Posted on Leave a comment

விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – அரவிந்தன் நீலகண்டன்

’ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அது பிரிட்டிஷாரை ஆதரித்தது’ – இது ஊடகங்களில் ஒரு சாராரால் அடிக்கடி பரப்பப்பட்டு வருகிறது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இவ்விதமாகக் குற்றம் சாட்டி மங்களூரில் பேசிய உரையை தமிழ்நாட்டில் ஒரு பதிப்பகம் சிறு வெளியீடாக வெளியிட்டுப் பரப்பியது. இணையதளத்தில் அதன் பிடிஎஃப் பெரிய அளவில் சுற்றுக்கு விடப்பட்டது. இதே போன்ற குற்றச்சாட்டுக்களைத் தொகுத்து, இன்னும் கறாராக Wire.in எனும் தீவிர இடதுசாரி இணையத்தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இக்குற்றச்சாட்டுக்களின் சாராம்சம் என்ன?

· ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் தொடக்கக் காலங்களில் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டாலும் கூட பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய பிறகு விடுதலைப் போரிலிருந்து விலகிக் கொண்டார்.


· ஆர்.எஸ்.எஸ் ஒரு அமைப்பாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறவில்லை.


· காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது ஆர்.எஸ்.எஸ் அப்போராட்டத்தில் பங்கு பெறவில்லை. அது பிரிட்டிஷாரை ஆதரித்தது.


டாக்டர். ஹெட்கேவாரும் விடுதலைப் போராட்டமும்

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர். கேசவ பலராம் ஹெட்கேவார், வங்காளத்தில் தம் மருத்துவ படிப்பின்போதே அனுசீலன் சமிதி எனும் புரட்சியாளர் இயக்கத்தில் செயலாற்றியவர். முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷாருக்கு எதிரான அன்னிய நாடுகளின் உதவியுடன் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை ஏற்படுத்த, வெளிநாடுகளில் இருந்த இந்திய விடுதலைப் போராளிகளுடன் இந்தியப் புரட்சியாளர்கள் ஒரு ரகசிய தொடர்பு வட்டத்தை ஏற்படுத்தினர். அம்முயற்சியில் ஹெட்கேவார் ஈடுபட்டார். ஆனால் சரியான ஒருங்கிணைப்பும் பிரிட்டிஷாருக்கு எதிரான அன்னிய நாடுகளின் ஒத்துழைப்பும் இல்லாமல் அம்முயற்சி தோல்வி அடைந்தது.

பின்னர் டாக்டர். ஹெட்கேவார் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டார். நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பில் அவர் இருந்தார். காங்கிரஸ் இயக்கம் காந்தி தலைமையில் கிலாபத்தை ஆரம்பித்தது. துருக்கியில் கலீபா அரசு கலைக்கப்பட்டதற்கு எதிரான இஸ்லாமியப் பிரச்சினையை இந்திய விடுதலைப் போராட்டத்துடன் கலப்பது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் அவருக்கு ஐயம் இருந்தது. இருந்தாலும் காங்கிரஸில் அவர் இருந்தபடியால் நாக்பூர் கிலாபத் அமைப்பின் கமிட்டியில் அவர் உறுப்பினராகச் செயல்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை அவர் 1925ல் தொடங்கிய பிறகும் அவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். டிசம்பர் 1929ல் காங்கிரஸ் பரிபூரண சுதந்திரத்துக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜனவரி 26 1930 பூரண விடுதலை நாளாக நாடெங்கும் கொண்டாடப்படும் என அது அறிவித்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் கிளைகளின் பொறுப்பாளர்களுக்கு ஹெட்கேவார் பின்வரும் சுற்றறிக்கையை அனுப்பினார்:

காங்கிரஸ் பரிபூரண சுதந்திரத்தை தன் குறிக்கோளாக அறிவித்து 26 ஜனவரி 1930ம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாட மக்களைக் கோரியுள்ளது. நாம் விடுதலை எனும் நம் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது இயற்கையாகவே நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகும். அக்குறிக்கோளுடன் உழைக்கும் எந்த அமைப்புக்கும் நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்பது நம் கடமையாகும். எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எல்லாக் கிளைகளிலும் (ஷாகாக்களிலும்) மாலை ஆறு மணிக்கு நம் தேசியக் கொடியான காவிக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்துவோம். விடுதலை என்பதன் உண்மையான பொருளை விளக்குவோம். இந்த இலக்கை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதால் இதனை நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சிக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதன் அறிக்கைகளைப் பொறுப்பாளர்கள் அனுப்ப வேண்டும். (21-ஜனவரி-1930,தேதியிட்ட கடிதம், Rakesh Sinha, Dr Keshav Baliram Hedgewar, Publications Division, 2015, p.95)

