ஜோகனஸ்பர்க்கில் விமானம் தரையைத் தொட்டது.
“ஹூம், ஆன்சைட் ஆஃபர், ஆஸ்திரேலியா, அமெரிக்கான்னு
அனுப்புவானுங்கன்னு பாத்தா, ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வச்சிருக்கானுங்க” என்று மனதுக்குள்
புலம்பிக்கொண்டே விமானத்தைவிட்டு வெளியே வந்தான் மணி. சின்ன பெயர். ஆனால் ஆள் பனைமரத்தில்
பாதி இருப்பான். முழுப்பெயர் மணிகண்டப் பிரபு. நனைந்த பனை நிறத்தில் இருப்பான். விமானத்தில்
அவன் அருகில் அமர்ந்திருந்த இஸ்கான் ஆசாமி அவனைப் பார்த்துக் கையசைத்துவிட்டு வெளியே
சென்றார். மணியின் கையில் அவர் தந்த பகவத்கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மணி தன் பெட்டியைப்
பொறுக்கிக்கொண்டு வெளியே வந்தான்.
அவன் வேலை செய்வது ஒரு குட்டி தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.
வேலைக்குச் சேர்ந்த அடுத்த மாதமே இங்கே அனுப்பி வைத்துவிட்டார்கள். முதல் பயணமே ஆப்பிரிக்காவிற்கு.
முடியாது என்று மறுத்தவனை ஒரு மாதம்தான், நல்ல ஊர், சிங்கம் எல்லாம் ரோட்டில் திரிந்து
கொண்டிருப்பதைப் பார்க்கலாம் என்று வேப்பிலையடித்து அனுப்பி வைத்துவிட்டனர்.
வெளியில் ஜோமி காத்திருந்தான். சென்றவாரமே அவன் அங்கு
வந்துவிட்டான். மணிக்கு வீசா பிரச்சினையால் தாமதமாகிவிட்டது. ஜோமி பெட்டியை வாங்கிக்கொண்டு
“வா போகலாம்” என்று பார்க்கிங்க் ஏரியா நோக்கி நடந்தான். விமான அசெளகரியங்களைப் பற்றிப்
பேசிக்கொண்டே காரை அடைந்தனர். ட்ரைவர் நன்றாகப் பழுத்த ஆப்பிள் போல இருந்தான். மணியின்
கையை இழுத்துக் குலுக்கி, “வெல்கம் டு செளத் ஆஃப்பிரிக்கா” என்றான்.
இருபது நிமிடப்பயணம். ராண்ட்பர்க். ஒரு குட்டி நகரம்.
ஒரு மரங்கள் சூழ்ந்த வீதியில் ஒரு வீட்டின்முன் நின்றது. ஜோமியிடம் இருந்த சாவியின்
ரிமோட்டின் மூலம் கேட்டைத் திறந்து உள்ளே சென்றார்கள். வீட்டின் சுற்றுச்சுவர் முழுவதும்
மின்சார வேலி. யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஆறடி உயர வெள்ளைக்கார பெண்மணி ஒருத்தி
வந்தாள். கிறிஸ்டா. அறிமுகப்படலம் முடிந்து உள்ளே சென்றார்கள்.
“நீ ரெஸ்ட் எடு, நான் போய்ட்டு வர்றேன். நாளைக்கு நீ
வந்தா போதும்” என்று கூறிவிட்டு ஜோமி வெளியேறினான்.
அறையைச் சுற்றிப் பார்த்தான். நல்ல பெரிய அறை. படுக்கைக்கு
எதிரில் ஒரு பெரிய சிலுவை. பெரிதென்றால், மணியை அதில் வைத்து அறையலாம், அந்தளவிற்குப்
பெரியது. அருகில் ஒரு குட்டி மண் பானை. சுடச்சுட வெந்நீரில் குளித்துவிட்டு ஆடை மாற்றிக்கொண்டு
படுத்தான். சிலுவையை நோக்கிக் கால்
நீட்ட மனம் கொஞ்சம் சங்கடப்பட்டது. தலையை மாற்றி வைத்தால், சிலுவையில் யாரோ தொங்கிக்கொண்டு
உதைப்பது போலப் பீதியாக இருந்தது. காலை நேராக நீட்டாமல் மடக்கி வைத்துப் படுத்து உறங்கினான்.
மாலையில் ஜோமியுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவனது
அறையிலிருந்த அடுப்பில் நூடுல்ஸை வேகவைத்துத் தின்று முடித்தான்.
ஏசி இல்லையென்றாலும் ஒன்றும் தெரியவில்லை. என்ன ஊருடா
ஒரு கொசுகூட இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள், காலை அலுவலக கார் வந்தது. நெரிசல் ஏதுமில்லா
சாலைகள். மலைப்பகுதி போன்று ஏற்றஇறக்கமான சாலைகளில் சென்று அலுவலகத்தை அடைந்தனர்.
