– காலமும் ஐந்து குழந்தைகளும், 1973.
நான் அசோகமித்திரனைச் சந்தித்ததில்லை. சில மேடைகளில் பார்த்திருப்பதோடு சரி. கடைசியாக 2015 நவம்பரில் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழாவில் பார்த்தபோது மிகவும் தளர்ந்து போயிருந்தார். தங்கள் வாழ்வின் முதுமைக் காலங்களில் மகத்தான மனிதர்களின் முகத்தில் மலரக் கூடிய அலாதியான கனிவு அவர் முகத்தில் குடிகொண்டிருந்தது. உடல்ரீதியாக அவர் மிகவும் அசௌகரியமாக உணர்வது தோற்றத்திலேயே தெரிந்தது. அந்த நிலையில் அருகில் சென்று வணக்கம் செலுத்துவதோ கைகுலுக்குவதோ கூட அவரில் இருந்த மென்மையைக் குலைத்து விடும் என்று தோன்றியது. பார்த்ததே மனநிறைவாக இருந்தது.
மறைந்துவிட்ட ஒரு மாபெரும் எழுத்தாளரை எந்த வகையிலெல்லாம் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும்? மூன்று விதங்களில். முதலாவது, அவர் நேரடியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள். இரண்டாவது அவர் வாழ்க்கை குறித்து பலவிதங்களில் பதிவுசெய்யப்பட்டு நாம் அறியவரும் செய்திகள். மூன்றாவது இந்த இரண்டின் வழியாக நாம் திரட்டிக்கொண்டு, நமது மனதில் தங்கி விடுகின்ற அவரது ஆளுமை. அசோகமித்திரன் விஷயத்தில் அவர் மரணமடைந்த போது, தமிழ் நவீன இலக்கியத்தின் ஒரு ஆகிருதி (icon) என்ற நிலையை அடைந்துவிட்டிருந்தார். அந்நிலையில், அவரது படைப்புகளுடனான போதிய பரிச்சயம் கூட இல்லாதவர்கள், அரசல் புரசலாகக் காதில் விழும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான துணுக்குகளை வைத்துக்கொண்டு அவரை ‘மதிப்பிட்டுக்’ கொண்டிருந்தது, 21ம் நூற்றாண்டில் சமூக ஊடகங்கள் கோலோச்சும் நமது யுகத்தின் ஒரு விடம்பனம். அந்த ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஒரு சிலராவது மேலெழுந்து அவரது படைப்புகளை வாசிப்பார்கள் என்றால் அது நல்ல விஷயம்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை எல்லாம் வாசிப்பார்களா என்று தனது முதுமை நாட்களில் ஒரு சலிப்பை அசோகமித்திரன் வெளிப்படுத்தினார். ஆனால், அவரே தன் வாழ்நாளில் நிறைய எழுதிக் குவித்த, தீவிரமான எழுத்தாளராகத்தான் இருந்திருக்கிறார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 8 நாவல்கள், 20 குறுநாவல்கள், கனமான கட்டுரைத் தொகுதிகள் என்று அவரது படைப்புலகம் நீண்டது, பெரியது.
பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர், ஒற்றன் போன்ற அவரது படைப்புகள் நாவல்கள் என்றே அறியப்படுகின்றன. ஆனால், நாவல் என்ற கலைவடிவத்திற்கே உரித்தான, அதன் அடையாளம் என்று விமர்சகர்களால் கூறப்படுகிற பெருங்கதையாடல் (grand narrative) என்ற அம்சம் அவற்றில் அனேகமாக இல்லை. பதினெட்டாவது அட்சக்கோடு நாவலின் களம் பிரம்மாண்டமானது. 1947 தேசப்பிரிவினையின் பின்னணியில் செகந்திராபாதில் நிகழ்ந்த பயங்கரமான அரசியல், சமூக கொந்தளிப்புகள்தான் அதன் பின்னணி. அத்தகைய பெரிய வரலாற்றுத் திரைச்சீலையிலும் (canvass) சந்துரு என்ற பதின்மவயது இளைஞனின் உலகத்தைத்தான் அசோகமித்திரன் மையமாக வரைந்து செல்கிறார். இதே களத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மற்ற பல பிரபல இந்திய நாவல்களில் அந்தக் காலகட்டத்தின் வரலாற்று வன்மங்களும் கொடுமைகளும் நேரடியாக உரத்த குரலில் பதிவு செய்யப் பட்டிருப்பதை ஒப்பிட்டால் இந்த வேறுபாடு புலப்படும்.
