துபாஷி (பாகம் 2) – பி.எஸ்.நரேந்திரன்

(வலம் பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி.)

ஆனந்த ரெங்கம் பிள்ளை இந்திய வரலாற்றின் முக முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்தவர். வியாபாரிகளாக இந்தியாவிற்குள் நுழைந்த பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயேர்கள் மெல்ல மெல்லப் பலமடைந்து வரும் சித்திரத்தை அவரது குறிப்புகளின் மூலம் முன்வைக்கிறார். ஆனால் இந்திய வரலாற்றாய்வாளர்கள் எவரும் அவரைப் பொருட்படுத்தவில்லை. தமிழ்நாட்டிலும் அவருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. அவரது நாட்குறிப்புப் புத்தகங்கள் இன்றைக்குத் தொலைந்து போய்விட்டன என்று தெரியவருகையில் வருத்தமே மிஞ்சுகிறது.

பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவரது நாட்குறிப்பிலிருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அல்லது சுவாரசியமானவையாக நான் நினைக்கும் சில குறிப்புகளை இங்கு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். இதற்கு முன்பே அவரது நாட்குறிப்புகள் பலராலும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பிரபஞ்சன் ஆனந்த ரெங்கம் பிள்ளையில் நாட்குறிப்பின் அடிப்படையில் நாவல் எழுதியிருக்கிறார். இருப்பினும், இங்கு இதனைப் படிக்கின்ற எவருக்கேனும் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டால் அது குறித்து மகிழ்ச்சியே.

******

செவ்வாய், அக்டோபர் 4-1738, காலயுக்தி ஆனி 1:

…(திருச்சினாப்பள்ளியைப் பிடித்த) சந்தா சாஹிப்பும், அவனுடைய படைகளும் கிராமங்களில் பயிர்களை எரித்தும் கொள்ளையடித்தும் சோழ நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர் என்று தகவல். நிறையப்பேர் பிடிக்கப்பட்டு அடிமைகளாகத் தூக்கிச் செல்லப்பட்டிருக்கின்றனர். கிராமவாசிகள் அங்கிருந்து தப்பி கொள்ளிடத்தின் வடகரையிலும் தரங்கம்பாடியிலும் நாகப்பட்டினத்திலும் தஞ்சமடைந்திருக்கினர். எங்கும் அளவிடமுடியாத குழப்பம் நிலவுகிறது. வலிமையற்ற தஞ்சை அரசன் அவனது கோட்டைக்கதவுகளை அடைத்து உள்ளேயே பதுங்கிவிட்டான் எனத் தெரிகிறது…

செவ்வாய், ஜுன் 25-1743, ருத்ரோத்ரி ஆனி 15:

…இன்றைக்கு மறக்கவியலாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அடிமைகளைப் பிடித்து விற்கும் பரமானந்தன் என்கிற வியாபாரியானவன் கைது செய்யப்பட்டு, கை கால்களில் விலங்கிடப்பட்டுக் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டான். கோட்டையின் கிடங்கினை நிர்வகிக்கும் கார்னேவின் (Cornet) கீழ் பணிபுரியும் திருவாளர் சுடே (Soude), பரமானந்தனிடம் பணம் கொடுத்து அடிமைகளைப் பிடித்துக் கொண்டுவரும்படிப் பணித்திருக்கிறார்.

பரந்தாமனும் அவனது ஆட்களும் அதன்படியே ஆட்களைப் பிடித்துக் கொண்டுவந்து தந்திருக்கிறார்கள். சில பேர்களைப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். மற்ற சிலரை ஏமாற்றிப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெற்றிலைக்குத் தடவும் சுண்ணாம்பில் மயக்க மருந்து கலந்தோ அல்லது அவர்கள் எப்பொழுதும் சுமந்து செல்லும் பெட்டியிலிருக்கும் மாயாஜால வர்ணத்தைத் தடவியோ அல்லது ஆட்களை ஒரே அமுக்காக அமுக்கிப் பிடித்தோ கொண்டு வந்து அடிமைகளாக ஆக்கியிருக்கிறார்கள். இப்படியாகப் பிடிக்கப்பட்ட பல அடிமைகள் பாண்டிச்சேரிக்குள் ரகசியமாகக் கொண்டுவரப்பட்டார்கள்.

மிக ரகசியமாக நடந்த இந்த விஷயம் கீழ்க்கண்ட வகையில் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.

