இலங்கையின் மத்திய மாகாணப் பகுதியில் முப்பதாயிரத்துக்கும் மேலான மலையகத் தமிழர்களிடம் மோதி அவர்கள் பேசியபோது இந்திய பிரதமர்களின் வரலாற்றில் ஒரு முதல் சாதனையை மோதி நிகழ்த்தினார். இந்தியாவின் தொலைநோக்கற்ற சுயநலமும் இலங்கையின் அறமற்ற இனவாத சுயநலங்களும் இணைந்து புறக்கணித்த வரலாற்றின் அநாதைகளாக இருந்த மக்களுக்கு அவர்களின் சுயத்தைச் சுட்டிக்காட்டி வரலாற்றில் அவர்களின் அளப்பரிய பங்கினையும் எடுத்துக்காட்டிய பேச்சாக பாரத பிரதமரின் பேச்சு அமைந்தது.
தென்னிந்தியாவில் தொடர் பஞ்சங்களை ஏற்படுத்திய அதே காலனிய ஆட்சி இலங்கையில் பெரும் தேநீர்த் தோட்டங்களை உருவாக்கியது. பஞ்சங்களின் விளைவாக தென்னிந்திய மக்கள் பஞ்சம் பிழைக்க பெரும் கூட்டங்களாக தம்மை கொத்தடிமை கூலிகளாக இத்தேநீர்ப் பெருந்தோட்டங்களுக்கு விற்றுக் கொண்டனர். நூதனமான அடிமை முறை இது. வெளிப்பார்வைக்கு எவ்வித அடிமைப் பண்ணை முறையாக இல்லாமல் ஆனால் அடிமை முறையின் அனைத்துக் கொடுமைகளையும் இன்னும் செறிவாக உருவாக்கிய ஒரு இலாபகரமான முறை. பிரிட்டிஷ் வரலாற்றெழுத்தாளர் ரோய் மாக்ஸம் தேநீர் குறித்த தம் நூலில் (A Brief History of Tea, 2009) இக்கொடுமை குறித்து விரிவாகவே விளக்குகிறார். காலனிய ஆட்சியின் ஓராண்டில் மட்டும் 272,000 தமிழர்கள் கூலிகளாக இலங்கையின் தேநீர் பெருந் தோட்டங்களுக்கு வந்தனர். இதில் பிழைத்து தாயகம் திரும்பியவர்கள் 1,33,000 பேர். 50,000 தமிழர்கள் இலங்கையிலேயே கூலிகளாகத் தொடர்ந்தனர். 70,000 பேர் இறந்தனர். சர்வ தேச தேநீர் வர்த்தகம் செழித்தது. மிக மோசமான 1877 ஆண்டுப் பஞ்சத்தின்போது 1,67,000 தமிழர்கள் இலங்கைக்கு தேநீர்ப் பெருந்தோட்டங்களுக்கு வந்தனர். பஞ்சம் தமிழ்நாட்டில் மிஞ்சியபோது இலங்கைத் தொழிலாளர்களில் எஞ்சியவர்கள் 87,000 பேர். 1900 ஆண்டில் இப்படிப் பஞ்சம் பிழைக்க வந்து இலங்கையில் தங்கிவிட்ட தமிழர்களின் எண்ணிக்கை 3,37,000. இவர்கள் இலங்கையின் அன்றைய தேநீர் பெருந்தோட்ட நிலப்பரப்பான 384,000 ஏக்கர்களில் மனிதத்தன்மையற்ற சூழலில் உழைத்தனர்.
