Posted on Leave a comment

திராவிட அரசியலின் அராஜக முனை – ஓகை நடராஜன்


 2017 பிப்ரவரி 18ம் நாள் இரவு 10 மணிக்கு இக்கட்டுரை எழுதப்படுகிறது. இக்கட்டுரை வெளிவரும் நேரத்தில் இருக்கும் நிலையைப் பொருத்து இக்கட்டுரை பொருளற்றுப் போகாமல் இருக்குமா என்ற கேள்வி இருப்பதால் கட்டுரையின் தொடக்கத்திலேயே இதைச் சொல்ல வேண்டிய நிலையில் தமிழக அரசியல் இப்போது இருக்கிறது. செல்வி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் தொடங்கிய காட்சி மாற்றங்கள் காண்பவரைச் சோர்வடையச் செய்யுமளவுக்குத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்று, சட்டசபையில் தன் பெரும்பான்மையை நிரூபித்துவிட்ட அளவு வரை வந்திருக்கிறோம். ஜனநாயகத்தின் புதிய சாளரங்களாய்ச் சமூக ஊடகமும், ஊடக விரிவும், இன்ன பிறவும் விறுவிறுப்பையும் பரபரப்பையும் கூட்டிக் கொண்டே சென்ற காட்சிகள் சற்றே மிதகதியில் செல்லும் நிலை வந்திருக்கிறது.  எம்ஜியாரின் நூற்றாண்டை விமரிசையாய்க் கொண்டாடி நம் கவனத்தை ஈர்க்க வேண்டிய அதிமுக, எல்லாவற்றையும் மறந்து, அவர் தோற்றுவித்த கட்சியை அழித்தே தீருவது என்ற தீவிரத்துக்கு ஆட்பட்டிருக்கும் இந்நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் நமது இஸ்ரோ விண்கலத்தால் செலுத்தப்பட்ட சாதனை நிகழ்வு கூட உறைக்காமலும்,  பிப்ரவரி
14ம் தேதி நான்கு இராணுவத்தினரும் நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வு நிகழ்ந்ததே தமிழக மக்கள் பெரும்பாலோருக்குத் தெரியாமலும் இருக்கிறது. வேறெந்த முதன்மைச் செய்திகளும் அறியாத நிலையில், மக்கள் சற்றே ஆசுவாசப்பட ஓர் இடைவேளை வந்திருக்கிறது. ஆனால்  அடுத்த நாலரை ஆண்டுகளும் இப்படியே கழிந்துவிடுமோ என்ற அச்சமும் கூடப் பல அச்சங்களோடு அச்சமாய் நிழலாடி அந்த ஆசுவாசத்தை அபகரிக்கப் பார்க்கிறது.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தாம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக ஆளுநருக்கு மடலிட்ட போதிலிருந்து, ஆளுநர் இந்த அரசியல் சூழலின் மையத்துக்கு வருகிறார். அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் மாறி மாறி அவரைச் சந்தித்து  ஆளுநரின் அடுத்த செயலுக்காகக் காத்திருந்தது ஒரு முரண்நகை! ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் ஏன் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நக்கல்களில் ஒன்று. ஆனால் இன்று அவரில்லாமல் அணுவும் அசையாது என்ற நிலையில் கழகங்களை வைத்திருக்கிறது நமது அரசியல் அமைப்பு! மொத்த ஊடகங்களும் ஆளுநரின் முன்னால் உள்ள பலவேறு விழைவுகளை அலசி ஆராய்ந்து சட்டத்தைச் சாறாகப் பிழியாமல் சக்கையாகப் பிழிந்திருக்கின்றன. ஆளுநர் எடுக்கிற முடிவுகளையும் எடுக்காத முடிவுகளையும் அரசியல் கட்சிகள் தங்கள் சாய்வுகளுக்கு ஏற்ப விளாசித் தள்ளுகின்றன. எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகவும், அதுவே தவறாகவும் இருக்கும் நிலையைப் பல்வேறு விவாதங்கள் சாத்தியப்படுத்தி இருக்கின்றன. சட்டங்களின் அழுத்தமும், சூழலின் அழுத்தமும் , சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் அழைக்க வேண்டியதைக் கட்டியம் கூறுகின்றன. அவ்வாறு நடந்து, அதற்கு முடிவு, ஒரு ரணகளத்தின் ஊடாகவும், சபாநாயக நேர்மைக் குறைவாலும் நிகழ்ந்தும் முடிந்திருக்கிறது.

