கர்ப்பக்ருஹ தெய்வத்தை மட்டுமே கும்பிட்டுப் பழகிய நம்மில் பலர் இந்தச் சிற்பங்களில் பல்வேறு தெய்வ ஸ்வரூபங்களும் வடிவங்களும் எண்ணற்ற கலை வேலைப்பாடுகளும் படைக்கப் பட்டிருப்பதைச் சிறிதேனும் கவனிப்பதில்லை. ஆனாலும் அவை நம்மை நோக்கிப் பல நூற்றாண்டுகளாகப் புன்னகைத்த வண்ணம் பல புராணக் கதைகளைச் சொல்லியபடி இருக்கின்றன.
சமீபத்தில் எங்களது (தமிழ் பாரம்பரியக் குழு) உத்கல நாடு (ஒரிசா) பயணத்தில் பல கோயில்களுக்குச் சென்றோம். ஒரிசாவில் தேவாலயம் என்பது தியோலா என மருவி அழைக்கப்படுகிறது. அமலகாவையும் கலசத்தையும் தாங்கியபடி வானுயர்ந்து நிற்கும் விமானம், பிரமிடு வடிவக் கூரையுடன் ஜக்மோகனா எனப்படும் முன்மண்டபம், நாட்டிய மண்டபம், போகசாலை என கலிங்கக் கோயில்கள் ஒரு வடிவத்தில் காணப்படுகின்றன. இவற்றில் கர்ப்பக்ரஹத்தின் மேலான விமானத்திலும் ஜக்மோகனாவிலும் பலவிதமான மூர்த்தங்களையும் சிற்ப வேலைப்பாடுகளையும் காணலாம். கோயில் என்பது தமிழ்நாட்டில் ஒரு வடிவம் பெறும் முன்னரே ஒரிசாவில் இந்த வானுயர் விமானங்கள் இருந்ததாக அறிகிறோம். இவற்றில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் அழகு மிகுந்தனவாகவும் கடினமான சிற்ப வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன. இதில் பல முக்கியத்துவம் வாய்ந்தவை.
பா ரிலீஃப் (bas-relief) எனப்படும் புடைப்புச் சிற்பம் அதன் செதுக்கப்பட்ட ஆழத்தைப் பொருத்து லோ, மிட், ஹை என்று மூன்று விதமாக அறியப்படுகிறது. பாசோ ரிலீவோ, மெசோ ரிலீவோ, ஆல்டோ ரிலீவோ. இதில் மூன்றாவதான ஆல்டோ ரிலீவோ (alto-relievo) என்ற ஹைரிலீஃப் மிகச் சிறந்ததாகும். அதாவது ஒரே கல்லிலேயே ஓர் உருவத்தைச் செதுக்கி அது கல்லிலிருந்து முன்வந்து காட்சியளிக்குமாறு செய்வது பா ரிலீஃப். அத்தகைய சிற்பமானது முழுமையாகவே வெளிக் கொணர்ந்து காட்டப்பட்டு தனிச் சிற்பமாகவே காட்சியளிப்பது ஹை ரிலீஃப் அல்லது ஆல்டோ ரிலீவோ.
வலைத்தளத்தில் ஆல்டோ ரிலீவோ என்று தேடுவீர்களானால் க்ரேக்க, ரோமானிய சிற்பங்களையே பெரும்பாலும் பார்ப்பீர்கள். ஆனால் அவை நம் கோயில்களில் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. ஒரு கல்லில் செய்த ரிலீஃப் மட்டுமல்லாது பல கற்களை அடுக்கி அதில் தொடர்ச்சியாகச் சிறிதும் பிசிறின்றிப் பல சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஓர் உருவத்தின் உடல் ஒரு கல்லிலும், கால் ஒரு கல்லிலுமாகச் செதுக்கப்பட்டிருந்தாலும் பார்வைக்கு ஒருமித்து எழிலோடு தோற்றமளிக்கின்றன.
