Posted on Leave a comment

வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி — அரவிந்த் சுவாமிநாதன்

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் அந்தக் காலத்துப் புதின எழுத்தாளர் என்பது தெரியும். மேனகா, கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார், மாய சுந்தரி, மருங்காபுரி மாயக் கொலை, மரணபுரத்தின் மர்மம், முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம், திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம், நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி, மாயாவினோதப் பரதேசி என்பது போன்ற வித்தியசமான தலைப்புகளில் விதம் விதமாக எழுதிக் குவித்தவர் என்பது தெரியும். அவற்றில் பல தழுவல்கள் என்பதும் பலரும் அறிந்ததே! ஆனால், பலரும் அறியாதது அவர் சமயம் பற்றிய ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது.

இதுபற்றி இலக்கிய விமர்சகர் க.நா.சு, தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ என்ற கட்டுரையில், “அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்” என்று நினைவுகூர்கிறார்.

க.நா.சு.விடம் சொன்னதோடு நிற்கவில்லை ஐயங்கார். ‘Long Missing Links’ என்ற பெயரில் 800 பக்கங்களுக்கு மேல் ஒரு நூலாக அதனை வெளியிட்டார். அதனால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். அப்போதும் கூட விடாமல் அந்த நூலில் உள்ள செய்திகளை சிறு சிறு நூற்களாக எழுதித் தமிழில் வெளியிட்டார். அதில் ஒன்றுதான் ‘சமய ஆராய்ச்சி’ என்பது.

அந்நூலில் ஐயங்கார், “சில வருஷ காலத்திற்கு முன்னர், நான் தமிழ் நாவல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு, தேச சரித்திரங்கள், சமய நூல்கள், பாஷைகள் முதலியவற்றை ஆராய்வதற்கென்றே ‘ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ என்ற ஸ்தாபனத்தை அமைத்து, சுமார் மூன்று வருஷம் உழைத்து, நான் தெரிந்துகொண்ட புதிய விஷயங்களில் சிலவற்றைத் திரட்டி, ‘லாங் மிஸ்ஸிங் லிங்ஸ்’ அல்லது, ‘ஆரியர்கள், கிறிஸ்து, அல்லாஹ் என்பனவற்றைப் பற்றிய ஆச்சரியகரமான புதுமை வெளியீடுகள் (முதல் பாகம்)’ என்னும் பெயரில் ஒரு பெரிய நூலை வெளியிட்டேன்” என்கிறார். இதற்காகவும், இவருடைய அந்த முயற்சியைப் பாராட்டியும் ஜெர்மனி, அமெரிக்காவிலிருந்தெல்லாம் அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் வந்திருக்கின்றன. கிறிஸ்துவர்கள், முஸ்லிம் கனவான்கள் எனப் பலரும் பாராட்டி சன்மானமும் அனுப்பி ஊக்குவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில்?

ஐயங்காரே சொல்கிறார். “இந்நூலைப் பெரும்பாலோர் வாங்கிப் படிக்காது அசட்டையாய் இருந்து விட்டதனால், இந்த ஆராய்ச்சியினாலும், இந்நூலை வெளியிட்டு, இதுபற்றி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டதனாலும் எனக்கு சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் கடன் ஏற்பட, அதைத் தீர்க்கும் பொருட்டு சகலவிதமான நாவல் காப்பிரைட்டுகளையும், புஸ்தகங்களையும், சுமார் இருபதாயிரம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மாடி வீட்டையும் விற்று நான் மாத்திரம் மீள வேண்டியவனானேன். ஆயினும் நான் எடுத்துக்கொண்ட விஷயம் உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தங்களைக் காட்டி சமரஸத் தன்மையை உண்டாக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகையால் எப்பாடுபட்டாயினும் என்னாலியன்ற வரையில் என் கருத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற உறுதியான தீர்மானம் என்னைவிட்டு அகலாமல் இன்னமும் இருப்பதனால் நான் நாவல் வெளியீட்டோடு இந்தத் தொண்டையும் சிறிதளவு கலந்து செய்ய வேண்டுமென்பதே என் கருத்து” என்கிறார்.

