Posted on Leave a comment

வலம் ஏப்ரல் 2017 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் ஏப்ரல் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

Posted on Leave a comment

நினைவு அலைகள்: ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் – சுஜாதா தேசிகன்

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன், TSS Rajan (1880–1953). வடகலை ஐயங்கார். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து, சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பிறகு பணி நிமித்தம் ரங்கூனுக்குச் சென்று கஷ்டப்பட்டு, மேல்படிப்புக்காக லண்டன். இந்தியா வந்த பிறகு ஏழைகளுக்கு மருத்துவம், ராஜாஜியுடன் நட்பு, காந்தியுடன் பழக்கம். உப்பு சத்தியாகிரம் – 18 மாதம் சிறை, மந்திரிப் பதவி, விவசாயம் என்ற அவர் வாழ்க்கைப் பயணம் முழுக்க புஃபே சாப்பாடு மாதிரி வரலாற்றுக் குறிப்புகள் பரவிக் கிடக்கின்றன.

“Autobiography is probably the most respectable form of lying” என்பார்கள். பழைய சுயசரிதை என்றால் அதன்  ‘இங்ரெடியண்ட்ஸ்’ என்று நாம் நினைப்பது – கொஞ்சம் பொய், நிறைய சலிப்பு, புரியாத தமிழ். ஆனால் ராஜன் அவர்களின் சுயசரிதை அப்படி இல்லை. இன்று வந்த தினத்தந்தி மாதிரி எல்லோரும் படிக்கக் கூடிய தமிழில் எளிமையாக இருக்கிறது. பொய் கலக்காத அக்மார்க் சுயசரிதை. டைரிக் குறிப்பு போல இல்லாமல்,  ‘நினைவு அலைகளாக’ அவர் அனுபவத்தைக் கொண்டு பல  ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளை’ உருவாக்க முடியும்! இதுதான் இந்தப் புத்தகத்தின் Unique Selling Point.

ஸ்ரீரங்கத்தில் தன் பள்ளி நாட்களை விவரிக்கும் இடங்களில் ஒரு குழந்தையாக எழுதியிருக்கிறார் ராஜன். வாத்தியார் ஒருவர் அவரை அடித்துக்கொண்டே இருப்பது, வெள்ளைக் கோபுரம் கருப்பாகக் காட்சியளித்தது, அதில் ஒரு பொந்தில் கிளியைப் பார்க்க ஏணி போட்டு பொந்தில் கைவிட, அது கடிக்க, ரத்தம் வந்த அனுபவம். வகுப்பிலிருந்து வந்து கிளியைப் பார்க்க அடிக்கடி “சார் ஒண்ணுக்கு” என்று சாக்கு சொல்லுவது. ஷேசராயர் மண்டபத்தில் இருக்கும் குதிரையின் மீது ஏறி சவாரி செய்து பள்ளிக்குத் தாமதமாகப் போனது என்று ஸ்ரீரங்கத்தை முழுவதும் அனுபவித்திருக்கிறார்.

பள்ளிக்கூடம் என்றால் மேஜை நாற்காலி, பலகை என்று நினைப்போம். ராஜன் படித்த காலத்தில் மணல் மீது உட்கார்ந்து, மணல் மீது எழுதும் பள்ளிக்கூடம். சித்திரைத் தேர் மீது ஏறும் படிக்கட்டுக்குக் கீழே நிழலாக இருக்கும் இடம்தான் பள்ளிக்கூடமாம்.

நூறு வருடத்துக்கு முன்பே ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிக்குப் பலர் கடைவிரித்திருக்கிறார்கள். பட்டாணியும் வேர்க்கடலையும் வறுக்கும் வாசனை ராஜனைச் சுண்டி இழுக்க பட்டாணிக் கடையைச் சுற்றிசுற்றி வந்திருக்கிறார். வீட்டிலிருந்து பாட்டிக்குத் தெரியாமல் நெருப்பும் தண்ணீரும் கொடுத்து பட்டாணிக்காரருக்கு உதவி செய்தும் ஒரு பிடி பட்டாணி கூடக் கிடைக்கவில்லையாம். வீட்டில் கேட்டால் வாங்கித் தர மாட்டார்களாம். ஏன் என்ற காரணத்தை இப்படிக் கூறுகிறார்.

“ஸ்ரீரங்கம் பிராமணர்கள் பெருத்த ஊர். பூணூல் போடாத சிறுவர்களும், கல்யாணமாகாத சிறுமிகளுமே வறுத்த பட்டாணியை வாங்கலாம். மற்றவர்கள் வாங்க மாட்டார்கள். வைதீகம் பழுத்த வீடுகளில் பட்டாணியைத் தொடமாட்டார்கள்.”

கடைசியில் அவர் பட்டாணி எப்படிச் சாப்பிட்டார் என்ற சுவாரசியமான கதை புத்தகத்தில் உள்ளது.

ராஜன் குடும்பம் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அஹோபில மடத்தில் இரண்டு அறைகளில் வாடகை இல்லாமல் குடித்தனம் நடத்தியிருக்கிறார்கள். புரட்டாசி உற்சவத்தின்போது அஹோபில மடத்தில் இருக்கும் ஸ்வாமி தேசிகன் வெளியே வரக் கூடாது என்ற நீதிமன்ற உத்திரவு பற்றிக் குறிப்பிடும் ராஜன், யாரோ ஒரு வெள்ளைக்காரத் துரை சொன்ன தீர்ப்பை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இரு கலையாரும் கட்டுப்படுவது வேடிக்கை என்கிறார்.

“ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியப் பரம்பரையில் இருகலையார்களும் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு ஒற்றுமை இருந்தும் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற பெரிய விஷ்ணு ஷேத்திரங்களில் இரு கூட்டத்தினருக்கும் விவாதம் ஓயாமல், நீதிமன்றத்து நடவடிக்கைகள், கிரிமினல் வழக்குகள், சிவில் வழக்குகள்… வக்கீல்களுக்கும் இதனால் நல்ல வருமானம். கோர்ட்டுகளுக்கு வேலையும் வருமானமும். கட்சிக்காரர்களுக்குப் பொய்ச்சாட்சிகள்… வைஷ்ணவ மதமோ கொள்கையோ, இந்து மதமோ ஆசாரமோ இன்னதென்று கனவு காண்பது கூட இல்லாத… முஸ்லீம், கிறிஸ்துவ நீதிபதிகளிடத்து நியாயம் கோருவதற்கும் பின்வாங்கமாட்டார்கள். இந்த கோஷ்டிச் சண்டைகளில் பெரும்பாலோர் பழையகாலத்து மடிசஞ்சிகள்.”

புரட்டாசி உற்சவத்தில் கிடைக்கும் புளியோதரைக்காக இரண்டு மணி நேர ‘சேவா காலத்’தையும் கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். அதேபோலக் கோயிலில் கிடைக்கும் தோசை, வடை பிரசாதத்துக்கு ஆசைப்பட்டு, ஆழ்வார், ஆசாரியர்களை தோளில் தாங்கும் ‘ஸ்ரீபாதம் தாங்குவார்’1 ஆக (ஸ்ரீபாதம் தாங்குவாருக்கு உத்தரவாதமாக தீர்த்தம், பிரசாதம் கிடைக்கும்!) இருந்திருக்கிறார்.  அதனால் இவரை ‘ஆழ்வார் தூக்கி’ என்று பள்ளியில் ஏளனம் செய்திருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் அவர் தனக்கு “நல்ல தமிழ் அறிவு பெருப்பாலும் இளவயதில் பாசுரங்களைக் கேட்ட பழக்கத்தினால் உண்டானது” என்கிறார். எழுத்தாளர் சுஜாதாவும் இதையே சொல்லியிருக்கிறார். தமிழை வளர்ப்பதற்குப் பக்தி இலக்கியம்தான் சரியான வழி என்று தோன்றுகிறது.

‘குமாஸ்தாவாக ஆனால் போதும்’ என்று இவர் அப்பா சொல்ல, இவரோ சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து,  ‘ராக்கிங்’ அனுபவித்திருக்கிறார். ‘ராக்கிங்’ நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கிறது என்றும், இன்றும் தொடர்கிறது என்றும் தெரிகிறது. வெள்ளைக்காரர்களால் நம் நாட்டுக்கு வந்த இன்னொரு கெட்ட விஷயம் இது.

மருத்துவப்படிப்பு முடித்த பின் அரசாங்கக் கடனை அடைக்க ரங்கூனுக்கு (பர்மா) மனைவி குழந்தைகளுடன் சென்று, அங்கே மருத்துவமனையில் பலர் சாகக் கிடக்கும் இடத்தில்  “இன்னிக்கு எவ்வளவு பேர் செத்தார்கள்?” என்று கணக்குப் பார்க்கும் வேலை. மலம், மூத்திரம் போவதற்கு வசதியாக ஓட்டை போட்ட மரக் கட்டிலில் படுத்துக்கொண்டு இன்னிக்கோ நாளைக்கோ என்று இருக்கும் நோயாளிகள் கீழே மலமும் மூத்திரமும் ஓடிக்கொண்டு இருக்க… என்று விவரிக்கும் இடங்கள் எல்லாம் நம்மைக் கலங்க செய்கின்றன.

தன் கல்யாணம் வெகு விமர்சையாக நடக்கவேண்டும் என்று கனவு காண்கிறார். தினமும் பெண் வீட்டுக்குமுன் பந்தல் போடுகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்க, பெண் வீட்டாரோ கல்யாணத்துக்கு ஒருநாள் முன்பு கூடப் பந்தல் போடவில்லையாம். பெண் வீட்டுக்குச் சென்றபோது ‘யார், மாப்பிளையா?’ என்று தூக்கக் கலத்துடன் இவரை வரவேற்றிருக்கிறார்கள். பெண் லட்சணமாக இருந்தது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

மருத்துவ மேல்படிப்புக்கு லண்டனுக்குக் கப்பல் பயணம், கிடைத்த நண்பர்கள், சாப்பாடு என்று பயணக் குறிப்புக்களை மிக விரிவாக எழுதியுள்ளார்.

சைவம் என்பதால் இவர் கப்பலில் அதிகம் சாப்பிடவில்லை. கிட்டதட்ட உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். தற்போது உண்ணாவிரத மகிமையைப் பலர் எழுதுகிறார்கள் ஆனால் 1947ல் அதுவும் மருத்துவராக இவர் எழுதியிருப்பது மிகுந்த நம்பிக்கையைத் தந்தது.

“மனிதன் உடல் வளர்ப்பதற்காகத் தேவையான உணவு மிகவும் சொற்பம். அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் சற்றேறக்குறைய ஒரே அளவுதான் உண்ணக்கூடும். பொருள் உடையவன் பல வகைப்பட்ட உணவை அடிக்கடி சாப்பிட்டபோதிலும் அது நாவிற்கு மட்டிலும் ருசிப் பழக்கம் அதிகரிப்பதைத் தவிர வேறு குணம் இல்லை. உண்ணாவிரதம் இருப்பது மனிதர்களுக்கு ஏற்பட்ட பழக்கங்களில் ஒன்று. அது மதக் கோட்பாடு, அநுஷ்டானம் இவைகளையொட்டிக் கையாளப்பட்டு வருகின்றது. பட்டினி சுக வாழ்வு தரும் என்பதை இன்னும் உலகம் அறியவில்லை. வியாதியின் நிமித்தம் மருத்துவர்கள் உணவைக் குறைத்து வைத்தியம் செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான். உடல் உழைப்பு அதிகமின்றி மூளை வேலை அதிகம் உள்ளவர்களுக்குக் குறைந்த உணவு தேக ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதோடு, மற்ற நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.”

லண்டனில் தெருக்கள் குப்பையாகவும், எல்லோரும் எச்சில் துப்பிக்கொண்டும் இருந்தார்கள் என்று அவர் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது. லண்டனில்  ‘கறுப்பர்கள்’ நடத்தப்பட்ட விதம் பற்றியும் எழுதியுள்ளார். ஓர் ஆங்கிலேயத் தம்பதியின் நட்பு கிடைக்கிறது. பரஸ்பரம் உதவி செய்துகொள்கிறார்கள்.

திரும்பி இந்தியா கிளம்பும் முன் அந்த ஆங்கிலப் பெண்  “எனக்குக் கல்யாணம் ஆகாமல் நீங்களும் தனியாளாக இருந்தால் உங்களைத்தான் கல்யாணம் செய்துகொண்டிருப்பேன்” என்று சொன்ன பகுதிகள் ரசமானவை. இந்திய விடுதியில் நடக்கும் ரகசியக் கூட்டம் ‘ஹேராம்’ படத்தின் சில காட்சிகளை நினைவுபடுத்தியது.

இந்தியா வந்த பிறகு ‘கடல் தாண்டி’ சென்ற காரணத்துக்காக இவரை ஜாதிப் பிரஷ்டம் செய்து, பிராம்மண்யத்தை இழந்துவிட்டார் என்று கூறுகிறது ஐயங்கார் சமூகம்.

“என் சுற்றத்தார், உறவினர்,பெற்றோர்கள் உட்பட யாரும் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைக்கவோ நான் தங்கியிருக்கும் இடம் வந்து என்னுடன் உண்டு களிக்கவோ மனம் துணியவில்லை. எங்கே தங்களையும் ஜாதியை விட்டு ஊரார் நீக்கிவிடுவார்களோ என்ற பயம். வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போவதோடு நின்றுவிட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை” என்று தன் கொடுமையான அனுபவத்தை விவரிக்கிறார்.

இன்று ஸ்ரீரங்கத்தில் வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவிலோ, சிங்கப்பூரிலோ, லண்டனிலோ இருக்கிறார்கள். ஜீயர், அரையர் வீட்டில் கூடப் பலர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். ஏன், பெருமாளே கூட பிட்ஸ்பர்க் பார்த்துவிட்டார்.

அந்தக் காலத்தில் பரண்யாசம்2 செய்துகொள்ள வேண்டும் என்றால் ஜீயரைச் சேவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தகவல் எனக்கு புதுசு. ராஜன் அவர்களின் அப்பா அஹோபில ஜீயரிடம் தனக்கு பரண்யாசம் செய்துகொள்ள விண்ணப்பிக்க, “உன் மகன் கடல் தாண்டிவிட்டான், நீயும் உன் மகனுடன் சேர்ந்து இருக்கிறாய்” என்று ஜீயர் மறுத்துவிட, ராஜனின் அப்பா ஜீயரைக் கண்டபடித் திட்டிப் பேசிவிட்டு வந்துவிடும் இடங்கள் ஆச்சரியமானவை.

ஒதுக்கிவைத்த காலகட்டத்தில் இவர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய முற்படுகிறார். ஆனால் வாத்தியார், சமையல் செய்பவர் யாரும் கிடைக்கவில்லை. பணம் அதிகம் கொடுத்து ஏற்பாடு செய்கிறார். இவர் வீட்டுக்கு வந்த வாத்தியார் பிரம்மாவுக்கு ‘லண்டன் பிரம்மா’ என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது; சமையல் செய்ய வந்தவருக்கு ‘லண்டன் சண்முகம்’ என்ற பெயர். இவர் உதவியால் சித்திரை தெருவுக்கு வந்த புது வேதாந்த தேசிகனுக்கு ‘லண்டன் தேசிகன்’ என்ற திருநாமம்!

எந்தக் காலத்திலேயும் மாமியார், மருமகள் மனஸ்தாபம் இருந்திருக்கிறது. கணக்கு ராமானுஜன் வாழ்கையிலும் இதைப் பார்க்கலாம். ராஜன் அதை முழுக்க விவரிக்காவிட்டாலும், சில இடங்களில் தெரிகிறது. ராஜனின் பெண் கல்யாணத்துக்கு அவருடைய சொந்த அம்மாவே வராததற்குக் காரணம் ‘தன் மனைவி மீது இருந்த பொறாமை’ என்கிறார்.

‘கலிகால அயோத்தி’ என்ற அத்தியாயம் முழுவதும் இவர் அயோத்திக்குச் சென்ற யாத்திரை பற்றி எழுதியிருக்கிறார். சில விஷயங்கள் மிகத் தைரியமாக சொல்லுகிறார் உதாரணத்துக்கு ஒரு பகுதி:

“அயோத்தியில் அவசியம் தரிசிக்கவேண்டிய இடம் ராம ஜனன ஸ்தானம். ..பிற்பகல் அங்கே சென்றேன். …ராமன் அவதாரம் செய்த ஸ்தலத்தைத் தரிசிக்க வேண்டியது எனது கடமை என நினைத்து. …ஊருக்கு வெளியே சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் ஒரு மசூதி தென்பட்டது. அதைக் கடந்து சென்று அதன் பின்புறத்தில் பத்தடிச் சதுரமுள்ள ஒரு சிறு கட்டடத்தைப் பார்த்தேன். அந்த அறையின் தளம் பூமி மட்டத்திற்குக் கீழே இறக்கிக் கட்டப்பட்டு இருள் மண்டிக் கிடந்தது. …இந்த அற்பமான இருட்டில்தான் தசரதச் சக்கரவர்த்தியின் மனைவி ராமனை ஈன்றெடுத்து வளர்த்திருப்பாள்? பார்ப்பவர் நகைக்கும்படியான ஓர் இடத்தில்… என்னை அறியாமலே என் கண்களில் நீர் ததும்பியது. …ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமது நாட்டில், நமது மதத்தில் பிறந்து வளர்ந்துவந்த நம் சகோதரர்களைக் கோடிக்கணக்காக வேறு மதத்திற்குப் புகச் செய்து இழந்தோம். இழந்தது மட்டுமல்லாமல், அவர்களே நம் கோயில்களையும், புண்ணிய க்ஷேத்திரங்களையும், தெய்வங்களையும் ஹதம் செய்ய, நாம் பயந்து வாளா இருந்து வந்திருக்கிறோம். வட இந்தியாவில் எங்கே சென்று பார்த்தாலும், நம் புனித ஸ்தலங்கள் இடிக்கப்பட்டு, பாழாக்கப்பட்டு, அந்த இடத்திலேயே மசூதிகள் கட்டப்பட்டு…
இவ்வளவு கொடுமைக்கு ஆளாகியும், நாம் துவேஷம் கொள்ளாமல் கூடியமட்டும் சேர்ந்து வாழ்ந்துவருகிறோம்.

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை நாட்டிற்கு அவசியம். அதற்காக எவ்வளவு விட்டுக்கொடுக்கமுடியுமோ அவ்வளவு விட்டுக்கொடுக்க வேண்டியதும் நமது கடமை. இருந்தபோதிலும் நம் நாட்டினர் அநுபவித்திருக்கும் இன்னல்களையும் அவமானங்களையும் பார்க்கும்பொழுது மனம் வாடாமல் இருக்க முடியாது…”

இவர் மருத்துவமனையை காந்தி திறந்துவைக்கும் முன் காந்திக்கு ஏற்பட்ட நெருக்கடி, ஆனால் காந்தி ‘வாக்கு கொடுத்துவிட்டேன்’ என்று திறந்து வைத்த சம்பவம், ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்குத் தலைமை தாங்கி அதனால் இவருக்கும் பிராமண சமூகத்துக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள், காங்கிரஸ், அரசியல், மந்திரிப் பதவி, சட்டசபை அனுபவங்கள், தன் முதல் மகளுக்குக் கல்யாணம் செய்தபின்பு, தனக்கு ஓர் ஆண் குழந்தையை பிரசவித்துவிட்டு மனைவி இறந்துவிட, சில மாதம் கழித்து ஆண் குழந்தையும் இறந்து… இவ்வளவும் ஒருவர் வாழ்கையில் நடந்திருக்கிறது என்று படிக்கும்போது பிரமிப்பே மிஞ்சுகிறது. தம் மனசாட்சிக்கு எது சரியோ அதைச் செய்திருக்கிறார் ராஜன்.

கடைசியாக இவர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, எதுவும் வேண்டாம் என்று கிராமத்தில் விவசாயம் செய்ய முற்படுகிறார்

“பிரபல வைத்தியனாக இருந்து காங்கிரஸில் ஈட்டுப்பட்டு சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்கப் பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சிலகாலம் உத்தியோகம் வகித்த நான், முதுமைப் பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்தக் கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உத்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை… அந்த ஊர் வேசிகளுக்குக் கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை…”

உப்புச் சத்தியாகிரகத்தில் ஈட்டுப்பட்டுச் சிறையில் இருந்த அனுபவம் திரைப்படக் காட்சிகளுக்கு நிகரானவை.

“கோயம்புத்தூர் மத்தியச் சிறையின் கிணற்றுத் தண்ணீர் மருந்து குடிப்பதைப் போல இருக்கும். அந்த தண்ணீரைக் குடித்துப் பழகுவதற்கு எனக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆயிற்று. நான் இரவில் தாகத்திற்காகக் குடிப்பதற்கு நல்ல தண்ணீரென்று எண்ணி அந்த ஜெயில் தண்ணீரை எனது அலுமினியம் கூஜாவில் நிரப்பிவைப்பது வழக்கம். பாதி ராத்திரிக்குப் பிறகு அந்தக் கூஜா சொம்பிற்குள் வெடிக்கும் சப்தம் கேட்கும். விடியும் வரையில் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவையாகச் சிறு வெடிச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்…”

அந்தத் தண்ணீரில் அப்படி என்ன விசேஷம் என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கிப் படியுங்கள்.

கல்கி முன்னுரையில், “மனைவியை அழைத்துக்கொண்டு சர்க்கார் கடனைக் கழிக்கப் பர்மாவுக்குச் சென்றார். நானும் அவருடன் கூடச் சென்றேன். …மேலதிகாரியின் மேல் கண்ணாடிக் குவளையையும் தர்மாமீட்டரையும் வீசி எறிந்தார். நானும் பக்கத்திலிருந்த கண்ணாடி வெயிட்டைத் தூக்கி எறிந்தேன். மாஜிஸ்திரேட் அவரை ‘வெறும் சப்ஆஸிஸ்டெண்ட் சர்ஜன்’ என்று சொன்னபோது அவருக்கு வந்த ஆத்திரத்தைவிட எனக்கு அதிகம் வந்தது… அவர் கப்பலில் ஏறினபோது நானும் டிக்கெட் இல்லாமல் ஏறிவிட்டேன்.”

