Posted on Leave a comment

தீன்தயாள் உபாத்யாயா: கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வாழ்வு – ஜடாயு

1953 ஜூன் 23. அன்று பாரதிய ஜனசங்கக் கட்சியினருக்குப் பேரிடியான செய்தி ஒன்று காத்திருந்தது. அதன் நிறுவனத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி காஷ்மீர் சிறைச்சாலையொன்றில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி.  ஒருபுறம் மத்திய காங்கிரஸ் அரசின் தடை உத்தரவை மீறி அங்கு சென்ற அவரது மரணத்தின் பின்னிருந்த மர்மம் அவர்களுக்கு அச்சமூட்டியது. நேருவிய அரசியலுக்குத் தீவிரமான மாற்றாக அப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருந்த கட்சியின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பதற்றம் மற்றொருபுறம் அவர்களை வாட்டிக் கொண்டிருந்தது.

கடந்த ஆண்டான 1952ல்தான் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருந்தது. நேருவின் வசீகரமான தலைமையின் கீழ் காங்கிரஸ் பெரும் வெற்றிகளை ஈட்டி  மிகப்பெரும்பான்மையுடன் மத்தியிலும் பல மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியமைத்திருந்தது. அத்தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளோடு, புதிய கட்சியான ஜனசங்கமும் போட்டியிட்டது. சியாமாபிரசாத் முகர்ஜி உட்பட்ட 3 எம்பிக்கள் வெற்றிபெற்று, 3.06% வாக்குகள் கிடைத்திருந்ததால், தேசியக் கட்சி என்ற அதன் அங்கீகாரம் சேதமில்லாமல் தப்பித்தது. இந்நிலையில், சியாமா பிரசாத் முகர்ஜியின் திடீர் மரணம் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருந்தது.

அந்த இக்கட்டான தருணத்தில்தான் கட்சியின் முழுப்பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்து அதை வழிநடத்திச் செல்ல எழுந்து வந்தார் 37 வயதே ஆன தீன்தயாள் உபாத்யாயா. அடுத்த 15 ஆண்டுகள் வாழ்க்கையின் இறுதிநாள் வரை அதுவே அவரது இலட்சியப் பயணமாக அமைந்தது. கட்சியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றதிலும், அதன் அரசியல் சித்தாந்தங்களைச் செதுக்கியதிலும், ஆதாரமான கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்ததிலும் அவரது பங்களிப்பு மகத்தானது. பின்னர் 1980ல் ஜனசங்கம்  பெயர்மாற்றத்துடன் பாரதிய ஜனதா கட்சியாகி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு ஒருவகையில் அன்றே அடித்தளமிட்ட தேசத்தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.  அதனை நினைவுகூரும் வகையில்தான் நரேந்திர மோதி அரசு தனது முக்கிய மக்கள்நலத் திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டி வருகிறது.    

1916 செப்டம்பர் 25 அன்று உத்திரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்த தீன்தயாள் சிறுவயதிலேயே தாய்தந்தையரை இழந்து உறவினர்கள் வீட்டில் வளர்ந்தார். வறுமையிலும் பல்வேறு இன்னல்களுக்குமிடையில் தனது படிப்பைத் தொடர்ந்தார். சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கி ஆங்கில இலக்கியத்திலும் அறிவியலிலும் முதல்வகுப்புத் தேர்ச்சியுடன் பட்டங்கள் பெற்றார். தேசபக்தியும் தியாக உணர்வும் வாய்க்கப் பெற்றிருந்த இளைஞரான தீன்தயாள், தனக்குக் கிடைத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மதிப்பு மிக்க அரசுப் பணியை ஏற்றுக்கொள்ளவில்லை. திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய உறவினர்களிடமும் தேசத்தொண்டில் முழுமூச்சுடன் ஈடுபட முடிவு செய்திருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்.  கான்பூரில் கல்லூரியில் பயிலும் காலத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீது ஈர்ப்புக் கொண்டு பின்னர் முழுநேரப் பிரசாரகராக உத்திரப் பிரதேசத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் 1951ல் ஜனசங்கம் தொடங்கப்பட்டபொழுது அக்கட்சியின் முதல் பொதுச்செயலாளராக ஆனார். அரசியல் களத்தில் நுழைந்தபின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மசாரியாகவே தொடர்ந்தார்.  

