Posted on Leave a comment

சாகபட்சிணி [சிறுகதை] – சத்யானந்தன்

லத்தி இரும்புக் கிராதிக் கதவை ஓங்கித் தட்டிய சத்தத்தில் விழித்தவுடன் கல்யாணிக்கு பக்கத்து அடைப்பில் சிறைபட்டவள் நினைவுதான் முதலில் வந்தது. நேற்று மாலை அவள் அடைக்கப்பட்டு பெண் காவலாளி மறைந்ததும் சத்தமாக, “யாருடி நீ? உன் பேரென்ன? இன்னாத் தப்புக்கு மாட்டிக்கினே? விசாரணையா? இல்லே உள்ளே தள்ளிட்டாங்களா?” ஒவ்வொன்றாகக் கேட்டாள். பதிலே இல்லை. அழுத்தக்காரி.

பல்துலக்க, குளிக்க வெளியே வந்துதானே ஆக வேண்டும். தலையை வாரி முடிந்தபடி வெளியே வந்தவள் முதல் வேலையாக பக்கத்து அறையின் கதவை மெலிதாகத் திறந்து எட்டி மட்டும் பார்த்தாள். “உன் பேரென்னம்மா?” என்று குரல் கொடுத்தாள். காலையின் வெளிச்சம் படுக்கையாகும் ‘சிமெண்ட்’ மேடை மீது மங்கலாகவே விழுந்தது. கதவைத் தாண்டி உள்ளே போக பயமாயிருந்தது. முன்பு ஒரு முறை ஒருத்திக்குகிட்டே போய்ப் பார்க்க, அவள் கையைப் பிடித்து அழுந்தக் கடித்துவிட்டாள். காயம் ஆறுவதற்கு இரண்டு வாரம் ஆயிற்று.

ஓர் எட்டு உள்ளே வைத்து, கூர்ந்து பார்த்தாள். படுக்கை மேடை மீது இருப்பவள் எந்தப் பக்கம் தலை வைத்திருக்கிறாள்? வடக்குப் பக்கம் யாரும் வைக்க மாட்டார்கள். தெற்குப் பக்கம் முகம் தலைமுடி நிறையத் தெரிந்தது. “உன் பேரென்னம்மா?” குரல் கொடுத்தாள். பதில்லில்லை. உஷாராக ஓர் அடி எடுத்து வைத்தாள். முகம் மங்கலாகத் தெரிந்தது. ஒரு கடிகாரம் அது. எந்த முள் எந்தப் பக்கம் இருந்தது மூக்கும் வாயும் கடிகாரத்துக்குள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கடிகாரம் தலை முடிக்கற்றைகள் ஒன்றிரண்டு மேலே விழுந்த நிலையில் தெரிந்தது. கடிகாரக்காரி பேசுவதாகத் தெரியவில்லை. கதவை மூடிவிட்டு நகர்ந்தாள்.

பலமாக இரும்புக் கிராதி மீது லத்தி விழும் ஒலியில் கிருத்திகா விழித்திருந்தாள். பம்மிப்பம்மி ஒருத்தி எட்டிப் பார்த்து குரல் கொடுத்துவிட்டுப் போனதும் எழுந்து உட்கார்ந்தாள். கடிகார முகத்தின் கண்களால் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

‘பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்’ ராமசாமியின் மேஜை மீது கிருத்திகாவின் ‘கேஸ்’ கட்டு இருந்தது. அவர் வேறு ஒரு கட்டைப் பிரித்து வைத்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய அறையின் ‘பால்கனி’யிலிருந்து ‘கிர்கிர்’ என்று இரும்பைச் சுரண்டும் சத்தம் கேட்டபடி இருந்தது. எழுந்து பால்கனிக்கு விரைந்தார். ஒரு எலியின் நீள மீசை கம்பிகளுக்கு இடைப்பட்டு கூண்டுப் பொறிக்குள் இருந்து நீட்டிக் கொண்டிருந்தது.

“சுரேஷ்.” அலுவலக முன்னறையிலிருந்து ‘ஜூனியர்’ ஓடி வந்தான், “ஸார்.”

“இந்த எலியை ‘டிஸ்போஸ்’ பண்ணு.”

“ஷ்யூர் ஸார்.”

