Posted on Leave a comment

அசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக் குரல் – அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

மார்ச் 23ம் தேதி இரவு, அசோகமித்திரனின் மறைவுச் செய்தியைக் கேட்டதும், என்னை ஒரு விதமான ஆற்றாமையும் கோபமும் சூழ்ந்துகொண்டது. ஒரு கலைஞனை ஆன மட்டும் நோகடித்து, அவனுக்குச் சேர வேண்டிய எந்தச் சிறப்பையும் சேரவிடாமல் செய்த நமது அறிவுச்சூழல் மீது வந்த கடுப்பு அது. ரத்தக் கொதிப்பைத் தணித்துக் கொள்ள முகநூலில் கீழ்க்கண்டவாறு ஒரு நிலைத்தகவலைப் பதிவு செய்தேன். “மேலும் ஒரு மேதைக்கு, அவர் வாழ்நாள் முழுவதும் அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்தாயிற்று. அற்ப அரசியலின் வெற்றியை ஆர்ப்பரித்துக் கொண்டாடுங்கள். உங்கள் முகாமில் இருக்கும் அரைவேக்காடு துண்டுப் பிரசாரகர் எவராவது எழுதிய அறுநூறு பக்க பிரசாரத்தை அலங்கரித்து யானை மேல் ஏற்றும் பணியை உவகையோடு தொடர்ந்து செய்யுங்கள். காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் சவால் விட மாட்டேன். நீங்கள் அற்பர்கள் என்று உங்களுக்கு எப்போதும் தெரியும். அது போதும்.”

இன்று அசோகமித்திரனின் இலக்கிய ஆளுமையைக் குறித்து ஆராயும்போது அவர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வதும் மிகவும் அவசியம் ஆகிறது. இன்றைய சூழ்நிலையில் அசோகமித்திரனை மறுதலித்த தரப்புகள் எவை என்பதை ஆராய வேண்டியது அவரது படைப்புலகை ஆராய்வதை விட முக்கியமானது எனக் கருதுவதற்கு இடமுண்டு. ஏனெனில் அசோகமித்திரனின் படைப்புலகை ஆராய்வதின் வாயிலாக நாமும் அவரது ஆளுமையை ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் மேதைமையை மறுத்த, இருட்டடிப்பு செய்த தரப்புகளைக் குறித்துத் தெரிந்துகொள்வதின் வாயிலாக நமக்கு நம்மைப் பற்றி, நமது அறிவுலகைப் பற்றித் தெளிவான சித்திரம் ஒன்று கிடைக்கும். சற்றே நிதானித்துச் சிந்தித்துப் பார்த்தால் அசோகமித்திரனை நான்கு தரப்புகள் தொடர்ந்து மறுதலித்து இருட்டடிப்பு செய்து கொண்டிருந்தன என்று தோன்றுகிறது. முதலில் முற்போக்குத் தரப்பு. இரண்டாவதாகத் திராவிடத் தரப்பு. மூன்றாவதாக வெகுஜன ஊடகங்கள் மீது கடும் காழ்ப்புக் கொண்ட சிற்றிதழ் அறிவுஜீவிகள் மற்றும் படைப்பாளிகள். நான்காவதாக முதிரா வாசகக் கூட்டம் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டது. இவர்களின் தரப்புகளையும் தவறுகளையும் நாம் பார்க்கலாம்

