Posted on Leave a comment

T.K.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் – ஈரோடு நாகராஜ்

இரண்டு கைலயும் வாசிப்பிங்களா?

இல்ல பத்து விரல்லயும்.

என்ன வித்யாசம்?

பத்து விரல்களும், நாலு யுனிட்டா, மூணு யுனிட்டா, ரெண்டு யுனிட்டா, ஒரே யுனிட்டா, ஒரே விரல் மட்டும்… இப்படியெல்லாம் பிரிஞ்சு வாசிக்கும். உதாரணமா, ஒரு தனி ஆவர்த்தனத்தோட க்ளைமாக்ஸ்ன்னு வெச்சுக்குங்களேன், அப்ப வலது கைல நாலு விரல், இடது கைல நாலுவிரல் சேர்ந்து, ஒரே நேரத்துல ரெண்டு பக்கமும் தித், தாம் கிட-ன்னு ஆரம்பிக்கும்.

ஓ… பொதுவாத் தெரிஞ்சுக்கறத விட, இன்னும் நுணுக்கமா இருக்குன்றீங்க.

ஆமாம். நிறைய இருக்கு, ஆனா ஸங்கீதம் பாருங்க; பாடற விஷயத்த பேசினாலே கொஞ்சம்தான் புரியும், எழுதினா சொல்லவே வேணாம்.

அப்ப, இசை, இசைக் கலைஞர்களப் பத்தியெல்லாம் படிக்கும்போது இதுலேந்து ஒண்ணும் புரியாதுன்னு நெனச்சுகணுமா?

அப்படியில்ல, இதுல சொன்னது, நமக்கு புரிஞ்சது போக, இன்னும் நிறைய இருக்குங்கற ஞாபகத்தோட படிச்சா சொன்னா எழுதினா போதும்.

அவர் சற்று உயரம் குறைவாக இருந்தார். மேடையில் அமர்ந்து, இருகைகளையும் மூன்று யுனிட்டுகளாகக் கொண்டு வாசிக்கவே கடினமாகத் தோன்றும் ‘நம்,கிடதக தின்,கிடதக தின’ என்ற சொல்லை அதிவேகமாய் ஒரே கையின் வெறும் மூன்று விரல்களால் போட்டதும் நான் பிரமித்தேன். என் சிறுவயதில் முதன்முதலில் ஈரோட்டில் அவர் கச்சேரி கேட்க, முன்னதாகவே பந்தலில் சென்று அமர்ந்திருந்தபோது, என் சீனியரான சீனிவாசன், ‘மூர்த்தின்னு அவர் பேர வெறும்ன கூட சொல்லக்கூடாது. மூர்த்தி சார்னுதான் சொல்லணும். என்ன கணக்கெல்லாம் வாசிப்பார் தெரியுமா’ என்றான். தா,,,,,, தீ,,,,,, கி,,,,,, ண,,,,,, தொம்,,,,,, என்று நீண்ட கார்வைகளில் ஆரம்பித்துக் குறைத்துக்கொண்டே வந்து அது ‘ததிகிணதொம் ததிகிணதொம் ததிகிணதொம்’ என்று ஆதி தாளத்தின் கடைசி மூன்று அடியில் விரலுக்குவிரல் வந்ததும்தான் அது கண்ட கதி என்றே தெரிந்தது. (கண்டம் என்றால் ஐந்து. ஐந்தைந்தாக வாசிப்பது கண்டகதி, தகதகிட தகதகிட என்பது போல்.)

அவர் ‘தரிகிட கிடதக தாத் தொம்’ என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்தால் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கேட்கும். அத்துணைப் பளீரிடும் தெளிவு, எந்தச் சொல்லாயினும். இருபது வருடங்களுக்கு முன் வாணிமஹாலில் சேஷகோபாலனுக்கு அவர் வாசித்த கச்சேரி இன்றும் நினைவில் உள்ளது. முக்கியக் காரணம், அன்று நகுமோமு கனலேனியை ஆரம்பிக்கும்பொழுது காலப்ரமாணம் 72 pulses per minute. (RPM போல ஒரு நிமிடத்திற்கு எத்தனை துடிப்பு/தாளத்தின் விரல் எண்ணிக்கை என்ற கணக்கு.) பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மேல் அசாத்ய சங்கதிகளுடன் அந்தப் பாடல், கீழ்க்கால மேல்கால ஸ்வரங்கள் முடிந்து தனியாவர்த்தனம் வாசித்து முடித்து மீண்டும் பாடலின் முதல் வரியை எடுக்கும்போது அதே 72. அத்துணைக் காலப்ரமாண சுத்தம்.

 இயல்பான மனித உள்ளம் கால ஒழுங்கைச் சீராக ஆரம்பித்த வேகம் போலவே இறுதிவரை தக்கவைக்க மிகவும் பிரயத்தனப் படவேண்டும் (அனேகமாக முடியாது என்பதன் இடக்கரடக்கல்). ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமாகவோ நிறையவோ ஓடிவிடும் (வேகம் அதிகரித்துவிடும்) அல்லது இழுத்துவிடும் (குறைந்துவிடும்). அது, வெகு சிலருக்கே கைகூடும். அவ்வெகுசிலரில், மூர்த்தி மாமா ஒருவர். சென்ற ஜூன் 2016ல், தன் 92 வயதில் அவர் வாசித்த கச்சேரியும் தனியும் அத்தனை சிறப்பு. ஸங்கீதமானது, நிறைய நிறைய ஞாபகமும், புத்தி கூர்மையும், விரலோ குரலோ மங்காத வித்தையையும், அனிச்சையாய் ஆனால் சரியான மற்றும் சிறப்பான முறையில் உடனுக்குடன் க்ரஹித்து, க்ரஹிக்கும் போதே மேலும் அழகு செய்து, பாட்டுடன் இணைந்து வினையாற்றும் பண்பு போன்ற தன்மைகளை இன்றியமையாததாகக் கொண்டது.

எனக்கு இப்போதே எதை எங்கே வைத்தோம் என்று மறந்துவிடுகிறது. ஆனால், என் குருநாதர் ஸ்ரீ சிவராமன் சாருக்கு 82 வயதாகிறது; மூர்த்தி மாமாவுக்கு 93 ஆகிறது. அவர்களின் சுறுசுறுப்பும் விழிப்பும் லயம் வழிந்தோடும் கச்சேரிகளையும் கேட்டால் வாழ்வில் அவர்கள் கைக்கொண்ட ஒழுங்கு, சின்ன வயதிலேயே செய்த அசுர சாதகம், எடுத்துக்கொண்ட கலையே மனமாயிருத்தல் என நம்மை வியக்க வைக்கும், நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.

மிருதங்கக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயரவர்களின் சிஷ்யருள் மிகுந்த புகழும் ஸ்தானமும் அடைந்தவர்கள் என பாலக்காடு ஸ்ரீ மணி ஐயர், ஸ்ரீ T.K.மூர்த்தி, என் குருநாதர் ஸ்ரீ உமையாள்புரம் K.சிவராமன், கஞ்சிரா ஸ்ரீ V.நாகராஜன் எனப் பலரைச் சொல்லலாம். முதல் மூவருமே ஸங்கீத கலாநிதிகளும் கூட. ஆகஸ்ட் 13, 1924ல் தாணு பாகவதர்-அன்னப்பூரணி அம்மையாரின் மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார் மூர்த்தி. அவர் தமையனார் கோபாலகிருஷ்ணன் லய வித்வான் என்பதால், காதுகளின் கண்களின் வழியே தன்னையறியாமல் லயம் உண்டு வளர்ந்தது சிறுவனின் மனம்…

முதலில் பாட்டுதான் பயின்றார். பள்ளி விழாக்களில் தன் நண்பனான செல்லமணியுடன் (பாடகர் ஹரிஹரனின் தந்தை) பாடுவது வழக்கம். ஆனால் விரல்கள் ஸ்லேட்டில் வாசித்து வாசித்து அடிக்கடி உடைந்து போனதை கவனித்த ஆசிரியர் ஒரு விழாவில் ‘செல்லமணி பாடட்டும்; நீ மிருதங்கம் வாசி’ என்று சொல்லிவிட்டார். அன்று அங்கு வந்திருந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா அவ்வாசிப்பில் மகிழ்ந்து யாரிடம் பயில்கிறாய் எனக்கேட்க, ‘யாருமில்ல. நானே வாசிக்கறேன்’ என்றார். மஹாராஜா ஒரு தங்க மெடல் பரிசளிக்கிறார். மூர்த்தியின் தந்தை எதையோ உணர்ந்து மூன்று ரூபாய்க்கு (இப்பொழுது வாங்கவேண்டுமென்றால் பதினைந்தாயிரம் ஆகும்) ஒரு மிருதங்கத்தை வாங்கித் தருகிறார். இந்நிலையில் ஒரு முறை, தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயர் முன்னிலையில் வாசிக்க நேர்கிறது.

நல்ல கையும், பரிமளிக்கக்கூடிய அம்சங்களும் தென்பட்டால் அவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்டு, பின் ஸ்புடம் போட்டு மின்ன வைக்கும் பேராற்றல் வாய்ந்த வைத்யநாத ஐயரவர்கள், ஒன்பது வயதான மூர்த்தியைத் தன் தத்துப் புத்திரனாகவே தஞ்சைக்கு அழைத்து வருகிறார். ‘அப்பவே கேட்டார்; இன்னும் ரெண்டு மாசம் ஆகட்டும்னு அம்மா சொன்னா. அந்த ரெண்டு மாசத்துல என்னோட அம்மா காலமாயிட்டா. அப்பா என்னை வைத்தா அண்ணாவாத்துல விட்டா’. அவரை விடப் பன்னிரு அகவைகள் மூத்தவரான பாலக்காடு மணி ஐயர் அச்சமயம் அங்கே பயின்று வந்தார்.

இரு வருடங்கள் கழித்து, தன் பதினோராவது வயதில் குருவுடன் சேர்ந்து துக்காராம் படத்துக்காக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பாடிய முசிறி ஸ்ரீ ஸுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்கிறார். பிறகு மைசூர் சமஸ்தானத்தில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரியில் சௌடய்யா வயலினுடன் குரு ஸ்ரீ வைத்தா அண்ணா வாசிக்க, மூர்த்தியும் உடன் வாசிக்கிறார். சிட்டு என்று செல்லாமாக அழைக்கப்பட்ட மூர்த்தியின் வாசிப்பில் மகிழ்ந்து மைசூர் மஹாராஜா அந்நாளில் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறார். அதோடு, தேர்ந்த பக்கவாத்தியக் கலைஞனாக தனியே இவர் வாசித்துக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் மறுநாள் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து கேட்டு உவந்து அன்றும் ஆயிரம் ரூபாய்கள் வழங்கினார். பதினைந்து வயதில் மாஸ்டர் மூர்த்தி என்ற பெயர் ஸங்கீத உலகில் வ்யாபிக்கிறது.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிலிருந்து அரியக்குடி, செம்பை, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.என்.பி., மாலி, எம்.எஸ்., மேண்டலின் என்று அவர் பக்கவாத்யம் வாசித்த உன்னதக் கலைஞர்களின் பட்டியல் வெகு நீளம். ஒரு முறை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி வைத்தா அண்ணாவின் இல்லத்துக்கு வர, ‘இது யாரு தெரியுமா, ரொம்ப நன்னா வாசிப்பான்’ என்று அறிமுகப்படுத்தி அன்று மாலை வீட்டிலேயே ஒரு கச்சேரியை நடத்தினார் வைத்தா அண்ணா. அதன் பின் ஐம்பத்தைந்து வருடங்கள் மூர்த்தி தொடர்ந்து எம்.எஸ்ஸுக்கு வாசித்திருக்கிறார். UNO-வில் வாசித்திருக்கிறார். அந்நாளில் பெண்களுக்கு வாசிப்பதில் இருந்த மனத் தடைகளைக் கடந்து D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, K.B.சுந்தராம்பாள், பிருந்தா-முக்தா எனப் பலருடைய கச்சேரிகளையும் தன் வாசிப்பினால் அலங்கரித்திருக்கிறார்.
         
