
தமிழில் நவீன யுகத்தின் முன்னோடியாக விளங்கிய மகாகவி பாரதியார், தனக்கு முன்பிருந்த இரண்டாயிரமாண்டுக் காலத் தமிழ் இலக்கிய மரபை முழுவதுமாக கண்மூடித்தனமாக வழிபடுபவராக இருக்கவில்லை. விமர்சன நோக்குடனேயே அதனை அணுகினார். ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்’ என்று அவர் அளித்த தரவரிசை அதற்குமுன்பு வேறு யாரும் செய்திராதது. இந்த மூன்று கவிஞர்களையும்தான் தமிழிலக்கியத்தின் உச்சங்களாக மீண்டும் மீண்டும் பல கவிதைகளில் பாரதியார் முன்வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார். இவர்களோடு பாரதியார் பெரிதும் மதித்துப் போற்றிய மற்றொரு மகத்தான தமிழ்க்கவி என்றால் அது தாயுமானவர்தான்.
என்றும் இருக்க உளம்கொண்டாய்
இன்பத் தமிழுக்கு இலக்கியமாய்
இன்றும் இருத்தல் செய்கின்றாய்இறவாய் தமிழோடு இருப்பாய் நீ!‘ஒன்று பொருள்; அஃது இன்பம்’ எனஉணர்ந்தாய் தாயுமானவனேநின்ற பரத்து மாத்திரமோநில்லா இகத்தும் நிற்பாய் நீ!– தாயுமானவர் வாழ்த்து, பாரதியார்
தாயுமானவர் பாடல்களின் தத்துவச் செழுமையும், வாழ்க்கை நோக்கும், கவித்துவமும் பாரதியாரை முழுமையாக ஆட்கொண்டன. தமிழ்ச் சிந்தனை மரபில் இத்தகைய உயர் இடத்தை அவருக்கு பாரதி அளித்திருப்பதற்கு இதுவே காரணம். புதுச்சேரி வாசத்தின்போது, வெளிப்படையாக அரசியல், சமூக விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் வேதாந்த விசாரத்திலும் தத்துவ சிந்தனைகளிலும் மூழ்குவதாக பாரதியாரின் மனப்பாங்கு அமைந்திருந்தது. கவிஞர், அரசியல் செயல்பாட்டாளர், வேதாந்தி என்று பல முனைகளிலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அவர் உள்ளத்திற்குத் தாயுமானவரின் வாழ்க்கையும், அவரது பாடல்கள் பேசும் தத்துவங்களும், தெளிவையும் வழிகாட்டுதலையும் தந்திருக்கக்கூடும்.
வரலாற்றுப் பின்னணி:
தாயுமானவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் நிலையற்ற அரசாட்சிகளாலும், மாபெரும் அரசியல், சமூகக் குழப்பங்களாலும் சூழப்பட்டிருந்த ஒரு காலகட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைபெற்றிருந்த நாயக்க அரசுகள், இஸ்லாமிய நவாப்கள் மற்றும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் காலனியாளர்களின் தாக்குதல்களுக்கும் ஆதிக்கப் போட்டிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சீரழியத் தொடங்கியிருந்த காலம். மிகை அலங்காரங்களும் உயர்வு நவிற்சிகளும் ததும்பும் படாடோபமான சிற்றிலக்கியங்களையும் பிரபந்தங்களையும், மன்னர்களையும் ஜமீந்தார்களையும் மகிழ்விக்கும் கேளிக்கைப் பாடல்களையுமே தமிழ்ப் பண்டிதர்களும் கவிராயர்களும் புனைந்துகொண்டிருந்த காலம்.