ராஜன் அவர்கள் வாழ்ந்த இல்லம் இன்னும் திருச்சியில் இருக்கிறது. அடுத்த முறை திருச்சி சென்றால் நிச்சயம் பார்த்துவிட்டு வாருங்கள்.

—-
நினைவு அலைகள்
சந்தியா பதிப்பகம்
சென்னை
முதற்பபதிப்பு – 1947
விலை ரூ225/
—-
அடிக்குறிப்பு:

1. ஸ்ரீபாதம் தாங்குவார் –   பல்லக்கில் பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்களை “ஸ்ரீபாதம் தாங்குவார்” என்று அழைப்பர்.
2. பரண்யாசம் – வடகலைப் பிரிவினரின் சரணாகதி சம்பிரதாயம்.

Posted on Leave a comment

ISRO: திசை கண்டேன், வான் கண்டேன் – ஜெயராமன் ரகுநாதன்

வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் பண்பாடு அமெரிக்காவிலும் இருக்கிறது என்பதை ISRO ஃபிப்ரவரி மாதம் ஒரே ராக்கெட்டில் 104 சாடிலட்டுகளை வானில் செலுத்திய நிகழ்ச்சியின்போது தெரியவந்தது.

“நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்” என்று ஒப்புக்கொண்ட அமெரிக்கப் பாதுகாப்பு இயக்குநர்ம டான் கோட்ஸ் (Dan Coats) அவசரமாக, “ அமெரிக்கா இந்த விஷயத்தில் பின்தங்கிவிடக்கூடாது” என்னும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.1

பொழுதுபோகாமல் கபடி, கில்லி ஆட்டத்துக்கெல்லாம் போராட்டம் நடத்தும் தமிழர்களின் மனதில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகம் இடம் இல்லை. “ஒரே ராக்கெட்டுல 104 செயற்கைக்கோள்களை விண்ணுல செலுத்தியிருக்காங்கப்பா நம்ம வானிலை ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிங்க!” “ஓ அப்படீங்களா! சரி, அந்த தனுஷ் கேஸ் என்னாச்சி?”

இந்த ரீதியில் வம்பு விசாரிக்கக் கிளம்பிவிட, ஊடகங்களும் ‘ஆமாம் வாஸ்தவம்தான்’ என்று முடித்துக்கொண்டு ஜெ தீபா பேரவை நிகழ்ச்சிகளை நொடிக்குநொடி விறுவிறுப்புக் குறையாமல் காண்பிக்க, வண்டிகளையும் நிருபர்களையும் அனுப்பிவிட்டனர்.

உலக விஞ்ஞான நிகழ்வுகளில் ISROவின் இந்த சாதனை ஒரு மைல்கல். இதற்கு முன்னால் ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களையும் அமெரிக்கா 28 செயற்கைக்கோள்களையும் மட்டுமே அனுப்பியிருக்கின்றன. உலகமே இப்போது ஆச்சரியமாக இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகளைத் திரும்பிப்பார்க்கிறது என்பது நிச்சயம் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்.

சமீப காலமாகவே விண்வெளி சமாசாரம் என்பது பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இது வெறும் வானிலை ஆராய்ச்சி விஷயமோ அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்போ இல்லை. அதையெல்லாம் மீறி, தேசியப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களும் இன்னும் பல முக்கியமான காரணிகளும் இதில் இருக்கின்றன. முக்கியமாக, மனிதனை வான்வெளிக்கு அனுப்பிய நிகழ்ச்சிகள் உலகத்தையே வியப்புடன் பார்க்க வைத்த நாட்கள் உண்டு. அப்போலொ பதினொன்றில் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் காலடி வைத்த சம்பவம் மனித இனத்தையே முழுவதுமாய்த் திளைக்க வைத்தது. சாலெஞ்சரும் பின்னாளில் கொலம்பியாவும் வெடித்துச் சிதறியபோது, 10 லட்சம் காலன் எரிபொருளுடன் பயணம் செய்வதும் கிட்டத்தட்ட மணிக்கு 1800 மைல் வேகத்தில் பூமியின் ஈர்ப்புக்குள் நுழையும் பயங்கரமும் மனித இழப்பின் சோகமும் உலகத்தையே ஆட்டிவைத்தன. ஆனாலும் மனிதனில்லா ராக்கெட்டுகளின் விண்வெளி முயற்சிகள் நம் கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை. மீடியாக்களுக்கான மசாலா அதில் இல்லை. டிஸ்கவரி சானலின்  When we left the Earth போன்ற டாகுமெண்டரிக்களும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் ஸ்டார் வார்ஸும் விண்வெளியின் மர்மங்களுக்காகவும் சாகசங்களுக்காகவுமே நம்மை ஈர்க்கின்றனவேயன்றி மற்றபடி அதிக ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

“இந்த விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் சுத்த பாஷ்! நேரம் பண விரயம்! அதுக்கு பதிலா அந்தப் பணத்த இங்க உபயோகமா செலவழிக்கலாம்!”

இப்படி அலுத்துக்கொள்ளும் கும்பல் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு! ஆனாலும் விண்வெளி ஆய்வுகள் இன்றைய நிலையில் அண்டவெளியின் ரகசியத்தை அறியும் ஆவல் என்பதைத் தாண்டி, நாம் வாழும் இந்த பூமியின் எதிர்காலத்துக்காகவுமே ஒவ்வொரு நாட்டுக்கும் மிகவும் தேவையானதுதான் என்பதில் சந்தேகமில்லை. அப்போலோ 11 சந்திரனில் இறங்கிய நிகழ்ச்சியினால் தூண்டப்பட்டு அமெரிக்காவில் ஒரு தலைமுறையே விண்வெளி பற்றியும் விஞ்ஞானம் பற்றியும் படிக்க ஆவலாகி விண்வெளி இயலைத் தேர்ந்தெடுத்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏன், இங்கேயே சந்திரயான் ஒன்றுக்குப்பிறகு விண்வெளி இயல் பற்றிய பேச்சும் விளக்கங்களும் அதிகமாகி “நானும் ஸ்பேஸ் சயன்ஸ் படிக்கப்போகிறேன்” என்று கிளம்பும் இளைய சமுதாயம் உருவாகியிருக்கிறது. விண்வெளி வணிகத்தில் ஈடுபட பல புதிய வணிக முயற்சிகள் (start ups) இளைஞர்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக நம் ISRO நிகழித்தி வரும் அடுத்தடுத்த சாதனைகள், இவர்களை இன்னும் இன்னும் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுப் பக்கமும், ஏன் விண்வெளி வணிகத்தின் பக்கமும் திருப்பிவிடக்கூடும்.

இந்த ISROவின் ஆரம்பகாலம் என்பது விக்ரம் சாராபாயின் வாழ்க்கையோடு ஒட்டியே இருந்தது. அவர், இந்த நிறுவனமே தன் வாழ்க்கை என்பதாகப் பணிபுரிந்த கதைகளை நாம் அறிவோம். ஒரு சிறிய கட்டடத்தில் அதிக வசதிகள் ஏதுமின்றிப் புறாக்களின் ‘பக்பக்’குக்கு இடையில் ராக்கெட் ஆராய்ச்சிகளைச் செய்த ஏராளமான விஞ்ஞானிகளை நாம் இன்று நினைத்துப் பார்க்கவேண்டும். ஏன், நமது அப்துல் கலாமே இந்த ISROவின் மீது ஒருவித மாறாக் காதலுடனேயே பணிபுரிந்திருக்கிறார். ஆரம்பகால விஞ்ஞானிகள் குழு அமெரிக்கா ஃபிரான்ஸ் என்று ஒவ்வொரு ஊராகப் போய் அவர்கள் ஏலத்துக்கு விடும் பழைய ராக்கெட் தொழில்நுட்பங்களை வாங்கி வந்து, படித்து, முயற்சிகள் செய்து உருவாக்கிய ISRO இன்று உலக சாதனை புரிந்திருப்பது ஆச்சரியமே இல்லை.

லட்சக்கணக்கான லிட்டர் பெட்ரோலை எரித்து ராக்கெட் விடும் ISROவுக்கு என்ன சுற்றுச்சூழல் அக்கறை இருக்கமுடியும் என்று கேட்கலாம். ஆனால் இதே ISROவும் இன்னும் சில அமைப்புகளும், அரசுத்துறைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சுற்றுச்சூழல், காற்றுத்தன்மை, பூமி வெப்பமயமாதல், மாற்று எரிசக்தி, படிம எரிபொருள் மற்றும் பூமியை நெருங்கும் விண் பொருள்கள் பற்றியெல்லாம் தீவிர ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. நமது பூமியைக் காப்பாற்ற இந்த ஆராய்ச்சிகள் மிகவும் தேவையானவையே.

உலக மக்கள்தொகை இப்போதே ஏழரை பில்லியனைத் தொட்டிருக்கிறது. இயற்கை அன்னை இந்தக் கனத்தை இப்போதே தாங்க முடியாமல் தவிப்பது வெளிப்படை. இதே ரீதியில் போனால் நாமும் நூற்று எழுபதாவது மாடியில் வசித்து, காற்றைச் சேதப்படுத்தி,  (“அப்பா! நீங்க ஸ்கூல் படிக்கறப்போ இந்த மாதிரி மாஸ்கெல்லாம் மாட்டிக்க வாணாமா?”), மரஞ்செடிகொடிகளை அழித்து, (“எங்க தாத்தா சொல்றார், அடையார் பக்கத்துல பெரிய பார்க் இருக்குமாம்!”), விலங்கினங்கள் இல்லாமல் போய் (“அப்பல்லாம் தெருவிலேயே நாயெல்லாம் ஓடுமாமே!”) உயிர் வாழ்தலே பெரிய சாதனையாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நிச்சயம் விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியம். சந்திரனிலும் செவ்வாயிலும் மனிதனைக் குடிபுக வைக்க முடியுமா என்னும் ஆராய்ச்சி சீரியஸாக நடக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இந்த விதமான மக்கள்தொகைப் பெருக்கத்தினால் நாம் இயற்கை வளங்களைக் காலியாக்கிக்கொண்டு வருகிறோம். தண்ணீருக்குக் காசு கொடுக்கும் காலம் வந்தது போலவே காற்றுக்கும் காசு கொடுக்க வேண்டி வரும். ஆனால் விண்வெளியில் இயற்கை வளங்கள் அளவில்லாமல் கொட்டிக்கிடப்பது ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வருகிறது. நம் பூமித்தாயைக் காப்பாற்றவேண்டுமானால் அந்த இயற்கைச் செல்வங்களை பூமிக்குக் கொண்டுவரும் முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். அதற்கான முன்னேற்பாட்டு ஆராய்ச்சிகள் இப்போதே துவங்கினாலன்றி அவற்றுக்கான தேவை வரும்போது திண்டாடித் திக்கிழந்து போவோம்.

நம் வீட்டை எவ்வளவு கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம். ஒரு வார்தா புயல் வந்து வீட்டில் ஒழுகினால் அடுத்த வாரமே கொலுத்துக்காரரைக்கூட்டி வந்து சிமெண்ட் அடைத்து, பெயிண்ட் அடித்து…

ஆனால் நாம் வாழும் பூமியை முடிந்த அளவு நாசப்படுத்தி வருகிறோம். மணல் கொள்ளையிலிருந்து கனிமம் எடுப்பதிலிருந்து சூழலை மாசு படுத்துவதிலிருந்து ஆற்று நீரைக் கணக்கின்றிச் செலவழிப்பதிலிருந்து பூமியிலிருந்து நீரை உறிஞ்சி நிலத்தடி நீரைச் சூறையாடி, கண்டகண்ட கழிவுகளை ஆற்று நீரில் கலந்து, நல்ல நீரோடைகளைச் சாக்கடையாக்கி…  நமக்கென்னவோ இயற்கையெல்லாம் சாசுவதம் போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொஞ்சம் வான்வெளியில் பறந்து விண்வெளிக்குப் போனால் நாமும் இந்த பூமியும் எத்தனை சிறிய துகள் என்பது புரியும். அனாமத்தாக சுற்றிக்கொண்டிருக்கும் நம் பூமியானது அண்ட சராசரங்களினிடையே ஒரு கடுகுப்பொட்டு அளவு கூட இல்லை என்பது விளங்கும். இயற்கை ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டால் கவண் கல்லைப்போல பூமி கோடிக்கணக்கான காத தூரம் போய் காணாமல் போய்விடும். இந்த நிலையற்ற தன்மை நமக்கு ஒழுங்காகப் புரிந்து, நாம் எப்படியெல்லாம் பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்னும் அவசரம் தெரிய வேண்டுமானால், அண்டங்கள் பற்றி நாம் இன்னும் இன்னும் நிறையத் தெரிந்துகொண்டாக வேண்டும். அதற்கு இந்த விண்வெளி ஆராய்ச்சிகள் மிக மிக அவசியம்.

சேர்மன் திரு கிரண் குமார் சொல்லுவதுபோல ISROவின் ஆராய்ச்சிகள் ஏதோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது மட்டுமில்லை. மிகத் துல்லியமாக சீதோஷ்ண நிலைமைகளையும் வரப்போகும் புயல் எச்சரிக்கைகளையும் முன்கூட்டியே அறிந்துகொள்வதும்தான். இப்படி முன்கூட்டியே தேவையான தகவல்களை அறிந்துகொண்டு, அவற்றை வானிலை மையங்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களால், மீனவர்களைத் தக்க சமயத்தில் உஷார்ப்படுத்த முடிந்திருக்கிறது. அடுத்த நூறு வருடங்களுக்குத் தேவையான விஷயங்களின் முதற்கட்ட ஆராய்ச்சிகளை இப்போதிலிருந்தே தொடங்குவதற்கான அளவில் திட்டங்கள் போடப்படுகின்றன. சென்ற வருடம் செலுத்தப்பட்ட சந்திரயான் ஒன்றின் வெற்றிப்பயணம்,  உலகத்தையே நம்மைப் பார்க்கச்செய்திருக்கிறது. சந்திரயான் II  அடுத்த நிலாப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 2018ல் அந்தப் பயணம் தொடங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக கிரண் குமார் தெரிவிக்கிறார்.

விண்வெளி ஆராய்ச்சியில் ISROவின் சரித்திரம் பொன்னேட்டில்… ஆம் அதேதான்! இருபது வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் புவி நோக்கு செயற்கைக்கோள் (Earth-observation satellite) IRS – 1A அனுப்பப்பட்டது. அதன்பிறகு இது வரை 10 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுவிட்டன. அவற்றில் ஆறு இன்னும் திருப்திகரமாகச் செயல்பட்டு நமக்கு வேண்டிய விண்வெளித் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறன.

ஒரு காலத்தில் இந்த ISROவே அமெரிக்க மற்றும் ஃபிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவல்களைக் கொண்டே ஆராய்ச்சிகள் செய்து வந்த நிலை மாறி, இன்று இந்தியாவே பல வெளிநாடுகளுக்கு விண்வெளித்தகவல்கள் தரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பது நிச்சயம் ISROவின் மறுக்க முடியாத சாதனையே. இது அவ்வளவு சுலபமாகக்கிடைத்த வெற்றியல்ல. பல வருடங்களாக இந்த ISROவின் அலுவலர்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளையிலும் பேசி கூட்டம் போட்டு அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் என்னென்ன என்று பெரிய பட்டியல் எடுத்து… பேயாய் உழைத்திருக்கிறார்கள். ISRO செயற்கைக்கோள் அனுப்பத் தயாராகியவுடன் அதிலிருந்து கிடைக்கப்போகும் தகவல்களை எடுத்துக்கொள்ள இந்த அரசுக் கிளைகள் தயாராகப் போட்டிபோட்டுக்கொண்டு வர, அப்புறம் என்ன, வெற்றிதான்.

இந்தச் செயற்கைக்கோள்களின் உறங்கா விழிகள் நமக்குத் தரும் தகவல்களின் விஸ்தீரணமும் பயன்பாடுகளும் அடர்த்தியும் சொல்லி மாளாது.

துல்லியமான பயிர் வளர்ப்பு ஏக்கரா, சாகுபடி அளவு, வறட்சி அல்லது வெள்ளத்தின் நஷ்டக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பல்லுயிர்க் கண்காணிப்பு, நீர் மேலாண்மை, பனிப்பாறை ஆய்வு, தாது மற்றும் உலோக ஆய்வு, கடலியல் ஆராய்ச்சி என்று செயற்கைக்கோள் தரும் தகவல்களின் பயன்பாடுகள், ஒரு நாட்டின் வாழ்வாதாரத்துக்கே மிக அத்தியாவசியமானதாகப் போய்விட்டன.

Cartosat 2A என்னும் செயற்கைக்கோளை 2007இல் செலுத்தினார்கள். இதில் பல நிறங்களையும் தனித்தனியாகப் பகுத்துணரும் (Panchromatic) காமராவைப் பொருத்தியதால் பூமியின் சின்னச்சின்ன வித்தியாசங்களையும் துல்லியமாகக் கண்டறியமுடியும். ஏன், தெருவில் போகும் ஒவ்வொரு வாகனத்தைக்கூடக் கவனிக்க முடியும்! இப்படிப்பட்ட காமிராவினால் நகர்ப்புறத் திட்டமிடுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கண்காணித்து, திட்டமிட்டுச் செயல்படுத்தமுடியும். இதற்குமுன் செலுத்தப்பட்ட Cartosat ஒன்றுடன் சேர்ந்து இவை இரண்டும் இன்னும் அதிக நிலப்பரப்பைக் கண்காணிக்க இயலும். Cartosat 2E வரை செலுத்திவிட்டோம். இனி 2F வருடக்கடைசியில் போகப்போகிறது. கிட்டத்தட்ட 600 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் நாம் அறியக்கூடிய தகவல்களின் முக்கியத்துவம் மிக அதிகம்.

ISROவின் இன்னொரு தொழில்நுட்ப வெற்றி இந்தச் செயற்கைக்கோள்களின் மினியேச்சர் வடிவமான Indian Mini Satellite-1 (IMS-1), அல்லது Third World Satellite (TWSAT). முன்பு சொன்ன Cartosat போல 690 கிலோகிராம் அல்லாமல் வெறும் 80 கிலோகிராம் எடையேயுள்ள இந்த மினியேச்சர் செயற்கைக்கோளானது, அந்த அளவிற்குத் தொழில்நுட்பம் இல்லாமல் அதே சமயம் பலவித் தகவல்களைத் திரட்டித்தரும் திறமை வாய்ந்திருப்பதால், சிறிய நாடுகள் இந்த வகைச் செயற்கைக்கோள்களை வானில் செலுத்த இந்தியாவின் ISROவை நாடுகிறார்கள். நம் ISRO இந்த மினியேச்சர்கள் செலுத்துவதிலும் கரைகண்டுவிட்டிருப்பது நமக்குப் பெருமையான விஷயம் மட்டுமில்லாது, நம் ISROவிற்கு வருமானம் ஈட்டித்தரும் தொழில்நுட்பமுமாகும். இந்த IMS செயற்கைக்கோள் லேசுப்பட்ட சமாசாரம் அல்ல. இதனுள் இருக்கும் Hyperspectral காமரா கிட்டத்தட்ட 64 வகை நிறங்களில் வித்தியாசம் காட்டிப் படம் எடுக்கும் தன்மை வாய்ந்தது. இந்த வகை காமராக்கள் ஆஸ்திரேலியாவில் கனிம வள ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுபவை. இவற்றின் நுண்ணிய சக்தியால் தாவரங்களின் இலைகளில் ஏற்படும் உருவ, ஊட்டச்சத்து மற்றும் நீர் வள மாறுதல்களைக்கூடக் கண்டறிய முடியும். இவ்வகை காமராக்கள் மிக நுட்பமான கடலாராய்ச்சியிலும் உதவக்கூடும்.

Megha-Tropiques என்னும் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் ஃபிரான்ஸும் இணைந்து செயல்பட்டு அனுப்பும் செயற்கைக்கோள் மிகப்பயனுள்ள ஆராய்ச்சிக்கான தகவல்கள் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோளின் Geo Stationery தன்மை ஒரு வித்தியாசமான அமசம். மற்ற செயற்கைக்கோள்களைப்போலப் பூமியைச் சுற்றாமல் பூமியின் சுழற்சிக்கேற்ப இதுவும் சுழலுவதால் பூமியின் ஒரே சில இடங்களைக் கண்காணித்துத் தகவல்கள் தந்து ஆராய உதவும். இந்தத் தகவல்கள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு மட்டுமன்றிப் பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை கொண்ட தகவல்களைப் பெறவும் பயன்படும்.

