Posted on Leave a comment

இந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி – லக்ஷ்மணப் பெருமாள்


ஒவ்வொரு தேசமும் மின்சார உற்பத்திக்கான தமது கொள்கையைப் பல்வேறு கோணங்களில் வகுக்கிறது.

• மக்கள் தொகையின் அடிப்படையில் திட்டங்களைத் தீட்டுவது.
• மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டும் திட்டமிடுதல்.
• பொருளாதார வலிமையைப் பொறுத்தும், நாட்டின் பாதுகாப்புக் கருதியும் திட்டமிடல்.
• இவையெல்லாவற்றையும் தாண்டி மின் உற்பத்திக்கான மூலப் பொருளின் இருப்பையும், தேவையையும் பொறுத்து திட்டமிடல்.
• மின்னுற்பத்தியில் அதிக பங்களிப்பைத் தரவல்ல மின் உற்பத்தி எது என்பதன் அடிப்படையில் திட்டமிடல்.

மேற்கூறிய காரணங்கள் மிக முக்கியமானவை. இந்தப் பார்வை இல்லாமல், சில மின் திட்டங்கள் தேவையற்றது என பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இந்திய அரசு அனைத்து வகையான மின் உற்பத்தி முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் அரசு அணு மின் உற்பத்திக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்தது போன்ற பிரமையையும், புதுப்பிக்கத்தக்க (Renewable Energy) மின் உற்பத்தி முறைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது போன்ற எண்ணத்தையும் மக்கள் மனதில், ஊடகங்களும், கூடங்குளம் அணு மின் உற்பத்திக்கு எதிராகப் போராடிய தரப்பும் பதிய வைத்துள்ளன.

உண்மையைச் சொல்லப் போனால், உலகம் முழுவதும் அணு மின் உற்பத்திகெதிரான பரப்புரைகளைச் செய்பவர்கள் சூரிய மின் ஆலைகளுக்கும், காற்றாலைகளுக்கும் ஆதரவான கருத்துகளையும் கட்டுரைகளையும் எழுதித் தள்ளுவார்கள். இதன் பின்னால் உள்ள வணிக அரசியல் மிக முக்கியமானது. ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகுதான் அணு மின் உற்பத்தி முறைக்கு எதிரான கருத்துகள் வலுவாக அமைந்தன. அப்போது சூரிய மின் ஆலைகள், காற்றாலைகள் பெருமளவிற்கு உலகில் நிறுவப்படவில்லை. உலகில் சில நாடுகள் அணு உலையை நிறுத்தப் போவதாக அறிவித்தன. இவற்றில் பல நாடுகளில் அணு மின் உற்பத்தி முறையே கிடையாது அல்லது மிகக் குறைந்த அளவில் இருந்தது. ஆனால் ஜெர்மனியின் மின் உற்பத்தியில் 17% அணு மின் உற்பத்தி இருந்தது. ஆஸ்திரேலியாவில் அணு மின் உற்பத்தி முறையே கிடையாது. ஜெர்மனி தமது மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 2017க்குள் தமது நாட்டிலுள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் கைவிடுவதாக அப்போதுதான் அறிவித்தது. மக்களின் பாதுகாப்பைக் காட்டிலும் சூரிய மின் ஆலைகள் மற்றும் காற்றாலைகளின் முன்னோடியாக நவீன மற்றும் தரமான தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருந்த நாடு ஜெர்மனி. அணு மின் உற்பத்தியைக் கைவிடமாட்டோம் என்று அறிவித்தது பிரான்ஸ். ஏனெனில் பிரான்ஸ் அணு மின் தொழில் நுட்பத்தில் கைதேர்ந்த நாடு. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளும் அணு மின் உற்பத்தியை கொள்கையளவில் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஆதரவான விளம்பரங்கள் அதிகரிக்க, அணு மின் உற்பத்திக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. இவையனைத்தும் தத்தம் நாடுகளிலுள்ள கனிமப் பொருட்களின் வளத்தையும், தொழில்நுட்பத்தில் உள்ள வல்லமையின் அடிப்படையிலும், புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை உபயோகிக்கத் தகுந்த இடங்கள் இருப்பதைப் பொருத்தும் அமைந்தன.

