Posted on Leave a comment

யோக ஆசான் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா – சுஜாதா தேசிகன்


ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியரிடம் கேட்கப்பட்ட, ‘இந்தச் சமுதாயத்துக்கு உங்களது செய்தி என்ன?’ என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் – ஓம்!

முன்பு ‘மாரல் சைன்ஸ்’ என்றொரு வகுப்பு இருந்தது. அதில் பெரும்பாலும் ஆசிரியர், “சத்தம் போடாமல் ஏதாவது செய்யுங்க” என்ற அறிவுரையுடன் நோட்டுப் புத்தகங்களைத் திருத்திக்கொண்டு இருப்பார். எப்பொழுதாவது நீதிக் கதைகள் சொல்லுவார். மற்றபடி அது ‘ஓபி’ வகுப்பு. மூக்குக்குக் கீழே மீசை எட்டிப்பார்க்கும் காலத்தில் அறிவியல் பாடம் ஃபிஸிக்ஸ், கெமிஸ்டரி, பையாலஜி என்று பிரிக்கப்பட்டு, ‘மாரல் சைன்ஸ்’ மறைந்து போனது.

ஹார்மோன்களின் அட்டகாசத்தால் பல சிக்கல்கள் வரும் பருவத்தில் ‘மாரல் சைன்ஸ்’ வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, எல்லோரும் என்ஜினியர்களாகவோ அல்லது டாக்டராகவோ புறப்படுகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் மாரல் சைன்ஸ் என்ற வகுப்பு ‘வேல்யூ எஜுகேஷன்’ என்று உருமாறி, லீடர் ஷிப், கம்யூனிகேஷன், கமிட்மெண்ட், ரெலேஷன்ஷிப், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று கார்பரேட் சமாசாரமாகிவிட்டது.

பத்து வயதுப் பையன் ஒருவனுக்கு ‘மௌஸ்’ உபயோகிக்க முடிகிறது என்பது விஞ்ஞானம் இல்லை, ‘வீண்’ஞானம். இந்த வயதில் அறிவியலுடன் தேவை ‘மாரல் சைன்ஸ்’. நம் பாரத தேசத்தில் ஸ்ரீராமாயணம், ஸ்ரீமஹாபாரதம் போன்ற காப்பியங்களையும், தென்திசை முதல் வடதிசை வரை உள்ள மஹான்களின் சரித்திரங்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுவே அவனுக்குச் சிறந்த மருந்தாக அமையும்.

நச்சுப் பொருள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். விஷம் மட்டும் நச்சு என்று என்று நினைக்கவேண்டாம். கடையில் வாங்கும் சீரியல் (Cereal, தானியம்) முதல் டிவியில் பார்க்கும் சீரியல் வரை எல்லாமே நச்சுத்தன்மை உடையவை. டிவி சீரியலா என்று உங்கள் மனது கேட்கிறது அல்லவா? அதற்குக் காரணம் உடலையும் மனதையும் நாம் பிரித்து பார்ப்பதால்தான்.

இன்று இருக்கும் டயபட்டீஸ் (நீரிழிவு), ஹைப்பர் டென்ஷன், உடல் பருமன், அல்சைமர் போன்ற கோளாறுகளுக்கும் மனதிற்கும் சம்பந்தம் உண்டு. இதற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது. உணவுக் கட்டுப்பாடும் யோகாவும்தான் சிறந்த வழி.

“எதுக்கும் நீங்க யோகா ட்ரை பண்ணுங்க” என்ற அறிவுரை, மன அழுத்தம், முதுகு, முழங்கால் வலி வந்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. யோகாவை ஏதோ ‘ஜிம்மிக்கி கம்மல்’ ரேஞ்சுக்கு பாட்டு போட்டு ஆடுவது எல்லாம் பாவம்.

இருபதாம் நூற்றாண்டின் யோகாச்சார்யா ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் (தமிழில்) வாங்கி, படிக்காமல் பில்லுடன் வைத்திருந்தேன். பெரிய யோகி என்று அப்பா இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு சில வாரங்கள் முன் கிடைத்தது. முன்பே படித்திருக்கலாமே என்று வருத்தப்பட வைத்த புத்தகம்.