இப்போதைய நிலையில் பல கட்சிகளின் நிலைப்பாடு தமிழகத்தின் அரசியலைக் கைப்பற்றுவது எப்படி என்ற கேள்வியில் திளைத்திருக்க, அதிமுக சசிகலா பிரிவு மட்டும் தமிழகத்தை எப்படிக் கைப்பற்றுவது என்ற  சிந்தனையில் இருக்கிறது. சிந்தனை கூட இல்லை, செயல்பாட்டில் இருக்கிறது என்றே சொல்லிவிடலாம். இதைத்தான் திராவிட அரசியலின் அராஜக முனை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இது வந்து சேர்ந்த முனையா அல்லது வழிப்பாதையில் ஒரு நிலையா என்று காண முயல்வது இக்கட்டுரையின் நோக்கம்.

அதிமுக(சசிகலா பிரிவு):

ஒரு குற்றத்தொழில் கூட்டத்தின் துல்லியத்தோடும், ஆக்ரோஷத்தோடும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து செயல்பட்ட சசிகலா அணியினர், அம்முயற்சிக்கான வெற்றிக்கனியைப் பெற்றிருக்கிறார்கள். (மருத்துவமனை அனுமதிக்குப் பிறகா அல்லது நெடுங்காலமாகவா என்ற கேள்வியும் இருக்கத்தான் இருக்கிறது!) இவர்களுடைய செயல்பாட்டுக்குக் குற்றத்தொழில் கூட்டத்தைத் தவிர வேறு எந்த ஒப்புமையும் பொருந்தாத அளவுக்கு நிரூபணங்களை வலிந்து ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்படியான வெளிப்படையான வழிமுறையும் கூட அதற்கு இன்னொரு நிரூபணம்தான். சட்டத்துக்குட்பட்டு எதிர்ப்பையும் தயக்கத்தையும் காட்டிய ஆளுநரைக் கூடச் சமாளித்துக் காரியத்தை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். இம்முயற்சிகளிடையே வந்த, மிகவும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்கொண்டு செயலாற்றியது பெரிய செயல்திறமைதான். கொள்ளைக்கூட்டக் கில்லாடித்தனம்தான். ஆனால் இந்த நிகழ்வால் தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் அழிவு கணக்கிட முடியாதது. இந்த ஆட்சிக்காலத்துக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியக் கூறு அறவே இல்லை என்ற பிரக்ஞை இவர்களுக்கு ஏற்படுமானால் அது
எந்த அளவுக்கு அராஜக விஸ்வரூபம் எடுக்குமோ என்ற பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆறுதலாக, பெரும்பான்மைக்குத் தேவையானதை விட வெகுசில சட்ட மன்ற உறுப்பினர்களையே கொண்டிருப்பதும், அவர்களும் பொதுமக்கள் மற்றும் ஊடக அழுத்தங்களால் அணி மாறுவதும் தவிர்க்க முடியாது என்பதுதான். இதனால் இந்த ஆட்சி ஆறு மாதங்களுக்கு மேல் நீடிப்பது கடினம்தான்.

அதிமுக(பன்னீர்செல்வம் பிரிவு):

