
‘வேதங்களில், உபநிடதங்களில், பழம் இலக்கியங்களில், ஏன் புராணங்களில் கூட, ஹிந்து என்கிற இந்தப் பெயர் இருக்கிறதா? காட்டுங்கள் பார்ப்போம்’ என்பது பொதுவாக ஹிந்து அடையாளத்துடன் தம்மை இணைப்பவர்களுக்கு, அவ்வப்போது அறிவுஜீவிகளாலும் அரசியலாளர்களாலும் விடப்படும் ஒரு சவால்.
ஹிந்து என்கிற பெயரின் அடிப்படையாக இத்தகையோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது சிந்து நதிதான். ரிக் வேதத்தின் நதி ஸ்துதி சூக்தம் ஸுசோமா (நல்ல சோமம்) எனும் பெயரில் சிந்து நதியை அழைக்கிறது. இன்றைக்கும் பாகிஸ்தானில் ஓடும் சிந்துவின் ஒரு கிளை நதிக்கு ஸுசோமா எனும் பெயரின் திரிபான சோவன் என்பது வழங்கப்படுகிறது.
ஆக சிந்து நதி சோமத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சோமம் எடுக்கப்படும் தாவரம் சிந்து நதியில் கிடைப்பதாக சுஷ்ருதர் கூறுகிறார். சோம பானச் சடங்கு ரிக் வேத சமுதாயத்தின் மையச் சடங்குகளில் ஒன்று. அதற்கு அகக் குறியீடுகளும் உண்டு. தொல் சமுதாயங்களில் ஷமான்கள் (Shamans) எனப்படும் தெய்வாவேசப் பூசகர்களின் சடங்குகள் முக்கியமானவை. அவை அனைத்திலும் சோமபானம் போன்ற ஒரு பானம் அல்லது மூலிகைச் சாறு சடங்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேத சமுதாயமும் விதி விலக்கல்ல. ஆனால் இங்கு மட்டுமே இச்சடங்கு இன்றும் வாழ்கிறது.
ஐராவதம் மகாதேவன் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஆழமான புலமை கொண்டவர். ஹரப்பா இலச்சினைகளில் உள்ள சித்திர உருவங்களை ஆராய்ந்து வருபவர். அவை திராவிட மொழித்தன்மை கொண்டவை என்பது அவரது நிலைப்பாடு. இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டம் இந்தியாவின் வெளியே இருந்து வந்ததாகவும், வேதம் அவர்களின் இலக்கியம் என்றும் நம்புகிறவர்.
ஹரப்பா இலச்சினைகளில் மீண்டும் மீண்டும் காணப்படும் வடிவம் ஒற்றைக் கொம்பு விலங்கு. இது பக்கவாட்டில் காட்டப்படும் காளையா அல்லது ஒற்றைக் கொம்பு கொண்ட புராண மிருகமா, பல விலங்குகளின் கூட்டாக உருவாக்கப்பட்ட கற்பனை விலங்கினமா என்கிற கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே உள்ளன. பொதுவாக இது ஒரு புராண மிருகம் என்கிற கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது. பெரும்பாலான இலச்சினைகளில் இந்த மிருகத்தின் முன்னால் ஒரு அமைப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகிறது. இதனை ‘சடங்கு வஸ்து’ (cult object) என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு வடிகட்டி (filter) எனக் கருதுகிறார். அப்படி ஒரு வடிகட்டியை மையமாகக் கொண்ட சடங்கு வேத இலக்கியங்களில் வரும் சோமபானச் சடங்குதான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
வேதப் பண்பாட்டின் மையமான ஒரு சடங்கு எப்படி ஹரப்பாவினரிடம் இருந்தது? அப்போது இரு பண்பாடுகளும் ஒன்றாக இருக்க முடியுமல்லவா எனும் கேள்விக்கு மகாதேவனின் பதில் ‘ஹரப்பாவினரிடமிருந்து ஆரியர்கள் இச்சடங்கை ஏற்றுக் கொண்டனர்’ என்பது. ஐராவதம் மகாதேவன் போலவே ஹரப்பா பண்பாட்டு இலச்சினைகளை திராவிட நோக்கில் ஆராய்ச்சி செய்யும் மற்றொரு அறிஞர் அஸ்கோ பர்போலா. அவரது பார்வையில் சோமபானச்சடங்கு ஆரியர்களால் இங்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் ஒற்றை விலங்கு இலச்சினையில் இருக்கும் கம்பம்/வடிகட்டி போன்ற அமைப்போ வேள்வியின் யூபஸ்தம்பமாக இருக்கலாம் என்கிறார். அதாவது வேத கால ஆரியர்கள் ஹரப்பாவினரிடமிருந்து யூபஸ்தம்பத்தைத் தமதாக சுவீகரித்துக் கொண்டனராம்.
ஆரியப் படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாடுகள் எத்தனை குழப்பமான நிலைப்பாடுகளை இந்த ஆராய்ச்சியாளர்களை எடுக்க வைக்கின்றன என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். ஹரப்பா பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மொழியியலாளர்கள் ஆரிய–திராவிட இரட்டையை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் அடிப்படைக் குழப்பம் இது.
