா சிதைந்ததால், கியூபாவின் பொருளாதாரமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் அதிக அளவில் சர்க்கரையை ஏற்றுமதி செய்த நாடு என்ற பெருமை போய், சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. நாட்டுநலன் காக்க மக்கள் பட்டினியை ஏற்கத் தயாராக வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்தார் காஸ்ட்ரோ. அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் பெரும் எண்ணிக்கையிலான கியூபக் குடிமக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர்.
இதை விடவும், காஸ்ட்ரோவின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அவருடன் இணைந்து கியூபாவில் கம்யூனிசப் புரட்சி செய்த சேகுவேரா, பொலிவியா நாட்டில் புரட்சி செய்ய முற்பட்டபோது, 1967ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கும் காஸ்ட்ரோவுக்கும் தொடர்புண்டு என்று குற்றம்சாட்டுகிறார், சேகுவேரா பற்றி ஆராய்ச்சி செய்து வரும் கியூபப் பத்திரிகையாளர் ஆல்பர்டோ முல்லர். கடந்த 1965ல் அல்ஜீரியாவில் நடைபெற்ற அஃப்ரோ-ஆசிய மாநாட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு சோவியத் ரஷியா உடந்தையாக இருப்பதாக, சேகுவேரா மறைமுகமாகக் குற்றம்சாட்டியதாகவும் அது முதலே காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்கும் கருத்து மோதல்கள் நிலவி வந்ததாகவும் அவர் கூறுகிறார்.
தனது தாய்நாடான அர்ஜெண்டினாவுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த சேகுவேராவை பொலிவியாவுக்குப் புரட்சி செய்ய காஸ்ட்ரோ அனுப்பினார் என்றும், அங்கு சேகுவேராவுக்கு ஆபத்து நேர்ந்தபோது அவரைக் காப்பாற்ற கியூப ராணுவத்தினர் விரும்பினாலும் காஸ்ட்ரோ அனுமதியளிக்க மறுத்துவிட்டார் என்பதும் ஆல்பர்டோ முல்லரின் குற்றச்சாட்டு.
சோவியத் ரஷியாவில் ஸ்டாலின் பல்வேறு கொடுமைகளைப் புரிந்தாலும், அவருக்குப் பின், குருசேவ் போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் என்று இருக்கவே செய்தனர். ஸ்டாலின் செய்த கொடுமைகளை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் அவர்கள்தான். இதை காஸ்ட்ரோ நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்.
எனவே பொதுவுடமைவாதி என்று தன்னை முரசறைந்து கொண்டாலும், முடியாட்சி வழக்கமான வாரிசு நியமனத்தை மறக்காமல் கடைப்பிடித்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களை அவர் உருவாக விடவில்லை. அவருக்குச் சமமான போட்டியாளராக இருந்த சேகுவேராவும் ஒழிக்கப்பட்டுவிட்டார். காஸ்ட்ரோவுக்குப் பிறகு அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவையே கியூபாவின் அடுத்த அதிபராக்கினார். ஆனால், மற்ற வாரிசுகளை அவர் வெளியே கொண்டு வரவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஐந்து மனைவிகளும் ஒன்பது வாரிசுகளும் இருப்பதாக, ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன. இது தவிர பல்வேறு பெண்களுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கியூபாவில் இருந்த சர்வாதிகாரத்துக்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் குடும்பத்தில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஃபிடல் தங்கை ஜுவாலா, கடைசி 40 ஆண்டுகள் அவருடன் பேசவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில், “என் அண்ணன் ஒரு அரக்கன்” என்று அவர் குறிப்பிட்டார். ஃபிடல் ஆயுதப் போராளியாக இருந்த காலத்தில், திருமண உறவுக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பிறந்த அலினா பெர்னாண்டர்ஸ், தனது தந்தையை “சர்வாதிகாரி” என்று விமர்சித்து வருகிறார்.
கடைசி காலத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு தானே நியாயம் கற்பித்துக் கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விதித்த தடையை விலக்கினார். “அன்பையும், சகோதரத்துவத்தையும்தான் கிறிஸ்தவம் கடைப்பிடிக்கிறது என்றால், அதை ஏற்கத் தயார்” என்று அறிவித்தார். ஆனால், இந்த வாதத்தை கம்யூனிஸ்டுகளே ஏற்க மறுக்கிறார்கள். தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள கிறிஸ்தவத்திடமும் அவர்கள் மூலமாக அமெரிக்காவிடமும் காஸ்ட்ரோ சரணடைந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி இப்படிப் பல ஆதாரபூர்வமான செய்திகள் உலகளவில் அறியப்பட்டிருந்தாலும், இந்தியா உட்பட பல நாடுகளில் அவை வெளிச்சத்துக்கு வரவில்லை. காஸ்ட்ரோவின் நடவடிக்கைகளுக்குப் பொதுவுடமை பின்னணி அளிக்கப்பட்டதும், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச எழுத்தாளர்களும் ஊடகங்களும் ஃபிடல் காஸ்ட்ரோவை உயர்த்திப் பிடித்ததுமே அதற்குக் காரணமாகும்.
ஆனால், உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்தால், ரஷியாவின் ஸ்டாலின், ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, கம்போடியாவின் போல்பாட் போன்ற சர்வாதிகாரிகளின் பட்டியலில், கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் இயல்பாகவே கலந்து விடுகிறார்.