அந்த நாவலில் ஓர் இடம். தெலுங்கர்களும் உருதுமொழி பேசுபவர்களுமே அதிகமாகப் படிக்கும் அந்தப் பள்ளியில் உள்ள மிகச்சில தமிழ் மாணவர்களில் இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட சந்துருவும் அடக்கம். பிரின்சிபல் உட்பட அனைவரும் கலந்துகொள்ளும் ஒரு ‘தமிழ் மன்ற’ நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக, ‘தமிழில் கடவுள் வாழ்த்துப் பாடு’ என்று ஒரு உடனடி ஆணை ஆசிரியரிடமிருந்து வருகிறது. செய்வதறியாது ஏதேதோ பாடல்கள் நினைவில் அலையடிக்க, கடைசியாக அவனது வாயிலிருந்து கம்மிய குரலில் வெளிப்படுவது ‘எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன…” அப்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சகுந்தலை திரைப்படத்தில் வந்த பாடல். அவன் வியர்த்துப் போய் அதை முனகிவிட்டுச் சென்று அமர்ந்த பின், பேசவரும் ‘செகரட்ரி’ தன் பேச்சு முழுவதும் அந்த ‘சாமிப் பாட்டை’ சிலாகிக்கிறார்.
மேலோட்டமாக வாசித்துச் செல்கையில் ஒரு நகைச்சுவை நிகழ்வு போலத் தோன்றினாலும், இந்த நிகழ்வில் மையமாக உள்ள அபத்தம் (absurdity) நாம் தவறவிட முடியாதது. ஆம், அந்த நகரத்திலும், அது அமைந்துள்ள தேசத்திலும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் காரணமின்றி அவநம்பிக்கையும் வெறுப்பும் கொண்டு அலையும் அபத்தம். அதன் நுட்பமான குறியீடாகவே அந்த இடத்தில் அந்த சம்பவம் வருவதை இலக்கிய வாசகர்கள் உணர முடியும். அசோகமித்திரனின் கலை மேதைமை சந்துரு என்ற சிறிய மனிதனின் சிறிய உலகத்தின் நுண்ணடுக்குகளின் வழியாகவே வரலாற்றின் கனத்தை நுட்பமாகவும் மௌனமாகவும் கூறிச் சென்றிருக்கிறது. பெருங்கதையாடல்கள் மீதிருந்த அவநம்பிக்கை அல்லது ஒவ்வாமை காரணமாக, சிறுகதையையே தனது கலைவெளிப்பாட்டிற்கான உகந்த வடிவமாக அவர் கருதியிருக்கக் கூடும். அவரது குறுநாவல்களும் கூட ஒருவகையில் நீளமாக்கப்பட்ட சிறுகதைகள்தான்.
ஆனால், அசோகமித்திரனுக்கு வரலாற்றுப் பிரக்ஞையோ அரசியல் சிந்தனையோ இல்லை என்பதல்ல இதன் பொருள். அது மிகச் சன்னமான குரலில் படைப்புகளின் ஊடாகத் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம். ‘இன்று’ குறுநாவலில், தில்லியில் தீன்தயாள் மார்க் என்ற சாலையைக் கஷ்டப்பட்டுத் தேடிக்கண்டுபிடிக்கிறான், மரணத்தையும் தற்கொலையையும் பற்றிய சிந்தனைகளுடனேயே உழன்று கொண்டிருக்கும் ‘அவன்’. அறைக்குள் போனதும் தனிமையில் அவனது மன அவசங்களின் ஒரு பகுதியாக கீழ்க்கண்ட பத்தி வருகிறது.
