Posted on Leave a comment

ISRO: திசை கண்டேன், வான் கண்டேன் – ஜெயராமன் ரகுநாதன்

வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் பண்பாடு அமெரிக்காவிலும் இருக்கிறது என்பதை ISRO ஃபிப்ரவரி மாதம் ஒரே ராக்கெட்டில் 104 சாடிலட்டுகளை வானில் செலுத்திய நிகழ்ச்சியின்போது தெரியவந்தது.

“நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்” என்று ஒப்புக்கொண்ட அமெரிக்கப் பாதுகாப்பு இயக்குநர்ம டான் கோட்ஸ் (Dan Coats) அவசரமாக, “ அமெரிக்கா இந்த விஷயத்தில் பின்தங்கிவிடக்கூடாது” என்னும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.1

பொழுதுபோகாமல் கபடி, கில்லி ஆட்டத்துக்கெல்லாம் போராட்டம் நடத்தும் தமிழர்களின் மனதில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகம் இடம் இல்லை. “ஒரே ராக்கெட்டுல 104 செயற்கைக்கோள்களை விண்ணுல செலுத்தியிருக்காங்கப்பா நம்ம வானிலை ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிங்க!” “ஓ அப்படீங்களா! சரி, அந்த தனுஷ் கேஸ் என்னாச்சி?”

இந்த ரீதியில் வம்பு விசாரிக்கக் கிளம்பிவிட, ஊடகங்களும் ‘ஆமாம் வாஸ்தவம்தான்’ என்று முடித்துக்கொண்டு ஜெ தீபா பேரவை நிகழ்ச்சிகளை நொடிக்குநொடி விறுவிறுப்புக் குறையாமல் காண்பிக்க, வண்டிகளையும் நிருபர்களையும் அனுப்பிவிட்டனர்.

உலக விஞ்ஞான நிகழ்வுகளில் ISROவின் இந்த சாதனை ஒரு மைல்கல். இதற்கு முன்னால் ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களையும் அமெரிக்கா 28 செயற்கைக்கோள்களையும் மட்டுமே அனுப்பியிருக்கின்றன. உலகமே இப்போது ஆச்சரியமாக இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகளைத் திரும்பிப்பார்க்கிறது என்பது நிச்சயம் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்.

சமீப காலமாகவே விண்வெளி சமாசாரம் என்பது பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இது வெறும் வானிலை ஆராய்ச்சி விஷயமோ அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்போ இல்லை. அதையெல்லாம் மீறி, தேசியப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களும் இன்னும் பல முக்கியமான காரணிகளும் இதில் இருக்கின்றன. முக்கியமாக, மனிதனை வான்வெளிக்கு அனுப்பிய நிகழ்ச்சிகள் உலகத்தையே வியப்புடன் பார்க்க வைத்த நாட்கள் உண்டு. அப்போலொ பதினொன்றில் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் காலடி வைத்த சம்பவம் மனித இனத்தையே முழுவதுமாய்த் திளைக்க வைத்தது. சாலெஞ்சரும் பின்னாளில் கொலம்பியாவும் வெடித்துச் சிதறியபோது, 10 லட்சம் காலன் எரிபொருளுடன் பயணம் செய்வதும் கிட்டத்தட்ட மணிக்கு 1800 மைல் வேகத்தில் பூமியின் ஈர்ப்புக்குள் நுழையும் பயங்கரமும் மனித இழப்பின் சோகமும் உலகத்தையே ஆட்டிவைத்தன. ஆனாலும் மனிதனில்லா ராக்கெட்டுகளின் விண்வெளி முயற்சிகள் நம் கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை. மீடியாக்களுக்கான மசாலா அதில் இல்லை. டிஸ்கவரி சானலின்  When we left the Earth போன்ற டாகுமெண்டரிக்களும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் ஸ்டார் வார்ஸும் விண்வெளியின் மர்மங்களுக்காகவும் சாகசங்களுக்காகவுமே நம்மை ஈர்க்கின்றனவேயன்றி மற்றபடி அதிக ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

“இந்த விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் சுத்த பாஷ்! நேரம் பண விரயம்! அதுக்கு பதிலா அந்தப் பணத்த இங்க உபயோகமா செலவழிக்கலாம்!”

