Posted on Leave a comment

பட்ஜெட் 2017 – ஜெ. ரகுநாதன்


“பாதையைக்கண்டு பயமேன்!
உம்முன் நாங்கள் நடக்கிறோம்
வாருங்கள்!
வந்து சேர்ந்துகொள்ளுங்கள்…!”

பாராளுமன்றத்தில் அருண் ஜெயிட்லி கவிதை சொல்லி, புன்னகை செய்து, சக பாராளுமன்றத் தோழர்களை இந்தப்பொருளாதார ‘புதிய சாதாரண’ப் பாதையில் (The New Normal) தன்னுடன் நடந்து வருமாறு விளித்து, தன் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். அவரின் பேச்சில் தன்னம்பிக்கையும் சாதனையின் வெற்றிப் புன்சிரிப்பும் கலந்திருந்து, இரண்டரை மணி நேரத்தை தொய்வின்றிக்கடக்க உதவியது! முந்திய நிதி அமைச்சர்களான ப.சிதம்பரம், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் கவிதைகளையும் புகழ்பெற்ற வாசகங்களையும் எடுத்துச்சொல்லுவது உண்டு. ஆனால் அவர்கள் போல் இல்லாமல் அருண் ஜெயிட்லி தன் கவிதை வரிகளை எங்கிருந்து எடுத்தார் என்பதைச்சொல்லாமலே ரகசியம் காத்துவிட்டார். அவரின் பட்ஜெட் முடிவுகளும் திட்டங்களும் அதன் உள் விவகாரங்களும் அவற்றின் தோற்றம் தெரியாமல் ‘எடுக்கப்பட்டதா, கோக்கப்பட்டதா’ என்பது ரகசியமாகவே இருந்தது!

“என்னது, டெலிகாம் துறையில் 1,72,000 கோடி ஊழலா?”

“நிலக்கரி சுரங்க ஊழலில் 1.86 லட்சம் கோடிக்கு மேலா?”

இந்த விஷயங்கள் மாறிப்போய்விட்டதால், கடந்த இரு வருடங்களாக மக்களின் பேச்சில் தட்டுப்படும் விஷயங்களும் மாறித்தான் இருக்கின்றன.

“ஹெலிகாப்டர் ஊழல் கண்டு பிடிக்கப்பட்டாச்சா?”

“அட! 11 லட்சம் கோடி ரூபாய் பாங்குகளுக்குத் திரும்ப வந்திருக்கா?”

எந்த ஊழலில் எத்தனை கோடி இழந்திருக்கிறோம் என்னும் செய்திகளை விட்டு, எத்தனை கோடி கண்டுபிடித்திருக்கிறோம் என்று மக்கள் பேசுவது எத்தனை பெரிய மாற்றம்!

நம் பிரதமர் பேசினதில் உண்மையும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டின் அரசியல் சூழலில் மக்களின் மன உணர்வு மாற்றமும் இருக்கிறது என்பது கண்கூடு.

