Posted on Leave a comment

மறந்து போன பக்கங்கள் – அரவிந்த் சுவாமிநாதன்

சிலமாதங்களுக்கு முன்னால், ‘பல
வருடங்களுக்கு முன்னால் படித்தது, மீண்டும் படித்துப் பார்ப்போமே’ என்றெண்ணி, சுஜாதா
எழுதிய கொலையுதிர்காலம் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது.
கதையின் நடுவில், குமாரவியாசன் பங்களாவுக்குத் துப்பறியப்போகும் கணேஷூக்கும் வசந்துக்கும்
கேட்கும் குரல்களாய் இடம் பெற்றிருந்த  சிலவரிகள்
என்னை மிகவும் ஈர்த்தன.
 “உமது தாய் புத்திரவதி. அவள் புத்திரவதியல்ல என்று
மறுத்துவிடும் பார்க்கலாம்.”
“காலில்லாத முடவன் கடலைத் தாண்டுவானோ;
மண் பூனை எலியைப் பிடிக்குமோ.”
“வித்வஜன கோலாகலன்… வித்வஜன கோலாகலன்.”
– இப்படியெல்லாமாக வந்திருந்த வரிகளை
வாசித்தபோது, இதனை முன்பே எங்கேயோ வாசித்திருந்த நினைவு வந்தது. என்ன முயன்றும் எப்போது,
எங்கே என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாவலிலும் அந்த விவரங்கள் இல்லை.
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது
தாத்தாவின் சேகரிப்பில் இருந்த சில பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான்
இந்த வரிகள் அடங்கிய புத்தகம் கண்ணில்பட்டது. அது ‘விநோத ரச மஞ்சரி.’ அஷ்டாவதானம் வீராசாமிச்
செட்டியாரால் தொகுக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த ‘தமிழறியும் பெருமாள் கதை’ என்ற
கதைப்பகுதியில்தான் மேற்கண்ட வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஒரு சுவாரஸ்யம் ‘தமிழறியும்
பெருமாள்’ என்பவர் ஆணல்ல; பெண். எழுதப் படிக்கத் தெரியாத விறகு வெட்டி, இளவரசியுடன்
காதல், வஞ்சகன் ஒருவனது இடையீட்டால் இளவரசி தற்கொலை, ஆவியாக அலைந்தது, ஔவையாரின் ஆசியால்
அறிவுள்ள பெண்ணாக மறுபிறவி எடுத்தது, நக்கீரரை வென்றது என்று மிகச் சுவாரஸ்யமாகச் சென்றது
அந்தக் கதை. இது திரைப்படமாகவும் அந்தக் காலத்தில் வெளிவந்திருக்கிறது.
வீராசாமிச் செட்டியார் ‘விநோத ரசமஞ்சரி’
மட்டுமல்லாது மேலும் சில நூல்களைத் தொகுத்திருக்கிறார். அவற்றின் விவரங்கள் தற்போது
கிடைக்கவில்லை. சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த செட்டியார், அவதானியும் கூட. ஒரே சமயத்தில்
எட்டு கவனகங்களைச் செய்யும் அவதானி என்பதால் ‘அஷ்டாவதானி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
இவரது சமகாலத்து இலக்கியவாதியாகத் திகழ்ந்த பூவை கலியாணசுந்தர முதலியாரும் ஓர் அஷ்டாவதானிதான்.
‘திருவான்மியூர் புராணம்’, ‘செய்யுள் இலக்கணம்’, ‘சித்தாந்தக் காரியக் கட்டளை’, ‘திரிபுரசுந்தரி
மாலை’, ‘திருவேற்காட்டுப் புராண வசனம்’, ‘திருவொற்றியூர்ப் புராண வசனம்’ போன்ற நூல்களை
எழுதியிருக்கிறார். இவர் பல செய்யுள், இலக்கண நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தவரும் கூட.
