Posted on Leave a comment

சத்தீஸ்கர் தாக்குதல்: இடதுசாரி பயங்கரவாதம் – பி.ஆர்.ஹரன்

சென்ற ஏப்ரல் மாதம் 24ம் தேதி மதியம்
12.30 மணியளவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் வனப்பிரதேசத்தில் சாலை
போடும் பணி நடந்துகொண்டிருந்த இடத்திற்குப் பாதுகாப்பாக இருந்த மத்திய சேம காவல் படையின்
(CRPF) மீது 300க்கும் மேற்பட்ட நக்ஸலைட்டுகள் கெரில்லா முறையில் தாக்குதல் நடத்தி
25 காவல் படையினரைச் சுட்டுக் கொன்றனர். அவர்களின் ஆயுதங்களையும் தொலைத் தொடர்புச்
சாதனங்களையும் கடத்திச் சென்றுள்ளனர். மத்திய சேமக் காவல் படையினரின் மீதான இந்தக்
கொலைவெறித் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த
வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சேமக் காவல்படையின் மீதான தாக்குதலைக்
கடுமையாகக் கண்டித்தார். அரசின் தீவிரமான நடவடிக்கைகளினால் கடுமையாக ஒடுக்கப்பட்டுச்
செயல்பட முடியாமல் இருந்த நக்ஸலைட்டுகள் விரக்தியின் உச்சத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்
என்றும், நக்ஸல் மற்றும் மாவோயிஸ பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்
என்றும் கூறியுள்ளார்.

தாக்குதல் விவரங்கள்
சுக்மா மாவட்ட வனப்பிரதேசத்தில்
காலாபத்தர் என்ற இடத்தினருகே பர்காபால் என்ற இடத்திற்கும் ஜாகர்குண்டா என்ற இடத்திற்கும்
இடையே மிகவும் தேவையான முக்கியமான சாலை போடும் பணி நடந்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட
100 பேர்கள் கொண்ட மத்திய சேமக் காவல் படையினர் இரண்டாகப் பிரிந்து சாலையின் இரு முனைகளிலும்
பாதுகாப்பாக இருந்துள்ளனர். தாக்குதல் நடத்தும் பொருட்டு மாவோயிஸ்டுகள் சில உள்ளூர்
கிராமவாசிகளை அனுப்பி வேவு பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்தான், படைவீரர்கள்
மதிய உணவுக்காகத் தங்களைத் தயார் படுத்திக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடந்த தாக்குதலில் பெண் மாவோயிஸ்டுகளும் பங்குபெற்றுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் சிறு குழுக்களாகப் பிரிந்து பலவிடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவ்வாறு தாக்குதல் நடந்தபோது உள்ளூர்வாசிகளைக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
சிந்தாகுஃபா-பர்காபால்-பேஜி ஆகிய
இடங்கள் இணையும் அந்தப் பகுதி நக்ஸல் பயங்கரவாதத்திற்குப் பெயர் பெற்றது; நக்ஸலைட்டுகள்
அதிகம் புழங்கும் பகுதி. ஏற்கெனவே பலமுறை இந்தப் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
12 அல்லது 13 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டனர்
என்று மத்தியப் படையினர் கூறினாலும் ஒருவருடைய உடலும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
பலியான 25 வீரர்களில் நால்வர் (பத்மநாபன், செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன்)
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மத்திய சேமக் காவல் படையினர் சந்திக்கும் சவால்கள்
நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் அதிகமாகப்
புழங்கும் வனப்பகுதிகளில் வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமானால், அப்பகுதிகளில்
சாலைகள் அமைத்து அவற்றை ஊரகப்பகுதிகளுடன் இணைப்பது அடிப்படை மற்றும் அவசியத் தேவையாகும்.
அவ்வாறு சாலைகள் அமைக்கப்படும்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் படையினர் ‘சாலை திறக்கும் குழுவினர்’ (ROPs – Road
Opening Parties)
என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர்
தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளாகச் சொல்வது:
· இதில் எதிர்பாராத விஷயம்
என்று எதுவும் இல்லை. சாலை திறக்கும் குழுவினர் எப்போது எங்கே செல்கிறார்கள் என்பதெல்லாம்
மாவோயிஸ்டுகளுக்குத் தெரிந்துவிடுகின்றது.
