Posted on 1 Comment

பிக் பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை – ஹரன் பிரசன்னா

ஹிந்தியில் மிகப் பிரபலமான பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி ஸ்டார்விஜய் தொலைக்காட்சி மூலம் கமல்ஹாசனின் ஆதரவுடன் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளது. அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமல் இருப்பதே நாகரிகம். ஆனால் அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஓர் ஆர்வம் எப்போதும் நமக்குள் இருக்கிறது. ஒருவர் இன்னொருவரைப் பற்றி என்ன நினைக்கிறார், என்ன பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ளும் குறுகுறுப்பு மோசமானது என்றாலும் மிக இயல்பானது. இத்தகைய வம்பு புரளிகளில் இருந்து ஒதுங்கி நிற்க நினைப்பதுவே வளர்ச்சி. நமக்குள் இருக்கும் இந்தக் குறுகுறுப்பை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சியே பிக்பாஸ்.

வட இந்தியாவில் ஹிந்தியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பட்டபோது நட்சத்திர அந்தஸ்தில் இருந்த சல்மான்கான், அமிதாப் போன்ற பெரிய நடிகர்கள் பங்கேற்றார்கள். தமிழில் இதற்கு ஏற்ற நபர் கமல்ஹாசன் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்து அவரை ஒப்புக்கொள்ளச் செய்வதில் வெற்றியும் பெற்றிருக்கிறது ஸ்டார்விஜய் தொலைக்காட்சி. கமல் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டதன் மூலம் ஸ்டார்விஜய் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் கூடும். எப்போதும் முதலித்தில் இருக்கும் சன் தொலைக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வரவும் கூடும். பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேரும். இதெல்லாம் ஸ்டார்விஜய் தொலைக்காட்சியின் வெற்றி என்று வைத்துக்கொண்டால், இதற்கு இணையான அளவுக்கு கமல்ஹாசனின் வீழ்ச்சி இருக்கும். கமல்ஹாசனுக்குப் பணம் கிடைக்கும் என்பதோடு, இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் வரை கமல்ஹாசன் தொடர்ந்து விவாதத்தில் இருப்பார் என்பதெல்லாம் உண்மையே. ஆனால் நட்சத்திர அந்தஸ்து உள்ள கமல்ஹாசன் இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், முன்பு இருந்த அதே பார்வையில் மக்களால் பார்க்கப்படமாட்டார். வட இந்தியாவில் அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்ற நடிகர்களுக்கு இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை என்று இதற்கு பதிலாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மாறி நிகழும் என்றே நான் நினைக்கிறேன். தொலைக்காட்சிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு நடிகர் வருவது அவரது வீழ்ச்சி என்றே இங்கே பொருள்கொள்ளப்படுகிறது. இது உண்மையல்ல என்பதெல்லாம் விவாதத்துக்குரியது என்பதுதான் என்றாலும், இதுதான் இன்றைய நிலையில் யதார்த்தமாக உள்ளது.

