
“அப்படி என்ன பெரிசா இருக்கு ஜிஎஸ்டியில? மறுபடி மறுபடி சாமானிய மக்களுக்கு தொல்லைதானே? இதெல்லாம் வெறும் ஸ்டண்ட்!”
மிக உரக்கக்கேட்கும் இந்தப் புலம்பலில் உண்மை இல்லை. இப்படிப் புலம்புபவர்கள் ஒன்று அரசை எதிர்க்கும் மனநிலை கொண்டவர்கள் அல்லது இந்த ஜிஎஸ்டியின் முழுப்பரிமாணத்தை அறியாமல் மேம்போக்கான புரிதலுடன் விமரிசனம் செய்பவர்கள். இன்று நாம் பார்க்கும் ஜிஎஸ்டி நிச்சயம் மிகச்சரியான வரி சிஸ்டம் இல்லைதான். கச்சிதம் என்பது முதல் நாளிலேயே வந்துவிடாது. இது ஒரு மிக நல்ல தேவையான ஆரம்பம். இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான மைல்கல்.
இதற்கென இந்த பாஜக அரசைப் பாராட்ட வேண்டுமா?
நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்!
29 மாநிலங்கள் ஏழு யூனியன் பிரதேசங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, எண்ணற்ற தடைக்கற்களைச் சந்தித்து, ஈகோ பிரச்சனைகள், வருமான இழப்பு வாதங்கள், பல உரிமை இழப்புகள் பற்றிய சந்தேகங்கள், பயம் போன்ற கணக்கிலடங்கா விஷயங்களை விளக்க நூற்றுக்கணக்கான கூட்டங்களைக் கூட்டி, ஒருவித ஒற்றுமைக்குள் வரவழைத்து இந்த ஜிஎஸ்டியை தேச முழுமைக்கும் அர்ப்பணித்த இந்த அரசு பாராட்டுக்குரியதே. தனக்கோ தன் கட்சிக்கோ என்ன லாபம் என்று குறுகிய நோக்கிருந்தால் இந்த முயற்சி இந்த அளவுக்கு வந்திருக்காது. பிரதமர் மோடி அவர்களின் ஒருங்கிணைனத நாட்டுநலன் சார்ந்த செயல்களில் இந்த ஜிஎஸ்டி மிக முக்கியமானதுதான்.
எடுத்தவுடனேயே இந்த ஜிஎஸ்டி நன்மைகளைத் தந்துவிடுமா என்னும் சரியான கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்ப கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். சில தொழில்களும் நிறுவனங்களும் பாதிப்பைச் சந்திக்கும். சில பொருட்களின் விலை குறுகிய காலத்தில் உயரவும் வாய்ப்பு இருக்கிறது. பல இடங்களில் அரசு இயந்திரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அதிகாரிகள் முழுப்புரிதல் இல்லாமல் வர்த்தக நிறுவனங்களைப் பாடுபடுத்தக்கூடும். ஆனால் இவையெல்லாம் சில மாதங்களில் சரியாகி எண்ணெய் போட்ட சக்கரமாய் இந்த ஜிஎஸ்டி சுழல ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பகால சங்கடங்களைத் தவிர்க்க முடியாது. அரசும் அதிகாரிகளும் இதுபற்றி யோசித்து இவற்றைத் தாண்டி ஜிஎஸ்டி யை நல்ல முறையில் நிர்வகிக்கும் திட்டங்களைத் தயார்ப்படுத்தி இருப்பார்கள் என்று நிச்சயம் நம்பலாம்.
ஒருங்கிணைந்த உற்பத்திக் கேந்திரமாக உலக வரிசையில் இந்தியா முந்தி நிற்க வேண்டுமென்றால் இந்த ஜிஎஸ்டி மிக அவசியம். இதன் மூலம் வரி விதிப்பு மற்றும் வரி வசூலில் உண்டாகப்போகும் வெளிப்படைத்தன்மை நம் பொருளாதாரத்தை இன்னும் ஸ்திரமாக்கும். இந்தியாவின் பல மூலோபாய குறிக்கோள்களை (Straegic Objectives) நிறைவேற்ற ஜிஎஸ்டி போன்ற நிர்வாக முறைமை நமக்குத் தேவை.
ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் சைனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்து, எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்து, இந்தியாவில் விற்று, வரி ஏய்த்து லாபம் சம்பாதிக்கும் முறை பரவலாக நடந்து வருகின்றது. அதே பொருளை இந்தியாவில் தயாரிப்பவர்களால், இந்த வரி ஏய்ப்பு ஆசாமிகளின் விலையோடு போட்டி போட முடியவில்லை. ஏனென்றால் தயாரிப்பு வரியை அவ்வளவு சுலபத்தில் ஏய்க்க முடியாது.
“சுருக்கமா சொல்லுங்க, இந்த ஜி எஸ் டி எந்த விதத்துல வித்தியாசமானது?”
“உன் கேசையே எடுத்துக்கோ!”
“என் கேசா?”
“ஆமாம்ப்பா! முதல்ல உனக்கு நெறய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்களா? நீ பாட்டுக்கு எப்ப யார் வேணுமோ அவங்க கூட சுத்துவே! அது மாதிரிதான் ஜிஎஸ்டிக்கு முன்ன! அதாவது எக்ஸைஸ், கஸ்டம், VAT, சர்வீஸ் டாக்ஸ்ன்னு பல வரிகள்! ஆனா இப்ப? உனக்கு ஒரே ஒய்ஃப்! அது மாதிரி ஒரே ஜிஎஸ்டி!”
“நல்லா இருக்கே இந்த விளக்கம்!”
“இரு கேளு! முன்னல்லாம் நீ சுகந்தியோட சினிமாக்கு போனா உஷாட்ட சொல்ல வேண்டாம். ராகினியோட பீச்சுக்கு போனா நிர்மலாட்ட சொல்ல வேண்டாம். ஆனா இப்ப, மவனே எங்க போனாலும் ஒய்ஃப்ட்ட சொல்லிட்டுதாண்டா போகணும்! அதே மாதிரிதான்! இப்ப என்ன வித்தாலும் ஜிஎஸ்டி கட்டிதாண்டா ஆகணும்!”
ஜிஎஸ்டி வந்துவிட்டால் இந்தக் குறைபாடு முற்றிலும் ஒழிந்துவிடுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முற்றிலுமாக அழிக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி. குறுக்குப் புத்தியுடன் அரசை ஏமாற்றும் வீணர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அந்த வரி ஏய்ப்பினால் முன்பு கிடைத்த லாபம் இப்போது கிடைக்காது. ஏய்ப்பின் சங்கடங்கள் அதிகமாகும். ஜிஎஸ்டியால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதற்கு முன்பான பரிவர்த்தனையின்போது கட்டின வரியை மீட்டுக்கொள்ள முடியும் என்பதால் வரி ஏய்ப்பு விளையாட்டு கஷ்டமாகும்.
“அப்ப இந்த ஜிஎஸ்டி இந்தியாவைக்காக்க வந்த காவல் தெய்வமா?”
இல்லை, இன்னும் இல்லை. கூடிய விரைவில் ஆகிவிடக்கூடும். ‘ஒரு தேசம், ஒரு வரி’ என்பது இன்றே சாத்தியமல்ல. இன்னும் சில ஆண்டுகளில் கூடச் சாத்தியமல்ல. ஆனாலும் மிகக்குறைந்த வரி விகிதக் கட்டமைப்பு என்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் வரப்பிரசாதம்தான்.
