Posted on 1 Comment

போஜராஜனின் சம்பு ராமாயணம் – பெங்களூரு ஸ்ரீகாந்த்

வால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச்சென்றார். அதற்குப் பின்னர் பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தைப் பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது.

பொதுவாக உரைநடையிலோ (கத்யம்), கவிதை வடிவிலோ (பத்யம்) தான் காவியங்கள் பெரும்பாலும் இயற்றப் பட்டு வந்த நிலையில், போஜராஜன் சம்பு (Champu) என்கிற காவிய அமைப்பில், கவிதையையும் உரைநடையையும் கலந்து வித்தியாசமாக அளித்திருக்கிறார்.

க³த்³யானுப³ந்த⁴ ரஸமிஶ்ரித பத்³யஸூக்தி:
ஹ்ருத்³யா ஹி வாத்³யகலயா கலிதேவ கீ³தி: |
தஸ்மாத்³த³தா⁴து கவிமார்க³ஜுஷாம்ʼ ஸுகா²ய
சம்புப்ரப³ந்த⁴ ரசனாம்ʼ ரஸனா மதீ³யா ||
(பாலகாண்டம் – 3)

வாத்தியங்களும் வாய்ப்பாட்டும் இணைந்து ஒலிக்கும்போது அது கேட்பவர்களுக்கு எத்தனை இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போல கவிதையும் உரைநடையும் கலந்த சம்பு பிரபந்தமாக அமைந்துள்ள என் கவிதை, ரசனை மிகுந்த பெரியோர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கட்டும் என்று கூறுகிறார் கவி.

அவையடக்கம்

பகீரதன் கதை தெரிந்ததுதான். தன் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்று அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய, தேவலோகத்தில் இருந்து கங்கையை கடுந்தவம் இருந்து தருவித்தான் பகீரதன். இன்றோ சாதாரண மனிதர்கள் கூட தன் முன்னோர்களுக்காக அதே கங்கை நீரை வெகு சுலபமாக எடுத்து தர்ப்பணம் செய்து விடுகிறார்கள். அது அவர்களின் முன்னோர்களுக்கும் நற்கதியை அளித்து விடுகிறது.

அதே போல, வால்மீகி முதலிய மாபெரும் கவிகள் மிகுந்த பிரயாசைப்பட்டு, அனைவரும் ரசித்து அனுபவிக்கும் விதத்தில் தம் வாழ்நாள் சாதனையாக வெளிப்படுத்திய கதையை, சுலபமாக நானும் எடுத்து என் சிறு முயற்சியில் காவியமாகப் படைத்தால் அதனை நல்லோர்கள் விரும்ப மாட்டார்களா என்ன என்று சாதுர்யமாகக் கேட்கிறார்.

வால்மீகிகீ³த ரகு⁴புங்க³வகீர்திலேஶை:
த்ருʼப்திம்ʼ கரோமி கத²மப்ய்து⁴னா பு³தா⁴னாம் |
க³ங்கா³ஜலைர்பு⁴வி ப⁴கீ³ரத²யத்னலப்³தை⁴:
கிம்ʼ தர்பணம்ʼ ந வித³தா⁴தி நர:பித்ருʼணாம்ʼ ||
(பாலகாண்டம் – 4)

சம்பு ராமாயணம் வால்மீகியின் கதையமைப்பை அப்படியே தொடர்ந்தாலும் போஜனின் கவித்துவம் பல புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறிப்பிட்டு ஒரு சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீராம ஜனனம்

பழைய இலக்கியங்கள் பெண்ணழகைப் பலவிதங்களில் பாடியிருந்தாலும், தாய்மையுற்றிருக்கும் பெண்ணை வர்ணித்த கவிதைகள் அதிகம் கிடைப்பதில்லை. தசரதனின் பட்டத்தரசிகள் பாயசத்தை அருந்தி கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றார்கள் என்ற அளவில் மற்ற இராமாயக் காவியங்கள் கடந்து சென்று விடுகின்றன. ஆனால் போஜன் அழகிய கவிதைகளால் தாய்மை அடைந்த அரசியர்களை மேலும் அலங்கரிக்கிறார்.