நிகழ்வுகளில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு ஜெயலலிதாவுக்குக் காட்டிய அதே பணிவையும் விசுவாசத்தையும் தனக்கும் தருவார் என்ற எதிர்பார்ப்பில் முதல்வராக்கப்பட்டாரா அல்லது ஊடகமும் சசிகலா பிரிவு இப்போது குற்றம் சாட்டுவதைப் போலவும் மத்திய பாஜகவால் முதல்வராக்கப்பட்டாரா என்ற புதிருடன் சில நாட்கள் முதல்வராகச் செயல்பட்டவர். ஆனால் அந்தச் சில நாட்களில் இவர் சாதித்தது ஏராளம். நீண்ட நெடுநாட்களாகச் சந்தி சிரித்துக் கொண்டிருந்த துறைமுக இணைப்புச் சாலைக்கு எடுத்த எடுப்பில் அனுமதி வழங்கியது தொடங்கி, ஜல்லிக்கட்டு மற்றும் கப்பல் எண்ணெய்க் கசிவு வரை மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்து நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டார். பன்னீர்செல்வமும் திராவிடப் பாரம்பரியத்தின் முத்திரை அடையாளமான ஊழலில் சாதாரணமானவர் அல்லர். திமுக அல்லது அதிமுகவைச் சேர்ந்த எந்த ஒரு அரசியல் பிரமுகரும் பிரமாண்டமான ஊழல்களைச் செய்தவர்கள் என்ற அடையாளத்துக்கு பன்னீர் செல்வம் எந்த விதத்திலும் விதிவிலக்கானவர் அல்லர். அவரும் அதில் திளைத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எல்லா அதிமுக பிரமுகரையும் போல ஏராளமான ஊழல் புகார்களைக் கொண்டிருந்தாலும் மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முனைந்து ஆதரிக்கும் அளவுக்குக் குறுகிய காலத்தில் செயல்பட்டது அசாதாரணச் சாதனை.  தேர்தல் வந்தால் அன்றைய தேதிகளில், ஏன் இன்றைக்கும் கூட, மக்களின் ஏகோபித்த முதல்வராக திகழக் கூடியவர் பன்னீர் செல்வம். தனது ராஜினாமா கடிதத்தை ஏற்ற பிறகும் உடனடியாகச் செயல்படாமல் நிதானமாகச் செயல்பட்டு பல வாய்ப்புகளை ஆளுநர் இவருக்கும் அளித்தாலும் இவர் வெல்ல முடியாது போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் தேசவிரோத சிந்தனை இல்லாமல், மாநில நலனைப் பெரிதாக மதித்து மிக மிக நிதானத்துடன் செயலாற்றும் வழிமுறைக்கு கழகங்களிலிருந்து வந்த ஒரே அரசியல்வாதி என்ற பெருமை எம்ஜியாருக்குப் பிறகு இவருக்கு மட்டுமே சேரும். இவர் மீண்டும் முதல்வராவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் வாய்ப்புகளும் மக்கள் விருப்பமும் ஓரளவு பிரகாசமாகவே இருக்கின்றன. இது ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பீடித்திருந்த திராவிட அரசியலின் முற்று முனையாகப் பரிமளிக்கும் சாத்தியத்தைத் தருகிறது. குகைப்பாதையின் முடிவில் தென்படும் பெருவெளிச்சமாய் இது இப்போது நிகழ்ந்தால் நலம்.

திமுக:

“அதிமுக பிழைப்புக்கு ரவுடி, ஆனால் திமுக பிறந்ததிலிருந்தே ரவுடி” என்ற விமர்சனம் முகநூலில் இப்போது பிரபலமாக இருக்கிறது. எவ்வளவு உண்மை! எப்படிப் பார்த்தாலும் உண்மை!!  ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்கிற நேர்மையான கோரிக்கையை எந்த அளவுக்கு நேர்மையின்மையோடு அராஜகமாகச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குச் செய்து மேற்கூறிய வாசகத்துக்கு நிரூபணம் செய்திருக்கிறார்கள் திமுகவினர். சபாநாயகரின் அநீதிக்கு அநீதி என்ற அளவில் திமுகவுக்குச் சிலர் ஆதரவளித்தாலும், திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தேர்தல் நேரத்தில் அவர்களுடைய அராஜக முகமே முன்வந்து நிற்கும். எது நடந்ததோ அது நன்றாக நடந்தது என்று சொல்லுமளவுக்கு திமுக தன் நீண்டநாள் அராஜகத் தேவையைத் தணித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா சசிகலாவுக்கு எதிரான வரலாற்று முதன்மை கொண்ட தீர்ப்பைப் பெற்றுத் தந்த வழக்கு முயற்சி திமுகவின் முனைப்பால் வந்ததுதான். ஆனால் அதன் அரசியல் பயன் இவர்களுக்குப் போகப்போவதில்லை. தமிழகத்துக்குத் தன்னை அறியாமல் ஒரு பெருநன்மையை இந்த வழக்கின் மூலம் செய்திருக்கிறார்கள். நன்மை என்பதைத் திமுகவினர் தன்னை அறியாமல் செய்தால்தான் உண்டு! திமுக பிதாமகர் கருணாநிதி செயல்பட முடியாத நிலையில் இருக்கின்ற இந்த வேளையில் குதிரைப் பேர முறையிலாவது இவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்களா என்பது ஐயமே. சாதுர்யத்தோடு கூடிய அராஜகத்தைச் செய்த திமுக, அதிமுகவை எளிதில் வீழ்த்திவிட முடியவில்லை. இப்போது கருணாநிதி மற்றும் அவர் வயதொத்த தலைவர்களின் சாதுர்யத்தை இழந்து நிற்கிறது. திமுக இனி ஒருபோதும் மக்கள் விரும்பி வாக்களிக்கும் நிலையில் இல்லாத கட்சியாகிப் போகலாம்.