தமிழ் இலக்கிய சூழலில் முற்போக்கு இலக்கிய அமைப்புகள் /இடதுசாரி இலக்கிய அமைப்புகளின் இருப்பும், அவற்றின் பலமும் நன்கறிந்த ஒன்றே. இந்த அமைப்புகள் ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள். இதற்கான காரணங்கள் சில உள்ளன. நல்லதோ கெட்டதோ இடதுசாரி அமைப்புகள் இலக்கியச் செயல்பாட்டைத் தொடர்ந்து, உடனடிப் பலனை எதிர்பார்க்காமல் செய்து வருகின்றனர். இலக்கியக் கூட்டங்கள், பயிற்றரங்குகள், இலக்கியக் கூடுகைகள் என ஏராளமான விஷயங்களை இவர்கள் ஒருங்கிணைக்கின்றனர். இவர்களுக்கு மாற்றாக வேறு அமைப்புகள் அதிகமாக இல்லை. இதன் வாயிலாக இவர்களுக்கு ஒரு வித கருத்ததிகாரம் கிடைக்கிறது. இந்தக் கருத்ததிகாரம் மூன்று இடங்களில் பாலமாகச் செயல்படுகிறது. பெரும்பாலும் இளம் வாசகர்களையும்,படைப்பாளிகளையும் அடையாளம் கண்டு கொள்வது இத்தகைய அமைப்புகள்தான். எனவே இவர்கள் மிக எளிதாக அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைத் திறனாய்வு என்ற போர்வையில் இளம் வாசகர்களிடமும் படைப்பாளிகளிடமும் திணித்துவிட முடியும். இதனால் தாம் பல இளைஞர்களும், இடதுசாரி படைப்பாளிகளும் சில மேதைகளை அவர்களது படைப்பில் ஒன்றைக்கூட வாசிக்காமல் நிராகரிக்கிறார்கள். இவர்களை de-radicalize செய்வது மிகவும் சிரமம். இன்னொரு பக்கம் கல்வி நிறுவனங்களில் உள்ள இந்த இயக்கத்தவர்கள் தங்களுக்கு ஒவ்வாத படைப்பாளுமைகளைக் கல்விச்சூழலில் இருந்து விலக்கி வைக்கும் வேலையை மிக திறமையாகச் செய்வார்கள். கருத்தரங்குகளுக்கு அழைப்புகள் வாராது. படைப்புகள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுக்கப்படமாட்டாது. நாவல்கள் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படாது. பல்கலைக்கழக நூலகங்களில் இவர்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்காது. இதில் வேறொரு வேடிக்கையும் உண்டு. அசோகமித்திரன் இடதுசாரிகளை விரோதியாகக் கருதியவர் இல்லை. அத்தரப்பிலிருந்து வரும் நல்ல படைப்புகளையும் அவர் அடையாளம் காட்டியிருக்கிறார். பல இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் நெருங்கிய நட்பும் இருந்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஒரு மார்க்சிய விமர்சகனுக்கு அணுக்கமான கூறுகள் அசோகமித்திரனின் படைப்புகளில் ஏராளமாக உள்ளன. ஆனால் நமக்குத்தான் ஒரு எழுத்தாளர் என்ன எழுதுகிறார் என்பதைவிட எங்கு உறுப்பினராக இருக்கிறார் / உறுப்பினராக இல்லை என்பது மிகவும் முக்கியமாயிற்றே. புஷ் சொன்னது போல் அவர் நம்முடன் இல்லையென்றால் நமது எதிரிதான் என்றே இடதுசாரிகள் தீர்மானம் செய்தனர். இதனால் அசோகமித்திரன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்.

அசோகமித்திரனுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்களைக் கிடைக்க விடாமல் செய்த மற்றொரு குழு, திராவிட அரசியல் சிந்தனைகளைக் கைக்கொண்டிருந்த குறுங்குழு. அசோகமித்திரன் பிராமணராகப் பிறந்தார் என்பதே இவர்களுக்கு போதுமான காரணமாக இருந்தது. போதாதகுறைக்கு அசோகமித்திரனின் நாவல்களில் சாமியார்கள் எல்லாம் வந்தனர். வந்த சாமியார்கள் நல்ல சாமியார்களாக இருந்தது மட்டுமல்லாமல் ஹிந்து சாமியார்களாகவும் இருந்தனர். இது மிகப் பெரிய மூட நம்பிக்கை அல்லவா! எனவே அசோகமித்திரனும் அவரது ‘பிற்போக்குப் பார்ப்பனீய எழுத்துக்களும்’ குறிவைத்துத் தாக்கப்பட்டன. அசோகமித்திரன் சுயவதைப்பிரியனுக்கே உரிய நெஞ்சுரத்துடன் வேறொரு விஷயத்தையும் செய்தார். தமிழ்நாட்டில் பிராமண இளைஞர்கள் ஒடுக்கப்பட்ட யூதர்களைப் போல் உணருகிறார்கள் என்று பொருள்படும் விதமாகப் பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறினார். தமிழ்நாட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பிராமண வெறுப்பும் இனவாதமும் யாரும் அறியாததல்ல. அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் நாசிகளுக்குச் சற்றும் குறைந்தவர்களுமல்ல. என்ன, நாசிகளுக்குக் கிடைத்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவ்வளவே.
ஆனால் இந்த உண்மையை எந்த ஒரு அறிவுஜீவியும் உரத்துக் கூறியதில்லை. இதனைத் தொடர்ந்து இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாத திராவிட மேடைப் பேச்சாளர்கள் தொடங்கி, அவ்வியக்கங்களின் அறிவுஜீவிகள் வரை அனைவரும் அசோகமித்திரனை வறுத்தெடுத்தனர். முற்போக்கு பிராமணரைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் அவர்கள் குற்றங்களைத் துணித்து சுட்டிக் காட்டும் அசோகமித்திரன் போன்றவர்களைத் திராவிட இயக்கத்தினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அசோகமித்திரனுக்கு சாஹித்ய அகாடமி பரிசு வழங்கப்படக்கூடாது எனத் தமிழகத்திலிருந்து கடிதம் சென்றதாகக் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இனி ஏதாவது ஒரு திறமையான ஆவண ஆய்வாளர் வந்தால் ஒழிய இச்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியாது. இருப்பினும் அவ்வாறு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கும் எனில் நமக்கு அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (பின்னர் ஒரு திராவிடத் தலைவரின் பாராட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். ஆனால் அந்த் தலைவரின் படைப்புகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இதுதான் ஒரு சாதாரணனின் ஒத்துழையாமைப் போர்). தன்னை எதிரியாகக் கருதிய அரசியல் இயக்கங்கள் வலுவுடன் இருந்த சூழலிலும் கூட அசோகமித்திரன் தொடர்ந்து இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தார்.