அபாடவாத்கேவலமங்க³கானாம்ʼ மனோஜ்ஞகாந்தேர்மஹிஷீஜனஸ்ய |
ஶனை: ஶனை: ப்ரோஜ்ஜி²தபூ⁴ஷணானி சகாஶிரே தௌ³ஹ்ருʼத³லக்ஷணானி ||
(பாலகாண்டம் – 25)

ஒளிபொருந்திய அரசியர்கள் சிற்சில காலத்தில், உடல் மெலிந்து ஆபரணங்கள் கூட அணியமுடியாமல் ஆனது, அவர்களிடம் இரு இதயம் உள்ளதற்கான அடையாளங்கள், தௌஹ்ருத லக்ஷணங்கள் அல்லது த்வி ஹ்ருதய லக்ஷணங்கள் அழகாக மிளிர்ந்தன.

குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணை, இரண்டு இதயம் உள்ளவள் (குழந்தையின் இதயம் மற்றும் தாயின் இதயம்) என்று கவிஞர் சமத்காரமாகக் குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல் பின்வருமாறு கூறுகிறது.

மாத்ருʼஜன்யஸ்ய ஹ்ருʼத³யம்ʼ மாதுஶ்ச ஹ்ருʼத³யேன யத் |
ஸம்ப³த்³த⁴ம்ʼ தேன க³ர்பி⁴ண்யா நேஷ்டம்ʼ ஶ்ரத்³தா⁴விமானனம்ʼ ||

சாதாரண நாட்களில் ஒரு பெண்ணுக்கு சில உணவு, உடைகள், வாசனைகள் பிடிக்கும். ஆனால் பேறுகாலத்தில் அந்த விருப்பு வெறுப்புகள் பெரிதும் மாறி இருக்கும். முன்பு பிடிக்காதது இப்போது வேண்டும் என்று கேட்பார்கள். இதற்குக் காரணம் உள்ளே இருக்கும் இன்னொரு இதயம்தான் என்கிறது இந்த ஆயுர்வேத நூல். கவி போஜனுக்கு ஆயுர்வேதம் தெரியும் என்பதால்தான் அந்தக் குறிப்பை இங்கே கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

அரசியர் மூவரில் கௌசல்யைக்குக் கொஞ்சம் சிறப்பு அதிகம். ஏனெனில் அவள் வயிற்றில்தான் கதையின் நாயகன் தோன்றுகிறான். அவன் சாதாரணமானவனல்ல. விஷ்ணுவின் அவதாரம்.

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம்ʼ க்ரமஶ: ப்ரயாதாமங்கீ³சகார புனரப்யத³ரம்ʼ க்ருʼஶாங்க³யா: |
ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்ʼ க³ர்ப⁴ஞ்சலேன வஸதா ப்ரத²மேன பும்ʼஸா ||
(பாலகாண்டம் – 27)

கௌசல்யையின் வயிறு ஆலிலை போல இருக்குமாம். இளமையின் காரணமாக சிறுத்துப் போன இடை, கர்ப்பத்தின் காரணமாக அதன் ஆலிலை வடிவம் வெளித்தெரியுமாறு வளர்ந்ததாம். உலகெங்கும் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கி விட, அப்போது ஆலிலையில் படுத்திருக்கும் குழந்தையாக விஷ்ணு மிதந்து வருவார் என்பது புராணக்கோட்பாடு. அதனை இங்கே கௌசல்யையின் இடையை ஆலிலையாகவும் அதில் சிசுவாகப் படுத்திருக்கும் ராமனே விஷ்ணு என்றும் அழகாக உருவகப்படுத்துகிறார்.

பெண்களின் இடை சிறுத்து இருப்பது அழகு. பல இடங்களில் காவியங்களில் பெண்களின் இடை இருந்தும் இல்லாதது போல இருப்பதாக உவமைகளுடன் குறிப்பிடுவர். கௌசல்யையும் அப்படித்தான். அவள் கருவுற்ற காலத்தில் இல்லாதிருந்த இடை தன் இருப்பை வெளிப்படுத்துகிறதாம். ஆகாயம் போல சூன்ய பிரதேசமாக இருந்த இடை இன்று விஷ்ணு பதம் ஆகி விட்டது என்கிறார் கவி. ஆகாயத்திற்கு விஷ்ணுபதம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதைக் சிலேடையாகக் குறிப்பிடுகிறார்.

