Posted on Leave a comment

அஹிம்ஸா பரமோ தர்மஹ – லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்

(1917ம் ஆண்டு காந்தியின் அகிம்சை கொள்கைகளை விமர்சித்து இந்தியன் ரிவ்யூ பத்திரிகையில் லாலா லாஜ்பத் ராய் எழுதிய கட்டுரை இது)

உண்மையைத் தவிர உயர்வான மதம் இல்லை, அஹிம்ஸா பரமோ தர்மஹ என்ற வாக்கியத்தைத் தவிர சிறந்த நடத்தை விதி இல்லை என்று சொல்வதுண்டு. மேற்சொன்ன வாக்கியத்தில் இரண்டாம் பகுதியைச் சரியான முறையில் புரிந்துகொண்டு வாழ்வில் நடைமுறைப்படுத்தினால், ஒரு மனிதன் துறவியாகவும் நாயகனாகவும் உருவாக முடியும். தவறான புரிதலும் நடைமுறைப்படுத்தலும் ஒருமனிதனைக் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக, முட்டாளாக ஆக்கிவிடும். ஒரு காலத்தில் இந்தியர்கள் இதைச் சரியாகப் புரிந்துகொண்டு சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதனால் உண்மையான, நேர்மையான, தைரியமான மனிதர்கள் இங்கே இருந்தனர். அதன்பின் சில நல்ல மனிதர்கள், நல்ல நோக்கமுடையவர்கள், துறவு மனப்பான்மை கொண்டவர்கள், மேற்சொன்ன குணங்களை எல்லாவற்றிற்கும் மேலே வைத்து, உண்மை வாழ்க்கையின் இலட்சியமே அதுதான் என்று நிறுவ முயன்றனர். இப்படித் தங்கள் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், உலகில் உள்ள அனைத்தையும்விட சிறந்ததாக அஹிம்ஸையை மாற்றி, தேவைக்கு அதிகமாக அதை அவர்கள் உயர்த்தினர்.

மனிதர்களையும் நாடுகளையும் மேம்படுத்தும் மற்ற நல்லொழுக்கங்கள் எல்லாம் பின்னால் தள்ளப்பட்டுக் கீழிறக்கப்பட்டன. அவர்களைப் பொருத்தவரை, நன்னடத்தை, துணிச்சல், தைரியம், சாகசம் எல்லாம் தேவையற்றவையாகப் போயின. கௌரவமும் சுயமரியாதையும் மறக்கடிக்கப்பட்டன. நாட்டுப்பற்று, நாட்டின் மேலான காதல், குடும்பத்தின் மீதான அன்பு, இனத்தின் கௌரவம் எல்லாம் காணாமல் போய்விட்டன. இப்படி அஹிம்ஸை (கொல்லாமை) என்னும் கருத்தாக்கத்தை, தவறாக, குயுக்தியாகப் பயன்படுத்தியதும், மற்றெல்லாவற்றையும்விட அதற்கு அதிக முக்கியத்துத்தைக் கொடுத்ததும், ஹிந்துக்களின் சமூக, அரசியல், தார்மீக வாழ்வில் வீழ்ச்சியை ஏற்படுத்தின. ஆண்மை என்பது அஹிம்ஸையைப் போன்றே ஒரு நல்லொழுக்கமாகும் என்பதை அவர்கள் மறந்துபோயினர். சொல்லப்போனால், சரியாகப் பயன்படுத்தும்போது இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தனிமனித மற்றும் நாட்டின் விருப்பம், பலவீனமானவர்களை வலிமையானவர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும், அயோக்கியர்களிடமிருந்தும், காமாந்தக்காரர்களிடமிருந்தும், பெண்களின் மானத்தை அழிக்க முயல்பவர்களிடமிருந்தும், துஷ்டர்களிடமிருந்தும், ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும் காப்பாற்றி, அவர்களுக்குத் தீங்கிழைப்பதைத் தடுத்து நீதியை நிலைநாட்டுவதில் உள்ளது. தீயவர்கள் அப்பாவிகளைத் துன்புறுத்துவது, அவர்களின் தூய்மையைக் குலைப்பது, மற்றவர்களின் உரிமையைப் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் நியாயமான கண்டனங்களுக்கு உள்ளாகி, அதன் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டி வரும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதே மனித இனத்தின் தேவை என்பதை அவர்கள் புறக்கணித்தனர். எவரொருவர், தீயவர்கள், கொடுங்கோலர்கள் ஆகியோரது ஆதிக்கத்தைப் பொருத்து, அவர்களின் எல்லை மீறிய செயல்களை அனுமதிக்கிறாரோ, அவர் ஒரு வகையில் அதற்குத் துணைபோகிறார் என்பதையும், அதை ஊக்கப்படுத்துகிறார் என்பதையும், அந்தத் தீயவர்களில் வளமான வாழ்வுக்கும் வலிமைக்கும் அவரே பொறுப்பு என்ற உண்மையின் முக்கியத்துவத்தையும் அவர்கள் உணர மறந்தனர். அளவுக்கு அதிகமான, தவறாகப் பயன்படுத்துப்படும் அஹிம்ஸை, சமூக அமைப்பில் விஷம்போலக் கலந்து, அதைப் பலவீனப்படுத்தி, ஆண்களையும் பெண்களையும் அரைக்கிறுக்கர்களாகவும், வெறி பிடித்தவர்கள் போலவும், எதைப் பார்த்தாலும் நடுங்குபவர்களாகவும் மாற்றி, செயலூக்கத்திற்குத் தேவையான நல்ல குணங்களைக் குலைத்துவிடுகிறது. ஆண்களைக் குழப்பவாதிகளாகவும் கோழைகளாகவும் உருவாக்கிவிடுகிறது அது.