‘என்னடா ஒரு பைக்கக் கூட காணோம்’ என்று நினைத்த மாத்திரத்தில் ஒரு பைக், கண்ணிமைக்கும்
நேரத்தில் காரைக் கடந்து பறந்து போனது.
அலுவலகம். இரண்டாவது மாடி. “ஹாய் நான் பெஞ்சமின்” என்று
ஒருவன் மணிக்குக் கை கொடுத்தான். பெஞ்சமின் அந்த நிறுவனத்தின் இயக்குநர். மணியைவிடக்
கொஞ்சம் உயரமும், நிறமும் அதிகம். “சே… வீரபத்ர சாமி சிலை மாதிரியில்லா இருக்கான்”
என்று நினைத்துக்கொண்டான். பெஞ்சமின் அவன் குழுவிலிருந்த மற்றவர்களை அறிமுகம் செய்து
வைத்தான். சிட்னி, மொஹாபூ என்று இரண்டு கருப்பர்கள். ப்ராவோ என்று ஒரு வெள்ளைக்காரன்.
அலுவலகத்தில் அதிகம் கருப்பர்கள்தான். “என்னடா எல்லாம்
நம்ம கலருல்ல இருக்கானுங்க.”
“இத ஆரம்பிச்சவன் வெள்ளைக்காரன்தான். பெஞ்சமின் வந்தபின்னாடி,
எல்லாம் அவன் ஆளுங்கள போட்டு நிரப்பிட்டான், ஏகப்பட்ட உள்நாட்டுக் கலவரம் உண்டு. நாம
எதுலயும் தல நீட்டாம வந்த வேலைய பாத்துட்டு போயிடனும்” என்றான் ஜோமி.
“நம்ம ஊரு மாதிரிதானா?”
சிறிது நேரத்தில் சிட்னி வந்து வேலையை விளக்கினான்.
அந்த நிறுவனம் அங்கிருக்கும் பல சுரங்க நிறுவனங்களுக்கான மென்பொருட்களைச் செய்து தந்து
கொண்டிருக்கின்றது. சுரங்கங்களில் ஏற்படும் சின்ன சின்ன விபத்துகள், நிகழ்ச்சிகள் அனைத்தும்
பதிவு செய்யப்பட வேண்டும். எப்போது அதிகம் விபத்து நடக்கின்றது, அதற்குக் காரணம், அது
நடக்காமல் தடுக்க வேண்டியது என்ன என்பதை அந்த மென்பொருளின் உதவியோடு கணிக்கலாம். தடுப்பு
நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உபயோகப்படும். இதில்தான் மணியும் வேலை செய்யவேண்டும்.
மணிக்கு ஒரே நாளில் வேலை போரடித்துவிட்டது. விதவிதமான
படிவங்களை தயார் செய்வது மட்டுமே அவன் வேலை. சில பல கோப்புகளை பிரதியெடுத்து, அதில்
பெயர்களை மாற்றினால் போதும். மணி ஒரு எக்ஸல் ஷீட்டை தயார் செய்தான். அதில் விபரங்களை
நிரப்பினால் போதும். மிச்ச வேலை வெறும் காப்பி பேஸ்ட்தான்.
சிட்னிக்கும், மொஹாபூவிற்கும் ஆச்சரியம். மணி பத்து
முறை விளக்கியும் அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ப்ராவோ பார்த்துவிட்டு
தோளைக் குலுக்கிக் கொண்டு போய்விட்டான். அவனுக்கும் புரியவில்லை.
“என்னடா, சுத்த மாக்கானுகளா இருக்கானுங்க, எப்படி இவனுகள
வேலைக்கு எடுத்தானுங்க?”
“எல்லாம் பெஞ்சமின் வேலைதான். சிட்னிக்கு மட்டும் கொஞ்ச
நஞ்சம் தெரியும், மத்தவங்க எல்லாம் சும்மாதான்.”
மணியும், ஜோமியும் அதன்பின் ஒரு நாளைக்கு அரை மணி நேரம்
மட்டுமே வேலை செய்ய வேண்டியிருந்தது. அதன்பின் வெட்டி வேலைதான்.
வெட்டியாக இருக்கும்போது ப்ராவோ வந்து இவர்களுடன் பேசிக்கொண்டிருப்பான்.
அவனது மூதாதையர்கள் பிரிட்டீஷ்க்காரர்கள். இங்கு வந்து பல தலைமுறைகள் ஓடிவிட்டன. முதலாம்
உலகப்போர் காலத்தில் வந்தவர்கள், அப்படியே அங்கு தங்கிவிட்டார்களாம்.
பல கதைகள் சொன்னான். நெல்சன் மண்டேலா பற்றி, கருப்பர்களின்
வளர்ச்சி பற்றி.