அதெப்படி காவிக்கொடியை தேசியக் கொடி என ஹெட்கேவார் குறிப்பிடுகிறார் என்று எவருக்கேனும் ஐயம் ஏற்படலாம். ஹெட்கேவார் இக்கடிதத்தை எழுதியதற்கு ஒரு ஆண்டுக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி 1931ல் தேசியக் கொடியைத் தேர்ந்தெடுக்க அதிகாரப்பூர்வக் குழு ஒன்றை நியமித்தது. அதில் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தும் உறுப்பினராக இருந்தார். அக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் அது தேசியக் கொடியாக காவி வண்ணக் கொடியில் நீல இராட்டை பொறித்த கொடியையே பரிந்துரைத்தது. அக்குழுவின் அறிக்கை கூறியது:

எங்கள் குழுவின் பார்வையில் தேசியக் கொடியானது தனித்தன்மை கொண்டதாகவும் கலையழகு கொண்டதாகவும் செவ்வக வடிவத்திலும் வகுப்புவாதத்தன்மை அற்றதாகவும் இருக்க வேண்டும். கொடியின் நிறம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு ஒருமித்த கருத்தே உள்ளது. கொடி ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். அதில் இருக்கும் சின்னம் மட்டும் வேறொரு நிறத்தில் இருக்க வேண்டும். இத்தேச மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக, வேறெந்த நிறத்தையும் காட்டிலும் தனித்தன்மை கொண்டதாக, இந்தப் பழமை வாய்ந்த தேசத்தின் நீண்ட பாரம்பரியத்துடன் இணைந்த ஒன்றாக ஒரு நிறம் உண்டென்றால் அது காவி நிறமாகத்தான் இருக்க முடியும்.

1930ல் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட வன சத்தியாகிரக போராட்டத்தில் அவர் ஈடுபட்டுச் சிறை சென்றார். அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் வயது ஐந்துதான். ஆர்.எஸ்.எஸ் முழுமையான தேச விடுதலை என்கிற இலக்கை ஆதரித்தது. ஆனால் அது அரசியல் இயக்கமல்ல. எனவே அரசியல் இயக்கங்களில் அது ஒரு அமைப்பாகப் பங்கேற்க முடியாது என்ற போதிலும் தனிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அதாவது ஸ்வயம் சேவகர்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளலாம். காங்கிரஸாக இருந்தாலும் இந்து மகா சபையாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலந்து கொள்ளாது. ஹெட்கேவாரின் இந்த நிலைப்பாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமல்ல, இந்து மகாசபை தலைவராக அன்று இருந்த சாவர்க்கருக்குமே எரிச்சலூட்டியது.

தனிப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை அதன் கட்டுப்பாடு, தீண்டாமையின்மை ஆகியவற்றுக்காகப் பாராட்டியுள்ளார்கள். இதில் காந்தியும் அடங்குவார். ஆனால் இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் தம் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்று சில காங்கிரஸ் தலைவர்கள் (காந்தி அல்ல) விரும்பினார்கள். ஆனால் ஹெட்கேவார் அதை ஏற்கவில்லை.

ஆனால் இயக்கப் பங்கேற்பு இல்லாவிட்டாலும் சங்கம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உதவி அளிக்கத் தயாராகவே இருந்தது. த்ரைலோக்கியநாத் சக்ரபர்த்தி எனும் வங்கப் புரட்சியாளர் ஹெட்கேவாரைச் சந்தித்து இதுகுறித்து உரையாடினார். வருங்காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் பட்சத்தில் அதற்கான தொண்டர்களை அளிக்க ஹெட்கேவார் அவருக்கு உறுதியளித்தார்.1 பகத் சிங்கின் தோழரான ராஜ்குரு ஹெட்கேவாரை அறிவார். சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு தலைமறைவாக ராஜ்குரு இருக்க ஸ்வயம்சேவகர்கள் உதவினர். பின்னர் காங்கிரஸ் பெரும்புள்ளி ஒருவரின் உறவினரால் ராஜ்குரு பிரிட்டிஷாருக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

வரலாற்றாசிரியர் முனைவர் காஞ்சான்மோய் மஜும்தார் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். 1935ல் காங்கிரஸ் தம் உறுப்பினர் எவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக இருக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட காங்கிரஸில் ஒரு முக்கியமான தலைவராக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டாக்டர் ஹெட்கேவாருக்குத் தூது அனுப்பினார். ஆயுதம் தாங்கிய புரட்சி ஏற்படும் பட்சத்தில் அதற்கு ஆர்.எஸ்.எஸ் உதவி அளிக்க வேண்டுமென்பது போஸின் கோரிக்கை எனக் கூறப்படுகிறது.

