Posted on 1 Comment

யாரூர் – ஓகை நடராஜன்

முன்குறிப்பு: அண்மையில் தனியார்த் தொலைக்காட்சி ஒன்றின் பொழுதுபோக்கு
நிகழ்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருவாரூர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த
பிரித்திகா என்ற ஒரு சிறுபெண்மணி என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியதால் அவருக்கு என்
மனமார்ந்த நன்றி
. தன் அற்புதமான குரலிசையால்
ஆனந்தம் அள்ளித் தந்த அந்தப் பெண்ணைப் போற்றாமல் செல்ல
, அதை உணர்ந்த எவராலும் முடியுமா என்பது ஐயமே!
பொதுவாக எல்லாத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்
குப்பைகள்தாம்
. அதிலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பண்பாட்டு விரோதமாகவும் மலினங்கள் மலிந்தாகவும்
இருக்கும்
. பல நேரடிப் போட்டி நிகழ்ச்சிகள்
தெளிவாகத் திரைக்கதை எழுதப்பட்டு நடிக்கப்படுகிற நிகழ்ச்சிகளே
. அதனால் இப்போது சில பொறுப்புத் துறப்புகளைச்
செய்துவிடுகிறேன்
. இந்த நிகழ்ச்சியில் வெளிவந்த
தகவல்களைத் தவிர வேறெந்த மேலதிகத் தகவல்களும் தெரியாத நிலையிலும்
, அந்த நிகழ்ச்சியையோ அதில் பங்குகொண்ட மற்றவர்களையோ
கொஞ்சம் கூட அறியாமலும்
, பின்னணி விவரங்களைப் பொருட்படுத்தப்படாமலும் இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஆனாலும் விஜய் தொலைக்காட்சி கடந்த ஆறு மாதங்களாக
நடத்திய
சூப்பர் சிங்கர் ஜூனியர்-5’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிரித்திகா என்ற 12 வயதுப் பெண், இசை ரசிப்பில் இலட்சக் கணக்கான தமிழரிடையே ஒரு
இன்பச் சிற்றலையை ஏற்படுத்தியிருப்பதால்
, கண்டுகொள்ளப்படாத அரிய திறமைகள் இந்த நிகழ்ச்சிகளால் வெளிவருவதையும் பாராட்டியே
ஆகவேண்டும்
.
ஒரு புது மனிதரை அறிந்துகொள்ள அவரிடம் பொதுவாக
இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன
, அது அவர் பெயரும் ஊரும். பெயரை வைத்து இனி அவரை அழைக்கவும் அடையாளப்படுத்தவும் ஆரம்பிக்கலாம். ஆனால் ஊர்? அது தெரிந்து என்ன ஆகப்பொகிறது? உண்மையில் என்னென்னவோ ஆகிறது! அது தெரிந்த ஊராக இருந்தால், இந்த ஊர்க்காரன் இப்படியெல்லாம் இருப்பான் என்ற
ஊகமும் நடையுடை பாவனையும் நாகரிகமும் பண்பாடும் தொழிலும் ஒரு மின்னலடித்துச் செல்லும்
. தெரியாத ஊர் என்றால் ஊரைப் பற்றிய தெரிதலுக்கு
ஆரம்பமாக அமையும்
. பிறகு ஊர் சார்ந்த ஊகங்கள்
ஊற்றெடுக்கும்
. இப்படியாக திருவாரூருக்கு
அருகிலிருக்கும் ஒரு சிற்றூரிலிருந்து வந்த ஒரு சின்னப்பெண் தன் இசையால் பலருடைய கவனத்தைக்
கவர்ந்த நிகழ்வு என் கவனத்தையும் கவர்ந்தது
.
என் பெயரில் இருக்கும் முன்னொட்டான ஓகை என்பது
எனது முன்னோர்கள் வாழ்ந்த கிராமம்
. இது திருவாரூரிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கிறது. வயலும், வைக்கோல்போரும், வாய்க்காலும், வரப்புகளும், வண்டல் மண்ணும், வற்றாத கிணறுகளும், வாழ்வதற்கான அத்தனை வனப்புகளைக் கொண்டதும், மருத நிலத்தின் பண்புகள் மிகுந்து மிளிருவதுமான
ஒரு நிலத்துண்டு என் ஊர்
. எனக்கு ஓகை என்று சொல்லும்போது தஞ்சைத் தரணியுடன் ஏற்படும் தொடர்பில் ஒரு கற்பனை
சுகம் வந்துவிடும்
. இந்த சுகம் என் எல்லாப்
புலன்களையும் வருடிவிட்டுச் செல்லும்
.
