Posted on Leave a comment

கலிங்கத்துக் கோயில் பரணி – ஜெ. ராம்கி

புவனேஷ்வரின் பெரிய கோயிலான லிங்கராஜா கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த அந்த சின்னக் கோயில், முதலில் பயணத் திட்டத்தில் இல்லை. நந்தவனத்துக்கு நடுவே சிதைந்திருந்த கோயில், பல கோணங்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை ஞாபகப்படுத்தியது. இடதுபுற கோஷ்டத்தில் ஒரு கையில் கலசமேந்தி, இன்னொரு கையில் கடக முக முத்திரையோடு நடன வடிவில் முகமெங்கும் புன்னகையோடு பிள்ளையார் எங்களை வரவேற்றார். புவனேஸ்வரில் புள்ளமங்கை வாசம்! திராவிட உட்கல ஜாத்ராவை அங்கிருந்து ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருந்தது.

தாளேஸ்வரா தியால் என்ற அந்த சின்ன சிவன் கோயிலின் விமானம் இடிந்திருக்கிறது. மற்றவையெல்லாம் ஒரிசா கோயில்களின் கலிங்க பாரம்பரியக் கட்டமைப்பை ஒத்திருந்தது. தியோல் என்பது கோயில். ரேகா என்பது கர்ப்பகிரகம். கர்ப்பகிரகத்தை சுற்றி பார்ஷ தேவதா என்னும் கோஷ்ட தெய்வங்களைப் பார்க்கமுடிகிறது. இடதுபுறம் பிள்ளையார். நம்மூர்க் கோயிலின் பின்புறம் சிவா, விஷ்ணு அல்லது பிரம்மா இருப்பார். இங்கே கார்த்திகேயன் என்னும் முருகன் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக துர்க்கையம்மன்.

எந்தக் கோயிலாக இருந்தாலும் கோஷ்ட தெய்வங்கள் மூன்றுதான். சிவன் கோயிலாக இருந்தால் பிள்ளையார், கார்த்திகேயன் & பார்வதி அல்லது துர்க்கை. விஷ்ணு கோயிலாக இருந்தால், நரசிம்மா, திரிவிக்ரமா & வராகா. சக்த என்னும் சூரிய வழிபாட்டுக்கோயிலாக இருந்தால் மூன்று இடங்களிலும் சூரியனின் வெவ்வேறு நிலையில் உள்ள சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு கோயிலில் வாசலிலும் சிவனின் பல்வேறு அவதாரங்களுக்குப் பிரதான இடமுண்டு. ஏகபாத சேகரன், ஒடிசா கோயில்களில் பரவலான இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைவு. நுழைவாயிலின் மேற்பகுதியில் கஜ லெட்சுமிக்குப் பதிலாக நவக்கிரகங்களின் உருவம் உள்ளது. சில இடங்களில் நவக்கிரக வரிசைக்குக் கீழே கஜலெட்சுமி உருவமும் உண்டு. நவக்கிரகங்களில் எட்டுப் பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கேது, பெரும்பாலான கோயில்களில் இடம்பெறுவதில்லை. ராகுவின் முகம், சற்றே பெரிதாக குளோஸப்பில் காட்டப்படுகிறது.

புவனேஷ்வரில் மட்டுமல்லாமல் ஒடிஷா முழுவதும் உள்ள கோயில்களை கலிங்கா கட்டமைப்பாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ரேகா, பீடா, காக்ரா. முதல் இரண்டு வகையையும் இணைத்துக் கட்டப்பட்ட பல கோயில்களே தற்போது எஞ்சியிருக்கின்றன. கருவறையின் மீது நீளவாக்கில் கட்டப்பட்ட அமைப்புதான் ரேகா தியோல்.

ரேகா தியோலுக்கு முன்னால் இருப்பது ஜகன்மோகனா. நம்மூரின் முக மண்டபத்தோடு இதை ஒப்பிடலாம். இதையே பீடா தியோல் என்பார்கள். ரேகா தியோல் போல் அல்லாமல் பீடா தியோல், அகலவாக்கில் விஸ்தாரமாகக் கட்டியிருக்கிறார்கள். இங்கிருந்துதான் கர்ப்பகிரகத்தில் உள்ள இறைவனை வழிபடவேண்டும்.

ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக் கோயில்களில் ரேகாவும், ஜகன்மோகனாவும் மட்டுமே இருந்திருக்கின்றன. பிற்காலத்திய கோயில்களில் ஜகன்மோகனா சற்றே விரிவுபடுத்துப்பட்டு அதற்கு முன்னர் இன்னும் சில மினி ஜகன்மோகனா மண்டபங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. நட மந்திர் என்றும் சொல்லப்படக்கூடிய நடன மண்டபமும், போக மண்டபம் என்னும் மடப்பள்ளியும், பூரி, லிங்கராஜா போன்ற பெரிய கோயில்களில் காணமுடிகிறது.

தரைத்தளத்தின் அமைப்பு, கோயிலுக்கு ஏற்றபடி வேறுபடுகிறது. பிஷ்டா என்னும் தரைத்தளத்தின் மீதுதான் ரேகாவும், ஜகன்மோகனாவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. உயரம், கோயிலுக்குக் கோயில் மாறுபட்டிருக்கிறது. அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள பகுதியை படா என்கிறார்கள். படா வரை ரேகாவும் ஜகன்மோகனாவும் ஒரே அளவில் தென்படுகின்றன. படாவுக்கு பின்னர் வருவது காந்தி. காந்தியின் வெளிப்புறச் சுற்றுச்சுவர்தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ஏராளமான சிற்பங்களும், அதை ஒட்டிய வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.

பாபகா, ஜங்கா, வரண்டா என்னும் மூன்று பகுதிகள் கொண்ட படாவைப் பெரும்பாலான கோயில்களில் பார்க்கமுடிகிறது. பூரி, லிங்கராஜா போன்ற கோயில்களில் ஐந்து வகையான படாவைக் காணலாம். பாபகா, தல ஜங்கா, பந்தனா, உப ஜங்கா & வராண்டா. ரேகாவைச் சுற்றியுள்ள வெளிப்புறச் சுவர்களை 5,7,9 ஒன்று வெவ்வேறு அளவுகளில் செய்திருக்கிறார்கள். ஐந்து விதமான மடிப்புகள் கொண்ட பஞ்சரத ரேகாவை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு புரொஜெக்ஷனுக்கும் தனித்தனியே பெயரும் உண்டு. ராகா, கனிகா, அனுராதா!

படா மற்றும் காந்தியின் வெளிப்புறங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் அமைப்பின் மீது சில உருவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், கர்ப்பகிரகத்தின் மேலிருந்து பாய்ந்துகொண்டிருப்பது போல் செய்திருக்கிறார்கள். இதென்ன தேவையில்லாமல் நீட்டிக்கொண்டிருக்கிறதே என்று தோன்றலாம். ரேகா தியோல் அமைப்பின் மொத்த எடையையும் குறுக்கு நெடுக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான உருளை வடிவ அமைப்புகளே தாங்கிக்கொண்டிருக்கிறன. அவ்வாறு வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை சிங்கமாகவும், கீர்த்திமுகமாகவும், கஜசிம்ஹாவாகவும் அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

ரேகாவையும், ஜகன்மோகனாவையும் சுற்றி, ஏராளமான சுதைச் சிற்பங்களைக் காணமுடிகிறது. பெரும்பாலும் அலசா கன்யா என்னும் ஆடல் மகளிரின் சிற்பங்கள் விதவிதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நடுவே பாதி மனித உடலுடனும் பாதி பாம்பு உடலுடனும் தென்படும் நாகா மற்றும் நாகி ஆகிய உருவங்களும் அவர்களின் சல்லாபங்களும் உண்டு. சாலபஞ்சிகா என்னும் சிற்றின்பத்தில் திளைக்கும் மகளிர் உருவங்கள், குறிப்பாக மரங்களின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடி நிற்பதும், கிளைகளைத் தழுவியபடிக் காமப்பார்வை பார்ப்பதும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