குரு சிஷ்யப் பரம்பரை என்று எடுத்துக்கொண்டால், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் – ராமனாதபுரம் சங்கர சிவம் – மதுரை T.N.சேஷகோபாலன் – நெய்வேலி சந்தானகோபாலன் – ஸ்ரீராம் பார்த்தசாரதி என்று ஐந்து தலைமுறைக்கு வாசித்த பெருமையையுடையவர். அவரின் கச்சேரி அனுபவத்துக்கே இப்போது ஸதாபிஷேகம் ஆகிவிட்டது. ‘நாங்க எல்லாம் அப்புறம் நிறைய மாத்திண்டோம், (தனக்கென ஒரு பாணி உருவாகி வந்ததைச் சொல்லுகிறார்.) ஆனா மூர்த்தி வாசிப்பு இன்னைக்கும் அண்ணா (ஸ்ரீ வைத்யநாத ஐயர்) சொல்லிக்குடுத்ததெல்லாம் அப்படியே இருக்கும்’ என்று மணி ஐயர் ஒருமுறை பேசியதாக மூத்த கலைஞர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். லய ரத்னாகர, ம்ருதங்க பூபதி, தாளவிலாஸ், சங்கீத நாடக அகாதமி, ஸங்கீத கலாநிதி என்று விருதுகளின் நீண்ட வரிசைக்குச் சொந்தக்காரர் மூர்த்தி அவர்கள்.

மனோபலம் மிக்கவர். தொண்ணூறுகளில் ஒரு கச்சேரியில் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரோக் வந்து, வலது கையும் காலும் ஸ்வாதீனமில்லாமல் போயிற்று. ஆபரேஷன் செய்யவேண்டும் எனக்கூறிய நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியிடம், ‘டாக்டர்… நான் ம்ருதங்கம் வாசிக்கறத்துக்குத்தான் பொறந்தேனேயொழிய, சாப்டுட்டுத் தூங்கறத்துக்கில்லை. நான் வாசிக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுத்துன்னா, என்ன அனுப்சிருங்கோ… நான் போறத்துக்கு ரெடியா இருக்கேன். நான் கவலப்படலேன்னேன்’ என்றார்.

அதன்பின் மனம் தளராது சில மாதங்கள் பயிற்சிகள்; பிறகு அதே கம்பீரமாய் வாசித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவு நேசம் தன் கலையில்.

மூர்த்தி மாமாவின் பேச்சு அலாதியான ரசிப்பும் போலச் செய்தலும் கிண்டலும் அன்பும் நிறைந்தது. ஒரு முறை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது மழை பெய்துகொண்டிருந்தது. ஆட்டோக்காரர் அதையே காரணமாகச் சொல்லி அதிகம் பணம் கேட்டார். இவரும் ஏறி அமர்ந்துவிட்டார். ஸ்டார்ட் செய்யக் குனிந்த நேரம், ‘இரு… மழை விடட்டும்’ என்றார். எக்மோரில் நிறையப் பணம் கேட்டவரிடம், ‘நீ என்ன கொண்டுவிட்டா போறும்; திருப்பியும் இங்க கூட்டிண்டு வரவேண்டாம்.’

அவருக்கு சிஷ்யர்கள் ஏராளம். ம்ருதங்க தத்வம் என்ற கருத்துருவாக்கத்தின் முயற்சியாய் அவருக்கும் முன்பிருந்த மேதைகள் பற்றியும் தஞ்சாவூர் பாணி என்பதனை உலகெங்கும் மூர்த்தி அவர்களின் பார்வையில் கூறியும் வாசித்தும் ஆவணப்படுத்தியுள்ளனர். நான் முதல்முதலாய் வாங்கிய தனியாவர்த்தன கேஸட் இவருடையதுதான். அதில் கொன்னக்கோலும்1 சொல்லியிருப்பார். அதிலும் அவர் வித்தகர். கடம் கஞ்சிராவும் வாசிப்பார். 35 தாளங்கள், 108 தாளங்கள் என்று பலவித தாள அமைப்புகளுக்கும் வாசித்துள்ளார். நிறைய கோர்வைகள் கம்ப்போஸ் செய்திருக்கிறார்.

இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருக்கிறது மத்திய அரசு. சந்தோஷம், நன்றி. ஆனால், மூர்த்தி மாமா அந்த நிலைக்கும் மேலே வந்து, எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள்ளேனும் சரியான சமயத்தில் அவரவர் கலைகளையும் தாம் சார்ந்திருக்கும் துறைக்கு அவர்கள் அளித்த கொடையையும் அங்கீகரித்து விருது வழங்கவேண்டும். பிறகு இன்னும் சற்று வயதான பின், அதற்கும் மேலுள்ள பத்மபூஷன் பத்மவிபூஷன் விருதுகளை அளிக்கட்டும், பரவாயில்லை. விருது பெற்ற அன்றோ, அதற்கடுத்த நாளோ அவர்கள் அங்கே வாசிப்பதாய்க் கொள்ளுவோம். தன் கலையின் சிறப்புகளை முழுவதுமாய் வெளிப்படுத்தும் உடல்-மன நிலையுடன் அவர்கள் இருந்தால் தன் கலையை அங்கே நிகழ்த்துபவருக்கும் கேட்பவர்களுக்கும் எத்தனை ஆனந்தம். பருவத்தே பயிர், காலத்தினால் செய்வது, ஞாலத்தின் மாணப் பெரிது என்பதையெல்லாம் தருண்விஜய் போன்றோர் தானும் பயின்று அரசுக்கும் எடுத்துச் சொல்வாராக. நான் ஹிந்தி கற்றுக்கொண்டு மோடியிடம் பேசி முறையிடுவதை விட அது எளிது.

(நன்றி: அவர் வாசிப்பையும் பேச்சையும் கேட்டு அனுபவித்ததனால் எனக்கும், மூர்த்தி மாமாவின் பத்திரிகைப் பேட்டிகளுக்கும், யூடியூபுக்கும். T.K.Murthy, Mridanga Tatvam என்று கூகிள் செய்து அவர் வாசிப்பின் துளியை நுகரலாம்)

(கட்டுரையாசிரியர் பிரபல  மிருதங்கக் கலைஞர்). 

அடிக்குறிப்பு:

1. கொன்னக்கோல் என்பது மிருதங்கத்தில் வாசிக்கப்படும் சொற்களை ஜதிகளாகச் சொல்லி, பாட்டுக்குப் பக்கவாத்யமாக சொல்லி இசைக்கும் கலை. நத்தின்தின்னா நணதின்தின்னா / தகதிமிதகஜணு என்பது போல.

Posted on Leave a comment

நிவேதிதா பிடே: சேவைக்கு விருது – பாலா

தமிழகத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வரும் குமாரி நிவேதிதா பிடே அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது இந்த வருடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் விவேகானந்த கேந்திரம் என்ற தொண்டு நிறுவனத்தின் துணைத்தலைவராக உள்ளார். 58 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா என்ற இடத்தில் பிறந்தவர். தனது 19வது வயதில் சமுதாயச் சேவை செய்வதில் நாட்டம் கொண்டு கன்யாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் சேர்ந்தார். இவர் பிறந்தது மகாராஷ்டிரா என்றாலும் பத்மஸ்ரீ விருதுக்கு இவர் பெயர் தமிழ்நாடு சார்பில்தான் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று சகோதரிகளையும் மூன்று சகோதரர்களையும் கொண்ட இவர் குடும்பம் அவ்வளவு வசதியானது அல்ல. உடுக்க உடைகள் குறைவாக இருந்தாலும் படிக்கப் புத்தகங்கள் நிறைய வாங்கித் தருவாராம் இவருடைய தந்தை. அப்படி சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தருடைய புத்தகங்களைப் படித்ததன் விளைவு, வளர்ந்ததும் சமுதாயத்துக்கு உபயோகமாக எதாவது சேவை புரிய வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்குள் வளர்த்தது. விவேகானந்தா கேந்திரத்தின் நிறுவனர் ஏக்நாத்ஜி ரானடே தேச சேவைக்கு இளைஞர்களை அழைத்தபோது இவருக்கு அதில் இணைந்து தானும் பணி புரிய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதை தன் தந்தையிடம் தெரிவித்தபொழுது அவர் குறைந்த பட்சம் பட்டதாரி படிப்பையாவது முடித்த பின்னரே அதில் சேரலாம் என்று கூறி விட்டார். ஆகவே இவர் தன் பிஎஸ்சி பரிட்சை முடித்த அடுத்த நாள் கன்யாகுமரிக்குக் கடிதம் எழுதினார்.

கேந்திரத்தின் நிறுவனர் ஏக்நாத்ஜி இவரை நேர்காணலுக்கு அழைத்திருந்தார். அவர் இவரைப் பார்த்ததும் “உனக்கு ரொம்ப சின்ன வயசு, இப்போது போய் இரண்டு வருடம் கழித்து வா” என்று கூறியிருக்கிறார். அதற்கு இவர் தனக்கு சமூக சேவையில் நாட்டம் இருப்பதால் உடனே சேர விரும்புவதாகக் கூறி இருக்கிறார். இவருடைய பெற்றோரின் சம்மதத்தைப் பெற்ற உடன் இவரைச் சேர்த்து கொண்டிருக்கிறார்.