மணி ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. கிளம்புவதற்கு
முதல்நாள் அனைவரும் வெளியே சென்றார்கள். ஒரு கலைப்பொருள் கடையில் கல்லில் செய்யப்பட்ட
பொம்மை மட்டும் போதும் என்று எடுத்துக் கொண்டான்.
“200 ராண்ட்.”
மணி கணக்குப் போட்டான், இந்தியமதிப்பில் சுமார்
1,200 ரூபாய். இதற்கா?
“100 ராண்ட்?”
“இல்லை இல்லை, அது எனக்கு நஷ்டத்தைத் தரும்.”
“நான் உங்கள் விருந்தினன் அல்லவா, தரலாம்.”
“சரி, நீ என் சகோதரன். உனக்காக 150 ராண்ட். நீ சகோதரன்
என்பதால் மட்டுமே தருகின்றேன். இவன் கேட்டால் தரமாட்டேன்” என்று ப்ராவோவைச் சுட்டினான்.
ப்ராவோ முகம் சுண்டிவிட்டது.
மணிக்கு அதற்கு மேல் பேரம் பேச விருப்பமில்லை. வாங்கிக்கொண்டு
வந்தான்.
அடுத்தநாள் உள்ளூர் விடுமுறை, ஹெரிட்டேஜ் டே என்றனர்.
அனைவரும் சிட்னியின் இடத்திற்குச் சென்றனர்
“மணி, உனது மகிழ்ச்சிக்காக” என்று கோப்பையை உயர்த்தினர்.
மணி, தன் கோப்பையிலிருந்த வொயினை உயர்த்தி, “நன்றி
நண்பர்களே” என்றான்.
ப்ராவோதான் ஆரம்பித்தான், “நேற்று அந்தக் கடைக்காரன்
உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான், ஐம்பது ராண்ட்கள் கூட வராது.”
“எனக்கும் தெரியும், அதற்கு மேல் என்னால் என்ன செய்ய
முடியும். நான் வெளியூர் ஆசாமி, உள்ளூர்க்காரர்கள் நீங்கள்தான் பேசியிருக்க வேண்டும்.”
“சிட்னியோ, மொஹாபூவோ பேசியிருக்கலாம். ஆனால் கடைக்காரன்
கருப்பன். அதனால் அவர்கள் தலையிடவில்லை. நான் பேசினால் கேட்கமாட்டான்.”
“நான் ஏன் பேசவேண்டும், சகோதரன் சம்பாதிப்பதை நான்
ஏன் கெடுக்க வேண்டும்? இப்போதுதான் எங்கள் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றது” என்றான்
சிட்னி.
“ஆமாம் இங்கு எல்லாம் மாறிக் கொண்டு வருகின்றது. நாங்கள்
எல்லாம் தேவையற்றவர்களாகின்றோம்” என்றான் ப்ராவோ.
“ஆமாம், மாறத்தான் மாறும். இத்தனை வருடம் நாங்கள் அடங்கியிருந்தோம்,
இப்போது மேலே வருவது உங்களுக்கு பொறுக்கவில்லை” என்றான் சிட்னி.
“நீங்கள் மேலே வருவதில் எனக்கு என்ன பிரச்சினை. திறமையிருந்தால்
மேலே வரவேண்டியதுதான். அதுதான் இல்லையே” என்றான் ப்ராவோ.
ஜோமி, “ப்ராவோ போதும், உனக்கு அதிகமாகிவிட்டது போல.
அமைதியாக இரு.”
“நான் சரியாகத்தான் இருக்கின்றேன். என்னால் வண்டி கூட
ஓட்ட முடியும். அலுவலகம் முழுவதும் உங்கள் ஆட்கள்தான். திறமையுள்ளவன், இல்லாதவன் என்று
பார்க்காமல் நிரப்புகின்றான் பெஞ்சமின்.”
“ஆமாம், இத்தனை நாள் மறுக்கப்பட்ட இடத்தில் இப்போது
உரிமையுடன் அமர்கின்றோம், என்ன தவறு” என்றான் சிட்னி.
“சரிதானே ப்ராவோ, அவர்களுக்கு மறுக்கப்பட்ட அநீதிக்கு
இதுதான் பரிகாரமாக இருக்க முடியும்” என்றான் மணி.
“நீ அவர்களின் சகோதரன், அப்படித்தான் பேசுவாய்.”
“அப்படி ஏதுமில்லை, உங்கள் உள்ளூர் அரசியலில் எனக்கு
என்ன ஆர்வம் இருக்க முடியும்?”
“பிறகு ஏன் இதைப்பற்றி பேசுகின்றாய், உனக்கு என்ன தெரியும்
இதைப் பற்றி?”