யோகா கற்றுக்கொள் என்று என் அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார். மாடிக்கு அழைத்துச் சென்று என் அப்பா எனக்குப் பல ஆசனங்களைச் செய்து காண்பித்தது இன்றும் நினைவிருக்கிறது. கோலிக்குண்டு அளவு இருந்த சிறுநீரகக் கல்லை, ஆபரேஷன் செய்துக்கொள்ளாமல் தினமும் வாழைத்தண்டு சாறு குடித்தும் யோகாசனம் செய்தும் வெளியே கொண்டுவந்து டாக்டரையும் எங்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

நான் படித்த ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் வாழ்க்கைக் குறிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன் சுருக்கமாகச் சில ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் பற்றிச் சொல்கிறேன். அப்போதுதான் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் வாழ்கை வரலாறு எவ்வளவு மதிப்பு மிக்கது என்று நமக்குத் தெரியும்.

நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரிடமிருந்து பெற்றுத் தந்தவர். ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற 11 பாசுரங்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்துக்கு அடியில் ஆஷ்டாங்க யோகத்தில் நம்மாழ்வாரைத் தியானித்துப் பெற்றார்.

நாதமுனிகள் அருளிச் செய்தவற்றுள் யோக ரஹஸ்யம் அடங்கும். அதை குருகைக் காவலப்பன் என்ற தன்னுடைய சிஷ்யருக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர் காலத்துக்குப் பிறகு, அதை தன் பேரனான ஆளவந்தாரிடம் சொல்லித் தரும்படி நியமித்தார்.

ஆளவந்தார் யோக ரஹஸ்யத்தை கற்றுக்கொள்ள குருகைக் காவலப்பன் தியானிக்கும் இடம் வந்தடைந்த போது, குருகைக் காவலப்பன் தியானத்தில் இருந்தார். அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒரு மதிலின் பின் மறைந்து அவர் முடிக்கும் வரை காத்துக்கொண்டிருக்க, திடீர் என்று குருகைக் காவலப்பன் கண் விழித்து “இங்கே சொட்டை குலத்தைச் சேர்ந்தவர் யார்?” என்று கேட்க, ஆளவந்தார் வெளிப்பட்டு தன்னை நாதமுனிகளின் பேரன் என்று அறிமுகம் செய்து கொண்டார். (நாதமுனிகள் சொட்டை குலத்தைச் சேர்ந்தவர்.)

ஆளவந்தார் ஆச்சரியப்பட்டு “எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்க, “யோகத்தில் இருந்தபோது பெருமாள் தன் தோளை அழுத்தி எட்டிப்பார்த்தார், சரி, நாதமுனிகளின் சொட்டை குலத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார் என்பதை யூகித்தேன்” என்றார். ஆனால் ஆளவந்தாருக்கு யோக ரஹஸ்யம் கிடைக்கவில்லை. பிறகு அது அழிந்து போயிற்று. ஆளவந்தார் காலம் பொ.பி. 976 – 1006.

ஆளவந்தாருக்குப் பிறகு 800 ஆண்டுகளுக்குப்பின் 1888ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் நாள் கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பிறந்தார் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார். இவர் நாதமுனிகள் வம்சத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் முன்னுரையில் அவரது மகன் டி.கே.வி. தேசிகாச்சார் இப்படி எழுதுகிறார்.

“எங்கள் குரு ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா நூறு வருடங்கள் மேல் வாழ்ந்தும், தன் வாழ்க்கை வரலாறு பற்றிச் சில தகவல்களே விட்டுச் சென்றுள்ளார். பல துறைகளில் நிபுணராக இருந்த இவருடைய பின்னணி எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டும். பல முறை முயற்சி செய்தும் இவரைப்பற்றி செய்தி அதிக அளவில் சேர்க்க முடியவில்லை. பல முறைகள் வற்புறுத்தியபின் ஒரிரு முறைகள், தன் வாழ்க்கையில் முக்கியமான சில நிகழ்ச்சிகளைச் சொன்னார். இதுவும் சுவாரஸ்யமாக தொடரும்பொழுது, ‘இது அஹங்காரத்தைத் தூண்டும் பயணம்’ என்று சொல்வதை நிறுத்திவிடுவார்.”