பிரதமரின் டிசம்பர் 31ம் தேதி உரையில் உரத்துச்சொல்லப்பட்ட விஷயமான ஊழலின் ஊற்றுக்கண்ணைத்தாக்கி அழிக்க வேண்டும் என்னும் வீரியத்தையும் அதற்கான செயல்பாடுகளின் முனைப்பையும் இந்த பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. அரசியக் கட்சிகளுக்குத் தரப்படும் ரொக்கம், அதாவது காசு, பணம், துட்டு, ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல் அனுமதிக்கப்படக்கூடாது என்னும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அறிவித்திருக்கிறார்கள். பிரதமரின் வார்த்தைகளான “அரசியல்வாதிகளான நாம் எப்போதும் மக்களின் குரலை மறந்துவிடலாகாது” என்பதை வலியுறுத்துகிறது இந்த அறிவிப்பு. அதோடு கட்சிகளுக்கு நிதி தர விழைவோர் ரிசர்வ் வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி அளிக்கலாம் என்னும் புதிய வழிமுறையையும் புகுத்தி, முடிந்த வரையில் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்குமான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் நல்ல செய்கையை நம் நிதி அமைச்சர் செய்திருக்கிறார். இன்று இந்தியா வேகமாக முன்னேறும் பொருளாதாரத்தை முன்னிறுத்திச் செயல்படும்போது இந்த நிழல் பொருளாதாரம் (Shadow Economy) ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதின் வெளிப்பாடு இந்த மாற்றம். செயல் வடிவில் இது பயனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பணமதிப்பிழப்புச் செயல்பாட்டினால் உண்டான அல்லல்களுக்கு நடுவில் கோடிக்கணகான பழைய நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்ததில் வெற்றிதான் என்று அரசும், தோல்விதான் என்று எதிர்க்கட்சிகளும் முழங்கினாலும் ‘நடந்தது என்னமோ நல்லதுக்குத்தான்’ என்னும் பரவலான எண்ணம் நாட்டு மக்களிடையே ஓடுவது தெரிகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்த பொருளாதார மற்றும் நாணயக் கொள்கையின் தொடர்ச்சியாக இந்த அரசின் நிலையான பொருளாதாரப் போக்கை தொடர்ந்திருப்பதும், லஞ்ச ஒழிப்பு, தீவிரவாதத் தடுப்பு, கறுப்புப்பண இணைப்பொருளாதாரச் சிதைப்பு என்னும் முனைப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் இந்த வருட பட்ஜெட் அமைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கூடவே பணமதிப்பிழப்புச் செயல்பாட்டினால் உண்டான இன்னல்களுக்குப் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் முயற்சியும் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. அடித்தட்டு மற்றும் கிராமப்புற மக்களுக்காகவும் சிறிய தொழில்களுக்காகவும் இந்த பட்ஜெட் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பெரும் கம்பெனிகளுக்கும் முதலாளிகளுக்கும் கடுப்பு உண்டாக்கும் பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது.

“என்னா பட்ஜெட்டுப்பா! நேரா அரிசி வெல குறைஞ்சிடும்!”

“டீவீ மேல இருந்த வரிய நீக்கிட்டாங்களாமே! இப்ப என்ன ஏழாயிரம் ரூபாய்க்கே கெடச்சுடுமா?”

“இங்கேர்ந்து கும்மோணத்துக்கு டிக்கட் அறுபது ரூவா கம்மியாய்டுச்சா! பேஷ்!”

மேலே சொன்னது போன்ற சாதாரண மக்களின் கைதட்டல் விசில்களுக்கேற்ப, அதுவும் ஐந்து மாநிலங்களில் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு, அருண் ஜெட்லி மிகச்சுலபமாக அதிகச்சலுகைகளை அள்ளி வீசியிருக்க முடியும். நிதிப்பற்றாக்குறை விகிதத்தையும் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அதிகக்கடன் உள்ள பட்ஜெட்டைக் கொடுத்திருந்தாலும் பெரிய எதிர்ப்பு எழுந்திருக்காது. ஆனாலும், அந்த மலின வித்தைகள் எதுவும் செய்யாமல் நடுவாக நின்று இந்தியப்பொருளாதாரத்தின் இன்றைய நிலமையை மனதில் கொண்டு ஓரளவுக்கு நேர்மையாக இந்த பட்ஜெட்டைக் கொடுத்திருக்கிறார்.

இன்று உலகப்பொருளாதரம் ஒரு குழப்ப நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் சோபையிழந்து நொண்டிக்கொண்டிருக்க, சைனா காற்றில் ஆடும் விளக்குத் திரியாகத் துடித்துக்கொண்டிருக்க, அமெரிக்கா டிரம்ப்பின் தலைமையில் கதவுகளைச் சாத்திக்கொண்டிருக்கிறது.

“அதெல்லாம் முடியாது! எங்க கம்பெனிகளை உள்ள அனுமதிச்சுத்தான் ஆகணும்!”

“கோக் பெப்ஸியெல்லாம் இல்லாம உங்க மக்கள் எப்படி உயிர் வாழலாம்!”

“உலக மயமாக்கினால்தான் எங்க ஆதரவு உண்டு. இல்லேன்னா உலக வங்கி கடன் கிடையாது. அதோட, பாகிஸ்தானுக்கு ஆயுதம் தருவோம்!”