லாங் மிஸ்ஸிங் லிங்க்ஸ் இப்போது அச்சில் இல்லை. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. இணையத்தில் சில படங்கள் மட்டும் கிடைக்கின்றன. ஆனால் அதிலிருந்த சில விஷயங்களைத் தமிழ்ப்படுத்தி ‘சமய ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் ஐயங்கார் நூலாக எழுதியிருக்கிறார். அதுவும் தற்போது அச்சில் இல்லை. என் தாத்தாவின் சேகரிப்பில் இருந்த ஒரே ஒரு பிரதி மட்டும் எனக்குக் கிடைத்தது. அதில் ஐயங்கார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

Ø ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் நம்மவர்களின் முன்னோர் பண்டைய ‘அப்பரகா’ (Africa) தேசத்திலிருந்து வந்தவர்கள்.

Ø நம் முன்னோர்களுக்கும், கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை ஸ்தாபித்தவர்களின் முன்னோருக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு.

Ø வட அப்பரகா (ஐயங்கார் இப்படித்தான் எழுதியிருக்கிறார்)வில் வசிக்கும் ஜனங்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் நம்முடைய ஜனங்களைப் போலவே இருக்கின்றன.

Ø பண்டைய ஈகைப்பட்டு (Egypt) (இப்படித்தான் ஐயங்கார் எழுதியிருக்கிறார்) மன்னர்களுக்கும் நமது தென்னாட்டிற்கும் நெருங்கிய தொடர்பிருந்திருக்கிறது.

Ø வடகலை ஐயங்கார்கள் அணிவது போன்ற குறிகளை அவர்கள் நெற்றியிலும், தோள் போன்ற பிற இடங்களில் அணிவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

Ø அவர்களுடைய வழிபாட்டுமுறை நம்முடைய வழிபாட்டு முறையை ஒத்ததாகவே இருந்தது.

Ø அவர்களும் நம்மைப் போலவே விலங்கு, (நந்தி) பறவை (கருடன்) போன்றவற்றை வழிபட்டனர்.

Ø அங்கே இருக்கும் நைல் என்பதன் சரியான பெயர் ‘நீல நதி’ என்பதே.

Ø பெயரிலும் கூட நமது இந்தியப் பாரம்பரியப் பெயர்களோடு அவர்களது பெயருக்கு ஒப்புமை இருந்தது

– என்றெல்லாம் ஐயங்கார் சொல்லிச் செல்கிறார்.

மட்டுமல்ல; அவர்கள் வழிபட்ட தெய்வத்திற்கும், ஹிந்துக்களின் தெய்வத்திற்கும் வழிபாட்டில் ஒப்புமை இருந்தது என்றும் சொல்கிறார். ‘கணேசர்’ என்ற பெயரில் நாம் வழிபடும் தெய்வத்தைப் போன்றே அவர்களும் ‘கண்சா’ என்ற பெயரில் ஒரு தெய்வத்தை வழிபட்டிருக்கின்றனர். தனது கருத்துக்களுக்கு ஆதாரமாக ‘Egyptian Mythys and Legends’ by Donald A.Mackenzie என்ற நூலையும், ‘The Northen Bantu’ by John Roscoe M.A., Published by the Cambridge University Press என்ற நூலையும் உதாரணம் காட்டுக்கிறார்.

இந்த ‘சமய ஆராய்ச்சி’ என்னும் நூலில் ஐயங்கார் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. நம்ப முடியாதவையாக இருக்கின்றன. சில குழப்பத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கின்றன. சமயம் மட்டுமில்லாமல், வழிபாடு, வான சாஸ்திரம், ஜோதிடம், தமிழ் இலக்கியங்கள், மொழி அமைப்பு, சொற்கள் பயின்றுவரும் விதம் என்றெல்லாம் பல களங்களில் அவரது ஆராய்ச்சி விரிகிறது.

நூலில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள்:

Ø ரோம ரிஷி என்பவர் ரோமில் வாழ்ந்த ராஜ ரிஷி.

Ø தேரையர் என்னும் சித்தர் பாரஸீகத்திலிருந்த சக்கரவர்த்தி.

