Posted on Leave a comment

நேதாஜி மர்ம மரணம்: ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை – ஹரன் பிரசன்னா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த கதைகள் இன்னும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்கின்றன. சிறு வயதில் காற்றில் வரும் செய்திகள் பலவற்றில் நாம் மயிர்க்கூச்செரிய கேட்டவற்றுள் ஒன்று, சுபாஷ் உயிருடன் இருக்கிறார் என்பதும், அவரை யாரோ நேரில் பார்த்தார்கள் என்பதும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுபாஷ் எப்படி உயிருடன் இருக்கமுடியும் என்கிற உண்மையை எல்லாம் தாண்டி அவர் குறித்த கதைகள் தந்த பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அந்த பரபரப்பை அப்படியே தக்க வைத்திருக்கிறது ‘நேதாஜி மர்ம மரணம் – ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை’ புத்தகம். ரமணன் எழுதிய இப்புத்தகத்தை, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

சுபாஷ் மரணம் குறித்துக் கேள்விப்பட்ட கதைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுத்திருக்கிறது இந்நூல். ஆதாரம் உள்ளவை, ஆதாரம் அற்றவை என அனைத்தும். சுபாஷைச் சுற்றி இத்தனை கதைகளா என்கிற ஆச்சரியம் ஒரு பக்கம், சுபாஷ் எப்படித்தான் செத்தார் என்கிற குழப்பம் மீண்டும் நம்மை அசரடிப்பது ஒரு பக்கம். மொத்தத்தில் அட்டகாசமான திரில்லரைப் படித்தது போன்ற அனுபவம்.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், திரைப்படங்களில் வரும் புனைவுகளுக்கும் மேலானவை. நிஜம் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் இருந்துகொண்டே இருக்கும்போது, அதன் பின்னணி என்ன, அதன் வரலாறு என்ன, ஆதாரம் என்ன என்று யோசித்துக்கொண்டே இருப்போம். வரலாறு எதையும் மிகக் கவனமாகத் தீர்த்து வைப்பதில்லை. வரலாற்றில் நிரப்பப்படாத இடைவெளிகளே நம் கவனத்தை ஈர்ப்பவை. சுபாஷின் மரணத்தில் கிடைக்கும் நிரப்பப்படாத இடைவெளிகளை ஒட்டி உருவாக்கப்பட்டிருக்கும் கதைகளுக்கு அவரவர் பார்வையில் தரும் ஆதாரங்கள் அபாரம். ஒவ்வொன்றையும் படிக்கும்தோறும் இதுதான் சரி என்கிற முடிவுக்குள் அமிழ்கிறோம்.

நேருவுக்கு சுபாஷ் மரணம் அடையவில்லை என்கிற எண்ணம் உள்ளூர இருந்தது என்பதற்கான ஆதாரங்களை ஆசிரியர் பற்பல இடங்களில் கொடுக்கிறார். அப்படி ஒரு எண்ணம் நேருவுக்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் நிச்சயம் சுபாஷ் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதை நாடாளுமன்றத்தில் நேரு அறிவிக்கிறார். அந்த நேருவும் உண்மைதான். சுபாஷின் உடலைப் பார்க்காத அவரது உறவினர்கள் இறுதிவரை, இன்றுவரை கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். சுபாஷ் இறந்ததும் மௌண்ட்பேட்டன் அமைக்கும் ஒரு கமிஷன் அதன் முடிவைச் சில மாதங்களில் (1946ல்) சொல்கிறது. பின்னர் மேற்கு வங்கத்தின் அழுத்தத்தை அடுத்து நேரு ஒரு கமிஷனை அறிவிக்கிறார். கமிஷன் திட்டவட்டமாக சுபாஷ் இறந்துவிட்டார் என முடிவைச் சொல்கிறது. இந்திரா பிரதமரானபோது இன்னுமொரு கமிஷன். அந்த கமிஷனில் தங்கள் கருத்துகளில் பலவற்றை மாற்றியும் முரண்பட்டும் பதிவு செய்கிறார்கள் முந்தைய கமிஷனில் கருத்துச் சொன்னவர்கள். ஆனால் இந்த கமிஷனும் சுபாஷ் இறந்ததை உறுதி செய்கிறது. வாஜ்பாய் காலத்தில் இன்னுமொரு கமிஷன்! இந்த கமிஷனும் சுபாஷ் இறந்ததை உறுதி செய்தாலும் டோக்கியோவில் புத்தக் கோவிலில் உள்ளது அவரது அஸ்திதானா என்பதை உறுதி செய்யமுடியாது என்றும் சொல்கிறது. இவற்றையெல்லாம் மிகச் சரியாகவும் துல்லியமாகவும் தெரிந்துகொள்ள இந்நூலைப் படியுங்கள்.