இன்றைய விஞ்ஞான முன்னேற்ற காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் தங்கள் நாட்டின் வளங்களைப் பற்றி நுட்பமாக ஆராய்ந்து அதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் வழிவகை செய்யமுடியும் என்பதைக் கையில் எடுத்துவிட்டன. சாதாரண சிறிய நாடுகள்கூடத் தங்கள் பட்ஜெட்டில் இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கென கணிசமான தொகையை ஒதுக்கி வைக்கின்றன. ஆனால் அந்தச் சிறிய நாடுகளால் செயற்கைக்கோள்கள் செலுத்தும் தொழில்நுட்பத்திலோ அல்லது அதற்கான முதலீடுகளிலோ தாக்குப்பிடிக்க இயலாது. ஆகவே அவை அமெரிக்கா, இந்தியா போன்ற செயற்கைக்கோள் இயலில் மிக முன்னேறிவிட்ட நாடுகளிடம் காசு கொடுத்து தங்கள் நாட்டுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வேலையைத் தருகின்றன. இது நம் நாட்டுக்கும் ISROவுக்கும் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் சேவையாகும்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 15ம் தேதி நாம் நிகழ்த்தியது நம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளக்கூடிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. உலக சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி உலகத்தையே வாயைப்பிளக்க வைத்துவிட்டனர் நமது விஞ்ஞானிகள். இவற்றில் 101 செயற்கைக்கோள்கள் வேற்று நாடுகளைச் சேர்ந்தவை. அந்த நாடுகள் இந்தியாவின் விண்வெளி இயல் நிபுணத்துவத்தின் மேன்மையை உணர்ந்து தங்களுக்காக இந்தச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தித்தருமாறு ISROவைக் கேட்டுக்கொண்டு அதற்கான கட்டணமாக மிக அதிகப் பணமும் கொடுத்திருக்கின்றன. அமெரிக்கா ஃபிரான்ஸ் போன்ற நாடுகளும் மற்ற நாடுகளுக்காகச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தித்தருவது உண்டு. ஆனாலும் நம் ISROவின் கட்டணம் இந்த நாடுகளின் கட்டணத்தோடு ஒப்பிட்டால் குறைவு. அதேசமயம் தரத்திலோ சேவையின் உன்னதத்திலோ எந்தவித மாறுதலும் இல்லை. இதனால் பல நாடுகள் நம்மிடமே இந்தச் சேவையைக் கொடுக்க முன்வந்தன. இந்த 104இல் 101 செயற்கைக்கோள்கள் ஹாலந்து, கஜகஸ்தான், அராபிய எமிரேட்ஸ், இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வேற்று நாடுகளுடையவை! அவர்களே அவற்றை நம்மிடம் கொடுத்து மேலே அனுப்பச்சொல்லி அதற்கான கணிசமான கட்டணமும் கொடுத்திருக்கின்றனர்.

PSLV – C37 என்னும் இந்த ராக்கெட் 650 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் எடுத்துச்சென்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.

உலக விண்வெளி வர்த்தகத்தில் நம் ISROவின் திறமையும் நம்பகத்தன்மையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இனி வரும் விண்வெளி வர்த்தக வருமானத்தில் கணிசமான பங்கை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ISRO அரும்பணி ஆற்றப்போகிறது.

உலகமெங்கும் விண்வெளி என்பது ஆராய்ச்சியைத் தாண்டி வர்த்தகத்தினுள் நுழைய ஆரம்பித்துவிட்டது. விண்வெளி வர்த்தகம் என்பது இன்று கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் இந்த விண்வெளி இயல் வர்த்தகத்தில் உருவாகிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய வென்ச்சர் ஃபண்ட் (Venture fund) என்னும் துணிகர நிதி நிறுவனங்கள் இந்த மாதிரியான விண்வெளி வர்த்தகம் தொடங்கும் நிறுவனங்களுக்கு (Space Business start ups) முதலீடுகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருவது, இந்த விண்வெளி வர்த்தகம் இன்னும் இன்னும் விரிவடையப்போவதின் முன்னோட்டமே. ஏன் இந்தியாவிலேயே இன்று பல விண்வெளி வர்த்தக நிறுவனங்கள் உருவாகிச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். Earth 2 Orbit, Team Indus, Nopo Nano technologies, Dhruva Space போன்ற நிறுவனங்கள் இந்த விண்வெளி வர்த்தகத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தாத்தாவாகிய ISRO உலகளாவிய அளவில் மிக உயர்ந்து நின்று பல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் சம்பாதித்து வருகிறது. விண்வெளி இயலில் மட்டுமின்றி விண்வெளி வர்த்தகத்திலும் ISROவின் பங்கு கணிசமானது.

தனியார் மயமாக்குதலின் நல்ல அம்சங்களில் ஒன்று சாதாரண மனிதனும் செல்வந்தனாக முடிவதே. பங்குச்சந்தைகளின் வளர்ச்சியினால் மத்தியதர வகுப்பினர் பலர் கோடீஸ்வரர்காளான கதைகள் நமக்குத்தெரியும்.

“என்னப்பா, ஒரு மாசமா ஆளையே காணலை?”

“அதா, ஒரு டிரிப் ஸ்விட்சர்லாந்துக்கு போயிருந்தேன் குடும்பத்தோட!”

“ என்னது ஸ்விட்சர்லாந்தா…?”

“வாயைப் பொளக்காத! போன வருஷம் ISRO ஷேர் வாங்கியிருந்தேன். இப்ப மார்க்கெட் விலை எங்கியோ போயிடுச்சே! அதான் 100 ஷேர்களை வித்து வந்த லாபத்துல ஃபாரின் டூர்! இன்னொரு 100 வித்து பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சுடலாம்னு பாக்கறேன்!”

பாரத ரத்தினங்கள் என்று வெற்றிகரமான அரசு நிறுவனங்களின் பங்குகளை நாட்டு மக்களுக்கு விற்கும் நாள் வந்துவிட்ட நிலையில், கூடிய விரைவில் இந்த உரையாடல்களையும் நாம் கேட்க முடியும்!

**********

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா மங்கல்யானை விண்ணில் செலுத்தியபோது, நியு யார்க் டைம்ஸ் கிண்டலாக ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அமெரிக்கர்கள் கோலோச்சும் விண்வெளி இயல் க்ளப்புக்குள் நுழைய, மாடுகளுடன் இந்தியர்கள் அந்த க்ளப்பின் வாசலைத் தட்டுவது போன்ற கார்ட்டூன் அது. இந்தியாவின் இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சாதனை செய்ததும், இந்தக் கார்ட்டூனுக்குப் பதிலடியாக, டைம்ஸ் ஆஃப் இண்டியா இப்படி ஒரு கார்ட்டூனை வெளியிட்டது. 


 

அடிக்குறிப்பு:

1. http://timesofindia.indiatimes.com/world/us/donald-trumps-spy-pick-shocked-by-india-launching-104-satellites/articleshow/57411884.cms

Posted on Leave a comment

மறைநீர் – ஹாலாஸ்யன்

என் உயர்நிலைப்பள்ளி வேதியியல்
ஆசிரியர், நீரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் ரொம்ப அழகாக ஒரு வாக்கியம் சொன்னார்.
“Water has no business to be a liquid.” நீரானது திரவ நிலையில் இருக்க வேண்டிய அவசியமே
இல்லை. சால்கோஜென்ஸ் chalcogens என்று அறியப்படுகிற ஆக்ஸிஜன் தொகுதித் தனிமங்களில்
ஆக்ஸிஜன் மட்டும் அந்தக் குடும்பத்தின் சட்ட திட்டங்களுக்குள் அடங்காமல் திரிகிறது.
அத்தொகுதித் தனிமங்கள் ஹைட்ரஜனோடு வினைபுரிந்து கிடைக்கிற மூலக்கூறுகள் எல்லாம் வாயுக்களாக
இருக்கவேண்டும் என்னும் கட்டுப்பாடு இருக்கையில், ஹைட்ரஜன் பிணைப்பு hydrogen
bonding என்னும் ஒரு விந்தையின் காரணமாக இதன் கொதிநிலை மட்டும் நூறு டிகிரியாகி அறை
வெப்பநிலையில் நீரை ஒரு திரவமாக நிலைநிறுத்தியிருக்கிறது. அந்தப் பண்பு இல்லாமல் நீரானது
ஒரு வாயுவாக இருந்திருந்தால் பூமி எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை கூடச் செய்து
பார்க்க முடியாது. கடல்கள் இல்லை, பாசிகள் தாவரங்கள் இல்லை, ஒளிச்சேர்க்கை இல்லை, கிட்டத்தட்ட
உயிர்களே இல்லை. ஆதலால் நீர், பூமியில் உயிருக்கு ஆதாரமாக இருக்கிறது. இன்று வரை பிற
கோள்களில் நாம் திரவ நிலையில் நீர் இருக்கிறதா என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறோம். காரணம்
நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் நீர் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. உயிர்களுக்கு
மட்டுமில்லை; பூமியின் வெப்ப நிலையைக் கட்டுக்குள் வைப்பது, பருவக்காற்றுகள், நில அமைப்பு
என நீர் நம் பூமிக்கு மிகவும் அவசியமானது.

இதெல்லாம் அதிகபட்சம் பன்னிரண்டாங்கிளாஸ்
படித்த ஆளுக்குத் தெரிந்திருக்கும். ஐந்தாவது படிக்கும் ஒரு குழந்தையிடம் நீரை எதற்கெல்லாம்
நாம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால், குடிக்க, குளிக்க, சமைக்க, துலக்க என்று பதில்
எழுதி மார்க் வாங்கிக்கொண்டு போய்விடும். தண்ணீரின் பயன்பாடு என்பது நமக்குத் தெரிவது
அவ்வளவுதான். உலகம் முழுக்க நீரின் உபயோகத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். வேளாண்மை,
தொழிற்சாலை, வீட்டு உபயோகம். இந்த மூன்றுக்குள் எப்படியும் எல்லாப் பயன்பாடும் வந்துவிடும்.
சுழலும் ஏர்ப்பின்னது உலகம் என்பதால் 70% நீர் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகளுக்குச்
செலவழிக்கப்படுகிறது. சுமார் 22% தொழிற்சாலை, 8% சதவிகிதம் மட்டுமே வீட்டு உபயோகம்.
இதெல்லாம் உலகளாவிய புள்ளி விவரங்கள்.
சரி. கொஞ்சம் யதார்த்தம் பேசுவோம்.
இரண்டு உழக்கு சாதம் வைக்க எவ்வளவு நீர் தேவைப்படும்? என்ன அரிசி என்று எதிர்க்கேள்வியெல்லாம்
கேட்கக்கூடாது. எப்படியும் ஆளுக்கு ஒரு கணக்கு சொல்வார்கள். உண்மை என்ன தெரியுமா. தோராயமாய்
1000 லிட்டர். இரண்டு உழக்கு அரிசிக்கு குக்கரில் 1000 லிட்டர் தண்ணீர் வைக்க முடியாதுதான்.
ஆனால் இந்தக் கணக்கு, வயலுக்கு நீர்ப் பாய்ச்சி, உழுது, விதைத்து, மருந்தடித்து, தீட்டி,
உறைபோட்டு, கடையில் இருந்து வாங்கி வந்து, கடைசியில் நீங்கள் குக்கரில் அரிசியோடும்,
குக்கரிலும் ஊற்றும் நீரையெல்லாம் சேர்த்துதான். குக்கர் வைக்க மட்டும் ஆகும் நீரை
கணக்கில் இருந்து ஒதுக்கினாலும் அது பெரும் அளவல்லவா? இப்படி நம்மைச் சுற்றி இருக்கும்
ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நீர் மறைந்திருக்கிறது. அது அதன் உற்பத்தியில் செலவாகி இருக்கலாம்.
கழுவிச் சுத்தப்படுத்துதலில் செலவாகி இருக்கலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக்
கொண்டு போகையில் செலவாகி இருக்கலாம். வாகன எரிபொருட்களாக நாம் பயன்படுத்தும் பெட்ரோல்,
டீசல் இப்படி எல்லாமே எண்ணெய் வயல்களில் நீரை உட்செலுத்தி உறிஞ்சப்படுபவைதானே. அதிலும்
நீர் செலவாகி இருக்கிறதல்லவா? ஆக பெட்ரோலியத்தையும் தண்ணீரால் அளக்க முடியும். இப்படி ஒவ்வொரு பொருளுக்குள்ளும்
நீர் மறைந்திருக்கிறது. அது வெளியே தெரியாது. இதைத்தான் மறைநீர் என்கிறார்கள்.
Virtual water.

இந்தக் கோட்பாட்டை முதன்முதலில்
அறிமுகப்படுத்தியது ஜான் ஆந்தனி ஆலன் அல்லது டோனி ஆலன். லண்டனின் கிங்ஸ் கல்லூரியில்
பேராசிரியர். அடிப்படையில் அவர் ஒரு நிலவியல் அறிஞர். இந்த மறைநீர்க் கோட்பாட்டை நிறுவியது
அவர்தான், மத்தியக் கிழக்கு நாடுகளில், உணவை இறக்குமதி செய்வது மூலம் நீரைச் சேமிக்கலாம்
என்று சொன்னவர். இந்தக் கோட்பாட்டுக்காக அவருக்கு 2008ம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் வாட்டர்
ப்ரைஸ் வழங்கப்படுகிறது. அந்த விருது ஒரு சூழியலுக்காக வழங்கப்படுகிற நோபல் பரிசு போல.
நீர் உபயோகத்தை மறைநீர்க் கோட்பாடு
மூன்று விதமாகப் பிரிக்கிறது. நீலநீர் blue water, பச்சை நீர் green water, சாம்பல்
நிற நீர் gray water. இந்த நிறங்களின் பெயரால் சொல்லப்படும் லிட்டர் கணக்கு அளவீடுகள்
திரும்பப் பயன்படுத்த முடியாமையைக் குறிக்கின்றன. நீல நீர் என்பது பூமியின் பரப்பில்
அல்லது நிலத்துக்கு அடியில் கிடைக்கிற நன்னீர். ஆறு, குளம், கிணறு, ஏரி இவையெல்லாம்.
பச்சை நீர் என்பது மழை நீர். மறைநீரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு நிச்சயம் பச்சை
நீர்க் கணக்கு வரும். சாம்பல் நிற நீர் என்பது ஏதேனும் ஒரு காரணியால் மாசுபடுகிற நீர்.
அது பூச்சிக்கொல்லி உரம் என வேளாண்மை சார்ந்ததாகவோ அல்லது வேதிப்பொருள், கழிவு எனத்
தொழிற்சாலை சார்ந்ததாகவும் இருக்கலாம்.
சில மறைநீர் கணக்குகள் பிரமிக்க
வைப்பவை‌. ஒரு பொருளின் உற்பத்திக்கு எப்படியும் எங்கேயாவது நீர் தேவைப்படுகிறது. நாம்
விலையாகக் கொடுப்பது பணம் மட்டுமல்ல, நீரும்தான்.

ஓர் உதாரணம் பார்ப்போம். போகிற
போக்கில் எடுத்து மாட்டிக்கொண்டு போகிற ஒரு பருத்திச் சட்டை. பருத்தி உற்பத்திக்குத்
தேவையான பச்சை நீரும், நீல நீரும் ஆயிரக்கணக்கான லிட்டர். மேலும் உணவுப் பயிர்களை விடப்
பணப் பயிர்கள் அதிக நீர் வேண்டுபவை. காவிரி தமிழகத்திற்குக் கிடைக்காமல் போனதில் மாண்ட்யா
பகுதிகளில் சிறுதானியம் விளைந்த வயல்களில் கரும்பு ஆகியவை விளைவிக்க ஆரம்பித்ததுதான்.
அவை மழைநீர், நிலத்தடி நீர், பிற பாசன நீர் போன்றவற்றை பகாசுரனாய் உறிஞ்சும். பார்க்கப்போனால்
பருத்தி ஒரு கார்போஹைட்ரேட். செல்லுலோஸால் ஆன இழைகளைக் கொண்டது. அந்த செல்லுலோஸ் உருவாகும்
ஒளிச்சேர்க்கை வினையில் நீர் ஒரு முக்கியமான வினைபொருள். நீர் இல்லாமல் செல்லுலோஸ்
வராது. இதைத்தவிர அள்ளி இறைக்கப்படுகிற உரம், பூச்சிக்கொல்லிகள் சாம்பல் நிற நீர் கணக்கில்
வரும். அடுத்தாக அறுவடை செய்த பருத்தியை விளைநிலத்தில் இருந்து ஆலைகளுக்குக் கொண்டு
செல்லுதல், அங்கு பருத்தியைக் கழுவுதல், mercerization எனப்படும் பருத்தியை மிருதுவாக்கும்
வினைக்குச் செலவாகும் நீர், பின்னர் சாயமேற்றி நெய்தல் ஆகியவற்றில் செலவாகும் நீர்,
கடைகளுக்குக் கொண்டு செல்ல ஆகும் எரிபொருளின் பின்னிருக்கும் நீர், இவை எல்லாம் ஒரு
பருத்திச் சட்டைக்குப் பின்னால் இருக்கும் மறைநீர். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கணக்குப்
போட்டால் ஒரு சட்டைக்கு 2,700 லிட்டர்
தண்ணீர் கணக்கு வருகிறது. இது உற்பத்திக்கு மட்டும். இதனை இன்னும் அந்தச் சட்டையின்
ஆயுட்காலம் முடியும் வரை இழுத்தாலும் அது இன்னும் ஓர் ஆயிரம் லிட்டர் வரை கணக்கு வரலாம்.
சட்டைக்குள் 2700 லிட்டர்.

உண்மையில் பகீரென்று இருப்பது இறைச்சிதான்.
மறைநீர்க் கோட்பாட்டில் இறைச்சி
என்பது இரட்டை வேலை. ஏற்கெனவே உணவுப் பொருள் உற்பத்தி என்பது ஏகப்பட்ட ஆயிரம் லிட்டர்களைக்
குடித்திருக்க அதை ஒரு மிருகத்திற்குப் போட்டு வளர்த்து அதன் இறைச்சியை உண்பது என்பது
சிக்கலே. ஆனால் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் சைவ சாப்பாடு என்பது கட்டுப்படியாகாது.
இடமில்லை என்பது நிதர்சனம். ஆனால் இறைச்சிகளுக்காக இயங்கும் பண்ணைகள்தான் எமன்கள்.
மாட்டிறைச்சி என்ற உதாரணத்தை எடுத்துக்கொண்டால், பிறந்ததில் இருந்து கொல்லப்படும் வரையில்
ஒரு மாடு தோராயமாய் 1,300 கிலோ தானியங்களைத் தின்கிறது. அதைத்தவிர 7,200 கிலோ வைக்கோல்
மற்றும் பிற தீவனங்களைத் தின்கிறது. இந்த இரண்டிற்கும் மறைநீர் கணக்கு 30,60,000 லிட்டர்கள்.
இதனைத்தவிர அது நீராகவே 24,000 லிட்டர் நீரை அருந்துகிறது. கொன்று, இறைச்சியைப் பதனப்படுத்துதலுக்கு
ஒரு 7,000 லிட்டர்கள். மறைநீர் மட்டும் 30,91,000 லிட்டர்கள். இத்தனையும் செய்தால்
ஒரு மாட்டில் இருந்து 200 கிலோ இறைச்சி கிடைக்கும். வகுத்தால் ஒரு கிலோ இறைச்சிக்கு
15,400 லிட்டர் மறைநீர். சென்னையில் ஓடுகிற ஒரு தண்ணீர் லாரி 12,000 லிட்டர்கள். ஒரு
கிலோ இறைச்சிக்கு ஒரு லாரிக்கு மேல் தண்ணீர் செலவாகிறதல்லவா? சடாரென்று சமணராகி மொத்த
உலகையும் கொல்லாமைக்கு மாற்றக் கட்டளையிடும் முன்னர் சற்றுப் பொறுங்கள்.
தினம் காலை டபுள் ஸ்ட்ராங்குக்கும்
கூடுதலாய் மேலே கொஞ்சம் டிகாக்ஷன் ஊற்றி, கொதிக்கக் கொதிக்கக் தொண்டைக்குள் ஊற்றிக்கொள்கிறோமே
காபி, அதனிடம் மாட்டிறைச்சிப் பண்ணைகள் பிச்சை வாங்க வேண்டும். ஒரு கிலோ காப்பிப் பொடிக்கு
18,900 லிட்டர் மறைநீர். பில்டரில் ஊற்றுகிற வெந்நீரை விட இந்தக் கணக்கு சுடுகிறதோ?
செம்மறி ஆடு – 10,400 லிட்டர்
பன்றி – 6,000 லிட்டர்
ஆடு -5,500 லிட்டர்
கோழி -4,200 லிட்டர்
சீஸ் – 3,180 லிட்டர்
அரிசி – 2,500 லிட்டர்
சோயா – 2,145 லிட்டர்
கோதுமை -1,830 லிட்டர்
சர்க்கரை – 1,780 லிட்டர்
பார்லி – 1,425 லிட்டர்
சோளம் – 1,200 லிட்டர்
மேலே உள்ளவை எல்லாமே ஒரு கிலோவுக்கு
செலவாகும் மறைநீரின் அளவு, லிட்டர்களில்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும்
இப்படி மறைநீர் விலை போட முடியும். இதனைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் லேப்டாப்பில
சுமார் 60 லிட்டர் மறைநீர். இது அச்சேறப்போகும் தாளில் கிலோவுக்கு சுமார் 10 லிட்டர்.
அப்படி இப்படி மொத்தமாய் ஒரு நாளுக்கு
ஒருவருக்குக் குடிக்க, குளிக்க என சுமார் முந்நூறு லிட்டர் நேரடியாக நீரைப் பயன்படுத்துகிறோம்.
மறைநீரையும் சேர்த்தால் ஒருநாளுக்கு எவ்வளவு தெரியுமா தலைக்கு மூவாயிரத்து இருநூறு
லிட்டர்கள்.
 ரொம்ப விஜயகாந்த் படம் மாதிரி போகாமல், இதில் என்ன
சிக்கல் என்று பார்க்கலாம். பத்தாயிரம் வருடப் பழக்கத்தில் என்ன பிரச்சினை? இறைச்சியும்
வேளாண்மையும் ஆதிகாலத்தில் இருந்து நாம் செய்ததுதானே. ஏன் இதனைப் புதிதாக ஒரு பிரச்சினையாகப்
பார்க்கவேண்டும் என்று கேள்வி வரும். அன்றெல்லாம் உணவுப் பொருள் ஏற்றுமதி இந்த அளவில்
கிடையாது. ஏன், உடை ஏற்றுமதியே இந்த அளவு கிடையாது. தேவையைத் தவிர உபரிதான் ஏற்றுமதி
செய்யப்பட்டது. ஆனால் இன்று பொருளாதாரங்கள் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தைச் சார்ந்திருக்கின்றன.
அவை அரசியலைப் பாதிக்கின்றன. வேளாண்மை, உற்பத்தி என்று இருந்த ஒரு பொருளாதாரத்தின்
அச்சு இன்றைய தேதிக்கு நாடுகளுக்கிடையேயான வணிகத்தை அச்சாகக் கொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது.
அதாவது, பொருளாதாரம் விரிவடையும்
முன்னர், சென்னையில் உற்பத்திக்குச் செலவான மறைநீர் சென்னையிலேயே பெரும்பான்மையாகக்
கொள்முதல் செய்யப்பட்டது. அதிகபட்சம் அந்த நாட்டின் தலைநகர் வரை செல்லும். மிகச்சிறிய
அளவிலான பொருட்களே கடல்கடந்து சென்றன. ஆனால் இன்று உலகம் முழுக்க பல நகரங்கள் ஏற்றுமதியை
மட்டுமே நம்பி இருக்கின்றன. அவை கப்பலில் ஏற்றி அனுப்புவது பொருள் மட்டுமல்ல. நீரும்
சேர்ந்துதானே. அதாவது என் நகரத்தில்
இருந்து ஒரு பொருளை நான் ஏற்றுமதி செய்கையில் என் நகரத்து நீரையும் நான் ஏற்றுமதி செய்கிறேன்.
இஸ்ரேல் நாட்டில் வளமெல்லாம் இருந்தும்,
ஆரஞ்சுகள் பயிர் செய்யப்படுவதில்லை. காரணம் ஒரு க்ளாஸ் சாறு தரும் ஆரஞ்சை உற்பத்தி
செய்ய ஆறு க்ளாஸ் நீர் வேண்டியிருக்கிறது. அதனால் இஸ்ரேல் ஆரஞ்சுகளை இறக்குமதி மட்டுமே
செய்கிறது. இதன் மூலம் அது தன் மறைநீரைச் சேமிக்கிறது. அதனால் நாம்பாட்டுக்கு அன்னியச்
செலாவணி கிடைக்கிறதென்று ஏற்றுமதி செய்துகொண்டே போனால் நீரும் காணாமல் போகுமல்லவா?
அப்பொழுது அதற்கு என்ன செய்யலாம்?

