Posted on Leave a comment

ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் – ஜெயராமன் ரகுநாதன்


“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? கொடுத்த வேலயச் செய்யாம இப்படி இருந்தா என்ன ஆறது?”

இப்படித் திட்டு வாங்குவது சாதாரணமாக மாணவர்களாகத்தானே இருக்கும். ஆனால் நமது உயர்நீதி மன்றம் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் கிட்டத்தட்ட இந்த அளவுக்குக் கேள்வி கேட்டிருக்கிறது.

“நீட் தேர்வில் ஐந்தே ஐந்து மாணவர்களே அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவமானப்படவேண்டிய விஷயம் இது. இவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து இந்த மாதிரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைக் கைவிடவேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் சொல்லியிருக்கிறார்.

‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் மகா மோசமான செயல்பாட்டுக்கு ஒரு முக்கியக் காரணம் அப்பள்ளிகளின் ஆசிரியர்களும்தான் என்பதை மறுக்கவே முடியாது. எதற்கெடுத்தாலும் பாடத்திட்டத்தை மட்டுமே காரணம் சொல்லித் தப்பித்துவிட முடியாது. ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் முறையும் அவர்களின் ஈடுபாடும் உழைப்புமே கேள்விக்குரியவைதான்.

கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் மிகப்பெரும் அளவில் வேலை நிறுத்தம் செய்வது பற்றிய செய்திகள் வருகின்றன. கேட்டால் எங்களின் பல கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று பதில் வருகிறது.

“ஸ்டிரைக்தான் அரசின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்ப ஒரே வழி!”

மற்ற அரசு ஊழியர்கள் போல ஆசிரியர்களும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற்று, பழைய திட்டத்தையே கொண்டு வரவேண்டும், ஏழாவது பே கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இன்னும் அதிகம் சம்பளம் தொடர்பான கோரிக்கைகள்.

“போன எலக்ஷன் சமயத்துல வாக்குறுதி குடுத்தாங்களே? அதான் நாங்க கேட்கறோம். ஜெயிச்சு வந்தவுடனே எங்களை மறந்துட்டா எப்படீங்க?”

“ஆனா நீங்க ஸ்டிரைக் பண்ணறது சரியா? பாதிக்கப்படுவது மாணவர்களாச்சே!”

“வேறென்ன செஞ்சாலும் அரசு எங்களைக் கண்டு கொள்ளறதில்லியே!”

என்ன பதில் சொல்லுவது?

ஆனாலும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சரியல்ல. முக்கியமாக இன்றைய அதீதப் போட்டிகள் நிலவும் காலகட்டத்தில் ஒவ்வொரு மாணவனும் நேரவிரயமின்றிப் படித்து, தேர்வுகள் எழுதி, நல்ல மேற்படிப்புக்குச் சென்று தன் எதிர்காலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியது கட்டாயம். முன்பிருந்ததைவிட மாணவனுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் கற்பித்தலும் ஆலோசனைகளும் அதிகமாகத் தேவையாக இருக்கின்றன. பாதிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சரியான ஆலோசனை வழங்கும் நிலையில் இல்லை. தான் கூலித் தொழிலாளியாகவோ ஆட்டோ டாக்ஸி ஓட்டுபவராகவோ இருந்தாலும் தன் மகனோ மகளோ பட்டப்படிப்பு முடிக்கவேண்டும், நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்று எண்ணும் பெற்றோரால் தகுந்த ஆலோசனைகள் வழங்க இயலாத நிலையில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிரியர் என்பவர் தொழில்முறை வல்லுநர். எஞ்சினீயர், அக்கவுண்டண்ட் ஆர்க்கிடெக்ட் போலத்தான் இவரும். ஒரு தொழில்முறை வல்லுநர் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது. அவருக்கு இஷ்டம் இல்லையென்றால், அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் தன் வேலையைவிட்டு விலகி வேறொரு வேலை தேடிக்கொள்ளவேண்டுமே தவிர, கூட்டம் கூட்டி வேலை நிறுத்தம் செய்வது தகாது.