இப்படி அலுத்துக்கொள்ளும் கும்பல் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு! ஆனாலும் விண்வெளி ஆய்வுகள் இன்றைய நிலையில் அண்டவெளியின் ரகசியத்தை அறியும் ஆவல் என்பதைத் தாண்டி, நாம் வாழும் இந்த பூமியின் எதிர்காலத்துக்காகவுமே ஒவ்வொரு நாட்டுக்கும் மிகவும் தேவையானதுதான் என்பதில் சந்தேகமில்லை. அப்போலோ 11 சந்திரனில் இறங்கிய நிகழ்ச்சியினால் தூண்டப்பட்டு அமெரிக்காவில் ஒரு தலைமுறையே விண்வெளி பற்றியும் விஞ்ஞானம் பற்றியும் படிக்க ஆவலாகி விண்வெளி இயலைத் தேர்ந்தெடுத்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏன், இங்கேயே சந்திரயான் ஒன்றுக்குப்பிறகு விண்வெளி இயல் பற்றிய பேச்சும் விளக்கங்களும் அதிகமாகி “நானும் ஸ்பேஸ் சயன்ஸ் படிக்கப்போகிறேன்” என்று கிளம்பும் இளைய சமுதாயம் உருவாகியிருக்கிறது. விண்வெளி வணிகத்தில் ஈடுபட பல புதிய வணிக முயற்சிகள் (start ups) இளைஞர்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக நம் ISRO நிகழித்தி வரும் அடுத்தடுத்த சாதனைகள், இவர்களை இன்னும் இன்னும் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுப் பக்கமும், ஏன் விண்வெளி வணிகத்தின் பக்கமும் திருப்பிவிடக்கூடும்.

இந்த ISROவின் ஆரம்பகாலம் என்பது விக்ரம் சாராபாயின் வாழ்க்கையோடு ஒட்டியே இருந்தது. அவர், இந்த நிறுவனமே தன் வாழ்க்கை என்பதாகப் பணிபுரிந்த கதைகளை நாம் அறிவோம். ஒரு சிறிய கட்டடத்தில் அதிக வசதிகள் ஏதுமின்றிப் புறாக்களின் ‘பக்பக்’குக்கு இடையில் ராக்கெட் ஆராய்ச்சிகளைச் செய்த ஏராளமான விஞ்ஞானிகளை நாம் இன்று நினைத்துப் பார்க்கவேண்டும். ஏன், நமது அப்துல் கலாமே இந்த ISROவின் மீது ஒருவித மாறாக் காதலுடனேயே பணிபுரிந்திருக்கிறார். ஆரம்பகால விஞ்ஞானிகள் குழு அமெரிக்கா ஃபிரான்ஸ் என்று ஒவ்வொரு ஊராகப் போய் அவர்கள் ஏலத்துக்கு விடும் பழைய ராக்கெட் தொழில்நுட்பங்களை வாங்கி வந்து, படித்து, முயற்சிகள் செய்து உருவாக்கிய ISRO இன்று உலக சாதனை புரிந்திருப்பது ஆச்சரியமே இல்லை.

லட்சக்கணக்கான லிட்டர் பெட்ரோலை எரித்து ராக்கெட் விடும் ISROவுக்கு என்ன சுற்றுச்சூழல் அக்கறை இருக்கமுடியும் என்று கேட்கலாம். ஆனால் இதே ISROவும் இன்னும் சில அமைப்புகளும், அரசுத்துறைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சுற்றுச்சூழல், காற்றுத்தன்மை, பூமி வெப்பமயமாதல், மாற்று எரிசக்தி, படிம எரிபொருள் மற்றும் பூமியை நெருங்கும் விண் பொருள்கள் பற்றியெல்லாம் தீவிர ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. நமது பூமியைக் காப்பாற்ற இந்த ஆராய்ச்சிகள் மிகவும் தேவையானவையே.