வெறுங்காலில் நடக்கும்போது மெத்திடும் மென்மணலின்
சுகம்
, எப்போதோ தட்டுப்படும் நெருஞ்சி
முள்ளைத் தூர எறிந்த பின்னும் தொடரும்
. சுற்றிவரும் காற்றில் ஈரம் உயிர்ப்பாய் இருக்கும். அங்கு நான் உண்ட கன்னலும் களியும் இன்னமும்
நாவில் ருசிக்கும்
. ஆறும் சோலையும், மாவும் தெங்கும், ஆலும் அரசும், வாழையும் தாழையும், நாணலும் மூங்கிலும், கோவிலும் குளமும், மடுவும் குட்டையும், தேரும் திருவிழாவும், மீனும் மாடும், ஆடும் ஆனையும், இன்ன பிறவும் கண்களை விட்டகலாமல் இன்றளவும்
நிற்கும்
.
என் மூக்கு இன்னமும் இழக்காத ஒரு கலவை சுகந்தம்
சுவாசத்தில் என்றும் கலக்கும்
. சாணமும், புழுதிக் காற்றின் மண்மணமும், பச்சை நெடியும், இவற்றை இணைக்கும் ஏதோ ஒன்றும், நீர்நிலைகளின் பாசி மணமும், நெல்வேகும் புழுங்கல் மணமும், வெற்றிலைப் பாக்கு வாசனையும், பூக்களுக்கு மணமிருப்பதைச் சிலநேரம் மறந்து
போகச் சொல்லும்
. இந்நிலத்தில் காற்றின்
ஈரமும் கடுங்கோடையும் கூட்டணியாகிச் சுரக்கச் செய்யும் வியர்வையின் மணம் கூட வேறானதோ
என உணரும் ஒரு பொய்யை என் மனம் பலவேளை விரும்பிப் படைப்பிக்கும்
.
வாகீச கலாநிதிகளின் வளமான தமிழும், வட்டார வழக்காய் வாஞ்சையில் மூழ்கி வடிவிழந்த
சொற்களும்
, பல்லியத்தின் பண்பட்ட பல
இசையும்
, பண்டிதரின் பண்ணிசையும், பாமரரின் நாட்டுப் பாடல்களும், வடமொழி விற்பன்னரின் வியாக்கியானமும், வேத கோஷமும், நட்பின் நையாண்டியும் நக்கலும், இவையேதும் காதில் விழாதிருக்கும் நேரத்தில்
விரிவான ஆலாபனையாய் ஒரு நூறு பறவைகளின் ஓங்காரமும் கேட்கும்
.
காவிரி வறண்டபிறகு இதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப்
போனதென்று நொந்தே போயிருந்தாலும்
, வாடி வலித்திரங்கிப் போன தஞ்சைத் தரணியின் உயிரும் உடலும் மாறாதே என்ற நினைப்பும், இது போன்ற பழைய நினைப்புகளும், இதோ, இப்போது வந்ததுபோல் எப்போதோ வரும் செய்திகளும்தான், அந்த வலி தெரியாமல் வருடும் கைகளாய் இருக்கின்றன.
