Posted on Leave a comment

ஜி.எஸ்.டி: கட்டுக்கதைகளும் உண்மையும் – ஜெயராமன் ரகுநாதன்


பல வருடங்களுக்கு
முன்னால் சென்னையில் மதுரை வீரன் வந்துவிட்டான் என்றொரு பீதி வலம் வந்தது, ஐம்பதைக்கடந்த
நம்மைப் போன்ற இளைய சமுதாயத்துக்கு நினைவிருக்கலாம். ஜிம்கானா கிளப்பின் முன்னால் இருக்கும்
காமராஜர் சிலையிலிருந்து பாரீசை நோக்கிப் பார்த்தால் வானத்தில் இரண்டு நிமிடங்களுக்கொருமுறை
குதிரையில் சரேலென்று நிழலுருவமாகப் பறந்தான் என்று சிலர் துண்டு போட்டுத் தாண்டிச்
சொன்னார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதப்பட்ட பரபரப்பான செய்தியாக இது சில நாட்கள்
சுற்றியது.

 “மதுரை வீரன் வந்துட்டானாமே! சோதனைதான் மெட்ராஸுக்கு!”

 “நீ பாத்தியா?”

 “இல்லீங்க! பெரியமேட்டுல பார்த்த ஆளு சொன்னாரு!”

இதேபோல எது நிஜமென்பது
தெரியாமல் மானாவாரியாக ஜி.எஸ்.டி பற்றிய கருத்துக்களும் கண்டனங்களும் உலா வந்துகொண்டிருக்கின்றன.

“ஜி.எஸ்.டி விடுங்க!
அந்த மதுரை வீரன் மெட்ராசுக்கு வந்தது என்னாச்சுங்க?”

சொல்கிறேன்.
ஆனால் இப்போது இல்லை, கடைசியில். இப்போது ஜி.எஸ்.டி பற்றிய கட்டுக்கதைகளையும் அதன்
உண்மைத்தன்மையையும் பார்க்கலாமா?

கட்டுக்கதை #1

“ஒரு சின்ன வியாபாரி
எப்படீங்க கம்ப்யூட்டர்ல பில்லு போடுவான்? அத்தோட நாள் முழுக்க இணைய இணைப்பு வேற தேவையாமே?”

இதனால் சிறிய
நிறுவனங்கள் நிச்சயம் கஷ்டத்துக்குள்ளாகும்.

உண்மை நிலை

சிறிய வியாபாரிகள்
எப்போதும்போல கம்ப்யூட்டர் இல்லாமலும் பில் போடலாம். தொடர்ந்த இண்டர்நெட் தேவையில்லை.
மாதாந்திர ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்ய மட்டுமே இணைய இணைப்பு தேவை. அதைச் சுலபமாக
இண்டர்நெட் செண்டர்களில் போய் செய்துவிட முடியும். பில் போடாமல் தப்பிப்பதுதான் கஷ்டம்.

கட்டுக்கதை
#2

“இந்த ஜி எஸ்
டியால கட்டுப்படியாகறதில்லீங்க! அல்லா வெலவாசியும் ஏறிப்போச்சே!”

ஜி.எஸ்.டி வரி
18% – 28% இருக்கிறது. இது முந்தைய விற்பனை வரியைவிட (சேல்ஸ் டேக்ஸ்) மிக அதிகம். அதனால்
விலைவாசிகள் உயரும். மக்கள் கஷ்டப்படப் போகிறார்கள்.

உண்மை நிலை

மேலோட்டமாகப்
பார்த்தால் ஜி.எஸ்.டி வரி அதிகம் போலத் தோன்றுகிறது. ஆனால் முன்பு பல வரிகள் ரசீதில்
தென்படாது. உதாரணமாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளின் மீது எக்ஸைஸ் வரி,
கூடுதல் எக்ஸைஸ் வரி, கொள்முதல் வரி எனப் பலவரிகள் ஏற்கெனவே போடப்பட்டு அந்த வரிகளுக்குப்
பின்னால் உள்ள விலையில் விற்பனை வரி போடப்பட்டது. இப்போது எந்த வரியும் இல்லாமல் வெறும்
தயாரிப்புச் செலவின்மீது நேராக ஜி.எஸ்.டி மட்டும்தான் போடப்படும். அதனால் பல பொருட்களின்
விலை குறையவே செய்யும். ஒரு சின்ன கணக்கு போட்டுப் பார்க்கலாம்.

ஜி.எஸ்.டிக்கு
முன்பு:

ஒரு பொருளின்
தயாரிப்புச் செலவு ரூ 100. எக்ஸைஸ் 15%, கூடுதல் எக்ஸைஸ் 6% என்று வைத்தால், அந்தப்பொருள்
சந்தைக்கு வரும்போது அதன் விலை ரூ 121.90. ஹிந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்பான ரின்
சோப்பின் விலை ரூ 18.