இளம் வயதில் வேதத்தை சந்தை முறையில் தன் தந்தையிடம் கற்றார். இவருக்குப் பத்து வயது இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக தந்தையை இழந்தார். பாட்டனார் மைசூரில் இருக்க, 12 வயதில் அங்கே சென்று பரகால மடத்தில் மாணவராகச் சேர்ந்தார். 16ம் வயதில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கனவில் நாதமுனிகள் தோன்றி தெற்கே உள்ள அழ்வார் திருநகரிக்கு வருமாறு கட்டளையிட்டார். பணத்தைச் சேர்த்துக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்குப் புறப்பட்டார். .

ஆழ்வார் திருநகரியில் புளியமரத்தடியில் ஒரு பெரியவரை அணுகி “நாதமுனிகளை எங்கு தரிசிக்கலாம்?” என்று கேட்க, அவர் தனது கையால் காட்டிய திசையை நோக்கிச் சென்றார். அது தாமிரபரணி நதிக்கரையில் ஒரு மாமரத்தடி. உணவருந்தாமல் மிகவும் களைத்திருந்த இவர் அங்கு மயக்கமாக விழுந்தார். அங்கு இவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. மூன்று மாமுனிவர்கள் மத்தியில் அவர் இருந்தார். அவர்களை நமஸ்கரித்து, நாதமுனிகள் இயற்றிய யோக ரஹஸ்யத்தைத் தனக்கு போதிக்கும்படியாகக் கேட்டுக்கொண்டர். நடுவில் இருந்த நாதமுனிகள் தனது இனிமையான குரலில் யோக ரஹஸ்யத்தை செய்யுளாகக் கூற, அதைக் கேட்டுக்கொண்டார். சில மணி நேரம் சென்று ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் தன் சுயநினைவு வந்தபோது முனிவர்கள் மறைந்தனர். மாமரத்தடியையும் காணவில்லை.

மீண்டும் கோயிலுக்குத் திரும்பினார். அங்கு அந்தப் பெரியவர் இவரைப் பார்த்தவுடன் “என்ன, நாதமுனிகளிடமிருந்து யோக ரஹஸ்யம் உபதேசமாயிற்றா? கோயிலுக்குப் போய்ப் பெருமாளைச் சேவி” என்று கூற, கோயிலுக்குச் சென்று திரும்பி வந்ததும் அந்தப் பெரியவரையும் காணவில்லை. அப்போதுதான் அந்தப் பெரியவர் தனது கனவில் தோன்றிய, மூன்று மாமுனிவர்கள் நடுவில் காட்சி தந்த நாதமுனிகள் தோற்றமாய் இருந்தது தெரிந்தது.

இவ்வகையில், காலத்தால் அழிந்திருந்த ‘யோக ரஹஸ்யம்’ என்ற அரிய நூல் இவருக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில்தான் தன் யோக தத்துவங்களை வகுத்துக்கொண்டார். மீண்டும் மைசூர் திரும்பி மேலும் படித்து ‘வித்வானாக’ தேறி, சம்ஸ்கிருத மேற்படிப்புக்கு வாரணாசிக்கு தன் 18ம் வயதில் புறப்பட்டார். அங்கும் ஓர் ஆச்சரியம் நடந்தது.

அங்கே சிவகுமார சாஸ்திரியிடம் மாணவரானார். ஒரே இரவில் தனது குருவிடமிருந்து சம்ஸ்கிருத மொழியிலிருந்து நுண்ணிய அரிய விஷயங்களைக் கேட்டறிந்தார். மறுநாள், இவரது குரு தன் பேசும் சக்தியை இழந்தார்! இவருக்காகக் காத்துக்கொண்டு இருந்தது போல இருந்தது இச்சம்பவம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மைசூர் வந்த பிறகு வீணை, மீமாம்ஸம், பகவத் கீதை, ஸ்ரீவேதாந்த தேசிகரின் ரஹஸ்யத்ரயசாரம், ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம், ஆகியவற்றைக் கற்றார்.

காசி அவரைக் கவர்ந்திழுத்தது, மீண்டும் கற்க வாரணாசி பயணமானார்.

