Posted on Leave a comment

சில பயணங்கள், சில பதிவுகள் – 2: சுப்பிரமணியும் சுயமரியாதையும் – சுப்பு


மாரியம்மன் திருவிழாவில் நாங்கள் காவடி எடுப்போம். மழையை வேண்டித்தான் திருவிழா. மாரியம்மன் மனது குளிர்வதற்காக ஒவ்வொரு வீட்டுவாசலிலும் அண்டா அண்டாவாகத் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். தெருவெல்லாம் தண்ணீர் தெளிக்கப்பட்டிருக்கும். காவடிக்காரர்கள் ஆடிக்கொண்டே வந்து வீட்டுவாசலில் காலை மடித்து அமர்வார்கள். பெண்கள் அவர்கள்மீது குடம்குடமாய் நீரைக் கொட்டுவார்கள். குடிப்பதற்கு பானகமும் நீர்மோரும். கடைசிக் கட்டத்தில் இவற்றையே தலையில் ஊற்றிக் கொள்வதும் உண்டு. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் நாக்கில் வேலைக் குத்திக் கொண்டும், முதுகில் குத்திய கொக்கியில் இளநீர்க் குலையைத் தொங்கவிட்டுக்கொண்டும் வருவார்கள். சிலர் முதுகில் இருக்கும் கொக்கியில் கயிற்றைக் கட்டி ஒரு சப்பரத்தை இழுத்துக்கொண்டே நடப்பார்கள். சிலருக்கு உடம்பெங்கும் ஊசிகள்.

முதலியார்கள் துளைபோட்ட இடுப்புச் சதையில் குடைக்கம்பிகளைக் கோத்துக்கொண்டு வரிசை வரிசையாக நடப்பார்கள். குடைக்கம்பியில் எலுமிச்சம்பழம் செருகப்பட்டிருக்கும். இரண்டு கைகளாலும் குடைக்கம்பிகளைப் பிடித்து முன்னும் பின்னுமாக அசைத்து ராணுவ வீரர்களைப் போல அவர்கள் விரைப்பாய் நடைபோடுவார்கள். ஒருவர் ‘காரணமாகவே வீராணத்தேரியில் கம்பமொன்று நாட்டிவைத்தான்’ என்றதும், அனைவரும் ஒரே குரலில் ‘ஆல்ரபாய், ஆல்ரபாய்’ என்றபடி குடைக்கம்பிகளை சரக்சரக்கென்று அசைத்துக்கொண்டே முன்னேறுவார்கள். முதலியார்கள் பெருமை விளங்க ஒட்டக்கூத்தர் பாடிய ‘ஈட்டி எழுபது’ பாடல்களைத்தான் அவர்கள் இவ்வாறு பாடுவார்கள்.

குஞ்சம்மா பாட்டி ஒரு வகையில் எனக்கு அப்பாவின் தமக்கை; இன்னொரு வகையில் அம்மாவின் அம்மா. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு ஒரே மகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார். பெண்ணைத் தம்பிக்கே மணம் முடித்தார். எங்கள் வீட்டிலேயே இருந்தார். பத்து வயது வரை எனக்கு குஞ்சம்மா பாட்டியின் செல்லம் குறைவின்றிக் கிடைத்தது.

என்னுடைய சகலவிதமான ஆர்ப்பாட்டங்களுக்கும் பாட்டியின் ஒத்துழைப்பு உண்டு. பேரன் சர்க்கரையில்தான் பல் தேய்ப்பேன் என்றாலும், வண்டிமசியை வெள்ளை ஜிப்பாவில் பூசிக்கொண்டாலும், பாட்டியின் நிபந்தனையற்ற ஆதரவு நிச்சயம் உண்டு. அந்த வீட்டில் என் அம்மாவே ஒரு குழந்தையாகக் கருதப்பட்டதால் எனக்குத் தாயின் அரவணைப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை அறிய அதிக வாய்ப்பில்லாமல் போயிற்று. அம்மா எனக்கு ஒரு தோழியாகத்தான் இருந்தார்.