தன் வியாபார மற்றும் ஆயுத முதன்மை, டாலரின் உயர் நிலையை வைத்துக்கொண்டு நம்மைப்போன்ற ஆசிய நாடுகளை உங்கள் தொழில்களுக்கு மட்டும் சலுகை கொடுப்பது தகாது. ஆகவே பொருளாதாரக் கொள்கைகளை இலகுவாக்க வேண்டும் என்று மிரட்டிக்கொண்டு தங்கள் நாட்டுத் தொழில்களை இந்தியாவுக்குள்ளும் மற்ற முன்னேறும் நாடுகளுக்குள்ளும் புகுத்தி அமெரிக்கா லாபம் சம்பாதித்த காலம் இருந்ததை போன மாசக்குழந்தை கூட அறியும். ஆனால் இப்போது நேர்மாறாக டிரம்ப், ‘தனக்கு வந்தால் தெரியும் தலை வலியும் திருகு வலியும்’ என்பது போல அமெரிக்காவின் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கான சட்டதிட்டங்களை கடுமையாக்கிக்கொண்டு வருகிறார். விஸா நிலமையோ இன்னும் ரகளை! நம்ம ராமசுப்ரமணியன்களும் ராகவேந்திர ராவ்களும் கேதார்நாத் கௌடாக்களும் எப்படா ப்ளேன் ஏத்தி திருப்பி அனுப்பிடப்போகிறான் என்ற பீதியுடன் ஒவொரு முறை டெலிஃபோன் மணி அடிக்கும்போதும் திடுக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக்  காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் ஜொலித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இத்தனைக்கும் “இந்த உலகளாவியp பொருளாதார இருளில் இந்தியா ஒரு ஒளிரும் விளக்கு” என்று சர்வதேச நாணய நிதியம் பாராட்டியிருந்தாலும், இந்தியாவுக்குள் வந்த அந்நிய முதலீட்டில் கிட்டத்தட்ட பத்து பில்லியன் டாலர்கள் போன மூன்று மாதங்களில் வெளியேறியிருக்கின்றது. கூடவே கடந்த இரண்டு வருடங்களில் நம் மாநிலங்களின் நிதி நிலைமை தடுமாற்றத்தில்தான் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலில் மிகக்கடுமையான நிதி நிலை மேலாண்மையைச்செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய அரசின் சோதனைகளை இந்த பட்ஜெட்டின் மூலம் நிதி அமைச்சர் சரியாகவே லகானைப்பிடித்திருக்கிறார்.
நமது பொருளாதாரத்தின் இன்னொரு பெரிய சவால் பொது முதலீட்டை அதிகரிச்செய்யவேண்டிய வலுக்கட்டாயம். போன பட்ஜெட்டில் இந்தப்பொது முதலீட்டைத் திட்டமிடும்போது நாம் கோட்டை விட்டுவிட்டோம். திட்டமிட்ட பொது முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.6% ஆக இருந்தாலும், நல்ல வேளை, செயலாற்றும்போது இந்த அரசு பொது முதலீட்டை 1.9% வரை உயர்த்தி விட்டிருந்தது. இந்த பட்ஜெட்டிலும் அதே அளவு பொது முதலீடு செய்வதற்கான வரையறை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதோடு கூடவே செலவினங்களையும் இந்த அரசு கட்டுப்படுத்தியிருப்பதால் (போன வருடத்தை விட இந்தவருடம் 6% மட்டுமே அதிகம்), இந்த இரட்டைச் செலவினங்களின் மொத்தத் தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு, பொருளாதாரக் காரணிகள் (Macroeconomic management) ஆரோக்கியமாக நிர்வாகம் செய்யக்கூடிய நிலையில் உள்ளது.

சீர்திருத்தங்கள் என்னும் நெடுங்கால குறிக்கோளையும் இந்த பட்ஜெட் கைவிடவில்லை. Foreign Investment Promotion Board (FIPB) என்னும் அந்நிய முதலீட்டை மேம்படுத்தும் வாரியத்தை இழுத்து மூடிவிடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே வெளிநாட்டு முதலீட்டில் உள்ள சில விதிகளையும் சுலபமாக்கும் முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், நாம் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் என்ற சைகையைக் கொடுத்திருக்கிறோம். Make in India என்னும் பிரதமரின் கோஷத்திற்கு அந்நிய முதலீடு அவசியம் என்பதோடு, அந்நிய முதலீட்டினுடன் அதிக வேலை வாய்ப்பும், உயர்ந்த, நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு முறைகளும், புதுமைகளும் நீண்டகால மேலாண்மைச் சூட்சுமங்களும் நம் நாட்டுக்குள் வரும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

பொது நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை சந்தையில் விற்பதன் மூலம் அரசு கிட்டத்தட்ட 72,000 கோடி ரூபாய்களைப் பெறும் திட்டத்தில் இருக்கிறது. இந்த வரவேற்கத்தக்க முடிவு அரசுக்குப் பெரும் வருவாய் தருவதோடு மந்தமாகச் செயல்பட்டு நாட்டின் வளங்களைச் சரியாகப் பயன்படுத்தாத பொது நிறுவனங்கள் தனியார் மேலாண்மையின் கீழ் இன்னும் வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட உதவும்.  