இத்தகைய சிற்பங்களை கிமு 3ம் நூற்றாண்டிலிருந்து ஒரியக் கோயில்களில் காண முடிகிறது. நம் சங்க காலத்திற்கு (2nd 1st century BCE) இணையான காலத்தில் கந்தகிரி, உதயகிரி குகைக் கோயில்களிலும், புத்த விகாரங்களிலும் இத்தகைய சிற்பங்களையும், நுணுக்கமான வேலைப்பாடுகளையும் காண்கிறோம். இப்படி மௌரியர் காலத்தில் தொடங்கி காரவேலர், குஷானர், சாதவாகனர், குப்தர், சைலோத்பவர் என இந்த சிற்பக்கலை வளர்ந்த வண்ணமிருக்கிறது. சைலோத்பவர் காலத்தில், அதாவது ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் கோயில் ஒரு வடிவம் பெறுவதைக் காண முடிகிறது. மூர்த்தங்களிலும், தெய்வ வடிவங்களிலும் பல மாறுதல்களைக் கண்டு கொண்டே வருகிறோம். சில அழகான சிறப்பான வடிவங்களைப் (iconography) பார்ப்போம்.
நடராஜர்: சிவமூர்த்தங்களில் மிகவும் அறியப்பட்டதான நடராஜ வடிவம் முதன்முதலில் ஒரியக் கோயிலிலேயே காணப்படுவதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கிபி 650ம் ஆண்டில் சைலோத்பவா காலத்தில் கட்டப்பட்டதான புவனேஷ்வரில் உள்ள பரசுராமேஸ்வர் கோயிலின் விமான முன்முகப்பில் இந்த நடனமாடும் சிவரூபத்தைப் புடைப்புச் சிற்பமாகக் காணப் பெற்றோம். மிட் ரிலீஃபாக இருக்கும் இந்தச் சிற்பமும் அதனைச் சுற்றியுள்ள வேலைப்பாடுகளும் நயம் மிகுந்தவை. நடராஜரைச் சுற்றியுள்ள முத்துச் சர வரிசையின் அழகிலேயே இதை உணரமுடியும். ஒரிசாவின் பல கோயில்களிலும் இந்த நடராஜ மூர்த்தி எட்டு, பத்து கைகளுடனும், அர்த்தநாரீஸ்வரராகவும், ஆனந்தத் தாண்டவம், ஊர்த்வத் தாண்டவம், சதுரத் தாண்டவம் எனப் பல ஆடல் வடிவங்களில் காட்சியளிக்கிறார்.
லகுலீசர்: ஒரியக் கோயில்களில் பரவலாகக் காணப்படும் மற்றொரு சிற்பம் லகுலீசர். கதை போன்ற தடியைத் தூக்கிப்பிடித்தபடிக் காணப்படும். சிவனின் அவதாரமாகக் கருதப்படும் லகுலீசரை நின்றபடியும், யோக முத்திரையுடன் அமர்ந்தபடியும் இருப்பதைக் காணலாம்.
இந்த மூர்த்தங்களுடன், எழிலுடன் பெண்கள் சூழக் காணப்படும் பிக்ஷ்ஷாடனர், கயிலாயத்தில் அமர்ந்திருக்கையில் ராவணனால் தூக்கப்படும் ராவணானுக்ரஹமூர்த்தி, கல்யாண சுந்தரர் போன்ற சிவ வடிவங்களையும் காண்கிறோம்.
விஷ்ணு வடிவங்களில் பூவராகமூர்த்தி, நரசிம்மர், த்ரிவிக்ரமர் போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. பூரி ஜகந்நாதர் கோயிலில் படியேறி மேலே சென்று பார்க்கும்படியான பிரமாண்டமான நரசிம்மர், வராகர் யாவும் பிரமிக்கத்தக்கவை.
பார்ஷ்வ தேவதா எனப்படும் கோஷ்டச் சிற்பங்களில் கணேசர், கார்த்திகேயர், மகிஷாசுரமர்த்தினி, இவை தவிர, சூரியன், வருணன், வாயு, இந்திரன், யமதர்மர் போன்றோர் அவர்களுக்கான குணாதியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இன்னும் சப்தமாத்ரிகா, கங்கா யமுனா, அகோரக் காட்சி தரும் சாமுண்டி எனஅடுக்கிக்கொண்டே போகலாம்.
புத்தர் : சாந்தம் நிரம்பிய முகத்துடன் வெகு அழகாகச் செதுக்கப்பட்டிருக்கும் இச்சிலைகளின் கைகள் காட்டும் முத்திரைகளை வைத்துப் பெயர் அறியலாம்.