தமிழகத் திராவிட அரசியலின் பாதை:

1967ல் மக்கள் பல காரணங்களால் காங்கிரசை ஆதரிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் திமுகவுக்கு வாக்களித்தார்கள். 1971ல் இந்திரா காங்கிரஸ் கூட்டணியால் திமுக வென்றது. திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி அப்போதிருந்து தமிழகத்தை ஊழல் பாதையில் செலுத்தியது.  1977ல் எம்ஜியாரின் அண்ணா திமுக வென்றது. தமிழக அரசியலில் திராவிட அரசியலுக்கான திருப்புமுனையாக அமைந்திருக்க வேண்டிய தருணம். திமுகவின் அராஜகக் கொள்கைகளான ஹிந்து மதக் காழ்ப்பும் பிராமண எதிர்ப்பும் இறை மறுப்பும் தேச விரோதமும் களையப்பட்ட கழகமாக எம்ஜியாரின் அண்ணா திமுக இருந்தது. ஆனால் பத்தாண்டு திமுக ஆட்சி, அரசு இயந்திரத்தில் ஊழலை ஆழமாக விதைத்துவிட்டிருந்தது. திராவிடக் கொள்கைகள் பெற்றெடுத்த அசுரக் குழந்தையாக ஊழல் தமிழகத்தில் ஆட்சியைத் தொடர்ந்தது. 1980ல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி, அராஜகப் பேராசையால் எம்ஜியார் அரசைக் கலைத்து வெற்றிக் கனவோடு போட்டி இட்டாலும் எம்ஜியாரே மீண்டும் வென்றார். 1984 ல் காங்கிரஸ் கூட்டணியோடு எம்ஜியாரே மீண்டும் வென்றார். 1987ல் எம்ஜியார் மறைவினால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களும் பி.எச்.பாண்டியனின் சபாநாயக சர்வாதிகாரங்களும் ஓராண்டு ஜனாதிபதி ஆட்சியுமாகக் கழிந்த பிறகு நடந்த 1989 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மீண்டும் முதல்வரானார். தமிழையும் தமிழர் உணர்வையும் சந்தைப் பொருளாக்கிய திமுக கழகம், விடுதலைப் புலிகள் தொடர்பினாலும் ராஜிவ் காந்தி படுகொலையாலும் 1991ல் அதல பாதாளத்தில் வீழ்ந்து 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து ஜெயலலிதாவிடம் ஆட்சியைப் பறி கொடுத்தது. ஆனால் ஜெயலலிதாவோ சசிகலாவுடன் இணைந்து இமாலய ஊழல்கள் புரிந்து, எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்த திமுகவுக்கு உயிர்ப்பிச்சை அளித்தார். 1996ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு 2001ல் அதிமுக 2006ல் திமுக, 2011ல் அதிமுக 2016ல் மீண்டும் அதிமுக என்ற அளவில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தொடர்ந்து இப்போது 2017 என்ற முனையில் நிற்கிறோம்.

காங்கிரஸ்:

கிட்டத்தட்ட வேரறுந்த நிலையில் இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணியால் உயிர் பெற்று எட்டு சட்டமன்ற உறுப்பினர்களோடு இன்றைய சட்டசபையில் முடிவுகளைப் பாதிக்கும் நிலையில் இருக்கிறது. காங்கிரஸ், திராவிடக் கட்சிகளின் ஹிந்து மதக் காழ்ப்பையும் பிராமண எதிர்ப்பையும் இறைமறுப்பையும் கொள்ளாமல் இருந்தாலும் திராவிடக் கட்சிகளின் சிறந்த வாக்கு வங்கியான சிறுபான்மையினர் ஆதரவின் ஒற்றைக் கொள்கைப் புள்ளியிலும் ஊழல் என்ற பொதுப் புள்ளியிலும் இணைந்திருக்கிறது. அதனால் காங்கிரஸைப் பற்றி சொல்வதற்கு வேறொன்றுமில்லை, குதிரைப்பேரம் காத்திருக்கிறது என்பதைத் தவிர!