இந்த உழைப்புக்கான அங்கீகாரம் இம்மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. ராய் மேக்ஸம் போன்ற வரலாற்றெழுத்தாளர்களின் நூல்களிலும் வரலாற்று உயர் ஆராய்ச்சி மையங்களிலும் மட்டுமே பேசப்படும் விஷயங்கள் இவை. இலங்கைத் தேநீர் இன்று சர்வதேச புகழ் பெற்ற ஒரு பெயராக மாறியிருப்பதன் பின்னால் இந்த அப்பாவித் தமிழர்களின் தலைமுறைகளின் பேருழைப்பு பேசப்படுவதே இல்லை. காலனிய வரலாற்றின் இருட்டடிப்புப் பக்கங்களில் மறைந்துவிட்டவர்கள் இப்பாவப்பட்ட ஜன்மங்கள். அவர்களுக்கான குரலாக குஜராத் ரயில்வே நிலையத்தில் சிறுவனாக தேநீர் விற்ற பாரதப் பிரதமர் பேசியிருக்கிறார்: “உலக மக்கள் அனைவருக்கும் இச்செழிப்பான பிரதேசத்திலிருந்து உருவாகி வரும் சிலோன் தேநீர் குறித்துத் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயமென்னவென்றால் உங்கள் வியர்வையும் நீங்கள் பட்ட பாடுகளுமே இலங்கைத் தேநீரை உலகமெங்கும் விரும்பி அருந்தும் தரமுள்ள தேநீராக மாற்றியிருக்கிறது. “ இவ்வார்த்தைகள் மூலமாக பாரதப் பிரதமர் இலங்கைத் தேநீர் சர்வதேச சமுதாயத்தினால் விரும்பப்படும் தேநீராக திகழ்வதன் பின்னால் தமிழர்களின் வியர்வையும் கண்ணீரும் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
காலனிய காலத்தில் இலங்கையின் தேநீரை சர்வதேச தரத்துக்கு தம் உயிரைக் கொடுத்து உயர்த்திய இம்மக்களின் இன்னல்கள், விடுதலைக்குப் பின்னரும் தொடர்ந்தன. இந்தியாவும் இலங்கையும் ஏதோ இம்மக்கள் பெரும் சுமை என்பது போல ஒருவர் மீது மற்றவர் தூக்கிப் போட்டுப் பகடையாடினர். நாடற்ற மக்களாக இத்தமிழர் பரிதவிக்கும் சூழ்நிலை. விடுதலைக்குப் பின்னர் பத்தாண்டுகள் பலவாக நிலவியது. மிகச்சிறிய எண்ணிக்கையிலிருந்து இம்மக்களுக்கு இந்தியக் குடியுரிமை தர மனிதருள் மாணிக்கம் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் விரும்பவில்லை. இவர்களுக்குக் கட்டாயம் குடியுரிமை வழங்க வேண்டுமென்று இலங்கையிடம் கட்டாயப்படுத்தவும் அவர் கருதவில்லை. மென்மையாகச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார். இலங்கை எனும் தேசத்துடனான உறவு இலங்கைத் தமிழர் எனும் மக்கள் எண்ணிக்கை சுமையைக் காட்டிலும் முக்கியமானதாக நேருவுக்குத் தோன்றியது. எனவே ரோஜாவின் ராஜா எனத் தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பண்டிட் ஜவஹர்லால் நேரு மிக தெளிவாகக் கூறினார், “நாம் அவர்களை நம் குடிமக்களாகக் கருதவில்லை.” எனவே “நம் குடிமக்களாக நாம் கருதாத மக்களுக்காக நாம் செயல்படுவது சரியில்லை.” “அம்மக்களுக்காக ’இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதென்பது’ நாம் அவர்களை நம் தேசத்தவராகக் கருதுவதாக நினைக்க இடம் கொடுத்துவிடும். நாம் அவ்வாறு கருதவில்லை.” பின்னர் வந்த சாஸ்திரிகளும் இந்திரா ப்ரோஸ் காந்தியும் இதே நேருவிய பாரம்பரியத்தையே கடைப்பிடித்தனர்.
இவ்வரலாற்றுப் பின்னணியில் மோதி அவர்களின் உரையைப் பொருத்திப் பார்ப்பது இன்றியமையாததாகிறது. இந்தியாவின் நேருவிய தமிழர் புறக்கணிப்புக்கு மோதி ஒரு முடிவு கட்டியிருக்கிறார். மோடியின் பேச்சு தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் புதிய ஒரு இணைப்பைக் கோருகிறது. அந்த இணைப்பு பெரும்பான்மை சிறுபான்மை இணைப்பு அல்ல. இலங்கையின் செல்வத்தை உருவாக்கியதில் தமிழரின் பெரும் பங்களிப்பைச் சுட்டி அதன் மூலம் சமத்தன்மையுடன் செயல்படும் ஒரு இணைப்பு.
தமிழர்கள் இத்தனை அல்லல்களை தலைமுறைகளாக எதிர்கொண்டும் உடைந்துவிடவில்லை. அவர்கள் தலை நிமிர்ந்த தலைமுறைகளாக இன்றும் நிற்கிறார்கள். அவர்கள் இன்றும் சவால்களை சந்திக்கிறார்கள். 2009ல் அவர்கள் ஒரு பெரும் மானுட சோகத்தை சந்தித்து மீண்டிருக்கிறார்கள். தலைமுறைகளைத் தாண்டி நிமிர்ந்து நிற்கும் தமிழரின் உள்ளுறுதியை சங்ககால விழுமியங்களுடன் இணைத்துப் பேசுகிறார் மோடி. சைவ பௌத்த சமய பாரம்பரியங்களின் இணைத்தன்மையையும் பொதுத்தன்மையையும் சுட்டிக் காட்டுகிறார். பௌத்த துறவிகளின் முன்னர் தலைவணங்கிய அதே மோடி புகழ் பெற்ற சிவன் ஆலயத்தையும் தரிசித்திருக்கிறார். அவர் தலை வணங்கியது புத்தரின் அறத்தை அத்துறவிகளுக்கு நினைவூட்டியிருக்கும். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என தமிழர்களின் பங்களிப்பை அவர்கள் நினைக்கத் தூண்டியிருக்கும் எனக் கருதலாம்.