Ø மயன் என்பவர் கிரீத் அல்லது கண்டியர் என்று குறிக்கப்படுவதும், மத்திய தரைக்கடலில் இருப்பதும், ஆதி காலத்தில் அதலம் என்று குறிக்கப்பட்டதுமான தேசத்தின் அரசர்
– என்றெல்லாம் அவர் சொல்லும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. சிற்பி வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி அவர்களும் மயன் நாகரிகம் அப்பகுதியைச் சார்ந்ததே என்று தெரிவித்திருக்கிறார். பகவான் ரமண மகரிஷியும், சாத்விக்கிடம், ”இந்த அண்ணாமலையைப் போலவே இதன் மறு மையத்தில் ஓர் மலை அல்லது ஆன்மிக அச்சின் மற்றொரு பகுதி இருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். அட்லாண்டிஸ், பெரு, மச்சுபிச்சு எல்லாம் கிட்டத்தட்ட இதை ஒட்டித்தான் வருகிறது. ஆக, இந்தக் கருத்துக்கள் விரிவான களத்தில் ஆராயத்தக்கன.

இந்நூலில் நகைப்பிற்கிடமாகவும் சில விஷயங்கள் உள்ளன. சான்றாக, “தென்கலை நாமம் சனி பகவானைக் குறிக்கிறது. வடகலை நாமம் வியாழன் என்னும் தேவேந்திரனைக் குறிக்கிறது. மாத்வ பிராமணர்கள் நெற்றில் கரிக்கோடிட்டுக் கொள்வது ராகுவைக் குறிக்கிறது. ‘ராகுகாலம்’ என்பதை நாம் பழக்கத்தில் ‘ராவு காலம்’ என்றே சொல்கிறோம். ‘ராவு’ என்ற பட்டப்பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்வது இதற்கு இன்னொரு சான்றாகும்” என்று அவர் குறித்திருப்பதைச் சொல்லலாம். சில விஷயங்கள் சிந்திக்க வைக்கின்றன. பல விஷயங்களுக்கு அவர் கொண்டுகூட்டிப் பொருள் கொண்டு, அதையே ‘சரி’ என்று ஸ்தாபிக்க முயல்வதும் தெரிகிறது. சில தகவல்கள் குழப்பத்தைத் தருகின்றன. முப்பது தலை ராவணனை ஐயங்கார் ஒருவர் தாக்குவது போன்று உள்ள படம் நிஜமா, கற்பனையா என்று யோசிக்க வைக்கிறது. பகலின் தந்தை சூரியன்; தாய் சுக்கிரன். இரவின் தந்தை சனி; தாய் சந்திரன் என்று விளக்கி சினேந்திரமாலைப் பாடலை உதாரணம் காட்டுகிறார்.

“கிறிஸ்தவர்களின் பழைய ஆகமத்தில் கந்தபுராணத்தில் குறிக்கப்படும் சூரன் முதலியோர் வருகின்றனர்” என்று சொல்லும் ஐயங்கார், “கருங்கடலுக்கு அருகில் இருந்த கிரௌஞ்சம் அல்லது கௌஞ்சத்தை ஆண்ட அசுரனை சுப்பிரமணியர் சம்மாரம் செய்ததாத கந்தபுராணம் கூறுகிறது. அராபியா, பர்ஸியா ஆகியவற்றிற்கு அப்பாலுள்ள கருங்கடலுக்கு அருகில் அசிரியா என்று ஒரு தேசமிருந்து அழிந்துபோய் விட்டது. அதன் கல்வெட்டு சிலா சாசனங்களில் ‘கௌஞ்சகம்’ என்ற பெயர் காணப்படுகிறது. அவ்விடத்தில் அசூர் என்ற அரசர்கள் ஆண்டு இதர தேசங்களை நாசப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் பாலஸ்தானத்தை அழித்து அங்கிருந்த சமரத்தன் குருக்கள்மார்களை சிறைப்படுத்திக் கொண்டுபோய் தங்கள் ஜனங்களுக்கு கடவுள் வழிபாடு கற்றுக்கொடுக்கும்படி அமர்த்தியதாக கிறிஸ்தவருடைய பழைய ஆகமம் கூறுகிறது” என்று சொல்லும் விஷயம் சிந்திக்க வைப்பதாய் உள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துகள் சிலவற்றையும் ஐயங்கார் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

Ø ‘மேரி’ என்பதை சிலர் ‘மாரி’ என்று மாற்றி அதை மாரியம்மனாக்குவது வழக்கம். அது தவறு. மேரி என்பது ‘மேரு’ பர்வதத்திலிருந்து உதித்தவள் என்பதைக் காட்டுகிறது.

Ø மீனாஷி என்றால் மீனத்தில் ஆக்ஷியாக உள்ள வியாழ பகவானைக் குறிக்கும்.

Ø சரஸ்வதி என்பது சுக்கிரனைக் குறிக்கும்.