 இந்நிகழ்ச்சியின் அடிப்படை, அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் துடிக்கும் மனப்பான்மைதான். அதிலும் அடுத்த வீடு ஒரு நடிகையின் வீடென்றால் நமது முழுக்கவனமும் அந்த வீட்டின் மேல்தான் இருக்கும். ஒரு நடிகையின் கதை என்ற ஒரு தொடர் வந்தபோது தமிழகமே அந்த நடிகையின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி விவாதித்தது. அந்த நடிகை யாராக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு நடிகையைச் சொன்னார்கள். இன்னொருவரின் அந்தரங்கம் நமக்கெதற்கு என்ற வெட்கம் கிஞ்சித்தும் யாருக்கும் இல்லை. நடிகை என்றாலே ஒரு பொதுப்பொருள் என்கிற மனப்பான்மையே இதில் ஆதாரமாக வெளிப்படுகிறது. தன் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்பதை அடிக்கடி ஜபிக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டிருப்பதுதான் சுவாரஸ்யமான முரண். இதனாலேயே இந்த நிகழ்ச்சி தொடர்பாகப் பல்வேறு சாதகமான கருத்துக்களைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரும் சளைக்காமல் புதியதாக எதோ ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கமல் சொல்லும் முக்கியக் காரணம், இந்நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் அத்தனை பேரும் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் என்பது. அதாவது அவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கிறோம் என்று சொல்கிறார். மிக சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு கமல் இதனையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அடுத்தவர் பணத்துக்காகவும் புகழுக்காகவும் கையெழுத்துப் போட்டு ஒப்புக்கொண்டாலும், அடுத்தவர் வீட்டுப் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கக்கூடாது என்பதே மேன்மையான நிலைப்பாடு. இதை உரக்கச் சொல்லவேண்டிய கமல், தான் இதில் பங்கெடுப்பதாலேயே, இதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதில் திரைக்கதை எதுவும் இல்லை என்று கமல் மீண்டும் மீண்டும் நியாயப்படுத்த முயல்கிறார். முப்பது கேமராக்களுடன் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்பதையும், நூறு நாள்கள் வெளியுலகத் தொடர்பே இல்லை என்பதை எல்லாம் நம்ப வெள்ளந்தி மனது வேண்டும். அப்படி ஒருவேளை மிக நியாயமாக நேர்மையாக இவர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அங்கே அவர்கள் பேசுவது எல்லாமே அவர்களாகவே பேசுவது மட்டுமே என்று நம்ப தனியாக இன்னொரு வெள்ளந்தி மனம் வேண்டும். கமல் இருப்பதால் இதில் திரைக்கதை இருக்க வாய்ப்பில்லை என்று சில அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். இவர்களைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை. இதில் நடக்கும் ஒவ்வொரு நடிகரின் வசனமும் எழுதப்பட்டுக் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும், யார் எப்படிப் பேசவேண்டும் என்பதில் தெளிவான திரைக்கதை ஒன்று உள்ளது. அதைச் சொல்லிவிட்டால், அதற்குப் பின்பு அந்த நடிகர் தனக்கான திரைக்கதையைத் தானே எழுதிக்கொண்டுவிடுவார். இப்படித்தான் இந்நிகழ்ச்சி நடைபெற முடியும். இந்நிகழ்ச்சி தொடர்பாக கமல் அளித்த பேட்டியில், ‘ஒருவேளை நான் இதற்குத் திரைக்கதை வசனம் எழுதி இருந்தால்’ என்று சொல்கிறார். இப்படிச் சொன்னதன்மூலம் யாரோ ஒருவர் இந்நிகழ்ச்சிக்குத் திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் என்பதை தன்னை அறியாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியின் பொதுத்தன்மை இப்படி இருக்கிறது. திடீரென்று எதோ ஒரு பிரபலம் பிக் பாஸ் வீட்டில் இன்னொரு பிரபலத்தின் மீது கோபம் கொண்டு என்னவோ சொல்கிறார். இக்காட்சி இத்துடன் முடிவடைகிறது. சில பிரபலங்கள் சேர்ந்து, கோபப்பட்ட பிரபலத்தைப் பற்றித் தவறாகப் பேசிக்கொள்வார்கள். இக்காட்சிக்குப் பின்னர், இன்னொரு இடத்தில், இன்னும் சில பிரபலங்கள் சேர்ந்து கோபப்பட்ட பிரபலம் செய்தது சரிதான் என்று பேசிக்கொள்வார்கள். இப்படியே மாறி மாறி இன்னொருவரைப் பற்றிக் குறை சொல்லிப் புரளி பேசுவார்கள். இதே சண்டையை நான்கைந்து நாள் போடுவார்கள். பின்பு மன்னிப்பு கேட்கும் படலம் ஆரம்பிக்கும். இந்த மன்னிப்பையும் குறை சொல்லி ஒரு கும்பலும், பாராட்டி ஒரு கும்பலும் பேசும். இது நடந்துகொண்டிருக்கும்போதே ஒவ்வொரு பிரபலமும் தன்னைப் பற்றி, தன் நேர்மையைப் பற்றி ஓயாமல் பேசிக்கொள்வார்கள். நடிகைகள் வீட்டில் இருப்பது போல மிக யதார்த்தமாக இருப்பது போன்ற பாவனையுடன் குட்டைப் பாவாடையில் கவர்ச்சி உடையில் வருவார்கள். ஆட்டம் போடுவார்கள். ஒரு நடிகை இன்னொரு நடிகரிடம் காதல் வயப்படுவார். அந்த நடிகர் இந்தக் காதலைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு நடிகையிடம் ஆசை ஆசையாகப் பேசுவார். அடுத்த காட்சியில் தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன நடிகையைப் பற்றிப் புறம் பேசுவார். மனித மனங்களுக்கு உள்ளே கிடக்கும் பொறாமை, கோபம், நம்பிக்கை இன்மை என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்துக் காட்சிகளும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதையே கமல்ஹாசன் சமூகத்துக்குத் தேவையான நிகழ்ச்சி என்கிறார்.

உண்மையில் ஒரு நெடுந்தொடரால் என்ன என்ன மோசமான விளைவுகள் உண்டாகும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த அத்தனை மோசமான நிகழ்வுகளும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியால் கூடுதலாக உண்டாகும். புறம் பேசுதல் நம் அடிப்படை உரிமை என்ற எண்ணம் நம் ஆழ்மனதுக்குள் விதைக்கப்படும். இருக்கும் கொஞ்சநஞ்ச குற்ற உணர்வும் மழுங்கடிக்கப்படும். இந்த நிகழ்ச்சியையே கமல்ஹாசன் தன் நட்சத்திர அந்தஸ்த்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். கமல் இல்லையென்றால் வேறொருவர் அறிமுகம் செய்து வைத்திருப்பார் என்பதும் உண்மையே. அதேசமயம் இதை இன்று தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது கமல்தான் என்பதும் உண்மையே. இந்நிகழ்ச்சியால் நம் ஆழ்மன அழுக்குகள் களையும் என்று நம்பும் அப்பாவிகளே தொடர்ந்து இந்நிகழ்ச்சியைப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்னுமொரு பொழுதுபோக்கு என்று கடப்பவர்களே, இதைச் சரியாகக் கணித்தவர்கள். மாறாக இது சமூகத்துக்கு நல்ல பலன் தரும் நிகழ்ச்சி என்று கொடி பிடிப்பவர்கள் ஏமாளிகள்.

