Posted on Leave a comment

கோயில் அறிவோம் – வல்லபா ஸ்ரீனிவாசன்

கோயில் என்பது கடவுள் வழிபாட்டுக்காக வகுக்கப்பட்ட இடம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் கோயில் என்பது இந்த ஒரு விளக்கத்திற்குள் மட்டும் அடங்கும் ஒன்றல்ல. கடவுள் கோயிலுக்கு வெளியிலும் இருக்கிறார். வழிபாடும் கோயிலுக்கு வெளியிலும் இருக்கிறது.

ஊர் மக்கள் புழங்குவதற்கு, சந்திப்பதற்கு ஒரு விஸ்ராந்தியான இடம். மனக்கவலைகளை சற்றே இறக்கி வைக்க ஒரு இடம். பாட்டு, நடனம், கதாகாலட்சேபம் எனக் கலைகள் முகிழும் இடம். சிற்பங்கள், கோபுரங்கள் எனக் கட்டுவித்து அக்கால அரசர்கள் கலையை உயர்வித்த இடம். அவர்கள் காலத்தில் ஒரு பாதுகாப்பிடம். செல்வங்கள் வைக்கப்படும் இடம். ஒரு ஊரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கியக் காரணி. வியாபாரிகளுக்கு ஒரு சந்தை. ஊரின் தண்ணீர்த் தேவைக்கும், ஊரைக் குளிர்விக்கவும், வெள்ளத்தை ஓரளவு உள்வாங்கிக் கொள்ளவும், சூழலை அழகுபடுத்தும் குளங்கள் அமைந்த ஓரிடம்.

திருவிழாக்கள் மூலம் மக்கள் ஒன்று கூடவும், ஒருங்கிணைந்து செயல்படக் கற்பதற்கும் ஒரு இடம். டீம் ஒர்க், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் இப்படிப்பல அனுபவங்கள் கிடைக்கும் இடம். நிறைய சமைப்பது, விநியோகிப்பது, கூட்டத்தைச் சமாளிப்பது இவற்றுக்கு ஒருவிதமான பயிற்சி கிடைக்கும். மழை, வெள்ளம், பூகம்பம் என இயற்கையால் ஊர் ஆபத்துக்கு உள்ளாகும்போது இத்தகைய பயிற்சிகள் எப்படி உதவும் என்று யோசித்துப் பாருங்கள். விதவிதமான மக்களை ஒருவிதத்தில் ஒழுங்குபடுத்தும் இடம். திருப்பணிகளில் ஓரளவு உடற்பயிற்சியும், மனபலமும் உண்டாகிறது.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். டாக்டர் நாகசாமி அவர்கள் லண்டன் கோர்ட்டில் நம் ஊர் நடராஜர் சிலைக்காக வாதாடியபோது, இந்தியக் கலை, ஆகமங்கள், சாஸ்திரங்கள் பற்றி நான்கு நாட்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார். கோயில் என்பதை விளக்கும்படி நீதிபதி கேட்க, அவர் நிதானமாக அனைத்தையும் கூறி, எப்படி ஒரு கல் மட்டுமே இருப்பினும் அது கோயிலே என்று புரிய வைத்திருக்கிறார்.

பல்லவர் காலத்தில் செம்மையாக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து சோழர், நாயக்கர் என்று கலையிலும், பிரமாண்டத்திலும் மேம்பட்டுக்கொண்டே சென்று இன்று கோயில்களின் நாடாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

இக்காலத்தில் இந்தக் கோயில் வழிபாடு சற்றே குழம்பிக் கிடக்கிறது. நசுங்கி கூட்டத்தில் தரிசனம் என்று ஏதோ பார்த்துவிட்டு பிரசாதத்துடன் வருவதுடன், நம் குழந்தைகளுக்கும் ஆர்வம் ஏற்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.  குழந்தைகளின் கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஆசிரியர்களுக்கே பெரும்பாடாக இருக்கும் காலத்தில் காட்சி (விஷுவல்) மூலம் சொல்லிக் கொடுப்பதே சிறந்தது எனக் கருதப்படுகிறது. இந்த விஷுவல் என்பதின் சிறப்பை அறிந்து பல்வேறு விதமான சிற்பங்களையும், கடவுள் வடிவங்களையும், அவற்றின் சிறப்பைக் கூறுமாறு கலை வண்ணத்துடன் படைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நாமும் கொஞ்சம் முயற்சி செய்தோமானால் இவை நமக்குப் பல அரிய விஷயங்களைச் சொல்வதோடு ஒரு உயர்ந்த அனுபவத்தைத் தரும்.