     அரசு சில கொள்கைகளை இதனைப் பொருத்து மாற்றி அமைக்க
வேண்டும். மறைநீர் அதிகம் செலவாகும் பொருட்களை விடக் குறைவாகச் செலவாகும் பொருட்களை
ஊக்கப்படுத்தலாம். அவர்களுக்கு மானியம் அளிக்கலாம்

     நம் தேவை அதிகமின்றி ஏற்றுமதியை மட்டும் நம்பியிருக்கும்
உணவுப் பயிர்களை, பணப்பயிர்களைக் குறைத்துக்கொண்டு வேறு மாற்றுகளை யோசிக்கலாம்

     பெரும்பண்ணைகளில் இருந்து வருகிற பதப்படுத்திய இறைச்சியை
விட, அந்த அந்த ஊரின் இறைச்சிக் கடைகளில் இறைச்சி கொள்முதல் செய்யலாம். சிறிய அளவிலான
இறைச்சிக் கூடங்கள் பண்ணைகள் அளவுக்கு நீரை உறிஞ்சுவதில்லை

     சில பொருட்களைச் செலவானால் போகிறது என்று இறக்குமதி
செய்துவிடலாம். பணம் நாளை திரும்ப வரலாம். ஆனால் நீர் வருமா என்பது சந்தேகமே.

     ஏற்றுமதி வாணிபத்தை மட்டுமே நம்பியிருக்கிற நிலையை
மாற்றிக்கொள்ள வேண்டும். கார் உற்பத்தி போன்ற மறைநீர் முழுங்கி மகாதேவன்களைக் கொஞ்சம்
கட்டுக்குள் வைக்கவேண்டும்.

     எரிபொருள் உற்பத்தியிலும் நீர் இருப்பதால், எவ்வளவுக்கு
எவ்வளவு எரிபொருள் சேமிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரையும் சேமிக்கிறோம் என்று அர்த்தம்.

     தொழிற்சாலைகள் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த முடியாத
சாம்பல் நிற நீரை வெளியிடுவதால் அவற்றின் தரக்கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டும்.
நீர் சுத்திகரிப்புச் சட்டங்களையும் தண்டனைகளையும் இன்னும் கடுமையாக்க வேண்டும்.

     இதனைத்தவிர நேரடிப் பயன்பாட்டில் இருக்கும் நீரையும்
முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்

இதுதான் நாட்டுக்கும் நாமிருக்கும்
பூமிக்கும் நல்லது. நாம் ஒரு நாளில் போர் போட்டு உறிஞ்சுகிற, பம்ப் போட்டு இறைக்கிற,
கழிசடையாய் ஆக்கி அனுப்புகிற நீரை, பூமி அதே அளவு கீழே கொண்டு போய்ச் சேர்க்க சில மாமாங்கங்கள்
ஆகும். ஆகவே மறைநீரையும் கொஞ்சம் மனதில் வைப்போம்.
Posted on Leave a comment

மறந்து போன பக்கங்கள் – அரவிந்த் சுவாமிநாதன்

சிலமாதங்களுக்கு முன்னால், ‘பல
வருடங்களுக்கு முன்னால் படித்தது, மீண்டும் படித்துப் பார்ப்போமே’ என்றெண்ணி, சுஜாதா
எழுதிய கொலையுதிர்காலம் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது.
கதையின் நடுவில், குமாரவியாசன் பங்களாவுக்குத் துப்பறியப்போகும் கணேஷூக்கும் வசந்துக்கும்
கேட்கும் குரல்களாய் இடம் பெற்றிருந்த  சிலவரிகள்
என்னை மிகவும் ஈர்த்தன.
 “உமது தாய் புத்திரவதி. அவள் புத்திரவதியல்ல என்று
மறுத்துவிடும் பார்க்கலாம்.”
“காலில்லாத முடவன் கடலைத் தாண்டுவானோ;
மண் பூனை எலியைப் பிடிக்குமோ.”
“வித்வஜன கோலாகலன்… வித்வஜன கோலாகலன்.”
– இப்படியெல்லாமாக வந்திருந்த வரிகளை
வாசித்தபோது, இதனை முன்பே எங்கேயோ வாசித்திருந்த நினைவு வந்தது. என்ன முயன்றும் எப்போது,
எங்கே என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாவலிலும் அந்த விவரங்கள் இல்லை.
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது
தாத்தாவின் சேகரிப்பில் இருந்த சில பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான்
இந்த வரிகள் அடங்கிய புத்தகம் கண்ணில்பட்டது. அது ‘விநோத ரச மஞ்சரி.’ அஷ்டாவதானம் வீராசாமிச்
செட்டியாரால் தொகுக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த ‘தமிழறியும் பெருமாள் கதை’ என்ற
கதைப்பகுதியில்தான் மேற்கண்ட வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஒரு சுவாரஸ்யம் ‘தமிழறியும்
பெருமாள்’ என்பவர் ஆணல்ல; பெண். எழுதப் படிக்கத் தெரியாத விறகு வெட்டி, இளவரசியுடன்
காதல், வஞ்சகன் ஒருவனது இடையீட்டால் இளவரசி தற்கொலை, ஆவியாக அலைந்தது, ஔவையாரின் ஆசியால்
அறிவுள்ள பெண்ணாக மறுபிறவி எடுத்தது, நக்கீரரை வென்றது என்று மிகச் சுவாரஸ்யமாகச் சென்றது
அந்தக் கதை. இது திரைப்படமாகவும் அந்தக் காலத்தில் வெளிவந்திருக்கிறது.
வீராசாமிச் செட்டியார் ‘விநோத ரசமஞ்சரி’
மட்டுமல்லாது மேலும் சில நூல்களைத் தொகுத்திருக்கிறார். அவற்றின் விவரங்கள் தற்போது
கிடைக்கவில்லை. சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த செட்டியார், அவதானியும் கூட. ஒரே சமயத்தில்
எட்டு கவனகங்களைச் செய்யும் அவதானி என்பதால் ‘அஷ்டாவதானி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
இவரது சமகாலத்து இலக்கியவாதியாகத் திகழ்ந்த பூவை கலியாணசுந்தர முதலியாரும் ஓர் அஷ்டாவதானிதான்.
‘திருவான்மியூர் புராணம்’, ‘செய்யுள் இலக்கணம்’, ‘சித்தாந்தக் காரியக் கட்டளை’, ‘திரிபுரசுந்தரி
மாலை’, ‘திருவேற்காட்டுப் புராண வசனம்’, ‘திருவொற்றியூர்ப் புராண வசனம்’ போன்ற நூல்களை
எழுதியிருக்கிறார். இவர் பல செய்யுள், இலக்கண நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தவரும் கூட.
இவர்கள் மட்டுமல்ல; அரங்கநாதக்
கவிராயர், இராமசாமிப் பிள்ளை, இராமானுஜக் கவிராயர், சரவணப் பெருமாள் பிள்ளை, அப்துல்காதர்,
சின்ன இபுறாகீம் மொகையதீன், சபாபதி முதலியார் என பல அஷ்டாவதானிகள் இருந்திருக்கிறார்கள்.
ஜெகநாதப் பிள்ளை, முத்துவீர உபாத்தியாயர், ஆறுமுகம் பிள்ளை என தசாவதானிகளும் (பத்து
கவனகம்), ஷோடசாவதானிகள், (பதினாறு கவனகம்) சதாவதானிகள் (நூறு கவனகம்) என்றும் பலர்
இருந்திருக்கின்றனர். சதாவதானிகளில் தெ.பொ.கிருஷ்ணாமிப் பாவலர், சரவணப் பெருமாள் கவிராயர்,
செய்குத்தம்பிப் பாவலர் போன்றோர் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். சுப்பராமையர் என்பவர்
துவிசதாவதானி (இருநூறு கவனகம்) செய்வதில் வல்லவராய் இருந்திருக்கிறார். திருக்குறள்
அவதானிகள் பலர் வாழ்ந்திருக்கின்றனர்.


இந்தப் பட்டியல்கள் மூலம் பிராமணர்கள் மட்டுமல்லாது, பிள்ளைகள், செட்டியார்கள்,
முதலியார்கள், கோனார்கள், இஸ்லாமியர்கள் எனப் பல சாதியினரும் பெரும் தமிழ்ப் புலவர்களாக,
அறிஞர்களாக அக்காலத்தில் இருந்திருப்பது தெரிய வருகிறது.
ஆனால் குறிப்பிட்ட சில இயக்கத்தினர்களோ உயர் சாதிப்
பிராமணர்கள்தான் மற்ற சாதியினரை அடக்கி ஒடுக்கிக் கல்வி கற்க விடாமல் செய்தனர், அடிமையாக
வைத்திருந்தனர், முன்னேற விடாமல் தடுத்தனர் என்று சொல்லிக் கொண்டிருப்பது இன்றளவும்
தொடர்ந்துகொண்டு இருக்கும் அபத்தங்களுள் ஒன்றாக உள்ளது. அத்தகைய இயக்கங்களின் வளர்ச்சியால்,
சேவையால் இன்றைக்குத் தமிழில் அவதானிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்குக்
குறுகிப் போய்விட்டது.
அவதானிகள் மட்டுமின்றி, சிற்றிலக்கியங்கள்
பலவற்றை உருவாக்கி அளித்த அறிஞர்கள் பலரும் அக்காலத்தில் இருந்திருக்கின்றனர். அவர்களுள்
குறிப்பிடத்தகுந்த ஒருவர் அரசஞ்சண்முகனார். சோழவந்தான் என்ற ஊரைச் சேர்ந்த இவர் வள்ளல்
பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச்சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.
சங்கத்தின் கலாசாலையாகிய செந்தமிழ்க் கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
மாலை, பதிகம், அந்தாதி என பல நூல்களைத் தந்தவர். இவற்றில் மாலை மாற்றுமாலை என்ற பனுவலும்,
ஏகபாத நூற்றந்தாதியும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள். ‘சித்திரக்கவி’ என்னும் வகையிலானவை
இவை.
ஒரு பாடலின் இறுதியில் (அந்தம்)
வரும் எழுத்து, அசை, சீர், சொல் போன்றவை அடுத்த பாடலின் முதலாக (ஆதி) வருவது அந்தாதி.
இதில் ‘ஏக பாதம்’ என்பது ஒரே அடியே திரும்பத் திரும்ப நான்கடிகளில் வந்து வெவ்வேறு
பொருள்களைத் தருவதாகும். ஏகபாத நூற்றந்தாதியில் இருந்து ஒரு சான்றைப் பார்ப்போம்
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
முதலடியை அம்பு, ஆலி, கயம், கோள்,
தலம், கஞ்சம், அத்தன், அத்தன் எனப் பிரித்து அவற்றோடு, அம்புக்கோள், ஆலிக்கோள், கயத்தங்கோள்
எனக் கொண்டு; நீருக்கும் மழைக்கும் காரகனாகிய சுக்கிரன் என்னும் கோளே, கயநோய் (குறைநோய்)
காரகனாகிய சந்திரன் என்னும் கோளே, கஞ்சத்தன் – தாமரையின் நண்பனாகிய சூரியனுக்கு மகனான
சனி என்னும் கோளே என்று பொருள் கொள்ளவேண்டும்.
இரண்டாவது வரியை அம், பாலி, கை,
அத்தம், கோடு, அல், அங்கம், சத்தம், நந்தன், ஐய எனப் பிரித்து வெண்ணிறமுடைய சந்திரனுக்குக்
கைப்பொருள் போன்ற புதனே, மலையினை ஒத்த உடலையுடைய புதனே, இருளை ஒத்த உடலையுடைய இராகுவே,
இந்திரனின் குருவாகிய வியாழனே என்று பொருள் கொள்ளவேண்டும். மூன்றாவது வரி அம்பால்,
இராகு, ஐயத்து, அங்கு, ஓடு, அலங்கு, அம், சத்த, நந்தன் எனப் பிரித்து அம்புபோல வருத்துகின்ற
ஐயவுணர்ச்சி போல, ஓரிடத்து நிலையின்றி ஓடும் தன்மை மிக்க அழகிய ஏழு குதிரைகளைத் தேராகக்
கொண்ட சூரியனே என்று பொருள் கொள்ளவேண்டும். நான்காம் அடியை அம்பால், இகை, அத்து, அம்
, கோடல், அங்கம் சத்தன், நத்தல் நையே என்று பிரித்து மேகம் போலும் கையினையும் சிவப்பு
நிறத்தையும், அழகையும் கொண்ட, பெருமையுடைய சத்துப் பொருளாகிய ஞானகாரகனாகிய கேதுவே என்று
பொருள் கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்ல, மேலும் ஓரடி சேர்த்தும்,
ஈரடி சேர்த்தும், பாடலின் அடிகளை ஒருமுறை தனித்தனியாக மடக்கி பன்னிரு சீராக்கியும்
பல்வேறு விதத்தில் பொருள் கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார் அரசஞ்சண்முகனார்.
அவரது ‘மாலை மாற்று’ இன்னமும் சுவாரஸ்யமானது.
வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ
நாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா
மாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா
வீறுத வேயவ மானம வாவல மேலறவே
இந்தப் பாடலை நீங்கள் முதலிலிருந்து
படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் இருக்கும். ‘விகடகவி’
என்பதைப் போல. ஆங்கிலத்தில் இதனை palindrome என்று அழைப்பர்.
இப்பாடலின் பொருள்: வேறு – (யாம்
நினைத்தபடி இல்லாது) பிறிது, அல – அன்று, மேல் – மேன்மை, அவ் – அவற்றை, அவா – விரும்பும்,
மனம் – இதயம், ஆ – ஆய, வயவு – ஆசைப்பிறவியின், ஏது – காரணம், அறு – அற்ற, வீ – மலரின்
கண, நாறு – தோன்றும், சமா – நாப்பண் நிலையே, கய – வேழமுகனே, நாடு – பொருந்து, உர –
ஞானவானே, வேள் – செவ்வேளின், கவி – மாலை மாற்று மாலையை, பாடுற – பாடுதற்கு, மா – பெருமை,
மாறு – நீங்கி, அடு – கொல்லும், பாவிகள் – பாதகரை, வேர் – அடியோடு, அடு – அழிக்கும்,
நாயக – விநாயகனே, ஏய் (எம்மிடம்) அமையும், , அவம் – பயனில் செயலும், மானம் – செருக்கும்,
அவாவு – ஆசையும், அலம் – துன்பமும், ஏல – பொருந்துவன, அற – ஒழிய, மாசு – குற்றம், அறு
– நீக்கும், நா – நாவின், வீறு – தெளிவை, உதவு – அருளுக, (ஏ- அசை)
முருகப் பெருமானின் மீது தான் பாடக்
கூடிய இந்த மாலை மாற்று என்னும் பனுவல் இடையூறுகள் ஏதும் இல்லாமல் நல்லபடியாக நிறைவேற
விநாயகப் பெருமானின் அருளை வேண்டி நிற்கிறார் சண்முகனார்.
இப்படி அக்காலத்துப் புலவர்கள்
பலர் வார்த்தை விளையாட்டு செய்திருக்கின்றனர். இன்றைக்கு ‘சித்திரக்கவி’ எழுதுபவர்கள்
அநேகமாகத் தமிழில் பத்து, இருபது பேருக்குள்தான் இருப்பர்.
இத்தகைய தமிழ்க் கவிகளில் காளமேகம்
போன்று சிலேடையாகவும் வசையாகவும், வாழ்த்தாகவும் பாடிப் புகழ்பெற்றவர்களும் உண்டு.
அவர்களுள் ஒருவர் பாடுவார் முத்தப்பச் செட்டியார்.
நான் கீழச்சிவல்பட்டி பள்ளியில்
படித்த காலத்தில் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டில் பாடலோடு அவர் பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது. புரியாத அந்த வயதில், அப்பாவிடம் வந்து அவரைப் பற்றிக் கேட்டபோது
‘அவர், அக்காலத்தில் பெரிய புலவர்’ என்றும், ‘நகரத்தார் இனத்தைச் சேர்ந்த அவர், வாழ்த்தாகவும்
வசையாகவும் பாட வல்லவர், சொல் பலிதம் உள்ளவர்’ என்றும் சொன்னார்.
இதுதான் அந்தப் பாடல்.
காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்
– வீடுகட்கு
அன்றைக்கு வந்திட்ட அம்மா இலக்குமிநீ
என்றைக்கும் நீங்கா திரு
நகரத்தார் இனம் செல்வச் செழிப்புடன்
விளங்க இவரது இந்தப் பாடலும் ஒரு காரணம் என்பது அம்மக்களின் நம்பிக்கை.
ஒருசமயம் சந்தை ஒன்றிற்குச் சென்றுவிட்டுப்
பெரும் பொருட்களுடன் மாட்டு வண்டியில் முத்தப்பர் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
அப்போது இரவு நேரம். கள்வர் பயம் மிகுந்திருந்த காலம். இளையாற்றங்குடி என்ற ஊருக்கு
அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது பெருந்திருடர் கூட்டம் ஒன்று வண்டியைச் சூழ்ந்தது.
பொருட்களைப் பிடுங்கியது. அப்போது திடீரென்று குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டது.
அதைக் கேட்டுப் பயந்த திருடர்கள் ஓடி விட்டனர்.
வந்தது பிரிட்டிஷ் படை வீரர்களின்
கூட்டம். அவர்களைப் பார்த்து முத்தப்பர், “நீங்களெல்லாம் யார்?” என்று கேட்க, அவர்கள்
தங்களை “இங்க்லீஷ்காரர்கள்” என்று சொல்ல, உடனே முத்தப்பர், “இங்கிலீஷ்கொடி பறக்கவே
இளையாற்றங்குடி சிறக்கவே” என்று வாழ்த்தினாராம். இன்றைக்கு ஒரு சாதாரண சிற்றூராக இருக்கும்
அவ்வூரில் தான் காஞ்சி மகாப் பெரியவரது குருவின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.
இப்படிப் புலவர்கள் பலவிதங்களில்
சிறப்புற்று வாழ்ந்திருந்தாலும், தமிழால் ஒன்றுபட்டு இருந்தாலும், சமயத்தால் சைவம்,
வைணவம் எனப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தனர். எப்படி அருட்பா X மருட்பா
சண்டைகள் வள்ளலார், ஆறுமுகநாவலர் மறைவுக்குப் பின்னரும் சில அறிஞர்களால் தொடர்ந்து
நடத்தப்பட்டதோ அதுபோல இவர்களில் சிலர் அறிஞர்களாக இருந்தாலும் தங்களுக்குள் சண்டையிட்டுக்
கொண்டனர். இதற்காக அவதூறு வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றப்படியேறி, மன்னிப்புக் கேட்ட
சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அப்படி மன்னிப்புக் கேட்டவர்களுள் ஒருவர் சூளை சோமசுந்தர
நாயக்கர். இவர் மிகச் சிறந்த சொற்பொழிவாளர். தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் முறையாகப்
பயின்றவர். ஆரம்பத்தில் வைணவப் பற்றாளராக இருந்து பின்னர் தீவிர சைவராக மாறியவர். சைவ
சித்தாந்தத்தில் தேர்ந்தவர். ‘வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்’, ‘பரசமய கோளரி’ என்றெல்லாம்
பட்டம் பெற்றவர். பிரமாநுபூதி, சிவநாமப் பஃறொடை வெண்பா, ஆச்சாரியப் பிரபாவம், ரத்நாவளி
போன்ற நூல்களை எழுதியவர். மறைமலையடிகளின் ஆசிரியர். நா.கதிரைவேற்பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களுக்கும்
நண்பர். விவேகானந்தர், சென்னை வந்திருந்தபோது ‘சைவ சித்தாந்தம்’ பற்றிய இவரது பேச்சை
மிகவும் ரசித்துக் கேட்டதாக ஒரு தகவல் உண்டு.
இவர், சைவத்தின் பெருமையை விளக்கும்
பொருட்டு, ‘பாஞ்சராத்திர மதபேடிகை அல்லது சைவ சூளாமணி’ என்ற நூலை எழுதியிருந்தார்.
அதில் வைணவ அறிஞர்களையும், வைணவ அறிஞர் ஏ.வே.இராமாநுஜ நாவலரையும் மிகக் கேவலமாக எழுதியிருந்தார்.
நாவலர், பரம வைஷ்ணவர். சமயத்தில் ஆழங்காற்பட்ட அறிஞர். நிறைய வைணவ நூல்களை எழுதியிருக்கிறார்.
சோமசுந்தர நாயக்கரின் நூலைப் படித்து மனம் புண்பட்ட நாவலர், நாயக்கர் மீது மானநஷ்ட
வழக்குத் தொடர்ந்தார். ஆதாரத்துடன் வாதாடி வழக்கில் வென்றார். “இனிமேல் தங்களையாவது, வைஷ்ணவர்களையாவது,
அவர்கள் ஆசாரியர்களையாவது நான் அவதூறாய்ப் பேசமாட்டேன். எழுதவும் மாட்டேன்” என்று மன்னிப்புக்
கடிதம் எழுதிக் கொடுத்து நூறு ரூபாய் (1891ல் அந்தத் தொகை மிகவும் பெரியது) அபராதமும்
செலுத்தியிருக்கிறார், சோமசுந்தர நாயக்கர்.