ஒரு கை மடியிலிருக்க மறு கை கீழ் நோக்கிப் பூமியைக் காட்டியவாறு இருப்பது பூமிஸ்பரிச முத்ரா. இந்த புத்தர் அக்ஷோப்யா எனப்படுகிறார். தர்மசக்ர முத்ராவுடன் காணப்படுபவர் வைரோசனா. தியான முத்ராவிலிருக்கும் அமிதாபா, வரத முத்ராவிலிருக்கும் ரத்னசம்பவா எனப் பல புத்த வடிவங்களைச் சிறிய வேறுபாடுகளின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
போதிசத்துவர்: நிர்வாண நிலை அடைந்து புத்தர் ஆவதற்கு சபதம் கொண்டிருப்பவர்கள் போதிசத்துவர்கள். கையில் ஏந்தும் பொருள், அணிகலன்கள், தலையின் கிரீடம் போன்ற சிறு வித்தியாசங்களுடன் இச்சிற்பங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. தாமரை மலரை ஏந்தியவர் அவலோகிதேஸ்வரா /பத்மபாணி, வஜ்ரம் ஏந்தியவர் வஜ்ரபாணி, நீலோத்பல மலரை பிடித்தவண்ணமிருப்பவர் மஞ்சுஶ்ரீ, நாககேசர மலரைத் தாங்கியிருப்பவர் மைத்ரேயர் என போதிசத்துவர்களை கண்டறியலாம்.
தெய்வங்களைத் தவிர பலவிதமான மனித உருவங்களும் பறவைகளும் விலங்குகளும் காணப்படுகின்றன. மிதுன சிற்பங்கள் ஒரியக் கோயில்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை தவிர, பூவேலைப்பாடுகள், அலங்காரங்கள். முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.
ஹலசகன்யா: நளினத்துடன் பலவிதத் தோற்றங்களில் காணப்படும் பெண் சிற்பம் அலசகன்யா எனப்படுகிறது. ரேகா தியோல் எனப்படும் விமான சுற்றுச் சுவர்களிலும், ஜக்மோகனாவிலும் ஆங்காங்கே இவர்கள் எழிலுடன் காட்சியளிப்பார்கள். வாயிலின் ஒரு கதவைத் திறந்தவாறு எட்டி வெளியே பார்த்தபடி நிற்கும் சிற்பக் கன்னிகையை நிறைய இடத்தில் காண்கிறோம்.
சாலபஞ்சிகா: அலசகன்யா ஓர் அழகென்றால் கொடியைப் பற்றியவண்ணம் கொடியிடையுடன் காணப்படும் சாலபஞ்சிகா அதை மிஞ்சும்படியான அழகான தோற்றம். இந்நாயகிகள் வளைத்துப் பிடித்திருக்கும் கொடியின் இலைகளும், பூக்களும் அவர்களுக்கு மேலும் அழகூட்டிய வண்ணம் இருக்கும். இவ்வகை சாலபஞ்சிகா கொடியழகிகளை தமிழகக் கோயில்களிலும் காணலாம்.
கீர்த்திமுகா: பெரிய விழிகளுடன் சிங்கமுகம் கொண்டு திறந்த பல்வரிசையுடன் காணப்படும் இந்த முகங்களை நீங்கள் நம் கோயில்களில் பார்த்திருப்பீர்கள். இது தோன்றியதும் கலிங்கத்தில்தான். இந்த கீர்த்திமுகா தன் திறந்த வாயின் வழியாக முத்துச் சரங்களைக் கொட்டியவாறு இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முத்துச்சரங்கள் கோயில் கட்டியவரின் புகழ் எனக் கருதப் படுகிறது. அதாவது கட்டியவரின் புகழ் இந்த முடிவிலா முத்துச் சரங்களைப் போல் சிறப்புற்று இருக்கும் என்ற பொருள். ஒவ்வொரு முத்தும் முழுமையாகக் கல்லில் செதுக்கப்பட்டு ஏதோ களிமண்ணில் செய்து ஒட்ட வைத்தது போல ஒரு தோற்றம். உருண்டை உருண்டையாகச் சரம் சரமாக மற்ற சிற்பங்களை அலங்கரித்த வண்ணமிருக்கும் இவை கண்ணுக்கு விருந்து. சீடை சீடையாக எப்படிச் செய்திருப்பான் என்று எங்களை வியக்க வைத்தது இந்த கலைப்படைப்பு.
