Posted on Leave a comment

திரை: தர்மத்தின் குரல் – ஆமருவி தேவநாதன்.


இடதுசாரிச் சார்புள்ள ஒரு லிங்காயத் வகுப்புப் பெண், தனது வீட்டின் எதிர்ப்பையும்
மீறி அதே இடதுசாரிச் சார்புள்ள இஸ்லாமிய இளைஞரை மணக்கிறாள். வாழ்வு கசந்து போக, இறந்து
போன காந்தீயவாதியான தன் தந்தையின் வீட்டிற்கு வந்து அவரது நூலகத்தில் உள்ள நூல்களைப்
படிக்கிறாள். அதன் மூலம் இஸ்லாமிய அரசர்களின் செயல்பாடுகள் குறித்த இடதுசாரிகளின் பொய்யையும்
புரட்டையும் உணர்கிறாள். முகலாயர் தொட்டு நடந்த கொடுங்கோல் அரசுகளின் உண்மைகளை உலகுக்கு
எடுத்துரைக்கிறாள். இதுதான் கதை.

இடதுசாரிச் சிந்தனைகள் நமது நாட்டின் வரலாறு குறித்த பொய்யுரைகளைப் பரப்பி வந்துள்ளது
நாம் அறிந்ததுதான் என்றாலும், அவர்கள் காட்டும் வரலாறு எந்த அளவிற்கு உண்மையிலிருந்து
வேறுபடுகிறது என்பதை இந்த நூலில் கன்னட எழுத்தாளர் பைரப்பா தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
பைரப்பாவின்ன் கதை சொல்லும் உத்தி அலாதியானது. கதைக்குள் கதை வைத்து, இரண்டு
கதைகளும் ஒருங்கே நிகழும் வண்ணம் செய்துள்ளார். கதைகளில் வெளிக்கதை தற்காலத்தில் நிகழ்வதாகவும்,
அக்கதையின் கதை மாந்தர் லக்ஷ்மி (எ) ரஸியா, தான் எழுதும் வரலாற்றுக் கதையின் கதைமாந்தனான
முன்னாள் ஆணும் இந்நாள் நபும்ஸகனுமான ஒரு பாத்திரம் தனது கதையைச் சொல்வதாகப் படைத்துள்ளது,
ஒரே நேரத்தில் வரலாறு நிகழ்ந்தவண்ணம் இருக்க, அப்போதே அதற்கான விமர்சனமும் லக்ஷ்மி
பாத்திரத்தின் மூலம் கிடைக்கப்பெறுவது என்று அமைந்துள்ளது, பல நேரங்களில் நாமே நபும்ஸகனாகவும்,
அதேநேரம் நமது எண்ண ஓட்டங்களை லக்ஷ்மி வாயிலாக நாமே கேட்பதாகவும் அமைகிறது. இந்த அசாத்யமான
உத்தியினால் நாம் தற்காலத்தில் இருந்து வரலாற்றை விமர்சித்தவாறே, விமர்சிக்கும் வரலாற்றிலும்
இடம்பெறுகிறோம்.
கதைக்குள் உள்ள கதை இஸ்லாமிய அரசர்களின் கொடிய வழிமுறைகளை அப்படியே காட்டுகிறது.
அக்பர் முதல் அவுரங்கசீப் வரையிலான மன்னர்கள் புரிந்த அட்டூழியங்கள், அவர்கள் முக்கியமாகக்
கோவில்களை இடித்த வழிமுறைகள், பண்டிதர்களையும், பெண்களையும் நடத்திய விதம் என்று பக்கத்திற்குப்
பக்கம் கொடூரம். இதுவரை பொதுவெளியில் தெரியாத கொடூரங்கள்.
இஸ்லாமிய அரசர்கள் ராஜபுத்திர வம்சத்தினரை வென்றால் ஒன்று கொல்கிறார்கள் அல்லது
பிறப்புறுப்பு சிதைப்பு, விதை சிதைப்பு மூலம் நபும்ஸகர்களாக ஆக்குகிறார்கள். அம்மாதிரியானவர்களை
அந்தப்புரத்தில் ராணிகளுக்குச் சேவகம் செய்யப் பணிக்கிறார்கள். பலரை ஆண் அரசர்களே தங்களது
காம இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் இம்மாதிரியான சம்பவங்கள்
பல இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
ராஜபுத்திர இளவரசன் ஒருவனின் அனுபவங்களைக் கூறுவதாக அமைந்துள்ள இந்த நூலில்
மனதைக் கலங்க வைக்கும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கட்டிளம் காளையான இளவரசன், சரண்
அடையாததால் நபும்ஸகனாக்கப்படுகிறான். பிறகு மதம் மாற்றப்படுகிறான். அதன் பின்னர் இஸ்லாமிய
அரசனின் அந்தப்புரத்தில் பணி செய்யப் பணிக்கப்படுகிறான். பல்லாண்டுகள் கழித்து, தீயில்