இவர்கள் மட்டுமல்ல; அரங்கநாதக்
கவிராயர், இராமசாமிப் பிள்ளை, இராமானுஜக் கவிராயர், சரவணப் பெருமாள் பிள்ளை, அப்துல்காதர்,
சின்ன இபுறாகீம் மொகையதீன், சபாபதி முதலியார் என பல அஷ்டாவதானிகள் இருந்திருக்கிறார்கள்.
ஜெகநாதப் பிள்ளை, முத்துவீர உபாத்தியாயர், ஆறுமுகம் பிள்ளை என தசாவதானிகளும் (பத்து
கவனகம்), ஷோடசாவதானிகள், (பதினாறு கவனகம்) சதாவதானிகள் (நூறு கவனகம்) என்றும் பலர்
இருந்திருக்கின்றனர். சதாவதானிகளில் தெ.பொ.கிருஷ்ணாமிப் பாவலர், சரவணப் பெருமாள் கவிராயர்,
செய்குத்தம்பிப் பாவலர் போன்றோர் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். சுப்பராமையர் என்பவர்
துவிசதாவதானி (இருநூறு கவனகம்) செய்வதில் வல்லவராய் இருந்திருக்கிறார். திருக்குறள்
அவதானிகள் பலர் வாழ்ந்திருக்கின்றனர்.


இந்தப் பட்டியல்கள் மூலம் பிராமணர்கள் மட்டுமல்லாது, பிள்ளைகள், செட்டியார்கள்,
முதலியார்கள், கோனார்கள், இஸ்லாமியர்கள் எனப் பல சாதியினரும் பெரும் தமிழ்ப் புலவர்களாக,
அறிஞர்களாக அக்காலத்தில் இருந்திருப்பது தெரிய வருகிறது.
ஆனால் குறிப்பிட்ட சில இயக்கத்தினர்களோ உயர் சாதிப்
பிராமணர்கள்தான் மற்ற சாதியினரை அடக்கி ஒடுக்கிக் கல்வி கற்க விடாமல் செய்தனர், அடிமையாக
வைத்திருந்தனர், முன்னேற விடாமல் தடுத்தனர் என்று சொல்லிக் கொண்டிருப்பது இன்றளவும்
தொடர்ந்துகொண்டு இருக்கும் அபத்தங்களுள் ஒன்றாக உள்ளது. அத்தகைய இயக்கங்களின் வளர்ச்சியால்,
சேவையால் இன்றைக்குத் தமிழில் அவதானிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்குக்
குறுகிப் போய்விட்டது.
அவதானிகள் மட்டுமின்றி, சிற்றிலக்கியங்கள்
பலவற்றை உருவாக்கி அளித்த அறிஞர்கள் பலரும் அக்காலத்தில் இருந்திருக்கின்றனர். அவர்களுள்
குறிப்பிடத்தகுந்த ஒருவர் அரசஞ்சண்முகனார். சோழவந்தான் என்ற ஊரைச் சேர்ந்த இவர் வள்ளல்
பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச்சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.
சங்கத்தின் கலாசாலையாகிய செந்தமிழ்க் கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
மாலை, பதிகம், அந்தாதி என பல நூல்களைத் தந்தவர். இவற்றில் மாலை மாற்றுமாலை என்ற பனுவலும்,
ஏகபாத நூற்றந்தாதியும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள். ‘சித்திரக்கவி’ என்னும் வகையிலானவை
இவை.
ஒரு பாடலின் இறுதியில் (அந்தம்)
வரும் எழுத்து, அசை, சீர், சொல் போன்றவை அடுத்த பாடலின் முதலாக (ஆதி) வருவது அந்தாதி.
