Posted on Leave a comment

நீட்டாக ஒரு தேர்வு – BK ராமச்சந்திரன்

இந்திய மருத்துவக் கவுன்சில் தந்திருக்கும் தகவலின்படி இந்தியாவில் 462 மருத்துவக் கல்லூரிகளில் சற்றேறக்குறைய அறுபத்து நான்காயிரம் மாணவர்கள் வருடாவருடம் சேருகிறார்கள்.1 இந்தியாவில் மருத்துவப்படிப்பு, அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகக் கற்பிக்கப்படுகிறது.

மொத்த இடங்களில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகம் என்ற மூன்று மாநிலங்களில் மட்டும் பத்தொன்பதாயிரம் இடங்கள் உள்ளன. அதாவது இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் மொத்த இடங்களில் 30 % இடங்கள் உள்ளன.

தொடக்கக் கல்வி முதல் உயர் கல்விவரை லாபநோக்கில்லாத நிறுவனங்களும், தர்மஸ்தாபனங்களும்தான் கல்வி நிறுவனங்களை நடத்தமுடியும் என்ற விதி இந்தியாவில் இருக்கிறது. அதாவது கல்வி என்பது விற்பனைக்கில்லை என்ற உயரிய நோக்கில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் வேறாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் மிகப் பெரும்பான்மை நிறுவனங்கள் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ கல்வியை அளிப்பதில்லை. அந்தக் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி, அங்கே படித்து முடிப்பவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு அல்லது அவர்களுக்குக் கிடைக்கும் கிடைக்கும் வேலை வாய்ப்பு இவற்றைப் பொருத்துச் சில ஆயிரங்களில் இருந்து பல லட்சம் வரை இந்த நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கின்றன. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இதை வெளிப்படியாகப் பேசும் ஆட்களின் எண்ணிக்கை என்பது இல்லவே இல்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒரு குறிப்பிட்ட அளவிலான இடங்களை நிரப்புகிறது. மீதி உள்ள இடங்களைத் தனியார் நிறுவனங்களே நிரப்புகின்றன. இந்தச் சேர்க்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல லட்சங்களில் பணம் வசூலிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் அரசாங்கத்தின் கணக்குக்குள் வராமலேயே கறுப்புப் பணமாகவே பரிமாற்றம் நடக்கிறது.

இதுபோக அரசு மருத்துவக் கல்லூரிகளும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்களது மொத்த இடங்களில் 15% இடங்களை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து, அந்த இடங்களை மத்திய அரசு நிரப்புகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. +2 மதிப்பெண்களின் தரவரிசையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில் பல மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருவதும் எல்லோரும் அறிந்த உண்மை. இப்படியான பல தேர்வுகள் என்பது மாணவர்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் உருவாக்குகிறது.

உலகில் பல நாடுகளில் இப்படி பல்வேறு தேர்வு நடப்பது இல்லை. ஒரே தேர்வின் மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்மூலமே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த முறைக்கான முதல்படிதான் NEET தேர்வு. இது ஒரு தேசிய அளவிலான தகுதித் தேர்வு. இந்த முறைப்படி மாணவர்கள் ஒரே தேர்வை மட்டுமே எழுதினால் போதும். அந்தத் தேர்வின்படி மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். அதன்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்விநிலையங்களில் மத்திய அரசு வசமுள்ள 15% இடங்களுக்கும், மாநில அரசு நிரப்பும் இடங்களுக்கும், தனியார்க் கல்வி நிறுவனங்கள் நிரப்பும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகம் நிரப்பும் இடங்களுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு நடக்கும். இந்தத் தேர்வானது 180 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். நான்கு பதில்களுக்குள் சரியான பதிலை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும். இந்தக் கேள்விகள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) பாடங்களில் இருந்து கேட்கப்படும்.

ஆனால், தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இந்த நுழைவுத்தேர்வை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்களையும் அதன் உண்மைகளையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

1. இதனால் இடஒதுக்கீடும் சமூக நீதியும் பாதிக்கப்படும்

உண்மை என்னவென்றால் மத்திய அரசு ஒதுக்கீடு போக மீதி உள்ள 85% இடங்களை மாநில அரசு அவர்கள் வைத்திருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி நிரப்பிக்கொள்ளலாம். சேர்க்கப்படும் மாணவர்கள் நீட் தேர்வின் தரவரிசைப்படி இருக்கவேண்டும் என்பது தவிர இடஒதுக்கீட்டில் மத்திய அரசு தலையிடவில்லை.

2. இந்தத் தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது

நாம்தான் நமது சமச்சீர் கல்வி முறை இந்திய அளவிலில்லை, உலக அளவுக்கான தரத்தில் உள்ளது என்று சொல்லிவந்தோம். இப்போது CBSE பாடத்திட்டத்தின் தரத்திற்கு நமது கல்விமுறை இல்லை என்றால் மாற்ற வேண்டியது பாடத்திட்டத்தையா அல்லது தேர்வு முறையையா? தமிழக மாணவர்களின் கல்வித்தரம் என்பது மிகவும் கவலைப்படும் அளவில்தான் இருக்கிறது என்றே ஆய்வுகள் கூறுகின்றன.2 ஏழுமுதல் பதினான்கு வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்களில் 21% மாணவர்களே ஒன்றாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் தகுதியில் இருக்கிறார்கள்.