இந்தியா, தோரியம் மற்றும் புளுட்டோனியம் ஆகியவற்றை உபயோகிப்பதில் பல நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் அனைத்து மின் உற்பத்தி முறைகளுக்கும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக 2010 to 2016 க்குள்ளாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் அதிக அளவில் நிறுவப்பெற்றுள்ளன.

இந்தியாவின் மின் நிறுவுத் திறன்:

ஏப்ரல் 2017ல், இந்தியாவின் மொத்த மின் நிறுவுத் திறன் 329.204 GW. இதில் அனல் மின் நிலையத்தின் பங்களிப்பு 67%. அணு மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க (Renewable) மின் உற்பத்தி முறைகளின் பங்களிப்பு முறையே 2.06%, 13.55%, 17.39%. உலக அளவில் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்ததில் இந்தியா 5வது இடத்திலும், மின்சார உற்பத்தியில் உலக அளவில் 3வது இடத்திலும் உள்ளது.

ஜனவரி 2017ல், இந்தியாவின் மின் உற்பத்தியில் மத்திய, மாநில அரசின் நேரடிப்பங்களிப்பு 56.4%. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 43.6%. அணு மின் ஆலைகளை நிறுவுவதை மத்திய அரசு, தனியார்களின் கையிலோ, மாநில அரசின் கைகளிலோ கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பாதுகாப்பு கருதிய கொள்கைமுடிவாகக் கூட இருக்கலாம். புதுப்பிக்கத்தக்க மின் ஆலைகளைப் பொருத்தவரை மத்திய அரசின் பங்களிப்பு எதுவுமில்லை. புதுப்பிக்கத்தக்க ஆலைகள் நிறுவும் பணிகளை மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களுமே இந்தியாவில் செய்துள்ளன. மத்திய அரசுதான் மானியத்தை வழங்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதில் மாநில அரசுகள் கூட வெறும் 3.45% அளவில்தான் தமது சொந்த முயற்சியில் நிறுவியுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பொருத்தவரையில் தனியார் நிறுவனங்களே 96.55% நிறுவியுள்ளன.

மின் கோட்டங்களைக் கணக்கில் கொள்ள இந்தியாவிலுள்ள மாநிலங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வட கிழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஸ்ட்ராவில்தான் அதிக அளவிற்கு மின் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குஜராத், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 20,000MW க்கும் அதிகமாக மின் ஆலைகள் நிறுவப்பெற்றுள்ளன. குறிப்பாக கிழக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மின் ஆலைகள் உள்ளன. மக்கள் தொகையை ஒப்பிட்டால் கிழக்கு மாநிலங்களில்தான் மிகக் குறைவாக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. பீகார், ஓடிஸா, ஜார்க்கன்ட், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மின் ஆலைகள் நிறுவப்பெற்றுள்ளன. இம்மாநிலங்கள் ஏன் தொழில் வளர்ச்சிக் குறைந்த மாநிலங்களாக தற்போதும் உள்ளன என்பதற்கான காரணங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேற்கூறிய மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து பெரிய மாநிலங்களில் கூட 5,000MW க்கும் குறைவாகவே மின் ஆலைகள் அமைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் கூட 10,500MWதான் உள்ளது. கம்யுனிஸக் கொள்கையுடைய மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு திரான மாநிலங்கள் என்பதை அவர்கள் அரசுகளின் கொள்கை முடிவுகள் காட்டுகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் மின் ஆலைகளை நிறுவ முன் வரவில்லை. தனியாரின் மொத்த மின் நிறுவுத் திறனே 100 MWக்கும் குறைவு. இந்தியாவில் சமச்சீரான தொழில் வளர்ச்சி சாத்தியமில்லை என்பது உண்மையே. ஏனெனில் வேளாண்மை சார்ந்த மாநிலங்கள் பெரிதும் தொழில் வளர்ச்சியை நம்பி இல்லை. ஆனால் அம்மாநில அரசுகள் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்தியா சீரான வளர்ச்சியைப் பெற இயலும். இந்தியாவின் முன்னேறிய மாநிலங்கள் என்று கணக்கில் எடுத்தால் தொழில் வளர்ச்சி சார்ந்த மாநிலங்கள் முன்னிலை வகிப்பது புரியும். வட கிழக்கு மாநிலங்களில் கிரிட் வசதியை ஏற்படுத்துவதில் சிக்கல் இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஓர் அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். முற்றிலுமாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகளால் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. தற்போதைய அரசு அதைச் சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