· படையினரில் 25% வீரர்கள்தான்
சாலையினூடே நகர்கிறார்கள். மற்றவர்கள் பார்வைக்கு அப்பால் வனத்தினூடே வருவார்கள். இடையே
ஒரு குன்றோ அல்லது சாக்கடைப் பள்ளங்களோ எதிர்ப்படும்போது அவர்களுக்கு மேற்கொண்டு முன்னேறிச்
செல்வது கடினமாக இருக்கும். அந்த மாதிரியான இடங்களைக் கொரில்லாத் தாக்குதல்களுக்கு
மாவோயிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
· இரும்புத்தாதுக்கள்
நிறைந்த பகுதிகளில் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் அடிக்கடி இயங்காமல் போவதுண்டு.
குண்டுகளைக் கண்டறிவது கடினம். அந்த மாதிரியான சூழ்நிலைகளை மாவோயிஸ்டுகள் தங்களுக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வர்.
· கோடைக் காலங்களில்
பாதுகாப்புப் படையினர் மரங்கள் இருக்கும் நிழற்பகுதிகளில் இளைப்பாறுவதற்காக ஓய்வெடுப்பர்.
அந்த மாதிரியான பகுதிகளில் மரங்களுக்கிடையே அழுத்தக் குண்டுகளை (Pressure Bombs) வைத்து
இயக்குவார்கள் மாவோயிஸ்டுகள்.
· மதிய உணவுச் சமயங்களை
சாதகமானவையாக மாவோயிஸ்டுகள் கருதுகின்றனர். அந்தச் சமயத்தில் படைவீரர்கள் பொதுவாக மரங்களின்
அடியில் தங்களைத் தளர்த்திக்கொண்டு இருப்பர் என்பதால் தாக்குதல் நடத்துவது மாவோயிஸ்டுகளின்
வழக்கம். ஏப்ரல் 24ம் தேதி நடந்த தாக்குதல் அப்படி நடத்தப்பட்டதுதான்.
· இது ஒருவிதமான சலிப்பூட்டும்
பணி. எந்தவிதமான அங்கீகாரமோ, வெகுமானமோ, பயனோ கிடைக்காத பணி. குண்டுகளையும், கண்ணி
வெடிகளையும் கண்டுபிடித்துப் பல உயிர்களைக் காப்பாற்றினாலும், ஒரு சிறு சறுக்கல் நேர்ந்தாலும்
விளைவுக்கான முழுப் பொறுப்பும் படையினர்தான் ஏற்கவேண்டும். இது கால்பந்தாட்டத்தில்
கோலியின் பொறுப்பு போன்றது.
· கடும் வெய்யிலில் கடுமையான
சூழ்நிலைகளில், ‘இரவு நேரம்’ ‘இருளின் மறைவு’ போன்ற வசதிகள் அற்ற சூழலில் மேற்கொள்ளப்படுவதால்,
இது மிகவும் கடினமான பணியாகும்.
· கோடைக் காலங்களில்
முகாம்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும். படையினர் குளிப்பது என்பது மிகவும்
அபூர்வமான செயலாகும். பலநாட்கள் குளிக்காமல் இருக்க வேண்டியிருக்கும்.
· பலவிடங்களில் தொலைத்தொடர்பு
இருக்காது. குடும்பத்தினருடனோ, நெருங்கிய உறவினர்களுடனோ பேச முடியாமல் போவதால் மிகவும்
மன அழுத்தம் ஏற்படுவதுண்டு.
· கொசுத்தொல்லைகள் நிரந்தரப்
பிரச்சனை.
மாவோயிஸ்டு-நக்ஸலைட்டு இயக்கம்
இந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள்
கழித்து, 1967ல் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு)
கட்சி
இரண்டாக உடைந்து அதிலிருந்து இந்திய
கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) கட்சி
உருவாயிற்று. ஆரம்பத்தில் மேற்கு
வங்கத்தில் உருவான இந்தக் கட்சி, தலைமறைவான தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மற்ற
மாநிலங்களிலும் பரவ ஆரம்பித்தது. பகிரங்க அரசியலுக்கு வராமலும், அதன் மேல் நம்பிக்கை
இல்லாமலும், மறைமுக தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த இந்த இயக்கம், மலைப்பகுதியில்
இருக்கும் வனவாசி மக்களையும் மற்ற ஊரகப் பகுதிகளில் இருக்கும் அப்பாவி ஏழை மக்களையும்
நாட்டுக்கு எதிராகத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது. 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி,
கிட்டத்தட்ட 28 மாநிலங்களில் இந்த இயக்கத்தவர் பரவியிருந்தனர் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் பரவியிருந்த 40% நிலப்பரப்பு ‘சிவப்பு
இடைவழி’ (Red Corridor)
என்று குறிப்பிடப்பட்டது.
