Posted on Leave a comment

சித்ர சூத்ர (விஷ்ணு தர்மோத்தர புராணம் பகுதி 3) – அரவக்கோன்

உலகில் எழுதப்பட்ட முதல் ஓவிய நூல் என்று சிறப்பிக்கப்படும் சித்ர சூத்ர என்னும் இந்நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் ஸ்டெல்லா க்ராம்ரிஷ் (STELLA KRAMRISCH) என்னும் அமெரிக்கப் பெண்மணியால் மொழிபெயர்த்து எழுதப்பட்டு 1928ம் ஆண்டில் 2ம் பதிப்புக் கண்டது. பின்னர் 1960களில் சென்னை அருங்காட்சியக்கூடப் பொறுப்பாளராக இருந்த சி.சிவராமமூர்த்தி (Clambur.Sivaramamurthi) ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணு தர்மோத்தர’ (Chitrasutra of the Vishnudharmottara – 1978) என்னும் தலைப்பில் மூல நூலிலிருந்து தேவநாகரி லிபியில், ஸ்லோகங்களுக்கான ஆங்கில விளக்கவுரைகளுடன் ஆங்கிலத்தில் நூல் ஒன்றைக் கொணர்ந்தார்.

2001ல் IGNCA – Mothilaal Banarasidhas இணைந்து ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணுதர்மோத்தர புராண’ (Chitrasutra of the Vishnudharmottara Purana) என்னும் நூலை ஆங்கிலத்தில் தேவநாகரி லிபி ஸ்லோகங்களுடனும் விரிவுரைகளுடனும் வெளியிட்டது. இதன் ஆசிரியை பருல் தவே முகர்ஜி ஆவார். இந்தக் கட்டுரை ஸ்டெல்லா க்ராம்ரிஷ் எழுதிய நூலைப் பின்புலனாகக் கொண்டது.

*****

இந்தியத் துணைக்கண்டத்தின் கலைகள் (ஓவியம், சிற்பம், இசை, நடனம் போன்றவை) ஒரு நீண்ட, சிறப்புமிக்க வரலாற்றைக் கொண்டவை. பண்டைக் காலப் புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் மூலமாக ஓவியம் ஒரு செழிப்பான கலை வெளிப்பாடாக விளங்கி வந்தது தெரியவந்துள்ளது. அல்லாமலும் காலங்களைக் கடந்து, ஏறுமாறான தட்பவெட்பங்களைத் தாங்கி, தெரிந்தோ தெரியாமலோ மக்களால் இழைக்கப்பட்ட அழிப்பு வேலைகளையும் தாண்டி எஞ்சியிருக்கும் கலைச் செல்வம் இன்று நம்மிடையே உள்ளது.

இந்தியக் கலையின் தனிச் சிறப்பென்று அதன் நிலைத்த தன்மையையும் ஒன்றிணைந்த வெளிப்பாட்டையும் கூறலாம். நிலம் சார்ந்த வேறுபாடுகளையும், கலைஞர்களின் குழுக்களில் பின்பற்றப்பட்ட வேறுபட்ட பல்வேறு அணுகுமுறைகளையும் தாண்டி எதிர்மறை நில தட்பவெட்பங்கள், பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவை பொது ஒத்தமதிப்பீட்டுத் தன்மையைக் கொண்டிருந்தன. அவ்வித வெளிப்பாடுகள் ஒரு ஒருங்கிணைந்த கொள்கையால் ஈர்க்கப்பட்டிருந்தன. நிலப்பிரிவை ஒட்டிய தனித்த அடையாளங்கள் ஒட்டுமொத்தமான இந்தியக் கலை வளர்ச்சிக்கு வித்திட்டன. ஒன்றையொன்று பாதித்த அவை இரண்டின் வளர்ச்சிக்கும் உரமாகிப் பன்முகத்தன்மை கூடிய சிறப்பான முன்னேற்றத்திற்கும் காரணமாயின.