“பார்வதி’ என்று எழுதுவது தவறு. ‘பாற்வதி’ என்று எழுதுவதுதான் சரி. பரமசிவனின் பக்கத்தில் உள்ளவள் என்பது இதற்குப் பொருள். பாற்வதி மகாவிஷ்ணுவின் தங்கை என்று சைவ புராணங்கள் சுட்டுகின்றன. ஆனால் எப்படித் தங்கை என்பதுதான் எங்கும் விளக்கப்படவில்லை. பார்வதி ஆதியில் தக்ஷனுக்கு மகளாகப் பிறந்ததாகவும் பின்னர் அந்தப் பாவம் தீர மறுபடி இமவானுடைய மகளாகப் பிறந்ததாகவும் சைவ புராணங்கள் சுட்டுகின்றன. அப்படியானால் மகாவிஷ்ணு தக்ஷனுடைய பிள்ளையா, அல்லது இமவானுடையா பிள்ளையா?” என்று நாத்திகர்கள் போல் கேள்விகள் எழுப்புகிறார் ஐயங்கார். இராமனைப் பற்றிக் கூறும் போது, வைஷ்ணவ பாஷ்ய விளக்கங்களுக்கு மாறாக, “இராமன் என்பதை இரா+மன் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அதற்கு இரவின் தந்தை என்பது பொருள். இரவின் தந்தை ‘சனி.’ மகாவிஷ்ணுக்கு உகந்த கிழமை சனி என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்.

நாராயணனையும் ஐயங்கார் விட்டு வைக்கவில்லை. வைஷ்ணவ ஆச்சரியரான ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகரால் இயற்றப்பட்ட அதிகார ஸங்கிரகத்தின் கருத்தையே அவர் மறுக்கிறார். “நாராயணன் என்றால் நாக்கிற்கு ராஜனாகிய வியாழ பகவானுக்கு அணன், அண்மையில் இருப்பவன் அதாவது சமீபத்தில் இருப்பவன் என்பது பொருள்” என்கிறார். வியாழனே நாராயணன். நாராயணனே இந்திரன்; அவனே இமவான் என்றும் உறுதிபட அவர் கூறுவது வியப்பைத் தருகிறது. மேலும் அவர், “தேசிகர் வைஷ்ணவர்களுள் ஒரு சாராருக்கு மதாசாரியர். ஆகவே நாம் இதில் குற்றங்கண்டுபிடிப்பது அபசாரமாகும். வைஷ்ணவர்களில் சுயமாசாரி புருஷர்கள் என்று ஒரு வகுப்பார் இருக்கிறார்கள். அவர்கள் வேறு எவரையும் ஆசாரியராக ஏற்றுக் கொள்வதில்லை. நாம் இந்த வகுப்பைச் சேர்ந்த பரம்பரையில் வந்தவராதலால், தேசிகர் நமக்கு ஆசாரியாரல்லரானாலும் அவருடைய கவித்திறமையையும் பரந்த ஞானத்தையும், இன்ன மற்ற யோக்கியதாம்சங்களையும் கண்டு நாம் வியப்படையாமலும், அவரை மனதாரப் புகழாமலும் இருப்பது சாத்தியமானதல்ல” என்கிறார்.

ஆங்கிலத்தில் புழங்கும் சொற்கள் தமிழிலிருந்தே சென்றன என்று கூறி அவர் உதாரணம் காட்டுபவை நமக்கு நகைப்பையும் திகைப்பையும் வரவழைக்கின்றன. “கல் பலகை, சிலை ஏடு என்பதே சிலேட் (slate) ஆகி இருக்கிறது. பாம்பு போல் நீண்டிருக்கும் மூங்கில், பாம்பு மரம் (Bamboo Tree) என்று இங்கிலீஷில் குறிக்கப்படுகிறது. கடவுளுக்குச் சொல்லும் துதியான ‘பறைதல்’ என்பதே ப்ரேயர் (Prayer) ஆகி இருக்கிறது. கள்ளாகிய பாலைக் கொடுக்கும் பனை மரம் பால் மா (Palmyra) என்று குறிக்கப்படுகிறது. பெண்ணினமாகிய அம்மாவைக்குக் குறிக்கும் ’மாதர்’ என்பதே மதர் (Mother) ஆயிற்று. அப்பா என்பதே ஃபாதர் (Father) ஆகி, பின்னர் ‘பாதிரி’ ஆகியிருக்கிறது.‘புட்டு’ என்பதே Food ஆகியிருக்கிறது. உண்பதாகிய ‘தின்னல்’ என்பதே ‘டின்னர்’ (Dinner) ஆகியுள்ளது.