அரசாங்கமும் நிர்வாகமும் இந்த ஜிஎஸ்டியை மெருகேற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அனுபவங்களின் மூலம் கிடைக்கும் பாடங்கள் இந்த மெருகேற்றுதலைச் சிறப்பிக்கும். நடைமுறைச் சிக்கல்களை சந்தித்து அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்ளும்போது ஜிஎஸ்டியை மேலும் மேலும் இறுக்கமான, குறையற்ற வரி அமைப்பாகப் பலப்படுத்தமுடியும்.
இந்த ஜிஎஸ்டியின் முக்கிய அம்சம், மூல அடிப்படையிலான வரி அமைப்பிலிருந்து (source based tax system) நுகர்வு அடிப்படையிலான வரி அமைப்பாக (destination based tax system) மாற்றியிருப்பதுதான். இது ஒரு மிக முக்கியமான மாற்றமாகும்.
”அப்ப இந்த ஜிஎஸ்டியில் குறைகளே இல்லியா?”
இருக்கிறது!
எந்த ஒரு மாற்றமுமே பல சிக்கல்களைச் சந்திக்கிறது. 1991ல் நரசிம்ம ராவ் ஆட்சியில் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் கொண்டு வந்த மாற்றங்கள் மிகப்பெரியவை. நாட்டையே புரட்டிப்போட்டு முன்னேற்றப்பதையில் தள்ளியவை. ஆனால் அதிலும் கூட, முக்கியமான பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த துறைகள் முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தவைதான். வங்கித்துறை, பங்கு மார்க்கெட், மத்திய வரி அமைப்பு, தொழில்துறைக்கொள்கை போன்ற மத்திய அரசுத்துறைகளில் மாற்றங்களைச் சுலபமாகக்கொண்டு வர முடிந்தது. எப்போதெல்லாம் மாநில அரசுகளின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் தேவையோ அந்த மாற்றங்கள் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியிருந்தன. இந்த ஜிஎஸ்டியும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இந்தியாவில் நாம் எடுத்துக்கொண்ட இதற்கான காலம் மிக அதிகம். வாஜ்பாயி அரசின் கீழ் யஷ்வந்த் சின்ஹாதான் இதற்கு முதன்முதலில் வித்திட்டார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று! சில வல்லுநர்கள் இந்த ஜிஎஸ்டியும் குறைகள் கொண்டதே என்று சொல்வதற்கான முக்கிய அடிப்படை, இந்த ஜிஎஸ்டியில் இன்னுமே பல வரி விகித அமைப்புகள் இருப்பதுதான். ஒரு நல்ல வரி அமைப்பு என்பது, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில், மூன்றே மூன்று வரி விகித அமைப்புக்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். சராசரி வரி விகிதம் (Mean Rate), தகுதி விகிதம் (Merit Rate) மற்றும் தகுதியின்மை விகிதம் (Demerit Rate) என்னும் மூன்றும் ஒரு நல்ல வரி அமைப்பில் இருந்தால் நாட்டின் வருவாய் மேலாண்மை சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது இவர்கள் வாதம். அதன்படிப் பார்த்தால் இந்த ஜிஎஸ்டி இன்னும் பல மைல் தூரம் போகவேண்டும்.
இன்னொரு முக்கிய அம்சம் இந்த வரி அமைப்பில் இன்னும் விருப்பக்குறைபாடு (discretion) இருக்கின்றது. உதாரணத்திற்கு தங்கத்திற்கு 3% ஆனால் நோட்டுப்புத்தகங்களுக்கு 12%. ஒரு நல்ல வரி அமைப்பு என்பது சம பங்கும் எளிமையுமாய் இருத்தல் அவசியம். இந்த விருப்பக்குறைபாடு எளிமை மற்றும் சமநிலைக்கு எதிராக இருப்பதை மறுக்க முடியாது.
மூன்றாவதாக நாட்டின் மிக அதிக வருவாய் ஈட்டும் துறைகளான பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் மது, இந்த ஜிஎஸ்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் அரசியல் நமக்குப் புரிந்தாலும் ஜிஎஸ்டியைப் பொருத்த வரையில் இது பெரிய குறைதான்!
