Posted on Leave a comment

ஸார்… வோட் ப்ளீஸ்! – ஜெ. ராம்கி

அடையாறு மேம்பாலத்தைத் தாண்டி, திருவான்மியூர் திரும்பும்போது முத்துலெட்சுமி சாலையின் ஆரம்பத்தில் உள்ளது அந்த அலுவலகம். தென் சென்னைக்கான வாக்காளர் மையம். இடைத்தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். வாக்காளர் மையத்தின் வேலை நாட்கள் ரத்து செய்யப்பட்டதேயில்லை. ஒரு ஆண்டின் அனைத்து வேலைநாட்களிலும் இயங்குகிறது.

தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடி வாசலில் இருந்து வரும் ஊடக நேரலைச் செய்திகளில் எல்லோரும் பார்த்த சங்கதிதான். ‘எனக்கு ஒட்டு இல்லைன்னு சொல்லிட்டாங்க’ ‘இருவது வருஷமா இந்த ஏரியாவுலேயே இருக்கேன், எனக்கே ஒட்டு இல்லைன்னுட்டாங்க’, ‘எங்க அப்பா செத்து ஆறு வருஷமாச்சு, அவருக்கு ஓட்டு இருக்குது, எனக்கு இல்லையே…’ இதெல்லாம் ஒவ்வொரு தேர்தல் திருவிழா நேரத்திலும் அரங்கேறும் காட்சிகள்.

வாக்களிக்க மறுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி தர்ணா நடத்துவதும், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கோஷம் போடுவதும் தவறாமல் மீடியா செய்திகளில் இடம்பெறும் விஷயங்கள். சம்பந்தமில்லாத பெயர்களும், வித்தியாசமான முகவரிகளும், ஏகப்பட்ட வயது வித்தியாசங்களுடனும் வரும் வாக்காளர் பட்டியல் சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கும். சம்பந்தப்பட்ட பகுதியிலேயே இல்லாத பலரது பெயர்கள், இறந்தவர்களின் பெயர்கள், பல வருஷங்களுக்கு முன்னர் வீட்டைக் காலி செய்துகொண்டு போனவர்கள் என எல்லோருமே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். புதிய விபரங்கள் சேர்ந்தாலும் பழைய விஷயங்களை யாரும் நீக்குவதேயில்லை.

இப்படியொரு குழப்பமான பட்டியலை நம்பி இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாடு தன்னுடைய எதிர்காலத்தை எப்படித் திட்டமிடப்போகிறது என்பதை நினைத்துப்பார்த்தால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கும் அவ்வப்போது தகவல்களைச் சரிபார்ப்பதற்கும் ஏகப்பட்ட வழிமுறைகள் ஆலோசனை மட்டத்திலேயே இருந்து வந்தன.

பல வருடக் கனவு நனவாகும் காலம் வந்துவிட்டது. முதல் ஆயுதம், ஆதார்! ஆதார், நவீன இந்தியாவில் பல விஷயங்களை இணைத்தது முக்கியமான விஷயம். ஆரம்பத்தில் ஆதார் உதாசீனப்படுத்தப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளில் ஆதாரின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட்டு, பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாக்காளர் அட்டை? சந்தேகம்தான்.

தேர்தல் ஆணையமும், மெத்தனமாக இருந்துவிடவில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் தொடர்ந்து செயல்படுகிறது. புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையை இலவசமாக வழங்குகிறது. சமீபத்தில் கருப்பு, வெள்ளை அட்டையை மாற்றிவிட்டு வண்ணமயமான வாக்காளர் அட்டை வழங்குவதும் ஆரம்பமாகியுள்ளது. 25 ரூ கட்டணத்தில் பழைய அட்டையைக் கொடுத்து, உடனே புதிய வண்ணமயமான வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்து அமலுக்கு வந்துள்ள முக்கியமான மாற்றம். வாக்குப்பதிவு முடிந்ததும் ரசீது தருவது. எந்தச் சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதிலிருந்து, வாக்குப் பதிவு எந்திரம் சரியாகச் செயல்படுகிறதா என்கிற சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் வாக்காளருக்கு ஒரு ரசீது தருவது என்கிற தேர்தல் ஆணையத்தின் முடிவு சமீபத்தில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின்போது வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு வேலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தல்களில் ஓட்டு எந்திர தில்லுமுல்லு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் வைத்துள்ளன. மின்னணு வாக்கு எந்திரத்தில் நம்பிக்கை இல்லை. ஓட்டுச்சீட்டு முறைப்படி இடைதேர்தலை நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், கற்காலத்திற்கு யார் செல்வார்? குறைகள் இருக்கலாம். அவை தீர்க்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக புதிய அமைப்பை உதாசீனப்படுத்திவிடமுடியாது. ஆனால், இப்படி எந்தத் தில்லுமுல்லையும் செய்துவிட முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. அதோடு யாராவது முடிந்தால் வாக்கு இயந்திரத்தில் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்கு விழுவது போல் நிரல் எழுதி நிரூபித்துக் காட்டலாம் என்று சவாலும் விடுத்துள்ளது.

இந்தியா முழுவதுமே ஒவ்வொரு தேர்தலிலும் பதிவான வாக்குகளின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் பல பகுதிகளில் வாக்கு விகிதம் முப்பது சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. வாக்களிப்பது குறித்த அலட்சிய மனப்பான்மை, மழை, வெய்யில், வாக்குச் சாவடிகளில் நடக்கும் வன்முறைகள், இவையெல்லாமே வாக்கு சதவிகிதம் குறைந்து விட முக்கியமான காரணங்கள்.