“யார் சொன்னது? இது என்ன வேதமா இல்லை சட்டமா? ஆசிரியர்கள் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களின் பணி மிகக் கடுமையானது. பலதரப்பட்ட மாணவர்களுடன் பழகி, அவர்களின் தன்மைக்கேற்ப பாடம் கற்பித்தல் வேண்டும். இந்தக் கடின உழைப்பாளர்கள் நிச்சயம் தங்களின் நிலையை உயர்த்திக் கொள்ளவோ அல்லது அதிக சம்பளத்துக்காகவோ வேலைநிறுத்தம் செய்வதில் என்ன தவறு காணமுடியும்?”

இரண்டு பார்வைகளும் இருக்கின்றன.

“அதெல்லாம் பாவ்லா பேச்சு! ஒரு தொழிற்சாலையில் ஸ்டிரைக் நடந்தால் அதன் மானேஜ்மெண்ட் மட்டுமே பாதிக்கப்படும். ஆனால் டீச்சர்கள் ஸ்டிரைக் செய்தால் குழந்தைகள், பெற்றோர், குடும்பம் மற்றும் அந்தச் சமூகச்சூழலே பாதிக்கப்படும். அதனால டீச்சர் ஸ்டிரைக்கையும் மற்ற தொழிலாளர் ஸ்டிரைக்கையும் ஒப்பிடக்கூடாது!”

“அதெப்படி? டீச்சர்களின் பங்கு மிக முக்கியமானது என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான ஊதியம் வழங்கித்தானே ஆகவேண்டும்? நம்முடைய வரிப்பணம் இதற்கில்லாமல் வேறெதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்! வரிப்பணத்தை வைத்துக்கொண்டு இலவசத்திட்டங்கள் வழங்கிவிட்டு ஆசிரியர்களுக்கென்று வரும்போது அரசு கை விரிப்பது என்ன நியாயம்!”

ஆகஸ்ட் மாதம் அரசு ஊழியர்களோடு சேர்ந்து ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்தபோது JACTO-GEO வோடு ‘கோட்டை நோக்கிப் புறப்படுவோம்’ என்று சென்றார்கள்.

“முதலில் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்குங்கள். கூடிய விரைவில் எங்கள் கோரிக்கைகளை முழுமையாகப் பரிசீலிக்க உத்தரவு தாருங்கள்” என்று கேட்டவர்கள், “அரசு எங்களை அழைத்துப் பேசாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்” என்றும் எச்சரித்தார்கள்.

ஆனால் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்பது கொஞ்சங்கூட நியாயம் இல்லை என்று வாதிடுபவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களின் மாதச் சம்பளத்தோடு ஒப்பிட்டுச்சொல்கிறார்கள். அரசுப்பள்ளியில் ஒரு சீனியர் ஆசிரியர் ரூ 40,000 முதல் ரூ 60,000 வரையும் ஜூனியர் ஆசிரியர் ரூ 20,000 முதல் ரூ 40,000 வரையும் மாதச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் இதே சம்பளம் தனியார் பள்ளி என்று வரும்போது சீனியர்களுக்கு ரூ 20,000 முதல் ரூ 40,000 மற்றும் ஜூனியர்களுக்கு ரூ 15,000 முதல் ரூ 35,000 மட்டுமே கிடைக்கின்றது. வசதி குறைந்த தனியார்ப் பள்ளிகளில் சம்பளம் இன்னும் குறைவே. ஆனால் தனியார்ப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களின் உழைப்போ பல மடங்கு அதிகமாக உள்ளது. நிலைமை இப்படி இருக்க மாணவர்களைப் பெரும் சங்கடத்துக்குள்ளாகும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த வேலை நிறுத்தம் இப்போது தேவைதானா என்னும் கேள்வி தவிர்க்கமுடியாததே. அரசுப் பள்ளிகளில் உள்ள அரசு ஆசிரியர்களின் மீதான பொதுமக்களின் மதிப்பீடு என்ன என்பதை வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் உணர்ந்துகொள்வது நல்லது. மக்களின் ஆதரவின்றி நடைபெறும் எப்போராட்டமும் பிசுபிசுத்துப் போகும்.