நூலின் முதல் சில பக்கங்களில் சுபாஷின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. சுபாஷின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை மிக அழகாக விவரிக்கிறார் ரமணன். இந்த வரலாற்றைப் பதிவது இந்தப் புத்தகத்தின் மூல நோக்கம் அல்ல என்றாலும், இதை வாசித்துவிட்டு, சுபாஷின் மரணத்தில் உள்ள மர்மக் கதைகளை வாசிக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது உண்மைதான். இந்நூலில் ஆங்காங்கே சொல்லப்படும் சிறிய நுணுக்கமான விவரங்கள் மிக முக்கியமானவை. உதாரணமாக, ப்ளாக் ஹோல் ட்ராஜடி. இந்திய வரலாற்றில் நாம் மறந்து போனவை எத்தனை எத்தனையோ என்கிற எண்ணத்தைக் கொண்டு வந்தது இந்தக் குறிப்பு. இன்னொரு குறிப்பு, நம் தேசிய கீதமான ஜனகனமன முதன்முதலில் இசையாக இசைக்கப்பட்டது சுபாஷின் முயற்சியால்தான் என்கிற குறிப்பு. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜனகனமன பியானோ இசையில் ஒலிக்கப்படுகிறது.

ஹிட்லரின் உதவிக்காக சுபாஷ் காத்திருப்பதும் ஹிட்லர் தன்னைப் பயன்படுத்தப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் சுபாஷ் மனம் நொந்து போவதுமான அத்தியாயம் சுபாஷின் தொடக்ககால அரசியலையும் அதன்வழியே அவரது அசைக்கமுடியாத நாட்டுப்பற்றையும் பறைசாற்றுகிறது. ஸ்டாலின், ஹிட்லர் எனத் தொடர்ச்சியாக ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார் சுபாஷ். எப்படி எப்படியோ திட்டங்கள் தீட்டுகிறார். அத்தனையும் ஹிட்லர் அரசால் மறுக்கப்படுகின்றன. ஹிட்லர் மெயின் காம்ஃபில் இந்தியா பற்றிய எழுதி இருக்கும் குறிப்பில் திருத்தம் கேட்கிறார். அதுவும் ஹிட்லரால் மறுக்கப்படுகிறது. பின்பு ரஷ்யாவுக்குச் செல்ல உதவி கேட்கிறார். ஏன் ரஷ்யாவுக்கு என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது. சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை. அது அப்படித்தான் என்பதே வரலாற்றில் பதில்.

மாறுவேடத்தில் சுபாஷ் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் காட்சிகள் இன்றளவும் ஆச்சரியத்தை வரவழைக்கக்கூடியவை. காங்கிரஸ் தலைவராக சுபாஷ் வென்றதும், காந்தியுடனான கருத்து வேறுபாட்டால் அவர் ராஜினாமா செய்வதும், அதைத் தொடர்ந்த நீண்ட அரசியல் பயணத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதும் நிகழ்கின்றன. தொடர்ச்சியாக, ஜப்பானுக்குச் செல்லும் விமான விபத்தில் சுபாஷ் மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறார். பின்னர் கதைகள், கற்பிதங்கள், யூகங்கள், கமிஷன்கள்.

சுபாஷைப் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடச் சொல்லி நடந்த நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அண்மையில் (2016) அவற்றுள் சில வெளியிடப்பட்டன. அதில் உள்ள தகவல்கள் தரும் பின்னணி என்ன என்பதை ஆராய்வதே இந்த நூலின் முக்கிய நோக்கம். அதிலுள்ள தகவல்களைப் படிக்கும்போது சுபாஷின் மரணம் குறித்த முடிவுகள் இன்னும் அதிகக் குழப்பத்துக்குள்ளாகின்றனவே தவிர எவ்வித வெளிச்சமும் கிடைக்கவில்லை என்பதுவே உண்மை.