பணமதிப்பிழப்பினால் நடுத்தர, கீழ்த்தர மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டதை முன்னிறுத்திச் சுலபமாக ‘சகலகலாவல்லவன்’ ரேஞ்சுக்கு ஜனரஞ்சக பட்ஜெட் அளித்திருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதியை விடாது பற்றி, நிதிப்பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கடுமையான முயற்சியாக பட்ஜெட் 2017 இருப்பது நமது பொருளாதாரத்திற்கு நல்லதே. பற்றாக்குறை 3.5% வரை இருந்திருந்தால் கூட அப்படி ஒன்றும் பொருளாதார வல்லுநர்களும் புலம்பியிருக்க மாட்டார்கள். ஆனாலும் அதை 3.2%க்குள் கட்டுப்படுத்தி, மேலும் அடுத்த இரு வருடங்களில் பற்றாக்குறை 3%க்குள் வரவேண்டும் என்னும் கண்டிப்பையும் காட்டியிருக்கிறார் நிதி அமைச்சர்.

இந்த பட்ஜெட்டில் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்குமான சரி சம முக்கியத்துவம் இருக்கிறது என்று, நான் மட்டுமில்லை, மிகப்பெரிய தொழிலதிபரான குமார மங்களம் பிர்லாவே சொல்லுகிறார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம், அடுத்த ஐந்து வருடங்களில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முனைப்பு என்பவையும் வரவேற்கத் தக்கவையாகும். பயிர்க் காப்பீடு, நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்களின் சந்தைப்படுத்துதலுக்குத் தரப்பட்ட ஒதுக்கீடும் மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்கு 51,026 கோடி ரூபாய்கள், போன வருடத்தை விட 6% அதிகம். பயிர்க் காப்பீட்டின் விஸ்தீரணம் இந்த முறை 40% ஆக உயர்ந்திருக்கிறது (போன வருடம் 30%). மேலும் NABARD மூலம் ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தைகளையும் 250இலிருந்து 585ஆக உயர்த்தும் திட்டமும் உள்ளது. இவற்றைச்செயல்படுத்தினால் விவசாயத்துறைக்கு நல்ல ஊக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. பருவ மழை பொய்க்காது போனால் இந்தத்துறையின் வளர்ச்சி ஆரோக்கியமான 4.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இன்னொரு நல்ல விஷயம் கிராமப்புற நடவடிக்கைகளுக்கான இவ்வருட ஒதுக்கீடு போன வருடத்தை விட 24% அதிகரிக்கப்பட்டுள்ளது.

“அதெல்லாம் சரி! திட்டம் போடும்போது நல்லா யோசிச்சுத்தான் போடறாய்ங்க! செயல்படுத்தும்போது கோட்டை விட்டுடறாங்களே!”

பயிர்க்காப்பீட்டில் அதிகம் பயனடைந்தவர்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள்தாம் என்றும், காப்பீட்டுத்தொகை அதிகமாகிக்கொண்டே போகிறது என்றும் குற்றச்சாட்டுகள் நம் காதில் விழாமலில்லை.

இந்த பட்ஜெட் இளைய சமுதாயத்திற்கும் வேண்டிய அளவு கவனத்தை வழங்கியிருக்கிறது. முக்கியமாக இரண்டாம்நிலைக் கல்வித்தரத்தை உயர்த்தும் பணிகளில் முனைப்புக் காட்டியிருக்கிறது. மிக அதிகமான இளைய சமுதாயம் மொபைல் மற்றும் இணையத்தளத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தகவல் தொழில்தொடர்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதீத முனைப்புக் காட்டியிருக்கிப்பதை பாராட்டத்தான் வேண்டும். ஸ்வயம் என்னும் பெயரில் 350 இணையப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பது இளைய சமுதாயத்திற்கு, குறிப்பாக வேலை செய்துகொண்டே படிக்க விரும்பும் சாரருக்கு பெரிய வரமாகும். இதற்கான அஸ்திவாரமாக ஒண்ணரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்கள் இணையத்தில் கொண்டு வரும் திட்டமும் ஆப்டிக் ஃபைபர் கேபிள் விரிவாக்கப்படும் திட்டமும் சரியான  கிரியா ஊக்கிகள்.