மறுபடி தனது மேஜைக்கு வந்தபடி ‘ஐசோ சைனட் காஸ்’ ஒரு ஆளை சாக அடிக்கிற அளவு தயார் பண்ண என்னென்ன ‘எக்விப்மெண்ட்’’ தேவைப்படும்னு ‘கூகுள்’ பண்ணி சாயங்காலம் நாம ‘டிஸ்கஸ்’ பண்ண ரெடியா வை.”

“கண்டிப்பா ஸார்.”

“மிச்ச வேலையையெல்லாம் விட்டுடு. இதை இன்னிக்கே ரெடி பண்ணு. நாளைக்கி கிருத்திகா பெயிலுக்கு அவ ப்ரெண்ட் மூவ் பண்றான். அவன் பேரென்ன?”

“ஆதித்யா ஸார்.”

“நாம் இதில சொதப்பினா வேற ‘ப்ராஸிக்கியூட்டர் கிட்டே கேஸ் போயிடும். மீடியால ஃப்ளாஷ் ஆன கேஸ் இது.”

“பாஸிட்டிவா சாயங்காலத்துக்குள்ளே ரெடி பண்றேன் ஸார்.”

குடும்ப நீதிமன்றத்தின் நடுவயது கடந்த ஆலோசகர் தொடர்ந்தார். “கிருத்திகா உங்க கம்ப்ளெயிண்ட்டில உங்க ஹஸ்பண்ட் டெய்லி அடிச்ச மாதிரியோ அல்லது அவர் ரொம்ப அடிக்டட் ஆயிட்ட குடிகாரன் மாதிரியோ ஒண்ணுமே இல்லையே.”

“மேடம். அப்டின்னா தினசரி அடிவாங்கி இருக்கணும் நான்னு சொல்றீங்களா?”

“நோ கிருத்திகா. யூ ஆர் நாட் கெட்டிங்க் இட். எந்த ஒரு தம்பதிக்கு நடுவிலேயும் வழக்கமா வரக்கூடிய சண்டைதான் உங்க ரெண்டு பேருக்கும் இருந்திருக்கு.”

அதற்குள் அம்மாளின் கைபேசி சிணுங்கியது. “வணக்கம் மேடம். தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க். நாளைக்கி காலையில அபிஷேகத்துக்குக் கண்டிப்பா வருவேன். இப்போ ஒரு ‘கவுன்ஸிலிங்க். அப்பறம் கூப்பிடறேன்.”

“மேடம் என்னோட சர்ட்டிஃபிகேட் எல்லாத்தையும் கொளுத்தினாரே அதை நீங்க படிக்கலே?”

“என்ன கிருத்திகா குழந்தை மாதிரி பேசறீங்க? நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே?”

“மேம். யூ வாண்ட் டு டவுன் ப்ளே எனிதிங்க் பட் வோண்ட் கிவ் மீ டைவர்ஸ்.”

“லுக் கிருத்திகா, திஸ் கவுன்ஸலிங்க் பிராஸஸ் ஈஸ் மேண்டேடரி. யூ ஹாவ் எ ஸ்மால் கர்ல் சைல்ட். ரிமெம்பர்.”

“பெண் குழந்தை இருந்தா டைவர்ஸ் கிடைக்காது, அதானே?”

“இவ்வளவு அவசரம் கூடாது, கிருத்திகா. யோசிச்சிப் பாரு. டைவர்ஸ்க்கு அப்புறம் வாழ்க்கை ரொம்ப சிக்கலாயிடும்.”

“இப்போ நரகமா இருக்கிற மாதிரியே என்னிக்கும் இருந்தா சிக்கலே இருக்காது, இல்லே? ஒருத்திய தினசரி அடிச்சுக் கொடுமைப் படுத்தினாத்தான் வலிக்குமா? அவளை கால் மிதிக்கிற டோர் மேட் மாதிரி, ஒரு கைநாட்டு மாதிரி நடத்தினா அது பரவாயில்லியா? புல் ஷிட்?” அம்மாள் மௌனமானார். அந்த ஆலோசனையை அத்துடன் நிறைவு செய்தார்.

‘காஃபி டே’ நேரம் போவதே தெரியாமல் சத்தமாகப் பேசும் இளசுகளால் நிறைந்திருந்தது. கிருத்திகாவும் ஆதித்யாவும் விதிவிலக்காக மௌனமாயிருந்தார்கள். நாற்காலியின் அருகே தரை மீது வைத்திருந்த முதுகுப்பையைத் திறந்து துழாவி ஒரு சின்னஞ்சிறு நகை டப்பாவை வெளியே எடுத்தான். “கேன் யூ ரி கால்?” என்றபடி தயக்கப் புன்னகையுடன் அவள் முன்னே அதை வைத்தான்.