பாரதிய ஜனதா கட்சி:

சட்டசபைக்குத் தொடர்பில்லாத பாஜகவை வலுக்கட்டாயமாக இந்த விஷயத்தில்  தொடர்புபடுத்திவிட்டார்கள் ஊடகத்தினர். மத்தியில் ஆளுகிற கட்சியாக இருந்தாலும் ஆளுநர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிகபட்சமாக என்னதான் செய்துவிட முடியும் என்ற உணர்வே இல்லாமல் ஊடகங்கள் பாஜகவை வம்புக்கு இழுத்தன. இதில் பாஜக இரண்டு நன்மைகளைப் பெற முடியும். இப்படி வம்புக்கு இழுத்தாலாவது தமிழகத்தின் அரசியலில் பங்கேற்க பாஜகவுக்கு ஒரு முனைப்பு ஏற்பட வேண்டும். இப்போதிருக்கும் அரசியல் வெற்றிடம் சர்வ நிச்சயமாக பாஜகவை நோக்கிச் செல்கிறது என்பதை உணர வேண்டும். பாஜகவுக்குத் தமிழகம் தேவையில்லையோ என்ற அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு, ‘தமிழகத்துக்குப் பாஜக தேவை’ என்ற உண்மையைத் தமிழகம் உரத்து அவர்களின் செவிட்டுக் காதுகளில் ஓதிக் கொண்டிருக்கிறது. 1967ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பிறகு வெற்றிடம் ஏற்படாத அளவில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இவர்கள் யாரும் இல்லாத நிலையில், மொத்த இந்தியாவும் பாஜகவை அங்கீகரித்து வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், பாஜக செயல்பட்டே ஆக வேண்டிய தருணம் என்பதை இவர்கள் எல்லோருமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

உதிரிக் கட்சிகள்;

உதரிக் கட்சிகளைப் பற்றி உதிரியாகக் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதிலும் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் இவர்களின் உண்மையான தகுதியை அவர்களுக்கான அரசியல் இடத்தைக் காண்பித்துவிட்டது.

தமிழக அரசியலில் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அரசியல் மாறாங்களாக 1967ல் நடைபெற்ற ஆட்சி மாற்றமும் எம்ஜியாரின் எழுச்சியும் ஜெயலலிதாவின் தொடர்ச்சியும் இருக்கின்றன. இவற்றையும் விட பெரியதான ஒரு திருப்புமுனை அரசியல் மாற்றத்துக்கு இப்போது தமிழகம் தயாராக இருக்கிறது. அரசியல் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பகடை. இப்போது உருளுகின்ற நேரம். எப்படி உருளப் போகிறதோ தெரியாது. ஆனால் திராவிட அரசியலின் பக்கம் உருளாது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இரு பெரும் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒரே நேரத்தில் செயல் இழந்திருக்கிறார்கள். இருவரும் சாதாரணமானவர்கள் அல்லர். அரசியல் சூழ்ச்சிகளில் கை தேர்ந்தவர்கள். வெகுமக்களைக் கவரும் பேச்சாற்றலும் வசீகரமும் கொண்டவர்கள். இப்போதிருக்கும் தலைவர்களில் எவரையும் இவர்களில் பாதி ஆற்றல் கொண்டவர்களாகக் கூடச் சொல்ல முடியாது. இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்கலாம். தேசிய அளவிலும் கூட பாரதிய ஜனதா கட்சி தவிர்த்து வேறெந்தக் கட்சியிலும் பொருட்படுத்தத் தக்கத் தலைவர்கள் இல்லாமலும், அவர்கள் உருவாகும் சூழல் அக்கட்சிகளிடம் இல்லாதிருப்பதுமான காலகட்டம் இது. இந்த உண்மை தேசிய அளவில் பெரும் தெளிவையும் தமிழக அளவில் பெரும் குழப்பத்தையும் வருங்காலமாகக் காட்சிப்படுத்துகிறது. இதே உண்மை, தேசிய அளவிளான பாஜக தலைவர்கள் தமிழக அளவில் முழு வீச்சில் ஈடுபடவும் தமிழகத்தைக் கைக்கொள்ளவும், இதை ஆகச் சிறந்த காலமாகவும் வெளிச்சப்படுத்துகிறது. இப்போது மீண்டும் அதையே சொல்ல நேர்கிறது. அரசியல் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பகடை. இப்போது உருளுகின்ற நேரம். எப்படி உருளப் போகிறதோ தெரியாது.

Leave a Reply