குடும்பப் பிரச்சனைகளின் இன்னொரு பரிமாணத்திற்கும் இந்த வயதில் நான் காரணமானேன். நயினாவின் இன்னொரு தங்கையும் தன் கணவர் குழந்தைகளுடன் எங்கள் ஊரிலேயே பக்கத்துத் தெருவில் குடியிருந்தார். தேச சேவை, கைத்தறி அபிவிருத்தி ஆகியவற்றில் நயினா முழு நேரமாக ஈடுபட்டு விட்டதால் பரம்பரை பாத்யதையான கிராமத்தின் வைதீகத் தொழிலுக்கு அத்தையின் கணவர் நியமனம். அந்த வீட்டாருக்கும் நயினாவின் ஆதரவில்தான் ஜீவனம். இரண்டு வீட்டுக்கும் இடையே இடைவிடாத பனிப்போர் இருக்கும். என்னை முன்னிட்டு சமயத்தில் இது வலுத்துப் பெரிதாக வெடிப்பதும் உண்டு. எந்த வீட்டில், எவ்வளவு நேரம் இருக்கிறேன், எங்கே என்ன சாப்பிடுகிறேன் என்பவையெல்லாம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் எனக்குக் குடும்பச் சண்டையின் நெளிவு சுளிவுகள் அத்துப்படி ஆயின.

 இவ்வளவு செல்லமாய் வளர்க்கப்பட்ட எனக்கு சில பிரத்யேகப் பிரச்சினைகளிருந்தன. எனக்கு நண்பர்கள் அமைவதற்கு ஜாதியும் மரியாதையும் தடையாய் அமைந்தன. சக மாணவர்களின் விளையாட்டில் நான் பங்கு பெற முடியாது. மைதானத்தில் பையன்கள் கூடி ‘ஆலிகாலி” என்ற பெயரில் ஒரு பந்தை வைத்துக்கொண்டு முதுகில் அடித்து விளையாடுவார்கள். என்னை மட்டும் எவனும் சீந்தமாட்டான். “டேய், என்னை அடிங்கடா, என்னை அடிங்கடா” என்று கத்திக்கொண்டே நான் சுற்றிச் சுற்றி வரவேண்டியதுதான். நான் எல்லோரையும் அடிக்கலாம், என்னை எவனும் அடிக்கக்கூடாது என்பதுதான் சட்டம். அபூர்வமாக யாராவது என்னுடைய குடுமியைப் பற்றிக் கேலி செய்வதுண்டு.
 
சுப்ரமணி மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவன் கையில் பந்து கிடைத்துவிட்டால் போதும், அவன் என்னைத்தான் குறிவைப்பான். இந்த மாதிரி நடவடிக்கைகளால் என்னைக் கவர்ந்து நாளடைவில் சுப்ரமணி என் நெருங்கிய சகா ஆகிவிட்டான். என் வீட்டாரின் கட்டுப்பாடுகளால் என்னை நெருங்க முடியாதிருந்த சில விஷயங்களை எனக்கு சுப்ரமணிதான் அறிமுகம் செய்தான். அவனோடுதான் நான் முதன்முதலில் சேரிக்குப் போனேன். அவனோடு பழகிய பிறகுதான் நான் நயினாவுக்குத் தெரியாமல் மதன காமராஜன் கதை படித்தேன். என் ஜாதிக்கெல்லாம் துளியும் அவன் சலுகை தரமாட்டான். அவனைப் பொருத்தவரை சவரத் தொழில், அய்யர் தொழிலைவிட ஒஸ்தி. அவனுடைய தொழில் சவரத் தொழில் என்பதை இங்கே குறித்துக்கொள்ள வேண்டும். சுப்ரமணி என்னை என்னதான் மட்டம் தட்டினாலும் எனக்கு அவன் மீதிருந்த பிடிப்பு தளரவில்லை. சுப்ரமணியின் பாட்டி செத்துப் பிழைத்த கதையையும், மரணத்திற்கும் மீண்டு வந்ததிற்கும் இடையிலுள்ள பிரதேசங்களைப் பற்றியும் அவ்வளவு விவரமாகச் சொல்ல அவனால்தான் முடியும். முந்திரித் தோட்டத்தில் பழம் திருடவும், பருப்பைச் சுட்டுத் தின்பதற்கும் அவனிடம்தான் கற்றுக் கொண்டேன். பழத்தைத் திருட வேண்டிய அவசியமே இல்லை, கேட்டாலே யாரும் கொடுத்து விடுவார்கள் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