அமலகா: வான்னோக்கி உயர்ந்து நிற்கும் விமானத்தின் மேலே வட்டமான ஒரு கலச அமைப்பு. இதன் அளவு உங்களை பிரமிக்க வைக்கும். நெல்லிக்காயைப் பிளந்தால் இருக்கும் தனித் துண்டுகளைப் போலக் கல்லில் செய்து அத்துண்டுகளை வட்டமாகச் சேர்த்து இருநூறு அடி விமானத்தின் உச்சியில் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பல துண்டுகள் சேர்ந்தது அமலகா. அதை உச்சியில் கொண்டு வைக்க என்னவொரு உழைப்பும், திறமையும் வேண்டியிருந்திருக்கும்? ஒரு துண்டானது சுமார் நான்கு மனிதர்களை உள்ளடக்கும் அளவு பெரியது. இப்படிப் பல துண்டுகள் சேர்ந்தது அமலகா. இந்த உச்சியிலிருக்கும் அமலகாவைத் தவிர பூமி அமலகா எனப்படும் பல சிறிய அமலகாக்கள் விமானத்தின் பல்வேறு தளங்களின் ஓரங்களை அலங்கரித்தவாறு இருக்கும்.
மந்திரசாரிணி: ஓர் அற்புதப் படைப்பு. உச்சியிலிருக்கும் அமலகாவின் பேகி எனப்படும் கழுத்துப் பகுதியில் விமான மேல்தளத்தில் அமர்ந்திருக்கும் மனித உருவம். இவை நான்கு புறமும் காணப்படுகின்றன. ப்ரம்மேஸ்வரா கோயிலில் உயரே இருக்கும் மந்திரசாரிணி சுமார் எட்டடி உயரம் இருக்கும் என அனுமானிக்கிறேன். கைகளை இரண்டு கால்களுக்கும் நடுவே தரையில் ஊன்றியபடி ஒரு 45 டிகிரியில் முன்சாய்ந்தபடி அமர்ந்திருக்கும். முகத்தில் அது புன்னகையா? இல்லை. சற்றே கிண்டலடிப்பது போல ஒரு சிரிப்பு. கீழே நிற்கும் நாம் மேல் நோக்கினால் சரியாக நம்மைப் பார்த்தபடி இருக்கும்.
கோயிலில் கீழே நின்றபடி புத்தகமும் கையுமாக ஒவ்வொரு சிலையாகப் பார்த்து நண்பர்களுடன் அளவளாவி அதன் சிவில் இன்ஜினியரிங் டிசைன், ஆர்டிஸ்டிக் மார்வெல் என்று வியந்து பேசியபடியே வெளிவந்து மேலே நோக்கினேன். “என்ன? கோயில் பார்த்தாச்சாக்கும்?” என்று சிரித்துக்கொண்டே கேட்பது போல இருக்க, சற்றே திடுக்கிட்டுப் போனேன். அவ்வளவு உயிரோட்டமுள்ள முகம்! அற்புதம்!
கஜவிடாலா: யானையின் மீது ஏறியபடி இருக்கும் சிங்க உருவம். விடாலா என்பது வியாளா என்ற யாளியைக் குறிக்கும் சொல்லிலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. கால்களைத் தூக்கி முன்னே பாய்ந்தபடி யானையின் மேல் இருக்கும் இந்தச் சிற்பத்தை மீண்டும் மீண்டும் கலிங்கத்துக் கோயில்களில் பார்க்கலாம். ராஜா ராணி கோயில் சுற்றுச் சுவர்களில் பக்கவாட்டில் நின்றவாறும், முன்னோக்கியும் பல இடங்களில் இதைக் காண்கிறோம்.
முக்கியமாக ரேகா தியோலின் அதாவது கர்ப்பக்ரகத்தின் மீதான விமானத்தின் மேலே அதன் பல அடுக்கு உயரக் கட்டுமானத்தைப் பலப்படுத்தும் விதமாக ஒரு குறுக்குத் தூண் (beam) காணப் படுகிறது. இது சுமாராக விமானத்தில் பாதி உயரத்திற்கு மேலே குறுக்கே செல்லும். இந்தத் தூண் இருபுறமும் விமான முகப்பிலிருந்து சற்றே வெளியே நீட்டியபடி இருக்கிறது. இதன்மேல் இந்த சிங்கமானது பாயும்படி அமைக்கப்பட்டிருக்கும்.