இன்னும் அந்தக் கால எழுத்துலக சூப்பர்
ஸ்டாரான வடுவூர் துரைசாமி ஐயங்கார், ‘Long missing links or The Marvelous
Discoveries about the Aryans, Jesus Christ and Allah’ என்று ஆங்கிலத்தில் எழுதி,
அவரே அதனைத் தமிழிலும் எழுதி, பெரும் நஷ்டப்பட்டுப் போன, ‘சமய ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான
நூல் பற்றி எழுதினால் மேலும் விரியும் என்பதால், இத்தோடு சுபம்.
Posted on Leave a comment

மாய மனம் [சிறுகதை] – ஆர்.வி.எஸ்

சரோவிற்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் பேட்டை. ஒரு பாரா பயோ கீழே.

டிஏவியில் ஐந்தாவது படிக்கும் சுட்டிப் பெண் (சுபா) – மூன்றாவது படிக்கும் வால் பையன்  விஷால் (Sibling quotaவில் சேர்ந்தவன்) – லேசாக மேக்கப் போட்டால் தமிழில் முன்னணி நடிகையர்களின் மார்க்கெட் எகிறிவிடும் அழகோடு ஒரு மனைவி – ரம்யா. காரின் உதிரிபாகங்கள் தயாரித்து விற்கும் பன்னாட்டு நிறுவனத்தில் முதுகு நீண்ட சாய்மான சுழல் நாற்காலி உத்யோகம். தனக்குக் கீழ் டை கட்டிய பத்து வெள்ளைக் காலர்களையும் அவர்களுக்குக் கீழே ஐந்நூறு நீலக்காலர்களையும் மேய்க்கும் தலையாய பணி. நினைத்தாலே இனிக்கும் பாடல் போல காலையில் ஜப்பானிலும் மாலையில் ந்யூயார்க்கிலும் இரவில் தாய்லாந்திலும்… காஃபிக்காவும் காபரேக்காவும் ஜாலிக்காகவும் சுற்றுபவனில்லை… தொழிலுக்காகப் பசி தூக்கமின்றிப் பேயாய் அலைந்தவன்.

ஆனால் காரணமே தெரியாமல் ஒரு வாரமாகத் தாடி வளர்த்துச் சோம்பித் திரிகிறான். ஆஃபீஸ் போகக் கசக்கிறது. ஏதோ தகிடுதத்தம் பண்ணியது போலப் பார்வை. தட்டில் தகரம் போட்டாலும் ஐஃபோன் பார்த்துக்கொண்டே உள்ளே தள்ளுபவன் “தக்காளி ரசம் ஏன் வச்சே?” என்று சமீபத்தில்  ரம்யாவிடம் பழிச்சண்டை. கல்யாணம் ஆன புதிதில் “வக்காளி… உன் தக்காளி ரசத்துக்காகவே ஏழேழு ஜென்மத்துக்கும் உனக்கு தாலி கட்டி உன் காலடியிலேயே அடிமையாக் கிடக்கணும்” என்று ரொமான்டிக் வசனம் பேசி ரம்யாவின் கன்னங்களை ரூஜ் போடாமல் சிவக்க வைத்தவன்.

“ஏன் ஆஃபீஸ் போகலை?”

“பிடிக்கலை.”

“எதாவது கார்ப்பரேட் பாலிடிக்ஸா?”

“இல்லையே!”

“டெலிவரி ப்ரஷரா?”

“இல்லயில்ல…”

“உடம்புக்கு எதாவது பண்றதா?”

“ச்சே… ச்சே… வேலையைப் பாரு…”

முதுகுகாட்டி திரும்பிப் படுத்துவிட்டான்.

மணிரத்ன சுருக்கமாய்ப் படுக்கையறையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிக்கொண்டதுதான் கடைசி. அதற்கப்புறம் வாழ்க்கை ம்யூட் மோடில்தான் நடக்கிறது. டப்பாக் கட்டுக் கைலியோடு டைனிங்கில் வந்து காலையில் உட்கார்ந்தால் காஃபி. உடனே துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு போய்க் குளியல். திரும்பவும் டேபிள். இட்லி அல்லது தோசை. போய் மாடியில் படுக்கறையில் தஞ்சமடைந்தால் மதியம் சாப்பாட்டிற்கு இறங்கி வருவான். இரவு எட்டு மணி வாக்கில் டின்னர். பெண் “ப்பா… கேன் யூ ஹெல்ப் மீ இன் மை ப்ராஜெக்ட்?” என்று தாவாங்கட்டைப் பிடித்துக் கேட்டால் விட்டேத்தியாகப் பார்த்துவிட்டு, விடுவிடுவென்று எழுந்து சென்று பால்கனி தனிமையில். இந்தச் செய்கைகளில் ஒரு தொடர்ச்சியும் கிடையாது. சில நாட்கள் காலை டிஃபன் சாப்பிடாமல் மொட்டை மாடியில் உலாத்துகிறான். போன வாரம் ராத்திரி மாடியை விட்டுக் கீழே இறங்கவேயில்லை.

“யாராவது செய்வினை செஞ்சுருப்பாளா மாமீ?” என்று காம்பௌன்ட் அருகில் காற்றாட நின்றுகொண்டிருந்த பக்கத்து ஃப்ளாட் பரிமளம் மாமியிடம் சன்னமாகக் கேட்டாள் ரம்யா. கண்களில் ஒருவித பயம் தெரிந்தது. முன்னிரவு நேரம். சுற்றியிருந்த வீடுகளில் ஜன்னலுக்கு ஜன்னல் கட்டம் கட்டமாக வெளிச்சம் ஒளிர்ந்தது. சில உப்பரிகையில் ‘ஜாக்கி’யும் சுருணைத் துணியும் நிழலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. பரிமளம் மாமியின் சொற்ப நேர மௌன இடைவேளையைக் கீறி யார் வீட்டிலோ தத்துவமாக “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு… இதில் நீயென்ன? ஞானப்பெண்ணே” அலறியது. “நான் கேட்டு தாய் தந்தை…” ஆரம்பிக்கும் முன்னர் மாமீ பேச ஆரம்பித்தாள்.

“என்னடி தத்துப்பித்துன்னு பேசிண்டு… வாட்ஸாப் காலத்துல மையாவது மாந்திரீகமாவது?… போ… போ… ஆஃபீஸ்ல பாஸ் கூட எதாவது இருக்கப்போறது…”

“இல்லே மாமி… வாட்ஸாப் காலத்துல நாம கணபதி ஹோமம் சண்டி ஹோமம் பண்றதில்லையா… அதுமாதிரி அதர்வண வேதமும் வழக்குல இருக்குமே… அவா தெருவுல மலையாள மாந்த்ரீகம் பண்ணி ரெண்டு புள்ள பெத்தவளை சித்தப்பிரமையாக்கிட்டான்னு  எங்காத்துல மாமா தாத்தா பழங்கத ஒண்ணு சொல்லுவா…”

“இருக்கலாம்டீ. கை நிறையா சம்பாதிக்கிறான். ஒசந்த படிப்பு. படகு மாதிரி கார் வச்சுருக்கான். சிட்டில சொந்தமா ரெண்டு ஃப்ளாட். பார்க்க லக்ஷணமா ரோஜால வர்ற அர்விந்த் சாமி  மாதிரி இருக்கான். என்ன… சரியா?”  பரிமளா மாமி கடைசி வரியைச் சொல்லிவிட்டு ரம்யாவைக் கண்ணடித்து ஊடுருவிப் பார்த்தாள்.

“இவர்க்கு எதுக்கு வைக்கணும்?” தவிப்புடன் கேட்டாள் ரம்யா.

“இவனை லவட்டிண்டு போயிடலாம்னுதான்… காசு. படிப்பு. பதவி. அழகு. இன்னும் என்ன காரணம் வேணும்டீ. ம்… சரியா?”

“ஆனா எனக்கு தாலிகட்டிருக்காரே. கல்யாணமாயிடுத்தே.”

“ஹக்காங். போடி பைத்தாரி. எக்ஸ்பீரியன்ஸ் பீப்பிளுக்குதான் மௌஸு ஜாஸ்தின்னு எங்காத்து கிழம் எப்போதும் ஃபோன்ல கூவிண்டிருக்கும். கம்பெனிக்கெல்லாம் ஆள் பிடிக்கிற வேலைல இருந்தாரோன்னோ. ஆனாக்க இதோட எக்ஸ்பீரின்ஸ் என்னன்னு நேக்குத் தெரியாதா?” தலையாட்டி வாய் திறந்து சிரிப்பாள் பரிமளம் மாமி.

இதற்கு மேல் பரிமளா மாமிகிட்டே பேசினால் லஜ்ஜையில்லாமல்  ‘அ’ந்த மாதிரியான சமாச்சாரமெல்லாம் சகஜமாகப் பேசுவாள். “சரி மாமி. உள்ள வேலையிருக்கு. நான் வரேன்” என்று கழண்டு கொண்டாள் ரம்யா. பரிமளா விஷமக்காரக் கிழவி. சர்வ சுகங்களையும் ஆண்டு அனுபவித்தவள் என்பது அவளது சுவாரஸ்யமான பேச்சில் புரியும்.

“சாயங்காலமாச்சுன்னா பளிச்சுன்னு மூஞ்சியலம்பி, நெத்திக்கு இட்டுண்டு, பூஜை ரூம்ல வெளக்கேத்தி, கார்த்தாலேர்ந்து போட்டுண்டிருந்த அழுக்கு நைட்டியை விழுத்துட்டு, புடவையோ சுடிதாரோ ஜம்முன்னு உடுத்திண்டு, கமகமன்னு யார்ட்லீ சென்ட் தெளிச்சுண்டு, கண்ணுக்குத் தீனியா நிக்கணும்டீ…  நாலு இடம் போயிட்டு பேண்ட்டும் ஸ்கர்ட்டும் லோ ஹிப் சாரியுமா பார்த்துட்டு ஆஞ்சுஓஞ்சு ஆத்துக்கு வர்றவன ஏமாத்தக்கூடாதோன்னோ” என்று பக்கத்தில் சுந்தரவிநாயகர் கோயில் சதுர்த்திக்குப் போய்விட்டு வரும் போது காதில் சீக்ரெட் போல ஹஸ்கி வாய்சில் சொல்வாள்.

இன்றோடு பத்து நாட்கள்ஆயிற்று. “உங்காத்துக்காரர் மலைக்கு மாலை போட்டுருக்காரா?” என்று விஷாலின் ஃப்ரென்ட் ஷிவ்வின் அம்மா ஸ்கூல் மரத்தடி லன்ச் டைமில் கேட்டாள். வாயைத் திறக்காமல் இல்லையென்று தலையாட்டி சிரித்துவிட்டு வந்தாள் ரம்யா.  சித்த ஸ்வாதீனமில்லாமல் போனது போலவும் தெரியவில்லை. இதுவரை ஃபோனைத் தொடவில்லை. டீவி ரிமோட்டை கையிலெடுக்கவில்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு தூக்கம். அடர் மௌனம். யாரிடமும் வாய்வார்த்தையாகப் பேசவில்லை. மௌனச் சாமியார் வாழ்க்கை. யார்மேலாவது வெறுப்பா? இல்லை, உள்ளுக்குள்ளயே பேசிண்டு “நான் யார்?”ன்னு ரமணர் மாதிரி தேடுதலா?

பெரும் ஆச்சரியம் என்னவென்றால் அவனது ஆஃபீஸிலிருந்து ஒரு கால் கூட வரவில்லை. சீட்டைக் கிழித்துவிட்டார்களா? விரக்தியில் பேசாமல் இருக்கிறானா? மொபைலை சார்ஜ் செய்து பத்து நாட்கள் இருக்கும். டேபிள் அலமாரி ஷோ கேஸ் எங்கும் காணவில்லை. சுபா ஒரு ஞாயிற்றுக்கிழமை “அப்பாவுக்கு என்னாச்சுமா? பேய் பிடிச்சா மாதிரி பாக்கறார்?” என்று கேட்டபோது ரம்யாவுக்கு அடிவயிறு கலங்கியது. “அப்பனே… காப்பாத்து” என்று திருவேங்கடமுடையானுக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தாள்.

ரம்யாவிற்கு இதைத் தனியொரு ஆளாய்ச் சமாளிக்கமுடியும் என்று தோன்றவில்லை. ஊர் சுற்றிச் சம்பாதிப்பது ஒன்றுதான் சரோவின் வேலை. மளிகை, ஸ்கூல் ஃபீஸ், ட்யூஷன் ஃபீஸ், பால் பாக்கெட், வேலைக்காரி, பேப்பர்காரனுக்கு என்று சகலமும் ரம்யாதான். சரோவின் அப்பாம்மாவிடம் இங்கு வரச்சொல்லிக் கேட்கலாம். அவர்களை இவள் கூப்பிட்டாள் என்று தெரிந்தால் தாம்தூமென்று ஆகாசத்துக்கும் பூமிக்குமாய்க் குதித்தால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது.

“நன்னிலத்துலேர்ந்து நாங்க எங்கடி அந்தப் பக்கம் வர்றது? இவர்க்கு காலை மடக்கி அரை மணி உட்கார முடியலை… கும்மோணம் வரைக்கும் கூட பஸ்ல போக காலிரண்டும் மறத்த்துப் போய்டறது.  குளிர்ல கொறக்களி இழுக்கறது. ஏழெட்டு மணி நேரம் பஸ்லயோ ட்ரெயின்லயோ எப்டி வருவோம்?” வேகுவேகென்று பேசிவிட்டு ரம்யாவின் மாமியார் ஃபோனை வைத்துவிட்டாள்.

டிஸம்பரில் அரைப்பரீட்சை லீவு விட்டார்கள். பத்து நாளுக்கு துணிமணிகளை மடித்து வைத்துக்கொண்டாள். ட்ராவல்ஸில் ஒரு இன்னோவாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சரோவுடன் நேரே நன்னிலம் வந்து இறங்கிவிட்டாள்.  கிராமத்து வீட்டு வாசல்படியில் கால் வைத்ததும் சரோவின் முகம் பிரகாசமாகிவிட்டது போல இருந்தது ரம்யாவுக்கு.

“வாடீம்மா, வா…” தோளில் கிடந்த காசித்துண்டோடு மாமனார்.

“சுபா குட்டீ… என்னடீது ஈர்க்குச்சியாட்டம் வத்தலும்தொத்தலுமா இருக்கா. சாப்பாடு போடுறியா? இல்லையா? ”

“கஷ்குமுஷ்குன்னு ஆயிட்டானே விஷால். அக்காவோடதை பிடிங்கிச் சாப்பிடறயாடா? படவா.”

மாமியாருக்கு பரம சந்தோஷம். “ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் வெறிக்க வெறிக்க மூஞ்ச்சியைப் பார்த்துண்டு ஒண்டியா ஒக்காந்திருநதோம். எவ்ளோ நாளாச்சு. ஒரு பால் பாயஸம் வச்சுடறேன்.” முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டுச் சுறுசுறுப்பானாள்.

பசங்கள் இருவரும் கொல்லைத் தோட்டத்திற்குள் ஓடினர். சரோவைக் காணோம். வாசலுக்கு ஓடிவந்தாள். திண்ணை காலியாக இருந்தது. பின்னால் தோட்டத்தில் பசங்களிருவரும் கிணற்றை எட்டிப் பார்த்துக் கல்லெறிந்து கொண்டிருந்தனர். கொல்லைக் கடைசி தென்னைமரம் வரை சரோ கண்ணில்படவில்லை. இந்த சந்தர்ப்பத்திலாவது மாமியாரிடம் சொல்லிவிடவேண்டும். அந்தக்கிழவிதான் சரியான ஆள்.

சமையல்கட்டில் பரபரப்பாக ஒரு பெரிய பரங்கிக்கொட்டையைத் தரையில் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவள் ரம்யா தலை தெரிந்ததும் “சாம்பாருக்குதான்.  நம்மாத்து கொல்லேல காய்ச்சது.”

“அம்மா. உங்களான்ட ஒரு விஷயம் சொல்லணும். என் மனசைப் போட்டு குடையறது.”

சட்டென்று அரிவாமனையைத் தள்ளி வைத்தவள், கண்களில் கங்கை பொங்க நின்றவளிடம், “என்னாச்சுடீ? எதாவது…” என்று கலவரமானாள்.

நடந்த முழு கதையும் சொன்னாள். ஆழ்ந்த மௌனத்திற்குப் போனாள் ரம்யாவின் மாமியார். சமையல்கட்டு ஜன்னலைத் தாண்டிக் கண்கள் நிலைகுத்தியிருந்தன. எங்கிருந்தோ இறக்கை சடசடப்பிற்குப் பிறகு ஒரு அனாதரவான ‘கா…’ ஒலி. காற்றில் தென்னைமட்டைகள் உராயும் சர்க் சர்க் சப்தம். பின்னர் பேரமைதி.

“ஐஐடிக்கு படிச்சுண்டிருந்தான். பதினொன்னாவது. ராத்திரி பத்து மணி இருக்கும். வெளில நல்ல காத்தும் மழையுமா பிச்சுண்டு கொட்றது. கரன்ட் கட் ஆயிடுத்து. பொட்டு வெளிச்சம் கிடையாது. இவர் ஆஃபீஸ்ல ஆடிட்னு கோயம்புத்தூர் போயிருந்தார். நானும் சரோவும்தான் ஆத்துல இருந்தோம். சிம்னி வெளக்கு ரேழில ஏத்திவெச்சுட்டு வாசக்கட்டுல இருந்த ரூம்ல  ‘சரோ, என்னடா பண்றே?’ன்னு எட்டிப் பார்க்கறேன். சத்தத்தயே காணும்.”

ரம்யாவுக்கு மாமியார் அடுத்து என்னச் சொல்லப் போகிறாள் என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

“விடுடீ.”

“போட்டுட்டு ஓடிப்போயிடு.”
கொல்லையில் பசங்களின் விளையாட்டுச் சத்தம்.

“ரேழிலேர்ந்து சிம்னி வெளக்கை எடுத்துண்டு வந்து பார்த்தா… புஸ்தகமெல்லாம் தொறந்து கிடக்கு. பெட்ல போர்வை கலைஞ்சிருக்கு. வாசப்பக்கம் ஜன்னல் கதவு காத்துல படார் படார்னு அடிச்சுக்கிறது. இவனைக் காணல. எனக்கு பக்குன்னு ஆயிடுத்து. பத்து மணிக்கு எங்க தேடறது?”

ரம்யாவுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வு அறுந்துபோனது.

“கொல்லைப்பக்கம் போயிருக்கானோன்னு போய் தேடினேன். ஊஹும். இல்லை. சடார்னு கொல்லைக் கதவு வாசக்கதவையும் இழுத்துப் பூட்டிட்டு இவரோட ஃப்ரென்ட் மெயின் ரோடு பக்கத்துல இருக்கார்… அவாள்ட்ட ஹெல்ப் கேக்கலாம்னு தொப்பலா நனைஞ்சுண்டே ஓடினேன்.”

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி தண்ணீர் ஊற்றி புளி கரைத்து ஊற்றினாள். ரம்யா எழுந்து பின்னால் தொடர்ந்தாள்.

“கால் ரெண்டும் பின்றது. வழி நெடுக சேத்திலயும் சகதியிலையும் விழுந்து பெரண்டு நெஞ்சை அடைச்சுக்கறது. மதுரகாளீ  காப்பாத்துன்னு படபடன்னு அடிச்சுக்கறது. முடிகொன்டான் ஆத்துல கரைபுரண்ட வெள்ளமா தண்ணீ ஓடறது. பாலத்தைத் தாண்டும்போது வலது பக்கம் கரை ஓரத்துல இருந்த ராட்சச அரசமரத்துக்குக் கீழே எதோ குமிச்சு வச்சா மாதிரி நிழலாத் தெரிஞ்சுது.”

அப்படியே நிறுத்திவிட்டு ரம்யாவைப் பார்த்தாள். ஏற்கெனவே சப்த நாடியும் அடங்கி நின்றிருந்தாள் அவள்.

“பக்கத்துல ஓடிப்போய் பார்த்தேன். கொட்ற மழையில அரசமரத்தைப் பொத்துண்டு தாரதாரையா ஊத்தறது. அதுக்கு கீழே வஜ்ராசன போஸ்ல இவன் உட்காண்டிருக்கான். ஊரே மழையில வெளில வராம தூங்கறது. ஒரு ஈ காக்கா அங்க இல்லே. கண்ணு ரெண்டும் தொறந்து ஓடற தண்ணியப் பார்த்து நிலைகுத்தி இருக்கு. எனக்கு அப்டியே திக்குன்னு ஆயிடுத்து. சரோ. டேய் சரோன்னு அவனை உலுக்கறேன். திரும்பியே பார்க்காம ஆத்தை வெறிச்சுப் பார்த்துண்டு ஸ்திரமா உட்காண்டிருந்தான்.”