இதில் ‘ஏக பாதம்’ என்பது ஒரே அடியே திரும்பத் திரும்ப நான்கடிகளில் வந்து வெவ்வேறு
பொருள்களைத் தருவதாகும். ஏகபாத நூற்றந்தாதியில் இருந்து ஒரு சான்றைப் பார்ப்போம்
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்
தனத்தனையே
முதலடியை அம்பு, ஆலி, கயம், கோள்,
தலம், கஞ்சம், அத்தன், அத்தன் எனப் பிரித்து அவற்றோடு, அம்புக்கோள், ஆலிக்கோள், கயத்தங்கோள்
எனக் கொண்டு; நீருக்கும் மழைக்கும் காரகனாகிய சுக்கிரன் என்னும் கோளே, கயநோய் (குறைநோய்)
காரகனாகிய சந்திரன் என்னும் கோளே, கஞ்சத்தன் – தாமரையின் நண்பனாகிய சூரியனுக்கு மகனான
சனி என்னும் கோளே என்று பொருள் கொள்ளவேண்டும்.
இரண்டாவது வரியை அம், பாலி, கை,
அத்தம், கோடு, அல், அங்கம், சத்தம், நந்தன், ஐய எனப் பிரித்து வெண்ணிறமுடைய சந்திரனுக்குக்
கைப்பொருள் போன்ற புதனே, மலையினை ஒத்த உடலையுடைய புதனே, இருளை ஒத்த உடலையுடைய இராகுவே,
இந்திரனின் குருவாகிய வியாழனே என்று பொருள் கொள்ளவேண்டும். மூன்றாவது வரி அம்பால்,
இராகு, ஐயத்து, அங்கு, ஓடு, அலங்கு, அம், சத்த, நந்தன் எனப் பிரித்து அம்புபோல வருத்துகின்ற
ஐயவுணர்ச்சி போல, ஓரிடத்து நிலையின்றி ஓடும் தன்மை மிக்க அழகிய ஏழு குதிரைகளைத் தேராகக்
கொண்ட சூரியனே என்று பொருள் கொள்ளவேண்டும். நான்காம் அடியை அம்பால், இகை, அத்து, அம்
, கோடல், அங்கம் சத்தன், நத்தல் நையே என்று பிரித்து மேகம் போலும் கையினையும் சிவப்பு
நிறத்தையும், அழகையும் கொண்ட, பெருமையுடைய சத்துப் பொருளாகிய ஞானகாரகனாகிய கேதுவே என்று
பொருள் கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்ல, மேலும் ஓரடி சேர்த்தும்,
ஈரடி சேர்த்தும், பாடலின் அடிகளை ஒருமுறை தனித்தனியாக மடக்கி பன்னிரு சீராக்கியும்
பல்வேறு விதத்தில் பொருள் கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார் அரசஞ்சண்முகனார்.
அவரது ‘மாலை மாற்று’ இன்னமும் சுவாரஸ்யமானது.
வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ
நாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா
மாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா
வீறுத வேயவ மானம வாவல மேலறவே
இந்தப் பாடலை நீங்கள் முதலிலிருந்து
படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் இருக்கும். ‘விகடகவி’
என்பதைப் போல. ஆங்கிலத்தில் இதனை palindrome என்று அழைப்பர்.
இப்பாடலின் பொருள்: வேறு – (யாம்
நினைத்தபடி இல்லாது) பிறிது, அல – அன்று, மேல் – மேன்மை, அவ் – அவற்றை, அவா – விரும்பும்,
மனம் – இதயம், ஆ – ஆய, வயவு – ஆசைப்பிறவியின், ஏது – காரணம், அறு – அற்ற, வீ – மலரின்
கண, நாறு – தோன்றும், சமா – நாப்பண் நிலையே, கய – வேழமுகனே, நாடு – பொருந்து, உர –
ஞானவானே, வேள் – செவ்வேளின், கவி – மாலை மாற்று மாலையை, பாடுற – பாடுதற்கு, மா – பெருமை,
மாறு – நீங்கி, அடு – கொல்லும், பாவிகள் – பாதகரை, வேர் – அடியோடு, அடு – அழிக்கும்,
நாயக – விநாயகனே, ஏய் (எம்மிடம்) அமையும், , அவம் – பயனில் செயலும், மானம் – செருக்கும்,
அவாவு – ஆசையும், அலம் – துன்பமும், ஏல – பொருந்துவன, அற – ஒழிய, மாசு – குற்றம், அறு
– நீக்கும், நா – நாவின், வீறு – தெளிவை, உதவு – அருளுக, (ஏ- அசை)
முருகப் பெருமானின் மீது தான் பாடக்
கூடிய இந்த மாலை மாற்று என்னும் பனுவல் இடையூறுகள் ஏதும் இல்லாமல் நல்லபடியாக நிறைவேற
விநாயகப் பெருமானின் அருளை வேண்டி நிற்கிறார் சண்முகனார்.