உஞ்சவிருத்தி எடுத்துப் பெற்ற மாவிலிருந்து தேவையான ரொட்டியைச் செய்துகொண்டு படித்து, படிப்பில் சிறந்து விளங்கிப் பல பட்டங்களைப் பெற்றார். ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் (மூன்று மாதங்கள்) இமய மலைச்சாரலுக்கு அருகில் உள்ள கோயில்களுக்கும் புண்ணியத் தலங்களுக்கும் சென்று வருவார். மலைப்பிரதேசத்தில் நெடுந்தூரம் ஏறிச்செல்வதிலும் இயற்கையைக் கண்டு களிப்பதிலும் தன் பொழுதைப் போக்குவார். இவரது பூகோள அறிவு வியக்கத்தக்கது. ஒருவன் நிறைய இடங்கள் செல்வதின் மூலமே நல்ல அறிவைப் பெறுகிறான் என்று வலியுறுத்துவார்.

வாரணாசியில் படிக்கும்போது தந்தையாரிடம் கற்றிருந்த ஆசனப் ப்ராணாயாமங்களைச் செய்து வந்தார். இதைக் கவனித்து வந்த ஒரு சாது இவரை யோக நிபுணர் ஸ்ரீபாபு பகவன் தாஸிடம் அனுப்பினார். அவர் இவரை பாட்னா பல்கலைக்கழகத்தில் மணவனாக அனுமதித்தார்.

பாட்னா பல்கலைக்கழகத்தில் இவரது யோகா ஆசிரியர் ஸ்ரீ கங்காநாத்ஜா என்பவர் ‘யோகாச்சார்யா’ பட்டம் பெற்றவர். அவரிடம் யோகா பயின்று அதில் மேலும் தேர்ச்சி பெற விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு அவர் “யோகத்தை முறையே பயில வேண்டுமானால் நேபாளம் தாண்டி திபெத்தில் யோகிவர்யர் ஸ்ரீ ராமமோஹன ப்ரம்மச்சாரியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்ல ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார் தனது குறிக்கோளை அடைய முடிவு செய்தார்.

அந்தக் காலத்தில் நாடுவிட்டு வெளியே செல்வது அவ்வளவு எளிதல்ல. சிம்லாவில் இருந்த வைஸ்ராயிடம் இவரது ஆசிரியர் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். துரதிஷ்டவசமாக வைஸ்ராய் சர்க்கரை வியாதியால் உடல்நலம் குன்றி இருந்தார்.

ஒருநாள் வைஸ்ராயிடமிருந்து அழைப்பு வர, அவருக்கு ஆறு மாதம் யோகப் பயிற்சி அளிக்க, சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்தது. வைஸ்ராய் சந்தோஷமாக இவர் ஹிமாலயத்தைக் கடந்து இந்தியாவுக்கு வெளியே நோபாளம் திபெத் செல்ல உதவி செய்தார். ஆனால் மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிம்லா வந்து இவருக்கு யோகா கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தே  மானஸரோவர் சென்று ஸ்ரீ ராமமோஹன ப்ரம்மச்சாரியைத் தேடி, ஒரு குகையில் அவரைக் கண்டுபிடித்தார். வணங்கி சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். சில நாளில் ஸ்ரீராம மோஹன ப்ரம்மச்சாரியின் குடும்பத்தில் ஒருவரானார். பதஞ்சலி யோக சூத்திரத்தில் விவரிக்கப்பட்ட பல யோக நிலைகளை நேபாள மொழியில் உள்ள யோக கூரண்டத்தைக் கொண்டு அறிந்துகொண்டார்.

முதல் மூன்று வருடங்கள் யோக சூத்திரம் கற்றார். அடுத்த மூன்று வருடங்கள் யோகாப்யாஸ்யம் செய்வதில் கழித்தார். அதை அடுத்து ஒன்றரை வருடங்கள் சிஷ்ண க்ரமம், சிகிச்சா க்ரமம் என்ற யோகாபியாசத்தை மொத்தம் ஏழரை வருடங்கள் கற்றார். நடுவில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை சிம்லா சென்று வைஸ்ராய்க்கு யோகா பயிற்சி அளித்தார்.

ஏழரை வருடங்கள் குருவுடன் தன் வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்தார். அங்கேயே ஆனந்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இவர் குருவோ இவரை திரும்ப இந்தியா சென்று, குடும்ப வாழ்க்கை நடத்தி, யோக விஷயங்களை மக்கள் சேவைக்காக உபயோகப்படுத்துமாறு கட்டளையிட்டார்.