பள்ளிப் படிப்பில் வார்தா மாவட்டத்தில் முதல் மாணவியாகவும் பல்கலைக்கழகப் படிப்பில் ரேங்க் எடுத்துத் தேர்ச்சி பெற்ற இவரை PhD படிக்க வைக்க வேண்டும் என்பதே இவர் தந்தையின் கனவாக இருந்தது. இருந்தாலும் இவர் தன் மகளின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கவில்லை. 1977ம் ஆண்டு கேந்திரத்தில் முழு நேரத் தொண்டராகச் சேர்ந்து சமுதாயப் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நிவேதிதா பிடே 1978ல் இருந்து 1985ம் ஆண்டு வரை தமிழகத்தின் தென் பகுதி மாவட்டங்களில் கிராமப்புற முன்னேற்றத் திட்டத்தில் பங்கு பெற்று பணி ஆற்றினார். அதன் பிறகு கிராமப்புறக் குழந்தைகளின் நலனுக்கென கன்யாகுமரியில் நடத்தப்படும் விவேகானந்த கேந்திர வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியராக 1981ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

பழங்குடி இனத்தவர் நலனுக்கென அவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களான அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், அந்தமான், நாகாலாந்து போன்ற பகுதிகளில் பல பள்ளிகளை கேந்திரம் நடத்தி வருகிறது. (தற்போதைய எண்ணிக்கை 72). இந்தப் பள்ளிகளுக்கு அகில இந்தியச் செயலாளராக 1993 முதல் 2000வது ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். கல்வியாளர்களுக்காக உலக அளவில் 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருக்கிறார். பழங்குடி இனத்தவரின் கல்வி மற்றும் மேம்பாடு, பெண்களின் முன்னேற்றம் இவற்றிற்காக கேந்திரம் ஆற்றும் பணியில் இவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

விவேகானந்தரின் பார்வையில் பெண்மை, யோகம் ஒருமைத்துவத்தில் அமைந்த தத்துவம் ஆகியவை உட்பட பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி உட்பட பல இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன. IIT சென்னை, டெல்லி, கரக்பூர் IIM இந்தூர் IISC பெங்களூரு போன்ற புகழ்பெற்ற கல்விக்கூடங்களில் மாணவர்களிடையே உரையாற்றி இருக்கிறார். கல்வித்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு கருத்தரங்களில் இவர் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார். இவருடைய முப்பதாண்டுக் கால சமுதாயப் பணியை அங்கீகரித்து இந்த ஆண்டு மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

Posted on Leave a comment

ஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் – அரவிந்தன் நீலகண்டன்

கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்தியப் பண்பாட்டு-அரசியல் கருத்துலகங்களில் மிகவும் விவாதிக்கப்படும் ஒரு சொல் உண்டென்றால் அது ‘ஹிந்து’ என்பதுதான். அறிவுலகப் பொதுப்புத்தியில் ‘ஹிந்து’ என்கிற வார்த்தைக்கான வரலாற்று விளக்கமானது, பாரசீகர்களோ இஸ்லாமியரோ சிந்து நதிக்குக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை அழைக்கப் பயன்படுத்திய பெயர் என்பதுதான். பாரசீக மொழியில் ‘ச’ என்பது ‘ஹ’ என மாற்றம் அடையும். சிந்து நதிக்கப்பால் வாழ்ந்த மக்களை ‘ஹிந்துக்கள்’ என பாரசீகர் அழைத்தனர். இப்படித்தான் ஹிந்து என்கிற பெயர் நம்மை வந்தடைந்தது. எனவே ஹிந்து என்கிற பெயருக்கு ஆன்மிக-பண்பாட்டு உள்ளீடு எதுவும் இல்லை. அது நிலப்பரப்பு சார்ந்து உருவாக்கப்பட்ட சௌகரியமான ஒரு அடையாளம் அவ்வளவுதான்.

‘வேதங்களில், உபநிடதங்களில், பழம் இலக்கியங்களில், ஏன் புராணங்களில் கூட, ஹிந்து என்கிற இந்தப் பெயர் இருக்கிறதா? காட்டுங்கள் பார்ப்போம்’ என்பது பொதுவாக ஹிந்து அடையாளத்துடன் தம்மை இணைப்பவர்களுக்கு, அவ்வப்போது அறிவுஜீவிகளாலும் அரசியலாளர்களாலும் விடப்படும் ஒரு சவால்.

ஹிந்து என்கிற பெயரின் அடிப்படையாக இத்தகையோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது சிந்து நதிதான். ரிக் வேதத்தின் நதி ஸ்துதி சூக்தம் ஸுசோமா (நல்ல சோமம்) எனும் பெயரில் சிந்து நதியை அழைக்கிறது. இன்றைக்கும் பாகிஸ்தானில் ஓடும் சிந்துவின் ஒரு கிளை நதிக்கு ஸுசோமா எனும் பெயரின் திரிபான சோவன் என்பது வழங்கப்படுகிறது.

ஆக சிந்து நதி சோமத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சோமம் எடுக்கப்படும் தாவரம் சிந்து நதியில் கிடைப்பதாக சுஷ்ருதர் கூறுகிறார். சோம பானச் சடங்கு ரிக் வேத சமுதாயத்தின் மையச் சடங்குகளில் ஒன்று. அதற்கு அகக் குறியீடுகளும் உண்டு. தொல் சமுதாயங்களில் ஷமான்கள் (Shamans) எனப்படும் தெய்வாவேசப் பூசகர்களின் சடங்குகள் முக்கியமானவை. அவை அனைத்திலும் சோமபானம் போன்ற ஒரு பானம் அல்லது மூலிகைச் சாறு சடங்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேத சமுதாயமும் விதி விலக்கல்ல. ஆனால் இங்கு மட்டுமே இச்சடங்கு இன்றும் வாழ்கிறது.

ஐராவதம் மகாதேவன் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஆழமான புலமை கொண்டவர். ஹரப்பா இலச்சினைகளில் உள்ள சித்திர உருவங்களை ஆராய்ந்து வருபவர். அவை திராவிட மொழித்தன்மை கொண்டவை என்பது அவரது நிலைப்பாடு. இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டம் இந்தியாவின் வெளியே இருந்து வந்ததாகவும், வேதம் அவர்களின் இலக்கியம் என்றும் நம்புகிறவர்.

ஹரப்பா இலச்சினைகளில் மீண்டும் மீண்டும் காணப்படும் வடிவம் ஒற்றைக் கொம்பு விலங்கு. இது பக்கவாட்டில் காட்டப்படும் காளையா அல்லது ஒற்றைக் கொம்பு கொண்ட புராண மிருகமா, பல விலங்குகளின் கூட்டாக உருவாக்கப்பட்ட கற்பனை விலங்கினமா என்கிற கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே உள்ளன. பொதுவாக இது ஒரு புராண மிருகம் என்கிற கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது. பெரும்பாலான இலச்சினைகளில் இந்த மிருகத்தின் முன்னால் ஒரு அமைப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகிறது. இதனை ‘சடங்கு வஸ்து’ (cult object) என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு வடிகட்டி (filter) எனக் கருதுகிறார். அப்படி ஒரு வடிகட்டியை மையமாகக் கொண்ட சடங்கு வேத இலக்கியங்களில் வரும் சோமபானச் சடங்குதான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.

வேதப் பண்பாட்டின் மையமான ஒரு சடங்கு எப்படி ஹரப்பாவினரிடம் இருந்தது? அப்போது இரு பண்பாடுகளும் ஒன்றாக இருக்க முடியுமல்லவா எனும் கேள்விக்கு மகாதேவனின் பதில் ‘ஹரப்பாவினரிடமிருந்து ஆரியர்கள் இச்சடங்கை ஏற்றுக் கொண்டனர்’ என்பது. ஐராவதம் மகாதேவன் போலவே ஹரப்பா பண்பாட்டு இலச்சினைகளை திராவிட நோக்கில் ஆராய்ச்சி செய்யும் மற்றொரு அறிஞர் அஸ்கோ பர்போலா. அவரது பார்வையில் சோமபானச்சடங்கு ஆரியர்களால் இங்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் ஒற்றை விலங்கு இலச்சினையில் இருக்கும் கம்பம்/வடிகட்டி போன்ற அமைப்போ வேள்வியின் யூபஸ்தம்பமாக இருக்கலாம் என்கிறார். அதாவது வேத கால ஆரியர்கள் ஹரப்பாவினரிடமிருந்து யூபஸ்தம்பத்தைத் தமதாக சுவீகரித்துக் கொண்டனராம்.

ஆரியப் படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாடுகள் எத்தனை குழப்பமான நிலைப்பாடுகளை இந்த ஆராய்ச்சியாளர்களை எடுக்க வைக்கின்றன என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். ஹரப்பா பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மொழியியலாளர்கள் ஆரிய–திராவிட இரட்டையை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் அடிப்படைக் குழப்பம் இது.

துளிதுளியாகச் சேமிக்கப்படும் சோம திரவத்தின் துளிகள் இந்து என அழைக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் மகாதேவன். சோமன் என்பதும் இந்து என்பதும் ஒன்றாகக் கருதப்படும் நிலை மெல்ல ஏற்படுகிறது. இந்து என்பதே சோமத்துக்கான வார்த்தையாக மாறியது என மோனியர் வில்லியம்ஸின் சமஸ்கிருத அகராதியில் நாம் காண்கிறோம். பின்னர் வரும் வேத இலக்கியமான பிராமணத்தில் சந்திரனுடன் இணைத்துப் பேசப்படுகின்றன. ஆக, இந்து என்பது சோம திரவத்துடன் இணைவதையும் சோமன் என்கிற பெயரும் இந்து என்கிற பெயரும் நிலவைக் குறிப்பதையும் நாம் காண்கிறோம். சிந்து நதி ஸுசோமா என அழைக்கப்படுவதையும் காண்கிறோம்.

சிந்து–இந்து–சோமம் என்கிற தொடர்புடன் இது நின்றுவிடவில்லை. வேத காலத்துக்குப் பின்னர் பாரசீகத்தில் உருவான ஏக இறைவழிபாட்டு சமயம் ஸராதுஷ்டரால் உருவாக்கப்பட்டது. இதுவே ஆபிரகாமிய மதங்களின் முன்னோடி மதம் எனக் கூறலாம். உலக நிகழ்வுகளை இருளுக்கும் ஒளிக்கும், இறைவனுக்கும் சாத்தானுக்குமான போராட்டமாகக் கருதும் வரலாற்று மையப் பார்வையும் இம்மதத்தில்தான் முதலில் உருவானது. இங்கு இறைவனின் பெயர் அஹுரா மஸ்தா; சாத்தானின் பெயர் அஹ்ரிமான். பாரசீக மொழியின் மிகப் பழமையான நினைவுகளில் அவர்கள் ‘ஹப்த ஹிந்து’விலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. பாரசீகர்களின் ஏக இறை மதம் வேத மதத்தையும் தேவர்களின் வழிபாட்டையும், சோம பானச் சடங்கையும் எதிரிகளாகப் பார்த்தது. தேவர்களின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டு ‘ஹிந்து’ பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் அங்கு மக்கள் கலகங்கள் செய்ததையும் கிமு மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோமபானச் சடங்கின் தாக்கம் சங்க காலத் தமிழகத்தில் அரசியல் பரிமாணமும் கொண்டிருக்கிறது என ஊகிக்க இடமிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர் மிச்சேல் டனினோ தனது நூலில் (The lost river) சி.எ.ஃபேப்ரி (C L Fabri, 1935) எனும் அகழ்வாராய்ச்சியாளர் செய்தக் கண்டுபிடிப்பொன்றைப் போகிற போக்கில் குறிப்பிடுகிறார். இந்தியாவின் பழமையான நாணயங்கள், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானவை, punch-marked coins எனக் குறிப்பிடப்படுபவை. ஃபேப்ரி இந்த நாணயங்களில் விலங்குகள் காட்டப்படும் நாணயங்களில் வடிவமைப்பும் காட்சிப்படுத்தும் விதமும் ஹரப்பா இலச்சினைகளை ஒத்திருப்பதைக் கூறுகிறார். இவர் இவ்விதம் ஒப்பிடும் விலங்குகள், திமில் கொண்ட இந்தியக் காளைகள், யானைகள், புலி, முதலை, முயல் ஆகியவை. இந்த ஒப்பீட்டில் குதிரைகள் விடப்பட்டுவிட்டன. ஒருவேளை குதிரை ஹரப்பா பண்பாட்டில் இல்லாதது என்பதால் அதை ஒப்பிட வேண்டாமென ஃபேப்ரி கருதியிருப்பார்.