பாண்டிச்சேரிக்குள் வேலை வெட்டியில்லாமல் திரியும் மனில்லா மலையப்பன் என்பவன் பரமானந்தனை அடிக்கடிப் பார்க்கப் போவது வழக்கம். அப்போது அங்கு தான் பார்த்த சமாச்சாரங்களை இருசப்பமுத்து செட்டியிடமும் குடைக்கார ரங்கப்பனிடமும் சொல்லியிருக்கிறான். அவர்கள் இன்னும் நான்கு செட்டிகளுடன் சேர்ந்துகொண்டு, அடிமைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு குதிரை வாங்குபவர்கள் போல நடித்துப் போயிருக்கிறார்கள். போன இடத்தில் நான்கு செட்டிகளும் ஒரு செட்டிச்சியும் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அங்கு வந்த செட்டிகளுக்கு சொந்தக்காரர்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஒரே ஓட்டமாக ஓடிவந்து அவர்களின் கால்களில் விழுந்து கதறி அழுதிருக்கிறார்கள். விசாரித்த பொழுது அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் கூலிவேலை தருவதாகச் சொல்லி அவர்களை அங்கு அழைத்து வந்ததாகவும், அவர்கள் அந்தக் கட்டடத்திற்குள் நுழைந்ததும் அவர்களின் தலைமுடியை மொட்டையடித்து, கை கால்களில் விலங்கு மாட்டியதாகவும் கூறியிருக்கிறார்கள். அங்கிருந்த இன்னொரு ஆள் தனக்கு சுண்ணாம்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னைப் பிடித்துக்கொண்டு வந்ததாகச் சொல்லியிருக்கிறான்.

அதையும் விட, கட்டடத்திற்குள் கூத்து நடப்பதைப் பார்க்க வரும்படி இன்னொருவனை அழைத்து அவன் கட்டடத்தினுள்ளே நுழைந்ததும் பிடித்துக் கட்டி, தலையை மொட்டையடித்து வைத்திருக்கிறார்கள். புல் வெட்டுபவர்களையும் மரம் வெட்டிகளையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கும் வேலை தருவதாக ஆசைகாட்டி அழைத்து வந்து கட்டிப் போட்டிருக்கிறார்கள் அங்கிருந்த அடிமை வியாபாரிகள். தரங்கம்பாடிக்கு அருகிலிருக்கும் ஒரு கிராமத்திலுந்த ஒரு வீட்டிலும் இதுபோலப் பல அடிமைகள் பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தரங்கம்பாடியில் இப்படிப் பிடிக்கப்பட்டவர்கள் ஐம்பது அல்லது நூறுபேர்கள் சேர்ந்ததும் இரவோடிரவாக அவர்களைப் படகுகளில் ஏற்றி அரியாங்குப்பத்தில் பரமானந்தனுக்குச் சொந்தமான இன்னொரு வீட்டில் கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்கு அவர்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு, கறுப்புத்துணிகள் அணிவிக்கப்பட்டு, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டன. மறு நாள் இரவு கால்விலங்குகள் அவிழ்க்கப்பட்டு சுடே (Soude) வீட்டில் மீண்டும் அடைத்து வைக்கப்பட்டார்கள். பிடிபட்டவர்களைக் கொண்டு செல்லக் கப்பல் வரும்வரை அவர்கள் ரகசியமாகப் பிடித்து வைக்கப்பட்டார்கள்.

அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பல் வந்ததும் அவர்களை ரகசியமாகப் படகுகளில் ஏற்றிக் கப்பலில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இந்தச் செயல் மூன்று அல்லது நான்கு முறைகள் இதற்கு முன்னர் நடந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இருசப்ப முத்துச் செட்டியும் ரங்கப்பனும் கண்டுபிடித்துச் சொல்லும்வரையில் இது வெளியில் தெரியவில்லை. அவர்களிருவரும் சுடேவிடம் சென்று, அவருடைய வீட்டில் பலர் கடத்தி வரப்பட்டு அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலர் தங்களது சொந்தக்காரர்கள் என்றும், மேலும் இதனைக் குறித்து விசாரணை செய்ய வேண்டும் சொல்லியிருக்கின்றனர்.