இப்படி அக்காலத்துப் புலவர்கள்
பலர் வார்த்தை விளையாட்டு செய்திருக்கின்றனர். இன்றைக்கு ‘சித்திரக்கவி’ எழுதுபவர்கள்
அநேகமாகத் தமிழில் பத்து, இருபது பேருக்குள்தான் இருப்பர்.
இத்தகைய தமிழ்க் கவிகளில் காளமேகம்
போன்று சிலேடையாகவும் வசையாகவும், வாழ்த்தாகவும் பாடிப் புகழ்பெற்றவர்களும் உண்டு.
அவர்களுள் ஒருவர் பாடுவார் முத்தப்பச் செட்டியார்.
நான் கீழச்சிவல்பட்டி பள்ளியில்
படித்த காலத்தில் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டில் பாடலோடு அவர் பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது. புரியாத அந்த வயதில், அப்பாவிடம் வந்து அவரைப் பற்றிக் கேட்டபோது
‘அவர், அக்காலத்தில் பெரிய புலவர்’ என்றும், ‘நகரத்தார் இனத்தைச் சேர்ந்த அவர், வாழ்த்தாகவும்
வசையாகவும் பாட வல்லவர், சொல் பலிதம் உள்ளவர்’ என்றும் சொன்னார்.
இதுதான் அந்தப் பாடல்.
காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்
– வீடுகட்கு
அன்றைக்கு வந்திட்ட அம்மா இலக்குமிநீ
என்றைக்கும் நீங்கா திரு
நகரத்தார் இனம் செல்வச் செழிப்புடன்
விளங்க இவரது இந்தப் பாடலும் ஒரு காரணம் என்பது அம்மக்களின் நம்பிக்கை.
ஒருசமயம் சந்தை ஒன்றிற்குச் சென்றுவிட்டுப்
பெரும் பொருட்களுடன் மாட்டு வண்டியில் முத்தப்பர் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
அப்போது இரவு நேரம். கள்வர் பயம் மிகுந்திருந்த காலம். இளையாற்றங்குடி என்ற ஊருக்கு
அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது பெருந்திருடர் கூட்டம் ஒன்று வண்டியைச் சூழ்ந்தது.
பொருட்களைப் பிடுங்கியது. அப்போது திடீரென்று குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டது.
அதைக் கேட்டுப் பயந்த திருடர்கள் ஓடி விட்டனர்.
வந்தது பிரிட்டிஷ் படை வீரர்களின்
கூட்டம். அவர்களைப் பார்த்து முத்தப்பர், “நீங்களெல்லாம் யார்?” என்று கேட்க, அவர்கள்
தங்களை “இங்க்லீஷ்காரர்கள்” என்று சொல்ல, உடனே முத்தப்பர், “இங்கிலீஷ்கொடி பறக்கவே
இளையாற்றங்குடி சிறக்கவே” என்று வாழ்த்தினாராம். இன்றைக்கு ஒரு சாதாரண சிற்றூராக இருக்கும்
அவ்வூரில் தான் காஞ்சி மகாப் பெரியவரது குருவின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.