மத்⁴யம்ʼ தனுத்வாத³விபா⁴வ்யமானம்ʼ ஆகாஶமாஸீத்³ அஸிதாயதாக்ஷ்யா: |
க³ர்போ⁴த³யே விஷ்ணுபதா³பதே³ஶாத்கார்ஶ்யம்ʼ விஹாயாபி விஹாய ஏவ ||
(பாலகாண்டம் – 28)

முன்பு இவள் வயிறு காணமுடியாத ஆகாசம் போல இருந்தது. இப்போது கர்ப்ப காலத்தில் விஷ்ணுபதமாக ஆகிவிட்டது. ராமன் விஷ்ணுவின் அவதாரம், அவன் இருக்கும் இடமாக அவள் வயிறு ஆனது என்று ஒரு அர்த்தத்திலும், ஆகாயம் போல விரிந்து பெரிதானது என்று இன்னொரு அர்த்தத்திலும் அந்தச் சொல்லை கவிஞர் உபயோகித்திருக்கிறார்.

ஸ்ரீராமனின் வனவாசம்

“ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள” நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கைகேயி கூறியதைக் கேட்டும் இராமனின் முகமலர்ச்சியில் ஒரு சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை என்பதை எல்லா இராமசரித கவிஞர்களும் பாடியுள்ளனர். இத்தருணத்தில், போஜனின் இராமன் கீழ்க்கண்டவாறு பேசுகிறான்.

வனபு⁴வி தனுமாத்ரத்ராணமாஜ்ஞாபீதம்ʼ மே
ஸப²லபு⁴வனபா⁴ர: ஸ்தா²பிதோ வத்ஸமூர்த்⁴னி |
ததி³ஹ ஸுகரதாயாமாவயோஸ்தர்கீதாயாம்ʼ
மயி பததி க³ரீயானம்ப³ தே பக்ஷபாத: ||
(அயோத்யா காண்டம் -25)

அம்மா நீங்கள் சிறிது பாரபட்சம் காட்டிவிட்டீர்கள். அனைத்துலகையும் அதனுள் வாழும் மக்களையும் காப்பாற்றும் சுமை பரதனுக்கு. என்னுடைய உடலை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்கிற சுமை எனக்கு. இப்படியாக எனக்கு சிறிய வேலையையும் தம்பிக்கு மிகப்பெரிய பாரத்தையும் சுமத்தி விட்டீர்களே என்று கேட்கிறான்.

ராமனிடம் காமம் கொண்ட சூர்ப்பனகை:

ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப்படுகிறது.

த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண ஸமாகுல பு³த்³தி³ரியம்ʼ த³தௌ⁴ |
உப⁴யகுல ஸமஸ்தி²தஶாத்³வலப்⁴ரம க³தாக³த கி²ன்னக³வீத³ஶாம் ||
(ஆரண்யகாண்டம் – 16)

சூர்ப்பனகை ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, எந்தக் கரையில் மேய்வது என்று திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி இவரிடமும் அவரிடமும் என்று அலைந்தாளாம் சூர்ப்பனகை.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு ஏன் இந்த கஷ்டம் என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் அவள்.

லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்ʼ ஜனம்ʼ
கஸ்மான்னஸ்ருʼஜத³ஸ்மத³ன்வய கு³ரோருத்பத்திபூ⁴: பத்³மபூ⁴: |
ஆஸ்தாம்ʼ தாவத³ரண்யவாஸரஸிகே ஹா கஷ்டமஸ்மின்னிமாம்ʼ
காந்திம்ʼ கானனசந்த்³ரிகாஸமதா³ஶாம்ʼ கிம்ʼ நிர்மமே நிர்மமே ||
(ஆரண்யகாண்டம் – 28)

‘பிரம்மன் நமது குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? சரி, அதாவது போகட்டும், இந்த ராம லட்சுமணர்களை சந்திரனைப் போல ஒளியுடையவர்களாகப் படைத்தும் காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? என்ன கஷ்டம் இது!’ என்று புலம்புகிறாள்.

புத்திமான் ஹனுமான்

கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமான் முதலில் ராம லட்சுமணர்களைச் சந்தித்து அவர்கள் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு, அண்ணனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் தம் மன்னன் சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறார். சுக்ரீவனும் ராம லட்சுமணர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டு நண்பர்களான வேளையில் சுக்ரீவன் ஹனுமானின் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லுகிறான்.