இவை தவிர அரசு இன்னும் கவனிக்க வேண்டிய நடைமுறை விஷயங்களும் இதில் இருக்கின்றன.
இந்த ஜிஎஸ்டி நிர்வாகம் இப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் கவனிக்கப்படப்போகிறது. ஆக மத்திய மாநில அரசின் உறவுமுறைகள் மிக நுணுக்கமாகக் கையாளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
‘என் ஏரியாவுக்குள்ள நீ நுழைஞ்சுட்ட’ போன்ற கூக்குரல்கள் அதிகம் எழும் வாய்ப்பு இருக்கிறது. பல மாநிலங்களின் வரி அமைப்புக்கள் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற தொழில்துறை மாநிலங்களில் வரி அமைப்புக்கள் எப்போதுமே ஸ்திரமானவை. ஆனால் பிஹார் மத்தியப்பிரதேச மாநிலங்களில் அவை அந்த அளவுக்குத் திறமையோ அனுபவமோ வாய்ந்தவை அல்ல. இந்த மாநிலங்கள் உற்பத்தி மாநிலங்கள் அல்ல. ஆனால் நுகர்வோர் நிறைந்த மாநிலங்கள். ஜிஎஸ்டி வரிவிகித அமைப்பு நுகர்வுக்கு மாறியிருப்பதால் பிஹார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தத்தம் வரி அமைப்புக்களைச் சிறப்பாக்க வேண்டும். ஜிஎஸ்டியின் வரி அமைப்பு நிர்வாகமே வருங்காலத்தில் முழுக்க முழுக்க மாநிலங்களின் கடமையாகப் போகக்கூடும். ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் கொள்கை முடிவுகள் மட்டும் டெல்லியில் எடுக்கப்பட்டு, மற்ற எல்லா நிர்வாகச் செயல்களும் மாநிலங்களுக்கு மாறி விடக்கூடும். மாநில அளவில் ஐஏஎஸ் ஆஃபீசர்கள் நிர்வாகம் செய்ய, மத்தியில் ரெவென்யூ ஆஃபிசர்கள் (IRS) நிர்வகிக்க, பல முட்டல் மோதல்கள் எழ வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு வழி என்னவென்றால் ரெவென்யூ சர்வீஸையும் ஐஏஎஸ்போல இந்திய அளவில் உயர்த்தி, மாநில ஜிஎஸ்டி நிர்வாகமும் இந்த ரெவென்யூ ஆஃபிசர்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். இது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய ஃபாரஸ்ட் சர்வீஸும் இப்படித்தான் அகில இந்திய அளவிலான சர்வீசாக மாற்றப்பட்டு இப்போது திருப்திகரமாகச் செயல்படுகின்றது. கொஞ்ச காலமாகவே இந்த அதிகாரத்துவ மாற்றத்திற்கான குரல்களும் டெல்லியின் அரசுச் சுவர்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு வேளை ஜிஎஸ்டிதான் அந்த மாற்றத்திற்கு வழி வகுக்கப்போகின்றதோ என்னவோ?
நரேந்திர மோடியின் அரசு இந்த ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததற்கான கிரீடத்தைச் சூட்டிக்கொள்ளலாமா?
ஜிஎஸ்டியைக் கொண்டுவருவதற்கும், மாநிலங்களுக்குச் சேவை வரி விதிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்ததற்குமான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவந்ததே மோடியின் மிகப்பெரிய சாதனைதான். எனவே அந்தக் கிரீடத்தை நமது பிரதமர் நிச்சயம் சூடிக்கொள்ளலாம்.
மற்றபடி வெற்று வார்த்தைகளால் இந்த ஜிஎஸ்டியைக் குறை கூறுபவர்களைப் பசித்த புலி தின்னட்டும்!