கிருத்திகா அதைத் திறந்தபோது ஒரு சின்னஞ்சிறிய தங்க மோதிரம். ஆங்கிலத்தில் ‘கே’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டது தென்பட்டது. பத்து வருடம் முன்னாடி அவன் அதை நீட்டியபோது அது அவளுக்கு ஒரு சுற்றுப் பெரிதாயிருந்தது. அதன் பிறகு வாழ்க்கை பலசுற்றுகள் சுற்றி விட்டது.

“இதைக் கொடுத்துவிட்டுப் போகத்தான் வந்தியா?”

“ஞாபகார்த்தமா வேற எதையும் உடனே வாங்க முடியல கிருத்தி.”

“அப்பிடின்னா மெமெண்டோ குடுத்திட்டு ஜூட்டா?” புன்னகைத்தாள். அவன் முகம் இறுகி இருந்தது. மோதிரத்தை எடுத்து அணிந்து பார்த்தாள். கச்சிதமாகப் பொருந்தியது. அவன் கையை நட்புடன் பற்றினாள்.

“கிருத்திகாவோட பொண்ணு யாரு?”

“நான்தான் ஆண்டி. ரோஜா நிற ‘ப்ராக்’ அணிந்த எட்டு வயதுக் குழந்தை புன்னகையுடன் எழுந்து நின்றது. சளசளவென்று பேசும் பலவயதுப் பெண்கள், பெண் குழந்தைகள் இரு அறைகள் மற்றும் ஹால் முழுவதும் நிரம்பி வழிந்தார்கள். அவர்கள் நடுவே ஒரு வெண்கலச் சொம்பின் மீது தேங்காய், அதைச் சுற்றி ஒரு முழம் மல்லிககைப்பூ இவையெல்லாம் தரையில் பரப்பிய நெல் மீது வைக்கப்பட்டிருந்தன.

“உன்னை உங்க பாட்டி தேடினாங்க.” உடனே அந்தக் குழந்தை அமர்ந்திருந்தவர்களுக்கு இடைப்பட்ட கையகல இடங்களில் காலை வைத்து வாயிலை அடைந்த பின் குதித்துக் கொண்டு கீழ்த்தளத்திலுள்ள தன் வீட்டுக்குப் போய்க் கதைவைத் தட்டினாள். பாட்டிதான் திறந்தாள் “பாட்டி ஏன் என்னைக் கூப்பிட்ட? அங்கேயே ப்ரெக்ஃபாஸ்ட் சாப்ட்டுட்டேன். பட்டுப்பாவடை போட்டுக்கலியான்னு ஃப்ரெண்ட்ஸ் கூட ஸஜ்ஜெஸ்ட் பண்ணினாங்க,” என்றபடி தன் அறைக்கு விரைந்தாள்.

“சிந்து. நீ மறுபடி அங்கே போகவும் வேணாம். பாவாடைக்கெல்லாம் மாறவும் வேணாம்.”

“அவங்க என்னைப் போகச்சொல்லி சொல்லல பாட்டி.”

“லுக் சிந்துஜா. நீ நெனக்கற அளவு ‘சிம்பிள்’ ஆன விஷயம் கிடையாது இது. அவங்க சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தறாங்க. அங்கே நீ வர்றதை அவங்க விரும்பல.”

“என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அவங்க யாரையும் அப்பிடிச் சொல்லலியே . உனக்கு யாரு பாட்டி இப்பிடிச் சொன்னா?”

“கமலாப்பாட்டிதான் இப்போ ஃபோன் பண்ணி சொன்னாங்க.”

“எதுக்கு கமலாப்பாட்டி என் கிட்டே அங்கே சொல்லாம உனக்குப் போன் பண்ணினாங்க?”

“குழந்தைடி நீ. உனக்குப் புரியாது. உங்கம்மா கிருத்திகாவையோ உன்னையோ யாருமே எந்த கேதரிங்க்குக்கும் கூப்பிட மாட்டங்க.”

‘ஏன் பாட்டி?”

“மண்ணாங்கட்டி. இங்கேயே உக்காந்து புஸ்தகத்தை எடுத்து வெச்சுப்படிடி,” அவள் அறைக் கதைவை பாட்டி சார்த்தி விட்டுப் போனாள்.