செவ்வியல் ஓவியம் (நுண்கலைகள்) மட்டுமே இந்தியக் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்று எண்ணிவிடக்கூடாது. அதற்கு இணையாகக் கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பும் உண்டு. அந்தக் காலத்தில் இவற்றை வழி நடத்த அமைப்புகளேதும் இருக்கவில்லை. எவருடைய தலைமை சார்ந்தும் அவை இயங்கவில்லை. அந்த எளிய கலைஞர்களின் படைப்புகள் மூலமாகவே காலத்தின் மரபுகள் காப்பாற்றப்பட்டன. தங்களது வாழ்க்கையை ஒட்டிய நிலத்தின் சூழ்நிலையில் பெற்ற எழுச்சியுடன் கிட்டிய வண்ணங்களைக் கொண்டு அக்கலைஞர்கள் ஓவியங்களைப் படைத்தனர். பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் கலைக்கு அவை ஏற்றம் தருபவையாக அமைந்தன. வாழ்க்கையை ஒட்டிய பார்வையும் உலகினை உணர்ந்த விதமும் இந்தியக் கலைக்கு மற்றொரு பரிமாணத்தை அளித்த குறிப்பிடத்தக்க காரணிகளாகும். அக்கலையின் தரக்குறியீடு என்பது உள்நோக்கிய பார்வையும், அமைதியான களங்கமில்லாத மனமும்தான். பழைய ஓவியங்கள், அவை படைக்கப்பட்ட காலத்தின் உண்மைப் பதிவுகள். அந்த மனிதர்களின் வேட்கை மிகுந்த வெளிப்பாடு, காலத் தொடர்ச்சியில் சுருக்கமில்லாத இணைப்பாக, ஒருங்கிணைந்த ஒரு திரையாகவே விரிகிறது. மானுடர், விலங்குகள், தாவரங்கள் என்று அனைத்தின் ஒத்த வடிவமாகவும் ஓவியனால் உலகைக் காணமுடிந்தது. அதன் முடிவான புள்ளி, அனைத்திற்கும் மேலான ஒன்றைத் (படைப்பை) தெளிவாகக் காட்டுவதுதான்.

இந்தியக் கலைகள் அனைத்தும் சமயம் சார்ந்தது அல்ல. அவற்றுள் சில மேலோட்டமாக சமயம் சார்ந்ததாக இருக்கின்றன என்றாலும், அவை சமயம் சார்ந்தவை என்று கலைப் பண்டிதர்களால் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த நாளையக் கலைகள் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய உருவாக்கம் கொண்டவையாக அமைந்ததும் இதற்கு ஒரு காரணமாகலாம்.

சமயம் சார்ந்த கலையும் பிரிவு சாராதுதான். அவை சார்ந்த படைப்புகளில் காணப்படும் உருவத்தின் அமைப்பு அந்தப்படைப்பின் காலத்தை ஒட்டியதாகவே இருந்தது. அதை இந்திய கலைப் படைப்பாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர பௌத்தம், ஜைனம், சைவம், வைஷ்ணவம் என்று சமயம் சார்ந்த படைப்பாகப் பிரிக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக விஷ்ணு, புத்தர் இருவரது உருவ அமைப்பும் அந்தப் படைப்பின் காலத்தை இணைத்தே உருவானது. கலைப் படைப்பிற்கும் சமயத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை.

சமயம் சார்ந்த கலைப் படைப்புகள் தம்முள் ஒரு ஒற்றுமையைக் கொண்டிருந்தன. மானுட உடல் மற்றும் நிலையற்ற உணர்வுகளை அவை உள்ள விதமாகவே படைப்பதிலிருந்து விலகியே செயற்பட்டன. எடுத்துக்காட்டாக இந்து, பௌத்தம் ஜைனம் ஆகிய சமயங்கள் சார்ந்த படைப்புக்களில் சில குறியீடுகள் பொதுவானவையாக இருந்தன. ஒரு சிறு பட்டியலைக் காண்போம்.

1. சக்கரம் (உருளை):- எப்போதும் வாழ்க்கையின் (உலகம்/உயிர்கள்) நிகழும் சுழற்சியைச் சார்ந்ததாகவே இருந்தது.

2. தாமரை:- நிலத்திலிருந்து தோன்றும் உயிர்த்துடிப்பாகவே இடம் பெற்றது.