சிற்றிலக்கிய சூழலிலும் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டவர்கள்தான் அதிகம். அவரது படைப்புகள் மேல் உள்ள விமர்சனங்கள் என்பதைத் தாண்டி அவர் மீதான விமர்சனங்கள்தான் அதிகமாக இருந்தன. அசோகமித்திரனின் அஞ்சலிக் கூட்டங்களில் கலந்துகொண்ட மூத்த விமர்சகர்களிடம் பேசும்போது ஒரு விஷயம் தெரியவந்தது. அன்றைய இலக்கியச் சூழலில் வணிக இதழ்கள் X இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு மிக்க கவனத்துடனும் வன்மத்துடனும் கைக்கொள்ளப்பட்டது. வணிக இதழ்களோடு நெருக்கமாக இருந்த படைப்பாளிகள் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களாக, பணத்திற்கு விலை போனவர்களாகக் கருதப்பட்டனர். இந்தப் பின்னணியில் அசோகமித்திரன் மீது இவர்களது வெறுப்பு படர்ந்தது. எந்தப் பத்திரிக்கையில் வேலை செய்தாலும் அசோகமித்திரன் தமது இலக்கியத்தில், இலக்கியச் செயல்பாடுகளில் எந்தச் சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. மத்திய /மாநில அரசு வேலையோ /பரம்பரை வியாபாரமோ /நில புலன்களோ இருந்திருந்தால் பரவாயில்லை. எழுத்தாளர்களுக்கு வாரி வழங்கும் இடத்திலும் அவர் வாழவில்லை. இந்நிலையில் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்க வேண்டுமா? ஆனால் தீவிர இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கு இந்த நியாயங்கள் என்றும் புரியாது.

அசோகமித்திரனை அவசர அவசரமாக நிராகரித்த மற்றொரு தரப்பு முதிரா வாசகர்களுடையது. அவரது ஏதாவது ஒரு நூலை மேலோட்டமாக வாசித்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கிறது என இவரை மேதை என்று அழைக்கிறார்கள்’ எனக் கேட்கும் வாசகர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இது ஒரு விதமான அழகியல் சிக்கல். நம் வாசகர்கள் பலர் அலங்கார நடையையும், அதீத வர்ணனைகளையும் வாசித்துப் பழகியவர்கள். மேடைப்பேச்சு தொடங்கி அனைத்து இடங்களிலும் ஜால வித்தைக்காரனின் லாகவத்தோடு மொழியைக் கையாளும் ஆளுமைகளைப் பார்த்தவர்களுக்கு, மொழிஜாலமே இலக்கியம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையானவையாக, ஆழமற்றவையாகத் தோன்றுவது இயல்பே. நான் கீழ்க்கண்ட உதாரணத்தை இத்தகைய வாசகர்களிடம் கூறுவதுண்டு. தொடர்ந்து சில காலம் உணவு விடுதியில் உண்டு பழகிய ஒரு நபருக்கு, வீட்டில் சமைத்த உணவில் உப்பும் உறைப்பும் குறைவாக இருப்பதாகத் தோன்றும். பிரச்சினை வீட்டு உணவில் அல்ல. உண்பவனின் சுவையுணர்வில்தான்.