கண்களில் நீர் நிறைய சிந்துஜா படுக்கையில் அமர்ந்தாள். சுவர்க்கடிகாரத்தைப் பார்த்ததும் அம்மா முகம் நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்து, “எங்கம்மா மாதிரியே இருக்கியே ஒரு கதை சொல்லேன்,” என்றாள்.

“கண்டிப்பாக சிந்து. உனக்குப் பிடிச்ச மாதிரியே கதை சொல்லப் போறேன்,” கடிகாரம் குரலைச் செறுமிக் கொண்டு துவங்கியது.

“ரொம்ப ரொம்ப காலம் முன்னாடி இமைய மலையையெல்லாம் தாண்டி நிறைய மலைகளுக்கு நடுவிலே பெரிய பாதாளமான ஓர் உலகம். அது முழுக்க முழுக்க அடர்ந்த காடு. அங்கே நிறைய விலங்குகள் ராட்சங்களெல்லாம் மட்டுந்தான் இருந்தாங்க.”

“ராட்சங்கன்னா யாரு?”

“ராட்சங்கன்னா உயரம் ரொம்ப ரொம்ப அதிகமா பத்தடி பதினைஞ்சடி இருப்பாங்க. ரொம்ப குண்டா தாட்டியா இருப்பாங்க. அவங்க விலங்கு மனுஷங்க யாரையும் உயிரோடையே சாப்பிட்டுடுவாங்க. காட்டுவாசிங்க கூட அதுக்கு பயந்து அந்தக் காட்டுப்பக்கம் போக மாட்டங்க.”

“ஓகே. மேலே சொல்லு.”

“ஆனா அங்கே அஜயின்னு ஒரு ராட்ச ஆண் குழந்தை பிறந்தான். அவன் சிறுவயசிலே இருந்தே செடி, கொடி, பழம் காய்ன்னு சாப்பிட்டு வளந்தான்.”

“ஏன் அவங்க அப்பா அம்மா அவனுக்கு அசைவமே கொடுக்கலியா?”

“கொடுத்தாங்க. அண்ணன், அக்கா எல்லோருக்கும் கொடுத்த மாதிரி சமைச்ச சமைக்காத அசைவத்தையெல்லாம் கொடுத்தாங்க. ஆனா அவனுக்கு செடி கொடிதான் புடிச்சிது. இதை ஒதுக்கிட்டு பழம் இலையின்னு சாப்பிடுவான்.”

“அவன் வீக் ஆயிட்டானா?’

“இல்லே வீக் ஆகல. பலமான ஆம்பிளையாத்தான் வளந்தான். ஆனா அவன் வயசுப் பசங்களோ மத்த ஆண் ராட்சங்களோ அவனை ஒரு ஆம்பிளையாவே ஏத்துக்கலே. சாகபட்சிணின்னு ரொம்ப வெறுப்பேத்தினாங்க”

“கிண்டல் பண்ணினவங்களை அவன் அடிச்சானா?”

“பொறுத்துதான் போனான். பத்துப் பதினைஞ்சு பேரை அவன் எப்படி அடிக்க முடியும்? அடிக்க ஆரம்பிச்சா அவன் நூத்துக்கும்மேலே கிண்டல் பண்ணினவங்களை அடிச்சாகணுமே.”

“அப்டினா கிண்டல் நிக்கவே நின்னிருக்காதே?”

“ஆமாம். அதனாலே அவன் எப்பவுமே தனியாவே இருக்க ஆரம்பிச்சான். ஒதுங்கி ஒதுங்கித் தனியா சுத்தினான்.”

“பாவம் அவன்.”

“ஆனா அவன் நிலமை அதை விடப்பாவமா ஆனது.”

“எப்படி?”

“அவனமாதிரியே கலியாண வயசிலே இருந்த ஒரு ராட்சப் பொண்ணும் அவனும் பழக ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரோட அப்பா அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் செஞ்சு வெச்சாங்க.”

“ரொம்பப் பாவம்னியே. கலியாணம்தானே ஆச்சு.”

“அவசரப்படாதே சிந்துஜா. அவனோட பொண்டாட்டிக்கிட்டே இருந்துதான் பிரச்சினை ஆரம்பிச்சிது”

“என்ன பிராப்ளம்?”

“நீ இனிமே அசைவம் சாப்பிட்டே ஆகணும்னு அவ கட்டாயப் படுத்தினா.”

“அவனுக்கு அது பிடிக்காதே?”

“என்ன பண்றது. அவ தினமும் கட்டாயப்படுத்தவே அவனும் சாப்பிட ஆரம்பிச்சான்.”