1953-67 காலகட்டத்தில் ஜனசங்கம் பெற்ற  படிப்படியான வளர்ச்சி தீன்தயாள்ஜியின் தலைமைப் பண்புக்கும் கடும் உழைப்புக்கும் சான்றாகும். இந்தக் காலகட்டத்தில், ஜனசங்கத்தின் தலைவர் பதவியை புகழ்பெற்ற அறிஞரான டாக்டர் ரகுவீரா உட்பட்ட பலர் அலங்கரித்தனர். ஆனால் தீன்தயாள்ஜி பொதுச்செயலாளர் என்ற அளவிலேயே நீடித்தார். ஆயினும் கட்சியின் முக்கியப் பேச்சாளராகவும், நிர்வாகியாகவும், திட்டமிடுபவராகவும், சித்தாந்தியாகவும் எல்லாம் அவரே இருந்தார்.

1957 தேர்தலில் ஜனசங்கம் பாராளுமன்றத்திற்கு நிறுத்திய 127 வேட்பாளர்களில் 4 பேரும், மாநிலச் சட்டமன்றங்களுக்கு நிறுத்திய 650 வேட்பாளர்களில் 51 பேரும் வெற்றி பெற்றனர். ஓட்டு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்திருந்தது.  உத்திரப் பிரதேசத்தின் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஜனசங்க வேட்பாளர்கள் பெருவாரியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  இக்காலகட்டத்தில் கலாசார தேசியவாதம், காந்திய சுதேசிப் பொருளாதாரம், ஹிந்தியை தேசமொழியாக்குதல், காஷ்மீர் பிரிவினைவாத எதிர்ப்பு, பசுவதைத் தடுப்பு போன்ற கொள்கைகளையே ஜனசங்கம் மையமாகப் பிரசாரம் செய்துவந்தது.

வட இந்தியா முழுவதும் ஜனசங்கம் நன்கு அறியப்பட்டிருந்த கட்சியாகி இருந்த நிலையில், 1958 வருடாந்திர செயற்குழுக் கூட்டத்தை பெங்களூரில் நடத்த தீன்தயாள்ஜி முடிவெடுத்தார். “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்திய தேசத்தின் ஒற்றுமையை மதிப்பதும் உறுதி செய்வதுமே ஜனசங்கத்தின் மையமான கொள்கை. இது வட இந்தியர்களுக்கு மட்டுமான கட்சி அல்ல” என்று அக்கூட்டத்தில் அவர் அறிவித்தார். 1959ம் ஆண்டு சுதந்திரா கட்சி உருவானபோது, இடதுசாரிகளுக்கும் நேருவுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த வியாபாரிகள், ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள் போன்ற பல வலதுசாரி தரப்பினரையும் அக்கட்சி சேர்த்துக்கொண்டது. ஜனசங்கமும் இதே வழிமுறையைப் பின்பற்றி தனது வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டபோது இலட்சியவாதியான தீன்தயாள்ஜி அதைக் கடுமையாக நிராகரித்தார். குறுகிய கால வெற்றிகளை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், நீண்டகால நோக்கில் கட்சியின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் தொடர்ந்து மக்கள் மனதில் பதியவைத்து அதன் மூலம் கிடைக்கும் வளர்ச்சியே நிலையானதும் உறுதியானதுமாகும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே கணிசமான எதிர்ப்பும் இருந்தது.

1962 தேர்தலில் சீனப்படையெடுப்பின் பின்னணியில் நேருவின் செல்வாக்கு சரிந்துகொண்டு வந்தது. காங்கிரசுடனான கம்யூனிஸ்டுகளின் நெருக்கமும் மிக வலுவாக இருந்தது.  அந்தச் சூழலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால் காங்கிரசை முறியடித்து விடலாம் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்த ஜனசங்கம் மாறுபட்ட கொள்கைகளை உடைய கட்சிகளின் இத்தகைய கூட்டணி அரசியல் தர்மமல்ல என்று கருதி அதைத் தவிர்த்தது. டாக்டர் ராம் மனோஹர் லோகியாவின் சோஷலிஸ்டு கட்சியுடன் மட்டும் கூட்டணியும் தொகுதி உடன்பாடும் வைத்துக் கொண்டது. 198 பாராளுமன்ற தொகுதிகளிலும், பல மாநிலச் சட்டசபைத் தொகுதிகளிலும் ஜனசங்க வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிட்டனர். காங்கிரஸ் அல்லாத கட்சிகளில், மிக அதிகமான வேட்பாளர்களை ஜனசங்கமே நிறுத்தியிருந்தது. 6.44% வாக்கு விகிதத்துடன் 14 எம்.பி இடங்களே அதற்குக் கிடைத்தன. 1963ல் நடந்த உத்திரப் பிரதேச இடைத்தேர்தலில் தீன்தயாள்ஜியும் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். “தீன்தயாள்ஜி பாராளுமன்றத்திற்குள்  நுழைந்ததே இல்லை. ஆனால், இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர்களை சிருஷ்டிப்பவராக அவர் இருந்தார்” என்று பின்னாளில் அடல் பிஹாரி வாஜ்பேயி குறிப்பிட்டிருக்கிறார்.