இப்படிப் புலவர்கள் பலவிதங்களில்
சிறப்புற்று வாழ்ந்திருந்தாலும், தமிழால் ஒன்றுபட்டு இருந்தாலும், சமயத்தால் சைவம்,
வைணவம் எனப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தனர். எப்படி அருட்பா X மருட்பா
சண்டைகள் வள்ளலார், ஆறுமுகநாவலர் மறைவுக்குப் பின்னரும் சில அறிஞர்களால் தொடர்ந்து
நடத்தப்பட்டதோ அதுபோல இவர்களில் சிலர் அறிஞர்களாக இருந்தாலும் தங்களுக்குள் சண்டையிட்டுக்
கொண்டனர். இதற்காக அவதூறு வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றப்படியேறி, மன்னிப்புக் கேட்ட
சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அப்படி மன்னிப்புக் கேட்டவர்களுள் ஒருவர் சூளை சோமசுந்தர
நாயக்கர். இவர் மிகச் சிறந்த சொற்பொழிவாளர். தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் முறையாகப்
பயின்றவர். ஆரம்பத்தில் வைணவப் பற்றாளராக இருந்து பின்னர் தீவிர சைவராக மாறியவர். சைவ
சித்தாந்தத்தில் தேர்ந்தவர். ‘வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்’, ‘பரசமய கோளரி’ என்றெல்லாம்
பட்டம் பெற்றவர். பிரமாநுபூதி, சிவநாமப் பஃறொடை வெண்பா, ஆச்சாரியப் பிரபாவம், ரத்நாவளி
போன்ற நூல்களை எழுதியவர். மறைமலையடிகளின் ஆசிரியர். நா.கதிரைவேற்பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களுக்கும்
நண்பர். விவேகானந்தர், சென்னை வந்திருந்தபோது ‘சைவ சித்தாந்தம்’ பற்றிய இவரது பேச்சை
மிகவும் ரசித்துக் கேட்டதாக ஒரு தகவல் உண்டு.
இவர், சைவத்தின் பெருமையை விளக்கும்
பொருட்டு, ‘பாஞ்சராத்திர மதபேடிகை அல்லது சைவ சூளாமணி’ என்ற நூலை எழுதியிருந்தார்.
அதில் வைணவ அறிஞர்களையும், வைணவ அறிஞர் ஏ.வே.இராமாநுஜ நாவலரையும் மிகக் கேவலமாக எழுதியிருந்தார்.
நாவலர், பரம வைஷ்ணவர். சமயத்தில் ஆழங்காற்பட்ட அறிஞர். நிறைய வைணவ நூல்களை எழுதியிருக்கிறார்.
சோமசுந்தர நாயக்கரின் நூலைப் படித்து மனம் புண்பட்ட நாவலர், நாயக்கர் மீது மானநஷ்ட
வழக்குத் தொடர்ந்தார். ஆதாரத்துடன் வாதாடி வழக்கில் வென்றார். “இனிமேல் தங்களையாவது, வைஷ்ணவர்களையாவது,
அவர்கள் ஆசாரியர்களையாவது நான் அவதூறாய்ப் பேசமாட்டேன். எழுதவும் மாட்டேன்” என்று மன்னிப்புக்
கடிதம் எழுதிக் கொடுத்து நூறு ரூபாய் (1891ல் அந்தத் தொகை மிகவும் பெரியது) அபராதமும்
செலுத்தியிருக்கிறார், சோமசுந்தர நாயக்கர்.

இன்னும் அந்தக் கால எழுத்துலக சூப்பர்
ஸ்டாரான வடுவூர் துரைசாமி ஐயங்கார், ‘Long missing links or The Marvelous
Discoveries about the Aryans, Jesus Christ and Allah’ என்று ஆங்கிலத்தில் எழுதி,
அவரே அதனைத் தமிழிலும் எழுதி, பெரும் நஷ்டப்பட்டுப் போன, ‘சமய ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான
நூல் பற்றி எழுதினால் மேலும் விரியும் என்பதால், இத்தோடு சுபம்.
Leave a Reply