யானையைக் காலடியில் இட்டு மிதித்தபடி, பிரம்மாண்டமாய் நெருப்பைக் கக்கியபடி விண்ணில் பாயத்துடிக்கும் விட்டலா என்னும் பாயும் சிங்கத்தை ஒவ்வொரு கோயிலிலும் பார்க்கமுடிகிறது. சிவன் கோயிலாகட்டும், விஷ்ணு கோயிலாகட்டும், கனிகா என்னும் வெளிப்புற சுவர் நீட்சியின் ஒவ்வொரு உள்ளடங்கிய பகுதியிலும் விட்டலாவைக் காணமுடிகிறது. சிறு வடிவங்களில் ஆரம்பித்துப் பெரிய அளவு வரை ஏராளமான விட்டலா உருவங்கள் கோயிலின் பிரம்மாண்டத்துக்குத் துணை சேர்க்கின்றன.

சுற்றுப்புறச் சுவரின் அலங்காரங்களுக்கு நடுவே மினியேச்சர் வடிவக் கோயிலைக் காணமுடிகிறது. புடைப்புச் சிற்பமாக தென்படும் இந்த மினியேச்சர் கோயில்களில் உள்ளே மூர்த்திகளும் உண்டு. பெரும்பாலும் நவக்கிரகங்கள் அல்லது சிவ வடிவங்களே காணப்படுகின்றன. ஒட்டுமொத்த மினியேச்சர் அமைப்பையும் முண்டி என்கிறார்கள். கோயிலின் அமைப்புக்கு ஏற்றபடி காக்ரா முண்டி, பீடா முண்டி என்றும், அளவில் சிறியதும் பெரியதுமான சிறிய மினியேச்சர் கோயில்களை படா முதல் காந்தி வரை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.

நாம் இதுவரை பார்த்தவையெல்லாம் அடிப்படைக் கட்டுமான வடிவங்கள். இதே சாயலில் புவனேஷ்வர் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் காணமுடியும். அளவில் பெரியதும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பெரிய கோயில்களாக புவனேஷ்வரின் லிங்கராஜா கோயிலையும், பூரியின் ஜெகநாதர் கோயிலையும் குறிப்பிடலாம். இரண்டையும் விடப் பெரிய கோயிலாக கோனரக் சூரியக் கோயில் இருந்திருக்க வேண்டும். கோனரக்கில் ஜக்மோகனாவும், நட மந்திரும் மட்டும் எஞ்சியிருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுமானமும் தொடர்ந்து இருந்திருக்கும் பட்சத்தில் ஆசியாவிலேயே பிரம்மாண்டான கோயிலாக இருந்திருக்கக்கூடும்.

ஓடிசாவுக்கே உரிய கலிங்கக் கோயில்கள், பல நூறு ஆண்டுகளாகப் பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும், ஒருசில அடிப்படைக் கட்டுமான விஷயங்கள் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்திக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். கலிங்க பாணியிலான முதல் கோயில், ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னால் இத்தகைய கோயில்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், முதலாம் நூற்றாண்டு தொடங்கி, ஏராளமான கோயில்கள் இருந்திருக்கின்றன என்பது உண்மை. அவை கலிங்க பாணியிலான கோயில்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. காரவேலர்களின் ஹத்தி கும்பா கல்வெட்டிலிருந்து, அப்போதே கோயில்கள் இருந்ததும், கடவுள் சிலைகள் பழுதுபார்க்கப்பட்டதும் தெரியவருகிறது. ஆனால், கோயில்களின் கட்டமைப்பு பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யக்ஷா, நாகா வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