உலக மக்கள்தொகை இப்போதே ஏழரை பில்லியனைத் தொட்டிருக்கிறது. இயற்கை அன்னை இந்தக் கனத்தை இப்போதே தாங்க முடியாமல் தவிப்பது வெளிப்படை. இதே ரீதியில் போனால் நாமும் நூற்று எழுபதாவது மாடியில் வசித்து, காற்றைச் சேதப்படுத்தி,  (“அப்பா! நீங்க ஸ்கூல் படிக்கறப்போ இந்த மாதிரி மாஸ்கெல்லாம் மாட்டிக்க வாணாமா?”), மரஞ்செடிகொடிகளை அழித்து, (“எங்க தாத்தா சொல்றார், அடையார் பக்கத்துல பெரிய பார்க் இருக்குமாம்!”), விலங்கினங்கள் இல்லாமல் போய் (“அப்பல்லாம் தெருவிலேயே நாயெல்லாம் ஓடுமாமே!”) உயிர் வாழ்தலே பெரிய சாதனையாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நிச்சயம் விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியம். சந்திரனிலும் செவ்வாயிலும் மனிதனைக் குடிபுக வைக்க முடியுமா என்னும் ஆராய்ச்சி சீரியஸாக நடக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இந்த விதமான மக்கள்தொகைப் பெருக்கத்தினால் நாம் இயற்கை வளங்களைக் காலியாக்கிக்கொண்டு வருகிறோம். தண்ணீருக்குக் காசு கொடுக்கும் காலம் வந்தது போலவே காற்றுக்கும் காசு கொடுக்க வேண்டி வரும். ஆனால் விண்வெளியில் இயற்கை வளங்கள் அளவில்லாமல் கொட்டிக்கிடப்பது ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வருகிறது. நம் பூமித்தாயைக் காப்பாற்றவேண்டுமானால் அந்த இயற்கைச் செல்வங்களை பூமிக்குக் கொண்டுவரும் முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். அதற்கான முன்னேற்பாட்டு ஆராய்ச்சிகள் இப்போதே துவங்கினாலன்றி அவற்றுக்கான தேவை வரும்போது திண்டாடித் திக்கிழந்து போவோம்.

நம் வீட்டை எவ்வளவு கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம். ஒரு வார்தா புயல் வந்து வீட்டில் ஒழுகினால் அடுத்த வாரமே கொலுத்துக்காரரைக்கூட்டி வந்து சிமெண்ட் அடைத்து, பெயிண்ட் அடித்து…

ஆனால் நாம் வாழும் பூமியை முடிந்த அளவு நாசப்படுத்தி வருகிறோம். மணல் கொள்ளையிலிருந்து கனிமம் எடுப்பதிலிருந்து சூழலை மாசு படுத்துவதிலிருந்து ஆற்று நீரைக் கணக்கின்றிச் செலவழிப்பதிலிருந்து பூமியிலிருந்து நீரை உறிஞ்சி நிலத்தடி நீரைச் சூறையாடி, கண்டகண்ட கழிவுகளை ஆற்று நீரில் கலந்து, நல்ல நீரோடைகளைச் சாக்கடையாக்கி…  நமக்கென்னவோ இயற்கையெல்லாம் சாசுவதம் போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொஞ்சம் வான்வெளியில் பறந்து விண்வெளிக்குப் போனால் நாமும் இந்த பூமியும் எத்தனை சிறிய துகள் என்பது புரியும். அனாமத்தாக சுற்றிக்கொண்டிருக்கும் நம் பூமியானது அண்ட சராசரங்களினிடையே ஒரு கடுகுப்பொட்டு அளவு கூட இல்லை என்பது விளங்கும். இயற்கை ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டால் கவண் கல்லைப்போல பூமி கோடிக்கணக்கான காத தூரம் போய் காணாமல் போய்விடும். இந்த நிலையற்ற தன்மை நமக்கு ஒழுங்காகப் புரிந்து, நாம் எப்படியெல்லாம் பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்னும் அவசரம் தெரிய வேண்டுமானால், அண்டங்கள் பற்றி நாம் இன்னும் இன்னும் நிறையத் தெரிந்துகொண்டாக வேண்டும். அதற்கு இந்த விண்வெளி ஆராய்ச்சிகள் மிக மிக அவசியம்.