ஜைன மதத்தின் நிறுவனர்கள் துறவிகளாகவும், எல்லாவற்றையும் நீத்தவர்களாகவும், மான அவமானங்களைக் கருதாதவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய சீடர்கள், ஜைன சாதுக்கள், ஆசைகளைக் கொன்று புலன்களையும் மனதையும் அடக்குவதில் பெருவெற்றி கண்ட ஞானிகளாக இருந்தனர். டால்ஸ்டாயின் அஹிம்ஸை கிட்டத்தட்ட மூன்றாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்தது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவைப் போல இத்தனை அஹிம்ஸாவாதிகள் இத்தனை நூற்றாண்டுகள் இருந்ததில்லை. அதே சமயம் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் வீரமில்லாத, கீழ்க்குணங்கள் உடையவர்கள் இந்தியாவில் கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக இருந்தனர் என்பதையும் நாம் நினைவுகூரவேண்டியுள்ளது. சிலர் இதற்கு அஹிம்ஸை காரணம் இல்லையென்றும், மற்ற நல்லொழுக்கங்களைத் துறந்ததுதான் காரணம் என்றும் கூறுவர். ஆனால், அஹிம்ஸையைத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தியா தனது கௌரவத்தையும், ஆண்மையையும், உயர்வையும் இழந்ததற்கான காரணங்களில் ஒன்று என்று கூறுவேன். இதைக் கடுமையாகப் பின்பற்ற முனைந்தவர்கள், தாங்கள் அஹிம்ஸையை நடைமுறைப்படுத்திய விதத்திலிருந்து, தங்கள் வாழ்க்கையை, போலியான, ஆண்மையில்லாத, கொடுமையான விதத்தில் அமைத்துக்கொண்டதையே இதற்கான நிரூபணமாகக் கொள்ளலாம்.

