Posted on Leave a comment

பாகுபலி : ஓர் இந்திய அனுபவம் – ஓகை நடராஜன்

முன்குறிப்பு: இந்தக் கட்டுரை ஓர் இந்துப் பெருமையுடன் எழுதப்படுகிறது என்று இந்து விரோதிகள் நினைத்துவிட்டால் கட்டுரை வெற்றிதான்.



 இக்கட்டுரை பாகுபலி படத்துக்கான விமர்சனம் அல்ல. அப்படத்துக்கு வந்த ஆயிரக்கணக்கான விமர்சனங்களின் தொகுப்பாகவும் சாரமாகவும், ‘இந்தப் படம் விமர்சனகளுக்கு அப்பாற்பட்டது’ என்று கொள்வதே இப்படத்துக்கான சிறந்த நியாயமான விமர்சனம். இப்படத்தின் குறைகளைப் பற்றிப் பேசுவதே சிறுமை என்ற உணர்வை, சிறுமை சொல்லவே பிறந்திருக்கிறோம் என்று நினைக்கும் சில விமர்சகர்களையும் கூட மெச்ச வைத்த படத்தை, விமர்சனத்துக்கு அப்பால் வைப்பதே முறை. சில விமர்சகர்கள் இப்படி ஆரம்பிப்பார்கள், ‘இப்படத்தின் கதை என்னவோ அம்புலிமாமா, அமர்சித்ர கதைதான்’ என்று. அவ்வளவு இளக்காரம் அந்தக் கதைகள் மீது! ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு பாகுபலியை வானாளவப் புகழ்வார்கள். இந்த விமர்சன இலக்கியப் போலிகளை ஊக்குவித்ததைப் போல படமெடுக்கும் விட்டலாச்சார்யா வகையறா படைப்பாளிகளைப் போலல்லாமல், அப்படங்களுக்காக சாணம் மணக்கும் இவர்களுடைய வாய்களை சந்தனம் மணக்க வைத்த பெருமையை இப்படம் செய்தேவிட்டது.

நானும் அவர்களைப்போலவே ஆரம்பிக்கிறேன். இந்தப் படத்தின் கதை அம்புலிமாமா கதையேதான். அதைப் போன்ற கதைகளைச் சிறுவர்களுக்கான கதை என்று விலக்கி வைத்துத்தான் நாம் சிறுவர்களல்ல என்று காண்பித்துக் கொள்ளும் நிலை பல பெரியவர்களுக்கு உண்டு. அதாவது வேரும் தண்டுமில்லாமல், கொப்பும் கிளையுமாக, இலையும் பூவுமாக, காயும் கனியுமாகக் குலுங்கும் சுயம்பு மரமாக தன்னைத் தானே உயிர்ப்பித்துக் கொண்டவர்கள் இவர்கள். இந்த இடதுசாரித் தன்மையை இடதுசாரிகள் அல்லாத பலரும் கூட வலிந்து தத்தெடுத்து தாமாக அதற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பலரும் உய்த்துணர்ந்த பொன்னியின் செல்வன் புதினத்தை அம்புலிமாமா கதை என்று, பலரும் உய்த்துணர்கிறார்கள் என்ற காரணத்துக்காகவே மலினமாகப் பார்க்கும் தன்மை இடதுசாரித் தன்மையன்றி வேறென்ன? ஆனால் இந்த அடிப்படையை, அடிப்படைவாதச் சிந்தனையை அடியோடு தகர்த்திருக்கிறார் ராஜமௌலி என்ற படைப்பாளி. இதிலிருக்கும் ஓர் இணை உண்மைதான் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. மகிழ்மதியின் அரண்மனையை இன்றுவரை வந்த படங்களின் ஜிகினா அட்டைக் கோட்டைகளில் ஒன்று என்று நம்மை நினைக்க வைக்காமல், 15ம் நூற்றாண்டில் உலகின் உன்னத நகரம் என்று வர்ணிக்கப்பட்ட விஜயநகரம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு நேர்த்தியுடனும் ஒருங்கிணைவுடனும் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்தியப் பெருமைகளின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட்டு குறை சொல்ல வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியப் பெருமைகளில் இருக்கும் பெரும் இடைவெளிகளே இடதுசாரி எண்ணங்களுக்குப் புகலிடமாகவும் போஷாக்காகவும் போராடி வெற்றிக் கனி பறிக்கும் களமாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இந்து ஒற்றுமை என்னும் மகாமருந்து அந்த இடைவெளிகளை நிறைக்கும்போது, இடதுசாரிகள் இண்டு இடுக்குகளைத் தேடிப் புறப்பட வேண்டிய நிலையை, இடதுசாரி எண்ணம் கொண்டு சிறுபான்மை மக்களைத் தூண்டித் தூண்டி அரசியல் செய்த கட்சிகளை முறியடித்த இந்திய மக்களின் செயல் உண்டாகிவிட்டது என்பதே அதன் இணை உண்மை.