3. அனந்தன் (பாம்பு):- அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் ஆற்றலான அது தோற்றம், வளர்ச்சி சார்ந்த இயக்கமான நீரை உருவகப்படுத்தியது.

4. ஸ்வஸ்திக சின்னம்:- உயிர்களின் தோற்றம், இயக்கம், நிலைத்தல் சார்ந்ததன் தொகுப்பாகவே அமைந்தது.

5. பூரண கலசம் (நீர் வழியும் குடம்):- உயிர்களின் பிறப்பையும் வளத்தையும் காட்டியது.

6. கல்பலதா/கல்பவிருட்சம்:- மானுடனின் இச்சைகளைக் கொடுப்பதானவை.

7. மான்:- வனப்பையும் ஆசையையும் காட்டுவது.

அவ்விதமாகவே, படைக்கப்பட்ட அந்த உருவங்களில் (மதம் சார்ந்தவை) அமைந்த முத்திரைகள் (கை, கால், உடல் சார்ந்தவை) நிற்கும், அமர்ந்திருக்கும் தோற்றம் போன்றவற்றிலும் ஒத்த தன்மையைக் காணமுடியும். இந்த முத்திரைகள் வழிபடுவோருக்கு வாழ்க்கையின் ஞானம், வலிமை, பரிவு, இரக்கம், போன்ற ஒழுக்கங்களைப் பற்றிய விளக்கங்களாக அமைந்தன.

இந்தியக் கலைப்படைப்புகள் கலைஞனின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்பட்ட அனுபவத்தைப் பிரதிபலிப்பதாகவே இடம்பெற்றன. இதனால் உருவங்களில் இயல்பான தோற்றம் இல்லாமல் போனது. அவற்றில் உணர்ச்சி மேலிட்டு உண்மையான உடற்கூறு இரண்டாம் இடம் பெற்றது.

கவனத்துக்குரிய மற்றொன்று, சிலைகளிலும், ஓவியங்களிலும் அரசர், செல்வந்தர், புரவலர், போன்றவர்களின் உண்மையான மானுட உருவங்கள் இடம் பெறவில்லை என்பது. அவர்களின் தோற்றம் ஒரு குறியீடாகவே உருவாக்கம் பெற்றது. படைப்புகள் படைத்தவனின் பெயர் அடையாளம் ஏதும் இல்லாதவையாகவே உருவாயின. அது ஒருக்கால் தனிமனிதனின் படைப்பை உலகளாவியதாக்கியதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால், கலை ஆய்வாளர்களைத் தொடர்ந்து அது பெரும் குழப்பத்திலேயே ஆழ்த்தியது.

வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்தில் உள்ள பதினெட்டுப் புராணங்களுள் விஷ்ணுபுராணமும் ஒன்று. விஷ்ணுதர்மோத்தர புராணத்தை அதன் இணைப்புப் பகுதி என்றும் கொள்ளலாம். மூன்று பகுதிகளைக்கொண்ட இந்நூலில் முதற் பகுதியில் 269 அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் 183 அத்தியாயங்களும் மூன்றாம் பகுதியில் 118 அத்தியாயங்களும் உள்ளன.

மூன்றாம் பகுதியில் முதல் அத்தியாயத்தில் கலைகள் ஒன்றையொன்று சார்ந்தவை என்பதும், உருவம் படைத்தல் பற்றின செய்திகளும் உள்ளன. மற்ற அத்தியாயங்களில் உள்ளவை பின்வருமாறு:-

அத்தியாயங்கள் 2-17 – அகராதி தொகுக்கும் கலை, இலக்கணம், பதின்மான அளவை முறை (மெட்ரிக் அளவை), பேச்சுக்கலை (அவையில் கூடியிருப் போர்முன்)

அத்தியாயங்கள் 18-19 குரலிசை, கருவியிசை

அத்தியாயங்கள் 20-34 நாட்டியம், நாடகம்-எழுதுதல்

அத்தியாயங்கள் 35-43 ஓவியத்தில் உத்திகள், கிளைகள் போன்றவை

அத்தியாயங்கள் 44-85 ஓவியத்தில் உருவத்தைத் தோற்றப்படுத்துதல் (ப்ரதிமா லக்ஷணா)