சேர்மன் திரு கிரண் குமார் சொல்லுவதுபோல ISROவின் ஆராய்ச்சிகள் ஏதோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது மட்டுமில்லை. மிகத் துல்லியமாக சீதோஷ்ண நிலைமைகளையும் வரப்போகும் புயல் எச்சரிக்கைகளையும் முன்கூட்டியே அறிந்துகொள்வதும்தான். இப்படி முன்கூட்டியே தேவையான தகவல்களை அறிந்துகொண்டு, அவற்றை வானிலை மையங்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களால், மீனவர்களைத் தக்க சமயத்தில் உஷார்ப்படுத்த முடிந்திருக்கிறது. அடுத்த நூறு வருடங்களுக்குத் தேவையான விஷயங்களின் முதற்கட்ட ஆராய்ச்சிகளை இப்போதிலிருந்தே தொடங்குவதற்கான அளவில் திட்டங்கள் போடப்படுகின்றன. சென்ற வருடம் செலுத்தப்பட்ட சந்திரயான் ஒன்றின் வெற்றிப்பயணம்,  உலகத்தையே நம்மைப் பார்க்கச்செய்திருக்கிறது. சந்திரயான் II  அடுத்த நிலாப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 2018ல் அந்தப் பயணம் தொடங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக கிரண் குமார் தெரிவிக்கிறார்.

விண்வெளி ஆராய்ச்சியில் ISROவின் சரித்திரம் பொன்னேட்டில்… ஆம் அதேதான்! இருபது வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் புவி நோக்கு செயற்கைக்கோள் (Earth-observation satellite) IRS – 1A அனுப்பப்பட்டது. அதன்பிறகு இது வரை 10 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுவிட்டன. அவற்றில் ஆறு இன்னும் திருப்திகரமாகச் செயல்பட்டு நமக்கு வேண்டிய விண்வெளித் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறன.

ஒரு காலத்தில் இந்த ISROவே அமெரிக்க மற்றும் ஃபிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவல்களைக் கொண்டே ஆராய்ச்சிகள் செய்து வந்த நிலை மாறி, இன்று இந்தியாவே பல வெளிநாடுகளுக்கு விண்வெளித்தகவல்கள் தரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பது நிச்சயம் ISROவின் மறுக்க முடியாத சாதனையே. இது அவ்வளவு சுலபமாகக்கிடைத்த வெற்றியல்ல. பல வருடங்களாக இந்த ISROவின் அலுவலர்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளையிலும் பேசி கூட்டம் போட்டு அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் என்னென்ன என்று பெரிய பட்டியல் எடுத்து… பேயாய் உழைத்திருக்கிறார்கள். ISRO செயற்கைக்கோள் அனுப்பத் தயாராகியவுடன் அதிலிருந்து கிடைக்கப்போகும் தகவல்களை எடுத்துக்கொள்ள இந்த அரசுக் கிளைகள் தயாராகப் போட்டிபோட்டுக்கொண்டு வர, அப்புறம் என்ன, வெற்றிதான்.

இந்தச் செயற்கைக்கோள்களின் உறங்கா விழிகள் நமக்குத் தரும் தகவல்களின் விஸ்தீரணமும் பயன்பாடுகளும் அடர்த்தியும் சொல்லி மாளாது.