ஐம்பது கோடி ரூபாய்க்குக்குறைவாக விற்பனை செய்யும் மிகச்சிறிய மற்றும் சிறிய வியாபார நிறுவனங்களின் வருமானவரி 30% இலிருந்து 25%ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சலுகை ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு வரம் என்று சிலர் சொன்னாலும் மாற்றுக்குரலும் கேட்கிறது.

“இது வெறும் ஜுஜூபி! இந்த நிறுவனங்கள் பாதிக்கு மேல் லாபமே ஈட்டுவதில்லை. மேலும் நாட்டின் மொத்த வியாபாரத்தில் பார்த்தால் இந்த வகைக் கம்பெனிகளின் வியாபாரம் 1%க்கும் கீழ்தான். அதனால் இந்தச் சலுகையால் சொல்லக்கூடிய முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை!”

மிகப்பெரிய ரிகார்டாக இந்த முறை 48,000 கோடி ரூபாயை மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு (MGNREGA) ஒதுக்கியிருப்பது மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.

“இல்லீங்களா பின்ன, உ.பி தேர்தல் வருதில்ல” என்னும் குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் இந்த ஒதுக்கீடு மிகப்பெரும் பயனைத் தரவல்லது என்பதை மறுக்க முடியாது.

குறைந்த வருமான மக்களின் சந்தோஷத்தை உயர்த்தும் வகையில் நமது நிதியமைச்சர் 10% இலிருந்து 5% வருமான வரி குறைப்பு மற்றும் சில ஒத்தடங்கள் கொடுத்திருப்பதில் பணப்புழக்கம் கொஞ்சம் அதிகரித்து விலை குறைந்த பொருட்களின் தேவையை அதிகரிக்கக் கூடும்.இதன் எதிரொலியாக FMCG கம்பெனிகளின் (இந்துஸ்தான் யூனிலீவர், காட்ரெஜ், பதஞ்சலி, ஐ டி சி) பங்குகள் பட்ஜெட் தினத்தன்றே விலையேற்றம் கண்டன.

உள்கட்டுமானத் தொழிலுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய ஊக்கம் கிடைத்திருக்கிறது. அதிக ஒதுக்கீடு, மலிவு விலை வீடுகள் கட்டும் தொழில் உள்கட்டமைப்பின் (Infrastructure Projects) கீழ் கொண்டு வந்தது, மற்றும் ரயில்வே துறைக்கான அதிக ஒதுக்கீடு போன்றவை இங்கு அதிக முதலீடு வரப்போவதைக் கட்டியம் கூறுகின்றன. இந்தத் துறைக்கு அரசு ஒதுக்கியிருப்பது 3.9 லட்சம் கோடி ரூபாய்கள் (போன வருடம் 3.4 லட்சம் கோடி). இதில் கிட்ட்த்தட்ட 2.4 லட்சம் கோடி போகுவரத்துத் துறைக்கு போவது (தரை, ராயில் மற்றும் நீர் வழி) மிகவும் வரவேற்க்கத்தக்கதாகும். கட்டுமான கம்பெனிகளுக்கு இந்த வருடம் நல்ல வியாபரம் ஆகுமென்பதால் லார்சன் அண்ட் டூப்ரோ, ஏஸி ஸி, ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ஏஷியன் பெயிண்ட் போன்ற கம்பெனிகளின் பங்குச்சந்தை விலை ஏறியதைப் பார்த்தோம். அதுபோலவே ஸ்டீல் தொழிலும் நல்ல வளத்தைப் பெறக்கூடிய வாய்ப்பை இந்த பட்ஜெட் தந்திருக்கிறது. உள்கட்டமைப்புதான் எந்த ஒரு தேசத்துக்குமான முன்னேற்றத்தின் முதல் படி. வாஜ்பேயி காலத்திய தங்க நாற்கரத்தால் நாம் அடைந்த முன்னேற்றம் கண்கூடு. அதுபோல உள்கட்டமைப்பின் பெருக்கம் நீண்ட கால இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய உரமாகும் என்ற வகையில் இது இந்த பட்ஜெட்டின் மிக நல்ல அம்சம். ஆனால் இதைச்செயல்படுத்தும் முறை அதைவிட மிக முக்கியமானதாகும். சிங்கப்பூர் தென்கொரியா நாடுகளில் அரசாங்கம் தனியார் துறையுடன் கைகோர்த்து இந்த உள்கட்டமைப்பைப் பெருக்கி முன்னேற்றம் கண்டது வரலாறு. இதில் இரு பக்கத்தினருக்கும் சமத்தொலைநோக்குடன் இருப்பது மிக அவசியமான  ஒன்றாகும். இதன் மூலம் உள்கட்டமைப்பு பெருகுவதுடன் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் சாத்தியங்களும் உண்டு.