“… அப்புறம் கீழே விழுகிறோம் என்ற உணர்வு. அந்த இமைப்போதில் மனிதனுக்கு இறக்கைகள் முளைத்துவிடக் கூடாதா? மனிதனுக்கு மட்டும் இறக்கைகள் இருந்துவிட்டால் தரையில் ஏன் வாழவேண்டும்? பூமியை முழுக்க பாம்பு, புலிகளுக்கு ஒழித்துக் கொடுத்து விடலாம். தீன்தயாள் உபாத்யாயாவுக்கு இறக்கைகள் முளைக்கவில்லை. அவர் மண்ணில் மோதிப் பிணமாகக் கிடந்தார். அவர் அந்த மண்ணை வெறும் மண்ணென அழைக்கமாட்டார். பாரத மண். இந்த மண் பாரத மக்களுக்கே உரியது. பாரத மக்களென்பவர் யாவர்? சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள். இப்போது இங்கு யார் யாரோ உரிமை கொண்டாடுவதோடு பாரத மக்களின் தலைவிதியை அவர்களுக்குத் தோன்றியபடி கிறுக்கித் திருத்தி எழுதுகிறார்கள். நீ இரண்டாவது மணம் புரிந்து கொண்டால் சிறைக்குப் போவாய். மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் உன் வேலை போய், நீங்கள் எல்லாரும் நடுத்தெருவில் நிற்கவேண்டும். உன் பணம், உன் சொத்து உன்னிஷ்டம் போல் விநியோகிப்பதற்கு அல்ல. உன் மூதாதையரை மதித்துத் தொழுகிறாயா, நீ பிற்போக்குவாதி. நீ மாற்றப்பட வேண்டியவன். உன் வீடுகளையும் ஸ்தாபனங்களையும் புனித ஸ்தலங்களையும் கோயில்களையும் மரபையும் சம்பிரதாயங்களையும் நான் எப்படியும் எதுவும் செய்வேன். இந்தத் தேசத்துக்கு மதச்சார்பு கிடையாது. அதாவது உன் மதத்தின் மேல் சார்பு கிடையாது. ஜெய் ஹிந்த்!
அவன் தண்ணீரைத் தொடாமல் அந்தக் கட்டடத்து வெளியே வந்தான். பனி அருவியாக இறங்கிக் கொண்டிருந்தது. சில கட்டட விளக்குகள் தவிர அந்தத் தெரு பனிச்சாம்பல் பூத்த கரிய நிறத்தில் உருவ நிர்ணயமற்ற அரக்கன் மல்லாந்து படுத்திருப்பது போல இருந்தது…”
1970களின் முற்பாதியில் நடப்பதாக வரும் நாவல் இது. இதில் நெருக்கடி நிலை பிரகடனத்திற்கான அறிகுறிகள், 1969ல் ஓடும் ரயிலிலிருந்து விழுந்து இறந்த ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் துர்மரணம், காங்கிரசின் செக்யுலரிச கொள்கைகள் ஆகியவற்றைத் தெளிவான அரசியல் பிரக்ஞையுடன் அசோகமித்திரன் பதிவு செய்திருக்கிறார்.
“நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றிப் படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்…”
புலிக்கலைஞன் சிறுகதையில், நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வரும் ஒல்லிப்பிச்சானான ஆட்கள் குறித்து வரும் ஒரு வர்ணனை இது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்களை வதைத்த தாது வருஷப் பஞ்சத்தையும், அத்தகைய ஒரு பஞ்சம் சுபிட்சத்துக்கும் வளத்திற்கும் இலக்கணமான ராமராஜ்யம் அரசு வீற்றிருந்த நாட்டில் நிகழ்ந்ததையும் எல்லாம் மிக இயல்பாகப் போகிற போக்கில் ஒரு கருப்பு நகைச்சுவை (black humor) மூலமாக மிக நுட்பமாக வெளிப்படுத்திச் சென்றிருக்கிறது அசோகமித்திரனது எழுத்து. இப்படி எத்தனையோ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.
அசோகமித்திரனின் எல்லாப் படைப்புகளிலும் உள்ள இன்னொரு முக்கியமான தன்மை அவற்றின் ஒருமை (integrity). அவரது கதைகளில் உள்ள உரையாடல்களையோ சித்தரிப்புகளையோ உருவி எடுத்து, கதையுடன் தொடர்பில்லாத தனியான ஒரு வடிவத்தை அவற்றுக்கு நாம் தரவே முடியாது. உண்மையில், அத்தகைய சில ‘மேற்கோள்கள்’ வேண்டும் என்று தேடியபோது அப்படி ஒன்றும் எந்தக் கதையிலும் அகப்படாது என்றே தோன்றியது. ஏனென்றால் இரண்டு பக்கங்களுக்கு ஒரு பாத்திரம் தொடர்ந்து பேசிக்கொண்டு போகும் உரையாடல்களையோ அல்லது விவாதங்களையோ அல்லது பொத்தாம்பொதுவாக கதாசிரியர் தன் கூற்றாக ஒரு தத்துவத்தைச் சொல்வதையோ அவர் படைப்புகளில் காண முடியாது. அந்த அளவிற்குக் கச்சிதமான வடிவ நேர்த்தியும் ஒருமையும் கொண்டவை அவை. அபூர்வமாகவே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் காணப்படுவது போன்ற மேற்கோள்களைக் காணமுடியும். அதிலும் கூட ‘காலம்’ பற்றிய தத்துவ விசாரம் நான்கு வாக்கியங்களுக்குப் பிறகு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும் ரயிலுக்கு வந்து விடுகிறது.