துல்லியமான பயிர் வளர்ப்பு ஏக்கரா, சாகுபடி அளவு, வறட்சி அல்லது வெள்ளத்தின் நஷ்டக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பல்லுயிர்க் கண்காணிப்பு, நீர் மேலாண்மை, பனிப்பாறை ஆய்வு, தாது மற்றும் உலோக ஆய்வு, கடலியல் ஆராய்ச்சி என்று செயற்கைக்கோள் தரும் தகவல்களின் பயன்பாடுகள், ஒரு நாட்டின் வாழ்வாதாரத்துக்கே மிக அத்தியாவசியமானதாகப் போய்விட்டன.

Cartosat 2A என்னும் செயற்கைக்கோளை 2007இல் செலுத்தினார்கள். இதில் பல நிறங்களையும் தனித்தனியாகப் பகுத்துணரும் (Panchromatic) காமராவைப் பொருத்தியதால் பூமியின் சின்னச்சின்ன வித்தியாசங்களையும் துல்லியமாகக் கண்டறியமுடியும். ஏன், தெருவில் போகும் ஒவ்வொரு வாகனத்தைக்கூடக் கவனிக்க முடியும்! இப்படிப்பட்ட காமிராவினால் நகர்ப்புறத் திட்டமிடுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கண்காணித்து, திட்டமிட்டுச் செயல்படுத்தமுடியும். இதற்குமுன் செலுத்தப்பட்ட Cartosat ஒன்றுடன் சேர்ந்து இவை இரண்டும் இன்னும் அதிக நிலப்பரப்பைக் கண்காணிக்க இயலும். Cartosat 2E வரை செலுத்திவிட்டோம். இனி 2F வருடக்கடைசியில் போகப்போகிறது. கிட்டத்தட்ட 600 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் நாம் அறியக்கூடிய தகவல்களின் முக்கியத்துவம் மிக அதிகம்.

ISROவின் இன்னொரு தொழில்நுட்ப வெற்றி இந்தச் செயற்கைக்கோள்களின் மினியேச்சர் வடிவமான Indian Mini Satellite-1 (IMS-1), அல்லது Third World Satellite (TWSAT). முன்பு சொன்ன Cartosat போல 690 கிலோகிராம் அல்லாமல் வெறும் 80 கிலோகிராம் எடையேயுள்ள இந்த மினியேச்சர் செயற்கைக்கோளானது, அந்த அளவிற்குத் தொழில்நுட்பம் இல்லாமல் அதே சமயம் பலவித் தகவல்களைத் திரட்டித்தரும் திறமை வாய்ந்திருப்பதால், சிறிய நாடுகள் இந்த வகைச் செயற்கைக்கோள்களை வானில் செலுத்த இந்தியாவின் ISROவை நாடுகிறார்கள். நம் ISRO இந்த மினியேச்சர்கள் செலுத்துவதிலும் கரைகண்டுவிட்டிருப்பது நமக்குப் பெருமையான விஷயம் மட்டுமில்லாது, நம் ISROவிற்கு வருமானம் ஈட்டித்தரும் தொழில்நுட்பமுமாகும். இந்த IMS செயற்கைக்கோள் லேசுப்பட்ட சமாசாரம் அல்ல. இதனுள் இருக்கும் Hyperspectral காமரா கிட்டத்தட்ட 64 வகை நிறங்களில் வித்தியாசம் காட்டிப் படம் எடுக்கும் தன்மை வாய்ந்தது. இந்த வகை காமராக்கள் ஆஸ்திரேலியாவில் கனிம வள ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுபவை. இவற்றின் நுண்ணிய சக்தியால் தாவரங்களின் இலைகளில் ஏற்படும் உருவ, ஊட்டச்சத்து மற்றும் நீர் வள மாறுதல்களைக்கூடக் கண்டறிய முடியும். இவ்வகை காமராக்கள் மிக நுட்பமான கடலாராய்ச்சியிலும் உதவக்கூடும்.