சென்ற சில பட்ஜெட்டுகளில் இல்லாத ஒன்று இந்த பட்ஜெட்டில் இடம் பிடித்திருக்கிறது. சமூக நலச்செயல்பாடுகள் பலவற்றை டிஜிட்டல் வரையறைக்குள் கொண்டு வரும் முயற்சி நல்ல முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது. முதன்மை விவசாயக்கடன் சொசைடிக்களை இணைப்பதற்கு ரூபாய் 1900 கோடி, ஸ்வயம் என்னும் இணையக் கல்வித் திட்டங்கள், சீனியர் குடிமக்களின் உடல் நல விஷயங்களை உள்ளடக்கிய, ஆதாருடன் இணைக்கப்பெற்ற ஸ்மார்ட் அட்டை, முழுக்க முழுக்க இணையம் மூலமே கொடுக்கப்படும் ராணுவ பென்ஷன், கிராமப்புறங்களை இணையம் மூலம் தொடர்பு படுத்தும் ‘டிஜி கிராமம்’, அதிவேக ஆப்டிக் ஃபைபர் மூலம் ஒண்ணரை லட்சக் கிராமங்களை இணையத்தில் கொண்டு வரும் திட்டம் எனப் பல தகவல் தொழில்தொடர்புத் திட்டங்கள் இந்தியாவை மேலும் மேலும் டிஜிட்டல் முறைக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. எல்லோருக்கும் இணைய மருத்துவம், இணையக்கல்வி மற்றும் தொழிற்கல்வி அளிக்க இந்த இந்த டிஜிட்டல் கிராமத் திட்டத்தின் மூலம் வழி வகை செய்யப்படும் என்று அறிவித்திருப்பதும் இன்னொரு பாராட்டத்தக்க முயற்சியே. வரும் காலத்தில் எங்கும் இணையம் எதிலும் இணையம் என்னும் டிஜிட்டல் கட்டுமானம்  கிராமப்புறமெங்கும் விரவி இந்தியப் பொருளாதாரத்தைக் கணிசமாக உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இந்த பட்ஜெட்டினால் நல்ல ஊக்கம் கிடைத்திருக்கிறது. முன்னமேயே சொன்னபடி மலிவு விலை வீடுகள் கட்டும் தொழில் இப்போது உள்கட்டமைப்பு என்னும் தகுதி பெற்றவையாகின்றன. அதனால் இவைகளுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாவதோடு, உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் அரசு மானியங்களும் சலுகைகளும் இவற்றுக்கு இனிமேல் கிடைக்கும். மலிவு விலை வீடுகளாகக் கருதப்படுவதற்கான சில விதி முறைகளின் தளர்ப்பு, வருமானவரிச்சலுகைகள், நீண்டகால மூலதன லாப (Long Term Capital Gains) வரிக் குறைப்புக்கான மாற்றங்கள் போன்றவை ஒரளவுக்கு ரியல் எஸ்டேட் தொழிற்துறையை வளரவைக்கும் ஊக்கிகள்.

“அப்ப இந்த பட்ஜெட்டில் குறையான அம்சங்கள் ஏதுமே இல்லியா” என்று எதிர்க்கட்சிகள் போலக் கேட்கலாம்.

நிச்சயம் குறைகள் இருக்கின்றன.