மோதி இலங்கைத் தமிழர்களை ஒரு பிரச்சினையாகக் காணவில்லை என்பதில்தான் அவர் நேருவிய பார்வையிலிருந்து மாறுபடும் விதம் தெரிகிறது. அவர்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவர்கள். இலங்கை அடைந்த வளர்ச்சியின் உண்மை நாயகர்கள். மறக்கப்பட்டவர்கள். இலங்கை அவர்களிடம் கடன்பட்டிருக்கிறது. அவர்கள் பொருளாதார வளர்ச்சியில் பங்கு உடைய பெரும் பண்பாட்டு வாரிசுகள். இதைத்தான் அவரது உரை கூறியிருக்கிறது.
திகோயா தமிழர் பகுதியில் 150 படுக்கைகள் உள்ள மருத்துவமனையை இந்திய உதவியுடன் இலங்கை கட்டியுள்ளது. இலங்கை தமிழர் பகுதிகளில் உட்கட்டுமானங்களில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கிறது. இலங்கைக்கும் பாரதத்துக்குமான பண்பாட்டு உறவுகள் வலுப் பெறுகின்றன. இலங்கையிலிருந்து சிவபூமியான வாரணாசிக்கு நேரடி விமானப் போக்குவரத்து இவ்வுறவுகளை இன்னும் வலிமை பெறச்செய்யும். வாரணாசிக்கு பத்து கிமீ தொலைவில் உலகப் புகழ்பெற்ற பௌத்த புண்ணியத் தலமான சாரநாத் உள்ளது. இன்னும் சிறப்புடன் மோதி அரசு சிதம்பரத்துக்கும் திரிகோணமலைக்குமான ஒரு சைவ புண்ணிய யாத்திரை அமைவு ஒன்றையும் ஆலோசிக்கலாம். திரிகோணமலை-சிதம்பரம்-வாரணாசி-சாரநாத் எனும் தீர்த்த யாத்திரை வட்டம் தமிழ் ஹிந்து – பௌத்த உறவை மேம்படுத்த பேருதவி செய்யக் கூடும்.
செஞ்சீனா வரலாற்றை மோசடி செய்து இந்துப் பெருங்கடலெங்கும் தன் வலையை விரித்து வருகிறது. இதற்காகப் பல மோசடி ஆவணங்களையும் அகழ்வாராய்ச்சிப் போலிகளையும் கடந்த சில பத்தாண்டுகளாக பெரும் பணச்செலவில் உருவாக்கி வருகிறது. மார்க்சிய-மாவோயிசமும் ஹான் இனவெறியும் இணைந்த வரலாற்றைப் பரப்பி பிற தேசங்களையும் பண்பாடுகளையும் அழிப்பதுடன் இந்துப் பெருங்கடல் பரப்பில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட செஞ்சீனம் முயல்கிறது. இச்சூழலில் பாரதம் சோழர்களால் பரப்பப்பட்ட தனது பண்பாட்டு மூலதனத்தை இதுகாறும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ராஜேந்திர சோழன் உருவாக்கிய பண்பாட்டு வர்த்தக சாம்ராஜ்ஜியம் எவ்வித மேலாதிக்கமும் இல்லாத பண்பாட்டுப் பன்மை கொண்ட தென்கிழக்குப் பேரரசாக அமைந்தது. ஆயிரமாண்டுகள் அது தொடர்ந்தது. இன்றைக்கும் கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இப்பண்பாட்டு உறவுகள் திடமாக உயிர்வாழ்கின்றன. என்ற போதிலும் நேருவிய மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இவ்வுறவுகள் குறித்து இந்தியா பெரிய அளவில் கண்டு கொண்டதில்லை. அவற்றுக்கு மீச்சிறிய முக்கியத்துவமே கொடுத்தது. மோதி இப்பண்பாட்டு இழைகளையும் பாரத பண்பாட்டு வம்சாவளி மக்களையும் முக்கியத்துவப் படுத்துகிறார். செஞ்சீனாவும் பாகிஸ்தானும் கண் வைக்கும் இலங்கையின் பாரத வம்சாவளி மக்களை முதன் முதலாக பாரதம் பிரதானப்படுத்தி ஒருங்கிணைந்த சமூக, பொருளாதார முன்னேற்றத்தையும் பண்பாட்டு உறவுகளையும் பேசுகிறது. இது நிச்சயமாக சீனா பின்னும் வலைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆக மோதி இலங்கையில் இந்தியா தமிழர்களிடம் பட்டிருக்கும் தார்மீகக் கடனை ஈட்டினார். அத்துடன் ராஜரீக வெற்றியையும் ஈட்டிக் கொண்டார். அறம் காக்க அறம் காக்கும் என்பது இதைத்தானோ?