1963ல் ஜனசங்கத்தின் செயற்குழுக்கூட்டம் விஜயவாடாவில் நிகழ்ந்தது. இக்கூட்டத்தில் குருஜி கோல்வல்கர் மற்றும் தீன்தயாள்ஜியின் ஆசிபெற்ற பச்சராஜ் வியாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் அதிருப்தியாளர்களின் குழுக்கள் வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கின. அடல் பிஹாரி வாஜ்பேயி, நானாஜி தேஷ்முக், சுந்தர் சிங் பண்டாரி ஆகிய இளம் தலைவர்கள் பிரபலமடைந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் 1967 பாராளுமன்றத் தேர்தலை ஜனசங்கம் உறுதியுடன் சந்தித்தது. 35 இடங்களில் வென்று, 75 இடங்களில் இரண்டாவது இடத்தில் வந்தது.  இத்தேர்தலில்தான் தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியிழந்தது. “இனிவரும் காலங்களில் காங்கிரசை மையப்படுத்திய அரசியல் மறைந்து அதற்கு மாற்றாக கூட்டணி அரசுகளின் காலம் உருவாகும்” என்று தேர்தல் முடிவுகளை விமர்சித்த தீன்தயாள்ஜி கூறினார். அவரது தீர்க்கதரிசனம் பின்வந்த காலங்களில் பெருமளவு உண்மையாயிற்று.

1967 டிசம்பரில் கோழிக்கோட்டில் நடைபெற்ற ஜனசங்க செயற்குழுக் கூட்டத்தில், இதுகாறும் செயலாளராகவே இருந்து அவர் வளர்த்தெடுத்த கட்சியின் அகில இந்தியத் தலைவராக தீன்தயாள்ஜி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஜனசங்கக் கட்சியின் தொண்டர்களிடையே பெருமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் உருவாக்கிற்று. தீன்தயாள்ஜியின் அப்பழுக்கற்ற நேர்மை, எளிமை, அனைவருடனும் கலந்து பழகும் தன்மை, சமரசங்களுக்கு உட்படாதவர் என்ற நம்பகத்தன்மை அனைத்தும் இணைந்து அவரை மாபெரும் ஆதர்சமாகத் தொண்டர்களிடையே உயர்த்தியிருந்தன.

“நமது தேசத்தின் கடந்தகாலம் நமக்கு மிகவும் உத்வேகமளிக்கக் கூடியது. நிகழ்காலத்தில் அதன் நிலையை யதார்த்தமான முறையில் நாம் உணர்ந்துள்ளோம்.  எதிர்காலத்திற்கான ஒளிமயமான கனவுகள் நமக்கு உண்டு, ஆனால் நாம் உறங்கிக் கொண்டிருக்கவில்லை.  நமது கனவுகளை உண்மையாக்க உழைக்கும் கர்மயோகிகளாகவே நாம் இருக்கிறோம்.  காலத்தை வென்ற நமது கலாசாரத்தின் கடந்தகாலத்தையும், நிலையற்ற நிகழ்காலத்தையும், என்றுமழியாமல் நிற்கப்போகிற எதிர்காலத்தையும் உணர்ந்தவர்களாக நாம் இருக்கிறோம். இறுதி வெற்றியைக் குறித்த முழு நம்பிக்கை நமக்கு உண்டு. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கும் தயாராகவே இருக்கிறோம்” என்று இந்தக் கூட்டத்தில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைமையுரையில் தீன்தயாள்ஜி குறிப்பிட்டார்.