‘மாடர்ன் ரிவ்யூ’ (மார்ச் 1941) பத்திரிகை ஹெட்கேவாரின் மரணத்துக்கு ஒருநாள் முன்னர் நேதாஜி போஸ் அவரை மரணப் படுக்கையில் சந்தித்தார் என்பதை ஆவணப்படுத்துகிறது.

’குருஜி’ கோல்வால்கரும் விடுதலைப் போராட்ட காலகட்டமும்

டாக்டர் ஹெட்கேவாருக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் தலைவராகப் பதவி ஏற்றவர் கோல்வால்கர். பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி அகண்டானந்தரிடம் தீக்கை பெற்றவர். அகண்டானந்தர் தீர்த்த யாத்திரை செல்லும்போது சரகாச்சி எனும் இடத்தில் ஏழை இஸ்லாமியச் சிறுமி ஒருத்தி பஞ்சத்தில் படும் கஷ்டத்தைக் கண்டார். ஏழைகளின் துயர் துடைப்பதே ஆன்மிகச் சாதனை என தீர்க்கயாத்திரையை விட்டுவிட்டு சேவையில் களமிறங்கி வாழ்ந்தார். அவரிடம்தான் கோல்வால்கர் தீக்கை பெற்றார். இயல்பாகவே கோல்வால்கருக்கு அரசியலில் ஒரு விலகல் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் அப்போதுதான் கவனம் பெற ஆரம்பித்திருந்தது. குறிப்பாக பிரிட்டிஷ் உளவு அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்ஸைக் கவலையுடன் உற்றுக் கண்காணிக்க ஆரம்பித்திருந்தன. ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாற்றை ’A brotherhood in Saffron’ எனும் தலைப்பில் எழுதிய ஆண்டர்ஸன் & தாம்லே கோல்வால்கரின் மனநிலையைக் குறித்து ‘பிரிட்டிஷ் அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்ய எந்த விதக் காரணத்தையும் தாம் அளித்துவிடக் கூடாது என்பது கோல்வால்கரின் மனநிலையாக இருந்தது’ என எழுதுகின்றனர்.

பொதுவாக இதைக் குறித்து கோல்வால்கரே ஒத்துக் கொள்வதாக அவரது பேச்சிலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்படுவதைக் காணலாம்: “1942லும் பலரது மனதிலும் தீவிரமாக உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. …சங்கம் செயலூக்கமற்ற மனிதர்களால் ஆன அமைப்பு, அவர்களின் பேச்சுக்களெல்லாம் பயனில்லாதவை என்கிற எண்ணம் வெளியிலிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, நம் ஸ்வயம் சேவகர்களுக்கே ஏற்பட்டிருந்தது. அவர்கள் பெருமளவில், 1942 பிரிட்டிஷ் வெளியேற்ற இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடாதது குறித்து அருவெருப்படைந்தனர்.’ சித்தார்த் வரதராஜன் என்கிற அமெரிக்க வாழ் இடதுசாரி நடத்தும் wire.in என்கிற இணைய தளத்தில் அண்மையில் ஆர்.எஸ்.எஸ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என வெளிவந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள கோல்வால்கரின் பேச்சு இது.

ஆனால் இம்மேற்கோள் சொல்லாமல் விட்டுவிடும் இரண்டு முக்கிய வாக்கியங்கள் இப்பேச்சில் உண்டு. “அக்கால கட்டத்திலும் சங்கத்தின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. சங்கம் நேரடியாக எதையும் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தது.”

இதில் முக்கியமான வார்த்தை ‘நேரடியாக’ என்பதுதான். பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸை நேரடியாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்துடன் தொடர்புப்படுத்த எந்தத் தரவும் பிரிட்டிஷ் அரசுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

நேரடிச் செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாக ஈடுபடவில்லையே தவிர பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குள் வெளிப்படையாகக் கற்பிக்கப்பட்டதை அதே ஆவணங்கள் கூறுகின்றன.

27 ஏப்ரல் 1942 தேதியிட்ட பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கை: ‘பூனா ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கோல்வால்கர் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் சுயநலத்துடன் செயல்படுவோரைக் கண்டித்து சுவயம்சேவகர்களிடையே பேசினார்.’