இவர்கள் ‘மக்கள் விடுதலை கொரில்லாப் படை’ (People Liberation Guerilla Army), ‘மக்கள்
போர்க் குழு’ (Peoples War Group)
போன்ற பெயர்களில் ஆயுதங்கள் ஏந்தி அரசுக்கு எதிராகப்
போராடினார்கள். அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் பொது மக்களைக் கொல்லவும் இவர்கள்
தயங்கியதில்லை. இவர்களுடனான சண்டையில் இதுவரை ஆயிரக்கணக்கான காவல்படையினர் இறந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றோர் இவர்களுக்கு எதிராகத் தீவிரமான
நடவடிக்கை எடுத்து வெற்றி பெற்றனர். ஆந்திரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற சில
மாநிலங்களில் இவர்களின் இயக்கம் மிகவும் குறைக்கப்பட்டு, சத்தீஸ்கார், பிகார், ஜார்கண்ட்,
கேரளா, மேற்குவங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் மட்டும்தான் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்திய பத்து வருடத் தாக்குதல்கள்
11 மார்ச் 2017: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள்
தாக்கியதில் 12 மத்திய சேமக் காவல் படையினர் பலியானார்கள்.
19 ஜூலை 2016: பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் 10 மத்திய சேம காவல் படையினர் கொலப்பட்டார்கள்.
20 ஜூலை 2015: பிகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டட வளாகத்தில்
2 விலைமதிப்புள்ள கார்கள், 1 டிராக்டர், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிக்கப்பட்டன.
அந்த வளாகமே சூறையாடப்பட்டது.
14 ஜூன் 2014: பிகார் மாநிலம் ஜாமுயி மாவட்டத்தில் தான்பாட்-பாட்னா ரயில் 500 மாவோயிஸ்டுகளால்
கடத்தப்பட்டது. மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர். 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். குண்டுகளும்
வெடித்தனர்.
10 ஏப்ரல் 2014: பிகார் லோக்சபா தேர்தல் சமயத்தில் ஒரு ஜீப்பைக் குண்டு
வைத்துத் தாக்கியதில், ஜீப் தூக்கி வீசப்பட்டு அதில் பயணம் செய்த இரு சி.ஆர்.பி.எஃப்.
கமாண்டோக்கள் இறந்தனர்; 6 பேர் படுகாயமுற்றனர்.
11 மார்ச் 2014: சத்தீஸ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடத்தப்பட்ட
தாக்குதலில் 15 பாதுகாப்பு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.
28 ஃபிப்ரவரி 2014: சத்தீஸ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நடந்த
தாக்குதலில் 6 போலிசார் கொல்லப்பட்டனர்.
2 ஜூலை 2013: ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஒரு காவல்துறைக் கண்காணிப்பாளரும் ஐந்து
போலிசாரும் கொல்லப்பட்டனர்.
25 மே 2013: சத்தீஸ்கார் மாநிலம் தர்பா பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதலில்
மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், மாநில அமைச்சர் மஹேந்திர கர்மா உட்பட 27
பேர் கொல்லப்பட்டனர்.
18 அக்டோபர் 2012: பிகார் மாநிலம் கயாவில் துப்பாக்கிச் சூடு மற்றும்
கண்ணிவெடித் தாக்குதலில் காவல்துறையினர் 6 பேர் இறந்தனர், 8 பேர் படுகாயமுற்றனர்.
29 ஜூன் 2010: சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எஃப்.
படையினர் கொல்லப்பட்டனர்.
8 மே 2010: சத்தீஸ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் குண்டு துளைக்காத காரை வெடித்துச்
சிதறச் செய்ததில் 8 சி.ஆர்.பி.எஃப். படையினர் இறந்தனர்.