ஆனால், காலத்தின் கரங்கள் குரூரமானவை. அடுத்த சில வாரங்களிலேயே, 1968 பிப்ரவரி 11ம் நாள் மரணதேவன் அவரது உயிரைக் கவர்ந்து சென்றுவிட்டான். அன்று அதிகாலை 3.45 மணிக்கு முகல்சராய் ரயில் நிலையத்திற்குச் சிறிது தொலைவில் ரயில் தண்டவாளத்தினருகில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. முந்தைய நாள் லக்னோவிலிருந்து கிளம்பி பாட்னாவில் நடக்க இருக்கும் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாட்னா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவரது உடலில் தாக்குதலுக்கான தடயங்கள் ஏதும் இல்லாததால், ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுத்தான் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று உறுதி செய்யப்பட்டது. மரணத்தின்போது அவரது வயது 51 தான். தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப் பட்டு 43 நாட்களே ஆகியிருந்தன.

தீன்தயாள்ஜியின் இந்தக் கொடூரமான மரணம் நாடெங்கும் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது திட்டமிட்ட அரசியல் படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் கட்சி ஆதரவாளர்களாலும் பொதுமக்களாலும் எழுப்பப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை, ரயிலில் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையர்கள் அவரது உடைமைகளைத் திருடிக் கொண்டு, கீழே தள்ளிக் கொன்றிருக்கலாம் என்பதையே தனது முடிவாக அறிவித்தது. ஆனால் இது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் போதிய சாட்சியம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். இந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த மர்மம் இன்றளவும்  தீர்க்கப்படவில்லை.

******

தீன்தயாள் உபாத்யாயா ஒரு தலைவர் மட்டுமல்ல, சிறந்த இதழாளரும், தத்துவவாதியும், எழுத்தாளரும் கூட. அவர் விட்டுச்சென்றிருக்கும் சிந்தனைகள், அவரது நேரடி அரசியல் பங்களிப்புக்கு இணையாக மிகவும் முக்கியமானவை.

1940களில் பாஞ்சஜன்ய, ராஷ்ட்ர தர்ம, ஸ்வதேஷ் ஆகிய ஹிந்தி இதழ்களைத் தொடங்கி அவற்றை அவர் தொடர்ந்து நடத்திவந்தார். ஆசிரியராக இருந்ததோடு, இந்த இதழ்களின் கணிசமான பகுதிகளையும் அவரே எழுதியும் வந்தார். வட இந்தியாவின் பல பகுதிகளில் இந்துத்துவச் சிந்தனைகள் இந்த இதழ்களின் வாயிலாகவே பரவின. இவற்றில் பாஞ்சஜன்ய ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரபூர்வ வார இதழாகவும், ராஷ்ட்ர தர்ம மாத இதழாகவும், ஸ்வதேஷ் பெயர் மாற்றத்துடன் தருண் பாரத் என்று லக்னோவிலிருந்து வரும் நாளிதழாகவும் இன்றுவரை நீடித்து வந்து கொண்டிருக்கின்றன.

அரசியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம் தொடர்பாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் அவர் பெயரில் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது Integral Humanism (ஹிந்தியில் ‘ஏகாத்ம மானவவாத்’). ‘ஒருங்கிணைந்த மானுடவாதம்’ என்பது இதன் பொருள். 1965ம் ஆண்டு மும்பையில் நான்கு நாட்கள் தீன்தயாள்ஜி ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல்.