இத்தகைய ஒரு சூழலில், கேடிலியப்ப பிள்ளைக்கும் கஜவல்லி அம்மையாருக்கும் இரண்டாவது குழந்தையாகத் தாயுமானவர் பிறந்தார். பிறந்த ஆண்டு, 1707ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. துல்லியமான தரவுகள் இல்லை. சிவபக்தி மணமும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த தாயுமானவர், திருச்சியில் பாடசாலை நடத்தி வந்த சிற்றம்பலத் தேசிகரை முதல் ஆசானாகக்கொண்டு இளம் வயதிலேயே தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த நூற்புலமை பெற்றார். கணிதம், ஜோதிடம், தர்க்கசாஸ்திரம் ஆகிய துறைகளிலும் தேர்ந்தார். அத்துடன், சைவாகமங்களையும், பன்னிரு திருமுறைகளையும், அருணகிரியாரின் திருப்புகழ் போன்ற நூல்களையும் கசடறக் கற்றார். பின்னாட்களில் அவர் புனைந்த தத்துவக் கவிதைகள் அனைத்திலும் அவரது ஆழ்ந்தகன்ற கல்வித்திறம் விளங்குவதனை அவற்றை வாசிப்பவர்கள் உணரமுடியும்.
கல்வியிலும், செல்வத்திலும் திளைத்திருந்தபோதும், இளைஞன் தாயுமானவனது மனம் அதில் நிலைகொள்ளவில்லை, சத்தியத்தைத் தேடியலைவதிலேயே அவருக்கு நாட்டம் இருந்தது. திருச்சி மலைக்கோட்டைப் பகுதியிலேயே அமைந்திருந்த சாரமாமுனிவர் மடம் என்னும் மௌனகுரு மடத்தின் சுவாமிகளிடத்தில் தீட்சை பெற்று வேதாந்த நூல்களையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகக் கற்றார். லௌகீக வாழ்வில் எந்த நாட்டமும் இல்லாபோதும், தந்தையின் மறைவிற்குப் பின் அவர் வகித்த உயர்பதவியை நிர்ப்பந்தத்தினால் ஏற்று, பற்றற்ற மனநிலையில் தனது கடமைகளைச் செய்து வந்தார். 1732ல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசின்றி மறைந்ததால், அவர் மனைவி ராணி மீனாட்சி பதவியேற்றார். அதற்குச் சிறிது காலம் பின்பு, தமது பதவியைத் துறந்து தாயுமானவர் ஊரைவிட்டு வெளியேறி இராமேசுவரத்தில் யோக நிஷ்டைகளைப் பயிற்சி செய்துகொண்டு வந்தார். காதல் விருப்புற்று தன்னை ஏற்குமாறு ராணி வேண்ட, அது முறையன்று என மறுத்து தாயுமானவர் வெளியேறியதாகவும் ஒரு வழக்கு உள்ளது. பிறகு, ராணி மீனாட்சி சந்தாசாகிப்பின் நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்டு அரசிழந்த சோகவரலாற்றுடன் தமிழ்நாட்டில் இந்து மன்னர்களான மதுரை நாயக்க வம்சத்தினரின் உறுதி மிக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.
தாயுமானவர் பின்னர் குடும்பத்தாரின் வேண்டுதலால் ஊர் திரும்பி, திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் சிலகாலம் வாழ்ந்திருந்தார். ஒரு குழந்தை பிறந்து, அதன்பின் மனைவியும் காலமானார். தாயும் இறைவனடி சேர்ந்தார். தனது மகனை அண்ணனின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தாயுமானவர் முறையாக சன்னியாசம் பெற்றார். மௌனகுரு மடத்தின் தலைவராகவும் இருந்தார். இறுதிக் காலத்தில் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டிணத்தில் வாழ்ந்து அங்கேயே 1737 தை மாதம் விசாகத்தன்று பூரணமெய்தினார். அவரது சமாதிக்கோயில் அங்கு இப்போது ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பாடல்கள்:
தாயுமானவர் தன் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது சீடரும் சிறிய தாயாரின் புதல்வருமான அருளைய பிள்ளை என்பவர் எழுதிப் பாதுகாத்து மற்ற சீடர்களுக்கும் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 1452 பாடல்கள் கிடைத்துள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் அவற்றின் உள்ளடக்கத்தை விளக்கும் உபதலைப்புகள் கொண்டு பகுக்கப்பட்டு ஒரே தொகுப்பாக உள்ளன.