சுவாரசியமான விஷயமென்னவென்றால் சங்க கால நாணயங்களும் இதே வகை நாணயங்களைச் சார்ந்தவைதாம். இதே காலகட்டத்தவைதாம். இந்த நாணயங்களில் குதிரைகள் காட்டப்பட்டுள்ள விதமும் குதிரைகளின் முன்னால் ஒரு சிறு ஸ்தம்பமாக அமைக்கப்பட்டுள்ள பொருளும் ஹரப்பா பண்பாட்டின் ஒற்றை விலங்கு காட்டப்படும் விதத்தில் அமைந்துள்ளன. இந்த வடிவமைப்பும் காட்சி ஒற்றுமையும் தற்செயலானதுதானா? லோதாலைக் கண்டடைந்த அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் ஹரப்பா பண்பாட்டின் ஒற்றைக் கொம்பு விலங்கு குதிரையையும் இணைத்ததொரு கலவையான காட்சிப்பாடாக இருக்கலாம் எனக் கருதினார். இது கலவையான விலங்காக இருக்கலாம் எனும் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதில் குதிரையும் கலந்திருக்கலாம் எனும் கருத்து மேற்கத்திய இந்தியவியலாளர்களாலும், இந்தியாவில் உள்ள ஆரிய-திராவிட கோட்பாட்டாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சங்க கால நாணயங்களில் குதிரைகள் காட்டப்படும் விதம் எஸ்.ஆர்.ராவ்வின் கருதுகோளை மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது. இது சரியென்றால், ஹரப்பா பண்பாடு (சிந்து-சரஸ்வதி நாகரிகம்) தொடங்கி சங்ககாலம் வரை இந்து-சோமபான சடங்கு ஆன்மிகச் சடங்காக மட்டுமல்லாது அரசதிகாரத்துக்கான ஒரு பொது அடையாளமாகவும் கருதப்பட்டது எனக் கொள்ள இடமிருக்கிறது.

இந்து எனும் பெயர் தொடர்ந்து பரந்துபட்டதொரு ஆன்மிகப் பண்பாட்டுக்கான பெயராக மாறியது என ஊகிக்கலாம். தனித்தனியாக ராஜ்ஜியங்கள் இருந்த போதிலும் இந்து/இந்தியா எனும் பெயர் புவி-வரையறை சார்ந்து மட்டுமல்லாமல் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த ஒரு பெயராக பரிணமித்தது. ‘ஹிந்து’ எனும் பெயரை பாரசீகர்கள் ஸிந்து எனும் பெயரின் மாறுதலான உச்சரிப்பாகக் கொண்டார்கள் என்பதைக் காட்டிலும் இந்து என்கிற பெயரின் மற்றொரு மாற்றாக ஹிந்து எனும் சொல் உள்ளது என்றே தோன்றுகிறது.

இதற்கான சான்று சீனாவிலிருந்து பாரதத்துக்கு தீர்த்த யாத்திரை செய்த பௌத்த அறிஞரான ஹுவான் சுவாங்கிடமிருந்து கிடைக்கிறது. இந்த தேசப்பரப்பு பல ராஜ்ஜியங்களாக இருந்தாலும் இதற்கு அடிப்படை ஒற்றுமை உள்ளது என்கிறார். பண்டைய காலத்தில் இந்நிலப்பரப்பு ஸிந்து என்றும் ஹிந்து என்றும் அழைக்கப்பட்டது என்கிறார். ஆனால் சரியான உச்சரிப்பு ‘இந் – து’ எனக் கூறுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் வந்த இந்த சீன தீர்த்த யாத்திரிகர் சொல்கிறார்: ‘ரிஷிகளின் சான்றோர்களின் மூலமாக வெளிப்படும் ஒளி இந்தத் தேசத்தை, உலகை வழி நடத்திச் செல்லும் நிலவென இருள் வானில் பிரகாசிக்க வைக்கிறது. எனவே இந்து என்கிற பெயர் இந்த தேசத்துக்கு சாலப் பொருந்தும்.’ (Buddhist Records of the Western World, Book II.)

ஆக ‘உலகின் குருவாக இந்தியா’ என்கிற கருத்தாக்கம், ஏதோ இன்றைக்கு தேசபத்தி மிகுதியால் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பாடும் பாடல் அல்ல. மிகக் குறைந்தது 1300 ஆண்டுகளாக இக்கருத்தாக்கம் இருந்திருக்கிறது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்புகளின் போது இப்பெயர் தெளிவாக பாரதத்தின் கூட்டு ஆன்மிகப் பண்பாட்டின் பெயராக பரிணமித்தது.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தொடக்க வெளிப்பாடான மதுராவிஜயம் கங்காதேவியால் எழுதப்பட்ட சிறு காவியம். நாயக்கர்கள் எழுச்சியைத் தமிழ் வேந்தர்களுடன் (குறிப்பாக சோழ-பாண்டியருடன்) இந்நூல் இணைக்கிறது. அறத்தை அயலார் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க அரனாரின் வாள் ஏந்தி கம்ப நாயக்கர் சுல்தான்களின் மத ஆதிக்க ஆட்சியை அகற்றுவதே நூல். இங்கிருந்து தொடர்ந்த பரிணாம வளர்ச்சியாகவே விஜயநகர சாம்ராஜ்ஜியம் ஏற்பட்டது. இம்மன்னர்கள் தம்மை இந்து சாம்ராஜ்யாதிபதிகளாகவே அறிவித்துக் கொண்டனர். பின்னர் குரு தேஜ்பகதூர் தம்மை ‘இந்து தேசத்தின் பிரதிநிதியாக’ ஔரங்கசீப்பின் மதவெறிக்கு பலிதானமாக்கினார். மராட்டிய பிரதேசத்தில் வீர சிவாஜி ஹிந்தவி சுவராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார்.

ஆக ஹிந்து எனும் பெயர் வேத காலம் தொடங்கி தொடர்ந்து சரஸ்வதி நதியின் நீரோட்டமென இத்தேசத்தின் வரலாற்றில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தேசத்தின் அனைத்து சமய மரபுகளும் தத்துவ தரிசனங்களும் ஹிந்துத்துவம் எனும் இப்பெருநதி ஓட்டத்தில் அமைந்த துறைகளே.

Posted on Leave a comment

திராவிட அரசியலின் அராஜக முனை – ஓகை நடராஜன்


 2017 பிப்ரவரி 18ம் நாள் இரவு 10 மணிக்கு இக்கட்டுரை எழுதப்படுகிறது. இக்கட்டுரை வெளிவரும் நேரத்தில் இருக்கும் நிலையைப் பொருத்து இக்கட்டுரை பொருளற்றுப் போகாமல் இருக்குமா என்ற கேள்வி இருப்பதால் கட்டுரையின் தொடக்கத்திலேயே இதைச் சொல்ல வேண்டிய நிலையில் தமிழக அரசியல் இப்போது இருக்கிறது. செல்வி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் தொடங்கிய காட்சி மாற்றங்கள் காண்பவரைச் சோர்வடையச் செய்யுமளவுக்குத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்று, சட்டசபையில் தன் பெரும்பான்மையை நிரூபித்துவிட்ட அளவு வரை வந்திருக்கிறோம். ஜனநாயகத்தின் புதிய சாளரங்களாய்ச் சமூக ஊடகமும், ஊடக விரிவும், இன்ன பிறவும் விறுவிறுப்பையும் பரபரப்பையும் கூட்டிக் கொண்டே சென்ற காட்சிகள் சற்றே மிதகதியில் செல்லும் நிலை வந்திருக்கிறது.  எம்ஜியாரின் நூற்றாண்டை விமரிசையாய்க் கொண்டாடி நம் கவனத்தை ஈர்க்க வேண்டிய அதிமுக, எல்லாவற்றையும் மறந்து, அவர் தோற்றுவித்த கட்சியை அழித்தே தீருவது என்ற தீவிரத்துக்கு ஆட்பட்டிருக்கும் இந்நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் நமது இஸ்ரோ விண்கலத்தால் செலுத்தப்பட்ட சாதனை நிகழ்வு கூட உறைக்காமலும்,  பிப்ரவரி
14ம் தேதி நான்கு இராணுவத்தினரும் நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வு நிகழ்ந்ததே தமிழக மக்கள் பெரும்பாலோருக்குத் தெரியாமலும் இருக்கிறது. வேறெந்த முதன்மைச் செய்திகளும் அறியாத நிலையில், மக்கள் சற்றே ஆசுவாசப்பட ஓர் இடைவேளை வந்திருக்கிறது. ஆனால்  அடுத்த நாலரை ஆண்டுகளும் இப்படியே கழிந்துவிடுமோ என்ற அச்சமும் கூடப் பல அச்சங்களோடு அச்சமாய் நிழலாடி அந்த ஆசுவாசத்தை அபகரிக்கப் பார்க்கிறது.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தாம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக ஆளுநருக்கு மடலிட்ட போதிலிருந்து, ஆளுநர் இந்த அரசியல் சூழலின் மையத்துக்கு வருகிறார். அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் மாறி மாறி அவரைச் சந்தித்து  ஆளுநரின் அடுத்த செயலுக்காகக் காத்திருந்தது ஒரு முரண்நகை! ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் ஏன் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நக்கல்களில் ஒன்று. ஆனால் இன்று அவரில்லாமல் அணுவும் அசையாது என்ற நிலையில் கழகங்களை வைத்திருக்கிறது நமது அரசியல் அமைப்பு! மொத்த ஊடகங்களும் ஆளுநரின் முன்னால் உள்ள பலவேறு விழைவுகளை அலசி ஆராய்ந்து சட்டத்தைச் சாறாகப் பிழியாமல் சக்கையாகப் பிழிந்திருக்கின்றன. ஆளுநர் எடுக்கிற முடிவுகளையும் எடுக்காத முடிவுகளையும் அரசியல் கட்சிகள் தங்கள் சாய்வுகளுக்கு ஏற்ப விளாசித் தள்ளுகின்றன. எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகவும், அதுவே தவறாகவும் இருக்கும் நிலையைப் பல்வேறு விவாதங்கள் சாத்தியப்படுத்தி இருக்கின்றன. சட்டங்களின் அழுத்தமும், சூழலின் அழுத்தமும் , சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் அழைக்க வேண்டியதைக் கட்டியம் கூறுகின்றன. அவ்வாறு நடந்து, அதற்கு முடிவு, ஒரு ரணகளத்தின் ஊடாகவும், சபாநாயக நேர்மைக் குறைவாலும் நிகழ்ந்தும் முடிந்திருக்கிறது.

இப்போதைய நிலையில் பல கட்சிகளின் நிலைப்பாடு தமிழகத்தின் அரசியலைக் கைப்பற்றுவது எப்படி என்ற கேள்வியில் திளைத்திருக்க, அதிமுக சசிகலா பிரிவு மட்டும் தமிழகத்தை எப்படிக் கைப்பற்றுவது என்ற  சிந்தனையில் இருக்கிறது. சிந்தனை கூட இல்லை, செயல்பாட்டில் இருக்கிறது என்றே சொல்லிவிடலாம். இதைத்தான் திராவிட அரசியலின் அராஜக முனை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இது வந்து சேர்ந்த முனையா அல்லது வழிப்பாதையில் ஒரு நிலையா என்று காண முயல்வது இக்கட்டுரையின் நோக்கம்.