படத்தின் வெற்றிக்கும் சிறப்புக்கும் பலரும் பல தொழிநுட்ப மற்றும் கலை நுணுக்கக் காரணங்களைச் சொல்லிச் செல்கிறார்கள். அடுக்கிச் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் யாருமே சொல்லாத அல்லது மேம்போக்காகக் கோடி காட்டிய ஒரு காரணம், படத்தின் இந்துத் தன்மை. படத்தில் அடிநாதமாக, மாகடலின் அடித்தளத்தின் மௌனமான மணற்பரப்பைப் போல, பலவண்ண மலர்ப்பொதியாய்த் தோன்றும் பூமாலையின் உள் நார் போல, படத்தின் முழுமைக்கு அதிலிருக்கும் இந்துத்தன்மையே காரணம். படத் தொடக்கத்தில் நாயகன் சிவலிங்கத்தைத் தோளில் சுமப்பதாகட்டும், பட முடிவில் வெற்றிக்கு சக்தியளிக்கும் அருமருந்தாக லிங்கத்தின் அருகில் இருக்கும் திருநீறைப் பூசிக் கொள்வதாகட்டும், மகிழ்மதியை சைவத்தின் பாற்பட்டதாக காட்டுவதாகட்டும், குந்தளதேசத்தை வைணவ வழிபாடு நாடாகக் காட்டுவதாகட்டும், காளிக்குக் களப்பலி கொடுப்பதாகட்டும், எல்லாம் இந்துமயம். முகபடாம் பூண்ட யானைகள், தேர், கோபுரம் என அனைத்து நெற்றிகளிலும் துலங்கும் திலகம் என இந்து அடையாளங்களில் எதையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் எல்லோரும் ஏற்கும் விதமாக சொல்லிச் சொல்லி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் இப்படத்தின் நோக்கம் இந்துத் தன்மையைப் பறைசாற்றுவது அல்ல. படத்தின் நோக்கம் சிறந்த பொழுதுபோக்கை அளித்து இலாபம் சம்பாதிக்கும் வியாபாரம் மட்டுமே. அவ்வாறு இந்துத் தன்மையைப் பரப்புரைக்கும் நோக்கமே இல்லாமல் எடுக்கப்பட்ட படத்தில் இத்தனை இத்தனை இந்துத் தன்மையா என்ற கேள்வி, இந்நாட்டில் வெற்றி பெறுவதும் வெற்றிபெறப் போவதும் இந்துத்தன்மையே, இந்துத்தன்மையை அடிநாதமாகக் கொள்வதே என்பதற்குக் கட்டியம் கூறுகிறது.

இப்படத்தின் இந்த இந்துத் தன்மைக்கு வலுசேர்ப்பது, பொதுவான இந்து எதிர்ப்பாளர்களின் சில முணுமுணுப்புகள். படத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் சத்ரியன் என்ற சொல், தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டினாற் போல, இந்து எதிர்ப்பு போலி முற்போக்காளர்கள் மனுதர்ம எதிர்ப்பு வாததைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். நம் நாட்டில் நால்வர்ண முறை இருந்ததை யார் மறுக்கிறார்கள்? ஒரு வரலாற்றுக் கற்பனையில் அது அவ்வாறே காட்டப்படும் என்ற சாதாரணப் புரிதல் கூடவா இவர்களுக்கு வராது? யார் அரசாள்வானோ அவனே சத்ரியன் என்பது சத்ரியன் என்பவனுக்கான விவரணை. இது பிறப்படிப்படையிலானது அல்ல. வர்ணங்கள், செய்யும் தொழிலாலேயே நிர்ணயிக்கப்பட்டன. இவை வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படைகள். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, வர்ணாசிரமம் பின்பற்றப்பட்டதை மறைக்காமல் சொல்லிவிடுகிறது வரலாறு. வரலாற்றை மாற்ற முடியாத நிலையில் ஒரு வரலாற்றுப் படத்தில் ஐயோ இது இப்படி வருகிறதே என்று கூறித் தங்கள் அரசியலைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது போலவே மகிழ்மதிக்குத் தெற்கிலிருந்து கருப்பான அரக்க குணம் படைத்த காலகேயர்கள் வருவதாகப் படத்தில் சொல்வதை, அது தமிழர்களை சித்தரிப்பதாகச் சொல்கிறார்கள். தமிழுக்கு முதன்மை கொடுத்து, பல தமிழ் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது இந்தப் படம். மேலும் இது தமிழ், தெலுங்கு என்ற இருமொழிகளில் மட்டுமே நேரடியாக எடுக்கப்பட்டு மற்ற எல்லா மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படமாகும். வணிக ரீதியில் இப்படித் தமிழ்ப் படமாகவே எடுக்கப்பட்ட படம் தமிழர்களையா அப்படிச் சித்தரிக்கும்?