கார்ப்பரேட் செக்டார் எனப்படும் தனியார்த் துறை, முக்கியமாகப் பெரிய கம்பெனிகள் ஒரு பாட்டம் அழுகின்றன. ஆட்சிக்கு வந்த போதே நிதி அமைச்சர் படிப்படியாக கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து 25% க்கு கொண்டு வந்துவிடுவோம் என்று சொன்னார். ஆனால் இப்போதும் அவை 29% இல் இருந்து குறையவே இல்லை. கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து அவற்றை இன்னும் லாபகரமாக்கினால்தான் அவற்றால் மேல்நாட்டுத் தொழில் நிறுவங்களுடன் போட்டி போட முடியும். அமெரிக்காவே தம் உள்நாட்டு கம்பெனிகளுக்குச் சலுகைகள் தரும்போது இங்கும் தந்திருக்க வேண்டும் என்று ஒரு புலம்பல் கேட்பதை ஒதுக்கிவிட முடியாது.

நம் பொருளாதாரத்தில் வளர்ச்சி இருந்தாலும் அது பூஞ்சையான வளர்ச்சிதான் என்று ஒரு சாரார் வாதாடுகின்றனர். நம் நாட்டின் வளர்ச்சியில் சேவைத்துறை மிக அதிகமாக வளர்ந்துகொண்டிருக்க, உற்பத்தித் துறையும் விவசாயமும் அவளரவில்லை. இது நீண்ட கால நோக்கில் அபாயகரமானது. உற்பத்தித் துறையில் பல இடங்களில் அதிகமாக பயன்படாத்திறன் விரயமாகிக்கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் பொது முதலீடு எங்கெல்லாம் பாயப்போகிறது என்பது மிக முக்கியம். இந்த உற்பத்தித் துறைக்கு பயன்படாத எந்த முதலீடும் பிற்கால இந்தியாவுக்கு கேடு விளைவிக்கும். கடந்த இரண்டு வருடங்களில் விவசாயம் 2% க்கு மேல் வளரவேயில்லை. பருவ மழை பொய்த்துப் போனது முக்கியக் காரணமாக இருந்தாலும் இந்த குறுகிய வளர்ச்சி நம்மைப் பாதித்திருப்பதென்னவோ உண்மை. ஆகவே இந்த பட்ஜெட்டில் சும்மா 24% அதிக ஒதுக்கீடு என்று சொல்லியிருப்பது திருப்தி அளிக்கவில்லை. எப்படியெல்லாம் இந்த ஒதுக்கீடு செலவிடப்படும் என்பதில்தான் வெற்றியோ தோல்வியோ இருக்கிறது.

MGNREGA வுக்கு 48,000கோடி ஒதுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய நன்மையாக இருந்தாலும் இதன் பயன்பாடு பெரிய கேள்விக்குறிதான். இதை செயல்படுத்தப் போவதென்னவோ மாநில அரசுகள்தாம். இந்த விஷயத்தில் அவை மெத்தனமாக நடந்து வருவதை நாம் கடந்த இரு வருடங்களாகப் பார்த்துவருகிறோம். மத்திய அரசு முன்முனைப்போடு மாநில அரசுகளை விரட்டினால்தான் முழுப்பயன்பாடும் கிடைக்கும். ஆனால் இந்த மத்திய அரசுக்குப் பல மாநில அரசுகளுடன் சுமுகமான உறவும் இல்லாத நிலையில் இந்த ஒதுக்கீட்டின் முழுப்பயன் மக்களைச் சென்றடையுமா என்பது சந்தேகத்து இடம் அளிக்கிறது.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், வேலை வாய்ப்புப் பெருக்கம். விவசாயம் 4% அளவில் உயர்ந்தால்தான் அங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதற்குப் பருவ மழையை நம்பியிருக்கிறோம். ஆக உண்மையான வேலை வாய்ப்பு பெருக உற்பத்தித் துறையில்தான் கவனம் வேண்டும். இந்த MGNREGA வால் வேலை வாய்ப்பு உண்டாகும் என்பது உண்மைதான். ஆனால் அந்த வேலைகள் நிரந்தர வேலைகள் இல்லை. அவற்றின் மூலம் குளங்கள் வெட்டலாம். ஆனால் குளங்கள் வெட்டுவது மட்டும் வேலை வாய்ப்பு இல்லையே. வருடம் முழுவதும் குளம் வெட்டிக்கொண்டிருக்க முடியாது. நிரந்தர வேலைவாய்ப்புப் பெருக வேண்டுமானால் உற்பத்தித் துறையில்தான் வேலை வாய்ப்பு பெருக வேண்டும். இந்தத் துறையில் வருடாவருடம் 2% வேலை வாய்ப்புகள் பெருகும் அளவுக்கு முனைய வேண்டும். நடக்கக் கூடியதுதான், ஏனென்றால் போன இருபது வருடங்களாக குஜராத்தில் மட்டும் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 15%, வருடா வருடம்! இந்தியாவிலும், முனைந்தால் முடியும்!