“அம்மா… விஷால் என் ஜடையைப் பிடிச்சு இழுக்கறான்…” என்று உள்ளே வந்தாள் சுபா.

“ஏய்… போய் சமர்த்தா சண்ட போட்டுக்காம வெளையாடுங்கோ…” என்று துரத்தினாள். நெற்றியில் வேர்த்திருந்தது.

“…முதுகுல ரெண்டு வெச்சேன். ஊஹும். அப்புறமா படித்தொறை புள்ளையார்ட்டே போய் க்ரில்குள்ளே கையைவிட்டு கை நிறையா விபூதியை எடுத்துண்டு போய் அவன் நெத்தில பூசினேன். மழையில மொகம் பூரா வெள்ளையா வழிஞ்சிது.  எங்கருந்தோ ஒரு அசுரபலம் எனக்கு வந்துது. அவனோட முதுகுபக்கமா போயி அவனோட  கை கஷ்கட்டுல கையை விட்டுத் தூக்கினேன். எழுந்துண்டான். அப்படியே தரதரன்னு நம்மாத்துக்கு இழுத்துண்டு வந்தேன்.”

ரம்யாவின் மாமியாருக்கு இப்போது மழையில் சென்று நனைந்து வந்தது போல இரைத்தது.

“… தலையெல்லாம் துடைச்சு விட்டு பூஜை அலமாரி முன்னாடி உட்காரவெச்சு வெளக்கேத்தி நெத்திக்கு இட்டுவிட்டு நமஸ்காரம் பண்ணுடான்னு சொன்னேன். பண்ணினான். கடிகாரத்துல மணி பன்னெண்டு அடிச்சுது. சூடா காஃபி கலந்து கொடுத்தேன். குடிச்சான். அஞ்சு பத்து நிமிஷமாச்சு. கொஞ்சம் சாதாரணமாயிருந்தான். என்னடா பண்ணித்து கொழந்தேன்னு தலையைக் கோதி கேட்டேன். அப்போ அவன் சொன்னது எனக்கு உள்ளுக்குள்ளே சுரீர்னு இழுத்துது. கேட்டப்போ படபடன்னு வந்துடுத்து.”

“அம்மா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு. முழுசா கேக்கறத்துக்குள்ள மயக்கமே வரும் போல்ருக்கு. ப்ளீஸ். சீக்கிரம் சொல்லிடுங்கோ…” ரம்யா மாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“ம்மா… எனக்கு ஆத்துல இருக்கவே பிடிக்கலை. படிக்க பிடிக்கலை. சாப்ட பிடிக்கலை.”

“ஏன்டா கொழந்தே. அப்பா எதாவது வெசாளா? அம்மா ஏதும் சொல்லலைடா.”

“இல்லம்மா. படிக்காம சாப்டாம தூங்காம எதப் பத்தியும் யோசிக்காம அமைதியா ஒரு இடத்துல அப்டியே உட்கார்ந்துடனும் போல்ருக்கு.  சன்யாசி மாதிரி… ”

“அதுக்கு ஏன்டா அர்த்தராத்ரிலே ஆத்துக்கு போனே?”

“நம்ம ஆத்துக்குள்ள இருக்க வேண்டாம்னு தோணித்து. இன்னும் கொஞ்ச நாழி கழிச்சு முடிகொண்டான்குள்ள இறங்கிடனும்னு இருந்தேன். அப்டியே அது இழுத்த இழுப்புக்கு கூட போயிட்டேன்னா படிக்கவேண்டாம்… சாப்ட வேண்டாம்… தூங்கவேண்டாம்… சிரிக்க வேண்டாம்…  நிம்மதி… பூரண நிம்மதி…”

ரம்யாவுக்கு என்னவோ போல இருந்தது. செத்துப்போயிடுவானோ? உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“ஏன்டா அப்டியெல்லாம் யோசிக்கறேன்னு அதட்டினேன். நிதானமானான். இருந்தாலும் அப்பப்போ பேய் புடிச்சா மாதிரி உத்தரத்தைப் பார்ப்பான். கொஞ்ச நாள்ல எல்லாம் செரியாப் போய்டுத்து. ஐஐடில செலகட் ஆனான். நல்லா படிச்சான். நல்ல உத்யோகம். ரம்பையாட்டம் பொண்டாட்டி. தங்க ரேக்கா ரெண்டு கொழந்தேள். மாறிட்டான்னு நினச்சேன். இப்ப நீ சொல்றது என் அடிவயத்தைப் பிசையறதேடீ.”

இருவரும் எதுவும் பேசவில்லை. ரம்யா வந்ததன் நோக்கம் அறிந்துகொண்டாள் சரோவின் அம்மா. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிவிட்டார்கள்.

“எங்கடி அவன்?” சரோவின் அம்மா கேள்விக்குதான் முழித்துக்கொண்டாள் ரம்யா.

“வந்ததுலேர்ந்து ஆளைக் காணூம்மா.”

“அச்சச்சோ… ஓடுடீ… எங்க இருக்கான்னு தேடு…”

முடிகொண்டான் ஆறு மதிய வெய்யிலில் தண்ணீரில்லாமல் வாழ்விழந்த பாலையாக இருந்தது. ஹோவென்று கிளைவிரித்த அரசமரம் தனியாக நின்றது. இரண்டு கிடா ஆடுகள் முட்டி முட்டிச் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. தூரத்தில் கிழவி ஒருத்தி மாட்டுக்குப் புல் அறுத்துக்கொண்டு போவது தெரிந்தது.

கரையின் இடதுகோடியிலிருந்து வலது கோடிவரை ரம்யாவின் கண் அலசியது. யாருமில்லை. பாலம் தாண்டி மெயின் ரோடு செல்லும் சாலையில் ஏறினாள். இரண்டு பக்கமும் புளிய மரம் காவலாக நிற்கும் தார் ரோடு. செருப்பை மறந்து ஓடிவந்ததால் வெய்யில் சூட்டில் கால் பொறிந்தது.

ஊரின் பெயர்ப்பலகை தாண்டி யாரோ வெறும் கோவணத்துடன் நடந்து போவது தெரிந்தது. தகிக்கும் ரோட்டில் அவரது காலில் செருப்புக்கூட இல்லை. நடையைப் பார்த்தால் சரோ மாதிரிதான் இருந்தது. ரம்யா ஓடிப்போய்ப் பார்க்கலாமா வேண்டாமா என்று நின்றுகொண்டிருந்தாள். தூரத்தில் முடிகொண்டான் ஆற்றின் பாலத்துக்கு அக்கரையில் சுபாவையும் விஷாலையும் இருகையில் பிடித்துக்கொண்டு மாமியார் வேகுவேகென்று வந்துகொண்டிருந்தார்.

மனமென்னும் குரங்கா? ஊஹும். இதை அப்படிச் சொல்லமுடியாது.

சிவன் கோயில் பிரகாரத்தில் நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வாயில் தமிழ் மணக்க வரும் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு வலம் வந்த போது அவர் சொன்ன தேவாரம் ஒன்று ரம்யாவிற்கு இப்போது நினைவுக்கு வந்தது.

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!

ஆசைக்கடலில் தள்ளாடும் மனப்படகை மீட்கும் கயிறு எது? நீளமெத்தனை? என்ன விலை? எவரறிவார்?

சரோ உணர்ந்திருப்பானோ?

Posted on Leave a comment

துபாஷி (பாகம் 2) – பி.எஸ்.நரேந்திரன்

(வலம் பிப்ரவரி இதழில் வெளியான
கட்டுரையின் தொடர்ச்சி.)
ஆனந்த ரெங்கம் பிள்ளை இந்திய வரலாற்றின்
முக முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்தவர். வியாபாரிகளாக இந்தியாவிற்குள் நுழைந்த பிரெஞ்சுக்காரர்கள்
மற்றும் ஆங்கிலேயேர்கள் மெல்ல மெல்லப் பலமடைந்து வரும் சித்திரத்தை அவரது குறிப்புகளின்
மூலம் முன்வைக்கிறார். ஆனால் இந்திய வரலாற்றாய்வாளர்கள் எவரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.
தமிழ்நாட்டிலும் அவருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. அவரது
நாட்குறிப்புப் புத்தகங்கள் இன்றைக்குத் தொலைந்து போய்விட்டன என்று தெரியவருகையில்
வருத்தமே மிஞ்சுகிறது.
பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்த அவரது நாட்குறிப்பிலிருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அல்லது
சுவாரசியமானவையாக நான் நினைக்கும் சில குறிப்புகளை இங்கு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
இதற்கு முன்பே அவரது நாட்குறிப்புகள் பலராலும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சன் ஆனந்த ரெங்கம் பிள்ளையில் நாட்குறிப்பின் அடிப்படையில் நாவல் எழுதியிருக்கிறார்.
இருப்பினும், இங்கு இதனைப் படிக்கின்ற எவருக்கேனும் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவம்
உணர்த்தப்பட்டால் அது குறித்து மகிழ்ச்சியே.

******
செவ்வாய், அக்டோபர் 4-1738, காலயுக்தி
ஆனி 1:
…(திருச்சினாப்பள்ளியைப் பிடித்த)
சந்தா சாஹிப்பும், அவனுடைய படைகளும் கிராமங்களில் பயிர்களை எரித்தும் கொள்ளையடித்தும்
சோழ நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர் என்று தகவல். நிறையப்பேர் பிடிக்கப்பட்டு
அடிமைகளாகத் தூக்கிச் செல்லப்பட்டிருக்கின்றனர். கிராமவாசிகள் அங்கிருந்து தப்பி கொள்ளிடத்தின்
வடகரையிலும் தரங்கம்பாடியிலும் நாகப்பட்டினத்திலும் தஞ்சமடைந்திருக்கினர். எங்கும்
அளவிடமுடியாத குழப்பம் நிலவுகிறது. வலிமையற்ற தஞ்சை அரசன் அவனது கோட்டைக்கதவுகளை அடைத்து
உள்ளேயே பதுங்கிவிட்டான் எனத் தெரிகிறது…
செவ்வாய், ஜுன் 25-1743, ருத்ரோத்ரி
ஆனி 15:
…இன்றைக்கு மறக்கவியலாத ஒரு சம்பவம்
நிகழ்ந்தது. அடிமைகளைப் பிடித்து விற்கும் பரமானந்தன் என்கிற வியாபாரியானவன் கைது செய்யப்பட்டு,
கை கால்களில் விலங்கிடப்பட்டுக் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டான். கோட்டையின் கிடங்கினை
நிர்வகிக்கும் கார்னேவின் (Cornet) கீழ் பணிபுரியும் திருவாளர் சுடே (Soude), பரமானந்தனிடம்
பணம் கொடுத்து அடிமைகளைப் பிடித்துக் கொண்டுவரும்படிப் பணித்திருக்கிறார்.
பரந்தாமனும் அவனது ஆட்களும் அதன்படியே
ஆட்களைப் பிடித்துக் கொண்டுவந்து தந்திருக்கிறார்கள். சில பேர்களைப் பணம் கொடுத்து
வாங்கியிருக்கிறார்கள். மற்ற சிலரை ஏமாற்றிப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
வெற்றிலைக்குத் தடவும் சுண்ணாம்பில் மயக்க மருந்து கலந்தோ அல்லது அவர்கள் எப்பொழுதும்
சுமந்து செல்லும் பெட்டியிலிருக்கும் மாயாஜால வர்ணத்தைத் தடவியோ அல்லது ஆட்களை ஒரே
அமுக்காக அமுக்கிப் பிடித்தோ கொண்டு வந்து அடிமைகளாக ஆக்கியிருக்கிறார்கள். இப்படியாகப்
பிடிக்கப்பட்ட பல அடிமைகள் பாண்டிச்சேரிக்குள் ரகசியமாகக் கொண்டுவரப்பட்டார்கள்.
மிக ரகசியமாக நடந்த இந்த விஷயம்
கீழ்க்கண்ட வகையில் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
பாண்டிச்சேரிக்குள் வேலை வெட்டியில்லாமல்
திரியும் மனில்லா மலையப்பன் என்பவன் பரமானந்தனை அடிக்கடிப் பார்க்கப் போவது வழக்கம்.
அப்போது அங்கு தான் பார்த்த சமாச்சாரங்களை இருசப்பமுத்து செட்டியிடமும் குடைக்கார ரங்கப்பனிடமும்
சொல்லியிருக்கிறான். அவர்கள் இன்னும் நான்கு செட்டிகளுடன் சேர்ந்துகொண்டு, அடிமைகள்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு குதிரை வாங்குபவர்கள் போல நடித்துப் போயிருக்கிறார்கள்.
போன இடத்தில் நான்கு செட்டிகளும் ஒரு செட்டிச்சியும் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதைக்
கண்டிருக்கிறார்கள்.
பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள்
அங்கு வந்த செட்டிகளுக்கு சொந்தக்காரர்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஒரே ஓட்டமாக ஓடிவந்து
அவர்களின் கால்களில் விழுந்து கதறி அழுதிருக்கிறார்கள். விசாரித்த பொழுது அந்தக் கட்டடத்தில்
இருந்தவர்கள் கூலிவேலை தருவதாகச் சொல்லி அவர்களை அங்கு அழைத்து வந்ததாகவும், அவர்கள்
அந்தக் கட்டடத்திற்குள் நுழைந்ததும் அவர்களின் தலைமுடியை மொட்டையடித்து, கை கால்களில்
விலங்கு மாட்டியதாகவும் கூறியிருக்கிறார்கள். அங்கிருந்த இன்னொரு ஆள் தனக்கு சுண்ணாம்பில்
மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னைப் பிடித்துக்கொண்டு வந்ததாகச் சொல்லியிருக்கிறான்.
அதையும் விட, கட்டடத்திற்குள் கூத்து நடப்பதைப் பார்க்க
வரும்படி இன்னொருவனை அழைத்து அவன் கட்டடத்தினுள்ளே நுழைந்ததும் பிடித்துக் கட்டி, தலையை
மொட்டையடித்து வைத்திருக்கிறார்கள்.
புல் வெட்டுபவர்களையும் மரம் வெட்டிகளையும்
கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கும் வேலை தருவதாக ஆசைகாட்டி அழைத்து வந்து
கட்டிப் போட்டிருக்கிறார்கள் அங்கிருந்த அடிமை வியாபாரிகள். தரங்கம்பாடிக்கு அருகிலிருக்கும்
ஒரு கிராமத்திலுந்த ஒரு வீட்டிலும் இதுபோலப் பல அடிமைகள் பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தரங்கம்பாடியில் இப்படிப் பிடிக்கப்பட்டவர்கள்
ஐம்பது அல்லது நூறுபேர்கள் சேர்ந்ததும் இரவோடிரவாக அவர்களைப் படகுகளில் ஏற்றி அரியாங்குப்பத்தில்
பரமானந்தனுக்குச் சொந்தமான இன்னொரு வீட்டில் கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
அங்கு அவர்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு, கறுப்புத்துணிகள் அணிவிக்கப்பட்டு, கால்களில்
விலங்குகள் பூட்டப்பட்டன. மறு நாள் இரவு கால்விலங்குகள் அவிழ்க்கப்பட்டு சுடே
(Soude) வீட்டில் மீண்டும் அடைத்து வைக்கப்பட்டார்கள். பிடிபட்டவர்களைக் கொண்டு செல்லக்
கப்பல் வரும்வரை அவர்கள் ரகசியமாகப் பிடித்து வைக்கப்பட்டார்கள்.
அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பல்
வந்ததும் அவர்களை ரகசியமாகப் படகுகளில் ஏற்றிக் கப்பலில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.
இந்தச் செயல் மூன்று அல்லது நான்கு முறைகள் இதற்கு முன்னர் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் இருசப்ப முத்துச் செட்டியும் ரங்கப்பனும் கண்டுபிடித்துச் சொல்லும்வரையில் இது
வெளியில் தெரியவில்லை. அவர்களிருவரும் சுடேவிடம் சென்று, அவருடைய வீட்டில் பலர் கடத்தி
வரப்பட்டு அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலர் தங்களது
சொந்தக்காரர்கள் என்றும், மேலும் இதனைக் குறித்து விசாரணை செய்ய வேண்டும் சொல்லியிருக்கின்றனர்.
அதற்குப் பதிலளித்த சுடே, அவர்களில்
பலரைத் தான் தனது சொந்தப் பணம் செலவழித்து வாங்கியதாகவும், அங்கிருக்கும் ஐந்து பேர்கள்
மட்டும் பொய்யான காரணங்களுக்காக அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இதனைக் குறித்து பேசும்படி துபாஷான கனகராய முதலியிடம் அனுப்பி வைக்க, அவரோ அவர்களை
இருசப்ப முத்துச் செட்டியிடம் பேசும்படி அனுப்பி வைத்திருக்கிறார். நிலைமையின் விபரீதத்தை
உணர்ந்த இருசப்ப செட்டி அவர்களிடம் பேச மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து சுடே என்னிடமும்
கனகராய முதலியிடமும் சேஷாச்சல செட்டியிடமும் இருசப்ப முத்து செட்டியிடமும் வந்து இந்த
விஷயத்தைக் காதோடு காதாக ரகசியமாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டோம்.
கனகராய முதலி இன்று காலை கவர்னரிடம்
சென்று நடந்த விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார். கவர்னர் பரமானந்தனைப் பிடித்து வரும்படி
பியூன்களை அனுப்பி வைத்தார். பரமானந்தனின் வீட்டுக்குப் போன பியூன்கள் அவரைக் கைது
செய்து சிறையிலடைத்தார்கள். அங்கிருந்த இன்னொரு ஆசாமியான அருளானந்தன் என்பவன் சுவரேறிக்
குதித்து அருகிலிருந்த மிஷன் சர்ச்சிற்குள் ஒளிந்து கொண்டான்.
விசாரணைக்குப் பிறகு சுடே உடனடியாக
பதவி நீக்கம் செய்யப்பட்டார். வேறொரு ஐரோப்பியன் அவரது பதவியில் நியமிக்கப்பட்டான்.
சனிக்கிழமை, டிசம்பர் 21-1743,
ருத்ரோத்ரி மார்கழி 10:
இன்று காலை கவர்னர் தியூப்ளே வெளியிட்ட
உத்தரவின்படி, இன்று முதல் பாண்டிச்சேரியில் இருக்கும் அனைத்து வியாபாரிகளும் பிரெஞ்சுக்
கம்பெனியின் சகல ஊழியர்களும் ராணுவத்தினரும் தங்களுக்கென ஆளுக்கொரு வீட்டை மொரட்டாண்டி
சாவடியில் கட்டிக் கொள்ள வேண்டும். அங்கு உருவாகும் நகரம் இனிமேல் ‘தியூப்ளே பேட்டை’
என்று அழைக்கப்பட வேண்டும். அவ்வாறு அழைக்காமல் ‘மொரட்டாண்டி சாவடி’ என்று அழைக்கும்
ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
சனிக்கிழமை, அக்டோபர் 16-1745,
குரோதன ஐப்பசி 3:
(குறிப்பு
: கீழ்க்கண்ட தகவல் மொழிபெயர்ப்பில் உள்ளபடியே மொழியெர்க்கப்பட்டுள்ளது என்பதினை மனதில்
கொள்ள வேண்டுகிறேன்.)
இன்றைக்குக் காலை 8 மணியளவில் ஒரு
மறக்கவியலாத சம்பவம் நிகழ்ந்தது.
காரைக்காலிலிருந்து பாண்டிச்சேரிக்கு
வந்த கிறிஸ்தவப் பாதிரி ஒருவர் சர்ச்சில் நிகழ்ந்த பூசனைகளின் போது, சாதியில் தாழ்த்தப்பட்டவர்களான
பறையர்கள் உயர்சாதி கிறிஸ்தவர்களுக்கும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதைக் கண்டார். சர்ச்சின்
வடபகுதியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டு, ஒருபக்கம் தாழ்த்தப்பட்ட பறையர்களும், இன்னொருபுறம்
உயர்சாதி கிறிஸ்தவர்களும் ஐரோப்பியர்களும் உட்கார்ந்திருந்தார்கள். இந்தியக் கிறிஸ்தவர்களின்
இரு பிரிவினரும் இந்துக்களாக இருந்து மதம் மாறியிருந்தாலும், மதமாற்றம் பெரியதொரு வித்தியாசத்தைக்
கொண்டு வராமல் அதே சாதிப்பிரிவினையுடன் தொடர்ந்து இருந்து வந்தனர்.
காரைக்காலிலிருந்து வந்த பாதிரியாருக்கு
இது பிடிக்காமல், பன்னி பறச்சேரி, பெரிய பறச்சேரி, சுடுகாட்டுப் பறச்சேரி, ஒழாண்டை
பறச்சேரி போன்ற பகுதியில் வசிக்கும் பறையர்களையும், தோட்டி மற்றும் பிற தாழ்த்தப்பட்ட
கிறிஸ்தவர்களையும் இதனை எதிர்த்துக் கலகம் செய்யத் தூண்டினார். அவர்களெல்லாம் ஒன்று
கூடி பாண்டிச்சேரியின் மூத்த பாதிரியார்களிடம் புகார் செய்தனர்.
நாங்களெல்லாம்
இயேசுவைப் பிரார்த்தித்து அவரைப் பின்தொடர்கிறபடியால் எங்களையும் எல்லாரையும் போல நடத்த
வேண்டும். பரமண்டலத்திலிருக்கிற பிதா யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் உயர்சாதி
கிறிஸ்தவர்கள் எங்களைப் பிரித்துப் பார்க்கிறார்கள். நீங்கள் அதனையும் ஆமோதித்து நடக்கிறீர்கள்.
எதற்காக எங்களைப் பிரித்து வைக்கிறீர்கள் என்று நீங்கள் விளக்கமளிக்க வேண்டும்
” என்று கேட்டிருக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை
அறிந்த பாண்டிச்சேரி பாதிரியார் சர்ச்சில் கட்டப்பட்டுள்ள சுவரை உடனடியாக இடிக்கும்படி
உத்தரவிட்டார். பின்னர் அங்குக் கூடியிருந்தவர்களிடம், “எனது பிள்ளைகளான நீங்களனைவரும்
ஒருவரோடொருவர் கலந்து மகிழ்ச்சியாகப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும்” என்று
சொல்லி அவர்களை ஆசிர்வதித்திருக்கிறார். அதற்குப் பிறகு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில்
பறையர்கள், உயர்சாதி தமிழர்கள், ஐரோப்பியர்கள் என அனைவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள்.
உள்ளூர் கிறிஸ்தவப் பெண்மணிகளும்
அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். கனகராய முதலியின் தங்கை மகனின்
மனைவியும் அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளப் போயிருக்கிறாள். அவளது சாதிப் பெண்கள்
செய்வது போல உடலெங்கும் நகைகளை அணிந்து
கொண்டு, உடல் தெரியும்படியான மெல்லிய மஸ்லின் சேலையை உடுத்திக் கொண்டு, வாசனைத் திரவியங்களைப்
பூசிக்கொண்டும் போன அவள், பிரசங்கம் செய்யும் பாதிரியாருக்கு அருகில் முழந்தாளிட்டு
அமர்ந்து அவர் சொல்வதனை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள்.
அவளது உடலில் பூசியிருந்த வாசனைத்
திரவியங்களின் வாசம் பாதிரியின் மூக்கைத் துளைத்திருக்கிறது. அத்துடன் அவள் அணிந்து
வந்த உடையும் அவரைக் கோபமூட்ட, பாதிரி பிரசங்கத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, அவரது
கையிலிருந்த தடியால் அந்தப் பெண்மணியின் கொண்டையைக் குத்திக்காட்டிக் கோபத்துடன்,
“நீயொரு கல்யாணமான பெண்பிள்ளையா அல்லது நாட்டியக்காரியா? உன் புருஷனுக்குக் கொஞ்சம்
கூட இதனைக் குறித்து அசிங்கமில்லையா? உன்னை மாதிரியான உயர்சாதிப் பெண்பிள்ளை இப்படி
உடல் தெரிய உடையணிந்து முலைகளையும், கை கால்களையும் காட்டிக் கொண்டு தேவாலயத்திற்கு
வரலாமா? உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறு” என்று கோபத்துடன் கத்தியிருக்கிறார்.
அவளை அங்கிருந்து விரட்டிய பாதிரி,
பின்னர் அங்குக் கூடியிருந்த சாதிக் கிறிஸ்தவர்களிடம் இனிமேல் சர்ச்சிற்கு யாரும் பிற
தமிழ்நாட்டுப் பெண்களைப் போல நகைகளை அணிந்துகொண்டோ, அலங்கரித்துக்கொண்டோ அல்லது மஸ்லின்
சேலை உடுத்திக் கொண்டோ வரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த
கிறிஸ்தவர்கள் பாதிரியுடன் வாதிட்டிருக்கிறார்கள். வார்த்தை முற்றி பாதிரியின் உடுப்புடன்
அவரைத் தூக்கிய உள் நாட்டுக் கிறிஸ்தவர்கள் அவரை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்ததுடன்,
“இனிமேல் உன் சர்ச்சுக்கு வரமாட்டோம்” என்று மிரட்டியிருக்கிறார்கள். உடனடியாக அங்கு
சென்ற கனகராய முதலி அவர்களை சமாதானம் செய்திருக்கிறார்.
.