இன்றளவும் இந்துத்துவ அரசியலின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஒரு பரந்த வழிகாட்டியாக இந்தக் கருத்தாக்கம் அமைந்துள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் அமைப்பு சட்டத்தில் (BJP Party Constitution) அதன் அதிகாரபூர்வக் கொள்கையாக ‘ஒருங்கிணைந்த மானுடவாதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் பெரும்பாலான அரசியல் வாசகர்களுக்கு இந்தக் கொள்கையின் பெயர்கூட பரிச்சயமில்லாமல் உள்ளது. இடதுசாரிகள் அளவுக்கு பாஜக தனது சித்தாந்தப் பரப்புரைகளைப் போதிய அளவு மேற்கொள்ளவில்லை என்பது இதற்கு ஒரு காரணம். இந்துத்துவம் என்ற சொல்லே மேற்கண்ட சொற்றொடரின் பொருளைத் தன்னகத்தே கொண்டதாகவும், அதைவிட எளிமையாகவும் இருந்ததும் மற்றொரு காரணம்.  மேலும், “பாரதப் பண்பாட்டில் என்றும் உள்ள ஸ்திரமான, இயங்குதன்மை கொண்ட (dynamic), தொகுப்புத்தன்மை கொண்ட (synthesizing), உன்னதமான அம்சங்களையெல்லாம் சேர்த்து அதற்குக் கொடுத்துள்ள பெயர்தான் ஒருங்கிணைந்த மானுடவாதம். அது ஒரு புதிய சித்தாந்தமல்ல” என்று தீன்தயாள்ஜியே கூறியிருக்கிறார். 1960களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எம்.என்.ராய் முன்வைத்த ‘அடிப்படைக்கூறு மானுடவாதம்’ (Radical Humanism) என்ற கொள்கைப் பெயருக்கு எதிர்வினையாக இருக்கும்படியே மேற்கண்ட பெயர் சூட்டப்பட்டது என்றும் ஒரு சுவாரஸ்யமான தகவலை எல்.கே.அத்வானி பின்னாட்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்திறக்கில் தீன்தயாள்ஜி முன்வைத்த முக்கியக்  கருத்துக்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1) கம்யூனிசம் மட்டுமல்ல, மேற்கத்திய சித்தாந்தங்களான முதலாளித்துவம், ஜனநாயகம், தேசியவாதம் ஆகியவையும் கூட மனித வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகவில்லை; மாறாகப் பொருளியல் சார்ந்து மட்டுமே நோக்கியுள்ளன. ஆனால் பாரதப் பண்பாடு மட்டுமே காமம் (புலன் சார்ந்த இன்பங்கள்), அர்த்தம் (உலகியல் வெற்றிகள்), தர்மம் (ஒவ்வொருவரும் தனக்கான அறங்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாகப் பிரபஞ்சத்தின் இசைவுக்கு மாறாமல் அதனுடன் இணைந்திருத்தல்) ஆகிய மூன்று பரிமாணங்களையும் ஆழ்ந்து நோக்கி வாழ்க்கை நெறிகளை வகுத்துள்ளது. அத்துடன், மோட்சம் (உலகியலில் இருந்து முற்றிலுமாக விடுபடுதல்) என்ற ஆன்மீகமான பரிமாணத்தையும் இத்துடன் இணைத்துள்ளது. இதுவே ஒருங்கிணைந்த மானுட வாழ்க்கை நோக்கு.

2) “யத் பிண்டே தத் ப்ரஹ்மாண்டே”. அதாவது, பிண்டத்தில் உள்ளதுதான் பிரம்மாண்டத்திலும் உள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் முத்திரைத் தன்மைகளும் சேர்ந்தே உடலமைப்பு உருவாகிறது; அதே ரீதியில் ஒவ்வொருவரிடத்தும் ஒட்டுமொத்த முழுமையின் முத்திரை உள்ளது. இந்தப் பிணைப்புதான் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவின் அச்சாணியாக உள்ளது. குடும்பம், தேசம், அரசாங்கம் ஆகிய அமைப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு இத்தகைய பிணைப்பு சார்ந்த பிரக்ஞை அவசியம். இத்தகைய புரிதலைக் கொண்டே இயற்கையையும் பூமியையும் கூட நாம் பேரழிவிலிருந்து காக்க முடியும்.  (உலக அளவில் சுற்றுச்சூழல் இயக்கமே பெரிதாகத் தொடங்கியிராத 1960களில் தீன்தயாள்ஜி இக்கருத்தை வைத்தது குறிப்பிடத்தக்கது.)

3) மனிதனின் ஆளுமை ஒற்றைப்படையானதல்ல,  பல பரிணாமங்களைக் கொண்டது என்பது சரிதான். ஆனால் தனிமனிதனின் இத்தகைய ஆளுமைக்கும் சமூகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் இடையில் நிரந்தரமான, தவிர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ளன என்பது ஏற்கத்தக்கதல்ல. அத்தகைய முரண்பாடு என்பது இயற்கையானதோ அல்லது கலாசாரத்தின் அடையாளமோ அல்ல, மாறாக அது சீரழிவின், திரிபின் அடையாளம். மானுட வளர்ச்சியே இத்தகைய அடிப்படையான முரண்பாட்டினால்தான் நிகழ்கிறது என்று மேற்குலகின் முக்கியமான சிந்தனையாளர்கள் எண்ணியது பெரும்பிழையாகும். இதைவைத்து தனிமனிதனுக்கும் அரசுக்கும் (State) இடையே உள்ள மோதல் என்பது ஒருவிதமான இயற்கை நிகழ்வு என்றும், வர்க்கப் போராட்டம் என்பது ‘இயற்கை விதி’ போல நடந்தே தீரும் என்றும் கோட்பாடுகளை அவர்கள் உருவாக்கினார்கள்.