நான் ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பாட்டனார் அஹிம்ஸையில் பெரும் நம்பிக்கை கொண்டவர். ஒரு பாம்பைக் கொல்வதைவிட அதனால் கடிக்கப்படுவதை விரும்புபவர். ஒரு கொசுவுக்குக்கூடத் துன்பம் நினையாதவர். மத சம்பந்தமான விஷயங்களில் மணிக்கணக்காக ஈடுபடுபவர். எல்லா விதமாகவும், அவர் ஒரு நல்லொழுக்கம் நிரம்பியவராகவும், குடும்பத்தில் உயர்ந்தநிலையை வகித்தவராகவும், எல்லோராலும் மதிக்கப்படுபவராகவும் இருந்தார். அவருடைய சகோதர்களில் ஒருவர் துறவியாக இருந்தார். ஒரு மதகுருவாக உயர்ந்த இடத்தில் இருந்தார் அவர். நான் சந்தித்தவர்களிலேயே சிறந்த குணமுடையவராக அவரை நான் சொல்வேன். அவருடைய கொள்கையின்படியே வாழ்ந்து, புலன்களின் இச்சைக்கு இரையாகாமல், ஆசைகளையும் விருப்பங்களையும் அடக்கி வாழ்ந்தவர் அவர். ஆனால் சிறந்த நடைமுறை விதிகளின்படி, அவருடைய வாழ்க்கை வறண்டதாகவும் இயற்கைக்கு மாறானதாகவும் இருந்தது. நான் அவர்மீது அன்பு செலுத்தி மதித்த போதிலும், அவருடைய வழியைப் பின்பற்ற முடியவில்லை, அவரும் என்னை அவர் வழிக்குக் கொண்டுசெல்ல முயலவில்லை. அவருடைய சகோதரரான என்னுடைய பாட்டனார், மாறுபட்ட மனிதர். அவர் அஹிம்ஸையை நம்பினார். அதாவது குயுக்தியான, எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத அஹிம்ஸையை. ஆனால் அவருடைய வணிகத்தில் எல்லா விதமான மோசடி வேலைகளையும் செய்வது சரியானது என்றும் அவர் கருதினார். அவருடைய வணிக விதிகளின்படி அவை சரியான வழிமுறைகளே. ஒருபுறம் சிறியவர்கள், விதவைகள் போன்றவர்களைத் தங்களது வியாபார விஷயங்களில் ஏமாற்றிக்கொண்டே, மறுபுறம் பூச்சிகளையும் மற்ற மிருகங்களையும் காப்பதில் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிடும் இந்த மதத்தவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இங்கு நான் இந்தியாவில் உள்ள ஜைனர்கள், ஹிந்துக்களைவிட மோசமானவர்கள் என்றும், அஹிம்ஸையைப் பின்பற்றுவது மோசமான காரியம் என்றும் சொல்லவரவில்லை. இப்படிப்பட்ட குற்றத்தை என்னால் சாட்டவும் இயலாது. ஜைனர்கள், வள்ளல்தன்மையுள்ள, விருந்தினரை உபசரிக்கும் விருப்பமுள்ள, புத்திக்கூர்மையுள்ள, வணிகத்தில் திறமையுள்ள ஒரு சமூகம் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்றே ஹிந்துக்களிலும் பல சமூகங்கள் உண்டு.

நான் சொல்லவருவது, அஹிம்ஸையைப் பின்பற்றுவது மட்டுமே ஒரு சமூகத்தை மற்ற சமூகங்களிடமிருந்து உயர்ந்ததாக, தார்மீக ரீதியில் சிறந்ததாக ஆக்கிவிடமுடியாது. சொல்லப்போனால், துன்புறுத்தப்படுவதை விரும்பாத, அதன்மேல் அச்சம்கொண்டுள்ள அவர்கள்தான், தங்கள் கையாலாகதத்தனத்தினால், வன்முறையையும் துன்பத்தையும் அதிகமாகச் சந்திக்கின்றனர். தங்களையும், தங்கள் அன்புக்குரியவர்களையும் அவர்களால் பாதுகாக்க முடியாது. ஆக்கிரமிப்பின் அடையாளமாக உலகில் இன்று யூரோப் இருக்கிறது. டால்ட்ஸ்டாய் அங்கே பிறந்தது யூரோப்பிற்கு ஒரு நன்மை. ஆனால் இந்தியாவின் நிலை வேறு. இந்தியாவில் ஆக்கிரமிப்பிற்காகவும், அடக்குமுறைக்காகவும் வன்முறையையும் நம்முடைய வலிமையை மற்றவர்மேல் செலுத்துவதையும் நாம் செய்வதில்லை. அந்த நிலைக்கு இந்தியா என்றும் செல்லாது என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், தற்காத்துக்கொள்ளவும், நம்முடைய பாதுகாப்பு மற்றும் நம் மனைவி, சகோதரிகள், புதல்விகள், தாய்மார்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்காகவும் போரிடுவதைப் பாவச்செயல் என்று போதிப்பதை ஏற்க இயலாது. இதுபோன்று போதிப்பது இயற்கைக்கு முரணானது, தவறானது. சட்டபூர்வமான நோக்கத்தை அடைவதற்காக சட்டவிரோதமான, அநீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் கண்டிக்கிறோம். ஆனால், பெரிதும் மதிக்கப்படும் மனிதர் ஒருவர் இளைஞர்களிடம் ‘நமது பொறுப்பில் இருப்பவர்களின் கௌரவத்தைக் காப்பதற்காக அவர்களின் புனிதத்தைக் குலைக்க முயல்வோரின் கைகளில் நம்மை ஒப்புவிப்பதே சிறந்தது’ என்றும் ‘அவர்களோடு சண்டையிடுவதைவிட இதற்கு அதிக மன உறுதியும் உடல் வலிமையும் தேவை’ என்று கூறும்போது, நாம் அமைதியாக அதைக் கடந்துசெல்ல முடியாது. ஒருவேளை ஓர் அயோக்கியன் நம் பெண்ணைப் பலவந்தப்படுத்துகிறான் என்று வைத்துக்கொள்வோம். திரு.காந்தி சொல்வது, அவருடைய கருத்தாக்கமான அஹிம்ஸையின் அடிப்படையில், பெண்ணின் மானத்தைக் காக்க அவளுக்கும் அந்த அயோக்கியனுக்கும் இடையில் நிற்பதுதான் ஒரே வழி என்பது. ஆனால் அவன் நம்மை வீழ்த்திவிட்டு அதன்பின் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தால் பெண்ணின் கதி என்ன? காந்தியைப் பொருத்தவரை அவனைத் தடுத்து நிறுத்தி அவனோடு பொருதுவதைவிட, அப்படியே நின்று அவனை அந்த மோசமான செயலைச் செய்ய விடுவதற்கு அதிக மனத்திண்மையும் தைரியமும் வேண்டும். காந்தியின்மீது மிகுந்த மரியாதை இருந்த போதிலும், எனக்கு இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை. திரு.காந்தியின் ஆளுமை மேல் எனக்கு அதிக மரியாதை உண்டு. அவரை ஒரு முன்னோடியாகக் கருதுகிறேன். அவருடைய நேர்மைமேல் எனக்குச் சந்தேகமே இல்லை.