இன்று தமிழக அரசுப்பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,16,84. இவர்களில் செப்டம்பர் 15 தேதி வரை வேலை நிறுத்தம் செய்தவர்களின் எண்ணிக்கை 33,487. அதாவது கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். நிச்சயம் இதன் பாதிப்பு கணிசமாக இருக்கும். ஆனால் அரசும் நீதிமன்றமும் கடுமையைக் காட்டியிருப்பது நல்ல விஷயமே. ஆசிரியர்களின் பொறுப்புணர்ச்சி பற்றிய நீதிபதியின் கேள்விக்கு சில ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதியின் நேர்மை குறித்தும் சாடியிருப்பது சட்டப்படியும் தார்மிகப்படியும் சரியல்ல.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்துக்கும் எதிர்ப்பும் போராட்டமும் கிளம்பியிருப்பது வருந்தத்தக்க விஷயம். ஒரு சில பிரிவினைவாதிகளும் அதில் குளிர்காய முற்படும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தும் இந்தப் போராட்டங்களினால் இழப்பு தமிழ்நாட்டுக்குத்தான் என்பதைப் பெருவாரியான மக்கள் உணர வேண்டும். ஒன்றிரண்டு நாள் தொலைக்காட்சியின் ஆர்க் லைட்டுக்கு மயங்கி எதை வேண்டுமானாலும் பேசுவது என்றிருக்கும் வெத்துவேட்டு அரசியல் மற்றும் வாய்ச்சவடால் வீரர்களின் வார்த்தைக்கு மயங்காமல் அவர்களை ஒதுக்கி, தமிழக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவது மிக முக்கியம். அடிப்படையாக நமது கல்வித்திட்டமும் செயல்படுத்தும் முறைகளும் இன்னும் பல படிகள் மேலே போகவேண்டும்.

ஆசிரியர்கள் என்றாலே சமுதாயத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்த ஒரு காலகட்டம் உண்டு. ஆசிரியர்களும் அப்போது அந்த அளவுக்கு அர்ப்பணிப்பும் உழைப்பும் கொண்டு மாணவர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தினார்கள். யாரும் கேட்காமலே, தியாகம் என்னும் உணர்வே இல்லாமல் தம் வாழ்க்கையைப் பள்ளிகளில் முழு ஈடுபாட்டோடு, இது ஆசிரியராகத் தம் கடமை என்று எண்ணிச் செலவழித்த ஆசிரியர்கள் இருந்திருக்கின்றனர். இன்னும்கூட சொற்ப அளவில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உலகெங்கிலும் இருக்கும் பல வெற்றியாளர்கள் தம் கிராமத்துப் பள்ளிகளில் கல்வி கற்பித்த ஆசிரியர்களே தம் வெற்றிக்குக் காரணம் என்று கொண்டாடுவதை நாம் இன்றும் பார்க்கலாம். அப்படிப்பட்ட பொற்காலத்தை நோக்கிச்செல்ல வேண்டும் என்னும் ஆசையையே நீதிபதி கிருபாகரனும் எதிரொலித்திருக்கின்றார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து ஐஐடிக்களிலும் மற்ற நாடு தழுவிய கல்விக்கூடங்களிலும் தமிழ் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. வெறும் மனப்பாடம் செய்தாலே மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடும் தரத்தில் இருக்கும் மாநிலப் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்னும் கோரிகை பலமாக எழுந்திருக்கிறது. அடுத்த வருடம் நீட் தேர்வு நிச்சயம். இதற்கெல்லாம் மாணவர்கள் தயாராக வேண்டும் என்றால் ஆசிரியர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பும் ஆலோசனையும் மிக மிக அவசியம். இந்த நிலையில் அவர்கள் வேலை நிறுத்தம் என்று போய்விட்டால் பாதிக்கப்படப்போவது தமிழக மாணவர்களே! இந்த வழக்கில் நீதித்துறை தடாலடியாக ஆசிரியர்களை வேலை நீக்கவும் முடியும் என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டு வேலை நிறுத்தத்திற்கு ஒரு முடிவைக்கொண்டு வந்திருப்பதைப் பலரும் வரவேற்கிறார்கள். நீதித்துறை தன் கரங்களை அளவுக்கதிகமாக நீட்டிவிட்டது என்று புலம்புவோரும் உண்டு.

இந்தப்பிரச்சினைக்கு அரசு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டும் என்பதில் தயக்கம் இல்லாவிட்டாலும், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வது தடை செய்யப்படவேண்டும் என்பதில் தவறில்லையோ என்றே படுகிறது.

Leave a Reply