அத்தியாயங்கள் 86-93 ஆலயம், அதுசார்ந்த கட்டடக்கலை

அத்தியாயங்கள் 94-108 தெய்வங்களைக் கட்டுமான அமைப்பினுள் (யந்திர வடிவில்) நிலை நிறுத்தல் (ஆவாஹனம்)

அத்தியாயங்கள் 109-118 ஹிந்துமதத்தில் பின்பற்றப்படவேண்டிய வழிபாட்டு முறைகள் (Rites and Rituals)

இவையல்லாமல் விண்வெளி ஆய்வு, பிரபஞ்சத்தின் தோற்றம் சார்ந்த ஆய்வு, புவியியல், கோளாய்வு, ஆருடம், காலப்பகுப்பு, மானுடர்க்குத் துன்பம் தரும் கோள்களின் சீற்றத்தைத் தணிக்கும் வழிகள், மானுடப் பரம்பரை பற்றின ஆய்வு (அரசர், ரிஷிகள்), உலகியல் வழக்கமும் நடத்தையும், தவம், வைஷ்ணவனின் ஒழுக்கம், சட்டம், அரசியல், போர்க்கள உத்திகள், மனிதர், விலங்குகளுக்கான மருத்துவம், சமயற்கலை போன்றவை முதல் மற்றும் இரண்டாம் பகுதியில் உள்ளன.

இதன் மூன்றாம் பகுதி ‘சித்ர சூத்ர’ என்றும் அழைக்கப்படுகிறது. இது தொன்மையான இந்தியவழி ஓவியம் சார்ந்த பிரிவுகள்/கிளைகள், வண்ணம் தீட்டுதல், ஓவியப்பரப்பை கட்டுறுத்தல், உருவாக்க வகைகள் போன்றவற்றைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் பேசுகிறது. இந்நூல் (ஹிந்து) மதம் சார்ந்த விவரங்களை மட்டுமல்லாது அதிலிருந்து விலகிய விதமாகப் படைப்பது பற்றியும் தெளிவாகச் சொல்கிறது. காணும் காட்சியை மனதில் உள்வாங்கி மீண்டும் உருவகப்படுத்துவதிலும், வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் ஒரு ஓவியனுக்கும் காண்போருக்கும் தரும் மகிழ்ச்சியையும் சிறப்பிக்கிறது. மதம் சார்ந்த கலைப் படைப்பு என்பதில் மதம்-கலை இரண்டுக்கும் உள்ள எல்லைகளைப் பற்றியும் எச்சரிக்கிறது.

செய்யுள் வடிவில் அமைந்துள்ள இதில் ஒருவர் விளக்கம் கேட்பதும் மற்றவர் விளக்கமளிப்பதுமாக இருவரின் உரையாடல் வடிவில் உள்ளது. இதில் கேட்பவர் கிருஷ்ணனின் பெயரனான அரசர் வஜ்ரா, விளக்குபவர் ரிஷி மார்க்கண்டேயர். மொத்தம் 53 அத்தியாயங்களைக் கொண்ட இந்தநூலில் மூலநூலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட, ஓவியம் பற்றி விவரிக்கும் செய்யுட்கள் உள்ளன.

சித்ர சூத்ர என்னும் நூலில் ஓவியக் கலைஞர்களுக்கான தெளிவான விவரங்கள் கூடிய ஓவிய இலக்கணம் காணப்படுகிறது. ஓவியம் படைப்பதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் கலைக்கான நுண்ணிய வழிகள் விவரிக்கப்படுகின்றன. ஓவியம் தீட்டும் சுவர்ப்பரப்பை எவ்வாறு அமைத்துக் கொள்வது, வண்ணங்களை உண்டாக்கும் வழிமுறைகள், ஓவியத்திற்கான வண்ணங்களின் தேர்வு, தேவைக்கேற்ப அவற்றின் அடர்த்தியும் வெளிர் தன்மையும் காட்டும் விதம், ஆண் பெண் உருவ அமைப்புகளுக்கு ஏற்றவிதமான உருவங்களின் தோற்ற வேறுபாடு, சமுதாயப் பிரிவுக்கு ஏற்றதான உடைகள், திறந்தமனம் கொண்டவிதமான தாவரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றைக் குறியீடாக்கும் உத்தி ஆகியவை சார்ந்த வழிமுறைகளைக் கூறுகிறது அது.