சிலைகளை, கடவுள் வடிவங்களை நிதானமாகப் பாருங்கள். ஆராதியுங்கள், அதைப் பாடுங்கள், பாடிக் கேளுங்கள், கேட்டுக்கொண்டே அவற்றை ரசியுங்கள். ஒரு அனுபவத் தருணமாக அதை நம்மால் ஆக்க முடியும். எப்படி ஒரு மல்லிகைப்பூ வாசனையும் நாதஸ்வரமும் கல்யாண வீட்டை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதோ அதைப்போல.

நம்முடைய வழிபாடுகளோ, விளக்கின் ஒளி, ஊதுபத்தி, பூக்களின் மணம், பலகாரங்களின் மணம், மாவிலையின் மங்கலம், கோலங்களின் அழகு, மணியின் ஓசை – இப்படி அனைத்து உணர்தல்களும் ஒன்று சேருவதாக இருக்கிறது. கோயில் என்பதில் ஒரு பேரானுபவம் பெறலாம். இதற்கு நாம் கோயில்களைப் பற்றியும், சிற்பங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசியம். பல சிற்பிகளும், அரசர்களும், மக்களும் இணைந்து உருவாக்கிய இந்த அற்புதமான கோயில்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போதுதான், நமக்கு நம் நாட்டின், கலாசாரத்தின் உயர்வைப் பற்றிய பெருமை உண்டாகும்.

சிற்ப சாஸ்திரம் கோயிலின் பல பாகங்களையும் நுணுக்கமாகப் பெயரிட்டு விளக்குகிறது. நாம் பார்க்கப் போவது இதில் ஒரு துளி மட்டுமே. சில கலைச் சொற்களை அறிவது இதில் முதல் பாடம் என வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்ப க்ரகம்: இது நீங்கள் அறிந்ததே. மூலவர் எனப்படும் ஒரு கோயிலின் முக்கிய கடவுள் வடிவம் இருக்கும் இடம். இது பொதுவாக ஜன்னல்கள் ஏதுமின்றி அமைக்கப்பட்டிருக்கும்.

விமானம்: இந்த கர்ப்ப க்ரகத்தின் நேர் மேலே இருப்பது விமானம் எனப்படும். இதில் திராவிட, நகரி, கஜப்பருஷ்ட எனப் பல்வேறு விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கலை வடிவில் வேறுபட்டவை. இந்த விமானத்தின்மீது சிகரம் இருக்கும். இந்த சிகரத்திலும் கலை வேறுபாடு உண்டு.

அதிஷ்டானம்: சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருக்கும் பீடம் போன்ற கீழ்ப்பகுதி அதிஷ்டானம் எனப்படும். இதில் நீங்கள் தாமரை இதழ்கள் போன்ற அமைந்த பத்மம் பகுதி; குமுதம் எனப்படும் வளைந்து காணப்படும் பகுதி இவற்றைப் பார்ககலாம். இவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புப் பெயர்கள் உண்டு.

கோஷ்டம்: கர்ப்பக்ரக சுற்றுச் சுவரின் மூன்று பக்கமும் அமைக்கப்பட்டிருக்கும் ஜன்னல் போன்ற அமைப்பே கோஷ்டம் எனப்படும். இந்த கோஷ்டத்தில் சிலை வடிவங்கள் இருக்கும். சிவன் கோயிலென்றால் துர்க்கை, நேர் பின்னால் லிங்கோத்பவர், தெற்கு நோக்கி தக்‌ஷிணாமூர்த்தி. இந்த கோஷ்டச் சிற்பங்கள் பெரும்பாலும் உள்ளிருக்கும் தெய்வத்தின் பிற வடிவங்களாக இருக்கும். பெருமாள் கோயில் எனில் நரசிம்மர், வராகர் உருவங்களை கோஷ்டத்தில் காணலாம்.

கொடுங்கை: சுற்றுச்சுவரின் மீது சன்ஷேட் போன்ற மழையிலிருந்து மறைவு, பாதுகாப்பு தரும் அமைப்பே கொடுங்கை எனப்படும். பல கோயில்களில் மிக அழகான வேலைப்பாடமைந்த கொடுங்கைகளைக் காணலாம்.

பிராகாரம்: கர்ப்பக்ரகத்தை வலம் வருவதற்கான வழி பிராகாரம். ப்ராகாரத்தில் பல உபதேவதா ஸ்வருபங்கள் இருக்கும்.