மின் கொள்கை முடிவுகள்:

இந்தியாவின் மின் தேவை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் மொத்த மின் நிறுவுத் திறன் 1362MW. இன்று 329204.53 MW. இந்தியாவின் மின் நிறுவுத் திறனை எப்படிப் பார்க்க வேண்டும்? உலக மயமாதலுக்கு முன், பின் என பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. 1991ல் இந்தியா தாராளவாதக் கொள்கைக்குள் செல்கிறது. உலகமயமாதலுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்ட பின்பே இந்தியாவில் மின் தேவைக்கான கூடுதல் அவசியம் ஏற்படுகிறது. உலக மயமாதலுக்கு முன்பு அதாவது சோஷலிச பொருளாதாரக் காலகட்டத்தில் இந்தியாவில் மின் நிறுவுத் திறன் ஒரு விஷயத்தைப் புரியவைக்கிறது. அரசே அனைத்துத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரை உட்படுத்தும் எந்தவொரு கொள்கை முடிவும் மக்களுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்பட்டது. மேலும் சுதந்திரமடைந்த காலம் இந்தியா பொருளாதார ரீதியாக மிக நலிந்த நிலையிலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஓர் அரசால் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் இலவசங்களையும் மானியங்களையும் வழங்க வேண்டி இருந்தது. அது தவறல்ல என்றபோதிலும், நிதி வருவாய், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவோ புதிய வேலை வாய்ப்புகளைப் பெருக்கவோ பெருமளவு உதவவில்லை.

சோஷலிச காலகட்டமான 1940 முதல் 1990 வரையில் மொத்த மின் நிறுவுத் திறன் 63,636MW. தற்போது இந்தியாவில் மொத்த மின் நிறுவுத் திறன் 329204 MW. 1940 முதல் 1990 வரையிலான 43 ஆண்டுகளில் 63636 MW அளவிற்கே இந்தியா மின் ஆலைகளை நிறுவி இருந்தது. ஆனால், 1991 முதல் 2017 வரையிலான, உலக மயமாதலுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்ட கடந்த 27 ஆண்டுகளில் 265,568 MW அளவிற்கு மின் ஆலைகள் நிறுவப் பெற்றுள்ளன. தொழில்துறையில் இந்தியா வளர மின்சாரம் தேவை என்பதைப் புரிந்து கொண்ட பிறகே பல்வேறு கொள்கை முடிவுகளை நாட்டின் முன்னேற்றம் கருதி இந்திய அரசுகள் எடுத்து வந்துள்ளன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் மின் ஆற்றல் உற்பத்தி செய்யும் வகையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மின் உற்பத்தித் துறையில் 100% வரை அந்நிய நேரடி முதலீடு இருக்கலாம் என்றும் அரசு கொள்கை முடிவெடுத்தது. ஆரம்ப காலகட்டங்களில் தனியார் மிக அதிக விலைக்கே மின்சாரத்தை அரசுக்கு விற்றது என்ற நிலை இன்று மாறியுள்ளது. உதாரணமாக சூரிய மின் உற்பத்திக்கு தனியார் நிறுவனங்கள் 2010ல் யூனிட்டிற்கு 12 ரூபாய் விலையாக நிர்ணயித்திருந்தது. சோலார் பானல்களின் விலை 85% போட்டி காரணமாகக் குறைந்தது. 2017 மே 12
அன்று ராஜஸ்தானின் பாட்லா சோலார் பூங்கா அமைப்பதற்கான டெண்டரில் பங்கெடுத்த ஒரு நிறுவனம் யூனிட்டிற்கு 2.44 ரூபாய் எனக் குறித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியின் காரணமாகவே விலை நிர்ணயம் பெருமளவிற்குக் குறைந்துள்ளது. இதுநாள் வரை அனல் மின் உற்பத்தி மட்டுமே யூனிட்டிற்கு மிகக் குறைந்த அளவில் இருந்தது. தற்போதும் நிலக்கரி மின் உற்பத்தியின் விலை யூனிட்டிற்கு 3.20 ரூபாயாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா 105,860 MW நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஒருபுறம் தொழில் வளர்ச்சிக்கான சந்தையை உருவாக்கும் பொருட்டு அதிக அளவில் மின் கொள்கைகளை வகுத்துச் செயல்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும்.