இங்கே இன்னுமொன்றைச் சொல்லியே ஆகவேண்டும். அது இப்படத்துக்கான தமிழ் வசனங்கள். இப்படம் தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படவில்லை. நேரடியாகத் தமிழிலேயே எடுக்கப்பட்டிருப்பதால் உதட்டு ஒருங்கிணைப்புக்கு (lip synchronization) கட்டுப்பட்டு உரைடையாடல் எழுத வேண்டிய அவசியம் வசனகர்த்தாவுக்கு இல்லாமல் போய்விட்டது. இந்த வாய்ப்பை மதன் கார்கி அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். பொதுவான புராண மற்றும் வரலாற்றுப் படங்களின் செந்தமிழின் ஒட்டாத தன்மை இல்லாமல், இயல்பான ஒரு வசனத்தை அளித்திருக்கிறார். இந்திமொழிப் படங்களின் உருது வாசனை வசனங்கள் இல்லாத, தெலுங்கின் அதீத உணர்ச்சிவசம் இல்லாத, செந்தமிழ் என்று உணரமுடியாத அளவுக்கு இயல்பான மொழிநடையை நாம் ருசிக்கவும் ரசிக்கவும் முடிந்ததது இப்படக்குழுவினரின் ஒன்றுபட்ட முயற்சியின் இன்னொரு சாதனை. இப்படத்தின் எல்லா அம்சங்களையும் மேன்மையடையச் செய்த இந்துத்தன்மை, ஒன்றுக்கு ஒன்றாக, ஒன்றுடன் ஒன்றாக ஏற்பட்ட இந்துவும் தமிழும் இணைந்த இயல்பை மிளிரச் செய்யாதா என்ன!

இப்படத்தின் ஆடை அலங்காரம் பரிபூரணமான இந்துத்தன்மை கொண்டது. அண்மையில் வெளியான இரண்டு தமிழ்ப் படங்களுடன் இதனை ஒப்பிடலாம். ஒன்று கோச்சடையான்; இன்னொன்று புலி. இரண்டிலும் செய்யப்படுகின்ற ஆடை அலங்காரம், வண்ணங்களின் வாந்தியைப் போலவே இருக்கும். இப்படத்தில் குறிப்பாக குந்தளதேசத்தில் கதாநாயக நாயகியின் வில்வித்தைச் சாகசத்தின் நிழற்படம், பிரபலமாக இப்படத்தின் விளம்பரமாகப் பயன்படுத்தப்பட்டது. அதில் நாயகியின் உடையலங்காரம் நம்முடைய Glorius Past என்று சொல்லக்கூடிய இந்தியப் பண்பாட்டின் ஒரு சோறு பதம். ஆடை அலங்காரத்தில், ஆபரணங்களில், ஆயுதங்களில் அத்தனை கவனம் செலுத்திய இந்தப் படக் குழுவினர் இந்தப் படத்தின் பாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் பொட்டு வைத்து மகிழ்வித்திருக்கின்றனர். முதன்மைக் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பொட்டாக வடிவமைத்து அதை படம் முழுவதும் கருமசிரத்தையாகக் கொண்டுவந்திருக்கின்றனர். புலி திரைப்படத்திலும் கோச்சடையானிலும் கதாநாயகனும் நாயகியும் கூடப் பாழ்நெற்றியுடனே திரிகின்றனர். ஆனால் பாகுபலியிலோ முதன்மைக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், எல்லாப் பாத்திரங்களுமே ஏதோ ஒரு திலகமிட்டு வருகின்றனர். திலகம் இந்தியப் பண்பாட்டின் தனி முத்திரை. திலகம் இந்தியப் பண்பாடு வழங்கும் மங்கலம். திலகம் இந்தியப் பண்பாட்டின் வெற்றிச் சின்னம். வெற்றிக்காக எடுக்கப்பட்ட படத்தில் அனைவருக்கும் திலகமிட்டு அத்தனை உலகுக்கும் காட்டிவிட்டனர் பாகுபலி படக்குழுவினர்.