இதிலும் ஓரிரு ஒப்பாரிகள் கேட்கலாம்.

“கிட்டத்தட்ட 45% கூலிப்பணம் இன்னும் விநியோகிக்கப்படவே இல்லை. அதனால் 231கோடி ரூபாய்கள் வேலை செய்தவர்களுக்கு வரவேண்டியிருக்கிறது! இந்த அழகில் இன்னும் ஒதுக்கீடு கொடுப்பதால் நிலைமை முன்னேறும் என்ற நம்பிக்கை இல்லை” என்கிறார் மஸ்தூர் கிசான் சங்காதனத்தைச்சேர்ந்த அருணா ராய்!

வங்கிகளின் நிலைமை, முக்கியமாகப் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை ஆட்டம் கண்டிருக்கும் காலம் இது. வாராக்கடன்களின் அளவு மிக உயர்ந்து வங்கிகளின் ஸ்திரத்தன்மையையே அசைத்துப்பார்க்கும் அளவிற்கு அவை வலுவாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு மல்லையாவைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இந்த வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் இன்னும் எத்தனையோ மல்லையாக்கள் ஒளிந்து கிடக்கிறார்கள். இந்த நிலை இன்னும் ஓராண்டு நீடித்தால் சில பொதுத்துறை வங்கிகள் திவாலாகிவிடும் அபாயமே இருப்பதாகக் காற்றில் செய்திகள் கசிகின்றன. இந்த பட்ஜெட்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் வங்கிகளின் முதலாக அரசே கொடுக்கப் போவதாக பட்ஜெட் சொல்கிறது. இது ஓரளவுக்கு சில வங்கிகளின் நிதி நிலைமையை அண்டைக் கொடுத்தாலும், மொத்த வாராக்கடன்களின் தொகையை வைத்துப்பார்க்கும்போது இந்த பத்தாயிரம் கோடி போதவே போதாது என்கிறார்கள் விற்பன்னர்கள். தேவையென்றால் இன்னும் கூட அரசு வங்கிகளுக்கு நிதி உதவி தர இயலும் என்று அருண் ஜெயிட்லி உத்தரவாதம் அளித்திருக்கிறார். ஆனால் இந்த ஒதுக்கீடு மட்டுமே வங்கிகளின் நிலமையைச் சீர் செய்யப் போதாது. தனியார் வங்கிகள் மிகச்சீராய்ச் செயல்படும்போது பொதுத்துறை வங்கிகள் மட்டும் இப்படி ஆட்டம் கண்டிருப்பது அவற்றின் மேலாண்மைக் குறைபாடுதான். வங்கிக்கடன் அளிக்கும் வகைமுறைகளை முழுமையாகச் சீர் செய்து, வங்கியின் நிதி மேலாண்மையைப் பல மடங்கு மேம்படுத்துதல் அத்தியாவசியமாகும்.

ஆக நிதியமைச்சர் ஒரு விதமாகப் பல நல்ல மாற்றங்களைத் தந்து நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் சரியான கட்டமைப்பில் எடுத்துச்செல்லும் வழிமுறைகளை இந்த பட்ஜெட்டில் கொண்டு வந்திருந்தாலும், சில குறைகளும், விடுபட்டுப்போன முக்கிய நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டின் வீரியத்தை மட்டுப்படுத்தவே செய்கின்றன.

“இது அடாஸான பட்ஜெட்! ஒண்ணுத்துக்கு பிரயோஜனமில்லை” என்று ராஹுல் காந்தி, சீதாரம் யெச்சூரி , நிட்டிஷ் குமார் போன்றவர்கள் சொல்ல ,
“அருமையான கம்பி மேல் நடக்கும் வித்தை! இந்தியாவுக்கு இன்றைய காலகட்டத்தின் மிகத்தேவையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய அற்புதமான பட்ஜெட்” என்று பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்கும் நடுவில்தான் எங்கோ இந்த பட்ஜெட்டின் உண்மையான நிலைமை இருக்கவேண்டும் என்பதாகத்தான் நமக்குப் புலப்படுகிறது!

Leave a Reply