அதிமுக(சசிகலா பிரிவு):

ஒரு குற்றத்தொழில் கூட்டத்தின் துல்லியத்தோடும், ஆக்ரோஷத்தோடும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து செயல்பட்ட சசிகலா அணியினர், அம்முயற்சிக்கான வெற்றிக்கனியைப் பெற்றிருக்கிறார்கள். (மருத்துவமனை அனுமதிக்குப் பிறகா அல்லது நெடுங்காலமாகவா என்ற கேள்வியும் இருக்கத்தான் இருக்கிறது!) இவர்களுடைய செயல்பாட்டுக்குக் குற்றத்தொழில் கூட்டத்தைத் தவிர வேறு எந்த ஒப்புமையும் பொருந்தாத அளவுக்கு நிரூபணங்களை வலிந்து ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்படியான வெளிப்படையான வழிமுறையும் கூட அதற்கு இன்னொரு நிரூபணம்தான். சட்டத்துக்குட்பட்டு எதிர்ப்பையும் தயக்கத்தையும் காட்டிய ஆளுநரைக் கூடச் சமாளித்துக் காரியத்தை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். இம்முயற்சிகளிடையே வந்த, மிகவும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்கொண்டு செயலாற்றியது பெரிய செயல்திறமைதான். கொள்ளைக்கூட்டக் கில்லாடித்தனம்தான். ஆனால் இந்த நிகழ்வால் தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் அழிவு கணக்கிட முடியாதது. இந்த ஆட்சிக்காலத்துக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியக் கூறு அறவே இல்லை என்ற பிரக்ஞை இவர்களுக்கு ஏற்படுமானால் அது
எந்த அளவுக்கு அராஜக விஸ்வரூபம் எடுக்குமோ என்ற பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆறுதலாக, பெரும்பான்மைக்குத் தேவையானதை விட வெகுசில சட்ட மன்ற உறுப்பினர்களையே கொண்டிருப்பதும், அவர்களும் பொதுமக்கள் மற்றும் ஊடக அழுத்தங்களால் அணி மாறுவதும் தவிர்க்க முடியாது என்பதுதான். இதனால் இந்த ஆட்சி ஆறு மாதங்களுக்கு மேல் நீடிப்பது கடினம்தான்.

அதிமுக(பன்னீர்செல்வம் பிரிவு):

நிகழ்வுகளில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு ஜெயலலிதாவுக்குக் காட்டிய அதே பணிவையும் விசுவாசத்தையும் தனக்கும் தருவார் என்ற எதிர்பார்ப்பில் முதல்வராக்கப்பட்டாரா அல்லது ஊடகமும் சசிகலா பிரிவு இப்போது குற்றம் சாட்டுவதைப் போலவும் மத்திய பாஜகவால் முதல்வராக்கப்பட்டாரா என்ற புதிருடன் சில நாட்கள் முதல்வராகச் செயல்பட்டவர். ஆனால் அந்தச் சில நாட்களில் இவர் சாதித்தது ஏராளம். நீண்ட நெடுநாட்களாகச் சந்தி சிரித்துக் கொண்டிருந்த துறைமுக இணைப்புச் சாலைக்கு எடுத்த எடுப்பில் அனுமதி வழங்கியது தொடங்கி, ஜல்லிக்கட்டு மற்றும் கப்பல் எண்ணெய்க் கசிவு வரை மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்து நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டார். பன்னீர்செல்வமும் திராவிடப் பாரம்பரியத்தின் முத்திரை அடையாளமான ஊழலில் சாதாரணமானவர் அல்லர். திமுக அல்லது அதிமுகவைச் சேர்ந்த எந்த ஒரு அரசியல் பிரமுகரும் பிரமாண்டமான ஊழல்களைச் செய்தவர்கள் என்ற அடையாளத்துக்கு பன்னீர் செல்வம் எந்த விதத்திலும் விதிவிலக்கானவர் அல்லர். அவரும் அதில் திளைத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எல்லா அதிமுக பிரமுகரையும் போல ஏராளமான ஊழல் புகார்களைக் கொண்டிருந்தாலும் மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முனைந்து ஆதரிக்கும் அளவுக்குக் குறுகிய காலத்தில் செயல்பட்டது அசாதாரணச் சாதனை.  தேர்தல் வந்தால் அன்றைய தேதிகளில், ஏன் இன்றைக்கும் கூட, மக்களின் ஏகோபித்த முதல்வராக திகழக் கூடியவர் பன்னீர் செல்வம். தனது ராஜினாமா கடிதத்தை ஏற்ற பிறகும் உடனடியாகச் செயல்படாமல் நிதானமாகச் செயல்பட்டு பல வாய்ப்புகளை ஆளுநர் இவருக்கும் அளித்தாலும் இவர் வெல்ல முடியாது போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் தேசவிரோத சிந்தனை இல்லாமல், மாநில நலனைப் பெரிதாக மதித்து மிக மிக நிதானத்துடன் செயலாற்றும் வழிமுறைக்கு கழகங்களிலிருந்து வந்த ஒரே அரசியல்வாதி என்ற பெருமை எம்ஜியாருக்குப் பிறகு இவருக்கு மட்டுமே சேரும். இவர் மீண்டும் முதல்வராவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் வாய்ப்புகளும் மக்கள் விருப்பமும் ஓரளவு பிரகாசமாகவே இருக்கின்றன. இது ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பீடித்திருந்த திராவிட அரசியலின் முற்று முனையாகப் பரிமளிக்கும் சாத்தியத்தைத் தருகிறது. குகைப்பாதையின் முடிவில் தென்படும் பெருவெளிச்சமாய் இது இப்போது நிகழ்ந்தால் நலம்.

திமுக:

“அதிமுக பிழைப்புக்கு ரவுடி, ஆனால் திமுக பிறந்ததிலிருந்தே ரவுடி” என்ற விமர்சனம் முகநூலில் இப்போது பிரபலமாக இருக்கிறது. எவ்வளவு உண்மை! எப்படிப் பார்த்தாலும் உண்மை!!  ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்கிற நேர்மையான கோரிக்கையை எந்த அளவுக்கு நேர்மையின்மையோடு அராஜகமாகச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குச் செய்து மேற்கூறிய வாசகத்துக்கு நிரூபணம் செய்திருக்கிறார்கள் திமுகவினர். சபாநாயகரின் அநீதிக்கு அநீதி என்ற அளவில் திமுகவுக்குச் சிலர் ஆதரவளித்தாலும், திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தேர்தல் நேரத்தில் அவர்களுடைய அராஜக முகமே முன்வந்து நிற்கும். எது நடந்ததோ அது நன்றாக நடந்தது என்று சொல்லுமளவுக்கு திமுக தன் நீண்டநாள் அராஜகத் தேவையைத் தணித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா சசிகலாவுக்கு எதிரான வரலாற்று முதன்மை கொண்ட தீர்ப்பைப் பெற்றுத் தந்த வழக்கு முயற்சி திமுகவின் முனைப்பால் வந்ததுதான். ஆனால் அதன் அரசியல் பயன் இவர்களுக்குப் போகப்போவதில்லை. தமிழகத்துக்குத் தன்னை அறியாமல் ஒரு பெருநன்மையை இந்த வழக்கின் மூலம் செய்திருக்கிறார்கள். நன்மை என்பதைத் திமுகவினர் தன்னை அறியாமல் செய்தால்தான் உண்டு! திமுக பிதாமகர் கருணாநிதி செயல்பட முடியாத நிலையில் இருக்கின்ற இந்த வேளையில் குதிரைப் பேர முறையிலாவது இவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்களா என்பது ஐயமே. சாதுர்யத்தோடு கூடிய அராஜகத்தைச் செய்த திமுக, அதிமுகவை எளிதில் வீழ்த்திவிட முடியவில்லை. இப்போது கருணாநிதி மற்றும் அவர் வயதொத்த தலைவர்களின் சாதுர்யத்தை இழந்து நிற்கிறது. திமுக இனி ஒருபோதும் மக்கள் விரும்பி வாக்களிக்கும் நிலையில் இல்லாத கட்சியாகிப் போகலாம்.

தமிழகத் திராவிட அரசியலின் பாதை:

1967ல் மக்கள் பல காரணங்களால் காங்கிரசை ஆதரிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் திமுகவுக்கு வாக்களித்தார்கள். 1971ல் இந்திரா காங்கிரஸ் கூட்டணியால் திமுக வென்றது. திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி அப்போதிருந்து தமிழகத்தை ஊழல் பாதையில் செலுத்தியது.  1977ல் எம்ஜியாரின் அண்ணா திமுக வென்றது. தமிழக அரசியலில் திராவிட அரசியலுக்கான திருப்புமுனையாக அமைந்திருக்க வேண்டிய தருணம். திமுகவின் அராஜகக் கொள்கைகளான ஹிந்து மதக் காழ்ப்பும் பிராமண எதிர்ப்பும் இறை மறுப்பும் தேச விரோதமும் களையப்பட்ட கழகமாக எம்ஜியாரின் அண்ணா திமுக இருந்தது. ஆனால் பத்தாண்டு திமுக ஆட்சி, அரசு இயந்திரத்தில் ஊழலை ஆழமாக விதைத்துவிட்டிருந்தது. திராவிடக் கொள்கைகள் பெற்றெடுத்த அசுரக் குழந்தையாக ஊழல் தமிழகத்தில் ஆட்சியைத் தொடர்ந்தது. 1980ல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி, அராஜகப் பேராசையால் எம்ஜியார் அரசைக் கலைத்து வெற்றிக் கனவோடு போட்டி இட்டாலும் எம்ஜியாரே மீண்டும் வென்றார். 1984 ல் காங்கிரஸ் கூட்டணியோடு எம்ஜியாரே மீண்டும் வென்றார். 1987ல் எம்ஜியார் மறைவினால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களும் பி.எச்.பாண்டியனின் சபாநாயக சர்வாதிகாரங்களும் ஓராண்டு ஜனாதிபதி ஆட்சியுமாகக் கழிந்த பிறகு நடந்த 1989 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மீண்டும் முதல்வரானார். தமிழையும் தமிழர் உணர்வையும் சந்தைப் பொருளாக்கிய திமுக கழகம், விடுதலைப் புலிகள் தொடர்பினாலும் ராஜிவ் காந்தி படுகொலையாலும் 1991ல் அதல பாதாளத்தில் வீழ்ந்து 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து ஜெயலலிதாவிடம் ஆட்சியைப் பறி கொடுத்தது. ஆனால் ஜெயலலிதாவோ சசிகலாவுடன் இணைந்து இமாலய ஊழல்கள் புரிந்து, எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்த திமுகவுக்கு உயிர்ப்பிச்சை அளித்தார். 1996ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு 2001ல் அதிமுக 2006ல் திமுக, 2011ல் அதிமுக 2016ல் மீண்டும் அதிமுக என்ற அளவில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தொடர்ந்து இப்போது 2017 என்ற முனையில் நிற்கிறோம்.

காங்கிரஸ்:

கிட்டத்தட்ட வேரறுந்த நிலையில் இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணியால் உயிர் பெற்று எட்டு சட்டமன்ற உறுப்பினர்களோடு இன்றைய சட்டசபையில் முடிவுகளைப் பாதிக்கும் நிலையில் இருக்கிறது. காங்கிரஸ், திராவிடக் கட்சிகளின் ஹிந்து மதக் காழ்ப்பையும் பிராமண எதிர்ப்பையும் இறைமறுப்பையும் கொள்ளாமல் இருந்தாலும் திராவிடக் கட்சிகளின் சிறந்த வாக்கு வங்கியான சிறுபான்மையினர் ஆதரவின் ஒற்றைக் கொள்கைப் புள்ளியிலும் ஊழல் என்ற பொதுப் புள்ளியிலும் இணைந்திருக்கிறது. அதனால் காங்கிரஸைப் பற்றி சொல்வதற்கு வேறொன்றுமில்லை, குதிரைப்பேரம் காத்திருக்கிறது என்பதைத் தவிர!