இவற்றில் கணிசமான பகுதிகள், பத்துப்பாடல்களும் ஒரேவிதமான கடைசி அடி கொண்டு முடியும் பதிக வடிவில் அமைந்துள்ளன. இந்தக் கடைசி அடியின் வாசகங்களே மகத்தான ஆன்மீக அனுபவம் தரும் மகா மந்திரங்கள் என்னும்போது முழுப்பாடல்களின் மகத்துவம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பரிபூரணானந்தம்:
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்றபரிபூரணானந்தமே.மௌனகுரு வணக்கம்:மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்மரபில் வரு மௌனகுருவே.(மந்த்ரம் என்பது இறைவனின் அருட்சக்தி வாய்ந்த பெயரையும், தந்த்ரம் என்பது அதைக் கையாளவேண்டிய உபாயத்தையும் குறிக்கும்.)கருணாகரக் கடவுள்:கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடுகருணாகரக் கடவுளே.ஆனந்தமான பரம்:அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவாகிஆனந்தமான பரமே.சுகவாரி:சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரம்ஜோதியே சுகவாரியே. (சுகவாரி – சுகக்கடல்)எங்கும் நிறைகின்ற பொருள்:இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகிஎங்கும் நிறைகின்ற பொருளே.தேஜோமயானந்தம்:சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமேதேஜோமயானந்தமே.மலைவளர் காதலி:வரைராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை-வளர் காதலிப்பெண் உமையே.(மலைவளர்காதலி – பர்வதவர்த்தினி என்பதன் தமிழ் வடிவம்)
இவை தவிர்த்த வேறுசில பாடல் பகுப்புகள் அவற்றின் முதற்சொல்லை வைத்து அடையாளப் படுத்தப்படுகின்றன – பொன்னை மாதரை, எனக்கு எனச் செயல், பாயப்புலி, எடுத்த தேகம், கற்புறு சிந்தை, கல்லாலின் என்பது போல.
இதுவன்றி, இரண்டே அடிகளில் அமைந்த ‘கண்ணிகள்’ பலவற்றையும் தாயுமானவர் இயற்றியுள்ளார். திருக்குறள் போல சூத்திர வடிவில் அமைந்து ஆழ்ந்த உட்பொருளை விளக்கும் தன்மை கொண்டவை இவை. சில உதாரணப் பாடல்கள்:
பராபரக்கண்ணி:
எத்திக்கும் தானாகி என் இதயத்தே ஊறித்தித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே.நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பேமஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே.(பராபரம் – பரம்+அபரம்; மேலானதும், கீழானதும் இரண்டுமே ஆன இறைவடிவம்)
பைங்கிளிக்கண்ணி:
தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாதஎல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே.உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம்வள்ளல் அறிந்தால் எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே.எந்நாள் கண்ணி:பொய்க்காட்சி ஆன புவனத்தை விட்டு அருளாம்மெய்க்காட்சி ஆம் புவனம் மேவுநாள் எந்நாளோ.தர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டுநிற்கும் அவர் கண்டவழி நேர்பெறுவது எந்நாளோ.
தத்துவ நோக்கு:
தாயுமானவரின் தத்துவ நோக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் வேரூன்றிச் செழித்திருந்த சைவசித்தாந்தத்திலிருந்து முளைவிட்டு, அதேசமயம் அதன் வரம்புகளைத் தாண்டியும் வளர்ந்து தனக்கான ஒரு தனித்துவத்துடன் மிளிர்வது.