அயமஸுக²யதே³வம்ʼ தே³வ! தீ⁴மான் ஹனுமான்
ரிபுரிதி ப⁴வதோ(அ)பி த்ரஸ்தமஸ்தௌஜஸம்ʼ மாம் |
த³வஹுதவஹதூ⁴மஸ்தோம இத்யம்பு³வாஹா-
ச்சகிதமிவ மயூரம்ʼ மாருதோ வாரிஶீத: ||

(கிஷ்கிந்தா காண்டம் 12)

சுக்ரீவன் சொல்லுகிறார், ‘பயத்தில் நான் உங்களைக் கூட விரோதி என்று நினைத்து அஞ்சினேன். அப்போது புத்திசாலியான ஹனுமான்தான் ஆறுதல் அளித்தார். எப்படி என்றால், கறுத்துத் திரண்டு வரும் மேகத்தை காட்டுத் தீயின் புகை என்று எண்ணி அஞ்சி நடுங்கும் மயிலுக்கு, அந்த மேகம் நெருங்குவதற்கு முன்னால், மழையின் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசி எப்படி அந்த மயிலை ஆனந்தப்படுத்துமோ அப்படி இருந்தது ஹனுமானின் செயல்’ என்று கூறுகிறார். ஹனுமானும் வாயுவின் சம்பந்தம் உள்ளவர். மாருத என்ற சொல் இங்கே ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஆகிறது.

சுந்தர காண்டம்

ராம லட்சுமணர்கள் சுக்ரீவனை சந்தித்து, வாலி வதம் முடிந்து, அனுமான் இலங்கைக்கு சீதையைத் தேடியபடி வருகிறார். ராவணனின் அரண்மனை, நகரம் முழுவதும் அனுமான் தேடத் துவங்கும்போது, இரவு நேரம். அந்நேரத்தில் ஒரு காட்சி வருணனை:

ஆதி³த்ய: க்ருʼதக்ருʼத்ய ஏஷ ப⁴விதா ஸீதாபதேரீத்³ருʼஶம்ʼ
ஸாஹாய்யம்ʼ விரசய்ய கீர்திமதுலாமாதி³த்ஸுனா ஸூனுனா |
இத்யாலோச்ய ததா³ கில ஸ்வயமபி க்²யாதிம்ʼ க்³ரஹீதும்ʼ பராம்ʼ
லங்காயாம்ʼ ரகு⁴னாத²தூ³தஸரணௌ சந்த்³ரேண தீ³பாயிதம் ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 14)

சூரியனின் அம்சம் சுக்ரீவன் என்று கருதப்படுகிறது. ராமனுக்குத் தன் பிள்ளை சுக்ரீவனைக் கொண்டு உதவி செய்து சூரியன் புகழடைந்தான். இதை ஆலோசித்து, தானே ராமனுக்கு உதவி செய்யும் காரியத்தில் இறங்கி, ராம தூதனான அனுமன் செல்லும் இடமெல்லாம் தன் ஒளிக்கிரணங்களை நிறைத்து வழிகாட்டினான் சந்திரன் என்று கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

பல இடங்களில் சுற்றித் தேடிவிட்டு அசோக வனத்துக்கு வந்து சீதையைச் சந்திக்கிறார். சீதையைத் தானே தூக்கிச் சென்று ராமனிடம் சேர்த்து விடுகிறேன் என்று அவர் கேட்கும்போது சீதை பலவாறும் நன்றியுடன் மறுத்து பின்னர் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியை ராமனிடம் அடையாளமாகக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறாள்.

சூடா³மணிம்ʼ கபிவரஸ்ய த³தௌ³ த³ஶாஸ்ய
ஸந்த்ராஸபுஞ்ஜிதருஷாக்³னித³ஶம்ʼ க்ருʼஶாங்கீ³ |
ஆதா³ய தம்ப்ரணதிபூர்வமாஸௌ ப்ரதஸ்தே²
மாணிக்யக³ர்ப⁴வத³னோரக³துல்யபா³ஹு: ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 36)

இளைத்த உடலுடன் வலிமை குன்றி இருந்த சீதை, அனுமனிடம் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். அது அவளுக்கு ராவணன் மீது இருந்த கோபத்தீயைப் போல ஒளிர்ந்தது. அதைக் கையில் வாங்கிய அனுமனின் கைகள், ரத்தினம் தாங்கிய நாகப் பாம்பு போல இருந்தது.

அனுமன் திரும்பி வந்து, தன்னுடன் வந்த வானர சேனையுடன் இணைந்து ராமனைச் சந்தித்து சீதையைச் சந்தித்த விவரத்தைச் சொல்லுகிறார்.