நாக நாகினிகள்: முக்தேஸ்வரா கோயிலில் பிரகாரச் சுவர்களில் ஆங்காங்கே புன்னகைத்த வண்ணம் இந்த நாக நாகினி உருவங்கள். உடலின் மேல் பாகம் மனித உருவமாகவும், கீழே நாகமாகவும் தூணைச் சுற்றியபடி வெகு இயற்கையாகச் செதுக்கப்பட்டிருக்கும் அழகு. தனியாகவும் பின்னிப் பிணைந்தபடியும் காட்சியளிக்கும். அதன் உடலில் செதில்கள் கூடத் தத்ரூபமாக இருப்பதைக் காணலாம்.
விலங்குகள்: சிங்கம், யானை, குரங்கு, மான், கிளிகள், அன்னங்கள் என இதர பல உயிரினங்களும் அவற்றின் இயற்கைத் தோற்றத்திலேயே செதுக்கப்பட்டிருக்கின்றன. புத்த, சமணக் கோயில்களில் மான்கள் துள்ளி ஆடுவது போலவும், யானைகள் பழக்கப்படுத்தப்படுவது போலவும் பல காட்சிகளைப் பார்க்க முடிகிறது.
அது மட்டுமல்லாது சில சிற்பங்களில் மனித குணாதிசயங்களுடன் விலங்குகள் சித்தரிக்கப்பட்டிருக்கும் அற்புதத்தைக் காண முடிகிறது. இதைப் புரிந்துகொள்ள தற்கால அனிமேஷன் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். குங்ஃபு பான்டா அல்லது மடகாஸ்கரில் வரும் சிங்கம் என ஏதாவது ஒன்றை நினைத்துப் பாருங்கள். அவை கவலைப்படுவது போலவும், சிரிப்பது போலவும் காட்சிகள் இருக்கும். மனித குணங்களான இதை இவ்வாறு விலங்குகளிடம் கொண்டு வருவது ஒரு அருமையான கலை. இதைக் கல்லிலே கொண்டு வந்த அற்புதத்தைக் கண்டு அசந்தே போனேன்.
இதோ இந்த நந்திகேஸ்வரரைக் கூர்ந்து கவனியுங்கள். என்ன ஒரு மந்தஹாசம்! அதில் சிறிதே ஒரு வெட்கம். சிவபெருமானும் பார்வதி தேவியும் காதலில் இருக்க கீழே இவர் புன்னகைத்தவாறு… என்ன ஓர் அருமையான கற்பனை!
பூஜாடிகள்: கலசம் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஜாடி வரிசைகள். ஒவ்வொன்றிலும் பூவேலைகள். ஒவ்வொன்றிலிருந்தும் பூக்களும் இலைகளும் நிரம்பி வழியும். இவ்வாறான பல கலசங்கள் சேர்ந்து இருக்கும்படியான ஓர் அலங்கார வரிசை!
கவாக்ஷா: ஜன்னல் போன்றதான ஒரு அமைப்பு. ஜன்னல்களே காற்றோட்டத்திற்காக அலங்காரமாகவே குடையப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஜன்னலும் ஒரு விதம். ஒரு அழகு. பலவற்றில் அதிலும் தனிச் சிற்பங்கள். ஜாலி வேலை எனப்படும் கல்லைக் குடைந்தெடுக்கும் வேலைப்பாடு. இவ்வாறு ஜன்னல்களில் மட்டுமன்றி தனியாகவும் அலங்காரத்திற்கு குடையப்படுபவை இந்த கவாக்ஷா. இதில் பல அழகு நெளிவுகள்.
காட்சிகள்: இவ்வாறு தனிப்பட்ட வடிவங்களைத் தவிர பல புராணக் கதைகளும் காட்சிகளும் நாடகச் சிற்பங்களாக காணக் கிடைக்கின்றன. சிறிய பானல்களிலும், வாயில் தோரண அலங்காரங்களிலும், ஜங்கா எனப்படும் விமான அடுக்குகளிலும், வாயில் மேற்புறத்திலும் பல காட்சிகள் காணக் கிடைக்கின்றன. ராமாயணம், கிருஷ்ண லீலை, பஞ்ச தந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் எனப் பலவற்றிலிருந்தும் உயிரோட்டக் காட்சிகளை கல்லில் செதுக்கியிருப்பதைக் காணலாம். பூரி ஜகந்நாதர் கோயிலில் கோபுர வாசல் முன்னரே அருமையாக முழுமையாகச் செதுக்கி எடுக்கப்பட்ட காட்சிச் சிற்பங்கள் கலைப் பொக்கிஷங்கள்.