அவருடைய நோக்கங்களை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர் கூறும் இந்த மெல்லக் கொல்லும் கோட்பாட்டை எதிர்த்துப் போராடுவதை என் கடமையாகக் கருதுகிறேன். காந்தியைப் போன்ற ஒருவர் இளம் இந்தியர்களின் மனதில் விஷத்தைக் கலப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது. தேசத்தின் உயிர்மையின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவற்றுள் மாசு கலக்க யாருக்கும் சுதந்திரம் இருக்கக்கூடாது புத்தரோ, ஏசுவோ, இப்படியெல்லாம் நடக்குமாறு போதிக்கவில்லை. ஜைனர்கள்கூட அவ்வளவு தூரம் செல்லத் துணிவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏன்? அந்தச் சூழ்நிலையில் கௌரவமாக வாழச் சாத்தியமே இல்லை. தன் விருப்பம் போலச் செயல்படும் எவரையும் இதுபோன்ற கொள்கையுள்ள ஒரு மனிதன் தடுக்க இயலாது. அப்படியானால் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை அந்நாட்டிலிருந்து விலக்கி வைக்கும் வெள்ளையர்களின் முயற்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, அவர்களுடைய உணர்வுகளை ஏன் காந்தி புண்படுத்தினார். தர்க்கரீதியாகப் பார்த்தால் தென்னாப்பிரிக்கர்கள் இந்தியர்களை வெளியேற்றும் விருப்பத்தை வெளிப்படுத்திய உடனேயே அவர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி தன் நாட்டவர்களையும் வெளியேறுமாறு வலியுறுத்தியிருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால், எந்த ஒரு எதிர்ப்பையும் ஹிம்ஸையாகவே கருதலாம். உடல் ரீதியான ஹிம்ஸை என்பது மன ரீதியான ஹிம்ஸையின் வெளிப்பாடே. ஒரு திருடனோடும் கொள்ளையனோடும் எதிரியோடும் மோதுவது பாவம் என்றால், அவனை எதிர்ப்பது அதனைவிடப் பெரிய பாவச்செயல். இந்தக் கருத்து இவ்வளவு அபத்தமாக இருப்பதால் திரு.காந்தி இப்படிப் பேசினார் என்ற செய்தியையே நான் சந்தேகித்தேன். ஆனால் ஊடகங்கள் அவருடைய பேச்சைப் பற்றிக் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. திரு.காந்தியும் மறுப்பேதும் வெளியிடவில்லை, எப்படியிருந்தாலும் அமைதியாக இருந்துகொண்டு இந்தக் கோட்பாடு கேட்பாரில்லாமல் ஒரு விழுமியமாக உருவெடுப்பதையும் அதனால் இளைய பாரதம் பாதிப்புக்குள்ளாவதையும் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. திரு.காந்தியால் இந்தப் பேச்சு மறுக்கப்பட்டு அல்லது விளக்கப்படாத வரையிலும் அவர் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்க முயல்வதாகவே நான் கருதுவேன். அதைச் செயல்படுத்தவும் மற்றவர்களை அதில் ஈடுபடும்படி வலியுறுத்தவும் அவருக்குச் சுதந்தரம் இருப்பதென்னவோ உண்மைதான். அதேபோன்று அவருடைய இந்தத் தவறைச் சுட்டிக்காட்டுவதை என் கடமையாகக் கருதுகிறேன்.

Leave a Reply