இந்தப் படத்துக்கு சிங்கப்பூர் அரசாங்கம் A முத்திரை அளித்து, சிறுவர்கள் பெற்றோர் துணையுடன் பார்க்கவேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது. இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது தலையை வெட்டி அது தனியாக உருளுவது போன்ற காட்சியைச் சொல்கிறார்கள். படத்தின் முத்தாய்ப்பான காட்சி ஒன்றில் தலை துண்டாக வெட்டப்படுகிற காட்சி தணிக்கையில் வெட்டமுடியாத அளவுக்குப் படத்துக்கு இன்றியமையாத காட்சியாக இருக்கிறது. அக்காட்சி நமக்கும் உலகுக்கும் ஒரு சேதி சொல்கிறது. பெண்களிடம் தவறாக நடப்பவர்களிடம் எத்தனை கடுமை காட்டவேண்டும் என்ற சமுதாயக் கருத்தை இப்படம் சொல்வதாக, இதுபற்றி அங்கலாய்த்த சிலருக்கு நான் சொல்லிவிடுகிறேன். பாகிஸ்தானில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கும் இப்படத்தில் இக்காட்சியின்போது பாகிஸ்தானியப் பெண்கள் எவ்வாறு உணர்வார்கள் என்ற ஆவல் எழுகிறது. முகலாயப் பண்பாட்டைக் காட்சிப்படுத்திய சிந்துபாத் படங்களைப் போலல்லாமல் உண்மைக்கு வெகு அருகில் நம் பழம்பண்பாட்டை இந்தப் படம் உலகின் ஊகத்துக்கு வலுவாக விடுகிறது.

நாம் சிலாகிக்கும் இந்த இந்துத்தன்மை வேறு சிலரால் எதிர்மறையாகச் சித்தரிக்கப்படுகிறது. இது ஓர் இந்துப் படம் என்பதாகக் குற்றச்சாட்டாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் படத்தின் இந்துத் தன்மை மறைக்கப்படுகிற சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால் அது தேவையே இல்லை. இது உரக்கச் சொல்லவேண்டிய ஒரு விஷயம். இந்தப் படம் எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பை வெற்றிப் படம் எடுக்க விரும்புபவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. பிரம்மாண்டத் திரைப்படம் எடுக்க இயலும், இந்தியாவின், அதுவும் தென்னிந்தியாவின் வல்லமையை மட்டுமல்ல; தென்னிந்தியாவின் பண்டைக் கலாசாரம் சமரசமில்லாத கற்பனையில் சொல்லப்படுமானால் அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் செல்லுபடியாகிற சரக்கு என்பதையும் இப்படம் சொல்லிக் கொடுக்கிறது. இப்படம் பார்க்கும்போது உலகம் இந்திய நாட்டின் ஒரு சித்தரிப்பைத் தூலமாகப் பார்க்கிறது. இந்துவின் பொலிவான ஒரு தோற்றம் இவ்வாறு சரியாகக் காட்டப்படும்போது அத்தோற்றத்தின் ஒரு கசிவு உலகில் ஊடுருவும் வல்லமை தெரிகிறது.

இப்படம் பார்க்கும் அனுபவம் ஓர் இந்திய அனுபவமாக இருக்கிறது. இருக்கப் போகிறது. உலகத்தாருக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கும் கூட.
 

உதவிய செய்திகள்:

1)   Baahubali: An Epic For The Right Times –
  http://www.huffingtonpost.in/open-magazine/baahubali-an-epic-for-the_b_7911646.html

2) பாகுபலி திரைப்படத்தால் இந்து – முஸ்லிம் மோதல் ஏன்?
  http://www.bbc.com/tamil/global-39867454

3) I am going to watch Bahubali-2 because it is annoying some annoying people –
  http://www.opindia.com/2017/05/i-am-going-to-watch-bahubali-2-because-it-is-annoying-some-annoying-people/

4) A Kshatriya superhero –
http://www.thehindu.com/opinion/op-ed/a-kshatriya-superhero/article18549852.ece?homepage=true

Leave a Reply