உபநிஷதங்களையும், ஆதிசங்கரரின் பாஷ்யங்களையும், ஆழ்ந்துகற்று அத்வைத வேதாந்தத்தின் தத்துவ சாரத்தை அவர் உவப்புடன் உள்வாங்கியிருக்கிறார். தாயுமானவர் பாடல்கள் அனைத்திற்கும் விரிவான உரையெழுதியவர் சுவாமி சித்பவானந்தர். அந்த உரைகளில் பல இடங்களில் உபநிஷத மந்திரங்களுக்கும் தாயுமானவர் பாடல்களுக்கும் நேரடியாக உள்ள ஒப்புமையை எடுத்துக் காட்டியபடியே செல்கிறார்1. “அடிகள் வடமொழியில் உபநிடதங்களையே நன்கு பயின்றனரென்று தெளிக. தமது நூலிலும் உபநிடத்துட்போந்த சைவக் கருத்துக்களையே வேதாந்தக் கருத்தாகவும் வேதக் கருத்தாக்கவும் கூறினார்” என்று தமது தாயுமானவர் வரலாற்று நூலில் கா.சுப்பிரமணிய பிள்ளை குறிப்பிடுகிறார்2.
யோக பூமிகள், அஞ்ஞான பூமிகள் எனப்படும் ஆழ்மன நிலைகள் குறித்த கருத்தாக்கங்கள் தாயுமானவர் பாடல்களில் வருகின்றன. இவை, யோகவாசிஷ்டம் (தமிழ் வடிவம் ஞானவாசிட்டம் என்று அழைக்கப்படுகிறது) என்ற மாபெரும் யோகநூலில் உள்ளவை. இதன் மூலம் அந்நூல் விரிவாகக் கூறும் சிக்கலான தத்துவ விளக்கங்களையும், பல்வேறு வகையான யோக, தியான முறைகளையும் அவர் பயின்றிருந்தார் என்பது புலனாகிறது. அகத்தியர், திருமூலர், போகர் முதலான சித்தர்களைக் கொண்ட தமிழகத்தின் பதினெட்டு சித்தர் மரபு, கோரக்நாதர் தொடங்கி ஒன்பது சித்தர்களைக் கொண்ட வடஇந்தியாவின் நவநாத சித்தர் மரபு ஆகிய இரண்டு மரபுகளையும் தமது பாடல்களில் அவர் குறிப்பிடுகிறார்.
“வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர் கணமே”
என்பது ‘சித்தர் கணம்’ என்ற பதிகத்தின் பாடல்களில் வரும் கடைசி அடியாகும். இதன்மூலம் வேதாந்தம், சைவ சித்தாந்தம், சித்தர்களின் யோகம் ஆகிய மூன்று மெய்ஞான மரபுகளின் இணைவே தனக்கு உவப்பான மார்க்கமாகும் என்று அவர் பிரகடனம் செய்கிறார். தாயுமானவரின் முழுமையான தத்துவ நோக்கைத் தெளிவாக வெளிப்படுத்தும் சொற்றொடர் இது. இத்தகைய தத்துவ இணைப்பு தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த ஒன்று. இதில் தாயுமானவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் குமரகுருபரர். (17ம் நூற்றாண்டு.) தாயுமானவரை முன்னேடியாகக் கொண்டு இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இராமலிங்க அடிகளார். (19ம் நூற்றாண்டு.)
மேற்கண்ட சொற்றொடரில் வரும் சமரசம் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, ஒரு சாரார் மிகவும் தவறான விளக்கங்களை அளிக்கிறார்கள். அதாவது, சமரசம் என்பது முரண்படுகிற இரு பிரிவினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவது. எனவே வேதாந்தம், சித்தாந்தம் என்ற இரண்டு பிரிவினருக்கிடையில் நிலவிவந்த பூசலைத் தீர்த்துவைக்கும் வகையில் இந்த வரியைத் தாயுமானவர் எழுதியிருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது சரியன்று.