அக்லேஶஸம்பூ⁴தக³தாக³தாப்⁴யாம்ʼ விதீர்ணவிஸ்தீர்ண மஹார்ணவோ(அ)பி |
ஆனந்த³ஸிந்தௌ³ ப்ருʼதனாஸமக்ஷமக்ஷஸ்ய ஹந்தா நிதராம்ʼ மமஜ்ஜ ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 72)

ஒரு துன்பமும் இல்லாமல் சுலபமாகப் பெருங்கடலை இருமுறை தாண்டி வந்த அனுமன், இங்கே வானர சேனையுடனிருந்த ராமலட்சுமணர்கள் மத்தியில் கரைபுரண்டோடிய அவர்களது ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கிவிட்டார்! அரக்கர்களிடம் போரிட்டது, ராவணனைச் சந்தித்து எச்சரித்தது, சீதையைச் சந்தித்துப் பேசி தைரியம் சொல்லி, அவள் தந்த சூடாமணியைப் பெற்று வந்தது என்று பல சாதனைகள் செய்து எல்லோருடைய ஆனந்தத்துக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அனுமன், பேச்சின்றி அவர்கள் அன்பிலும் அங்கீகாரத்திலும் மூழ்கினார் என்று கவி அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுத்த காண்டம்

சுந்தரகாண்டத்துடன் போஜ ராஜன் எழுதிய சம்புராமாயணம் நின்று விடுகிறது. அந்த சமயம் ஏற்பட்ட போரில் போஜராஜன் வீரமரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் லக்ஷ்மண சூரி என்னும் கவி போஜனின் கவிதை அமைப்பிலேயே யுத்த காண்டத்தையும் எழுதி முழுமை செய்துள்ளார்.

போ⁴ஜேன தேன ரசிதாமபி பூரயிஷ்யன்
அல்பீயஸாபி வசஸா க்ருʼதிமத்யுத³ராம் |
ந வ்ரீடி³தோ(அ)ஹமது⁴னா நவரத்னஹார-
ஸங்கே³ன கின்ன ஹ்ருʼதி³ தா⁴ர்யத ஏவ தந்து: ||
(யுத்த காண்டம் – 2)

ஆரம்பத்தில் பால காண்டத்தில் வால்மீகி முனிவரை வணங்கி போஜன் தன் எளிமையை வெளிப்படுத்தியது போலவே இங்கு லக்ஷ்மண சூரியும் போஜகவியின் மீது தன் மரியாதையை வெளிப்படுத்துகிறார். போஜராஜனால் இயற்றப்பட்ட சம்பு ராமாயணத்தைப் பூர்த்தி செய்யப் புகுவதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. ஏனெனில் நவரத்தின மாலையை நெஞ்சில் தவழ விட, அதற்கு ஒரு நூல் தேவைப்படுகிறதுதானே என்று அடக்கத்துடன் கூறுகிறார். ஆனால் யுத்த காண்டத்தின் கவிதைகளும் போஜராஜனின் கவிதையின் தரத்துக்குச் சற்றும் குறைவில்லாதவைதான்.

சம்பு இராமாயணம் முழுவதுமே கவித்துவமும், சுவையும் மிகுந்த ஒரு படைப்பு. இங்கே ஒரு சில கவிதைகளை மட்டுமே பார்த்தோம். சம்ஸ்க்ருத மொழியைக் கற்க விரும்புவோருக்கும், பக்தியுடன் படிக்க எண்ணுவோருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆழ்ந்த பொருளை அறிந்து ரசிக்கக் கூடிய வேத சாத்திர விற்பன்னர்களுக்கும் சம்பு ராமாயணம் அள்ள அள்ளக் குறையாமல் வழங்கும் பொக்கிஷமாகவே இருக்கும்.

1 thought on “போஜராஜனின் சம்பு ராமாயணம் – பெங்களூரு ஸ்ரீகாந்த்

  1. போஜ சம்புவிலிருந்து பத்யங்களையே ஒரு மாலையாகக் கட்டி அதன் அழகினைத் தாங்கள் விவரித்தது போன்று முழுதும் கத்யங்களாலும் ஆகிய ஒரு மாலையைக் கட்டி மீண்டும் ஒரு வ்யாசத்தினை வலம் இதழில் பகிர்க. கற்பார் ராமபிரானையல்லால் மற்றொன்றும் கற்பரோ

Leave a Reply