பாரதிய ஜனதா கட்சி:

சட்டசபைக்குத் தொடர்பில்லாத பாஜகவை வலுக்கட்டாயமாக இந்த விஷயத்தில்  தொடர்புபடுத்திவிட்டார்கள் ஊடகத்தினர். மத்தியில் ஆளுகிற கட்சியாக இருந்தாலும் ஆளுநர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிகபட்சமாக என்னதான் செய்துவிட முடியும் என்ற உணர்வே இல்லாமல் ஊடகங்கள் பாஜகவை வம்புக்கு இழுத்தன. இதில் பாஜக இரண்டு நன்மைகளைப் பெற முடியும். இப்படி வம்புக்கு இழுத்தாலாவது தமிழகத்தின் அரசியலில் பங்கேற்க பாஜகவுக்கு ஒரு முனைப்பு ஏற்பட வேண்டும். இப்போதிருக்கும் அரசியல் வெற்றிடம் சர்வ நிச்சயமாக பாஜகவை நோக்கிச் செல்கிறது என்பதை உணர வேண்டும். பாஜகவுக்குத் தமிழகம் தேவையில்லையோ என்ற அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு, ‘தமிழகத்துக்குப் பாஜக தேவை’ என்ற உண்மையைத் தமிழகம் உரத்து அவர்களின் செவிட்டுக் காதுகளில் ஓதிக் கொண்டிருக்கிறது. 1967ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பிறகு வெற்றிடம் ஏற்படாத அளவில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இவர்கள் யாரும் இல்லாத நிலையில், மொத்த இந்தியாவும் பாஜகவை அங்கீகரித்து வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், பாஜக செயல்பட்டே ஆக வேண்டிய தருணம் என்பதை இவர்கள் எல்லோருமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

உதிரிக் கட்சிகள்;

உதரிக் கட்சிகளைப் பற்றி உதிரியாகக் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதிலும் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் இவர்களின் உண்மையான தகுதியை அவர்களுக்கான அரசியல் இடத்தைக் காண்பித்துவிட்டது.

தமிழக அரசியலில் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அரசியல் மாறாங்களாக 1967ல் நடைபெற்ற ஆட்சி மாற்றமும் எம்ஜியாரின் எழுச்சியும் ஜெயலலிதாவின் தொடர்ச்சியும் இருக்கின்றன. இவற்றையும் விட பெரியதான ஒரு திருப்புமுனை அரசியல் மாற்றத்துக்கு இப்போது தமிழகம் தயாராக இருக்கிறது. அரசியல் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பகடை. இப்போது உருளுகின்ற நேரம். எப்படி உருளப் போகிறதோ தெரியாது. ஆனால் திராவிட அரசியலின் பக்கம் உருளாது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இரு பெரும் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒரே நேரத்தில் செயல் இழந்திருக்கிறார்கள். இருவரும் சாதாரணமானவர்கள் அல்லர். அரசியல் சூழ்ச்சிகளில் கை தேர்ந்தவர்கள். வெகுமக்களைக் கவரும் பேச்சாற்றலும் வசீகரமும் கொண்டவர்கள். இப்போதிருக்கும் தலைவர்களில் எவரையும் இவர்களில் பாதி ஆற்றல் கொண்டவர்களாகக் கூடச் சொல்ல முடியாது. இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்கலாம். தேசிய அளவிலும் கூட பாரதிய ஜனதா கட்சி தவிர்த்து வேறெந்தக் கட்சியிலும் பொருட்படுத்தத் தக்கத் தலைவர்கள் இல்லாமலும், அவர்கள் உருவாகும் சூழல் அக்கட்சிகளிடம் இல்லாதிருப்பதுமான காலகட்டம் இது. இந்த உண்மை தேசிய அளவில் பெரும் தெளிவையும் தமிழக அளவில் பெரும் குழப்பத்தையும் வருங்காலமாகக் காட்சிப்படுத்துகிறது. இதே உண்மை, தேசிய அளவிளான பாஜக தலைவர்கள் தமிழக அளவில் முழு வீச்சில் ஈடுபடவும் தமிழகத்தைக் கைக்கொள்ளவும், இதை ஆகச் சிறந்த காலமாகவும் வெளிச்சப்படுத்துகிறது. இப்போது மீண்டும் அதையே சொல்ல நேர்கிறது. அரசியல் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பகடை. இப்போது உருளுகின்ற நேரம். எப்படி உருளப் போகிறதோ தெரியாது.

Posted on 1 Comment

கேமரா கனவுகள் – சுஜாதா தேசிகன்

அப்பாவின் திருமண ஆல்பத்தை நான் பார்த்ததில்லை. காசி யாத்திரை மை கன்னத்துடன் எப்படி இருந்திருப்பார் என்று யோசித்ததுண்டு.

“கல்யாணத்தின்போது ஏதோ சச்சரவு. அதனால் புகைப்படம் ஒன்று கூடக் கிடையாது” என்றார். ஒரே ஒரு புகைப்படம் பீரோவில் இருந்தது. அதில் அப்பாவின் முதுகு மட்டும் தெரிந்தது. அம்மாவை முழுசாக யாரோ மறைத்துக்கொண்டு இருந்தார்கள்.
இதனாலோ என்னவோ, அப்பாவிற்கு கேமராவில் படம் எடுப்பதும், போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும் மிகவும் விருப்பம். எங்களைத் தன் கேமராவில் படங்களாக எடுத்துத் தள்ளினார். என்னுடைய சிறுவயதுப் படங்கள் கருப்பு வெள்ளையில் எல்லாம் கொள்ளை அழகு. பொதுவாகக் குழந்தைகள் அழகாக இருக்கும்.
கடந்த நாற்பது வருடங்களாகப் பல கேமராக்கள் என்னுடன் பயணம் செய்திருக்கின்றன. நான் முதன்முதலில் உபயோகித்த கேமராவை இன்று செல்ஃபி எடுக்கும் கேமராவுடன் ஒப்பிட்டால் அது சரியான  ‘டப்பா கேமரா’ என்றுதான் சொல்ல வேண்டும். நிஜமாகவே ‘டப்பா கேமரா’தான்.

பள்ளியில் அறிவியல் பாடம் படிக்கும்போது ஊசித்துளைக் கேமரா (Pinhole Camera) செய்து, அதில் தலைகீழாக மரங்களைப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவுடன் இருந்த கேமராவும் அதேபோலத்தான் இருக்கும். அதன் பெயர் ‘Brownie Hawkeye Flash Model Camera’. 1950ல் கோடாக் நிறுவனம் இந்த கேமராவை அறிமுகம் செய்தது. விலை அதிகம் என்று அப்பா ஃபிளாஷ் வாங்கவில்லை. ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் பிளாஷ் அடித்து அந்த பல்பிலிருந்து புகை வந்த போது பிளாஷ் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்தேன்.

அந்த கேமராவில் படம் எடுக்க நிறைய பிரயத்தனம் செய்ய வேண்டும். ஃபிலிம் சுருளைப் பொருத்த திருச்சி மேலபுலிவார் சாலையில் (West Boulevard Road என்பதின் தமிழாக்கமே மேலபுலிவார் சாலை!) இருக்கும்

OR
WO

என்று பெரிதாக எழுதியிருக்கும் கடையில் கொடுத்தால், இருட்டு அறையில் ஃபிலிமை பொருத்தித் தருவார்கள்.

கேமரா பின்புறம் சின்ன துவாரத்தில் சிகப்பாக ‘1’ என்று முதல் படம் எடுக்கத் தயாராகும். மொத்தமே 12 படம்தான் எடுக்க முடியும். ஒவ்வொரு படமும் யோசித்து எடுக்கவேண்டும்.

ஒரு படம் எடுத்த பின் ஸ்லோ மோஷனில் மெதுவாக கேமரா சைடில் இருக்கும் சக்கரத்தை பின்புறம் ‘2’ என்ற எண் வரும் வரை சுற்ற வேண்டும். அதிகமாகச் சுற்றினால் ‘3’ வந்துவிடும். இது ஒன்வே டிராபிக் மாதிரி. மீண்டும் ‘2’ கொண்டு வர முடியாது.

அது மட்டும் இல்லை, படம் எடுக்க நல்ல வெயில் இருக்க வேண்டும். நல்ல வெயில் என்றால் காலை அல்லது மாலை வெயில். உச்சி வெயில் எல்லாம் சரிப்படாது.

“வாடா வெயில் போய்விடப் போகிறது” என்று எங்களை நிற்கவைத்து பின்னாடி பெட்ஷீட் கொண்டு பேக்ரவுண்ட் அமைத்து, கொஞ்சம் ரைட்… கொஞ்சம் லெப்ட்” என்று கார் பார்க்கிங் செய்வது போல அப்பா கேமராவை வயிற்றுக்குக் கீழே வைத்து அதன் தலைப்பகுதியில் இருக்கும் ‘சோடா புட்டி’ கண்ணாடியில் நாங்கள் முழுசாகத் தெரிந்த பின்னர், “கண்ணை மூடாதே… 1…2…3” என்று, மெதுவடையை மெதுவாக எண்ணெய்யில் போட்டுக் கையை எடுப்பது மாதிரி, கிளிக் செய்து மெதுவாகக் கையை எடுப்பார்.

படம் எடுத்த பின் கேமரா மேலபுலிவார் சாலையில் இருக்கும் கடையில் மீண்டும் டார்க் ரூம் செல்லும். பிரசவ வார்ட் முன் காத்திருப்பது போலக் காத்திருக்க வேண்டும். வெளியே வந்து “ஒரு வாரம் ஆகும்” என்பார்கள்.

ஒரு வாரம் சஸ்பென்ஸுக்குப் பின் 12 படத்தில் ஐந்து அல்லது ஆறு படங்கள் நன்றாக வந்திருக்கும். கூடவே நெகட்டிவ் என்ற ஒரு வஸ்துவை கவரில் கொடுப்பார். (பிலிம் சுற்றப்பட்ட குழலை நான் வாங்கிக்கொண்டு வந்து பட்டம் விடும் நூல் சுற்ற உபயோகித்தேன் என்பது கொசுறு தகவல்.)

“ஏன் மற்ற படங்கள் சரியாக வரலை? இத்தனக்கும் வெயில் கூட நல்லாதான் இருந்தது” என்ற கேள்விக்கு “ஓவர் எக்ஸ்போஸ் ரொம்ப வெயில்” என்பது பதிலாக இருக்கும்.

இந்த கேமராவை வைத்துக்கொண்டு நிறைய விளையாடியிருக்கிறேன். படம் எப்படி டெவலப் செய்கிறார்கள் என்று பார்க்க வாயில் நுழையாத hydroquinone போன்ற சில ரசாயன கலவைகளை வாங்கி, மாடி அறையை இருட்டாக்கி, சிகப்பு பல்ப் ஒளிர, கொடி ஒன்றில் கிளிப்பில் சில படங்கள் தொங்க, தமிழ் சினிமாவில் ரகசியமாக விஜயகாந்த் டெவலப் செய்வது போலச் செய்து பார்த்திருக்கிறேன். பல முறை முயன்றும் எனக்குச் சரியாக வந்ததில்லை. ஒரே ஒருமுறை கலவையில் பிலிம் கலங்கலாக, பிறகு அதிலிருந்து படம் வந்ததைப் பார்த்து ஏதோ பெரிய சாதனையாக எண்ணினேன். படிப்பு சரியாக வரவில்லை என்றால் கேமரா மேன் ஆகிவிடலாம். பலருக்கு பிலிம் பிரிண்ட் போட்டுச் சம்பாதித்துவிடலாம் என்ற திட்டம் கூட இருந்தது.