அதற்குப் பதிலளித்த சுடே, அவர்களில் பலரைத் தான் தனது சொந்தப் பணம் செலவழித்து வாங்கியதாகவும், அங்கிருக்கும் ஐந்து பேர்கள் மட்டும் பொய்யான காரணங்களுக்காக அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இதனைக் குறித்து பேசும்படி துபாஷான கனகராய முதலியிடம் அனுப்பி வைக்க, அவரோ அவர்களை இருசப்ப முத்துச் செட்டியிடம் பேசும்படி அனுப்பி வைத்திருக்கிறார். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இருசப்ப செட்டி அவர்களிடம் பேச மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து சுடே என்னிடமும் கனகராய முதலியிடமும் சேஷாச்சல செட்டியிடமும் இருசப்ப முத்து செட்டியிடமும் வந்து இந்த விஷயத்தைக் காதோடு காதாக ரகசியமாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டோம்.

கனகராய முதலி இன்று காலை கவர்னரிடம் சென்று நடந்த விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார். கவர்னர் பரமானந்தனைப் பிடித்து வரும்படி பியூன்களை அனுப்பி வைத்தார். பரமானந்தனின் வீட்டுக்குப் போன பியூன்கள் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள். அங்கிருந்த இன்னொரு ஆசாமியான அருளானந்தன் என்பவன் சுவரேறிக் குதித்து அருகிலிருந்த மிஷன் சர்ச்சிற்குள் ஒளிந்து கொண்டான்.

விசாரணைக்குப் பிறகு சுடே உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். வேறொரு ஐரோப்பியன் அவரது பதவியில் நியமிக்கப்பட்டான்.

சனிக்கிழமை, டிசம்பர் 21-1743, ருத்ரோத்ரி மார்கழி 10:

இன்று காலை கவர்னர் தியூப்ளே வெளியிட்ட உத்தரவின்படி, இன்று முதல் பாண்டிச்சேரியில் இருக்கும் அனைத்து வியாபாரிகளும் பிரெஞ்சுக் கம்பெனியின் சகல ஊழியர்களும் ராணுவத்தினரும் தங்களுக்கென ஆளுக்கொரு வீட்டை மொரட்டாண்டி சாவடியில் கட்டிக் கொள்ள வேண்டும். அங்கு உருவாகும் நகரம் இனிமேல் ‘தியூப்ளே பேட்டை’ என்று அழைக்கப்பட வேண்டும். அவ்வாறு அழைக்காமல் ‘மொரட்டாண்டி சாவடி’ என்று அழைக்கும் ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

சனிக்கிழமை, அக்டோபர் 16-1745, குரோதன ஐப்பசி 3:

(குறிப்பு : கீழ்க்கண்ட தகவல் மொழிபெயர்ப்பில் உள்ளபடியே மொழியெர்க்கப்பட்டுள்ளது என்பதினை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.)

இன்றைக்குக் காலை 8 மணியளவில் ஒரு மறக்கவியலாத சம்பவம் நிகழ்ந்தது.

காரைக்காலிலிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த கிறிஸ்தவப் பாதிரி ஒருவர் சர்ச்சில் நிகழ்ந்த பூசனைகளின் போது, சாதியில் தாழ்த்தப்பட்டவர்களான பறையர்கள் உயர்சாதி கிறிஸ்தவர்களுக்கும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதைக் கண்டார். சர்ச்சின் வடபகுதியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டு, ஒருபக்கம் தாழ்த்தப்பட்ட பறையர்களும், இன்னொருபுறம் உயர்சாதி கிறிஸ்தவர்களும் ஐரோப்பியர்களும் உட்கார்ந்திருந்தார்கள். இந்தியக் கிறிஸ்தவர்களின் இரு பிரிவினரும் இந்துக்களாக இருந்து மதம் மாறியிருந்தாலும், மதமாற்றம் பெரியதொரு வித்தியாசத்தைக் கொண்டு வராமல் அதே சாதிப்பிரிவினையுடன் தொடர்ந்து இருந்து வந்தனர்.

காரைக்காலிலிருந்து வந்த பாதிரியாருக்கு இது பிடிக்காமல், பன்னி பறச்சேரி, பெரிய பறச்சேரி, சுடுகாட்டுப் பறச்சேரி, ஒழாண்டை பறச்சேரி போன்ற பகுதியில் வசிக்கும் பறையர்களையும், தோட்டி மற்றும் பிற தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களையும் இதனை எதிர்த்துக் கலகம் செய்யத் தூண்டினார். அவர்களெல்லாம் ஒன்று கூடி பாண்டிச்சேரியின் மூத்த பாதிரியார்களிடம் புகார் செய்தனர்.