இதே ரீதியில், மிகச் சாதாரண வாக்கியங்களும் கதையின் சூழலில் ஒரு பேருண்மை போல ஆகிவிடுவதையும் காணமுடியும். ‘இறந்தவர்கள் எப்படி எடைகூடக்கூடும் என்று தெரியவில்லை’ என்பது ஒரு பொதுப்புத்தி சார்ந்த கூற்று. ‘பிரயாணம்’ சிறுகதையில் வாழ்நாள் முழுவதும் தான் மதித்துப் போற்றிய குருநாதர் ஓநாய்களால் கடித்துக் குதறப்படுவதைப் பார்த்தபின், மாபெரும் தர்மக் குழப்பத்துடனும் உயிர்ப்பயத்துடனும் அவரது சடலத்தைப் பனிமலை வெளியில் தூக்கிக் கொண்டு ஓடும் சீடனின் உள்ளத்தில் இந்தக் கூற்று எழும்போது, அதன் கனம் சாதாரணமானதல்ல. ‘அவன்தான் சற்றுமுன்பு புலியாக இருந்தவன்’ (புலிக்கலைஞன்) என்ற கூற்றும் இதே போலத்தான். இதற்குக் காரணம் இந்தப் படைப்புகளில் கூடியுள்ள அபாரமான ஒருமைதான்.
மே 2016ல் வெளிவந்த ‘அந்தரங்கமானதொரு தொகுப்பு’ (நவீன விருட்சம் வெளியீடு) தான் அசோகமித்திரன் பெயரில் அவர் வாழும்போது வெளிவந்த இறுதி நூல் என்று நினைக்கிறேன். தான் எழுதியவற்றில் தனக்கு மிகவும் பிடித்த படைப்புகளை அசோகமித்திரனே தேர்ந்தெடுத்துத் தொகுத்து வந்திருக்கும் அருமையான நூல் இது. இதில் பொதுவாக பல விமர்சகர்களாலும் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்ட ‘பிரயாணம்’, ‘கிணறு’ போன்ற படைப்புகளுக்கு மத்தியில் எனக்கென்று சில ஆச்சரியங்கள் இருந்தன. ‘விருந்து’, ‘முறைப்பெண்’ ஆகிய சிறுகதைகள். இவற்றைப் பற்றி ஒரு இலக்கியக் கூட்டத்தில் குறிப்பிட்டபோது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. இரண்டுமே’சதுரங்கா சொன்னார்’ என்று ஆரம்பிக்கும். மைசூர் / பெங்களூர் பின்னணி கொண்ட, எனக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான கதைகள். இவற்றில் குறிப்பிடப்படும் ‘சதுரங்கா’ என்பவர் ஒரு காலகட்டத்தில் கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த இடதுசாரி / சோஷலிஸ்ட் அறிவுஜீவிக் குழாத்தைச் சேர்ந்த ஒரு உண்மையான எழுத்தாளர் என்றும் பின்பு அறிய நேர்ந்தது. என்னைப் போலவே அசோகமித்திரனுக்கும் இந்தக் கதைகள் விசேஷமாகப் பிடித்தவை என்பது ஒரு வாசகனாக என்னுள் சிலிர்ப்பையும் சிறு பரவசத்தையும் ஏற்படுத்தியது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
உண்மையில் மகத்தான எழுத்தாளர்கள் மீது வாசகர்களுக்கு ஏற்படும் இத்தகைய அந்தரங்கமான நெருக்கம்தான் இலக்கிய ரசனையின் ஒரு முக்கியமான அங்கம். இத்தகைய வாசக பந்தங்களின் வாயிலாகவே, அவரைச் சந்தித்தும் பார்த்துமிராத நாளைய தலைமுறை தமிழ் வாசகர்கள் பலரது உள்ளங்களிலும் அசோகமித்திரன் வாழ்வார்.
(குறிப்பு: ஏப்ரல் 2, 2017 அன்று பெங்களூர் வாசகர் வட்டம் சார்பில் பெங்களூரில் நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இது. இந்தக் கூட்டத்தின் பதிவுகளை இணையத்தில் https://goo.gl/k9Ydv2 என்ற சுட்டியில் காணலாம்.)