பள்ளியில் மார்ச் மாதம் வருடாந்திரத் தேர்வுக்கு முன்பு முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பிளேட் எடுத்துவிட்டு திரும்பப் போட்டுவிடும் பெரிய கேமராக்களிலும், டெல்லி அப்பளம் விற்கும் கண்காட்சிகளில் தாஜ் மஹால் ஸ்கிரீன் முன்பும் படம் எடுத்துக்கொண்டவை எல்லாம் எப்படி அழகாக வருகின்றன என்று யோசித்திருக்கிறேன்.

சில வருடங்களுக்குப் பிறகு 1985ல் ‘Hot shot 110s’ என்று பென்சில் பாக்ஸ் சைசில் கேமரா புரட்சி நடந்தது. 350 ரூபாய்க்கு வாங்கினேன். பின்புறம் திறந்து காட்ரிட்ஜ் உருவில் இருக்கும் பிலிமை நாமே பொருத்தலாம். முக்கியமான விஷயம் கலர் படம்!

படம் எடுத்தபின்தான் அடுத்த படத்துக்கு ‘சர சர’ என்று நகர்த்தலாம். இந்த கேமரா வந்த சமயம் சக்கூரா, கோனிக்கா (சக்கூரா, கோனிக்கா என்று வாய்விட்டு மூன்று நான்கு மாத்திரைகளாக இழுத்து சத்தமாகச் சொன்னால் பழைய விளம்பரம் ஞாபகத்துக்கு வரலாம்), கோடாக், ஃபூஜி என்று பல விதமான பிலிம் சுருள்கள் வந்தன. இந்து, அக்ஃபா போன்றவை காணாமல் போயின. பல இடங்களில் கலர் லேப் முளைக்கத் தொடங்கியது. லாட்டரிச் சீட்டுக் கடையில் ரஜினி படம் மாதிரி கலர் லேப்களில் வானவில் படங்களுடன் கட்சி தந்தது.

ஹாட் ஸ்பாட் கேமரா கொண்டு படம் எடுப்பது மிகச் சுலபமாக இருந்தது. படம் எடுத்த பின் ஜங்ஷனில் இருக்கும் சித்ரா கலர் லேப்பில் இருந்த பெரிய வெள்ளை ஜெராக்ஸ் மிஷின் போன்ற ஒன்று, சில மணிநேரத்தில் சொரசொரப்பான மேட் அல்லது பளபளக்கும் கிளாஸி ஃபினிஷ் என்று படங்களைத் துப்பியது. இலவசமாக பிளாஸ்டிக் ஆல்பத்துடன் படங்கள் எல்லாம் சுடச்சுட ஜில்லென்று இருக்கும்.

நிலாவைக் கையில் பிடிப்பது போல, கைமேல் நிற்பது போல என்று பல டிரிக் ஷாட் எடுத்திருக்கிறேன். இந்த கேமராவிலும் சில பிரச்சினைகள் இருந்தன. படம் நன்றாக இருக்கும், ஆனால் ஓரத்தில் இருந்தவர் அதில் இருக்க மாட்டார் . நடுவில் இருந்தவருக்குத் தலை இருக்காது. ஃபோகல் லென்த் பற்றி எதுவும் தெரியாத அந்தக் காலத்தில் எடுத்த பூ, பூச்சி எல்லாம் குத்துமதிப்பாக விழுந்தன.

சில வருடங்களில் இந்த காமரா போய் 35mm கேமரா வந்தது. வெளிநாடு சென்று வந்த என் உறவினர் ஒருவர் எங்களுக்கு வாங்கி வந்தார். ‘மேட் இன் ஜப்பான்’ – யாஷிக்கா ஆட்டோ ஃபோகஸ் கேமரா.

கேமரா முகப்பில் சிவனுக்கு இருப்பது போல மூன்று கண்களுடன் சென்சார் சமாசாரமும். உள்ளே ஃபிலிம் சுருளை தட்டையாக வைக்க வேண்டும் குறிப்புடன் கேமரா வித்தியாசமாக இருந்தது.

பிலிம் சுருளை உள்ளே வைத்து மூடியவுடன் சமத்தாக ‘கிர்’ என்ற சத்ததுடன் தானாகச் சுற்றிக்கொள்ளும்போது ஜப்பான்காரன் மீது காதலே வந்தது.

படம் எடுத்த பிறகு அடுத்த படத்துக்கு அதுவே சென்றுவிடும். ‘செல்ப் டைமர்’ என்ற ஓர் ஆச்சரியம்தான். முதல் செல்ஃபி இங்கிருந்துதான் ஆரம்பம். சின்னதாக ஒரு சிகப்பு லைட் 10 முறை கண்சிமிட்டிப் படம் எடுப்பதற்குள் ஓடிச்சென்று மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம். எடுக்கும் தேதி, நேரம் எடுக்கும் படத்திலேயும் பிரிண்ட் ஆகும் அதிசயமும் நடந்தது.

இதில் எடுத்த படங்கள் எல்லாம் மிக அருமையாக வந்தன. குறிப்பாக இயற்கைக் காட்சிகள். அதுவே ஏதோ கலர் எல்லாம் கொடுத்து வித்தை காண்பித்தது. திருச்சி மலைக்கோட்டை, காவிரி, ஸ்ரீரங்கம் என்று பல இடங்களுக்கு இதனுடன் சுற்றியிருக்கிறேன். அப்பாவுடன் ஒருமுறை மும்பைக்குச் சென்றபோது தாஜ் ஹோட்டலைப் படம் எடுத்தேன். அதை பிரிண்ட் செய்த போது ‘போஸ்ட் கார்ட் மாதிரியே இருக்கு’ என்று பலர் பாராட்டினார்கள். ஒரே பிரச்சினை இதன் பேட்டரிதான். 2CR5 என்று ஒட்டிப் பிறந்த குழந்தை மாதிரி இருக்கும். சுலபத்தில் கிடைக்காது. பர்மா பஜார் போன்ற கடைகளில் சொல்லிவைத்து வாங்கவேண்டும். விலையும் மிக அதிகம். 35mm பிலிம் இருக்கும் சின்ன பிளாஸ்டிக் டப்பா ஸ்ரீசூர்ணம் போட்டு வைத்துக்கொள்ளப் பயன்பட்டது.

வேலைக்குச் சேர்ந்து அமெரிக்கா சென்றபோது அங்கேயும் கேமரா ஆசை விடவில்லை. டாலரில் சேமித்த பணத்தைக் கொண்டு கேனன் எஸ்.எல்.ஆர். ஒன்று வாங்கினேன். எல்லோரையும் போல பக்கத்துவீட்டுச் சிகப்பு கார் முன்பு படம் எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தியா வந்த பிறகு அதை எடுத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் சென்று படங்கள் எடுத்தேன். படங்கள் சுமாராக வந்தபோது கலர் லேப் சரியில்லை, பிலிம் டூபிளிகேட் என்றேன். நன்றாக வந்தபோது எடுத்த விதம் அப்படி என்றேன்.

எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குப் படம் வரைய திட்டமிட்டபோது ஸ்ரீரங்கம் கோபுரங்களையும், தெருக்களையும் இந்த கேமராதான் கவர்ந்தது. எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டுப் பார்த்தபோது ‘அட வெயில் இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்குமே’ என்று மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று மேலும் மேலும் பல படங்களை எடுத்தேன்.

பானரோமிக் ஷாட் போன்றவை இந்த கேமராவில் இல்லை. அதனால் ஒரு சாக்பீஸில் சாலையில் கோடு போட்டு அந்தக் கோட்டில் நின்றுகொண்டு வரிசையாக மூன்று நான்கு படங்கள் எடுத்து அதை ஒன்றாகத் தைத்தேன்.

அப்போது ஸ்ரீரங்கத்துக் கதைகளில் வரும் ரங்கு கடையைப் படம்பிடித்தபோது, கடைக்கு உள்ளே இருந்தவர் என்னிடம், “உங்களைச் சுஜாதாதானே அனுப்பினார்?” என்று கேட்டார்.

“எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“இந்தக் கடையை மெனக்கெட்டு வேற யார் சார் படம் எடுக்கப் போறாங்க?” என்றார்.

டிஜிட்டல் கேமரா கொஞ்சம் விலை குறைவான பிறகு அதற்குத் தாவினேன். ஃபிலிம் இல்லாமல், எடுத்த படம் உடனேயே தெரிய அதன் வசீகரம் எல்லோரையும் போல என்னையும் கவர்ந்தது. எடுத்துவிட்டு, தேவையில்லை என்றால் அழிக்கலாம், திரும்ப எடுக்கலாம், ஒரு நொடியில் பட பட என்று பத்து படங்களை க்ளிக்கலாம், கம்யூட்டரில் ஏற்றி கலர் மாற்றலாம் என்று எல்லா ஜாலங்களையும் செய்ய முடிந்தது.

சுஜாதாவுடன் அவர் தம்பியையும் இந்த கேமராவில் படம் எடுத்தேன். ஒரு காப்பி வேண்டும் என்றார். அனுப்பினேன். எனக்கு அவர் அனுப்பிய பெரிய கடிதத்தில் நடுவே “delightful” “relive that moment” என்ற வார்த்தைகள் மறக்கமுடியாதவை.

சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் சென்றபோது, மேட்டு அழகியசிங்கர் சன்னதிக்கு அவரால் ஏற முடியாதபோது மேலே சென்று அங்கே இருக்கும் சுவர்ச் சித்திரங்களைப் படம் எடுத்து அவருக்குக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு சந்தோஷமாக விகடனிலும் எழுதினார்.

சமீபத்தில் நிலவைக் கையில் பிடிக்க நிக்கான் கேமராவை வாங்கினேன். படம் எடுத்தபோது நிலவில் இருக்கும் ஓட்டைகளும், பள்ளங்களும் தெரிந்தன. அது கேமராவா அல்லது டெலஸ்கோப்பா என்று சந்தேகமாக இருக்கிறது.