4) இந்தியாவின் பொருளாதார அமைப்பு அறத்தின் அடிப்படையில் பாரதியப் பண்பாட்டை அடியொற்றி அமையவேண்டும். மையத்தில் அதிகாரம் குவிக்கப்படாததாகவும் (decentralized), பஞ்சாயத்துகள் போன்ற அமைப்புகள் சுதந்திரத்துடன் இயங்க வழிசெய்வதாகவும் இருக்கவேண்டும். அடிப்படைத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் அப்பால், மேற்கத்திய பாணியிலான அதீத நுகர்வுக் கலாசாரம் ஊக்குவிக்கப்படக்கூடாது. கல்வியும் மருத்துவமும் பொதுச்சேவைகளாகவே அரசால் வழங்கப் படவேண்டும்; அவற்றைத் தனியார் மயமாக்குவது அபாயகரமானது. அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச வேலைவாய்ப்புக்கு அரசே உத்திரவாதமளிக்கவேண்டும்.

காலனிய கருத்தாக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு, அசலான பாரதிய சிந்தனைகளின் அடிப்படையில் மேற்கண்ட சிந்தனைகளை தீன்தயாள்ஜி முன்வைத்தார் என்பது அவற்றை இன்று வாசிக்கும் எவருக்கும் விளங்கும். வலதுசாரி / இடதுசாரி, முதலுடைமை / பொதுவுடைமை ஆகிய இருமைக் கோட்பாட்டுப் பிரிவினைகள் இந்தியச் சூழலில் எப்படி முற்றிலும் பொருளற்றதாகின்றன என்பதும் புலனாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கமாக இப்போதும் விளங்கிவரும் பாரதீய மஜ்தூர் சங்கம், வலதுசாரி என்று கம்யூனிஸ்டுகளால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த இந்துத்துவ அரசியல் இயக்கத்தால்தான் உருவாக்கப் பட்டது. தீன்தயாள்ஜியின் சீடரும் அவரது கொள்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்தவருமான தத்தோபந்த் டெங்கடிதான் அதன் நிறுவனர். ‘மூன்றாவது வழி’ (Third Way) என்ற தனது நூலில் மேற்சொன்ன கருத்தை அவர் விளக்கியிருக்கிறார்.

நடந்து முடிந்திருக்கும் உத்திரப் பிரதேசத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றிபெற்றிருப்பது குறித்து இந்திய ஊடகங்களிலுள்ள அரசியல் பண்டிட்டுகள் பலரும் அதிர்ச்சியும் வியப்பும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். உத்திரப் பிரதேசத்தின் எல்லாவிதமான சாதி,மத வாக்குவங்கிக் கணக்குகளையும் தாண்டி, அனைத்துவிதமான நடுத்தர, கீழ்நடுத்தர, வறுமைக்கோட்டு மக்களுடன் நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தனக்கென்று ஒரு ‘வர்க்கம் சார்ந்த’ வாக்குவங்கியை (Class based vote bank) நரேந்திர மோதி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இடதுசாரி மொழியை அவர் பேசியதுதான் இதற்குக் காரணம் என்று அவர்கள் வியாக்கியானமும் அளிக்கிறார்கள். இதிலுள்ள  தர்க்கப் பிழை பாமரனுக்குக் கூடப் புரியும். உண்மையில் பாரதப் பிரதமர் பேசியது இடதுசாரிகளின் மொழியல்ல, இந்துத்துவம் முதலிலிருந்தே முன்வைத்து வரக்கூடிய பொருளாதாரச் சிந்தனைகளின் மொழிதான். தேர்தல் பிரசாரங்களின்போது, எல்லாப் பொதுக்கூட்டங்களிலும் மோதி மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது தீன்தயாள் உபாத்யாயா உருவாக்கிய ஒரு சொல் ‘அந்த்யோதய.’ கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வாழ்வு என்பது அதன் பொருள்.

தீன்தயாள்ஜியின் நூற்றாண்டு வருடத்தில், அந்த மகத்தான லட்சியக் கனவை நனவாக்கும் வகையில் நரேந்திரமோதியின் அரசு செயல்பட்டு வருகிறது. இதுவே அந்த மாமனிதருக்கு அவரைப் பின்பற்றுவோர் செலுத்தும் சிறந்த அஞ்சலி.

உசாத்துணைகள்:

1) Pandit Deendayal Upadhyaya, by Dr. Mahesh Chandra Sharma
2) http://deendayalupadhyay.org/
3) Integral Humanism, by Pt. Deendayal Upadhyaya : https://goo.gl/R0lkp2

Leave a Reply