திருவாரூர் தமிழகத்தின் நாயன்மார்கள் வரலாறு
பதிவு செய்யப்படும் காலத்திலிருந்து தொடர்ந்து பதிவுகளில் இருக்கிறது
. தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள்
பரிமளித்த பதி இது
. அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும்
இத்தலத்தை ஆசைதீரப் பாடியிருக்கிறார்கள்
. சுந்தரின் வரலாறே பெருமளவில் திருவாரூரில் நடக்கிறது. அவர், ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்…’ என்று தொடங்கும் தமது திருத்தொண்டத் தொகையில்திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்என்றே கூறுகிறார். சேக்கிழாரோ பல படிகள் மேலே போய்திருக் கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்
கணத்தார் பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
…’ என்று திருவாரூர் பிறந்த அனைவரும் சிவபெருமானின்
தேவகணங்கள் என்று கூறி விடுகிறார்
. பெரியபுராணத்தில் இந்நகர் சிறப்பாக பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இவ்வளவு பெருமைக்குரிய திருவாரூரில்தான் சங்கீத
மும்மூர்த்திகள் அவதாரம் செய்தார்கள்
. இன்றும் என்றும் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் பெருமளவில்
பாடப்படுகிற கர்நாடக சங்கீதப் பாடல்கள் இவர்களுடையதுதான்
. மிக விஸ்தாரமான கோவிலும், அதே விஸ்தாரமான கமலாலயம் என்ற குளமும், ஆசியாவிலேயே மிகப் பெரியதுமான ஆழித்தேரும் கொண்டது
திருவாரூர்
. இதனால்தான்பாரூர் எல்லாம் ஓரூர் என்னும் ஆரூர்என்று புகழப்படுகிறது. இது சிவபெருமானுக்கான சப்த விடங்கத் தலங்களில்
முதன்மையானது
. நடனத்தை அடிப்படையாகக்
கொண்ட இந்த வழிபாட்டுத் தலங்களில் இங்கு சிவன் ஆடுகின்ற நடனம்
உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும்
அஜபா என்கிற நடனம்
. குரலிசைக்கு ஆதாரமான மூச்சே
நடனமாகி இருக்கும் இந்த ஊரின் இசை ஊற்று எப்போதும்பொங்கிக் கொண்டே இருக்காதா என்ன
சரஸ்வதிக்காக ஒட்டக்கூத்தர் நிறுவிய கூத்தனூர் கலைமகள் ஆலயம் திருவாரூரிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கிறது. அதனால்தானோ இவ்வூர் உள்ளடங்கிய தஞ்சைத் தரணி (தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்) முற்றிலும் எங்கெங்கு நோக்கினும் கலைத்தாயின்
கருணாவிலாசம் பொங்கி வழிகிறது
. இந்த மண்ணின் மகிமையை எழுதிச் சளைக்காதவர் தி. ஜானகிராமன். இதையே கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா
மோகனாம்பாள் புதினமும் உரக்கச் சொல்கிறது
.
இந்த ஊர் ஈன்ற இசையூற்று, பிரித்திகா என்ற ஒரு சின்ன பெண்மணி. இவரைப் பற்றி விக்கி வலைத்தளம் என்ன சொல்கிறது
என்று முதலில் பார்த்துவிடுவோம்
.1


உலகெங்கும் வாழும் தமிழர்களில் இலட்சக் கணக்கானோரின்
இதயத்தைத் தன் இசையால் திருடியவர் இந்தப் பெண்
. யூட்யூப் தளத்தில் மட்டும்  இவரது 7 பாடல் காணொளிகள் ஒவ்வொன்றும் 10 இலட்சம் தடவைக்குமேல் பார்க்கப்பட்டிருக்கின்றன. இவரது எல்லாப் பாடல்களும் குறைந்தது 5 இலட்சம் தடவைகளுக்குமேல் பார்க்கப்பட்டிருக்கின்றன.  ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோஎன்ற பாடல் 40 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், ‘மன்னார்குடி கலகலக்கபாடல் 25 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், ‘மச்சான் மீச வீச்சருவாபாடல் 10 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், ‘அய்யய்யோஎன்று தொடங்கும் பருத்திவீரன் படப்பாடல் 17 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும்சொய் சொய்என்ற கும்கி படப்பாடல் 10 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், இப்போதுவரை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும் மேலும் இவை தொடர்ந்து பார்க்கப்பட்டு
வருகின்றன
. இந்தப் பெண் போட்டியில்
வெல்வதற்காக
6 இலட்சத்துக்கும் மேலானவர்கள்
வாக்களித்திருக்கிறார்கள்
.
வெறும் 6 மாதத்துக்கும் குறைவான காலத்தில் இவ்வளவு பெயர்பெற்ற
இந்தப் பெண்மணிக்கு எந்தவிதமான இசைப் பயிற்சியும் இல்லை
. அது கிடைக்காத இடமும் எட்டாத இடமுமாக ஒரு கூலித்
தொழிலாளியின் மகளாய் அரசுப் பள்ளியில்
7ம் வகுப்புப் படித்துக்கொண்டு சத்துணவு சாப்பிட்டு வாழும் கிராமத்துப் பெண். இந்த விவரணையைத் தன் உருவத்தாலும் பார்த்தமாத்திரத்தில்
சொல்லிவிடுகிற ஒரு பெண்
. தேசிய கீதத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இந்தப் பெண் பாடியவிதத்தில் திறமையைக்
கண்டுகொண்ட இப்பெண்ணின் பள்ளி ஆசிரியர்கள் இப்பெண்ணை முன்னெடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின்
பாராட்டைப் பெற்றுவிடும் இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்
. இன்னும் பலரும், நானும் கூட, திரும்பத் திரும்பக் கேட்கும்படி இந்தப்பெண்
பாடிய பாடல்கள் நாம் தினமும் கேட்கும் ஜனகனமனவிலிருந்தும் நீராரும் கடலுடுத்தவிலிருந்தும்
முளைவிட்டு வெளிப்பட்டிருப்பது ஒரு பேராச்சரியம்தான்
.