அஜந்தா ஓவியங்களின் தனித்தன்மை என்பது அதில் காணக்கிடைக்கும் உருவக் கோடுகளில் உள்ள தடையற்ற உறுதியான பயணம். அதன் மூலம் கட்டமைக்கப்பட்ட உருவங்கள் அவற்றின் உளுணர்வுகளை வெளிக் கொணர்ந்தன. உருவத்தில் முப்பரிமாணத் தோற்றம் கிடைக்கும் விதமான வண்ணப்பூச்சு ஒன்று. மற்றது, ஓவியத்தின் தேவைக்கேற்றவிதமாக ஒத்த வண்ணங்களையோ (சிவப்பு-மஞ்சள்) எதிரெதிர் வண்ணங்களையோ (சிவப்பு-பச்சை) தேர்வு செய்தல்.

இவையெல்லாம் சித்ர சூத்ரவில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. கலை வரலாற்று ஆய்வாளர், புகைப்படக் கலைஞர், குறும்பட இயக்குநர், பினய் கே.பெல் (Benoy K. Behl) அஜந்தா ஓவியம் பற்றிய பல கட்டுரைகளை எழுதியவர். சித்ரசூத்ர நூலில் சுவர்ப்பரப்பை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் வழி முறைகளுக்கு ஏற்ப அஜந்தா குகைஓவியங்கள் அமைந்துள்ளதைக் குறிப்பிடுகிறார்.

“அஜந்தா குகை ஓவியங்கள் பலரும் நினைப்பது போல ஃபெரெஸ்கோ வகையானது அல்ல. சுவரில் பூசிய சுண்ணாம்பின் ஈரப்பதம் இருக்கும் போதே தீட்டிய ஓவியங்கள் அல்ல அவை. நன்கு உலர்ந்த சுண்ணாம்பு பூச்சின் மேல் இயற்கைப் பசை கலந்த வண்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் அவை.”

அவர் பாறையை ஓவியத்திற்கு ஏற்றவிதமான பூச்சுவேலை செய்யும் முறை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். “இரண்டு அடுக்குப் பூச்சுக்கள் கொண்டது அது. முதலாவது சிறுகற்கள், தாவர இழைநார், புல் போன்றவை ஊடிய கலவை கொண்டு பூசுவது. மற்றது பொடிமணல், பாறைத் தூள் குழைக்கப்பட்ட தாவர இழை கூடிய கலவை. இதற்கு மேலே சுண்ணாம்புக் கலவையை சீராகச் சுவரில் பூசுவது. அது நன்கு உலர்ந்தபின் ஓவியம் தீட்டுவது.”

தன்னைச் சுற்றி இருக்கும் மலைப் பகுதியில் கிட்டிய பொருட்களைக் கொண்டு வண்ணங்களை ஓவியன் உண்டாக்கிக் கொண்டான். சிவப்புக்கும் மஞ்சளுக்கும் மஞ்சள் மண்ணையும், கருப்புக்கு எண்ணெய் விளக்கின் புகை படியலையும் வெள்ளைக்குச் சுண்ணாம்பையும் பயன்படுத்தினான். நீலம் மட்டிலும் ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு நீலக்கல்லின் பொடியால் பெறப்பட்டது. இவற்றின் பல்வேறு கூட்டுக்கலவைகளில் உண்டான வண்ணங்களில் கொழுப்புப் பசையைக் கலந்து சுவரில் ஓவியம் தீட்டினான்.

“சுவரை ஓவியத்திற்கு ஏற்றவிதமாய் அமைக்கும் அந்த முறை உறுதியானதாகவே இருந்துள்ளது. காலத்தையும் அதன் தட்பவெப்பங்களையும் தாங்கி வண்ணங்கள் உதிராமலே இருந்தன. அவை காணாமல் போனதிற்கான காரணங்கள் சுவர் அமைத்த விதமோ, ஓவியம் தீட்டிய வண்ணங்களின் தரக் குறைவோ அல்ல. ஓவியங்களுக்காக அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாறைப் பகுதியும் அதன் அமைப்பு முறையும், அனைத்திற்கும் மேலாக முட்டாள்தனமான மக்களின் நாசவேலைகளும்தான் காரணம்” என்று A.A.S.A.I (Academy of Archeology and sciences of Ancient India) குறிப்பிடுகிறது.