இந்த முந்திரிக் கொல்லைத் திருட்டுதான் நாங்கள் பிரிவதற்கும் காரணமாய் அமைந்தது. ஒருமுறை பழம் பறிக்கும்போது கிழவி ஒருத்தி எங்களைப் பிடித்துவிட்டாள். நான் யாரென்றறியாமல் என்னை ஏசிவிட்டாள். சில நாட்களில் அந்தக் கிழவி கீழே விழுந்து காலெலும்பு முறிந்துவிட்டது. அவள் என்னைத் திட்டியதால் நான் மந்திரம் போட்டு அவள் காலை முறித்துவிட்டதாக சுப்ரமணி பையன்களிடம் கதை பரப்பிவிட்டான். இத்தனை நாள் அவன்மீது நான் வைத்திருந்த மதிப்பு இதனால் பாழானது. பொய் பேசுபவனை சுயமரியாதைக்காரனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
 
வகுப்பறையில் ஞாபகமறதியாகப் புத்தகத்தை விட்டுவிட்டு வருதல், செருப்பைத் தொலைத்தல் போன்ற தவறுகளை நான் அடிக்கடிச் செய்வேன். ஒருமுறை செருப்பை விட்டுவிட்டு வந்தபோது வகுப்பு ஆசிரியர் “இதற்கு அபராதமாக நீ எட்டணா செலுத்த வேண்டும்” என்றார். நான் கேட்ட பொருளை நயினா வாங்கிக் கொடுத்து விடுவாரே தவிர, நான் கடைக்குப் போனதும் கிடையாது; காசு பணத்தைத் தொட்டதும் கிடையாது.

எட்டணாவுக்கு என்ன செய்வது என்ற கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. நயினாவிடம் கேட்கவும் தைரியமில்லை, பள்ளிக்கூடத்திற்குப் போகும் நேரம் நெருங்கிவிட்டதால் கலவரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காசு டப்பாவில் கையை விட்டுக் காசை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். வெளியே போய்ப் பார்த்தால் அவசரத்தில் இரண்டு எட்டணாக்களை எடுத்து விட்டிருக்கிறேன். பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் அபராதத்தைச் செலுத்தினேன். மீதி எட்டணாவை என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கே ஒளித்து வைப்பதென்றும் விளங்கவில்லை. நாள் பூராவும் கலங்கி கடைசியில் வீதியோரமாய் ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டேன்.

என் வீட்டார் காசு தரமாட்டார்கள் என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருந்தது. அவர் நயினாவுக்குத் தகவல் சொல்லி அனுப்பிவிட்டார். நான் நயினாவால் விசாரிக்கப்பட்டேன். நாணயத்தைத் திருடியதையும், என்ன செய்வதென்று தெரியாமல் புதைத்து வைத்துவிட்டதையும் தெரிவித்துவிட்டு தண்டனைக்குக் காத்திருந்தேன். நயினா அடிக்கவில்லை. சிரித்தார் என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

என்றாவது ஒருநாள் அபூர்வமாக வில்வண்டி கட்டிக்கொண்டு வீட்டாரோடு ஜெயங்கொண்டத்திற்கு சினிமா பார்க்கப் போவதுண்டு. அப்படிப் போகும்போது ஜனங்கள் ஒழுங்காய்ப் படத்தைப் பார்க்கவிட மாட்டார்கள். தியேட்டர்காரன் ரொம்ப உஷாராக, ஜனங்கள் தங்களை மறந்து படத்தில் இழைந்த நேரம் பார்த்து மின்விசிறிகளை அணைத்து விடுவான். ஜனங்கள் திடீரென்று எழுந்து நின்றுகொண்டு “காத்தாடி போடுயோவ், காத்தாடி போடுயோவ்” என்று கூச்சலிடுவார்கள். மின்விசிறிகள் சுழலத் தொடங்கும். மீண்டும் கதாநாயகி கடத்தப்படுவது போன்ற முக்கியமான கட்டத்தில் மின்விசிறிகள் அணைக்கப்பட்டு, மீண்டும் “காத்தாடி போடுயோவ்…”

நான் பார்த்த முதல் சினிமா ‘ஒளவையார்.’ யானைகள் தண்ணீரைக் கடக்கும் காட்சி மட்டும் நினைவிலிருக்கிறது. இரண்டாவது ‘வணங்காமுடி.’ அப்போது எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் வித்தியாசம் தெரிவதற்காக ஒரு குறிப்பு வைத்திருந்தேன். சண்டை போட்டால் எம்.ஜி.ஆர்., சத்தம் போட்டால் சிவாஜி என்பதுதான் குறிப்பு. வணங்காமுடியில் சிவாஜி சண்டை போட, அது தெரியாமல் நான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்று கத்த எல்லோருமாய்ச் சேர்ந்து என்னை ஒரே அமுக்காய் அமுக்கினார்கள்.