Megha-Tropiques என்னும் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் ஃபிரான்ஸும் இணைந்து செயல்பட்டு அனுப்பும் செயற்கைக்கோள் மிகப்பயனுள்ள ஆராய்ச்சிக்கான தகவல்கள் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோளின் Geo Stationery தன்மை ஒரு வித்தியாசமான அமசம். மற்ற செயற்கைக்கோள்களைப்போலப் பூமியைச் சுற்றாமல் பூமியின் சுழற்சிக்கேற்ப இதுவும் சுழலுவதால் பூமியின் ஒரே சில இடங்களைக் கண்காணித்துத் தகவல்கள் தந்து ஆராய உதவும். இந்தத் தகவல்கள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு மட்டுமன்றிப் பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை கொண்ட தகவல்களைப் பெறவும் பயன்படும்.

இன்றைய விஞ்ஞான முன்னேற்ற காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் தங்கள் நாட்டின் வளங்களைப் பற்றி நுட்பமாக ஆராய்ந்து அதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் வழிவகை செய்யமுடியும் என்பதைக் கையில் எடுத்துவிட்டன. சாதாரண சிறிய நாடுகள்கூடத் தங்கள் பட்ஜெட்டில் இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கென கணிசமான தொகையை ஒதுக்கி வைக்கின்றன. ஆனால் அந்தச் சிறிய நாடுகளால் செயற்கைக்கோள்கள் செலுத்தும் தொழில்நுட்பத்திலோ அல்லது அதற்கான முதலீடுகளிலோ தாக்குப்பிடிக்க இயலாது. ஆகவே அவை அமெரிக்கா, இந்தியா போன்ற செயற்கைக்கோள் இயலில் மிக முன்னேறிவிட்ட நாடுகளிடம் காசு கொடுத்து தங்கள் நாட்டுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வேலையைத் தருகின்றன. இது நம் நாட்டுக்கும் ISROவுக்கும் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் சேவையாகும்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 15ம் தேதி நாம் நிகழ்த்தியது நம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளக்கூடிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. உலக சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி உலகத்தையே வாயைப்பிளக்க வைத்துவிட்டனர் நமது விஞ்ஞானிகள். இவற்றில் 101 செயற்கைக்கோள்கள் வேற்று நாடுகளைச் சேர்ந்தவை. அந்த நாடுகள் இந்தியாவின் விண்வெளி இயல் நிபுணத்துவத்தின் மேன்மையை உணர்ந்து தங்களுக்காக இந்தச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தித்தருமாறு ISROவைக் கேட்டுக்கொண்டு அதற்கான கட்டணமாக மிக அதிகப் பணமும் கொடுத்திருக்கின்றன. அமெரிக்கா ஃபிரான்ஸ் போன்ற நாடுகளும் மற்ற நாடுகளுக்காகச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தித்தருவது உண்டு. ஆனாலும் நம் ISROவின் கட்டணம் இந்த நாடுகளின் கட்டணத்தோடு ஒப்பிட்டால் குறைவு. அதேசமயம் தரத்திலோ சேவையின் உன்னதத்திலோ எந்தவித மாறுதலும் இல்லை. இதனால் பல நாடுகள் நம்மிடமே இந்தச் சேவையைக் கொடுக்க முன்வந்தன. இந்த 104இல் 101 செயற்கைக்கோள்கள் ஹாலந்து, கஜகஸ்தான், அராபிய எமிரேட்ஸ், இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வேற்று நாடுகளுடையவை! அவர்களே அவற்றை நம்மிடம் கொடுத்து மேலே அனுப்பச்சொல்லி அதற்கான கணிசமான கட்டணமும் கொடுத்திருக்கின்றனர்.

PSLV – C37 என்னும் இந்த ராக்கெட் 650 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் எடுத்துச்சென்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.