விஷ்ணுதர்மோத்ர புராணம் பல இடங்களில் கூறியது கூறல், பழைய விதிமுறைகளை ஒத்துச் செயற்படுவது ஆகிய இரண்டையும் மீண்டும் மீண்டும் கூறுவதை ஒப்புக் கொள்கிறது. பழைய நூல்கள் நம்மிடம் அன்று (இந்தநூல் எழுதப்பட்ட காலத்தில்) இல்லாமையால் விஷ்ணுதர்மோத்ர புராணம் வழக்கில் உள்ள ஓவிய விவரங்களை விரிவாகப் பதிவு செய்கிறது. ஒன்று, முந்தையவற்றிலிருந்து எடுத்தாளும் அத்தியாயங்கள். மற்றது. நூலில் இடம்பெறும் பல்வேறு மாந்தரின் சிலை உருவாக்கம் சார்ந்த ஒழுங்கு விவரங்கள். இந்நூல் தோன்றிய காலத்தில் மஹாபாரதத்தை நூலாக்கிய வியாசர் ஒரு தெய்வமாக தொழப்படுகிறார். எனவே உருவம் வடிப்பதில் வியாசரின் தோற்றம் சார்ந்த நுணுக்கமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது போலவே ஓவியம் தீட்டுவதில் யுதிஷ்ட்ரன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணன், வியாசரின் சீடர்களான சுமந்தர், ஜைமினி, பைலாம், வைசம்பாயனர் மற்றும் தேவகி, யசோதா, பலராமன் ருக்மிணி-சத்யபாமா, சாம்பா, அனிருத்தன் போன்றவர்களுக்கான உருவத் தோற்றமும், தோல் நிறம் பற்றின விதிகளும் கூறப்பட்டுள்ளன.

இந்நூலின் ஓவியம் சார்ந்த அத்தியாயங்கள் கி.பி.6-7ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் அஜந்தா குகைகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. எனவே அப்போது முதிர்ச்சி பெற்றிருந்த ஓவியம் படைக்கும் உத்திகளும் வழிமுறைகளும் நமக்கு இந்நூல் மூலமாகக் கிடைக்கிறது. ஆயின், இதற்கும் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே அவை சிறப்பாயிருந்ததன் பதிவுதான் இந்நூல் என்பதையும், இது ஒருவரால் எழுதப்பட்ட நூல் அல்ல என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

இந்நூல் தவிர, ப்ருஹத் சம்ஹிதா- (கி.பி. 6ம் நூற்றாண்டு), காமசூத்ர- வாத்சாயனர் (கி.பி. 6ம் நூற்றாண்டு), சமரங்கன சூத்ர தாரா- (11ம் நூற்றாண்டு) போன்ற நூல்களும் மத்திய வரலாற்றுக் காலத்தில் எழுத்துருவம் கண்டன.

ஓவியம் படைப்பதற்கான விதிமுறைகள் மட்டுமே ஓவியத்தைப் படைத்து விடாது. அது முற்றிலும் ஓவியனின் படைப்பாற்றல், அனுபவம் போன்றவை சார்ந்தது என்பதையும் நூல் தெளிவுறுத்துகிறது. இறுதியாக நூல் இவ்வாறு கூறுகிறது.

“இந்த விதிமுறைகள் முடிவானதல்ல. வெறும் வழிகாட்டுதல்கள்தான். பரிந்துரைகள்தான். இந்த ஓவியம் பற்றி நூறு ஆண்டுகள் கூறினாலும் அது முடிவுறாது. இங்கு விடுபட்டுவிட்ட செய்திகளைப் பின்வரும் சந்ததியினர் இத்துடன் இணைக்க வேண்டும். அனைத்துக் கலை வடிவங்களுள்ளும் ஓவியம்தான் சிறந்தது.” இந்த சுதந்திரத்தை ஓவியர்கள் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையல்ல.

Leave a Reply