1922 திபெத்திலிருந்து திரும்பினார். மீண்டும் கல்கத்தா, அலகாபாத், பாட்னா, பரோடா ஆகிய பல்கலைக்கழங்களில் பல பட்டப்படிப்புகள் படித்தார். பிறகு மைசூர் ராஜகுடும்பத்தில் யோககுருவாக இருந்தார். அங்கே பலருக்கு நாடி பிடித்து உடல்நலக் குறைவானவர்களுக்கு உதவி செய்தார். இவர் ஆயுர்வேதத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர்.

ஸ்ரீகிருஷ்ணமாச்சரி ஆசனப்பயிற்சி முறையில், உடல், மூச்சு, மனது மூன்றும் சேர்ந்து இயங்கும். இவர் சொல்லிக்கொடுத்த முறை பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூறிய தத்துவங்களைத் தழுவியது.

ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் யோகா முறை இது – உடலை ஆசனம் செய்வதன் மூலம் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். ஆசனம் செய்யும்போது உடலுடன் மனமும் மூச்சும் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவேண்டும். பிறகு ப்ராணாயாமம் (மூச்சைக் கவனமாக கையாள்வது) செய்யவேண்டும். ப்ராணாயாமம் என்பது ஏதோ மூச்சை இழுத்து, அடக்கி விடுவது என்று நினைப்பார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் சொல்லிக்கொடுப்பது வேறு – மூச்சை உள்ளே இழுக்கும் போது உள்ளுக்குள் ஓர் அரிய சக்தி, நம்மைக் காக்கும் சக்தி போன்ற நிலை வர வேண்டும். அடக்கும்போது அந்த சக்தி நம்மைச் சுத்தம் செய்வதாக உணர வேண்டும். வெளிவிடும்போது மனதால் ‘எதுவும் என்னுடையது அல்ல, எல்லாம் உனக்கே சொந்தம்’ என்ற உணர்வுடன் வர வேண்டும். அடுத்த நிலை ஆசன ப்ராணாயாமம் செய்வது.

உடல் ஊனமுற்றோருக்கும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இவர் காட்டிய வழி மிக உயர்ந்தது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மூளை செவ்வனே வேலை செய்ய பல வழிகளைக் கையாண்டார். இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகச் சில கருவிகளை உருவாக்கினார்.

இவர் யோகத்தை ஒரு உடற்பயிற்சியாகக் கொள்ளாமல் கடவுளை அடையும் மார்க்கமாகக் கருதினார். மற்ற கலாசார, மதம் சம்பந்தப்பட்டவரகளுக்கு அவர்கள் கடைப்பிடிக்கும் புனிதமான பெயர்கள் இருந்தால் அதை உபயோகப்படுத்துங்கள் என்று சொல்லிவிடுவார். தன் நம்பிக்கையை ஒருபோதும் அவர்களிடம் திணிக்கமாட்டார்.

யோகாவில் மக்களை ஈர்க்க, யோகத்தால் இதயத் துடிப்பு, நாடி எல்லாவற்றையும் சில நிமிஷங்கள் நிறுத்தினார். இவரைப் பரிசோதித்த வெளிநாட்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர் “I would have pronounced him dead” என்றார் ஒரு ஜெர்மானிய மருத்துவர். இந்த உத்தியைத் தனக்குச் சொல்லித் தரவேண்டும் என்று அவரது மகன் தேசிகாச்சார் கேட்க, “இது ஈகோவைத்தான் வளர்க்கும், இதனால் சமுதாயத்துக்கு ஓர் உபயோகமும் இல்லை” என்று மறுத்துவிட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியருக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். கவிதை எழுதுவார், தோட்ட வேலை செய்வார். சங்கீதத்தைக் கேட்டுத் துல்லியமாக ராக, தாள தவறுகளைச் சுட்டிக் காட்டுவார். சங்கீத வித்வான்கள் இவரிடம் தங்கள் உடல் உபாதைகளுக்குத் தீர்வு கேட்கும்போது சங்கீத நுணுக்கங்களைக் கொண்டே தீர்வுகளை எடுத்துரைப்பார். வீட்டிலேயே ஆயூர்வேத மூலிகைகள் வளர்த்தார். நாட்டியத்தில் முன்னணியில் இருந்த பலர் இவரிடம் சந்தேகம் தீர்த்துக்கொள்வார்கள். ஜோதிடம் அவருக்குப் பிடித்த பிரிவு.