இன்று எல்லோர் கையிலும் பல ‘மெகா பிக்சல்’ கேமரா, மொபைல் ரூபத்தில் வந்துவிட்டது. பார்த்தவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். பெருமாள் புறப்பாட்டில் பெருமாளுக்கு முன்னாடி திவ்யப்பிரபந்தமும், அதற்கு முன்பாக மொபைல் கேமரா இல்லாமல் இன்று புறப்பாடு இல்லை.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் எடுத்ததை லைவாகப் பார்க்க முடிகிறது. எந்த நிகழ்வாக இருந்தாலும் நான் நீ என்று டிவிட்டரிலும், முகநூலிலும் திகட்ட திகட்டப் போட்டுவிடுகிறார்கள். நம்மை நாமே செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். பல படங்களை எடுத்தாலும் அன்று நானே எடுத்துக் கலவையில் கழுவியபோது தெரிந்த படம்தான் இன்னும் நினைவில் இருக்கிறது. 
Posted on Leave a comment

வலம் ஜூன் 2017 இதழ் உள்ளடக்கம்

மோதியின் இலங்கைப் பயணம் – அரவிந்தன் நீலகண்டன்

இலங்கைத் தேநீர் இன்று சர்வதேச புகழ் பெற்ற ஒரு பெயராக மாறியிருப்பதன் பின்னால் இந்த அப்பாவித் தமிழர்களின் தலைமுறைகளின் பேருழைப்பு பேசப்படுவதே இல்லை. காலனிய வரலாற்றின் இருட்டடிப்புப் பக்கங்களில் மறைந்துவிட்டவர்கள் இப்பாவப்பட்ட ஜன்மங்கள். அவர்களுக்கான குரலாக குஜராத் ரயில்வே நிலையத்தில் சிறுவனாக தேநீர் விற்ற பாரதப் பிரதமர் பேசியிருக்கிறார்: “உலக மக்கள் அனைவருக்கும் இச்செழிப்பான பிரதேசத்திலிருந்து உருவாகி வரும் சிலோன் தேநீர் குறித்துத் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயமென்னவென்றால் உங்கள் வியர்வையும் நீங்கள் பட்ட பாடுகளுமே இலங்கைத் தேநீரை உலகமெங்கும் விரும்பி அருந்தும் தரமுள்ள தேநீராக மாற்றியிருக்கிறது.” இவ்வார்த்தைகள் மூலமாக பாரதப் பிரதமர் இலங்கைத் தேநீர் சர்வதேச சமுதாயத்தினால் விரும்பப்படும் தேநீராக திகழ்வதன் பின்னால் தமிழர்களின் வியர்வையும் கண்ணீரும் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

சத்தீஸ்கர் தாக்குதல் – பி.ஆர்.ஹரன்

இந்தியாவை உடைக்க விரும்பும் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அந்நாடுகளின் கிறிஸ்தவ சபைகள்), மத்தியக் கிழக்கு நாடுகள் (அந்நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள்), அவர்கள் மூலமாக இந்தியாவில் இயங்கும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் (NGOs), ஆகியவை இந்தக் கம்யூனிஸக் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நிதியுதவியும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து வருகின்றன.

இந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி –  லக்ஷ்மணப் பெருமாள்

உலக மயமாதலுக்கு முன்பு அதாவது சோஷலிச பொருளாதாரக் காலகட்டத்தில் இந்தியாவில் மின் நிறுவுத் திறன் ஒரு விஷயத்தைப் புரியவைக்கிறது. அரசே அனைத்துத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரை உட்படுத்தும் எந்தவொரு கொள்கை முடிவும் மக்களுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்பட்டது. 

முடி-மனிதன்-மிருகம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்

வைக்கோல் படுக்கை, சுடுநீர், நண்பரின் உதவி, சில சிசர்ஸ், ஸ்கால்பெல், ஃபோர்செப்ஸ், நிறைய எதிர்பார்ப்பு, கொஞ்சம் தைரியம் இவற்றுடன் ஹெரியாட் அறுவை சிகிச்சை செய்கிறார். முடிப் பந்தை மாண்டியின் இரைப்பையில் இருந்து வெளியே எடுத்து, கன்றினைக் காப்பாற்றுகிறார்! முதல்நாள் பேதியாவதற்குக் கொடுத்த எண்ணெய், ஜுர மருந்து, வயிற்றின் அமிலங்கள் எல்லாம் சேர்ந்து, பளபளப்பாக முடிப் பந்து, ஹெரியாட்டைப் பார்த்து கண் சிமிட்டுவதைப் போலிருந்தது! மயக்கம் தெளிந்த மாண்டி, அன்புடன் ஹெரியாட்டைப் பார்த்துத் துள்ளிக் குதித்தது.

சித்ர சூத்ர (விஷ்ணு தர்மோத்தர புராணம் பகுதி 3) – அரவக்கோன்

உலகில் எழுதப்பட்ட முதல் ஓவிய நூல் என்று சிறப்பிக்கப்படும் சித்ர சூத்ர என்னும் இந்நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் ஸ்டெல்லா க்ராம்ரிஷ் (STELLA KRAMRISCH) என்னும் அமெரிக்கப் பெண்மணியால் மொழிபெயர்த்து எழுதப்பட்டு 1928ம் ஆண்டில் 2ம் பதிப்புக் கண்டது. பின்னர் 1960களில் சென்னை அருங்காட்சியக்கூடப் பொறுப்பாளராக இருந்த சி.சிவராமமூர்த்தி (Clambur.Sivaramamurthi) ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணு தர்மோத்தர’ (Chitrasutra of the Vishnudharmottara – 1978) என்னும் தலைப்பில் மூல நூலிலிருந்து தேவநாகரி லிபியில், ஸ்லோகங்களுக்கான ஆங்கில விளக்கவுரைகளுடன் ஆங்கிலத்தில் நூல் ஒன்றைக் கொணர்ந்தார்.

2001ல் IGNCA – Mothilaal Banarasidhas இணைந்து ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணுதர்மோத்தர புராண’ (Chitrasutra of the Vishnudharmottara Purana) என்னும் நூலை ஆங்கிலத்தில் தேவநாகரி லிபி ஸ்லோகங்களுடனும் விரிவுரைகளுடனும் வெளியிட்டது. இதன் ஆசிரியை பருல் தவே முகர்ஜி ஆவார். இந்தக் கட்டுரை ஸ்டெல்லா க்ராம்ரிஷ் எழுதிய நூலைப் பின்புலனாகக் கொண்டது.
செவ்வியல் ஓவியம் (நுண்கலைகள்) மட்டுமே இந்தியக் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்று எண்ணிவிடக்கூடாது. அதற்கு இணையாகக் கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பும் உண்டு.

டயட் – ஹாலாஸ்யன்

 1960கள் முதலே இந்த மெடிட்டரேனியன் டயட் மேற்குலகில் பிரபலம். ஆலிவ் ஆயில் பேரல் பேரலாகக் கொள்முதல் செய்யப்பட்டது. உடற்பருமன், இருதய நோய் போன்றவை வந்த, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரிக்கப்பட்ட ஒரு சமூகம் இந்த டயட்டிற்கு அடிமையானது.
ஆண்டாள், திருப்பாவையில் முழங்கை வரை நெய் ஒழுகுகிற அக்கார அடிசிலை “கூடி இருந்து குளிர்ந்தேலொர் எம்பாவாய்” என்றுதான் சொல்கிறாள்.
ஊர்த் திருவிழாவுக்கு ஒருவர் வீட்டிலும் அடுப்பெரியாமல் பெரும் சமையலாய்ச் செய்து ஒன்றாய் உண்கிற மரபு நமக்கு இருக்கிறது.

சுழல் (சிறுகதை) – ராமசந்திரன் உஷா

எனக்குத் தேவையிருக்கும்பொழுது, என்னால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் கடவுளை நம்பியிருக்கிறேன். இப்பொழுது பிரச்சினைகள் வந்தாலும் பணமும் அந்தஸ்தும் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையைத் தந்துள்ளதா என்ன? ஆக, நாத்திகம் என்பது இவ்வளவுதானே? 

வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி – அரவிந்த் சுவாமிநாதன்

இலக்கிய விமர்சகர் க.நா.சு, தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ என்ற கட்டுரையில், “அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்” என்று நினைவுகூர்கிறார்.
இந்நூலில் நகைப்பிற்கிடமாகவும் சில விஷயங்கள் உள்ளன. சான்றாக, “தென்கலை நாமம் சனி பகவானைக் குறிக்கிறது. வடகலை நாமம் வியாழன் என்னும் தேவேந்திரனைக் குறிக்கிறது. மாத்வ பிராமணர்கள் நெற்றில் கரிக்கோடிட்டுக் கொள்வது ராகுவைக் குறிக்கிறது. ‘ராகுகாலம்’ என்பதை நாம் பழக்கத்தில் ‘ராவு காலம்’ என்றே சொல்கிறோம். ‘ராவு’ என்ற பட்டப்பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்வது இதற்கு இன்னொரு சான்றாகும்” என்று அவர் குறித்திருப்பதைச் சொல்லலாம்.

கொல்கத்தா: காளியின் நகரம் – ஆர்.வி.எஸ்

சன்னிதியை நெருங்கிவிட்டோம். என் முன்னால் சென்ற நண்பர் “ம்… திரும்பிப் பாருங்க…” என்றார். சன்னிதி உள்ளே பார்வை நுழைந்ததும் மேனி சிலிர்த்தது.
யோகானந்தா தியானத்தில் மூழ்கிவிடுகிறார். கோயில் நடை சார்த்தும் வேளை வந்துவிட்டது. சதீஷ் குதியாய்க் குதிக்கிறார். நிஷ்டையில் யோகானந்தா. கடைசியில் கண் விழித்துப் பார்த்த போது சதீஷ் எதிரில் நின்று “கோயிலும் சார்த்திவிட்டார்கள். என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டுவிட்டாய்… உன்னோடு கோயிலுக்கு வந்ததன் பலன்” என்று எகிறினார். அப்போது அக்கோயிலின் பாண்டா பொறுமையாக பரமஹம்ஸ யோகானந்தரிடம் வந்தார். “உங்களிடம் ஒரு தீட்சண்யம் இருக்கிறது. உங்களைப் பார்த்தவுடனேயே நான் உங்கள் குடும்பத்திற்கான உணவை தனியே எடுத்து வைத்திருக்கிறேன். இது அன்னைக் காளியின் அனுக்ரஹம்” என்றார். சத்தமிட்ட சதீஷின் முகம் வெளிறியது. அவர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.

பாகுபலி: ஓர் இந்திய அனுபவம் – ஓகை நடராஜன்

இது ஓர் இந்துப் படம் என்பதாகக் குற்றச்சாட்டாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் படத்தின் இந்துத் தன்மை மறைக்கப்படுகிற சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால் அது தேவையே இல்லை. இது உரக்கச் சொல்லவேண்டிய ஒரு விஷயம். இந்தப் படம் எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பை வெற்றிப் படம் எடுக்க விரும்புபவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. பிரம்மாண்டத் திரைப்படம் எடுக்க இயலும், இந்தியாவின், அதுவும் தென்னிந்தியாவின் வல்லமையை மட்டுமல்ல; தென்னிந்தியாவின் பண்டைக் கலாசாரம் சமரசமில்லாத கற்பனையில் சொல்லப்படுமானால் அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் செல்லுபடியாகிற சரக்கு என்பதையும் இப்படம் சொல்லிக் கொடுக்கிறது. இப்படம் பார்க்கும்போது உலகம் இந்திய நாட்டின் ஒரு சித்தரிப்பைத் தூலமாகப் பார்க்கிறது. இந்துவின் பொலிவான ஒரு தோற்றம் இவ்வாறு சரியாகக் காட்டப்படும்போது அத்தோற்றத்தின் ஒரு கசிவு உலகில் ஊடுருவும் வல்லமை தெரிகிறது. 

இத்துடன் ஆர்.ஜியின் கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது.

இந்த இதழை மட்டும் ஆன்லைனில் வாசிக்க: கிண்டில் அமேசான் | நம்மபுக்ஸ்

வலம் அச்சு இதழுக்கு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

வலம் இ-இதழுக்கு சந்தா செலுத்த:  http://nammabooks.com/valam-one-year-subscription