28-ஏப்ரல்-1942: இனிவரும் காலகட்டங்களில் சுவயம்சேவகர்கள் தேசத்துக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 2

உள்துறை செயலகத்தில் Pol. F. No. 28/3/43-Pol (I) எனும் இலக்கமிட்ட உளவுத்துறை அறிக்கை ஜபல்பூர் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பிரிட்டிஷ் எதிர்ப்பு பகிரங்கமாக இருந்ததை ஆவணப்படுத்துகிறது. “பிரிட்டிஷ் அரசை இந்தியாவிலிருந்து அகற்றுவதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்” என அங்கே பேசிய அனைவருமே குறிப்பிட்டதாகக் கூறுகிறது. (கவனிக்கவும் முஸ்லீம்களை விரட்டுவதல்ல, பிரிட்டிஷாரை விரட்டுவதே நோக்கம் என, பிரிவினைவாத அலையும், வகுப்பு மோதல்களும் நிலவியபோதும் ஆ.எஸ்.எஸ்ஸுக்குள் பேசியிருக்கிறார்கள்.)

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ’நேரடியாக’ ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் பங்கு பெறவில்லைதான். ஆனால் மறைமுகமாக முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவியதென்பதை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் கூறியுள்ளார்கள். டெல்லி ஆர்.எஸ்.எஸ் தலைவரான லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா அவர்களில் இல்லத்தில்தான் பிரிட்டிஷ் காவல்துறைக்குத் தெரியாமல் விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா அஸஃப் அலி மறைந்திருந்தார். அச்சுத் பட்வர்த்தன், நானா பட்டில் ஆகியோரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் வீடுகளில் மறைந்திருந்து செயல்பட முடிந்தது.

காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்கூட அழிக்கப்பட்ட ஒரு அத்தியாயமும் உண்டு.

ஆகஸ்ட் 16 1942ல் மகாராஷ்டிர மாநிலத்தில் சிமூர் பகுதியில் பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை இங்கு வழி நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள். இந்த எழுச்சி பிரிட்டிஷ் காவல்துறையால் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் எனப் பாரபட்சமின்றி அனைவரும் தாக்கப்பட்டுக் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இதுபோதாதென்று பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிமூர் ஆர்.எஸ்.எஸ் கிளைத்தலைவர் தாதா நாயக் ஒருவர். துப்பாக்கிச் சூட்டிலும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் எழுச்சியின் காரணமாக மூன்று நாட்களுக்கு இங்கு விடுதலையே அறிவிக்கப்பட்டு பிரிட்டிஷாரால் நுழையவும் முடியவில்லை. இறுதியில் ராணுவ போலீஸ் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளே நுழைந்து ஒரு படுகொலையை நிகழ்த்தியது. ஆனால் இது குறித்த செய்திகள் வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டது அரசு.

உளவுத்துறை அறிக்கைகளில் சிமூர் கிளர்ச்சிக்கு முக்கியமான காரணியாக இருவர் சொல்லப்பட்டனர். ஒருவர் தாதா நாயக் – இவரே ‘பெருமளவு பொறுப்பு’ எனக் கூறப்பட்டது. இவர் தவிர நான்கு ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட மற்றொருவர் சந்த் துகோஜி மகராஜ். பக்தி இயக்க பாணியில் சமூக சீர்திருத்தங்களைச் செய்தவர். காந்தியர். இவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இவரும் கைது செய்யப்பட்டார். காந்தியவாதியான பன்சாலியின் உண்ணா விரதப் போராலும், இந்து மகாசபைத் தலைவரான நாராயண் பாஸ்கர் கரே ஆகியோரின் முயற்சியாலும் இத்தண்டனைகள் தவிர்க்கப்பட்டன. சந்த் துகோஜி மகராஜ் பின்னாட்களில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை உருவாக்கினார்.

ஆனால் சிமூர் கிளர்ச்சியும் படுகொலையும் பிரிட்டிஷாரால் அன்றும் பின்னர் நேருவியவாதிகளாலும் மறக்கடிக்கப்பட்டன என்றே சொல்ல வேண்டும். இதன் விளைவாகத்தான் இன்றும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ள வில்லை என்பதை இன்றும் பரப்ப முடிகிறது.

ஒரு வளரும் இயக்கமாக அன்னிய ஆட்சியால் எப்போதும் தடை செய்யப்படும் ஆபத்தும் அன்றைய காங்கிரஸில் சில பொறாமை கொண்டவர்களால் எவ்வித உதவியும் கிடைத்திராத நிலையும் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போரில் சிறப்பாகவே பங்காற்றியுள்ளது. ஆனால் இப்படியெல்லாம் குற்றம் சாட்டும் இடதுசாரிகள் என்ன செய்தார்கள்?

அதை அடுத்த இதழில் காணலாம்.

1. Satyavrata Ghosh, Remembering our revolutionaries, Marxist Study Forum, 1994 p.57)

2. No.D. Home Pol. (Intelligence) Section F. No. 28 Pol.

Leave a Reply