ஜி.எஸ்.டிக்குப்
பின்பு:

அந்தப்பொருள்
இப்போது ஜி.எஸ்.டியின் கீழ், 18% இருந்தால் கூட, ரூ 118 தான் ஆகும். ஜி.எஸ்.டிக்குப்பிறகு
ரின் சோப்பின் விலை ரூ 15ஆகக் குறைக்கப்பட்டது. அதேபோல துணி துவைக்கும் சர்ஃப் பவுடர்
ஜி.எஸ்.டிக்கு முன்பு, ரூ 10க்கு 95 கிராம் தரப்பட்டது. இப்போது அதே ரூ 10க்கு 105
கிராம் கிடைக்கிறது.

கட்டுக்கதை
#3

“என்னாங்க இது
அநியாயம்! ரொக்கத்தெல்லாம் விட்டொழி! கிரெடிட் கார்டு மொபைல் பேடிஎம்முனு அல்லாரும்
பேசறாங்க. இந்த ஜி.எஸ்.டியில ரெண்டு முறை கட்டணும் போலருக்கே!”

உண்மை நிலைஜி.எஸ்.டியின்
கீழ் இரண்டு முறை பணம் செலுத்தத் தேவையில்லை. சில நிறுவனங்கள் கிரெடி கார்டு மூலம்
பணம் செலுத்தும்போது 1% அல்லது 2% சர்வீஸ் சார்ஜ் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக
நீங்கள் ரூ 2,000 தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது கூடவே 1% சர்வீஸ் சார்ஜ்
(ரூ 20) செலுத்த வேண்டியிருக்கும். இப்போது அந்தக் கூடுதல் சர்வீஸ் சார்ஜுக்கு ஜி.எஸ்.டி
உண்டு. அதனால் நீங்கள் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி வாங்கின ரூ 2,000க்கு இல்லை. அந்த
சர்வீஸ் சார்ஜுக்கு மட்டுமே. ஜி.எஸ்.டி வருவதற்கு முன்புமேகூட சர்வீஸ் சார்ஜுக்கு
15% வரி செலுத்திக்கொண்டிருந்தோம். இப்போது கூடுதலாக 3% செலுத்த வேண்டும், அவ்வளவுதான்.

கட்டுக்கதை #4

பிஸினஸ் நிறுவனங்கள்
ஜி.எஸ்.டியின் மூலம் பயனடைந்தாலும் அதை நமக்குத் தர மாட்டார்கள். அரசாங்கத்தை ஏய்த்துப்
பயன் பெற்றுவிடுவார்கள்!

 உண்மை நிலை

சில மாநில அரசுகள்
ஜி.எஸ்.டிக்கும் மேற்பட்டு வரி விதித்திருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலம் கார்கள் மீது
ரிஜிஸ்டிரேஷன் வரியை 3% உயர்த்தி உள்ளது. கார் நிறுவனங்கள் ஜி.எஸ்.டியினால் ஏற்பட்ட
வரிக் குறைப்பில் விலையைக் குறைத்திருந்தன. ஆனால் இந்த ரிஜிஸ்டிரேஷன் வரி உயர்த்தப்பட்டதால்
விலை குறைவின் பயன் நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை.

கட்டுக்கதை
#5

“இந்தியா ஒரே
நாடு – ஒரே வரி!”

சாரி, இது கொஞ்சம்
ஓவர்!

உண்மை நிலை

இந்த வாக்கியங்களோடுதான்
ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டாலும் நிஜத்தில் இன்னும் சில பொருட்கள் ஜி.எஸ்.டிக்குள் வராமல்
இன்னும் தனி வரி விதிப்புக்குள்ளே உள்ளன. பெட்ரோல் ஒரு முக்கிய உதாரணம். தமிழ் சினிமாவில்
‘கோர்ட்டர்’ என்று இப்போதெல்லாம் கதாநாயகர்களின் வாயாலேயே உச்சரிக்கப்படும் மதுபானங்களுக்கும்
ஜி.எஸ்.டி கிடையாது. அவற்றுக்கு வேறொரு வரி விதிப்பு. ஜூலை 5ஆம் தேதி அன்று மும்பையில்
பெட்ரோல் ரூ 74.39க்கு விற்கப்பட, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ 63.12தான்

கட்டுக்கதை #

“ஜி.எஸ்.டி கட்டிவிட்டால்
போதும். வேறெந்த வரியும் இருக்காது!”

இல்லை, இருக்கும்!

 “அட என்னாங்க இது? குண்டைத்தூக்கிப்போடறீங்களே!”