நகைகள் அலங்காரங்கள்: மனித உருவங்கள் பலவிதமான நகைகளை அணிந்தவாறு தோற்றமளிக்கின்றன. எத்தனை விதமான டிசைன்கள்! ஒவ்வொன்றும் அழகு. சாலபஞ்சிகாவும் அலசகன்யாவும் அணிந்திருக்கும் வளையல்கள், கழுத்து மாலைகள், ஆரங்கள், காதணிகள், ஒட்டியாணம் ஒவ்வொன்றிலும் அருமையான டிசைன்கள். தெய்வ ரூபங்கள் அணிந்திருக்கும் நகைகளோ அதைவிடப் பிரமாதம். யோகினி என்ற வட்டமான தாந்திரிக கோயில் ஒன்றில் வட்டமாக பல யோகினிகளைப் பார்க்கலாம். இவர்களை பூஜித்தால் சக்தி வரும் என்பது ஐதீகம். ஒவ்வொரு யோகினியும் ஒரு விதமான போஸ், ஆடை அலங்காரங்கள். அது மட்டுமல்ல. தலையாலங்காரங்கள் ஒவ்வொன்றும் பிரமாதமாக இருக்கும். இன்றைய அழகூட்டும் நிலையங்கள் செய்வது ஒன்றுமில்லை. கல்லிலே அதைவிட அழகான கொண்டைகள், பின்னல்கள்.
அலங்கார வேலைப்பாடுகள்: ரசித்துப் பார்க்க அற்புதமான பூவேலைப்பாடுகள்! கொடிகளும், பூக்களும், விதவிதமான டிசைன்களும் காணக் கிடைக்கின்றன. எப்படிச் செய்திருப்பார்கள் என மலைக்கும் அளவு சிறப்பான சிற்ப வேலைகள் லிங்கராஜா கோயிலில் நிறையக் காணக் கிடைக்கின்றன. உள்ளே பார்வதி கோயில் ஒன்று இருக்கிறது. அதில் கிட்டத்தட்ட பஞ்ச்சிங் மிஷினில் செய்தது போல வேலைப்பாடுகள். புகைப்படம் அனுமதி இல்லாததால் எடுக்க முடியவில்லை. அதனால் மனக் கண்ணில் நன்றாகவே பதிந்திருக்கிறது. சதுரங்க அட்டையைப் போல வடிக்கப்பட்ட சுவர்கள். ஆங்கிலத்தில் லேஸ் ஒர்க் என்பார்களே, அதைப் போல மெல்லிய வேலைப்பாடுகள்! இவ்வளவும் கல்லில்.
இந்தக் கோயில்களில் உபயோகப்படுத்தப்பட்ட கற்கள் சான்ட்ஸ்டோன் அல்லது பசால்ட் வகையைச் சேர்ந்தவை. க்ரானைட் போலக் கடினமானது இல்லையென்றாலும், பேலூர், ஹலபேடு ஹொய்சலா கோயில்களின் சோப்ஸ்டோன் கல்வகையைவிடக் கடினமானதே.
இத்தகைய பொக்கிஷங்களை நாம் எவ்வாறு போற்றுகிறோம்? அதை நினைத்தால் மனம் துடித்துப் போகும். பாதுகாப்பின்றி பல இடிந்து போயின. பல வேண்டுமென்றே இடிக்கப்பட்டன. படையெடுப்பும் மதவெறியும் பல கோயில்களை, சிற்பங்களை அழித்தன. அன்று மட்டுமா? இப்போதும் புதுப்பித்தல் என்ற கொடுமையினால், இவற்றின் அருமை அறியாதவர்களால் சிற்பங்கள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. அதில் பெயின்ட் அடிப்பதும், சான்ட் ப்ளாஸ்டிங்கும், சிலைகளை எடுத்து விற்பதுமாக இந்த நாச வேலைகள் எண்ணிலடங்கா.
நாம் இதுவரை பார்த்தது கட்டுமானம், சிற்பம், அழகு என ஒரு கலைப்பார்வை மட்டுமே. ஒவ்வொரு சிற்பத்தின் பின்னும் புராணக் கதைகள் இருக்கின்றன. அவற்றையும் அறிந்து பார்க்கும்போது நம் அனுபவம் இன்னும் மேம்படுகிறது. அவற்றுடன் ஆன்மிக உணர்வையும் ஒருமிக்கச் செய்வோமானால் இந்த அனுபவம் பன்மடங்காகிறது.