கனகராய முதலி அவ்விடத்தை விட்டு
அகன்றதும் கவர்னரிடம் ஓடிய பாதிரி, கிறிஸ்தவர்கள் சர்ச்சின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாமல்
கிளர்ச்சி செய்கிறார்கள் என்றும், கூட்டம் கூடித் தனக்கெதிராகப் போராடுவதாகவும் சொல்லியிருக்கிறார்.
கவர்னர் உடனடியாக கிரிமாசி பண்டிட்டின் தலைமையில் பியூன்களை அனுப்பி நான்கு பேர்களுக்கு
மேல் கூடுகிற கிறிஸ்தவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.
அதற்குப் பிறகு தெருவில் கூட்டம் கூடி நிற்பதனை கிறிஸ்தவர்கள் நிறுத்தி விட்டார்கள்.
Posted on Leave a comment

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – லக்ஷ்மணப் பெருமாள்

பல கட்டங்களாக நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மார்ச் 11, 2017 அன்று வெளிவந்தது. சட்டசபைத் தேர்தல்
நடந்த மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா. இதில்
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. இதர நான்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான
ஆட்சி அமைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஏறக்குறைய மூன்று
ஆண்டுகள் கழித்து நடந்த தேர்தல் என்பதால் மிகுந்த கவனத்தைப் பெற்ற தேர்தலாக அமைந்தது.
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச முடிவுகள் 2019 தேர்தலுக்கான
முன்னோட்டமாக இருக்கும் எனத் தேர்தல் நடந்தபோது மோடி ஆதரவாளர்களில் ஆரம்பித்து மோடி
எதிர்ப்பாளர்கள், வெறுப்பாளர்கள் வரை கருத்துரைத்தனர். இந்தத் தேர்தல் முடிவுகளை,
2012ம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளோடும், 2014ம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத்
தேர்தல் முடிவுகளோடும் ஒப்பிட்டுப் பேசலாம். ஆம்ஆத்மி கட்சியின் உதயம் தேசிய அளவில்
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, ஒவ்வொரு மாநிலத்திலும் இதர தேசியக் கட்சிகளின்
செல்வாக்கு மற்றும் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு சரிந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா
என்ற கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகளை மேலோட்டமாக ஒப்பிட
வேண்டுமானால், ஆட்சியில் இருந்த கட்சிகள் தேர்தலில் தத்தம் மாநிலங்களில் பின்னடைவைச்
சந்தித்துள்ளன. பஞ்சாப், கோவா தவிர்த்து பிற மாநிலங்களில், மோடியின் தலைமையில் அபரிமிதமான
வெற்றியைப் பாஜக பெற்றுள்ளது. மாநிலக் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள
தேர்தல் இது.
உத்திரப் பிரதேசம்:
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்
பிரதேசம் 403 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் பாஜக அணி 325 இடங்களைப் பெற்றுள்ளது.
312 இடங்களில் பாஜகவும், கூட்டணிக் கட்சிகளான அப்னா தள் 9 இடங்களிலும், சுஹேல் தேவ்
சமாஜ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சமாஜ்வாதி – காங்கிரஸ் அணியில் இருகட்சிகளும்
முறையே 47 மற்றும் 7 இடங்களைப் பெற்றுள்ளன. பஹுஜன் சமாஜ்வாதி கட்சி 19 இடங்களையும்,
சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பாஜகவைப் பொருத்தவரையில் 2012ல் 47 இடங்களை
மட்டுமே பெற்றிருந்த கட்சி 2017 தேர்தலில் 312 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1980ல் அதிக பட்சமாக 309 இடங்களைப் பிடித்திருந்தது.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளிட்ட சட்டசபைத்
தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் பாஜக 328 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது 312 இடங்களில் வென்றுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜக அணி 44% வாக்குகளைப்
பெற்றிருந்தது. 3% வாக்குகளை இழந்து 41% வாக்குகளை இத்தேர்தலில் பெற்றுள்ளது. ஆனால்
2012 சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 16%. தற்போது அது 25% அதிகரித்துள்ளதையும்
காண முடிகிறது. உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன.

2012, 2014
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
பாரதிய ஜனதா
15.00%
42.63%
39.63%
சமாஜ்வாதி
29.13%
22.35%
21.80%
காங்கிரஸ்
11.65%
7.53%
6.20%
பஹுஜன் சமாஜ்வாதி
25.91%
19.77%
22.20%
1.      மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த தேசியக்
கட்சியான பாஜக 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாநிலத்தில்
இரு பெரும் மாநிலக் கட்சிகள் (பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி கட்சிகள் தேசிய அந்தஸ்து
பெற்று இருந்தாலும் மற்ற மாநிலத்தில் ஆட்சிக்கு வராததால்) அசுர பலத்துடன் ஆட்சியை மாறி
மாறிப் பிடித்து வந்த நிலையில் இம்முறை பாஜக அதை முறியடித்தது மட்டுமல்லாமல், சிங்கத்தின்
குகைக்குள் சென்று அதன் பிடரியை இழுத்துப் போட்டதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. மோடி
தேசிய அரசியலுக்குள் நுழைந்த பின்னர்தான் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் தனது வாக்கு சதவீதத்தைக்
கூட்டியோ தக்கவைத்துக் கொண்டோ செல்வதைக் காண முடிகிறது.
2.      மோடி 2014ல் பதவியேற்ற பின் மஹாராஷ்டிரா, ஹரியானா
போன்ற மாநிலங்களிலும் இச்சாதனையைச் செய்து காட்டியது. பாஜகவையும் காங்கிரசையும் இப்படி
ஒப்பிட்டால்தான் இரு கட்சிகளின் தேசிய வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் புரிந்து கொள்ள
முடியும். காங்கிரஸ் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்ட பின்னர் எந்தவொரு மாநிலத்திலும்
மக்கள் நம்பிக்கையைத் தனித்து நின்று பெற்று ஆட்சி அமைத்ததாகக் கடந்த கால வரலாறு இல்லை.
உதாரணமாக, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்
அதன் வீழ்ச்சியைக் காணலாம். பீகாரில் பாஜக எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
போன்ற ஒரு தோற்றமுள்ளது. காங்கிரஸ் மற்றும் லாலுவும், நிதிஷ் குமாரும் இணையாமல் தேர்தலை
எதிர்கொண்டிருந்தால் பீகாரில் கூட பாஜக ஆட்சி அமைத்திருக்கும். உத்திரப் பிரதேசத்தில்கூட
இந்த அடிப்படையில்தான் காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்கொண்டன.
பகுஜன் சமாஜ்வாதி தனித்து நின்றதால் பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
3.      ராகுல் காந்தி கட்சியைத் தனித்து வளர்க்க வேண்டுமென்று
அதிகக் கவனம் செலுத்திய மாநிலங்கள் பீகார், உத்திரப்பிரதேசம். ஆனால் தனது கட்சியால்
இனி பாஜகவையோ, மாநிலக் கட்சிகளையோ எதிர்கொள்ள இயலாது என்பதாலும், மீண்டும் இம்மாநிலங்களில்
ஆட்சியைப் பிடிக்க இயலாது எனக் கருதி மாநிலக் கட்சிகளோடு தன்னை இணைத்துக் கொண்டு அணிலாகச்
செயல்பட முனைந்தும் கூட உபியில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. முற்றிலுமாக
உபியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் கூட
காங்கிரஸ் 4 இடங்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4.      உபி முடிவுகளில்
அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பஹுஜன் சமாஜ்வாதி கட்சியே! குறிப்பாகத் தலித்
மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூட இம்முறை பகுஜன் சமாஜ்வாதி கட்சி அதிகம் வெற்றி
பெறவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் அக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை.
தற்போது பதவியிலுள்ள ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் முடியும்போது அக்கட்சிக்கு
ஒரு எம்பி மட்டுமே இருப்பார்.
5.      சமாஜ்வாதி கட்சிக்கு, ஆட்சிக்கு எதிரான அலையும்,
அதை விட மோடி அலையும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால்
மீண்டும் சமாஜ்வாதி கட்சி எளிதில் எழுந்து நிற்கும் வாய்ப்புள்ளதை மறுக்க இயலாது.
6.      பாஜக உபியில் தனது வெற்றியைத் தக்கவைத்துக்
கொள்ள செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. மக்களுக்குச் சேவை செய்யும் இன்னொரு மோடியை,
சிவராஜ் சிங் சௌகானை உபிக்கு அடையாளப்படுத்துவது மட்டுமே. இதில் தவறிழைத்தால் கட்சி
மீண்டும் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் வாய்ப்புகூட உருவாகும் என்பதை உணர்ந்து
செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதைப் பொறுத்தே 2019 லோக்சபாவின் வெற்றி தோல்வி பாஜகவிற்கு
அமையும். தற்போது உத்திரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத்
மக்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
7.      இதையெல்லாம் மீறி உத்திரப் பிரதேசத்தில்
பாஜக செய்திருக்கும் சாதனை, ஜாதி மற்றும் மத ரீதியாக மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலையை
அடியோடு மாற்றிக் காண்பித்திருப்பதுதான்.
இதை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரு பாடம்
என்றுகூடச் சொல்லலாம். ஓரளவுக்கு மேல் மத மற்றும் ஜாதி ரீதியான பிளவுகள் ஒரு கட்சியின்
வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது என்பதை உரக்க நிரூபித்திருக்கிறது பாஜக.
பஞ்சாப்:
சிரோன்மணி அகாலிதளம், பாஜக கூட்டணி ஆட்சியே கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாபில் இருந்தது.
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவியதை, கடந்த லோக்சபா
தேர்தலிலேயே இக்கூட்டணிக்குக் கிடைத்த எண்ணிக்கையிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.
மோடி அலையின் காரணமாக லோக்சபா தேர்தலில் இந்த அணி 6/13 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது சட்டசபைத் தேர்தல் என்பதும், ஆட்சிக்கு எதிரான அலை வீசியதும், இவ்விரு கட்சிகளுக்கும்
பெருத்த அடியைத் தந்துள்ளது.
மொத்தமுள்ள 117 இடங்களில் , முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைச்
சேர்த்து மொத்தமாகப் பார்த்தால், ஆம்ஆத்மி கூட்டணியைக் காட்டிலும் சிரோன்மணி அகாலிதளம்
+ பாஜக அணி  அதிக இடங்களில் முதலிரண்டு இடங்களைப்
பெற்றுள்ளது. சிரோன்மணி + பாஜக அணி மொத்தமாக 80 இடங்களில் முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
ஆனால் ஆம்ஆத்மி + லோக் இன்சாப் அணி 48 இடங்களில் மட்டுமே முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
பாஜகவை நேரடியாக ஆம்ஆத்மி கட்சி எதிர்கொண்ட இடங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் ஆம்ஆத்மியைக்
காட்டிலும் இரு மடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

2012, 2014 & 2017 கட்சிகள் பெற்ற வாக்கு
சதவீதம் :
வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
காங்கிரஸ்
40.09%
33.19%
38.50%
சிரோன்மணி அகாலிதளம்
34.73%
26.37%
25.20%
பாரதிய ஜனதா
7.18%
8.77%
5.40%
ஆம் ஆத்மி
**
24.40%
23.70%
** ஆம் ஆத்மி கட்சி துவங்கப்படவில்லை.
பஞ்சாப் தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்ள
வேண்டும்?
1.      சிரோன்மணி அகாலிதளம், பாஜக ஆட்சிக்கு எதிரான
அலை அக்கட்சிகள் பல இடங்களை இழக்கக் காரணமாக அமைந்துள்ளது.
2.      கடந்த 2014 லோக்சபா தேர்தலில் டெல்லி உட்பட
அனைத்து மாநிலங்களிலும் ஓரிடத்தைக் கூடப் பெறாத ஆம்ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மட்டும்
புத்துயிர் அளிக்கும் விதமாக 4 இடங்களை வழங்கி பஞ்சாபில் ஆம்ஆத்மிக்கான பலத்த எதிர்பார்ப்பை
உருவாக்கி இருந்தது. மேலும் வெளிவந்த பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும், ஆம்ஆத்மிக்கும்
காங்கிரசிற்கும் இடையே பலத்த போட்டி இருக்குமென்றும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும்
என்றும் கூறின. அதை வைத்துப் பார்த்தாலும் சரி, லோக்சபா தேர்தல் முடிவுகளை வைத்துப்
பார்த்தாலும் சரி, ஆம்ஆத்மிக்கு இத்தேர்தல் முடிவுகள் மாபெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
வாக்கு சதவீத அடிப்படையில் சிரோன்மணி அகாலிதளத்தைக் காட்டிலும் குறைந்த வாக்குகளைப்
பெற்றாலும் இடங்களின் எண்ணிக்கையில் அதிக இடங்கள் என்ற அடிப்படையில் எதிர்க் கட்சி
என்ற அந்தஸ்தை ஆம்ஆத்மி பெறுவது அக்கட்சிக்கு ஒருவகையில் நல்லதே. எதிர்காலத்தில் ஆம்ஆத்மி
கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்றோ, ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி மீது வெறுப்பு வந்தால்
சிரோன்மணி அகாலிதளம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்றோ எவராலும் உறுதியாகச் சொல்ல
முடியாது.
3.      காங்கிரஸ் எண்ணிக்கை அடிப்படையில் நோக்கும்
போது மாபெரும் வெற்றியைக் குவித்துள்ளது. ஆனால் 2012 சட்டசபை வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டால்
ஆம்ஆத்மியிடம் தனக்கான வாக்குகளை இழந்திருக்கிறது என்பதைக் காணலாம். காங்கிரஸ் இம்மாநிலத்தில்
வெற்றி பெற, அமரிந்தர் சிங் ஒரு  தனித்த அடையாளம்
என்பதையும், காங்கிரஸின் பலம் பொருந்திய சில மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று என்பதையுமே
தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. இத்தேர்தலைப் பொருத்தமட்டில் ஆம்ஆத்மியின் மீது
பெரிய நம்பிக்கை வைக்காமல், காங்கிரஸ் ஆட்சியமைக்கவே மக்கள் விரும்பியுள்ளார்கள்.
4.      சிரோன்மணி அகாலிதளம் பாஜக அணி வாக்கு சதவீதம்,
இடங்களின் எண்ணிக்கை இரண்டையுமே இழந்துள்ளது. இக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை ஆம்ஆத்மியை
ஒப்பிடுகையில் 5.7% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதுதான்.
உத்தராகண்ட்:
உத்தராகண்ட் மாநிலத்தின் சட்டசபைத் தொகுதிகளின்
எண்ணிக்கை 70. உத்தராகண்ட் மாநிலத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது.
கீழுள்ள அட்டவணையில் கட்சிகள் பெற்றுள்ள இடங்களைக் காணலாம்.


2012, 2014
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
காங்கிரஸ்
33.79%
34.40%
33.50%
பாரதிய ஜனதா
33.13%
55.93%
46.50%
உத்தராகண்ட் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?
1.      உத்தராகண்ட்டைப் பொருத்தவரையில் 2014 மற்றும்
2017 ஆகிய இரு தேர்தல்களிலும் தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்த இயலவில்லை என்பது தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அலை வீசிய மாநிலங்களில் உத்தராகண்ட்டும் ஒன்று.
கூடுதலாக அங்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்ததும், இம்மாநிலத்திலும் ஆட்சிக்கு எதிரான
அலையில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
2.      பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, கடந்த லோக்சபா
தேர்தலில் பெற்ற வாக்கு சதவீததைக்காட்டிலும் குறைவாகப் பெற்றாலும், பாஜக இழந்த அவ்வாக்குகள்
சுயேச்சைகளுக்குச் சென்றுள்ளனவே தவிர, காங்கிரசால் அவ்வாக்குகளைத் திரும்பப் பெற இயலவில்லை
என்று திருப்திப் பட்டுக் கொள்ளலாம். மேலும் தற்போதும் தனக்கு அடுத்த நிலையிலுள்ள காங்கிரசைக்
காட்டிலும் கூடுதலாக 13% வாக்குகளைப் பெற்றுள்ளது. சிறந்த முதல்வரை அறிமுகப்படுத்தி
நல்லாட்சி வழங்கினால் குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் வரிசையில் இம்மாநிலமும்
வரலாம்.
3.      பெரிதாக மற்ற மாநில கட்சிகள் இங்கில்லை என்பதும்,
பஹுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு மட்டும் சிறிதளவு வாக்கு வங்கி உள்ளது என்பதும் மட்டுமே
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளுக்கும் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது.
மணிப்பூர்:
70 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது மணிப்பூர். மணிப்பூரில் காங்கிரஸ் அதிக
இடங்களைப் பெற்று இருந்தாலும், அங்குள்ள மாநில கட்சிகள் பாஜகவை ஆதரிக்க முன்வந்ததால்
அங்கும் பாஜக ஆட்சியை அமைக்கிறது. மணிப்பூர் கோவா இரு மாநிலங்களிலும் சிறு கட்சிகள்
பாஜகவை ஆதரிப்பதற்கு மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதே காரணம். மணிப்பூரைப் பொருத்தவரை
மணிப்பூர் நாகா கட்சி எக்காலத்திலும் காங்கிரசை ஆதரிக்காது என்பதால் அதைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்டது பாஜக. பாஜகவைப் பொருத்தவரையில் வட கிழக்கு மாநிலங்களில் தனது
அடித்தளத்தை வலுப்படுத்த அதிகக் கவனத்தைச் செலுத்தி வந்ததன் அடையாளமாக அஸ்ஸாமிற்கு
அடுத்தபடியாக மணிப்பூரிலும் கட்சியை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. 2012 சட்டசபைத் தேர்தலில்
ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக தற்போது 21இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி ஆட்சிக்கு
வந்தபிறகு வட கிழக்கு மாநிலங்களில் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வந்ததே பாஜக அங்கு
வலுப்படக் காரணமாக அமைந்துள்ளது.
கோவா:
40 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது கோவா. கோவாவில் பாஜக 2012, 2014 தேர்தல்களை
மகாராஷ்டிரா கோம்னாடக் என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. இம்முறை தனித்து
நின்றது. மனோகர் பரிக்கருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட லக்ஷ்மி காந்த் பரிக்கர் ஆட்சி
மீது நம்பிக்கையின்மையும் நிலவியது. இதனால் பாஜகவுக்கு 13 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
காங்கிரஸ்
30.08%
37.02%
28.40%
பாரதிய ஜனதா
34.68%
54.12%
32.50%
மகாராஸ்டிரா கோம்நாடக்
6.72%
**
11.30%
ஆம் ஆத்மி
*
1.00%
6.30%
NCP – 4.08% allinace with Cong
1.      கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும்
வாக்கு சதவீதத்தை வைத்து ஒப்பிட்டால் இன்றும் பாஜகவை விடக் குறைவாகவே உள்ளது.
2.      பாஜக தனித்து நின்றதால் தனது செல்வாக்குக் குறைந்திருப்பதைக்
கணக்கில் கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்து, ஆட்சியை விட்டுவிடக்கூடாது என்பதால்தான்
மனோகர் பரிக்கரையே திரும்ப அனுப்பியுள்ளது பாஜக.
ஐந்து மாநிலத் தேர்தல்கள் இறுதியாக இரண்டு செய்திகளைச் சொல்கின்றன. மாநிலங்களில்
நல்லாட்சியைத் தரவில்லை என்று நம்பும் பட்சத்தில் அது எக்கட்சியின் ஆட்சி நடந்தாலும்
மக்கள் அதற்கு எதிரான வாக்குகளை அளிப்பார்கள் என்பது ஒன்று. இன்னொன்று, பாரதிய ஜனதாவை
வெல்ல மிகப் பெரிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைக்கவேண்டும். அப்போது மட்டுமே 2019
லோக்சபா தேர்தலில் மோடியையும் பாஜகவையும் எதிர்கொள்ள முடியும். நல்லாட்சியைத் தந்தால்
மக்கள் அக்கட்சியையும் தலைவனையும் வரவேற்பார்கள் என்பதற்கு மோடி ஓர் உதாரணம். இந்திய
வரலாற்றில் மோடி மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்பதை எவரும் மறுக்க இயலாது. பாஜகவை
எதிர்க்க மிகப்பெரிய வியூகம் அமைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் எதிர்க்கட்சிகளும்,
அவர்களில் யார் தலைமையை ஏற்று நடப்பது என்ற குழப்பமும் நீடித்தால் மோடியே மீண்டும்
இந்தியாவின் பிரதமர் என்பது உறுதி.