துளிதுளியாகச் சேமிக்கப்படும் சோம திரவத்தின் துளிகள் இந்து என அழைக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் மகாதேவன். சோமன் என்பதும் இந்து என்பதும் ஒன்றாகக் கருதப்படும் நிலை மெல்ல ஏற்படுகிறது. இந்து என்பதே சோமத்துக்கான வார்த்தையாக மாறியது என மோனியர் வில்லியம்ஸின் சமஸ்கிருத அகராதியில் நாம் காண்கிறோம். பின்னர் வரும் வேத இலக்கியமான பிராமணத்தில் சந்திரனுடன் இணைத்துப் பேசப்படுகின்றன. ஆக, இந்து என்பது சோம திரவத்துடன் இணைவதையும் சோமன் என்கிற பெயரும் இந்து என்கிற பெயரும் நிலவைக் குறிப்பதையும் நாம் காண்கிறோம். சிந்து நதி ஸுசோமா என அழைக்கப்படுவதையும் காண்கிறோம்.
சிந்து–இந்து–சோமம் என்கிற தொடர்புடன் இது நின்றுவிடவில்லை. வேத காலத்துக்குப் பின்னர் பாரசீகத்தில் உருவான ஏக இறைவழிபாட்டு சமயம் ஸராதுஷ்டரால் உருவாக்கப்பட்டது. இதுவே ஆபிரகாமிய மதங்களின் முன்னோடி மதம் எனக் கூறலாம். உலக நிகழ்வுகளை இருளுக்கும் ஒளிக்கும், இறைவனுக்கும் சாத்தானுக்குமான போராட்டமாகக் கருதும் வரலாற்று மையப் பார்வையும் இம்மதத்தில்தான் முதலில் உருவானது. இங்கு இறைவனின் பெயர் அஹுரா மஸ்தா; சாத்தானின் பெயர் அஹ்ரிமான். பாரசீக மொழியின் மிகப் பழமையான நினைவுகளில் அவர்கள் ‘ஹப்த ஹிந்து’விலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. பாரசீகர்களின் ஏக இறை மதம் வேத மதத்தையும் தேவர்களின் வழிபாட்டையும், சோம பானச் சடங்கையும் எதிரிகளாகப் பார்த்தது. தேவர்களின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டு ‘ஹிந்து’ பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் அங்கு மக்கள் கலகங்கள் செய்ததையும் கிமு மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
சோமபானச் சடங்கின் தாக்கம் சங்க காலத் தமிழகத்தில் அரசியல் பரிமாணமும் கொண்டிருக்கிறது என ஊகிக்க இடமிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர் மிச்சேல் டனினோ தனது நூலில் (The lost river) சி.எ.ஃபேப்ரி (C L Fabri, 1935) எனும் அகழ்வாராய்ச்சியாளர் செய்தக் கண்டுபிடிப்பொன்றைப் போகிற போக்கில் குறிப்பிடுகிறார். இந்தியாவின் பழமையான நாணயங்கள், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானவை, punch-marked coins எனக் குறிப்பிடப்படுபவை. ஃபேப்ரி இந்த நாணயங்களில் விலங்குகள் காட்டப்படும் நாணயங்களில் வடிவமைப்பும் காட்சிப்படுத்தும் விதமும் ஹரப்பா இலச்சினைகளை ஒத்திருப்பதைக் கூறுகிறார். இவர் இவ்விதம் ஒப்பிடும் விலங்குகள், திமில் கொண்ட இந்தியக் காளைகள், யானைகள், புலி, முதலை, முயல் ஆகியவை. இந்த ஒப்பீட்டில் குதிரைகள் விடப்பட்டுவிட்டன. ஒருவேளை குதிரை ஹரப்பா பண்பாட்டில் இல்லாதது என்பதால் அதை ஒப்பிட வேண்டாமென ஃபேப்ரி கருதியிருப்பார்.
சுவாரசியமான விஷயமென்னவென்றால் சங்க கால நாணயங்களும் இதே வகை நாணயங்களைச் சார்ந்தவைதாம். இதே காலகட்டத்தவைதாம். இந்த நாணயங்களில் குதிரைகள் காட்டப்பட்டுள்ள விதமும் குதிரைகளின் முன்னால் ஒரு சிறு ஸ்தம்பமாக அமைக்கப்பட்டுள்ள பொருளும் ஹரப்பா பண்பாட்டின் ஒற்றை விலங்கு காட்டப்படும் விதத்தில் அமைந்துள்ளன. இந்த வடிவமைப்பும் காட்சி ஒற்றுமையும் தற்செயலானதுதானா? லோதாலைக் கண்டடைந்த அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் ஹரப்பா பண்பாட்டின் ஒற்றைக் கொம்பு விலங்கு குதிரையையும் இணைத்ததொரு கலவையான காட்சிப்பாடாக இருக்கலாம் எனக் கருதினார். இது கலவையான விலங்காக இருக்கலாம் எனும் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதில் குதிரையும் கலந்திருக்கலாம் எனும் கருத்து மேற்கத்திய இந்தியவியலாளர்களாலும், இந்தியாவில் உள்ள ஆரிய-திராவிட கோட்பாட்டாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சங்க கால நாணயங்களில் குதிரைகள் காட்டப்படும் விதம் எஸ்.ஆர்.ராவ்வின் கருதுகோளை மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது. இது சரியென்றால், ஹரப்பா பண்பாடு (சிந்து-சரஸ்வதி நாகரிகம்) தொடங்கி சங்ககாலம் வரை இந்து-சோமபான சடங்கு ஆன்மிகச் சடங்காக மட்டுமல்லாது அரசதிகாரத்துக்கான ஒரு பொது அடையாளமாகவும் கருதப்பட்டது எனக் கொள்ள இடமிருக்கிறது.