இந்தப் பெண்ணின் குரல், பயிற்சியால் எவராலும் எட்ட முடியாத ஒன்று. அது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற வரம். உருக்கி வார்த்து, அடித்து நீட்டி, மெலித்து மெருகேற்றிய தங்கக் கம்பி அல்ல இவரது
குரல்
. தனக்காகத் தானாய் தன்னெச்சில்
ஊற்றெடுத்து தன்கூடு தான் கட்ட உமிழ்ந்திழுத்த மென்பட்டு இழை
. மின்பட்டுத் தாரை. வெட்டுப்பிசிறு இன்னதென்று அறியாத துகில்பட்டு. சுத்த சுயம்பிரகாசச் சுயம்பு. நாட்டுப் பாடல்களின் நன்நாற்றமும் நகர்பாடல்களின்
மின்வெட்டுகளும் மென்பாடல்களின் உள்வண்ணமும் இவர் குரலில் பொங்கிப் பிரவகிக்கிறது
. சோலையில் பூத்துகுலுங்கும் வளர்செடி போலல்லாமல்
கடுங்காட்டின் நடுவில் கண்கூச ஒளிரும் பச்சைப் பசுஞ்செடி போலிருக்கிறது இவர் குரல்
. அது மல்லிகை மணமறியாமல் வளர்ந்து மலர்ந்திருக்கும்
மல்லிகை
.
இசையின் தாய் சுரமும் தந்தை லயமும் என்று சொல்வார்கள். இந்த அடிப்படைகளுக்குப் பிறகு மிளிரும் இசை
பேரானந்தம் அளிக்கிறது
. நாட்டுப்புற இசைக்கு லயம் என்பது உயிர்நாடி. அதன் தளமும் வெளியும் தாளம்தான். அதைத் தன் அங்கங்களில் ஒன்றாகப் பெற்றிருக்கிறாள்
இந்தப் பெண்
. பெரிய சங்கீதக்காரர்களுக்கே
அது பயிற்சியால் பொருத்திக் கொண்ட ஒரு விஷயம்தான்
. சுருதியும் சுரமும்தான் ஒலியை இசையாக்குகிறது. ஆனால் இவர் சொல்வதே சுரமாக இருக்கிறது இவரது
பாடல்களில்
. இது வெறும் உயர்வு நவிற்சி
இல்லை
. இவர் பாடிய பிறகு அது எவர்பாடலாக
இருந்தாலும் இவர் பாடலாக மாறிவிடுவதாக இந்த நிகழ்ச்சியின் நடுவர்களான இசை வல்லுநர்கள்
சொல்கிறார்கள்
. இவர் பாடிய பிறகு மூலப்
பாடலைக் கேட்டால் சில பாடல்களில் நிச்சயமாக அது தெளிவாக நடக்கிறது
. இவர் இயல்பாகச் செய்யும் சில ஜோடனைகளால் அது
நிகழ்கிறது
. அதற்கு அங்கீகாரமும் ஏற்பும்
கிடைக்கிறது
. இவர் பாடலின் தொடக்கமும்
முடிப்பும் இவர் பாடலுக்கு இவரே சேர்க்கும் இருபுறத்து உறை அணிகளாக இருக்கின்றன
.
