Posted on Leave a comment

ஹெச்.ஜி.ரசூல்: அஞ்சலி – ஜடாயு

கவிஞரும் எழுத்தாளருமான தக்கலை ஹெச்.ஜி.ரசூல்  ஆகஸ்டு 5, 2017 அன்று  தனது 59ம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். 
வஹாபிய அடிப்படைவாதமும், மூர்க்கமான இஸ்லாமிய மதவெறியும் வளர்ந்து வரும் தமிழ்ச்சூழலில் நம்பிக்கையும் நேசமும் தரும் ஒரு குரலாக இருந்தவர் ஹெச்.ஜி.ரசூல். சிற்றிதழ்கள் மட்டுமின்றி, 2002ம் ஆண்டு முதலே இணையத்திலும் தொடர்ந்து ஜிகாதி பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதியும் விவாதித்தும் வந்தவர் அவர். அவரது சில கருத்துக்களுடன் இணைய இந்துத்துவ எழுத்தாளர்களுக்கு மாறுபாடு இருந்தது. அவற்றை விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள்.  ஆயினும் அடிப்படையில் அவர்மீது உள்ள உயர்மதிப்பும் மரியாதையும் என்றும் குறைந்ததில்லை. 
சூஃபி ஆன்மீகம் பற்றிய ஒரு ஆழமான புரிதல் அவரிடம் இருந்தது. “பீர்முகமது அப்பாவின் பாடல்கள் புரியவேண்டுமானால் குரான் மட்டும் போதாது, திருக்குறள், சைவ வைணவ பக்தி இலக்கியம், அத்வைதம், சாங்கியம், யோகம், பௌத்தம், சமணம் போன்ற இந்திய தத்துவ மரபுகள் இவற்றை உள்ளடக்கிய பல்சமயச் சூழல் பற்றிய புரிதல் தேவை” என்று  ‘அப்பாவின் ஞானப்புகழ்ச்சி’ பற்றிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். 
ஜிகாதி பயங்கரவாதத்திற்கு எதிரான பிரகடனமாக அவர் எழுதிய கீழ்க்காணும் கவிதையில், 
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பின குரல்
திரும்பவும் கேட்கிறது. 
என்ற வரி  நம்மை  உலுக்கக் கூடியது. இஸ்லாமின் உருவாக்கத்தின்போதே அழித்தொழிக்கப் பட்ட அரேபியாவின் பண்டைக் கலாசாரத்து பெண் தெய்வங்களின் குரலைக் கேட்ட தமிழ் முஸ்லிம் கவி அனேகமாக ரசூல் ஒருவராகவே இருக்கக் கூடும். சாக்தம் மற்றும் தாய் தெய்வ வழிபாடு குறித்து இஸ்லாமிய மதநம்பிக்கைகளுக்கு முற்றிலும் முரணான பரிவான கண்ணோட்டம் அவருக்கு இருந்தது. 
ஹெச்.ஜி.ரசூல்  மறைவிற்கு நமது கண்ணீர் அஞ்சலி. ஓம் சாந்தி.  
வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை (2011) 
ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக
நரகங்களை உருவாக்குபவன்
என்வீதிவழியே வந்து
என்னைத் தட்டி எழுப்பிச் சென்றான்.
கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு
கீற்றாய்ச் சிறுகோடாய் தேய்ந்து
இரவின் கதையை எழுத
பிறையின் ஒளியை முத்தமிட்டு
அதிசயித்துப் பார்க்கும் கண்கள்
மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.
தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர
அவன் கூக்குரலிட்டான்.
நிரம்பிய கண்ணீரில்
ஒளுவெடுத்துப் புனிதப்படும் உள்ளங்கைகளும்
நெடுவெளி மணற்காட்டில்
தய்யம் செய்யும் விரல்களும்
அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில்
அவனின் அபயக்குரல் தொடர்ந்தது.
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பின குரல்
திரும்பவும் கேட்கிறது.
மூசாவையும் ஈசாவையும் குறித்து
அறிவித்த தீர்ப்பால்
சிலுவையிலிருந்தும் போர்வாள்கள் முளைத்து
அவனின் குரல்வளையை நெருங்கிவந்தன.
யுத்த இருளின் புகைமூட்டத்தில்
எதிரே கண்டால் வெட்டச் சொன்ன புனித வசீகரம்
எதிரியின் கைகளிலும் துப்பாக்கிகளைத் திணித்தன.
போதையூட்டப்பட்ட சொற்கள்
எப்போதும் பைஅத்திற்கு தயார்
பைசாகோபுரங்களைத் தகர்த்தும் எறியலாம்
அதன் அடுத்தடுத்த பக்கங்களில்
தினந்தோறும் கவனிப்பாரற்று
துயரம் மேலிட கண்ணீர் சிந்திக் கிடக்கிறது
லக்கும் தீனுக்கும் வலியதீன்.
குண்டுகள் வெகுஅருகாமையிலும் வெடிக்கின்றன.
மறைக்கப்பட்ட வரிகளினூடே
அர்ஷின்முத்திரை ஒன்று தவறிப்போனதை
எல்லோராலும் அறிந்துகொள்ள முடியவில்லை
சொல்லி முடிப்பதற்குள்
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
ரத்தத்திலிருந்து முளைக்கத் தொடங்கின.
ஜிகாதின் சொற்களைத்தவிர அவனிடம் இப்போது
வேறெந்தச் சொற்களும் மிச்சமிருக்கவில்லை. 
*******
Leave a Reply