அர்த்த மண்டபம்: கர்ப்ப க்ரகத்தின் முன்னால் காணப்படும் மண்டபம். இதைப்போல மகாமண்டபம், நந்தி மண்டபம் எனப் பல மண்டபங்கள் உண்டு. இதற்கு வெளியே கோயிலின் வெளிப் ப்ராகாரம். எல்லா இடங்களிலும் சிற்பங்களையும், பல்வேறு கலை வேலைப்பாடுகளையும் காணலாம்.

கோபுரம்: வெளி நுழைவாயில் மேலே உயர்ந்து தோன்றுவதே கோபுரம். சோழர் காலத்திற்குப் பின்வந்த நாயக்கர் காலத்தில்தான் தற்போது காணப்படும் பிரம்மாண்டமான கோபுரங்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர் பெரிய கோயிலில் உயர்ந்து காணப்படுவது கரப்ப க்ரகத்தின் மீதமைந்த விமானமே. கோபுரம் அல்ல. நாயக்கர்கள் கோயில்களில் பல மண்டபங்களை எழுப்பியும், கோபுரங்களைக் கட்டியும் கோயில் கலையை மேலும் வளர்த்தனர்.

சிற்பங்கள்: பல்வேறு விதமான சிற்பங்களை நாம் கோயில்களில் காண்கிறோம். அதில் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

இதை நாம் இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். ஒன்று, தனிச் சிற்பங்கள். கதை சொல்லும் சிற்பத் தொகுதிகள்.

தனிச் சிற்பங்கள் என்பது பல வகைகளில் காண்கிறோம். கடவுளின் அவதார வடிவங்களாக சித்தரிக்கப்பட்ட இவை பொருள் பொதிந்து ஒரு புராணக் கதையுடன் இணைந்து செதுக்கப்பட்டவை. e.g. தசாவதாரங்கள், சிவ மூர்த்தங்கள். இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சிற்பத் தொகுதிகள்[1] : இந்த சிற்பத் தொகுதிகள் புராணக் கதைகளில் வரும் காட்சிகளை சித்தரிப்பதாக இருக்கும். ராமாயணத்தின் ஒரு காட்சியாகவோ, பாகவதத்தின் ஒரு காட்சியாகவோ அவை இருக்கும். பல்வேறு நுணுக்கங்களை அதில் காட்ட சிற்பிகள் முயற்சித்திருப்பது நமக்கு ஆச்சர்யம் அளிக்கும்.

தனிச் சிற்பங்களில் தெய்வ ஸ்வரூபங்கள், பெண் வடிவங்கள், மிதுனச் சிற்பங்கள், யாளிகள், விலங்கு வடிவங்கள் எனப் பலவற்றை கோயில்களில் காண்கிறோம்.

சில தெய்வ ஸ்வருபங்களை முதலில் பார்ப்போம்.

 மகிஷாசுரமர்த்தினி: கொடூரச் செயல்களைப் புரிந்த மகிஷனை அழிப்பதற்காக சிவன், விஷ்ணு, ப்ரம்மா அனைவரும் தங்களது சக்தியை ஒன்று கூட்டி, தங்கள் ஆயுதங்களை வழங்கி உருவாக்கியதே மகிஷாசுரமர்த்தினி ஸ்வருபம். இதனால் இவள் கைகளில் சக்ராயுதம், சங்கு, சூலம், வில், மணி எல்லாம் இருப்பதைப் பார்க்கலாம். பல இடங்களில் மகிஷனைக் கொல்வது போலவும், கொன்ற தலை மீது நிற்பது போலவும் இந்த வடிவத்தைக் காண்கிறோம்.

தக்‌ஷிணாமூர்த்தி: சிவஸ்வரூபம். குருவாக சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் வடிவம். அறியாமை எனும் அசுரனைக் காலடியில் மிதித்தவாறு, யோக நிலையிலோ, முனிவர்களுக்கு போதிக்கும் நிலையிலோ காணப்படும் வடிவம். ஆலமரத்தின் கீழ் அமர்ந்தபடி தெற்கு நோக்கிய கோஷ்டத்தில் காணப்படும் வடிவம். இதற்கும் நவக்ரகத்தில் உள்ள குருவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நவக்ரகத்தில் ஒன்றான (வியாழன்) குருவுக்குச் செய்வதாகப் பலரும் தட்சிணாமூர்த்திக்கு பரிகார பூஜைகள் செய்வது போன்ற அஞ்ஞானம் இருக்க முடியாது. ஞான ஸ்வரூபருக்கு அஞ்ஞானிகளின் படையல்.