கலைப்பிரிவில் படித்தால் பொறியியல் படிக்க முடியாது என்பது தெரியாமலே பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள்.3

இந்திய நாட்டின் எல்லாக் கல்விமுறைகளும் தேசியக்கல்வித் திட்டத்தின் ( 2005) கீழேதான் வடிவமைக்கப்படுகிறது.4 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்தியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் வெறும் எட்டுப் பேர் மட்டுமே தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்5 என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வெறும் மனப்பாடம் செய்யும் முறையையே நமது தேர்வுமுறை முன்னெடுக்கிறது. அதனால் பத்தாம் வகுப்பு வரை மத்தியக் கல்வி முறையில் பயிலும் பல மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சுலபமாகப் படித்தே அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டிலோ இடம்பெற, மாநிலக் கல்வி முறைக்கு மாறிக்கொள்கிறார்கள்.

3. தேர்வு பிராந்திய மொழிகளில் நடைபெறவேண்டும்

தொடக்கத்தில் இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் தமிழ் உள்பட சில பிராந்திய மொழிகளிலும் நடைபெறுகிறது.

மாணவர்களின் தாய்மொழியில் தேர்வு நடக்கவேண்டும் என்பது சரியான கருத்துதான் என்றாலும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளின் பாடப்புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் இருப்பது தவறாக ஆகிவிடாது.

நுழைவுத்தேர்வைத் தாய்மொழியில் எழுதவேண்டும் என்று கூறுபவர்கள், மேற்படிப்பிற்கான பாடங்களைத் தாய்மொழியில் பயிலத் தேவையான பாடப்புத்தகங்களைத் தாய்மொழியில் தயாரிப்பதைப் பற்றிப் பேசுவதே இல்லை.

4, இது ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தடையாக இருக்கும்.

அதாவது தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். இப்போது உள்ள நடைமுறைப்படி பதினொன்றாம் வகுப்புப் பாடங்களைப் படிக்காமல், இரண்டு வருடமும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே படித்து அதன் மூலம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துவிட முடியும். ஆனால் இந்த நுழைவுத்தேர்வை எழுத ஆறாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையான பாடங்களைப் புரிந்து படித்தால் மட்டுமே முடியும்.

எனவே தனியார் பயிற்சி நிலையங்களில் பயிற்சி எடுப்பது அல்ல, புரிந்து படிப்பதே தேவை. பள்ளிகளில் சரியான முறையில் பாடம் நடத்தினால் தனிப்பயிற்சி என்பதே தேவையில்லை என்பதே உண்மை.அதுபோக அரசே இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இந்தத் தேர்வுக்கான பயிற்சியை அளிக்கலாம்.

ஏற்கனவே உள்ள சேர்க்கை முறையில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரிய அளவில் சேர்ந்திருக்கும் வாய்ப்பு இல்லை. பெரும்பாலான இடங்கள் தனியார் கல்விநிலையங்களில் படித்த மாணவர்களாலே நிரப்பப்படுகிறது.

தேவையான மாற்றங்கள்

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்தத் தேர்வை நடத்தாமல் TOFEL, GMAT, GRE முதலான தேர்வுகளைப் போல வருடத்தின் எந்த நேரத்திலும் மாணவர்கள் இந்தத் தேர்வை கணினி மூலமாக எதிர்கொள்ளும் வகைக்கு மாற்றப்படவேண்டும். இரண்டு முறை மட்டுமே நடக்கும் தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் ஒரு மாணவன் ஐந்து முறை இந்தத் தேர்வை எழுதும் வாய்ப்பும், அதில் அவனுக்குக் கிடைப்பதில் மிக அதிகபட்ச மதிப்பெண் எதுவோ அதையே அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இப்போது இந்தத் தேர்வில் இருந்து விலக்களிப்பப்பட்டு உள்ளன. அவையும் இதற்குள்ளே கொண்டுவரப்பட வேண்டும். இந்த மூன்று மாநிலங்களில் ஏறத்தாழ ஏழாயிரம் இடங்கள் உள்ளன.

எந்த ஒரு திட்டமும் நூறுசதவிகிதம் குறையே இல்லாமல் இருக்காது. குறைகளைக் களைந்து, அதனைச் சரிப்படுத்தவேண்டுமே தவிர, உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் செய்வதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவது இல்லை. மாறிவரும் காலத்தில் நமது மாணவர்கள் உலகளவிலான போட்டிகளுக்குத் தயாராகவேண்டியது மிக அவசியம்.

அரசியல் கூச்சல்களாலும், உணர்ச்சியைத் தூண்டுவதாலும் மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது சரியான வழிமுறை அல்ல.

ஆதாரங்கள்

1. http://www.mciindia.org/InformationDesk/ForStudents/ListofCollegesTeachingMBBS.aspx

2. http://examswatch.com/only-21-of-rural-children-in-tamil-nadu-can-read-basic-text/

3. http://www.nisaptham.com/2016/12/blog-post_19.html

4. http://www.ncert.nic.in/rightside/links/pdf/framework/english/nf2005.pdf

5. http://www.justgetmbbs.com/2016/07/cbse-students-incompetent-Tamil-Nadu-MBBS.html

Leave a Reply