தற்போது வெளியான ஆவணங்களில் முக்கியமான செய்திகள் என்று ஆசிரியர் ரமணன் ஐந்து குறிப்புகளைச் சொல்கிறார். அவற்றைத் தொகுத்து, 1968 வரை நேதாஜியின் உறவினர்கள் கண்காணிக்கப்பட்டார்கள் என்று சொல்லலாம். சுபாஷ் இறந்ததை அறிவித்த நேருவின் அரசு ஏன் கண்காணிக்கவேண்டும் என்று தொடங்குகிறது ஐயம். அப்படியென்றால் எங்கோ உள்ளூர நேருவுக்கு சுபாஷ் உயிருடன் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்ததா என்கிற கேள்வி எழுகிறது.

சுபாஷின் நிதியும் தங்கமும் என்னவாயின என்பது குறித்தும் கதைகள் உலவுகின்றன. ‘ஷா நாவாஸின் அறிக்கை சொன்னதும் சொல்லாததும்’ என்கிற முக்கியமான அத்தியாயத்தில் இவை விவரிக்கப்படுகின்றன. சுபாஷின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் கமிஷனால் கடைசி வரை அவர் இறந்த இடத்துக்குச் (தைவான் அல்லது ஃபர்மோஸா தீவு) சென்று ஆராயமுடியவில்லை. ஒவ்வொரு அரசும் (பாஜக உட்பட) இதைச் செய்யமுடியாது என்று அறிவிக்கிறது. அதேபோல் ரஷ்யாவின் ஆவணங்கிடங்குக்குச் செல்லவே முடிவதில்லை. ஷா நாவாஸின் கமிட்டியில் ஒருவரான சுபாஷின் சகோதரர் சுரேஷ் போஸ் இந்த கமிட்டியின் அறிக்கையை ஏற்காமல் தன் கருத்துகளைத் தனியே வெளியிடுகிறார். மீண்டும் தொடங்குகின்றன குழப்பங்களும் யூகங்களும்.

போர்க்கைதியாக சுபாஷ் அறிவிக்கப்பட்டிருப்பதால்தான் அவர் உயிருடன் இருந்தும் தன்னை அறிவித்துக்கொண்டு வெளிவரத் தயங்குகிறார் என்றொரு தியரி. இதை நானும் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு ஒப்பந்தம் தனக்குத் தெரிந்து இல்லை என்றும் அப்படி ஒருவேளை இருந்தாலும் அது இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்றும் இதை சுபாஷ் ஒருவேளை உயிருடன் இருந்தால் அவரிடம் தெரிவிக்கலாம் என்ற ரீதியிலும் நேரு அறிவிக்கிறார். சுபாஷ் மரணம் குறித்து அமைக்கப்பட்ட கமிஷன்களுக்கே இதுதொடர்பான தெளிவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார். மிகச் சமீபத்தில்தான் (2002) சுபாஷின் பெயர் போர்க்கைதிகள் பட்டியலில் இல்லை என்றும் அதற்கான காரணங்கள் என்ன என்றும் வெளியாகிறது.

1961ல், ஸ்வாமி சாரதானந்த் தான் சுபாஷ் என்கிற புரளி எழுகிறது. ஒரு கட்டத்தில் ஆசிரமமே தங்களுக்கும் சுபாஷுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறது. நேரு தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதை விசாரிக்கும் எம்பி ஒருவர், இவருக்கும் சுபாஷும் தொடர்பில்லை என்று நேருவிடம் சொல்கிறார்.  மீண்டும் கமிஷன் அமைக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. வேறு வழியின்றி ஒருநபர் கமிஷன் அறிவிக்கப்படுகிறது. கோஸ்லா கமிஷன். கோஸ்கா கமிஷனில் சாட்சியங்கள் அடிக்கும் பல்டிகள், முன்பின் முரணான தகவல்கள் தலை சுற்ற வைக்கின்றன. இந்நூலின் மிக முக்கியமான அத்தியாயம் இதுவே. அதில் ஒரு சாட்சி (ஷைபுயா) சொல்வது: “நான் இப்போது சொல்வதிலும் முன்பு சொன்னதிலும் ஏதாவது மாற்றங்கள் இருந்தால், முன்பு சொன்னதையே எடுத்துக்கொள்ளுங்கள்.”