6 ஏப்ரல் 2010: சத்தீஸ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப்.
படையினர் மீது நடத்தப்பட்ட கொரில்லாத் தாக்குதலில் 76 பேர் கொலப்பட்டனர்.
4 ஏப்ரல் 2010: ஒடிஷா மாநிலம் கோரபூர் மாவட்டத்தில் சிறப்புக் காவல்படையினர்
11 பேர் கொல்லப்பட்டனர்.
15 ஃபிப்ரவரி 2010: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்நாபூர் மாவட்டத்தில்
சில்டா என்கிற இடத்தில் இருந்த முகாமின் மீதான தாக்குதலில் கிழக்கு எல்லைப்புற ரைஃபில்
(EFR – East Frontier Rifles) படையினர் 24 பேர் கொல்லப்பட்டனர்.
8 அக்டோபர் 2009: மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் லஹேரி காவல்
நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 போலிசார் கொல்லப்பட்டனர்.
26 செப்டம்பர் 2009: சத்தீஸ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தால்பூரில்
உள்ள பைராகுடா கிராமத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் பாலிராம் கஷ்யப்பின் மகன்கள்
கொல்லப்பட்டனர்.
4 செப்டம்பர் 2009: சத்தீஸ்கார் மாநிலம் வனப்பகுதியில் ஆடேட் கிராமத்தில்
4 கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.
27 ஜூலை 2009: சத்தீஸ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணிவெடி வைத்து 6 பேர் கொல்லப்பட்டனர்.
18 ஜூலை 2009: சத்தீஸ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஒரு கிராமவாசி கொல்லப்பட்டார். பிஜப்பூர்
மாவட்டத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஒரு ஜீப் கொளுத்தப்பட்டது.
23 ஜூன் 2009: பிகார் மாநிலம் லகிசராய் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தங்களுடைய இயக்கத் தோழர்கள்
நால்வரைத் தப்பச் செய்வதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
16 ஜூன் 2009: ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் பந்தல்கண்ட் என்கிற இடத்தில் கண்ணிவெடித்
தாக்குதலில் 11 போலிசார் கொல்லப்பட்டனர். மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் 4 போலிசார்
கொல்லப்பட்டனர்.
13 ஜூன் 2009: ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ அருகே குண்டுவெடி மற்றும் கண்ணிவெடித் தாக்குதலில்
10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்.
10 ஜூன் 2009: ஜார்கண்ட் மாநிலம் சரண்டா வனப்பகுதியில் 9 போலிசார் சி.ஆர்.பி.எஃப், படையினருடன்
சேர்த்து தாக்கப்பட்டதில் அனைவரும் படுகாயமுற்றனர்.
22 மே 2009: மஹாராஷ்டிரா மாநிலத்தின் காட்சிரோலி காடுகளில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட
தாக்குதலில் 16 போலிசார் கொல்லப்பட்டனர்.
22 ஏப்ரல் 2009: ஜார்கண்ட் மாநிலத்தில் 300 பயணிகளுடன் கூடிய ரயில்
கடத்தப்பட்டது. ஜார்கண்டிலிருந்து லதேஹர் என்னும் ஊருக்குக் கடத்திச் சென்று அங்கிருந்து
தப்பித்துச் சென்றனர் மாவோயிஸ்டுகள்.
13 ஏப்ரல் 2009: ஒடிஷா மாநிலம் கொராபூர் மாவட்டத்தில் உள்ள பாக்ஸைட்
சுரங்கங்கள் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டன. அதில் 10 துணை ராணுவப்படையினர் கொல்லப்பட்டார்கள்.
16 ஜூலை 2008: ஒடிஷா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடியில்
சிக்கிய போலிஸ் வாகனம் தூக்கியெறியப்பட்டது. அதில் பயணம் செய்த 21 போலிசார் அந்த இடத்திலேயே
உயிரிழந்தனர்.
29 ஜூன் 2008: ஒடிஷா மாநிலத்தில் உள்ள பலிமேலா அணையில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த
ஒரு படகின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதில் 38 படைவீரர்கள் உயிரிழந்தனர்.
மாவோயிஸ்டு மற்றும் நக்ஸலைட்டுகளின்
தேச விரோத செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் சார்ந்துள்ள கம்யூனிஸக் கொள்கைதான்.