இன்று அசோகமித்திரனின் வாழ்க்கையைத் தொகுத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ஒற்றை நபர் இயக்கமாகவே தம் வாழ்நாளெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அசோகமித்திரன் பயணம் செய்த பாதை தனிமையானது. துணைகளற்றது. கூட்டங்களில் இருந்தும், குழுச் செயல்பாடுகளில் இருந்தும், குழு அரசியலில் இருந்தும் ஒதுங்கியே இருந்துள்ளார். பொருளாதாரச் சிக்கல்கள், சித்தாந்தம் சார்ந்த எதிர்ப்புகள், ஜாதி வெறியர்களின் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு செவ்வெனே இலக்கியப் பணிகளைச் செய்து வந்துள்ளார். கொஞ்சமே கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தார் என்றால் அவர் வாழ்க்கையே வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால் எல்லாத் துன்பங்களுக்கு நடுவிலும், எல்லா எதிர்ப்புகளுக்கு நடுவிலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காமல், சிறு புன்னகையோடு, வாழ்ந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் தாண்டி யார் மீதும் துவேஷம் கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அசோகமித்திரன் ஒருவேளை இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்திருந்தார் எனில் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். எழுத்தாளனைக் குறித்து எழுதக் கூடாது, வம்புகள் கூடாது, எழுத்தைக் குறித்து மட்டும்தான் எழுத வேண்டும் எனக் கூறியிருப்பார். ஆனால் நான் ஏற்கெனவே கூறியது போல இக்கட்டுரையின் நோக்கம் அசோகமித்திரனைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. நம் சிறுமைகளைப் புரிந்துகொள்வதும்தான்.

அசோகமித்திரன் தமது வாழ்க்கையை எவ்விதக் குற்றச்சாட்டும் இன்றி எதிர்கொண்டார் என்றாலும் ஒரு எழுத்தாளன் சமூகத்தால் எப்படி நடத்தப்படவேண்டும் என்பது குறித்த அவருக்குத் தீர்க்கமான பார்வை இருந்தது. மெல்லிய நகைச்சுவையோடு, ‘நேஷனல் புக் டிரஸ்ட் கருத்தரங்கு’ (1977) என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“முதலில் கூறியபடியே எல்லாக் கட்டுரைகளுமே உயர்ந்த தன்மை கொண்டதாக இருந்தாலும் பதிப்புத்துறையின் (பிரத்யேகக்) கருத்தரங்கு என்பது போன்றதில் எழுத்தாளர் அசோகமித்திரன் கட்டுரை புள்ளிவிவரமோ மேற்கோள்களோ ஏதும் இல்லாமல் ஒரு தனித்த குரலில் ஒலிப்பதாக இருந்தது. கருத்தரங்கு விவாதத்தில் திரும்ப திரும்ப நினைவுபடுத்தப்பட்ட கட்டுரையும் அவருடையதுதான். வரும் பத்தாண்டுகளிலாவது எழுத்தாளன் சமூகத்தில் உரிய அந்தஸ்து பெறுபவனாக இருக்க வேண்டும் என்று கூறும் அவர் கட்டுரையை அவர் வாசிக்க எழுந்தபோது கருத்தரங்கைத் துவக்கிய அமைச்சர் அரங்கநாயகம் விடைபெற்றுச் சென்றார். அசோகமித்திரன் மேடையை நெருங்கியபோது அதுவரை சுறுசுறுப்பாக இயங்கிய சென்னை டெலிவிஷன்காரர்கள் விடை பெற்றுச்சென்றார்கள். அசோகமித்திரன் மேடையேறிய உடனேயே வானொலிக்காரர்களும் மைக்கைக் கழற்றிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள். ”(பக்கம் 65-66, காலக்கண்ணாடி கலைஞன் பதிப்பகம், 1998.)

இது நடந்து இரண்டு தசாப்தங்கள் ஓடிவிட்டன. அந்த ஒற்றைக் குரலும் விடைபெற்றுவிட்டது. இனிமேலாவது அசோகமித்திரன் வலியுறுத்திய சமூக அந்தஸ்து உண்மையான எழுத்தாளர்களுக்குக் கிடைத்தால் சரி.

Leave a Reply