சமரசம் என்பதற்கு இன்றைய நடைமுறைத் தமிழில் உடன்படிக்கை (agreement) என்ற பொருள் உண்டாகியிருக்கிறது. ஆனால், யோக மொழியில் அதற்குண்டான பொருள் அதுவல்ல. சமரசம் என்றால் ஒருமை உணர்வு அல்லது ஒன்றாகக் கருதுதல். “ஸமத்வம் யோக உச்யதே” (வேறுபடுவதாகத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே யோகம்) என்கிறது கீதை. “ஒன்றாகக் காண்பதே காட்சி, புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்” என்கிறது ஔவையார் பாடல். “ஸாமரஸ்ய பராயணா” (ஒருமையில் நிலைபெற்றவள்) என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. சமரச சுத்த சன்மார்க்கம் என்று வள்ளலார் கூறும்போதும் ஒருமை என்பதையே சுட்டுகிறார். எனவே, தாயுமானவர் அச்சொற்றொடரில் கூறுவது பூசல்களையும் சமரசங்களையும் பற்றிய வரலாற்றுக் குறிப்பு அல்ல. அவர் பேசுவது தெளிவான யோக மொழி.
இதே ரீதியில், பல தாயுமானவர் பாடல்கள், அதில் உறைந்துள்ள யோக, தத்துவ மொழி சார்ந்த பிரக்ஞையின்றி நேரடியாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்கு உரை எழுதப் புகுந்த சில தமிழறிஞர்களுக்கும், சமயப் புலவர்களுக்கும் போதிய தத்துவ இயல் பயிற்சியும், சம்ஸ்கிருதப் புலமையும் இல்லாததே இதற்குக் காரணம்.
வாழ்க்கை நெறி:
தாயுமானவரின் ஆன்மீகம் என்பது அறிதலின் சிக்கல்களுக்குள் புகுந்து துழாவும் தத்துவங்களுக்குள் மட்டும் அடங்கி விடுவதல்ல, வாழ்க்கையின் போரட்டங்களை நேரடியாக நடைமுறையில் எதிர்கொள்வது. அறிதலின் உயர்நிலையை அடைந்த ஞானியின் மனம் போலித்தனங்களும் விருப்பு வெறுப்புகளும் அற்ற அற்ற தூய உள்ளமாக இருக்கும். அவரது ஆன்ம ஞானம் அனைத்து உயிர்களின் மீதான அன்பாகவும், அருளாகவும், கருணையாகவும் வெளிப்படும் என்பது இந்து ஞான மரபின் அனைத்து குருமார்களும் காட்டிச் சென்ற வழியாகும். தாயுமானவரின் வாழ்விலும் உபதேசங்களிலும் இதைத் தெளிவுபடக் காண்கிறோம்.
‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’
என்பது தமிழில் எழுதப்பட்ட என்றென்றைக்குமான மகத்தான வாசகங்களில் ஒன்று.
எங்கெங்கே நோக்கிடினும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கிருப்பது நீ அன்றோ பராபரமே.
எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் உன்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.
எங்கெங்கே நோக்கிடினும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கிருப்பது நீ அன்றோ பராபரமே.
எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் உன்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.
தாயுமானவர் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தான் எழுதிய இந்த வரிகளுக்கு இலக்கணமாகவே அவர் வாழ்ந்தார் என்பதை உணர்த்துகின்றன.
அவர் சம்பிரதியாக அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் அரசாங்கப் பத்திரங்களை வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பத்திரங்களைக் கைகளால் கசக்கித் தூள்தூளாக்கினார். அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் தடுமாற்றமடைந்தனர். உடனே “திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரியின்
துகிலில் பற்றிய தீயைக் கசக்கி அணைக்க முயன்றேன். என்னையறியாது இந்தப் பத்திரம் பாழாகி விட்டது குறித்து வருந்துகிறேன்” என்று தாயுமானவர் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து திருவானைக்காவல் கோயிலிலிருந்து அரண்மனைக்கு ஒரு செய்தி வந்தது. தீபாராதனையின் போது கற்பூரம் லேசாகத் தவறி விழுந்து அம்பிகையின் ஆடைமீது விழுந்து தீப்பற்றிக் கொண்டதாகவும், அர்ச்சகர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை அணைத்ததாகவும் நல்லவேளையாக பெரிய தீவிபத்து நிகழாமல் காப்பாற்றப்பட்டதாகவும் செய்தி கொண்டு வந்தவர்கள் கூறினர். இதன்மூலம் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போதும் தாயுமானவரது மனம் எப்போதும் இறைவனிடத்திலேயே ஈடுபட்டுள்ளதால் அவரது உள்ளுணர்வுக்கு இந்த விஷயம் தோன்றியிருக்கிறது என்று அரண்மனையில் இருந்தவர்கள் எண்ணி வியப்படைந்தனர்.