பொதுவாகக் கம்யூனிஸ்டுகளின் சரித்திரத்தையும், குறிப்பாக சீனத்து மாவோ, ரஷிய ஸ்டாலின்,
அர்ஜெண்டினாவின் சே குவேரா, கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோர்களின் வரலாற்றையும்
கூர்ந்து கவனித்தோமானால் வன்முறையையே கொள்கையாகக் கொண்ட இயக்கம் கம்யூனிஸம் என்பது
தெளிவாகத் தெரியும். பலகோடி அப்பாவி மக்கள் மேற்கூறப்பட்ட கம்யூனிச சர்வாதிகாரிகளால்
கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும், கம்யுனிஸக் கொள்கையின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள்
சின்னாபின்னம் அடைந்து அழிந்துள்ளன, மேலும் அழிந்து வருகின்றன என்பதும் புரியும்.
இந்தியாவிலேயே கூட 34 ஆண்டுகளுக்கும்
மேலாக, 1977 முதல் 2011 வரை மேற்குவங்கத்தில் ஆட்சி புரிந்த கம்யூனிஸ்டுகள் ஆயிரக்கணக்கான
அப்பாவி மக்களின் இறப்புக்கும், கொஞ்சம் கூட முன்னேற்றமே இல்லாமல் எப்பொழுதும் வன்முறை
நிகழ்வதற்கும், இஸ்லாமிய பயங்கரவாதம் பெருகுவதற்கும் காரணமாக அமைந்தார்கள். கேரளத்திலும்
அவர்கள் ஆட்சியில் வன்முறையும், பேரழிவும்தான் நடந்தேறி வருகின்றன.
ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில்
எல்லாம் நக்ஸலைட்டுகள் மாவோயிஸ்டுகளை அவிழ்த்துவிட்டு, தலைமறைவாக தேச விரோதச் செயல்பாடுகளில்
ஈடுபடுத்துவது கம்யூனிஸ்டுகளின் யுக்தி. இந்தியாவின் வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும்,
ஆன்மிகப் பாரம்பரியத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அந்நியக் கொள்கையை இந்தியாவின்
மீது திணிக்க முயலும் கம்யூனிஸ்டுகளின் நோக்கமே இந்தியாவை உடைத்துச் சின்னாபின்னப்படுத்துவதுதானோ
என்கிற சந்தேகம் பலமாக எழுகின்றது. இப்படிச் செயல்படும் கம்யூனிஸ்டுகளுக்கு உலகின்
பல இடங்களில் இருந்து உதவிகள் கிட்டுகின்றன. கம்யூனிச நாடுகளான சீனா, ரஷ்யா, போன்றவைத்
தொடர்ந்து மறைமுகமாக உதவி வருகின்றன.
இந்தியாவை உடைக்க விரும்பும் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அந்நாடுகளின் கிறிஸ்தவ
சபைகள்), மத்தியக் கிழக்கு நாடுகள் (அந்நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள்), அவர்கள் மூலமாக
இந்தியாவில் இயங்கும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் (NGOs), ஆகியவை இந்தக் கம்யூனிஸக்
கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நிதியுதவியும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து வருகின்றன.


உதாரணத்திற்கு மதமாற்றத்திற்காக
மலைப்பிரதேசங்களைக் குறிவைத்து இயங்கும் சர்ச்சுகளும், கிறிஸ்தவ NGOக்களும் அந்த மலைப்
பிரதேசங்களில் மறைந்து இயங்கும் நக்ஸலைட்டு மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளன.
அப்பாவி வனவாசி மக்களை மதம் மாற்றுவதற்கு அவர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டு, அவர்களின்
தேச விரோதச் செயல்களுக்கு இவை உதவி செய்கின்றன. மூளைச் சலவை செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்ட
மக்கள்தான் பாதுகாப்புப் படைகள், மத்திய சேம காவல் படைகள் ஆகியோரைப் பற்றிய தகவல்களை
மாவோயிஸ்டுகளுக்குத் தெரிவிக்கிறார்கள் என்கிற தகவல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கசிந்த
வண்ணம் இருக்கின்றது.