மன் மோகன் சிங் அரசின் நிலக்கரி சுரங்க ஊழலும் மோடி அரசின் புதிய கொள்கை முடிவுகளும்:

உச்சநீதிமன்றம், மன் மோகன் சிங் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் மற்றும் டெண்டர் விடும் முறைக்கு எதிரான தீர்ப்பையும், 204 தனியார் நிறுவனங்களின் உரிமையையும் ரத்து செய்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நிலக்கரிச் சுரங்கத்தில் விடப்படும் டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய E-Auction (ஆன்லைன் மூலம் ஏலம் விடுதல்) முறைக்கு மாறிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அளப்பரியது. 2014ல் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நிலக்கரியைச் சார்ந்த அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. சில ஆலைகளில் ஏழு நாட்களுக்குக் குறைவான இருப்பு மட்டுமே இருந்து வந்தது. பியுஷ் கோயல் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டே வருடங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் வாயிலாக 25 நாட்களுக்கும் அதிகமாக மின்சாரம் கொடுக்கும் வகையில் நிலக்கரி இருப்பு உள்ளது. தற்போதைய புதிய கொள்கையின் படி, நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு அடுத்த முப்பது ஆண்டுகளில் (Coal life time) 3.44 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இதில் அதிக அளவில் பலனடையும் மாநிலங்கள் ஒடிஸா, மேற்கு வங்காளம், ஜார்க்கன்ட், சத்தீஸ்கர். முப்பத்து இரண்டு நிலக்கரிச் சுரங்க வேலைகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஏலம் நடைபெற்றதால் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதிலுள்ள சிறப்பம்சம், ஏலத்தில் கிடைக்கும் வருவாய் அந்தந்த மாநில அரசுகளுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகளின் கடன் சுமை பெருமளவு குறையும் அல்லது அதிக வருவாய் கிடைக்கும்.

2010 – 2014 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 1.8% -ஆக இருந்தது. 2014 – 2016 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தியின் அளவு சராசரியாக 7.7% ஆக அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் 2014-16ல் 7.4 கோடி டன்கள் உற்பத்தியும் கூடியுள்ளது. நிலக்கரி உற்பத்தியை அதிகரித்ததன் விளைவாக 2015 – 2016 வருடத்தில் 24,000 கோடி அந்நியச் செலவாணி அரசுக்குக் குறைந்துள்ளது. 2016-17ல் 40,000 கோடிக்கு அந்நிய செலவாணியைக் குறைக்கும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உதய் திட்டம், குழல் விளக்கு திட்டம், கிராமங்களுக்கான மின் இணைப்பு, உஜாலா திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கவியலா மின் உற்பத்தி சார்ந்த மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் திட்டங்களை அடுத்த பகுதியில் காணலாம்.

உசாத்துணைகள்:

http://coal.nic.in/two-years-achievements-english/#/12

http://www.cea.nic.in/reports/monthly/installedcapacity/2017/installed_capacity-04.pdf

http://www.dnaindia.com/money/report-coal-block-auction-money-to-wipe-out-fiscal-deficit-of-indian-states-2067520

https://www.theguardian.com/environment/2017/may/10/indian-solar-power-prices-hit-record-low-undercutting-fossil-fuels

https://www.ibef.org/industry/power-sector-india.aspx

Leave a Reply