உலக விண்வெளி வர்த்தகத்தில் நம் ISROவின் திறமையும் நம்பகத்தன்மையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இனி வரும் விண்வெளி வர்த்தக வருமானத்தில் கணிசமான பங்கை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ISRO அரும்பணி ஆற்றப்போகிறது.

உலகமெங்கும் விண்வெளி என்பது ஆராய்ச்சியைத் தாண்டி வர்த்தகத்தினுள் நுழைய ஆரம்பித்துவிட்டது. விண்வெளி வர்த்தகம் என்பது இன்று கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் இந்த விண்வெளி இயல் வர்த்தகத்தில் உருவாகிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய வென்ச்சர் ஃபண்ட் (Venture fund) என்னும் துணிகர நிதி நிறுவனங்கள் இந்த மாதிரியான விண்வெளி வர்த்தகம் தொடங்கும் நிறுவனங்களுக்கு (Space Business start ups) முதலீடுகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருவது, இந்த விண்வெளி வர்த்தகம் இன்னும் இன்னும் விரிவடையப்போவதின் முன்னோட்டமே. ஏன் இந்தியாவிலேயே இன்று பல விண்வெளி வர்த்தக நிறுவனங்கள் உருவாகிச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். Earth 2 Orbit, Team Indus, Nopo Nano technologies, Dhruva Space போன்ற நிறுவனங்கள் இந்த விண்வெளி வர்த்தகத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தாத்தாவாகிய ISRO உலகளாவிய அளவில் மிக உயர்ந்து நின்று பல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் சம்பாதித்து வருகிறது. விண்வெளி இயலில் மட்டுமின்றி விண்வெளி வர்த்தகத்திலும் ISROவின் பங்கு கணிசமானது.

தனியார் மயமாக்குதலின் நல்ல அம்சங்களில் ஒன்று சாதாரண மனிதனும் செல்வந்தனாக முடிவதே. பங்குச்சந்தைகளின் வளர்ச்சியினால் மத்தியதர வகுப்பினர் பலர் கோடீஸ்வரர்காளான கதைகள் நமக்குத்தெரியும்.

“என்னப்பா, ஒரு மாசமா ஆளையே காணலை?”

“அதா, ஒரு டிரிப் ஸ்விட்சர்லாந்துக்கு போயிருந்தேன் குடும்பத்தோட!”

“ என்னது ஸ்விட்சர்லாந்தா…?”

“வாயைப் பொளக்காத! போன வருஷம் ISRO ஷேர் வாங்கியிருந்தேன். இப்ப மார்க்கெட் விலை எங்கியோ போயிடுச்சே! அதான் 100 ஷேர்களை வித்து வந்த லாபத்துல ஃபாரின் டூர்! இன்னொரு 100 வித்து பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சுடலாம்னு பாக்கறேன்!”

பாரத ரத்தினங்கள் என்று வெற்றிகரமான அரசு நிறுவனங்களின் பங்குகளை நாட்டு மக்களுக்கு விற்கும் நாள் வந்துவிட்ட நிலையில், கூடிய விரைவில் இந்த உரையாடல்களையும் நாம் கேட்க முடியும்!

**********

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா மங்கல்யானை விண்ணில் செலுத்தியபோது, நியு யார்க் டைம்ஸ் கிண்டலாக ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அமெரிக்கர்கள் கோலோச்சும் விண்வெளி இயல் க்ளப்புக்குள் நுழைய, மாடுகளுடன் இந்தியர்கள் அந்த க்ளப்பின் வாசலைத் தட்டுவது போன்ற கார்ட்டூன் அது. இந்தியாவின் இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சாதனை செய்ததும், இந்தக் கார்ட்டூனுக்குப் பதிலடியாக, டைம்ஸ் ஆஃப் இண்டியா இப்படி ஒரு கார்ட்டூனை வெளியிட்டது. 


 

அடிக்குறிப்பு:

1. http://timesofindia.indiatimes.com/world/us/donald-trumps-spy-pick-shocked-by-india-launching-104-satellites/articleshow/57411884.cms

Leave a Reply