லிங்கோத்பவர்: இந்த வடிவம் கர்ப்ப க்ரகத்தின் நேர்பின்னால் உள்ள கோஷ்டச் சிற்பம். ப்ரம்மாவும் விஷ்ணுவும் உயர்ந்து நிற்கும் சிவபெருமானின் தலையையும் காலையும் காணும் பொருட்டு அன்னமாகவும் வராகமாகவும் உருவெடுத்து மேலும் கீழும் பயணிப்பது போன்ற ஒரு சிற்பம். இருவருமே காண முடியாமல் போவதை உருவகமாக இச்சிற்பம் காட்டும். அதாவது சிவனின் தலைப்பாகமும், காலும் இந்த வடிவில் லிங்கத்தின் உள் ஒளிந்திருப்பது போல வடிக்கப்பட்டிருக்கும்.

பிட்சாடனர்: ரிஷிகள் யாகங்களில் ஈடுபட்டு சிவபெருமானை வழிபடாமலிருக்கும்போது அவர்கள் கர்வத்தை அடக்கும்பொருட்டு எடுத்த அவதாரமே பிட்சாடனர். இச்சிற்பத்தில் சிவபெருமான் மிகுந்த எழிலோடு பிச்சை எடுப்பது போலவும், ரிஷி பத்தினிகள் அவர் அழகில் மயங்கிக் கிடப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். சுற்றுப் ப்ராகாரத்திலும், கோபுரங்களிலும் இச்சிற்பம் பல இடங்களில் காணப்படும்.

இதைப்போல கஜசம்ஹாரமூர்த்தி, த்ரிபுராந்தகர், ஊர்த்வ தாண்டவர், நடராஜர், கங்காதரமூர்த்தி, காலாரி மூர்த்தி, சதாசிவர் எனப் பலவகை மூர்த்தங்களை சிவன் கோயில்களில் காணலாம். கர்ப்ப க்ரகத்தில் லிங்கம் மட்டுமே இருப்பதால் இம்மூர்த்திகளை கோஷ்டச் சிற்பங்களாகவே காண்கிறோம்.

இதைப் போலவே விஷ்ணு கோயில்களில் அவரது தசாவதார வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கர்ப்பக்ரகத்தில் அனந்த சயனப் பெருமாள், வராகர், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் என பல விஷ்ணு வடிவங்களைப் பார்க்கிறோம்.

வராகமூர்த்தி: இரண்யாட்சகன் பூமியை ஒளித்து வைத்தபோது வராக வடிவமெடுத்து அவனை அழித்து கடலடியிலிருந்து பூமாதேவியைக் காத்தருளுவதாக புராணக்கதை. கீழிருந்து மேல் நோக்கிச் செல்வது போலவும், பூமாதேவியைக் கையில் ஏந்தியவாறும் காணப்படும் இவ்வடிவம்.

த்ரிவிக்ரமன்: வாமனாவதாரம் எடுத்து மஹாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு உலகளந்த புராணக் கதை. ஒரு கால் மேலே தூக்கியபடியும், நெடிதுயர்ந்து நிற்பது போலவும் இச்சிற்பம் வடிக்கப் பட்டிருக்கும்.

நரசிம்மர்: பிராகாரங்களில் சிற்பிகளால் பலவகையாகப் படைக்கப்பட்ட ஒரு உருவம் நரசிம்மர். குடலைக் கிழிப்பது போலவும், இரண்யனைத் தூக்கிப் பிடிப்பது போலவும் பல்வேறு விதமாக வடிக்கப்பட்ட சிலைகளைப் பல இடங்களில் காண்கிறோம்.

சிவ விஷ்ணு வடிவங்கள் இவ்வாறிருக்க பல்வகையான பெண் உருவங்களைக் கோயில்களில் காண்கிறோம். சிலவற்றைப் பார்ப்போம்.

சாலபஞ்சிகா: கொடியைத் தாங்கிப் பிடித்தவாறு நிற்கும் பெண். அழகான இவளைப் பல இடங்களில் காணலாம்.

கங்கா, யமுனா: கோயில் கோபுர வாயிலின் இரு புறமும் இரு பெண் உருவங்கள் இருக்கும். இவை கங்கை, யமுனை நதிகளை உருவகப்படுத்திய வடிவங்கள். கங்கை மகரம் எனப்படும் முதலையின் மீது நிற்பது போலவும், யமுனை கூர்மம் என்ற ஆமையின் மீது நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். கங்கையில் முதலை இருப்பதையும், யமுனையில் ஆமை இருப்பதையும் குறிப்பிடுவதாக இருக்கின்றன இச்சிற்பங்கள்.

அடுத்த முறை கோயில் செல்லும் போது இவற்றை கவனித்துப் பாருங்கள். சிற்பத் தொகுதிகளை பின்னர் பார்க்கலாம்.

Leave a Reply