பள்ளிக்கூடத்திற்கு ஒரு அரசு அதிகாரி வந்து மாணவர்களுக்குத் தடுப்பு ஊசி போட்டார். எனக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டது. உடனே காய்ச்சலும், அதன் விளைவாய் நயினாவுக்குக் கோபமும் வந்தது. ஊசி போட்ட அதிகாரிக்கு நயினா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். நயினாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அதிகாரி ஆறு மாதம் படாத பாடுபட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அந்த அதிகாரி இறந்துவிட்டார். ஏற்கெனவே அய்யர் மீது ஜனங்களுக்கிருந்த மூடபக்தி இந்த அசம்பாவிதத்தால் இன்னும் பெருகியது.

கிராமத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் பஸ் வரும். குறிப்பிட்ட பஸ்ஸில்தான் பால் சங்கத்தின் பால் கேன்களை ஏற்ற வேண்டும். ஏதாவது காரணத்தால் பஸ் தவறிவிட்டால், பாலை வீணாக்காமல் வீதியில் வரிசையாக அடுப்பு மூட்டி அய்யரின் மேற்பார்வையில் பால் கோவா தயாரிப்பு. திண்ணையிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்தபடியே கண்கள் சொக்கி, நாசியில் கோவா வாசனை நிரம்பி வழிய நான் தூங்கிப் போவேன். பிறகு நடுஇரவில் என்னை எழுப்பி சுடச்சுடப் பால்கோவா தருவார்கள். காலையில் யோசிக்கும்போது இரவில் நடந்தது கனவா நிஜமா என்று விளங்காமல் கலக்கமாக இருக்கும்.

அச்சு வெல்லம் எனக்கு முக்கிய அளவை. என்னிடமிருந்து பாட்டியோ, அம்மாவோ எதை எதிர்பார்த்தாலும் பேரத்தில் அச்சு வெல்லத்திற்கு முக்கியப் பங்குண்டு. எந்த அழுகையையும் அச்சு வெல்லத்தால் நிறுத்திவிடலாம். எந்த வீம்பையும் அச்சு வெல்லத்தால் முறித்துவிடலாம். அச்சு வெல்லத்தைப் பத்திரப்படுத்தியதன் பலனாக எல்லா டவுசர் பாக்கெட்டிலும் ஒரு பிசுக்கு உண்டு. அதே காரணத்தால் எறும்பு கடித்து தொடை சிவப்பதும் உண்டு.

ஏழு வயதில், பரிக்கல் என்ற நரசிம்மர் கோவில் திருவிழாவிற்குப் போனேன். கோயிலில் சாப்பாடு போட்டார்கள். ரயில் பயணம், வெகு ஜனங்களின் ஆரவாரம், இவற்றோடு வரிசை வரிசையாய் வாழை இலை, கூடைச்சோறு, வாளிச் சாம்பார் எல்லாம் சேர்ந்து என்னை உற்சாக பூபதி ஆக்கிவிட, காய்கறிகளோடு கூடிய சமையலை முதன்முறையாக விரும்பிச் சாப்பிட்டேன். மேற்குறிப்பிட்ட வைபவம் எல்லாத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டாலும், பரிக்கல் அத்தைஊர் என்பதால் அம்மா தரப்பினர் இதை ரசிக்கவில்லை.

நான்காம் வகுப்பு படித்தபோது மாணவர்கள் ராஜா தேசிங்கு நாடகம் போட்டார்கள். நான் எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று முதலில் என்னைக் கேட்டார்கள். நான் நவாபாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். கிடைத்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டேனே என்று நண்பர்களுக்கு வருத்தம். ராஜா தேசிங்கு, அரை டவுசர் மேல் கலர்த்துணியைச் சுற்றிக்கொண்டு நிழல் குதிரைமேல் லொங்கு லொங்கு என்ற சவாரி செய்ய வேண்டும். நவாப்புக்குத்தான் ஜிகினா வேலைப்பாடுடைய ராஜா உடை, சிங்காசனம் எல்லாம் உண்டு என்கிறதாக எனக்குத் தெரிந்திருந்ததால் நான் நவாபைத் தேர்ந்தெடுத்தேன்.

… தொடரும்

Leave a Reply