கர்நாடக சங்கீதப் பயிற்சி இவருக்கு வாய்க்கவில்லை. இனிமேல் நடக்கலாம். கர்நாடக சங்கீதம் ஒரு சட்டகம். நீண்டு அகன்று உயர்ந்த ஒரு முப்பரிமாணச் சட்டகம். ஒரு பெருங்கூண்டைப் போல. கர்நாடக சங்கீதப் பயிற்சி முடிந்த ஒருவர் இந்தக்
கூண்டுக்குள் செல்கிறார்
. ஆனால் அவர் உயரத்துக்கு அவரால் அதைக் கூண்டாக உணராமல் பெருவெளியாக வியாபித்திருப்பதாகவே
உணர்வார்
. வளர வளர எல்லைகள் கண்ணுக்குத்
தென்படும்
. ஆனால் எவராலும் எல்லைகளைத்
தொடமுடியாது
. அதை நோக்கிய பயணமே செய்ய
முடியும்
. வெகு சிலரால் அந்தக் கூண்டின்
உள்ளிருந்தே வெளியே வளர முடிந்திருக்கிறது
. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை அவ்வாறு சொல்லலாம். கச்சேரி சங்கீதம் தொடாத பல எல்லைகளைத் திரை
இசையில் வந்த கர்நாடக சங்கீதம் தொட்டிருக்கிறது
. நாட்டுப்புறப் பாடல்கள் இந்தக் கூண்டுக்கு உள்ளேயும்
வெளியேயுமாய் வாழ்கிறது
. இந்தப் பெண்மணி கூண்டுக்கு வெளியே இருப்பதாகவே நான் உணர்கிறேன். இவர் அதனுள்ளே செல்லும்போது நாட்டுப்பாடல்கள்
அனுமதித்துப் போற்றிய சில சிறகுகளோடு செல்ல முடியாது
. சிலர் வெட்டிக்கொண்டு உள்ளே செல்வார்கள். சிலர் சுருக்கிக் கொண்டு உள்ளே செல்வார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கோ அங்கும் இங்குமாய்
சிறகுகளை விரித்துவிடும் திறமை இருக்கலாம்
. அந்த மாயமும் நிகழலாம்.
இந்தப் பெண் தமிழை அனுபவிப்பதை என்னால் அனுபவிக்க
முடிகிறது
. நாட்டுப் பாடல்களின் உயிர்
அதன் சொல்லிலும் அது தரும் பாவத்திலும் இருக்கிறது
. இதை இவர் மிக எளிதாகச் செய்கிறார். சில சில உச்சரிப்புகளை இவர் இன்னும் மேம்படுத்திவிட்டால்
அது இவர்
  எப்பொழுது எதைப் பாடினாலும் அது தமிழ்த்தாய் வாழ்த்தாகவே இருக்கும். மண்ணின் மணம் மனித உருக்கொண்டாற்போல்  வந்திருக்கும் இவர் தமிழிசை வடிவாகவே மாறிவிடுவார். இவர் குரல் இவருக்கு இறைவன் கொடுத்தது. ஆனால் அக்குரலின் பாவமும் சுவையும் அவர் பிறந்த
மண் கொடுத்திருக்கிறது
. ஆயிரமாயிரம் கலைஞர்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அந்த மண்ணைப் போற்றுகின்றேன். அந்த மண்ணின் மாமகளைப் போற்றுகின்றேன்.
இந்தப் பெண்ணுக்கு தமிழ்நாட்டில் ஓர் இணை நிகழ்வு
இருக்கிறது
. அது கொடுமுடி என்ற கொங்குநாட்டு
சிற்றூரிலிருந்து சின்னஞ்சிறு பெண்ணாகப் புறப்பட்ட கேபி சுந்த
ராம்பாள். மிகப்பெரிய வறுமையில் பிறந்து தன் சொந்தக் குரல்வளத்தால்
இசைத் திறமையால் விண்முட்ட வளர்ந்த அந்தப் பெருந்தகையை இந்தப் பெண் எனக்கு நினைவுபடுத்துகிறார்
. தன் உருவத்தாலும் கூட ஓரளவுக்கு அவரைக் கொண்டிருக்கும்
இவருக்கு
, அவருக்கு அன்று கிடைத்த
பாலர் நாடக மேடைகளைப் போல் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி கிடைத்திருக்கிறது
. அதைப் போல ஓர் இசைப்பேரரசி நமக்குக் கிடைக்கிறாரா
என்று பார்ப்போம்
. இதை இப்போது கட்டியமாகக்
கூறவைத்திருப்பது அந்த ஆரூர் அருகில் வீற்றிருக்கும் கலைமகள் எனக்கிட்ட ஆணையாகக் கூட
இருக்கலாம்
.
அடிக்குறிப்புகள்:

1 thought on “யாரூர் – ஓகை நடராஜன்

  1. கருநாடக,மற்றும் பிற வரை/ முறைப்படுத்தப்பட்ட இசையினை பற்றிய சிந்தனை அருமையான வஞ்சப் புகழ்ச்சி.
    KBS போல் இயற்கைக்கொடையை வளப்படுத்த, சிறுமியின் சிறகுகள் வளர வாழ்த்துக்கள் .
    வண்டு துளை மூங்கில் துவாரங்கள் ஊடே காற்றின் ஒலி, குழந்தையின் அழுகை-சிரிப்பு, தாலாட்டு அழிக்க முடியாத, வரைப்படுத்த முடியா இயற்கை இசை.

Leave a Reply