தனது அறையில் உள்ள நாற்காலி மேசைகளைக் காலத்துக்குத் தகுந்தவாறு மாற்றிப் போடுவது இவர் வழக்கம். ஒருமுறை முதல்நாள் மாற்றி போட்டது நினைவில்லாமல் அதிகாலை சூரிய உதயத்துக்குமுன் எழுந்து இருட்டில் நாற்காலி இல்லாத இடத்தில் நாற்காலி இருப்பதாக எண்ணி அமரப்போய், 1984ல் கீழே விழுந்து, இடுப்பு எலும்பு முறிந்தது. அப்போது அவருக்கு வயது 96! படுத்த படுக்கையான இவர் அறுவைசிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். படுக்கையிலேயே தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொண்டார். அதற்குத் தகுந்த ஆசனங்கள் செய்தார். இரண்டே மாதங்களில் இவர் எழுந்து உட்கார முடிந்தது. இதன் வீடியோ தொகுப்பை யூ ட்யூபில் காணலாம்.

கலிகாலத்தில் இறைவனை அடைய ‘சரணாகதி’ ஒன்றே வழி என்று திண்ணமாக நம்பினார். அதையே பலருக்கு உபதேசமும் செய்தார். 1988ல் நூறாவது வயதை அடைந்தார். விழாவை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யுமாறு பணித்தார். அந்த விழாவின்போது, ஸ்ரீகிருஷ்ணமாச்சாரியார் ஓம் என்று மூச்சு விடாமல் 55நொடிகள் ஓதினார். அதைத் தவிர மூன்று மணி நேரம் சம்ஸ்கிருதத்தில் உரை நிகழ்த்தினார்.

யோகா உடலையும் மனதையும் பிரித்துப் பார்ப்பதில்லை. யோகா ஒரு வித உடற்பயிற்சி இல்லை. உடற்பயிற்சி செய்த பிறகு உடம்பு சோர்வாக வியர்த்துக்கொட்டும். ஆனால் யோகா செய்த பிறகு உடல் புத்துணர்ச்சி அடையும். கடவுளை நம் மனம் நினைக்க, உடல் ஒத்துழைக்க வேண்டும். உடல் மட்டும் ஒத்துழைத்தால் போதாது, மனதும் ஒத்துழைக்க யோகா உதவுகிறது.

பிரதமர் நரேந்திர மோதி 2015ல் யோகா நாள் அறிவித்து யோகா பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. யோகா நாதமுனிகள் காலத்திலேயே, ஏன் அதற்கு முன்பும் இருந்திருக்கக்கூடும். சில வருடங்கள்முன் யான்.ஓய் தயான்ஸ்கி என்ற ரஷ்ய அறிஞர் சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்தில் யோகாசனம் இருந்ததை உறுதிப்படுத்தினார். அந்த ஆசனத்துக்குப் பெயர் மூலபந்தாசனம்.

இந்த மாதிரி ஆசனத்தில் யாராவது இருக்கிறார்களா என்று ஆராய்ச்சியாளர் தேடியபோது, இந்தியாவில் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் செய்கிறார் என்று கேள்விப்பட்டு, அவர் வீடு தேடி வந்து பார்த்தார்கள். அது கச்சிதமாகப் பொருந்துகிறது என்று ஆச்சரியப்பட்டார்கள்.

யோகா ஏதோ ஹிந்து சமாசாரம், மோடி அரசின் அரசியல் நகர்வு என்று நினைக்காமல், யோகா பற்றி நம் இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் பற்றி நாம் எந்த ஆவணப்படமும் எடுக்கவில்லை, வெளிநாட்டவர்கள்தான் எடுத்துள்ளார்கள் என்பது வருத்தமான விஷயம்.

உடம்பு ரஜோ குணத்தை படிப்படியாகக் குறைத்து, ‘லெத்தார்ஜி’யாக இருக்கிறது என்கிறோமே, அதை முற்றிலும் நீக்கி சுறுசுறுப்பு தருகிறது யோகா. குழந்தைகளை லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி படிப்பைச் சொல்லித் தருவதைவிடவும் முக்கியமானது, அவர்கள் காலை நீட்டி மடக்கி யோகா செய்யச் சொல்லித் தருவது. இதனால் அவர்கள் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையும்.
 
ஸ்ரீகிருஷ்ணமாச்சாரியார் பற்றிய நூல்: ஒரு யோகியின் சரிதம் – யோகாச்சார்யா ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா. 

Leave a Reply