இப்படி அந்த நூல் முழுவதும் இம்மாதிரியான பல தினுசு தினுசான கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன. மேற்கண்ட காரணங்களால் ஐயங்காரின் ஆராய்ச்சியை முழுக்க முழுக்க உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் சில விஷயங்களைப் புறந்தள்ளவும் முடியவில்லை.

ஐயங்காரின் இந்த நூலை முழுக்க வாசித்து முடித்தவுடன் பண்டை எகிப்தியர்களின் வரலாற்றைக் கூறும் ‘A GUIDE TO THE EGYPTIAN COLLECTIONS’, ‘AN ANCIENT EGYPT UNDER THE PHARAOHS’, ‘A HISTORY OF EGYPT UNDER THE PHARAOHS’ போன்ற சில நூல்களை மேலோட்டமாக வாசித்தேன். அதில் கிடைத்த சில தகவல்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன.

Ø எகிப்தை ஆண்ட பண்டைய மன்னர்களுள் ஒருவர் பெயர் ரமேசெஸ் (Rameses) (ராமசேஷன் என்ற பெயர் ஞாபகத்திற்கு வருகிறதா?) ரமேசெஸ் – 1 ரமேசெஸ் – 2, ரமேசெஸ் – 3 என்று அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்திருக்கின்றனர்.

Ø ரமேசெஸ் -1ற்கு வழிகாட்டியாக, நண்பராக இருந்தவர் ஓர் இந்தியர்.

Ø ரமேசெஸ் -1 ஆட்சி செய்த காலம் B.C.1200ஐ ஒட்டியது.

Ø எகிப்தின் வளர்ச்சிக்குக் காரணமான மற்றொரு மன்னரின் பெயர் கர்ணாக் (Karnak)

Ø இம்மன்னர்களில் பலரது நெற்றிலும் ‘நாமம்’ போன்ற குறிகள் காணப்படுகின்றன.

Ø எகிப்தில் பண்டைக்காலத்தில் பல கடவுள்களை வழிபட்டிருக்கின்றனர். ஒரு கடவுளின் பெயர் ஆமன் – ரா. (Amen-Ra) இவர் Thebes நகரத்தின் புகழ்பெற்ற கடவுள்.

Ø பெருமாள் கோயில்களில் தீர்த்தப் பிரசாதம் வழங்குவது போல பண்டை எகிப்திலும் இம்மாதிரி இறை வழிபாட்டிற்குப் பின்னர் புனித தீர்த்தம் (Holy water) பிரசாதமாக வழங்கப்படும் பழக்கம் இருந்திருக்கிறது.

Ø காளை, பசு, சிங்கம், முதலை, நாய் போன்ற விலங்குகளையும் பாம்பு மற்றும் கருடன் போன்ற சில பறவைகளையும் அவர்கள் வழிபட்டிருக்கின்றனர்.

பசுவை வழிபடுவது சிறப்பிற்குரியதாய் இருந்திருக்கிறது. அதுபற்றி, ‘Ancient Egypt under THE PHARAOHS’ என்ற நூலில் காணப்படும், ‘India is the land which in this respect most closely resembles Egypt the cow is there an object of adoration and no devotee of Isis or Athor could have regarded its slaughter for food with greater horror than a Hindoo’ என்ற குறிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. ‘We had historical ground for concluding that these religious ideas and usages had been transplanted by colonization from India to Egypt’ என்ற குறிப்பு, ஐயங்கார் சொன்னது உண்மையாகத்தான் இருக்குமோ என்ற கேள்வியை வரவழைக்கிறது. Long Missing Links நூலை முழுமையாக வாசித்து, பின்னர் இந்தப் பண்டைய எகிப்தின் வரலாற்றைக் கூறும் நூல்களையும் முழுமையாக வாசித்தால் மேலும் பல புதிர்கள் அவிழக்கூடும். அல்லது குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கக்கூடும். நிதானமாக யோசித்துப் பார்த்தால், பண்பாட்டு ஒற்றுமைகளை மட்டுமே கணக்கில்கொண்டு ஒரு முடிவுக்கு வருவது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது.

Leave a Reply