ஒடிஷா மாநிலம் கந்தமால் என்னுமிடத்தில்
தீவிரமாக நடைபெற்றுவந்த கிறிஸ்தவ மதமாற்றங்களைப் பெரிதும் தடுத்து வந்த, விசுவ ஹிந்து
பரிஷத் அமைப்பைச் சேர்ந்த லக்ஷ்மணானந்த சரஸ்வதி என்னும் துறவியை 2008ம் ஆண்டு மாவோயிஸ்டுகள்
படுகொலை செய்தனர். அவருடைய ஆசிரமத்தைத் தாக்கி அவருடன் பணிபுரிந்து வந்த மேலும் நான்கு
பேரையும் கொன்றனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான
தொடர்பு வெளிவரத்தொடங்கியுள்ளது. சத்தீஸ்கார் மாநிலத்திலும் கிறிஸ்தவ மதமாற்றம் மலைப்பகுதியின்
வனவாசிகளிடம் பரவலாக நடைபெற்று வருகிறது.
அறிவு ஜீவிகள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள்
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர்
பிரதமராகப் பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு இடதுசாரிகளிடமும் கிறிஸ்தவ சர்ச்சுகளிடமும்
மென்மையான போக்கைக் கடைப்பிடித்து நட்புறவும் கொண்டிருந்தார். அதனால் இடதுசாரி சிந்தனைகள்
கொண்டவர்கள் நாடெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஊடுருவிப் பதவிகளில் அமர்வதைக் கண்டுகொள்ளாமல்
இருந்தது காங்கிரஸ் அரசு. உண்மையில் அதை ஊக்குவித்தது என்று கூடச் சொல்லலாம். அவரே
கூட பல விஷயங்களில் இடதுசாரிக் கொள்கையுடன் இருந்தார். அவரைத் தொடர்ந்து இந்திராவும்
அவ்வாறே நடந்துகொண்டார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸ் அரசுகளே ஆட்சி புரிந்து
வந்ததால், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், ஊடகங்களிலும் இடதுசாரிச் சிந்தனையாளர்கள்
கிட்டத்தட்ட முழுவதுமாகவே ஊடுருவி உயர்ந்த பதவிகளில் அமர்ந்து, நிர்வாகத்தையும் கைப்பற்றினர்.
இதன் காரணமாக, கல்விக் கொள்கையும், பாடத்திட்டங்களும் அவர்களாலேயே தயாரிக்கப்பட்டன.
இந்தியாவின் கலாசாரத்திற்கு எதிராகவும், இந்தியாவின் உண்மையான வரலாற்றைத் திரித்தும்,
இந்தியாவின் மீது படையெடுத்து அடிமைப்படுத்திய அந்நியர்களைப் புகழ்ந்தும் பாடத்திட்டங்களை
அமைத்தனர். அது இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.
அறிவுஜீவித் தளத்தில் உள்ளவர்களும்,
அரசு சாரா அமைப்புகளும், மதச்சார்பின்மை, மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்கிற
பெயர்களில் பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், கம்யூனிஸ வன்முறை ஆகியவற்றுக்குப்
பேராதரவு தந்து, பெரும் தீனி போட்டு வளர்த்து வருகிறார்கள். இதற்கு சமீபத்திய இரு உதாரணங்களைக்
காட்டலாம்.
புரட்சி ஜனநாயக முன்னணி (Revolutionaru Democratic
Front)
என்கிற தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு
தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தந்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக, தில்லி பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர் சாய்பாபா என்பவருக்கு, அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, சென்ற மாதம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் பிரஷாந்த் ரஹி என்கிற பத்திரிகையாளரும், ஹேம்
மிஷ்ரா என்கிற ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவரும் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.
இதே போல பிரபல மூத்த பத்திரிகையாளரான
சித்தார்த் வரதராஜனின் மனைவி நந்தினி சுந்தர் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக
இருக்கிறார். இவர் மாவோயிஸ்டு இயக்கங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வருபவர். சத்தீஸ்கார்
மாநிலத்தில் உள்ள மலைப்பகுதி வனவாசிகளிடையே மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தருமாறு பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருபவர். கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மா மாவட்டத்தில் பாகேல் என்கிற
வனவாசி ஒருவரை மாவோயிஸ்டுகள் கொலை செய்தனர். அவரின் மனைவி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை
எடுத்த காவல்துறை, கொலை செய்த மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த நந்தினி
சுந்தர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. நந்தினி சுந்தருடன் ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனா பிரசாத் என்பவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகள்
நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய
ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. நாட்டில் சட்ட விரோதமாக இயங்கி வந்த இருபதாயிரத்துக்கும் அதிகமான
தேச விரோத NGOக்களின் உரிமத்தை ரத்து செய்து அவற்றுக்கு அனுமதி மறுத்து, அவற்றின் வங்கிக்கணக்குகளையும்
கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அவற்றுக்கு வந்துகொண்டிருந்த
வெளிநாட்டு நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. இதனால் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டு
வந்த வெளிநாட்டு NGOக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளன.