நாங்களெல்லாம் இயேசுவைப் பிரார்த்தித்து அவரைப் பின்தொடர்கிறபடியால் எங்களையும் எல்லாரையும் போல நடத்த வேண்டும். பரமண்டலத்திலிருக்கிற பிதா யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் உயர்சாதி கிறிஸ்தவர்கள் எங்களைப் பிரித்துப் பார்க்கிறார்கள். நீங்கள் அதனையும் ஆமோதித்து நடக்கிறீர்கள். எதற்காக எங்களைப் பிரித்து வைக்கிறீர்கள் என்று நீங்கள் விளக்கமளிக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை அறிந்த பாண்டிச்சேரி பாதிரியார் சர்ச்சில் கட்டப்பட்டுள்ள சுவரை உடனடியாக இடிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அங்குக் கூடியிருந்தவர்களிடம், “எனது பிள்ளைகளான நீங்களனைவரும் ஒருவரோடொருவர் கலந்து மகிழ்ச்சியாகப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லி அவர்களை ஆசிர்வதித்திருக்கிறார். அதற்குப் பிறகு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பறையர்கள், உயர்சாதி தமிழர்கள், ஐரோப்பியர்கள் என அனைவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள்.

உள்ளூர் கிறிஸ்தவப் பெண்மணிகளும் அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். கனகராய முதலியின் தங்கை மகனின் மனைவியும் அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளப் போயிருக்கிறாள். அவளது சாதிப் பெண்கள் செய்வது போல உடலெங்கும் நகைகளை அணிந்து கொண்டு, உடல் தெரியும்படியான மெல்லிய மஸ்லின் சேலையை உடுத்திக் கொண்டு, வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டும் போன அவள், பிரசங்கம் செய்யும் பாதிரியாருக்கு அருகில் முழந்தாளிட்டு அமர்ந்து அவர் சொல்வதனை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள்.

அவளது உடலில் பூசியிருந்த வாசனைத் திரவியங்களின் வாசம் பாதிரியின் மூக்கைத் துளைத்திருக்கிறது. அத்துடன் அவள் அணிந்து வந்த உடையும் அவரைக் கோபமூட்ட, பாதிரி பிரசங்கத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, அவரது கையிலிருந்த தடியால் அந்தப் பெண்மணியின் கொண்டையைக் குத்திக்காட்டிக் கோபத்துடன், “நீயொரு கல்யாணமான பெண்பிள்ளையா அல்லது நாட்டியக்காரியா? உன் புருஷனுக்குக் கொஞ்சம் கூட இதனைக் குறித்து அசிங்கமில்லையா? உன்னை மாதிரியான உயர்சாதிப் பெண்பிள்ளை இப்படி உடல் தெரிய உடையணிந்து முலைகளையும், கை கால்களையும் காட்டிக் கொண்டு தேவாலயத்திற்கு வரலாமா? உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறு” என்று கோபத்துடன் கத்தியிருக்கிறார்.

அவளை அங்கிருந்து விரட்டிய பாதிரி, பின்னர் அங்குக் கூடியிருந்த சாதிக் கிறிஸ்தவர்களிடம் இனிமேல் சர்ச்சிற்கு யாரும் பிற தமிழ்நாட்டுப் பெண்களைப் போல நகைகளை அணிந்துகொண்டோ, அலங்கரித்துக்கொண்டோ அல்லது மஸ்லின் சேலை உடுத்திக் கொண்டோ வரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கிறிஸ்தவர்கள் பாதிரியுடன் வாதிட்டிருக்கிறார்கள். வார்த்தை முற்றி பாதிரியின் உடுப்புடன் அவரைத் தூக்கிய உள் நாட்டுக் கிறிஸ்தவர்கள் அவரை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்ததுடன், “இனிமேல் உன் சர்ச்சுக்கு வரமாட்டோம்” என்று மிரட்டியிருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற கனகராய முதலி அவர்களை சமாதானம் செய்திருக்கிறார்.
.

கனகராய முதலி அவ்விடத்தை விட்டு அகன்றதும் கவர்னரிடம் ஓடிய பாதிரி, கிறிஸ்தவர்கள் சர்ச்சின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாமல் கிளர்ச்சி செய்கிறார்கள் என்றும், கூட்டம் கூடித் தனக்கெதிராகப் போராடுவதாகவும் சொல்லியிருக்கிறார். கவர்னர் உடனடியாக கிரிமாசி பண்டிட்டின் தலைமையில் பியூன்களை அனுப்பி நான்கு பேர்களுக்கு மேல் கூடுகிற கிறிஸ்தவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு தெருவில் கூட்டம் கூடி நிற்பதனை கிறிஸ்தவர்கள் நிறுத்தி விட்டார்கள்.
Leave a Reply