“அப்புறம்?”

“ஒரு வருஷத்திலே அவனுக்கு அசைவம் பழக்கமா ஆயிடுச்சு. ஆனா அவ இன்னொரு கட்டாயமும் பண்ணினா.”

“என்ன அது?”

“இனிமே யாராவது கிண்டல் பண்ணினா அவனை அடின்னா.”

“அஜய் எல்லாரையும் அடிச்சானா?’

“இல்லே. தயங்கித் தயங்கி ஒதுங்கினான்.”

“அடப்பாவமே. அவங்க கிண்டல் அதிகமாச்சா?”

“ஆமாம். ஒரு நாள் அவனோட மனைவி எதிர்க்கவே கண்டபடி கிண்டல் பண்ணினாங்க. அவ அஜய் முன்னாடிப் போய் நின்னு நீ இவங்களை அடிக்கறியா? நான் அடிக்கட்டான்னா? அப்போ அவன் என்ன பண்ணினான் தெரியுமா?

“என்ன?” சிந்து சற்றே பதட்டமானாள்.

“ஒரு பெரிய கல்லை எடுத்து வீசினான். எல்லாரும் ஓடினாங்க. ஆனால் ஒருத்தன் தலை மேலே அது விழுந்து மண்டையே சிதறி ரத்தம் பீச்சி அடிச்சிது. அதை அப்பிடியே உறிஞ்சிக் குடிச்சு இன்னொரு கல்லை எடுத்துக்கிட்டு துரத்திக்கிட்டே ஓடினான். எல்லோரும் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிக்கிட்டாங்க. அவன் அந்தக் கல்லை மேலே வீசி எறிஞ்சான். அது தரைமேலே பெரிய சத்தத்தோட விழுந்துது. அதை விட சத்தமா காடே அதிர்ந்து போற மாதிரி அவன் கடகடவென ஒரு வெறிச் சிரிப்பு சிரிச்சான்.”

“அதுக்கப்பறம்?”

“அதுக்கப்பறம் யாருமே அவனைக் கிண்டல் பண்ணலே. அவனைப் பாத்தாலே கையெடுத்துக் கும்பிட்டாங்க,” கதையை முடித்து கடிகாரம் மௌனமானது.

நீதிமன்றத்திலிருந்து மாலை திரும்பி வரும் வழியில் காரில் ‘பப்ளிக் பிராசிக்யூட்டர்’ ராமசாமி மௌனமாகவே வந்தார். பின் இருக்கையில் இருந்த மூன்று ‘ஜூனியர்’களும் சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்து பேசாமல் வந்தார்கள். ஆணை, திட்டு அல்லது அறிவுரை எதுவுமே இல்லாத பயணம் ஒருவிதத்தில் நிம்மதியாகவும் இருந்தது. சுரேஷ் தவிர மற்ற இருவரும் வழியில் ஒரு ரயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள்.

வீடு வந்த உடன் காரிலிருந்து இறங்கிய ராமசாமி, மாடியிலுள்ள அலுவலகத்துக்கு வராமல் கருப்பு அங்கியைக் கழற்றி சுரேஷ் கையில் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டார்.

சுரேஷ் மாடிக்கு வந்து ‘கேஸ்’ கட்டுக்களை அடுத்த முறை விசாரணைக்கு வரும் தேதிவாரியாக வரிசைப்படுத்தி அடுக்கி வைத்தான்.

கிளம்பும் முன் ‘பால்கனி’யிலிருந்து எலிப்பொறியின் கம்பிகளைக் கரண்டும் சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது.

எலிப்பொறியை எடுத்துக் கொண்டு, மாடிப்படிகளில் இறங்கி, தெருவுக்கு வந்தான். ஒதுக்குப்புறமாக வந்து ஒரு குப்பைத் தொட்டி அருகே எலிப்பொறியின் மேற்புறம் இருக்கும் நீண்ட மெல்லிய கட்டையை அழுத்த பொறியின் கதவு திறந்து கொண்டது. வெளியே வந்ததும் அந்த எலி ஒரு பெரிய பெண் புலியானது. சுரேஷின் முக்கால் உயரத்துக்கு இருந்த அது நிமிர்ந்து உறுமியது. சுரேஷ் வந்த வழியில் ஓடி மறைந்தான். செல்லும் இடம் தெரிந்தது போல் புலி நிதானமாக நடந்து சென்றது.

***

Leave a Reply