விழுந்து இறந்துவிட்டதாக நினைத்த தனது மனைவியைப் பணிப்பெண் உருவில், பல இஸ்லாமிய அரசர்கள்
வழியாகப் பிறந்த குழந்தைகளோடு காண்கிறான். நம்புஸகத் தன்மையால் உண்டான கழிவிரக்கம்
மேலிடப் பேசும் முன்னாள் கணவனும், தனது கணவன் ஆண்மை இழந்து நிற்பதைக் கண்டு குமுறும்
முன்னாள் மனைவியும் சந்திக்கும் நேரத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் படிப்பவர்களைப்
பதைபதைக்கச் செய்வன.
இளவரசன் வாயிலாகக் காசி விஸ்வநாதர் ஆலயம் அழிப்பையும், ரஸியா (லக்ஷ்மி) வாயிலாக
ஹம்பி கோவில்கள் அழிப்புப் பற்றியும் நாம் அறிந்துகொள்கிறோம். இரண்டு நிகழ்வுகளும்
காலத்தால் வேறுபட்டிருந்தாலும் இரண்டையும் இணைத்து அளித்துள்ள யுக்தி மூலம் பைரப்பா
பிரகாசிக்கிறார்.
ஹம்பியில் இன்றும் உள்ள சிதைந்த நரசிங்கம், மஹாவிஷ்ணு முதலானவர்களின் சிற்பங்களை
சைவர்கள்தான் உடைத்தார்களே அன்றி, இஸ்லாமியர்களோ முகலாய மன்னர்களோ உடைக்கவில்லை என்ற
பரப்புரை வெகு காலமாக நடைபெற்று வந்துள்ள நிலையில், இந்த நூல் வாயிலாக பைரப்பா அந்தப்
பரப்புரைகளைத் தவிடு பொடியாக்குகிறார். சைவ, வைணவப் பூசல்களால் ஹம்பி அழியவில்லை என்பதைச்
சரியான தரவுகளுடன் நிறுவுகிறார் ஆசிரியர்.
இடதுசாரிப் போர்வையில் குளிர் காயும் எழுத்தாளர்கள் மூலம் பாரதத்தின் பண்டைய
வரலாற்று உண்மைகள் எப்படி இரட்டிப்பு செய்யப்படுகின்றன என்பதை இடதுசாரிப் பேராசிரியர்
ஒருவரின் பாத்திரத்தால் உணர்கிறோம். சுதந்திர பாரதத்தின் 70 ஆண்டுகால வரலாற்றில் இடதுசாரிப்
பார்வைகள், அவர்கள் சார்ந்த கல்விக் கழகங்கள், ஊடகங்கள் முதலானவை உண்மை வரலாற்றை எப்படி
மழுப்பி, மக்களைக் குழப்பி, அன்னிய சக்திகளின் உதவியுடன் எம்மாதிரியான தேசத்துரோகச்
செயல்களில் ஈடுபட்டன என்பதை நாம் அறிய உதவுகிறார் ஆசிரியர். திப்பு சுல்தான் பற்றிய
ஆய்வுகள் ஒரு உதாரணம்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் என்கிற பெயர்களில், உண்மையான வரலாற்றைச்
சிதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலர் இந்த நூல் வெளிவருவதை எதிர்த்தனர் என்பதே ஆசிரியர்
பைரப்பா சரியான வரலாற்றைத்தான் எழுதுகிறார் என்பதற்கான நிமித்தம் என்று நாம் கொள்ளலாம்.
இந்த நூலை எழுதுவதற்கு ஆசிரியர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
முகலாயர் கால ஆவணங்கள், ஆங்கிலேய, ஐரோப்பிய ஆவணங்கள் என்று சுமார் 135 ஆதாரங்களை மேற்கோள்
காட்டுகிறார் ஆசிரியர்.
கன்னடத்தில் ‘ஆவரணா’ என்று வெளியாகி, பின்னர் ‘The Veil’ என்று ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு, தற்போது தமிழில் ‘திரை’ என்று வெளிவந்துள்ள இந்த நூலை விஜயபாரதம்
வெளியிட்டுள்ளது. ஆசிரியருக்கும், வெளியீட்டாளர்களுக்கும் அனைத்து பாரதீயர்களும் நன்றிக்
கடன் பட்டுள்ளார்கள்.
இந்த நூலை ஒரே அமர்வில் படிக்க முடியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் தாக்கமும்
வடிய ஓரிரண்டு நாட்கள் பிடித்தன. பெரும் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்
வரலாற்று உண்மைகளைக் கொண்ட இந்த நூலை நமக்கு அளித்த ஆசிரியர் பைரப்பா அவர்களுக்கு நமது
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Leave a Reply