இந்து எனும் பெயர் தொடர்ந்து பரந்துபட்டதொரு ஆன்மிகப் பண்பாட்டுக்கான பெயராக மாறியது என ஊகிக்கலாம். தனித்தனியாக ராஜ்ஜியங்கள் இருந்த போதிலும் இந்து/இந்தியா எனும் பெயர் புவி-வரையறை சார்ந்து மட்டுமல்லாமல் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த ஒரு பெயராக பரிணமித்தது. ‘ஹிந்து’ எனும் பெயரை பாரசீகர்கள் ஸிந்து எனும் பெயரின் மாறுதலான உச்சரிப்பாகக் கொண்டார்கள் என்பதைக் காட்டிலும் இந்து என்கிற பெயரின் மற்றொரு மாற்றாக ஹிந்து எனும் சொல் உள்ளது என்றே தோன்றுகிறது.
இதற்கான சான்று சீனாவிலிருந்து பாரதத்துக்கு தீர்த்த யாத்திரை செய்த பௌத்த அறிஞரான ஹுவான் சுவாங்கிடமிருந்து கிடைக்கிறது. இந்த தேசப்பரப்பு பல ராஜ்ஜியங்களாக இருந்தாலும் இதற்கு அடிப்படை ஒற்றுமை உள்ளது என்கிறார். பண்டைய காலத்தில் இந்நிலப்பரப்பு ஸிந்து என்றும் ஹிந்து என்றும் அழைக்கப்பட்டது என்கிறார். ஆனால் சரியான உச்சரிப்பு ‘இந் – து’ எனக் கூறுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் வந்த இந்த சீன தீர்த்த யாத்திரிகர் சொல்கிறார்: ‘ரிஷிகளின் சான்றோர்களின் மூலமாக வெளிப்படும் ஒளி இந்தத் தேசத்தை, உலகை வழி நடத்திச் செல்லும் நிலவென இருள் வானில் பிரகாசிக்க வைக்கிறது. எனவே இந்து என்கிற பெயர் இந்த தேசத்துக்கு சாலப் பொருந்தும்.’ (Buddhist Records of the Western World, Book II.)
ஆக ‘உலகின் குருவாக இந்தியா’ என்கிற கருத்தாக்கம், ஏதோ இன்றைக்கு தேசபத்தி மிகுதியால் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பாடும் பாடல் அல்ல. மிகக் குறைந்தது 1300 ஆண்டுகளாக இக்கருத்தாக்கம் இருந்திருக்கிறது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்புகளின் போது இப்பெயர் தெளிவாக பாரதத்தின் கூட்டு ஆன்மிகப் பண்பாட்டின் பெயராக பரிணமித்தது.
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தொடக்க வெளிப்பாடான மதுராவிஜயம் கங்காதேவியால் எழுதப்பட்ட சிறு காவியம். நாயக்கர்கள் எழுச்சியைத் தமிழ் வேந்தர்களுடன் (குறிப்பாக சோழ-பாண்டியருடன்) இந்நூல் இணைக்கிறது. அறத்தை அயலார் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க அரனாரின் வாள் ஏந்தி கம்ப நாயக்கர் சுல்தான்களின் மத ஆதிக்க ஆட்சியை அகற்றுவதே நூல். இங்கிருந்து தொடர்ந்த பரிணாம வளர்ச்சியாகவே விஜயநகர சாம்ராஜ்ஜியம் ஏற்பட்டது. இம்மன்னர்கள் தம்மை இந்து சாம்ராஜ்யாதிபதிகளாகவே அறிவித்துக் கொண்டனர். பின்னர் குரு தேஜ்பகதூர் தம்மை ‘இந்து தேசத்தின் பிரதிநிதியாக’ ஔரங்கசீப்பின் மதவெறிக்கு பலிதானமாக்கினார். மராட்டிய பிரதேசத்தில் வீர சிவாஜி ஹிந்தவி சுவராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார்.
ஆக ஹிந்து எனும் பெயர் வேத காலம் தொடங்கி தொடர்ந்து சரஸ்வதி நதியின் நீரோட்டமென இத்தேசத்தின் வரலாற்றில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தேசத்தின் அனைத்து சமய மரபுகளும் தத்துவ தரிசனங்களும் ஹிந்துத்துவம் எனும் இப்பெருநதி ஓட்டத்தில் அமைந்த துறைகளே.