கிடைத்த தடயங்களின்படி, கலிங்கக் கட்டமைப்பிலான கோயில்களின் வரலாறு ஆறாம் நூற்றாண்டில் சைலேத்பவர்களின் ஆட்சியில் தொடங்குகிறது. ஒன்பது மற்றும் பதினோராம் நூற்றாண்டுகளில் பரவலானது. ஒரிசா பகுதியை ஆண்டு கொண்டிருந்த சோமவம்ஷியின் ஆட்சிக்காலங்களில் எண்ணிக்கையளவில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் தொடர்ந்த கங்கர்களின் காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக பதிமூன்றாம் நூற்றாண்டின் முடிவில் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. 800 ஆண்டுகள் தொடர்ந்த கலிங்கக் கோயில் கட்டுமான பாரம்பரியத்தின் உச்சம், கோனராக்கின் சூரியக் கோயிலில் நிறைவு பெற்றது என்று சொல்லலாம்.

பூரியின் ஜெகந்நாதர் கோயில் கி.பி 1150ல் அனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. தஞ்சையை ஆண்ட முதலாம் குலோத்துங்கனின் மருமகன். சைவராக வாழ்க்கையைத் தொடங்கி, பூரிக்கு விஜயம் மேற்கொண்ட ராமானுஜரால் வைஷ்ணவனாக மாறியவன். இடிந்து கிடந்த ஜெகந்நாதர் கோயிலை, பிரம்மாண்டமான கோயிலாக எழுப்பியவன்.

மாலை நேரம். நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். பூரி கோயிலில் சகல விஷயங்களுக்கும் பாத்யதை பெற்ற பாண்டா குழுவைச் சேர்ந்த ஒருவர், முதுகில் கொடிகளைக் கட்டியபடி, நட மந்திரிலிருந்து ஜக்மோகனாவில் மீது தாவி ஏறுகிறார். பின்னர் அங்கிருந்து கர்ப்பகிரத்தின் மீது தாவி, விறுவிறுவென்று மேலே ஏற ஆரம்பிக்கிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நூறு அடி உயரம் கொண்ட ரேகா தியோலைக் கடந்து பேக்கி என்னும் ஆளுயுர இடத்தை அடைகிறார். அங்கிருக்கும் விஷ்ணுவுக்கு ஆரத்தி நடைபெறுகிறது.

அங்கிருந்து சங்கிலியைப் பிடித்தபடியே அமலக்காவின் மீது ஏறுகிறார். கரணம் தவறினால் மரணம்! அமலாக்காவைத் தாண்டி காபூரி என்னும் தளத்தை அடைகிறார். பூரி கடற்கரையிலிருந்து வரும் காற்று, ஆளைத் தள்ளிவிடுகிறது. அங்கிருக்கும் கலசத்தின் வழியாக சுதர்சன சக்கரத்தின் மீதேறி ஒரு கையால் பிடித்தபடியே இன்னொரு கையால் கொடியை மாற்றுகிறார். கூட்டம் பரவச நிலைக்குச் செல்கிறது, ஜெய் ஜெகந்நாத்!

சிவப்புக் கொடிக்கு பதிலாக மஞ்சள் கொடி. மழையும் புயலும் இருந்தாலும் கூட தினந்தோறும் தொடரும் சடங்கு என்கிறார்கள். இதுவரை ஒருமுறை கூட அசம்பாவிதம் நடைபெற்றதில்லையாம். கீழிறிங்கி வரும் பாண்டாவிடமிருந்து பழைய கொடிகளை வாங்கிக்கொள்ள நூறு ரூபாய் நோட்டுகளுடன் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஓர் அபாயகரமான சடங்கு, ஒரு மாபெரும் சாகசமாக இங்கே சித்தரிக்கப்படுகிறது. 214 அடி உயர கோபுரத்தைக் கட்டிமுடித்த கையோடு, சொந்தத் தாய்மாமனின் படைத்தலைவனான கருணாநகரத் தொண்டைமானால் தோற்கடிக்கப்பட்டு வீழ்ந்த அனந்தவர்மனின் கதை, இன்னொரு இடத்தில் சாகசமாக்கப்பட்டு, கலிங்கத்துப் பரணி என்னும் அபாயகரமான இலக்கியமாக்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

Leave a Reply