தாம் உயர் அதிகாரியாக வலம்வந்த அதே திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறங்களில் துறவியாகக் கௌபீனம் தரித்து பிச்சை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார் தாயுமானவர். பனிவிழும் அதிகாலையில் அவர் வெற்றுடம்புடன் கண்மூடி அமர்ந்திருந்ததைப் பார்த்து மனம் கலங்கிய ஊர்ச் செல்வந்தர் ஒருவர் விலையுயர்ந்த சால்வையை அவர்மீது போர்த்தி வணங்கிவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அதே சால்வையை ஒரு இளம் வேலைக்காரி அணிந்துகொண்டு நடமாடினாள். அவள் அதை எங்கிருந்தோ திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, பரதேசி ஒருவர் தனக்கு அதை அளித்தார் என்று அவள் கூறியதை யாரும் நம்பவில்லை. அந்தப் பரதேசியிடமே போய் விசாரிப்போம் என்று தாயுமானவரிடம் வந்து கேட்டனர். “அன்னை அகிலாண்டேஸ்வரி அன்றொரு நாள் குளிரில் நடுங்கிக் கொண்டு வந்தாள். என்னிடமிருந்த சால்வையை அவளுக்குச் சார்த்தினேன்” என்று அவர் பதிலளித்தார். பாரதியார் வாழ்க்கையிலும், இதே போன்று தனக்குப் போர்த்திய சால்வையை வண்டிக்காரன் ஒருவனுக்கு அளித்துவிட்டு வீட்டுக்கு வந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னிலை உணர்ந்த ஆத்மஞானிக்கு, யோகமும் போகமும், இல்லறமும் துறவறமும், செயலும் செயலின்மையும் எல்லாம் ஒன்றுதான், அவற்றின் பயன்கள் அவனைக் கட்டுப்படுத்துவதில்லை என்று கீதை கூறும் வாழ்க்கை நெறியை ஏற்பவராகத் தாயுமானவர் இருந்தார். தனது பகவத்கீதை மொழிபெயர்ப்புக்கு எழுதிய விரிவான முன்னுரையில் இதுகுறித்து ஒரு அழகிய தாயுமானவர் பாடலை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் பாரதியார்.
கவித்துவம்:
தாயுமானவரின் தத்துவ நோக்கு போன்றே அவரது கவித்துவமும் தனித்தன்மை கொண்டது. அவரது சொல்லாட்சிகள் அபாரமான அழகும், வீரியமும் பொருளாழமும் கொண்டவை. 18ம் நூற்றாண்டின் பொதுவான தமிழ்நடையிலேயே சம்ஸ்கிருதச் சொற்கள் மிக அதிக அளவில் புழங்கின. அப்படியிருக்கையில், தத்துவப் பொருளைப் பேசவந்த தாயுமானவரின் கவிதைகளிலும் சம்ஸ்கிருதச் சொற்கள் கொஞ்சம் அதிக அளவில் பயின்று வருவது ஆச்சரியமல்ல. ஆனால், இந்த வடசொற்பெருக்கு அவரது தமிழ்க் கவிதையின் ஜீவனைப் பாதிக்காத வகையிலும், அதைச் சிடுக்காக்காத வகையிலும் அமைந்துள்ளது கவனத்திற்குரியது. சம்ஸ்கிருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் அமைந்துள்ள வைணவ வியாக்யானங்களை இன்று சாதாரணத் தமிழ் வாசகர்கள் படித்துப் புரிந்து கொள்வது மிகக் கடினம். ஆனால், தாயுமானவரின் பாடல்கள் அதன் இயல்பான அழகினாலும் கவித்துவத்தினாலும் இன்றைக்கும் அனைத்துத் தமிழர்களும் படித்து இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
தாயுமானவரின் ஒரு புகழ்பெற்ற பாடலை (அறுசீர் விருத்தம்) வழக்கமாக பழந்தமிழ்ப் பாடல்களை எழுதும் முறையில் இல்லாமல், பொருளுக்கேற்றபடி மடக்கி எழுதிக் கீழே அளித்திருக்கிறேன்.