கடந்த நவம்பர் மாதம் ரூ.1000 மற்றும்
ரூ.500 ஆகிய கரன்ஸி நோட்டுகளைச் செல்லாதவையாக அறிவித்து, கறுப்புப்பணம் மற்றும் கள்ளப்பணம்
புழங்குவதைப் பெரிதும் முடிவுக்குக் கொண்டுவந்தது. இதனால் தீவிரவாத, பயங்கரவாத, பிரிவினைவாத
மாவோயிஸ்டு அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவோயிஸ்டு பயங்கரவாதத்தால் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கார் போன்ற மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் போர்க்கால
அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஏப்ரல் மாதம் தாக்குதல் நடத்தப்பட்ட
பஸ்தார் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சாலைகள், பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளால்
அனாதையாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஈடுபாட்டுடன் கல்வி கற்கின்றன. சுகாதார
வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்தக் காட்டுப்பகுதிக்கும், ஊரக, நகரப்
பகுதிகளுக்குமான இணைப்பு வேகமாக ஏற்பட்டு வருகின்றது. வனவாசிகளின் மனப்பாங்கிலேயே ஒருவிதமான
மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொழில் முனைவோர்களாக விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளைக்
கல்விகற்க அனுப்புகிறார்கள். காவல் நிலையங்களும் கட்டப்படுகின்றன. செல்போன் கோபுரங்களும்
கட்டப்படுகின்றன. இன்னும் இரண்டே ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதி மாவோயிஸ்டுகள் அற்ற பகுதியாக
மாறிவிடும் என்று உறுதியாக நம்பப்படுகின்றது.
இப்படிப் பலவிதமான வளர்ச்சிப் பணிகளையும்
அதற்கு வனவாசி மக்கள் பெரும் ஆதரவு தருவதையும் கண்டு மாவோயிஸ்டுகள் கடும் எரிச்சல்
அடைந்து வருகின்றனர். வனவாசி மக்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விடுதலை பெற்று
சுதந்திரக் காற்றை சுவாசிப்பதையும், தங்களின் தலைமறைவு நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகள்
குறைந்து வருவதையும் எண்ணி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். தங்களால் முன்போல்
செயல்பட முடியாமல் போகிறதே என்கிற எரிச்சலில்தான் அவர்கள் சமீபத்திய தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள்
என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசுகள் மேலும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
மாவோயிஸ்டுப் பகுதிகளில் வளர்ச்சித்
திட்டங்களைத் துரிதப்படுத்துவது மட்டுமல்லாமல் மேலும் சில நடவடிக்கைகளை மத்திய அரசு
உடனடியாக எடுக்க வேண்டும் அதற்கு மாநில அரசுகளும் உதவி செய்ய வேண்டும்.
இரண்டு மாதங்களாகத் தலைமை
(Director General – CRPF) அற்று இருக்கும் மத்திய சேமக் காவல் படையின் தலைமைப் பதவிக்குத்
தகுதியான அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும்.
நக்ஸலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு
எதிரான நடவடிக்கைகள், தாக்குதல்கள், அவர்களின் தாக்குதல்களை முறியடிப்பது போன்ற பலவிதமான
நடவடிக்கைகளுக்குத் தேவையான முறையான ராணுவப் பயிற்சியை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய
வேண்டும். அதற்காக ராணுவ அதிகாரிகளை நியமித்துப் பயிற்சி மையங்களையும் தொடங்க வேண்டும்.
ராணுவம், துணை ராணுவம், பாதுகாப்புப்
படைகள், மத்திய சேமக் காவல் படைகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆயுதங்கள்
தருவித்து, பெரிதும் ஊக்குவிக்க வேண்டும்.