பெருநகர மக்கள், வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்தாலும் ஓட்டு இல்லை என்று திருப்பி அனுப்பும் முயற்சிகளினால் மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. இதற்காகத் தேர்தல் ஆணையத்தைக் குறை சொன்னாலும் மக்களின் அலட்சியத்தையும் குறை சொல்லியாக வேண்டும். அவ்வப்போது திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடுவது நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் தங்களுடைய விபரங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க யாரும் அக்கறை காட்டுவதில்லை.

ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டி, ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலையும் இணையத்தில் கொண்டு வந்திருக்கிறது தேர்தல் ஆணையம். வீட்டில் இருந்தபடியே வாக்காளர்கள் தங்களது விபரங்களை இணையத்தின் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால், எத்தனை பேர் இத்தகைய சேவையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சும்.

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதும் அவற்றைச் சரிபார்த்துப் பராமரிப்பதும் ஒரு தொடர் வேலையாக இருந்தாகவேண்டும். இதுவரை அப்படி இருந்ததில்லை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அவசர கதியில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவதும் தேர்தல் முடிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிடுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது.

வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது தொடர்பான பணிகள், வாக்காளர் பதிவு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், மாநில அரசின் ஆலோசனைக்கு ஏற்ப ஒரு அரசு அமைப்பின் அலுவலரைப் பொறுப்பாக நியமிக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரித்து சரிபார்ப்பது எல்லா மாவட்ட ஆட்சித்துறையின் கீழ் உள்ள வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாலுகா ஊழியர்கள் ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர்களிடம் பட்டியலைச் சரிபார்க்கும் பணியை ஒப்படைக்கிறது.

மூன்று லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு நகராட்சியில் இருக்கும் வாக்காளர்களை வார்டு வாரியாகப் பிரித்து அந்தந்த வார்டில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கிறார்கள். புதிதாகப் பெயரை சேர்க்க, நீக்க, மாற்றங்கள் செய்ய, அதற்குரிய விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து அவற்றையெல்லாம் நிரப்பி வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை திருத்தினாலும் தகவல்களைச் சரிபார்ப்பது என்பது அவர்களால் முடியாத காரியம்.

பாஸ்போர்ட் வழங்குவதைத் தொடர்ந்து வாக்காளர் அட்டைகளை சரிபார்க்கவும், விநியோகிக்கவும் அஞ்சலக ஊழியர்களைக் களத்தில் இறக்குவது என்கிற திட்டம் பத்தாண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. அஞ்சல் துறை ஊழியர்களால் மட்டுமே குக்கிராமங்களுக்கும், காடு, மேடு தாண்டிய பிரதேசங்களுக்கும் சென்று மக்களோடு மக்களாகப் பழக முடிந்திருக்கிறது. அஞ்சல் துறை ஊழியர்களால் வாக்காளரின் இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சரிபார்க்கமுடியும்.

எழுதப் படிக்க தெரியாத சாமானியர்களுக்கும் அஞ்சல் துறை ஊழியர்கள் நெருக்கமானவர்கள். நம்பகத்தன்மை கொண்டவர்கள். அஞ்சல் துறை ஊழியர்களால் வாக்காளர் பட்டிலை முழுமையாகச் சரிபார்க்கமுடியும். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றும்போது அது அஞ்சலகத்தின் கவனத்திற்கு வருகிறது. அஞ்சல்துறை ஊழியர்களால் ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் கவனம் செலுத்த முடியும். தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட அலுவலகங்கள் இருப்பதால் இது சாத்தியமான விஷயம். ஏற்கெனவே அடையாள அட்டைகள் தபால்துறை அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. அதைப்போலவே வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வெளியிடுவது, சரிபார்ப்பது போன்றவற்றையும் தபால் அலுவலகங்களின் பொறுப்பிலேயே விட்டுவிடலாம்.

அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தவிர, மக்களோடு நெருங்கிப் பழகும் அரசு ஊழியர்களும் இதை முன்னெடுத்துச் சென்றாக வேண்டும். அரசியலில் அதீத ஈடுபாடு காட்டி வரும் மாநில அரசு ஊழியர்களைவிட, மத்திய அரசு ஊழியர்களே இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள். குறிப்பாக, மக்களை அவர்களது வாழ்விடங்களில் சந்தித்து, ஆண்டு முழுவதும் நேரடித்தொடர்பில் உள்ள அஞ்சலக ஊழியர்களே இதற்குப் பொருத்தமானவர்கள்.

அஞ்சலக ஊழியர்களைப் பொருத்தவரை இதுவொரு கூடுதல் பணி. ஆனால், அஞ்சல் துறை ஊழியர்களை விட யாராலும் சிறப்பாகச் செய்ய முடியாது என்பதும் உண்மை. கனவு மெய்ப்படவேண்டும். எல்லாமே நினைத்தபடி நடந்தால் ‘ஸார்.. போஸ்ட்’ என்கிற தபால்காரரின் குரல் ‘ஸார்.. வோட்’ என்று மாறி ஒலித்து, ஜனநாயக கடமையை நாம் நம் வீட்டிலேயே அரங்கேற்றும் நாளும் வந்துவிடும்.

Leave a Reply