கல்லாத பேர்களே நல்லவர்கள்
நல்லவர்கள்
கற்றும் அறிவில்லாதஎன் கர்மத்தை என்சொல்கேன்மதியை என் சொல்லுகேன்கைவல்ய ஞான நீதி நல்லோர் உரைக்கிலோகர்மம் முக்கியம் என்றுநாட்டுவேன்கர்மம் ஒருவன் நாட்டினாலோபழைய ஞானம் முக்கியம் என்றுநவிலுவேன்வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும்த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்வல்ல தமிழறிஞர் வரின்அங்ஙனேவடமொழியின் வசனங்கள்சிறிது புகல்வேன்வெல்லாமல்எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தைஎன் முத்தி தருமோவேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்றவித்தகச் சித்தர்கணமே.
மெய்யறிவு ஒன்றே முக்தியளிக்குமே அன்றி, வெற்றுத் தர்க்கங்களால் பயனொன்றுமில்லை என்பதைக் கூறவருகிறது இந்தக் கவிதை. இந்த ஆன்மீகமான கருத்தைத் தாண்டி, இக்கவிதையிலுள்ள அங்கதமும் பகடியும் சுய எள்ளலும் கலந்த தொனி ரசனைக்குரியது.
இத்தகைய பன்முகப் பான்மைகள் கொண்ட தாயுமானவர், பாரதியார் போன்ற ஒரு கூர்மையான சிந்தனையாளரை, வசீகரித்ததில் ஆச்சரியமே இல்லை. ஆனால், புதிய நூற்றாண்டில் பிரவேசித்துக் கொண்டிருந்த இந்தியாவின் நவீனக் கல்விமுறையில் தாயுமானவர் போன்ற மகான்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தியாவின் இளைய தலைமுறைகள் வளர்கிறார்களே என்ற பெரிய கவலை அவருக்கு இருந்தது. ‘நமது கல்விமுறை’ என்ற கட்டுரையில் அதனை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:
”நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள். அவர்கள் நவீன காலத்துப் புதுமைகள் சிலவற்றை அறியாவிடினும் ஒவ்வொரு விஷயத்தில் மிகவும் அருமையான உயர்வு பெற்றவர்களாயிருக்கக் கூடுமென்று நம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. நம் காலேஜ் மாணாக்கர்களுக்குள்ளே தாயுமானவர், சங்கரர் முதலியவர்களின் சரித்திரத்தை உணராதவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ இருக்கிறார்களல்லவா?
தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்.”
பாரதியாரின் இந்த விசனம் இன்றும் பொருள் பொதிந்ததாகவே உள்ளது என்பது தான் சோகம்.
*****
சான்றுகள்:
[1] ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்கள் – சுவாமி சித்பவானந்தர் உரையுடன், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை (1988)
[2] தாயுமான சுவாமி வரலாறும் நூலாராய்ச்சியும் – கா.சுப்பிரமணிய பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1977)
Thank you, hailing from Trichy, have been to the mauna guru matam and knew a swami there. He used to come to our house to take vilva leaves. Happy to see the connection between the matam and Thayumanaswamy. Was he named so after the presiding deity of the Rockfort Temple?