உண்மை நிலை

இந்த ஜி.எஸ்.டி
தூக்கிச் சாப்பிட்டிருப்பது மத்திய மாநில அரசாங்கங்களின் வரிகள் மட்டுமே. உள்ளாட்சியின்
வரிகளை ஜி.எஸ்.டி எடுத்துவிடவில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ளாட்சித் துறைகள் இன்னும்
வரி வசூலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவை நிறுத்தப்படவில்லை. சினிமாவின் மீது
28% ஜி.எஸ்.டி இருக்க, தமிழ்நாட்டில் கார்ப்பரேஷன் வரியை எடுக்காமல் அப்படியே இருந்ததால்
சினிமா டிக்கட் விலை எகிறி, ரூ 100க்குகீழே உள்ள டிக்கட்டுக்கு 48% வரியையும் ரூ
100க்கு மேலே உள்ள டிக்கட்டுகளுக்கு 58% வரியையும் விதிப்பதால் தியேட்டர்காரர்கள் ஸ்டிரைக்
செய்து, சில நாட்கள் படம் ஓட்டாமல் இருந்ததெல்லாம் நமக்குத் தெரியும்.

ஆனால் வரி விற்பன்னர்கள்,
தமிழ்நாட்டின் இந்த வரி விதிப்பு ஜி.எஸ்.டியின் கொள்கைக்கு முரணானதுதான். ஆகவே ஜி.எஸ்.டி
கவுன்சில் இதை நீக்க வழி செய்ய வேண்டும் என்று வாதாடுகிறார்கள்.

ஜி.எஸ்.டியினல்
இனி வரி ஏய்ப்பு என்பது கஷ்டமாகிவிடும். இது unorganized Sector என்னும் ஒழுங்கு படுத்தப்படாத
துறையினரை வரி வலைக்குள் வர வழைக்கும். இதனால், சற்றே விலை குறைந்திருக்கும் இந்த ஒழுங்குபடுத்தப்படாத
துறையின் பொருட்களின் விலை ஏற வாய்ப்புள்ளது. மேலும் வரி வலைக்குள் விழுந்துவிடுவதால்
இவையும் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாகி பொருளாதாரம் உயர்ந்ததுபோல தகவல்கள் அரசுக்குக்
கிடைக்கும். உண்மையில் ஒழுங்குபடுத்தப்படாத துறையிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட துறைக்கு
மாறுகிறதே தவிர, நிஜமான வளர்ச்சி (Real Growth) இல்லை. ஆனாலும் வரிகட்டும் நிறுவனங்களின்
எண்ணிக்கையும் வரி வசூலும் அதிகரிக்கும் என்பது மறைமுகமாக நன்மையே.

நிதி ஆயோகின்
தலைவராக இருந்து வெகு சமீபத்தில் மீண்டும் தன் பேராசிரியர் வாழ்க்கைக்குத் திரும்பிய
பொருளாதார நிபுணர் அர்விந்த் பனாகிரியாகூட, “இந்த ஜி.எஸ்.டியின் மேலாண்மை சரியாகத்தான்
போகிறது. வளர்ச்சி அப்படி ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இந்த நிதியாண்டின் கடைசி
காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8%ஐத் தொட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை” என்கிறார்.

உலகமயமாக்குதல்
என்னும் பொருளாதார சித்தாந்தத்தின்படி இந்த ஜி.எஸ்.டியினால் இந்தியாவும் மற்ற முன்னேறிய
நாடுகளோடு சேர்ந்து, ‘எளிதாக வியாபாரம் செய்தல்’ (Ease of doing business) அளவுப்படி
அதிகமான வெளிநாட்டு முதலீடு இந்தியாவில் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். தற்காலச்
சிரமங்கள் இருக்கக்கூடும். சில பொருட்களின் விலை அதிகரிக்கவும் செய்யலாம். ஆனால் நீண்டகால
அடிப்படையில் இந்த ஜி.எஸ்.டி நிச்சயம் இந்தியப் பொருளாதாரத்திற்கு நல்லதே செய்யும்
என்றே நம்பலாம்.

ஆளும் கட்சியினர்
ஜி.எஸ்.டியை ‘வாராது வந்த மாமணி’ போலப் புகழ்வதும், எதிர்க்கட்சியினர் அது ஏதோ பெரிய
சாபம் போல இழிப்பதும் என இரண்டையுமே நாம் ஊடகங்களில் பார்க்கிறோம். நமது நாட்டின் பொருளாதாரம்
இதனால் மேம்படுமா அல்லது அடி வாங்குமா என்பது இன்னும் சர்ச்சையாகவே இருக்கிறது. உண்மை
நிலை இரண்டுக்கும் இடையில்தான் இருக்கிறது!

பின் குறிப்பு:

மதுரை வீரனெல்லாம்
சும்மா வதந்திதான். சாந்தோமில் உள்ள லைட் ஹவுஸிலிருந்து அடிக்கொருதரம் சுழலும் அந்த
விளக்கு வெளிச்சத்தில் குதிரை சவாரி செய்வது போன்ற மன்றோ சிலையின் பிம்பம் வானத்தில்
பறப்பதுபோலத் தெரிந்ததாகச் சொன்னார்கள்!

Leave a Reply