கமல்ஹாசன் இதை நடத்துகிறார் என்ற ஒரே காரணத்துக்காக சப்பைக்கட்டு கட்டி இந்த நிகழ்ச்சியில் உள்ள நல்லவற்றையெல்லாம் பட்டியலிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள். பிக்பாஸ் நான் பார்ப்பதில்லை என்று யாராவது சொன்னால் அது போலித்தனமான அறிவுஜீவி பாவனை என்றெல்லாம் எழுதுகிறார்கள். உண்மையில் கமல்ஹாசன் இருப்பதால் இந்நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சியாகவே இருக்கும் என்று நம்புவதுதான் போலித்தனமான அறிவுஜீவி பாவனை என்பதை இவர்கள் உணர்ந்தார்களில்லை.

இது தொடர்பான பத்திரிகை சந்திப்பில் கமல் இந்நிகழ்ச்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகிறார். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. அதில் உள்ள தேசபக்தி தொடர்பான விவாதங்கள் எல்லாம் நிச்சயம் நாம் பொருட்படுத்த வேண்டியவையே. ஆனால் கிரிக்கெட் போன்ற ஒரு ஆட்டத்தை தான் நடத்தும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியோடு ஒப்பிடுவது எல்லாம் அபத்தம். பணம் பத்தும் செய்யும் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை.

இந்நிகழ்ச்சியை சமூக அந்தஸ்துள்ள நிகழ்ச்சியாக்க கமல் எடுத்த அடவுகளில் முக்கியமானதும் அராஜகமானதும் எதுவென்றால், ‘இந்நிகழ்ச்சி கூட்டுக் குடும்பம் போன்றது’ என்றதுதான். திருமணம் என்பதே தேவையற்றது என்று தன் வாழ்வில் கடைப்பிடித்த ஒருவர் இன்று இந்நிகழ்ச்சிக்காக கூட்டுக்குடும்ப முறைக்கெல்லாம் வக்காலத்து வாங்குகிறார். கூட்டுக் குடும்பங்களின் நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் நமக்குப் புதிதல்ல. இன்றைய காலத்துக்கு எது ஒத்துவருமோ அதை நோக்கி நாம் நம் அனுபவத்தின் மூலம் வந்தடைந்திருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் கொட்டப்படும் உணர்வுகள் எல்லாமே கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவித்த பிரச்சினைகள்தான். அதை மட்டுமே கணக்கில் கொண்டு இந்நிகழ்ச்சியைக் கூட்டுக்குடும்பத்துடன் ஒப்பிடுவதைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே முடியும். இன்னும் சொல்லப்போனால், கூட்டுக் குடும்பத்தை உடைக்கவே இந்நிகழ்ச்சி உதவும். ஒருவேளை கமலின் ஆழ்மனத்தில் இந்த ஆசையும் எதிர்பார்ப்பும்தான் இருக்கின்றனவோ என்னவோ.

கமல் போன்ற ஒரு நடிகர் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்திருப்பது நிச்சயம் வருத்தத்துக்கு உரியதே. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களுக்கு வக்காலத்து வேண்டிய அவலமும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அரைவேக்காட்டுத்தனமான வேடிக்கைகளைத் தாங்கிப் பிடிக்கவேண்டிய கொடுமையும் கமலுக்கு நேர்ந்திருக்கவேண்டாம். அதைவிட முக்கியம், மீண்டும் மீண்டும் புறம் பேசி பொய்யாக நடித்து அதையே நேர்மையாகச் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கூட்டத்தின் அலுப்பூட்டும் திரைக்கதையை இயக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு கமல் மேற்பார்வையாளராக வந்திருப்பது, அவர் இத்தனை நாள் உயர்த்திப் பேசிக்கொண்டிருந்த கலை என்பதற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதது, எதிரானது. கமலுக்குப் பணத்துடன் கிடைத்திருக்கும் இந்த தண்டனையே ஆகப்பெரியது.

1 thought on “பிக் பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை – ஹரன் பிரசன்னா

  1. நல்லவேளையா இதை எல்லாம் பார்க்கலை! பார்க்கணும்னு தோணவும் இல்லை! 🙂 விஜய் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை. பார்த்தால் எப்போவானும் பொதிகை தான்! ஒரு சில செய்தி சானல்கள்! 🙂

Leave a Reply