2005ல் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக
வனவாசிகள் சேர்ந்து தாங்களாகவே தொடங்கிய ‘சல்வா ஜுடும்’ (Salwa Judum) என்கிற படை,
மாநில அரசின் ஆதரவுடன் நன்றாக இயங்கி வந்தது. ஆனால், இடதுசாரி அறிவுஜீவிகளும், அப்போதைய
மத்திய அரசும் சேர்ந்து அதைப் பெரும் பிரச்சினையாக ஆக்கி, பலமான அரசியலுக்கு உள்ளாக்கி,
உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிராகத் தடை பெற்றனர். அந்தப் படையில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான
வனவாசிகள், மாவோயிஸ்டுகளுக்குப் பயந்து இன்றும் தங்களுடைய கிராமங்களுக்குச் செல்ல முடியாமல்
அரசுக் காப்பகங்களில் அகதிகளாக இருக்கின்றனர். ஆனால் தற்போது மத்திய சேமக் காவல் படையே
‘பஸ்தார் படை’ (Bastariya Battallion) என்கிற வனவாசி இளைஞர்களைக் கொண்ட படையை அமைத்து
அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றது. பயிற்சி முடிந்ததும் அந்த இளைஞர்கள் மத்தியக்
காவல் படையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். அதைப்போல பயிற்சிப்படைகள் மற்ற மாவோயிஸ்டுப்
பகுதிகளிலும் தொடங்கப்பட வேண்டும்.
எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவென்றால் நகர்ப்புறங்களில்
இருக்கும் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அறிவுஜீவித் தளத்தில் இருக்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், பல்கலைப் பேராசிரியர்கள்,
ஊடகவியலாளர்கள் ஆகியோரே இவர்கள்.
இவர்களை ‘நகர்ப்புற
மாவோயிஸ்டுகள்’ என்று சொன்னலும் தகும். இவர்கள்தான் அரசுக்கு எதிராகவும், மாவோயிஸ்டுப்
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், சர்வதேச அளவில் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். கருத்துச்
சுதந்திரம் என்கிற பெயரில் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அந்த
அரசியல் அமைப்பை உருவாக்கிய ஜனநாயகத்திற்கு எதிராகவே இயங்குகிறார்கள். மனித உரிமை என்கிற
பெயரில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான கருத்துருவாக்கத்தைச் செய்கிறார்கள். அவர்களுக்குப்
பலவழிகளில் நிதியுதவியும் பெற்றுத் தருகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகள், சிறுபான்மையின
மத அமைப்புகள், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துகொண்டு
இயங்கி வருகிறார்கள். நீதித்துறையிலும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறாக அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அது அளிக்கும் சுதந்திரத்தையும் தவறாகப்
பயன்படுத்தி நாட்டின் ஜனநாயகத்துக்கே சவாலாக அறிவுஜீவித் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்
இந்த நகர்ப்புற மாவோயிஸ்டுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். அதற்காகத்
தேவைப்பட்டால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கூட கொண்டுவரவேண்டும்.
மாவோயிஸ்டுகளுக்கும், கம்யுனிஸ்டு
கட்சிகளுக்கும், கம்யூனிசக் கொள்கைக்கும் ஆதரவான கருத்துக்களத்தையும், நிதிமூலத்தையும்
கட்டுக்குள் கொண்டுவந்தாலே மாவோயிஸ்டு இயக்கத்தைப் பூண்டோடு அழித்துவிட முடியும். நாடெங்கும்
கம்யூனிஸ்டு கட்சிகள் வேகமாக அழிந்து வருகின்றன என்பதைக் கடந்த மூன்றாண்டுகளில் நடந்த
தேர்தல்கள் நிரூபிக்கின்றன. இது நல்ல முன்னேற்றம். மூன்றே மாநிலங்களில் அவர்களுக்கு
இருக்கும் செல்வாக்கையும் அழித்துவிட்டால் இந்தியாவிற்குப் பெரும் நன்மை விளையும்.
இவ்வுண்மையை மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள். ஆகவே, இந்தியா இடதுசாரி பயங்கரவாதத்தை
விரைவில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.
உதவிய பக்கங்கள்:

Leave a Reply