http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx
Posted on Leave a comment

நெடுவாசல் போராட்டம் – ஆர். கோபிநாத்

தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்ற ஒரு கூத்து புதிதாகத் துவங்கியிருக்கிறது. முதலில் ஆரம்பித்தது கூடங்குளம். பின்பு நியூட்ரினோ. பிறகு மன்னார்குடி திருத்துறைப்பூண்டி பகுதிகளில் மீத்தேன். அப்புறம் ஜல்லிக்கட்டு. இன்று நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டம். இவற்றில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எல்லாப் போராட்டங்களிலும் தேச விரோத சக்திகள் வேறு வேறு பெயர்களில் பங்கெடுக்கும். தங்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என்னும் பட்சத்தில் சில போராட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்குகொள்ளும். உதாரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடங்குளம் போராட்டத்தில் பங்கு பெறவில்லை. மாறாக, கூடங்குளம் வருவதை ஆதரித்தது.1 ஏனென்றால் அது ரஷ்ய அணு உலை. இதுவே ஜைதாபூரில் எதிர்த்தது.2 ஏனென்றால் அது பிரான்ஸ் அரசின் கூட்டுடன் நடக்கும் திட்டம். இந்த நிலையில்தான் இந்த நெடுவாசல் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. .

முதலில் ஷேல் காஸ்3 (shale gas) எதிர்ப்பு என்ற பெயரில்தான் இந்த மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது. இது ஷேல் வாயுவே அல்ல, கரிப்படுக்கை மீத்தேன் (coal bed methane) என்று அரசு கூறியது. ஃபிராக்கிங் (fracking) என்ற முறையில் மீத்தேனை எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம், வேதிப்பொருட்கள் வேறு நிலத்தடி நீரை வீணடிக்கும், போதாக்குறைக்கு வாயு வெளியேற நிலத்தடி நீர் முழுதும் உறிஞ்சப்பட வேண்டும் என்று கூறப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் நெடுவாசல் இயற்கை எரிவாயுத் திட்டம் அப்படி அல்ல. தானாகவே நிலத்தடி நீர்மட்டத்தைப் பிளந்துகொண்டு எழுந்து வரும் தன்மை கொண்டது. குறைந்த அளவு நீரே இதற்கு போதும்.

ஷேல் காஸ் என்ற ஒன்று கிட்டத்தட்ட இந்தியாவில் இல்லை என்றே சொல்லிவிடும் அளவுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது. உலகின் அதிகமான ஷேல் காஸ் சீனாவில்தான் இருக்கிறது. அங்கு கங்கணம் கட்டிக்கொண்டு ஃபிராக்கிங் என்னும் முறையில் வேதிப்பொருள்களைப் பீய்ச்சிப் பல ஆயிரம் மீட்டர் ஆழத்திற்குப் பாறைகளை உடைத்து இந்த ஷேல் காஸ் எடுக்கப்படுகிறது. அங்கெல்லாம் மக்கள் மூச்சுக்கூட விட முடியாது. அங்கிருக்கும் கம்யூனிஸ்ட் அரசு அப்படி. தேர்தல் எல்லாம் கிடையாது. அரசை மக்கள் மிரட்ட முடியாது. அரசுதான் மக்கள் முட்டியைக் கழட்டும். இல்லாத ஒரு ஷேல் காஸை எடுக்க ஒப்பந்தம் என்றெல்லாம் சொல்லி மக்கள் தலையில் மிளகாய் அரைத்துப் போராட்டம் என்ற பெயரில் காசு பார்ப்பதெல்லாம் இந்தியாவில்தான் செல்லுபடியாகும். இங்கு கரிப்படுகை மீத்தேனும், எண்ணெய்யும், இயற்கை வாயுவும்தான் இருக்கின்றன. ஷேல் காஸ் குறைந்த அளவே இருக்கிறது. அதுவும்கூட குஜராத்திலும் ராஜஸ்தானிலும் பரிசோதனை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி முயற்சி செய்யப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஷேல் காஸ் உற்பத்தியை முழுக்க அமெரிக்காவில்தான் செய்கிறது. அங்குதான் அது முதலீடு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் நெடுவாசல் போன்று 100 கிணறுகளுக்கு மேல் செயல்பட்ட/ செயல்படும் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் தாலுகாவில் மட்டும் 24 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அங்கு ஹீலியம் போன்ற இயற்கை எரிவாயுக்கள் எடுக்கப்படுகின்றன. மின்சார உற்பத்தி நிலையங்களும் பல இருக்கின்றன. லான்கோ என்னும் நிறுவனம் மட்டுமே கிட்டத்தட்ட 300 மெகாவாட்டுக்கும் மேல் உற்பத்தி செய்கிறது. இப்போது புதிதாக 3 கிணறுகள் நெடுவாசலில் வந்தால் என்ன குடிமுழுகி போய் விடும் என்று தெரியவில்லை. இதற்கு முன் தோண்டப்பட்ட கிணறுகள் எல்லாம் டெல்டா மாவட்டத்தில்தான் தோண்டிச் செயல்படுத்தப்பட்டன; செயல்படுத்தப்படுகின்றன. நரிமனம் உட்பட. அது ஆயிற்று ஒரு 25 வருடங்கள். பல அறிவுக்கொழுந்துகளுக்கு இப்படி ஓர் இடம் செயல்படுவதே தெரியாது. நெய்வேலியில் மட்டுமே பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் எவ்வளவு என்று யாராவது இவர்களுக்கு விளக்கலாம். அரசுக்கு வருவாயும் மக்களுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்பு வரும்போது போலிக் காரணம் சொல்லி அதை நிறுத்தவேண்டிய அவசியம் என்ன?

ராஜஸ்தானில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கிணறுகள், கிருஷ்ணா கோதாவரிப் படுக்கையில் ரிலையன்ஸின் கிணறுகள் ஆகியவை அரசுக்குப் பெருமளவில் வருமானம் ஈட்டித் தருகின்றன. ஏனென்றால் இயற்கை எரிவாயுவிற்கான விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்கிறது. ஒன்ஜிசி போன்றவை இந்த வேலையைச் செய்யலாம். ஆனால் எவ்வளவு வாயு இருக்கிறது, எவ்வளவு நாள் வரும், ஒரு கிணறு தோண்டி அதில் வாயு இல்லையென்றால் அதற்கான செலவு, இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள அரசை விட இந்தத் தனியார் நிறுவனங்கள் துணிந்து வருகின்றன. கிருஷ்ணா கோதாவரிப் படுகையிலேயே பல கிணறுகளில் வாயு வரவில்லை. பல தூர்ந்துவிட்டன. சிலவற்றில் மட்டுமே வருகிறது. அதற்கும் அந்த நிறுவனம் தன் பங்கை அரசிற்குச் செலுத்துகிறது. நீராதாரம் மாசுபடும் என்பதெல்லாம் பித்தலாட்டம். அப்படி ஒரு நிலை வந்தால் பெருநிறுவன சமூகப் பங்களிப்பின் கீழ்ச் சுற்றியுள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் செறிவுபடுத்த வலியுறுத்தி நிவாரணம் பெறலாம். மாறாக வரவே கூடாது என்று எதிர்ப்பது, யாரின் தூண்டுதல் பேரிலோ செய்யப்படுகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தேவதான நிலங்கள் தவிர பிறவற்றிற்கு ஆறில் ஒரு பங்கு வரி. 18ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மிகச் சோதனையான காலகட்டம். எவ்வளவு கொள்ளை போனது, எவ்வளவு வரி என்றே தெரியாது. பாதிக்கு மேல் இருக்கலாம். இதைத் தவிர இலவச மின்சாரம் எல்லாம் கிடையாது. ஏரி, ஆற்றுப் பாசன முறை அல்லது கமலை இறைத்துக் கிணற்றில் இருந்து பாய்ச்ச வேண்டும். மாடு இறைக்கும் சில இடங்களில் மனிதன் இறைப்பான். அடிப்படை ஆதார விலையெல்லாம் அரசு கொடுக்காது. வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் எல்லாம் கிடையாது இருந்தும் இங்கு அமோகமாக விவசாயம் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. ஏனென்றால் அன்று ஆண்டான் அடிமை முறை இருந்தது. பண்ணை அடிமைகள் இருந்தார்கள். உழுகுடிகளுக்கு அற்பக் கூலியே வழங்கப்பட்டது. அவர்கள் வாழ்வு சொல்லொணா துயரத்தில் இருந்தது. இன்று இத்தனை வசதிகள் இந்த நில உடைமையாளர்களுக்கு அளிக்கப்படுவதே அவர்கள் கூலி வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கவேண்டும், அவர்கள் வாழ்வு உயர வேண்டும் என்பதற்காகத்தான்.

ஏனென்றால் இந்தியாவில் 65% பேர் விவசாயத்தை நம்பிப் பிழைக்கிறார்கள். இதில் 5% பேர் தான் நில உடைமையாளர்கள். இத்தனை செய்தும் விவசாயம் அழிகிறது என்றெல்லாம் அடித்து விடுபவர்களுக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது. தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாகப் பெரிய நீர்மேலாண்மைத் திட்டங்கள் வகுக்கப்படாமல் அரைப்பாலைவனமாக மாற்றப்பட்டதே, பல இடங்களில் விவசாயம் பாழானதற்குக் காரணம். நல்ல விலைக்கு விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விற்கப்பட்டதும் இன்னொரு காரணம். நிறுவனப்படுத்தப்படாத (non organised) இப்போதைய இந்திய விவசாயம் எந்த வகையிலும் பொருளாதார ரீதியாகத் தானே தன் காலில் நிற்கக் கூடியது அல்ல. அரசுதான் அதை முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது. இத்துறையில் இப்போது தொழிலாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான நிலமற்ற மக்களுக்கு, தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளில் மாற்று ஏற்பாடுகள் அமைந்து வேறு வேலை கிடைக்கும்போது, இந்திய விவசாயம் கட்டாயம் நிறுவனமயமாகும். ‘ஏழை விவசாயி பாதிக்கப்படுகிறார்’ என்னும்போது அது இந்த நிலவுடைமையாளர்களையே குறிக்கிறதே அன்றி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை அல்ல. இந்தியாவின் வறுமைக்கோட்டு அளவீடுகளின்படி, அந்த விவசாய நிலவுடைமையாளரை ‘ஏழை’ என்று குறிப்பிடுவது கட்டாயம் பொருந்தாது.

காவிரி டெல்டா என்பது 28 வருவாய் வட்டங்களை உள்ளடக்கியது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் என்பது பழைய தஞ்சை மாவட்டம். திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தின் லால்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் மற்றும் சிதம்பரம் இவைதான் டெல்டா பகுதியை உள்ளடக்கிய வருவாய் வட்டங்கள். நில அளவை ஆவணங்களின்படி இந்தப் பகுதியில் விவசாயம் செய்விக்க ஏற்ற நிலம், அதாவது நன்செய் நிலங்கள் 35 லட்சம் ஏக்கர். கடந்த 25 வருடங்களில் இது மெல்லக் குறைந்து குறுவை சாகுபடி 1. 5 லட்சம் ஏக்கர் அளவிலும் சம்பா ஒரு 8-10 லட்சம் ஏக்கர் அளவிலும் நடைபெறுகிறது. முக்கியக் காரணம், நீரில்லாமை. ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததாலும் வரைமுறையின்றி ஆக்கிரமிக்கப்பட்டதாலும் காவேரியில் முறையாகத் தண்ணீர் வராததாலும் வரும் தண்ணீரையும் தடுப்பணை கட்டித் தேக்காமல் வங்கக்கடலில்தான் கலப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாலும்தானே ஒழிய, 10 ஏக்கரிலோ 50 ஏக்கரிலோ இரண்டொரு தொழிற்சாலைகள் வருவதால் அல்ல. அவை வருவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சில ஆயிரம் பேருக்கு வேலையும் அந்தப் பகுதிக்குப் பொருளாதார உயர்வும், சாலைகள், மின்சார வசதி முதற்கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக வாய்ப்புள்ளது.
 
ஈரான் முதல் அரேபிய வளைகுடாவில் இருந்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி முழுக்க குஜராத்தின் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டுத்தான் இந்தியா முழுக்கச் செல்கிறது. பெட்ரோல் டீசல் மட்டும் அல்ல, பாலி எத்திலீன், பாலி ப்ரொபைலின் முதல் கடைசியாகச் சாலைகள் போட உபயோகப்படும் தார் வரை. ஒரு நாளில் எத்தனை லட்சம் மெட்ரிக் டன்கள் சுத்திகரிக்கப்படுகிறது தெரியுமா. இது ஒரு அணுகுண்டுக்கு சமானம். அத்தனை அபாயகரமான பிரதேசம். ஆனால் யார் எக்கேடு கெட்டு அழிந்தாலும் பரவாயில்லை, நமக்கு ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் வேண்டும். அறிவியலின் தேவையைப் பற்றி எதுவும் அறியாதவர்கள், நெடுவாசலைக் கொண்டு போய் குஜராத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்று எவ்வித யோசனையும் இன்றிக் கருத்துச் சொல்கிறார்கள். இனி உங்களுக்கான பெட்ரோல், டீசல், பாலிதீன் கவர் முதல் பிளாஸ்டிக் சேர் வரை நீங்களே சுத்திகரிப்புச் செய்து எடுத்துக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டிற்கு எந்த விதமான எரிபொருளும் வராது என்று சொன்னால் என்ன ஆகும்? இவர்களின் கார் எதில் ஓடும்?

இந்தக் காவேரி படுகைப் பகுதி என்பது கடலூர் மாவட்டத்தில் இருந்து கோடியக்கரை வரை உள்ள பகுதியாகும். ஹைட்ரோகார்பன் தலைமை இயக்குநரகம் அளித்துள்ள விவரங்களின்படி இது 1.5 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் கரையில் (onshore) 25,000 சதுர கி.மீ அளவும், கடலில் அதாவது (offshore) குறைந்த ஆழத்தில் 30,000 ச.கி.மீ பரப்பிலும், ஆழமான பகுதிகளில் 95,000 ச.கி.மீ பரப்பிலும் இந்த ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர மன்னார் வளைகுடாவிலும் பாக் ஜலசந்தியிலும் ராமநாதபுரத்தில் பெரியப்பட்டினம் ராமன்வலசை வழுதுர் போன்ற பகுதிகளிலும் கூட அதிகளவில் ஹைட்ரோகார்பன் இருக்கிறது.

இதன் அளவு கிட்டத்தட்ட ஒரு 70 கோடி டன் இருக்கலாம் என்று முதன்மை ஆய்வுகள் நிறுவுகின்றன. இதற்கு மேலும் இருக்கலாம். இதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம், இதில் நம் பங்கை எப்படிப் பெறப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். இந்தியாவிலேயே செல்வம் கொழிக்கும் மாநிலமாகத் தமிழகத்தை எல்லாவிதத்திலும் மாற்றும் புதையல் நம்மிடம் இருக்கிறது. இதைப் பயன்படுத்த விடாமல் நம்மைக் கையேந்திப் பிழைக்கும் ஒரு கூட்டமாகவே வைக்க ஒரு சதிகாரக் கும்பல் முற்று முழுதாக முயல்கிறது. மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையங்களும் உரம் மற்றும் மற்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இங்கு வர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக நிலங்களின் விலை பல மடங்கு அதிகரிக்கவும் சந்தை மதிப்பில் அதன் பயன்பாடு கூடவும் வாய்ப்புள்ளது. விவசாயத்திற்கு ஒன்றும் பாதிப்பு வராது, அது ஒரு பக்கம் எப்போதும் போல நடந்து கொண்டிருக்கும் என்னும் பட்சத்தில் இதைப் பயன்படுத்த நம்மைத் தடுப்பது எது? நரிமனம், நன்னிலம், குத்தாலம் முதல் பரங்கிப்பேட்டை வரை நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே வளமிக்க விவசாய பூமி இதுதான். மாநில அரசின் பாராமுகமும் பொய்த்துப்போன காவிரி ஆறும் ஏற்படுத்திய இன்னல்களைத் தவி,ர இந்த ஆழ்துளைக் கிணறுகள் தனியே எந்த நீர்த் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவில்லை. இதைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்வது ஆகச்சிறந்தது.

மீத்தேன் திட்டம் திமுகதான் கொண்டு வந்தது. ஸ்டாலின்தான் கையெழுத்து போட்டார். தன் கட்சியினருக்குப் பெரிய ஆதாயம் கிடைக்கும் என்பதால்தான் மீத்தேன் திட்டத்துக்கு திமுக ஒப்புதல் அளித்தது என்று அதிமுக பெரிய அளவில் பிரசாரம் செய்தது. ஸ்டாலின் தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று மன்னிப்பு வேறு கேட்டார்.4 கடைசியில் 2016 தேர்தலில், கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சொன்ன திருவாரூர் மாவட்டத்தின் நன்னிலம் தவிர, மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி என்று எல்லாத் தொகுதிகளையும் திமுகதான் வென்றது.

இந்தத் திட்டங்களை எதிர்ப்பதால் கிடக்கும் அரசியல் லாபம் என்பது நிலையற்றது என்று இதன் மூலம் வெளிப்படுகிறது. நியூட்ரினோ உட்பட மிகப்பெரிய அளவில் பெயரையும் உட்கட்டமைப்பு வசதிகளையும், சேவைத் தொழில்களில் சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய அளவில் கிடைக்க இருக்கும் வருமானத்தைத் தடுப்பதையும் தவிர இந்தப் போராட்டங்கள் பெரிதாக ஒரு நன்மையையும் அளிக்கப்போவதில்லை. மாறாக, தமிழகம் அனைத்துத் தொழில்துறைத் திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் விரோதமானது என்ற பெயரையே பெற்றுத் தந்திருக்கிறது, கேரளாவைப் போல. இன்று அதே கேரளாவில் 3ல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிழைப்புக்காக வெளிமாநிலமோ வெளிநாடோ சென்று வாழ்கிறார்கள். அதைப்போல் நாளை தமிழகமும் ஆகும் வாய்ப்பே இதன் மூலம் உருவாகும். அனைத்திலும் தன்னிறைவு என்பதே நாம் அடையவேண்டிய லட்சியமே தவிர ஏனையக் கூத்துகள் எவ்விதப் பயனும் அற்றவை.

அடிக்குறிப்புகள்:

1. http://www.news18.com/news/india/cpm-reiterates-support-for-kudankulam-nuclear-plant-516746.html

2. http://www.dnaindia.com/india/report-govt-should-halt-setting-up-of-jaitapur-nuclear-plant-cpi-m-1520414

3. ஷேல் கேஸ் – பூமிக்கு அடியில் பெட்ரோலியம் இருப்பதுபோல எரிவாயுவும் உள்ளது. இதில் ஒருவகை, ‘ஷேல் கேஸ்’ எனப்படும் பாறை எரிவாயு. மண்ணுக்கு அடியில் உள்ள, படலம் படலமாகப் பிரியக் கூடிய ஷேல் எனப்படும் படிவப் பாறைக்கு மேலாக எரிவாயுச் சேகரிப்பு பல இடங்களில் உள்ளது. அதிக அழுத்தத்தில் நீரைப் பாய்ச்சி இந்த எரிவாயுவை வெளியே எடுக்கும் ஃப்ராக்கிங் (Fracking) என்ற சிக்கலான தொழில்நுட்பம்   இன்றைய தேதியில் அமெரிக்காவிடம்தான் வலுவாக உள்ளது.

4. http://www.dinamalar.com/news_detail.asp?id=1211409