“ஆனால் உனக்கு சொல்வதற்கு என்னிடம் ஒன்று உண்டு.” தனது
கைப்பேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டினான். “இது எங்கள் வீடு, என் தாத்தா கட்டியது,
அவருக்கு பின் என் அப்பாவிற்கு வந்தது. பல வருடங்கள் கழித்து ஒருநாள் உள்ளூர் வங்கியிலிருந்து
ஒரு நோட்டீஸ் வந்தது. வாங்கிய கடனை உடனே செலுத்து என்று. என் அப்பாவிற்கு ஒரே ஆச்சரியம்,
நான் கடனே வாங்கவில்லையே என்று. வங்கியில் விசாரித்தபின் தெரிந்தது, அவரது தந்தை அந்த
வீட்டை வைத்துக் கடன் வாங்கியிருப்பது. என் அப்பா என்ன செய்திருக்க வேண்டும் என்று
நினைக்கின்றாய்?”
“கடனை கட்ட வேண்டியதுதான்.”
“சரி, அவரும் கட்டினார். ஆக அவர் வாங்காத கடனை அவர்
அடைக்க வேண்டியிருந்தது. நான் கூட சிறிது பணம் அனுப்பினேன், ஆனால் நான் ஏன் யாரோ வாங்கிய
கடனுக்கு பணம் கட்ட வேண்டும்?”
“வீடு உனக்குத் தானே வரும், வீட்டை அனுபவிக்கும் உனக்கு
அதன் கடனை மட்டும் எப்படி மறுக்க முடியும்” என்றான் ப்ராவோ.
“அது போலத்தான் இதுவும் உன் தந்தை உனக்கு வைத்துவிட்டுப்
போன கடன். உன் மூதாதையர்கள் விட்டுப் போன கடன். நீ இப்போது அதை செலுத்திக் கொண்டு இருக்கின்றாய்,
நாம் கடன் பட்டிருக்கின்றோம்” என்றான் மணி.
“மிகச்சரி, இந்தியர்கள் தர்க்க ரீதியாக பேசுவதில் சிறந்தவர்கள்.
எங்களால் கூட இவ்வளவு சரியாக எடுத்து வைக்க முடியுமோ என்னவோ” என்றான் சிட்னி.
“சரி, நீ சொல்வது சரிதான். கடனை நான் அடைக்க வேண்டியதுதான்.
ஆனால் கடனுக்காக நிலத்தை மொத்தமும் விட்டுவிட்டுச் செல்ல முடியுமா. இங்கேயே பிறந்து
வளர்ந்த என்னை, நீ வெளிநாட்டவன் என்றால் எங்கு செல்வது? நான் இம்மண்ணைச் சேர்ந்தவன்
இல்லை என்றாகுமா?” என்றான் ப்ராவோ.
“இது உங்கள் ப்ரிட்டிஷார் இந்தியாவில் பயன்படுத்திய
பொய் ஆயுதத்தின் மறு முனை, இங்கு உண்மையாக மாறி இப்போது உன்னை குத்துகின்றது” என்றான்
மணி.
“நாங்கள் இங்கு படும் அவஸ்தை உனக்கு புரியாது.”
“ஏன் எனக்குப் புரியாது, எனக்கு மிக நன்றாகவே புரியும்”
என்றான் மணி.
ப்ராவோ புரியாமல் தலையை அசைத்துவிட்டு இன்னுமொரு பாட்டிலைக்
கவிழ்த்துக் கொண்டு மட்டையானான்.
அடுத்த நாள்.
விமான நிலையத்திற்குக் கிளம்பினார்கள். கிறிஸ்டா ஒரு
பைபிள் புத்தகத்தை மணிக்குப் பரிசளித்தாள். மணி தன் பையில் வைத்திருந்த, இஸ்கான்க்காரர்
இவனுக்குத் தந்த பகவத்கீதையை அவளுக்கு அளித்தான். அவள் முகம் போனதைப் பார்த்து மனதிற்குள்
சிரித்துக்கொண்டு கிளம்பினான்.
“அது என்ன புத்தகம்” என்றான் சிட்னி.
“அது எங்கள் மதப்புத்தகம்” என்றான் மணி.
“ஹே, அதுதான் சரி. இவர்களை இப்படித்தான் திருத்த வேண்டும்”
என்றான் சிட்னி.
“சரி நான் விடை பெறுகிறேன்” என்று கூறிவிட்டு ப்ராவோ
கிளம்பினான். “மீண்டும் சந்திக்கலாம்” என்று மகிழ்வுடன் கூறிவிட்டு ப்ராவோ மணியைக்
கட்டி அணைத்துக்கொண்டான்.
“என்ன இது. கயிறு? இதுவும் உங்கள் மத விஷயமா, உன் நெற்றியில்
இருப்பது போல” என்றான் ப்ராவோ
“இல்லை, இது என்னிடம் இருக்கும் உன் வெள்ளைத்தோல்”
என்றான் மணி.
********