சுபாஷ் மரணக் கதைகளின் உச்சம் அடுத்து 1988ல் துவங்குகிறது, கும்நாமி பாபாவின் (பெயரற்ற பாபா) வருகையுடன். இந்நூலின் ஆசிரியருக்கே இவர்தான் சுபாஷாக இருக்குமோ என்கிற சந்தேகம் உண்டோ என்கிற ஐயம் வாசிப்பவருக்கு ஏற்படும் வண்ணம் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. படிக்கும் எனக்கும் அந்த சந்தேகம் வந்தது. அந்த அளவுக்குப் பல கதைகள். நிராகரிக்கமுடியாத கதைகள். சுபாஷின் உறவினர்களில் சிலர் இந்த பாபாதான் சுபாஷ் என்று நம்பி இருக்கிறார்கள். இவர் இறந்தபோது இவரிடம் இருந்த ஆவணங்களில் சிலவும் பயன்படுத்திய பொருள்களுள் சிலவும் சுபாஷினுடையவை என்று நம்பி இருக்கிறார்கள்.

அடுத்த சுற்றுக் கதைகள், சுபாஷுக்கு பாரத் ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டபோது (1990) தொடங்குகின்றன. இறந்ததற்குப் பிறகு வழங்கப்படும் விருது என்று அரசு அறிவிக்க, அதை எதிர்த்துப் போராட்டங்கள், கேள்விகள். அரசு (1997) பின்வாங்குகிறது. டோக்கியோவில் ரெங்கோஜி கோவிலில் இருக்கும் அஸ்திக் கலயத்தை இந்தியா கொண்டு வர ஐக்கிய முன்னணி அரசு முயற்சிக்க, அவர் இறந்ததே உறுதியாகாத நிலையில் எப்படி அஸ்தியைக் கொண்டு வரலாம் என்கிற ரிட் மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வரும் தீர்ப்பைத் (1998) தொடர்ந்து இன்னுமொரு விசாரணை கமிஷன். ‘அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடிக்க, ஏற்கெனவே போடப்பட்ட கமிஷன்கள் மரணம் என்று உறுதி செய்த விஷயத்தை ஆராய மீண்டும் ஒரு கமிஷன்” என்று எழுதுகிறார் ரமணன். இந்த முகர்ஜி கமிஷன் பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறது. இந்த கமிஷனில் கர்னல் லக்ஷ்மியின் முன்பின் முரணான பதிவுகள் இன்னுமொரு குழப்பம். முகர்ஜி கமிஷனின் அறிக்கை, சந்தேகங்களை சந்தேகங்களாகவே விட்டிருக்கிறது. இப்படி விடுவதற்காகவா இத்தனை செலவழித்து ஒரு கமிஷன் என்று நாடாளுமன்றத்தில் அமளி.

இந்நூலின் கடைசி அத்தியாயம் பாஜகவைக் குறை சொல்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக கால்பதிக்கவே இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது என்ற தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. சுபாஷின் உறவினர்களை தன் அரசியலுக்கு மோடி பயன்படுத்திக்கொண்டுவிட்டார் என்கிறது இந்த அத்தியாயம். ரகசிய ஆவணங்களை மோடி அரசு வெளியிடத் தயங்கக் காரணம் என்ன என்று பட்டியலிடுகிறார் ஆசிரியர். ஆனால் மோடி அரசு ஆவணங்களை வெளியிட்டுவிட்டது. இந்த அத்தியாயம் முன்பே எழுதப்பட்டு, மோடி அரசு ஆவணங்களை வெளியிட்ட பின்பு திருத்திச் சேர்க்கப்பட்டது போன்று வாசகனான எனக்குத் தோன்றியது.

இறுதியாக – மிகச் சொற்பமாக வரும், சுபாஷின் மனைவி எமிலியைக் குறித்த வரிகள் கண்களில் நீரை வரவழைத்துவிட்டன. அவர், சுபாஷின் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் உள்ளவையாக இந்நூலில் சொல்லப்பட்டிருப்பதைப் படித்தபோது கண்களில் நீர் திரையிட்டது. தன் சிறு குழந்தை அனிதா நடக்கத் துவங்கியது, பள்ளிக்குப் போனது எனச் சிலவற்றை எமிலி கடிதத்தில் எழுதி இருக்கிறார். நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளை எப்படிப் போற்றினாலும் தகும்.

Leave a Reply